புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 3 சென்ற வாரத் தொடர்ச்சி….

This entry is part of 24 in the series 20050520_Issue

கே.ஜே.ரமேஷ்


1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா ஜப்பான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியதும் இரண்டாம் உலகப்போருடன் இரண்டாம் சீன-ஜப்பானியப் போரும் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த இரண்டு போரிலும் பல மில்லியன் கணக்கான சீன மக்கள் மடிந்து போயினர். ஆனால் இவ்வளவு அழிவுக்குப் பிறகும், அரசியலில் ஈடுபட்ட சீன மக்கள் பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. கோமிண்டாங்குக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்குமான உள்நாட்டுப் போர் மீண்டும் ஆரம்பமாகியது. இந்த முறை கம்யூனிஸ்ட்டுகளின் கை ஓங்கியிருக்கத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஜப்பானியர்களிடமிருந்து மீட்டிய நிலப்பரப்பும், சரணடைந்த ஜப்பானியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போர் ஆயுதங்களும் போர்த்தளவாடங்களும் ஆகும். மேலும் இப்போது கம்யூனிஸ்ட்டுகளின் ராணுவமும் 1 மில்லியனுக்கு மேல் வீரர்களைக் கொண்டிருந்தது. இருந்தும் கோமிண்டாங்கின் ராணுவம் அந்த நிலையிலும் கம்யூனிஸ்ட்டுகளை விடப் பெரியதாக இருந்தது. ஆனால் அவர்களின் அரசாங்கத்தில் தலைவிரித்தாடிய ஊழலும் அதைத் தொடர்ந்த நிச்சயமற்ற தன்மையும் அந்த ராணுவத்தின் பலத்தை வலுவிழக்கச் செய்தது. அமெரிக்கா ஒரு பக்கம் கோமிண்டாங்கிற்கு உதவிகளைத் தொடர்ந்த போதிலும், மறுபக்கம் சண்டையிடும் இரண்டு தரப்பினர்களை பேச்சுவார்த்தைக்கும் தூண்டியது. ஆனால் பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல், 1946ம் ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையில் முழு அளவிலான உள்நாட்டுப் போர் வெடித்தது. அந்த உள்நாட்டுப் போரில் சியாங்கின் போர்த் தலைவர்கள் ஒவ்வொருவராக கம்யூனிஸ்ட்டுகளிடம் சரணடையவும் கோமிண்டாங்கின் ராணுவம் தோல்வியைத் தழுவியது. 1949ம் ஆண்டு ஜனவரி மாதம் மாவின் கம்யூனிஸ்ட்டுகள் பெய்ஜிங்கை எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் கைப்பற்றினார்கள். சியாங்கும் ஆயிரக்கணக்கான அவரது வீரர்களும் தாய்வான் தீவிற்கு தப்பியோடினர். தப்பிப்பதற்கு முன் அரசு கஜானாவிலிருந்து சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் சுருட்டிக் கொண்டு போய்விட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு சென்று, தாய்பேய்யை (Taipei) சீனாவின் தற்காலிகத் தலை நகராக அறிவித்துக்கொண்டனர். அதன் பிண்ணனியாக இன்றளவும் சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையே சீரழிந்த உறவே நிலவி வருகிறது. உறவு மேம்படும் போல் இருந்த போதெல்லாம் பிரிவினைக்குத் தூண்டும் தாய்வான் அரசியல் வாதிகளால் நிலைமை மோசமாகிவிடும். பின்னர் சிலகாலம் கழித்து உறவில் முன்னேற்றம் தெரியவாரம்பிக்கும். அப்படிப்பட்ட ஒரு சமயம் தான் இது. தாய்வானின் தற்போதைய அதிபர் சென் சூ பியான் சீனாவுக்கு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாகச் சென்று வந்த பிறகு அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் சீனாவுக்குச் சென்றிருக்கிறார். இம்முறையாவது இருநாட்டு உறவில் ஏதாவது சமரசம் ஏற்படுகிறதா என்று பார்ப்போம்.

1949ம் வருடம் கோமிண்டாங் கட்சியினர் தாய்வானுக்குத் தப்பியோடியதைத் தொடர்ந்து அதே வருடம் அக்டோபர் முதல் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் மா சே துங் அதிகாரப்பூர்வமாக சீன மக்கள் குடியரசை (People ‘s Republic of China – PRC) அறிவித்தார். அவர் தலைமையின் கீழ் CCP சீனா முழுவதையும் ஆளவாரம்பித்தது. அப்போது CCP சுமார் 4.5 மில்லியன் உறுப்பினர்களையும் அதில் 90 விழுக்காடு விவசாயிகளையும் கொண்ட ஒரு மாபெறும் கட்சியாகத் திகழ்ந்தது. மாவின் வலது கரமாக விளங்கிய சூ யென்லாயை அதிபராகக் கொண்ட அரசு மிதமான மறுமலர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களின் ஆதரவைப் பெற்றது. உலக நாடுகளின் அங்கீகாரத்தையும் பெற்ற சீன அரசு பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி, நிதி நிலைமையைச் சீராக்கி, போரில் பாழடைந்த தொழிற்சாலைகளையும் கட்டுமானத் தளங்களையும் சீர் செய்தது. அந்த வருட கடைசியில் மா தனது அதிகாரப்பூர்வமான முதல் பயணமாக சோவியத் யூனியனுக்குச் சென்றார். ஜோச•ப் ஸ்டாலினிடம் பேச்சு வார்த்தை நடத்தி நிதியுதவியும் ராணுவ உதவியும் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஆனால் 1950ம் ஆண்டு சீனா கொரிய தீபகற்பத்தின் விவகாரங்களில் எடுத்த முடிவுகளால் ஐக்கிய நாட்டுச் சபையின் அதிருப்திக்கும் அமெரிக்காவின் சீற்றத்திற்கும் உள்ளாயின. மா வட கொரியாவின் தலைவரான கிம் II சுங்கின் வேண்டுகோளுக்கிணங்கி வட கொரியாவையும் தென்கொரியாவையும் மீண்டும் ஒருங்கிணைக்கும் அவரது போர் முயற்சிக்கு ஆதரவு அளித்தார். அந்த வருடம் ஜூன் மாதம் 25ம் தேதி தொடங்கிய கொரியப் போர் 3 வருடங்கள் நீடித்தது. ஆனால் இறுதியில் ஒரு முடிவும் ஏற்படவில்லை. சுமார் 3 மில்லியன் மக்கள் மடிந்தது ஒன்றே அந்தப் போர் கண்ட பலனாகும். மேலும் அந்தக் கொரியப் போரில் சீனாவின் நேரடிப் பங்கும் 40 வருடகால திபேத்திய சுயாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த சீனாவின் திபேத் மீதான ஆக்கிரமிப்பும் உலக நாடுகளின் ஆதரவை சீனா இழக்கக் காரணமாயிற்று. 1951ம் ஆண்டு ஐக்கிய நாட்டுச் சபை சீனாவை ஒரு ஆக்கிரமிப்பாளர் என்று அறிவித்து உலக நாடுகள் சீனாவுக்கு போராயுதங்களையும் போர்த்தளவாடங்களையும் அனுப்புவதற்குத் தடையும் விதித்தது. இதனால் ஐக்கிய நாட்டுச் சபையில் சியாங்கின் கோமிண்டாங்கை நீக்கிவிட்டு மாவின் CCPஐ அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் வாய்ப்பு கை நழுவிப்போயிற்று.

அதே நேரம் உள்நாட்டு விவகாரங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்படலாயின. மிதவாத போக்கைக் கைவிட்டு மாவுக்கு எதிரானவர்களை நாட்டின் எதிரிகள் (enemies of state) என்று முத்திரைக் குத்தி அடக்கி ஒடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வெளிநாட்டவர்களும் கிறிஸ்துவ மதப் பிரசாரகர்களும் உளவாளிகள் என்று இழிவு படுத்தப்பட்டனர். நிலச்சுவாந்தர்களிடமிருந்தும், வசதியான விவசாயிகளிடமிருந்தும் அவர்களுக்குச் சொந்தமான நிலங்கள் பிடுங்கப்பட்டன. அறிவாளிகள், திறமை மிக்க அதிகாரிகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்று எந்த பாகுபாடுமின்றி கம்யூனிஸ சித்தாந்தகளைப் பரப்புவதில் அவர்கள் அடைந்த தோல்விகளை சுயவிமரிசனம் செய்துகொள்ளவும் பொதுமன்னிப்பு கோரவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். திறமையில்லாதவர்களும் அரசியலில் நம்பகத் தன்மையிழந்தவர்களும் நீக்கப்பட்டனர். ஊழல் மிகுந்த வணிகர்களும் தொழிலதிபர்களும் அப்புறப்படுத்தப் பட்டனர். பணம் படைத்த நன்கு படித்த மேல்தட்டு மக்கள் அரசின் சந்தேகத்துக்குள்ளாயினர். இந்த காலகட்டத்தில் 1 முதல் 3 மில்லியன் வரையிலான சீன மக்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

1953ம் ஆண்டு அறிமுகப்படுத்திய முதல் ஐந்து ஆண்டு திட்டம் சீனாவை சோஷியலிஸ பாதைக்கு இட்டுச் சென்றது. சோவியத் யூனியனை பின்பற்றி சீனாவும் எ•கு போன்ற முக்கிய தொழிற்சாலைகளை நிறுவியது. பாதுகாப்புத் துறையின் ஆற்றலைப் பெருக்கி தனது ராணுவத்தை வலிமைப் பொருந்தியதாக ஆக்கியது. வங்கிகளையும், தொழிற்துறை, வணிகத்துறை ஆகியவற்றையும் தேசிய மயமாக்கியது. அதே சமயம் விவசாயத்திற்கும் முன்னுரிமை வழங்கி சீனா ஒரு சோஷலிஸ நாடாக உருமாறிக்கொண்டிருந்தது. இந்த முதல் ஐந்து ஆண்டு திட்டக் காலத்தில் சீனாவின் மொத்த உள்நாட்டு வருமானம் வருடத்திற்கு 8.9% ஆக உயர்ந்து கொண்டிருந்தது. 1954 முதல் 1956ம் ஆண்டு வரை மா சே துங் மறுபடி படித்தவர்களையும் அறிவாளிகளையும் ஊக்குவித்து கட்சிப் பணிகளிலும், அரசாங்கத்திலும் பங்கு பெற வைத்தார். மாவோயிஸத்திற்கு மாறான சிந்தனைகளையும் அனுமதிக்குமளவுக்கு சகிப்புத் தன்மையையும் பரந்த மனப்பாண்மையையும் வெளிக்காட்டினார். ஆனால் மிகக்குறுகிய காலமே இந்த பெருந்தன்மை நீடித்தது. இந்தப் போக்கினால் கட்டுப்பாடு கை மீறிப் போய்விடுமோ என்ற அச்சத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அரசாங்கத்தையும் கட்சியையும் விமர்சிப்பவர்களை மேல்தட்டு வலதுசாரிகள் என்று இழிவு படுத்தும் இயக்கம் மீண்டும் தலை தூக்கியது. மேலும் 1957ம் ஆண்டு சோவியத் யூனியனுக்கு இரண்டாவது முறையாகச் சென்று வந்த மா ரஷ்யர்களின் ஆட்சி முறை சீனாவுக்கு ஒத்து வராது என்று முடிவெடுத்து நாட்டை ஒரு புதுப் பாதையில் வழிநடத்திச் செல்ல முனைந்தார். அணு ஆயுதப்போர் குறித்தான அவரது கருத்துகளும் மாற்றமடைந்திருந்தன. அணு ஆயுதப்போரால் மனிதச் சமுதாயத்தில் பாதிக்குப் பாதி அழிந்தாலும் மீதமுள்ளவர்கள் ஏகாதிபத்தியம் முற்றிலும் ஒழிந்து சோஷலிஸத்தை அனுபவிக்க முடியும் என்று நம்பினார். அதற்குப் பிறகு தான் 1958ம் ஆண்டு தனது ‘Great Leap Forward ‘ என்ற அதிவேக தொழிற்துறை முன்னேற்றத்திற்கானத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அத்திட்டம் எதிர்ப்பார்த்ததற்கு மாறாக முரண்பாடான விளைவுகளை உண்டாக்கியதை முன்பே பார்த்தோம். மேலும் மா அமெரிக்காவிற்கு எதிரான பிரசாரத்தினால் அவர்களுடைய அதிருப்திக்கு ஆளானார். இவை போதாதென்று சோவியத் யூனியனுடனான உறவும் மோசமடையத் தொடங்கியது. ஸ்டாலினுக்குப் பிறகு வந்த சோவியத் யூனியனின் அதிபர்கள் சோஷலிஸ கோட்பாடுகளை மாற்றுவதாக மா நினைத்ததால் அவர்கள் மேலிருந்த நம்பிக்கையையும் இழந்து கொண்டிருந்தார். இவை எல்லாவற்றினாலும் அவருக்கு உட்கட்சி எதிர்ப்புகள் வலுவடைந்து பின்னர் ஒரு கட்டத்தில் தான் அறிமுகப்படுத்திய திட்டம் தோல்வியடைந்து விட்டதாகவும் அத்தோல்விக்குத் தானே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும் CCPயின் மத்திய கமிட்டியிடம் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார். அதைத் தொடர்ந்து குடியரசின் சேர்மன் பதவியையும் ராஜினாமா செய்தார். ஆனால் கட்சியின் சேர்மன் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். லியூ ஷெளகி, டெங் •ஸியோபெங் போன்ற மிதவாதத் தலைவர்கள் நாட்டை வழி நடத்திச் சென்று பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து தடுத்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றனர்.

லியூவும் டெங்கும் அமல் படுத்திய பொருளாதார மறுமலர்ச்சித் திட்டம் வெற்றியடையவே மக்கள் மத்தியிலும் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் அவர்கள் செல்வாக்கு அதிகரித்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து மா சே துங்கை அதிகாரத்திலிருந்து விலக்கி விட்டு அவரைப் பெயருக்காக ஒரு பொம்மைத் தலைவராக வைத்திருக்கத் திட்டம் தீட்டினார்கள். இந்த சூழ்ச்சியை மா எவ்வாறு முறியடித்தார் ? அதை முறியடிக்க அவர் கையாண்ட ஆயுதம் எப்பேர்ப்பட்ட அழிவுகளை ஏற்படுத்தியது என்ற விவரங்களை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

கே.ஜே.ரமேஷ்

kalelno5@yahoo.com

Series Navigation