புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 4 சென்ற வாரத் தொடர்ச்சி….

This entry is part of 28 in the series 20050526_Issue

கே.ஜே.ரமேஷ்


லியூவும் டெங்கும் சேர்ந்து மா சே துங்கை அதிகாரத்திலிருந்து விலக்கி விட்டு அவரைப் பெயருக்காக ஒரு பொம்மைத் தலைவராக வைத்திருக்கத் திட்டம் தீட்டினார்கள். இதை மோப்பம் பிடித்த மா அந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கான வழிமுறைகளை ராய்ந்தபோது அவருக்குக் கிடைத்த யுதம் தான் சமூகக் கல்வித் திட்டம் (Social Education Movement). 1963ம் ண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் பள்ளிக் குழந்தைகளைக் குறிவைத்தே தொடங்கப்பட்ட ஒன்றாகும். அதனால் அத்திட்டம் அரசியலில் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் இத்திட்டத்தால் ஒரு புதிய தலைமுறையே தனக்கு தரவாக வளரப்போவதை மா உணர்ந்திருந்தார். அதே நேரம் லியூவுக்கும் டெங்குக்கும் எதிராக வர்க்கப் போராட்டமாக ரம்பித்த ஒன்று பின்னர் ‘நான்கு துப்புரவு இயக்கமாக ‘ (Four Cleanups Movement) மாறியது. அத்திட்டத்தின் நோக்கம் அரசியல், பொருளாதாரம், எண்ணங்கள் மற்றும் அமைப்பு கிய நான்கையும் தூய்மைப்படுத்துவதே. 1965ம் ண்டு மா CCP கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவந்து விட்டார். உடனடியாகத் தனக்கு எதிரானவர்களை இனம் கண்டு ஒழிக்கும் வேலை ரம்பமாயிற்று. வளர்ந்து வரும் அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்து CCPயை மீட்பதற்கு இடைவிடாத புரட்சியால் மட்டுமே முடியும் என்று மா நம்பியதன் விளைவு டெங் •ஸியோபெங் போன்றவர்கள் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

1966ம் ண்டு கஸ்ட் மாதம் 8ம் நாள் CCPயின் மத்திய கமிட்டியில் ‘பாட்டாளி மக்களின் கலாச்சாரப் புரட்சி பற்றிய முடிவுகள் ‘ என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் கலாச்சாரப் புரட்சி பற்றிய அரசாங்கத்தின் பூரண தரவு நிலைப்பாட்டை சந்தேகத்திற்கிடமின்றி சொல்லியிருந்தார்கள். கலாச்சாரப் புரட்சியின் நோக்கம் ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் ஒழிப்பது என்று கூறியபோதிலும் அதன் உண்மையான நோக்கம் அறிவாளிகள், மேல்தட்டு வர்க்கத்தினர், மாவோவுக்கு எதிரானவர்கள் கியோரைத் தீர்த்துக் கட்டுவது தான். இந்த வேலையைச் செய்ய தன்னைக் கடவுளாக மதிக்கும் ஒரு தொண்டர் படை தேவை என்பதை மா உணர்ந்தார். அதன் விளைவாக உருவாக்கப்பட்டது தான் ‘Red Guards ‘ என்றழைக்கப்பட்ட சிகப்புப் பாதுகாவற் படை (இனி இப்படையை இந்த கட்டுரையில் சிகப்புப் படை என்றே குறிப்பிடுவோம்). மில்லியன் கணக்கில் பள்ளி மாணவர்களையும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களையும் அந்த சிகப்புப் படையில் சேர வைத்து அவர்களுக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களையும் வழங்கினார். மா சே துங்கிற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்களைத் தாக்கும் பணியை இச்சிறுவர்கள் செவ்வனே முடித்தனர். இங்கு தான் மாவின் நான்காவது மனைவியான ஜியாங் சிங் தனது திருவிளையாடல்களைத் தொடங்கினார். சிகப்புப் படையினர் ஜியாங் சிங்கின் தலைமையில் தான் பல அராஜகச் செயல்களைச் செய்தனர். எல்லா பள்ளிகளும் பல்கலைக் கழகங்களும் மூடப்பட்டன. பொறியியல் வல்லுனர்கள், விஞ்ஞானிகள், மேலாளர்கள், தொழில்நுட்பத் திறன் படைத்த தொழிலாளர்கள் என்று எந்த பேதமுமின்றி எல்லோரும் உடல் உழைப்பை அளிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். தொழிற்சாலைகளின் நிர்வாகம் எந்த விதப் பயிற்சியோ அனுபவமோ இல்லாத புரட்சிக்காரர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனால் அந்த வருடம் தொழிற் சார்ந்த உற்பத்தி பதினான்கு விழுக்காடு குறைந்துவிட்டது. 1966 தொடங்கி 1969 வரை சிகப்புப் படை சீனாவின் எல்லாப் பகுதிகளிலும் தனது திக்கத்தைச் செலுத்தத் தொடங்கிவிட்டது. ரம்பத்தில் கம்யூனிஸத்தைப் பற்றிய கையேடுகளை வினியோகித்தும், கம்யூனிஸப் பிரச்சாரத்தில் ஈடுபட்டும், புரட்சிக்கு எதிரானவர்களை இனம் கண்டு அவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு பெயர்ப்பலகைகளில் ஒட்டுவதுமாக இருந்த சிகப்புப் படையினர் மா சே துங்கின் தரவோடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டனர். பின்னர் புரட்சிக்கு எதிரானவர்களின் வீடு புகுந்து கொள்ளையடித்தல், அவர்களை சித்திரவதை செய்தல், அவர்களின் உறவினர்களைக் கொல்லுதல் என்று படிப்படியாகத் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கி எதிரிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றுவது வரை சட்டத்தைக் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். படித்த மேல்தட்டு வர்க்கத்தினரை விசாரணயின்றி கொல்வதும், சட்டங்களை மீறுவதும் சாதாரண நிகழ்ச்சிகளாகிவிட்டது. இந்த அக்கிரமங்கள் போதாதென்று கோவில்களையும், மசூதிகளையும், தேவாலயங்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். பழம்பெருமை வாய்ந்த ஓவியங்கள், சிற்பங்கள், கலைப்பொருட்கள், புத்தகங்கள் என்று எது பழமையாக இருந்தாலும் அவற்றை அழித்தனர். பழைய கட்டிடங்களையும் விட்டு வைக்கவில்லை. புத்த பிட்சுக்கள், கன்னியாஸ்த்ரீகள், மதப்பிரசாரகர்கள் கியவர்களையும் சித்திரவதை செய்து தொழிலாளர் முகாமுக்கு அனுப்பினார்கள் அல்லது இந்த உலகை விட்டே அனுப்பினார்கள். சிகப்புப் படையில் இருந்த அந்த பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி சிரியர்களையே துன்புறுத்தி, பணம் பறித்து மிகவும் இழிவு படுத்தினார்கள். நடப்பதைக் கண்டு தாங்க முடியாத பலருக்கு சித்தப்பிரமை பிடிக்க, இன்னும் பலர் தற்கொலையும் செய்து கொண்டார்கள். அதிபராக இருந்த லியூ ஷெளகி சிறையில் அடைக்கப்பட்டார். பட்டினியால் அவர் 1969ம் ண்டு சிறையிலேயே இறக்க நேரிட்டது. டெங் •ஸியோபெங்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். பல காலம் கழித்து சூ என்லாய் டெங்கை மறுபடியும் அரசியலுக்கு அழைத்து வந்தார்.

இந்தளவுக்கு அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்ட சிகப்புப் படையினரை மா பெரிதும் பாராட்டினார். மா தனது அறிக்கை ஒன்றில் காவற் துறையினர் சிகப்புப் படையினரை எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்றும் அவர்கள் பணியைத் தடுக்கும் விதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டார். மீறி நடந்த காவற் துறையினரை புரட்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரைக்குத்தி தீர்த்துக் கட்டினார்கள். PLA என்ற ராணுவம் இருந்ததோ, சீனா பிழைத்ததோ. கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில் நடந்த அக்கிரமங்களால் அரசாங்கமும் CCPயும் நிலைக்குலைந்து போகாமல் இருந்ததற்கு ஒரே காரணம் PLAயின் தலையீடு தான்.

ஒரு சினிமா நடிகையாக இருந்த ஜியாங் சிங் (மா சே துங்கின் நான்காவது மனைவி) அரசியல் பக்கமே தலை வைத்துப் படுத்ததில்லை. னால் கலாச்சாரப் புரட்சிக்காக சிகப்புப் படையைத் தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் அதிகாரப்பலமும் சேர்ந்து கொண்டு அவரை நிஜ வாழ்க்கையில் வில்லியாக்கிவிட்டது. தன்னுடன் சாங் சுங்கியாவ், யாவ் வென்யுவான் மற்றும் வாங் ஹோங்வென் கியோரையும் சேர்த்துக்கொண்டு கலச்சாரப் புரட்சியை வழி நடத்திச் சென்றவர் மா சே துங் இறந்த போது கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்ற சதி செய்ததாகக் கூறப்படுகிறது. மா இறந்த பிறகு கைது செய்யப்பட்ட இந்நால்வரையும் ‘நான்கு கில்லாடிகள் ‘ (Gang of Four) என்று குறிப்பிட்டனர்.

1968ம் ண்டு சோவியத் யூனியனுடனான உறவு மேலும் சீர்கெட்டுப் போனது. அந்த உறவை மேம்படுத்த புரட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் கட்டாயத்திற்கு மா உள்ளானார். மேலும் மா கலாச்சாரப் புரட்சியின் உபயோகங்களை மறுபரிசீலனை செய்ய முற்பட்டதன் விளைவு அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர உதவி செய்தது. சிகப்புப் படையின் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பல்கலைக் கழகங்கள் திறக்கப்பட்டன. திறன் மிக்க தொழிலாளிகளும் மற்றவர்களும் எங்கிருந்து அகற்றப்பட்டார்களோ அதே இடத்திற்குத் திரும்ப அனுப்பப்பட்டனர். சில முக்கியத் திட்டங்களில் அயல் நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. 1969ம் ண்டு நடந்த CCPயின் 9வது தேசிய மாநாட்டில் மா சே துங் ஒப்பில்லாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கலாச்சாரப் புரட்சி மேலும் முடக்கப் பட்டது. மாவின் தரவாளர்கள் முக்கியப் பதவிகளுக்கு நியமிக்கப் பட்டார்கள். மாவோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட லின் பியாவ் CCPயின் உதவி சேர்மனாகப் பதவியேற்றார். அவரையே மாவோவின் வாரிசாகவும் அறிவிக்கப்பட்டது.

புரட்சியை முடிவுக்குக் கொண்டு வர தீர்மானம் ஏற்பட்டாலும், ஜியாங் சிங்கின் தலைமையில் வன்முறை தொடர்ந்து கொண்டிருந்தது. கட்சிக்குள்ளே ஜியாங் சிங்கை தரிக்கும் தீவிரவாதப் பிரிவு ஒன்று கிளர்ந்தது. அந்த நேரத்தில் சூ என்லாய் தலைமையில் மிதவாதப் பிரிவு ஒன்று என்றும் இரு வேறு பிரிவுகளாகக் கட்சி பிளவுபட்டது. சூ என்லாய் கலாச்சாரப் புரட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பவில்லையே தவிர அதை அவர் ஒப்புக்கொள்ளவும் இல்லை. அதனால் மிதவாதப் போக்குள்ளவர்கள் அவரை தரிக்கத் தொடங்கினர். மாவோவிற்கும் வயதாகிக் கொண்டிருந்ததால் மூத்த தலைவர் என்ற அந்தஸ்த்தில் அரசுக்கு லோசனை கூறுவதுடன் நிறுத்திக் கொண்டார். மேலும் இந்த இரு பிரிவுகளுக்கும் ஒரு தூதுவர் போலவும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

1971ம் ண்டு மாவோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட லின் பியாவ் மாவோவுக்கு எதிரான சூழ்ச்சியில் இறங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார் என்றும் அதைத் தொடர்ந்து தான் கைது செய்யப்படுவோம் என்று உணர்ந்த லின் பியாவ் மங்கோலியாவிற்குத் தப்பிக்கும் பொருட்டு விமானம் ஏறினார் என்றும் கூறப்படுகிறது. அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி லின் பியாவ் மரணம் அடைந்தார். லின்னின் மரணத்திற்குப் பிறகு PLAவிம் கமாண்டர்கள் சீனா-சோவியத் யூனியன் எல்லை அபாயகரமான நிலையில் இருப்பதாகக் காரணம் காட்டி நாட்டின் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்று முடிவெடுத்தனர். அது தான் தருணம் என்று சூ என்லாய் டெங் •ஸியோபெங்கை வரவழைத்து மீண்டும் அவரைக் கட்சித் தலைவராக க்கினார். அதைத் தொடர்ந்து கட்சிக்குள் மிதவாதப் பிரிவினரின் திக்கம் மெதுவாக உயர்ந்தது. அதன் பயனாக உலக நாடுகளின் தரவும் கிடைக்கப் பெற்ற CCP ஐ.நா சபையில் சீனாவுக்குரிய இடத்தை தாய்வானிடமிருந்து மீட்டது. மேலும் CCPயின் மிதவாதப் போக்கும் மாவோவின் சோவியத் யூனியன் மீதான சந்தேகமும் அமெரிக்கர்களுடனான சமரசத்திற்கு வழி வகுத்தது. இது 1972ம் ண்டு ரிச்சர்ட் நிக்ஸனின் விஜயத்தின் போது உறுதி பட்டது. அதே வருடம் ஜப்பானுடனும் ராஜதந்திர உறவு புதுப்பிக்கப்பட்டது.

ஜியாங் சிங்கின் பிரிவுக்கும் மிதவாதப் பிரிவுக்கும் இடையே இருந்து வந்த சண்டை 1976ம் ண்டு ஜனவரி மாதம் சூ என்லாய் இறந்த போது உச்சத்தை அடைந்தது. அந்த நான்கு கில்லாடிகளும் டெங்கிற்கு எதிராக நடத்திய ர்ப்பாட்டத்தை அதிகாரிகள் அடக்கி ஒடுக்கியது டெங்கிற்கு இருக்கும் தரவைத் தெளிவாகக் காட்டியது. இந்த அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த மா டெங்கைப் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார். னால் அக்கோரிக்கையை உதாசீனப்படுத்திய கட்சியும் அரசும் மாவின் வயதைக் காரணம் காட்டி அவரை தனிமைப் படுத்தத் தொடங்கின. அதே ண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி மா சே துங் மாரடைப்பால் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 6ம் தேதி நான்கு கில்லாடிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களை இழிவு படுத்தும் நோக்கத்துடனே நான்கு கில்லாடிகள் என்ற பெயரையும் சூட்டி, கலாச்சாரப் புரட்சியின் போது நடந்த அராஜகங்களில் அவர்களின் பங்கை தோலுரித்துக் காட்டினர். நாட்டு மக்கள் எல்லோருக்கும் இச்செய்தி போய்ச் சேரவேண்டும் என்று இதை ஒரு மாபெறும் இயக்கமாகவே செய்தனர். பின்பு 1981ம் ண்டு நடந்த ஒரு விசாரணையில் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து தண்டனையும் வழங்கினார்கள். ஜியாங் சிங்கிற்கும் சாங் சுங்கியாவிற்கும் மரண தண்டனை அளிக்கப்பட்டது. மற்ற இருவருக்கும் 20 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஜியாங்கிற்கு வழங்கிய தண்டனையை இரண்டு வருடங்கள் வரை தள்ளிப் போடலாம் என்றும் தீர்ப்பாகியது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாகவே அது யுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பின்னர் 1991ம் ண்டு ஜியாங் சிங்கின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அவர் விடுவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்டு பத்து நாட்கள் கழித்து அவரது வீட்டிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. னால் அவர் இறந்த சூழ்நிலையும் இறந்ததாகச் சொல்லப்பட்ட இடத்தைப் பற்றிய கருத்து வேறுபாடுகளும் அவர் இறந்த விதத்தைப் பற்றிய சந்தேகங்களைத் தூண்டுவதாகவே அமைந்து விட்டன.

கே.ஜே.ரமேஷ்

kalelno5@yahoo.com

Series Navigation