புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 2

This entry is part of 32 in the series 20050513_Issue

கே.ஜே.ரமேஷ்


சென்ற வாரத் தொடர்ச்சி….

சியாங் கை ஷெக் கோமிண்டாங் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் CCPயின் மேல் உள்ள தனது வெறுப்பை மறைக்க எந்தவிதத்திலும் முயலவில்லை. பல CCP தலைவர்களையும் சுமார் 3500 கட்சி ஆதரவாளர்களையும் கொன்று குவித்தார். அவரது இந்த செய்கை கோமிண்டாங்கின் CCPயுடனான உறவு பூரணமாகத் துண்டிக்கப்பட ஏதுவாயிற்று. இது நடந்தது 1927ம் ஆண்டு ஜுலை மாதம். ஆனால் இந்த நெருக்கடியினால் மா மனம் தளரவில்லை. மாறாக சீனப் புரட்சி வெற்றி பெற வேண்டுமென்றால் அது கிராமப்புற விவசாயிகளிடமிருந்து தான் தொடங்கவேண்டும் என்ற அவரது நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது. இதனால் மலைப்பிரதேசமாக விளங்கிய ஹூனான் மற்றும் ஜியாங்ஸி மாகாணங்களுக்கு இடையே எல்லைப் பகுதிகளில் ‘சோவியத்ஸ் ‘ எனப்படும் மாநில அரசுகளை நிறுவினார். விவசாயிகளையும் தொழிலாளர்களையும் கொண்டு கொரில்லாப் படையையும் தோற்றுவித்தார். அந்த ஆண்டின் இறுதிக்குள் 10000 பேரைக் கொண்ட கொரில்லாப் படையாக அது உறுவெடுத்தது. பின்னாளில் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்பட்ட சிகப்பு ராணுவத்திற்கும் (red army) அந்த கொரில்லாப் படையே ஆதாரமாக விளங்கியது. மா மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவதைக் கண்ட கோமிண்டாங் ராணுவம் அவரைப் பிடித்துச் சுட்டுக் கொல்வதற்காக கொண்டு செல்கையில் அவர்கள் கண்களில் மண்ணைத் தூவி சாவிலிருந்து மயிரிழையில் தப்பினார். அவரது விடாமுயற்சியினால் அடுத்த ஆண்டிற்குள் CCPயில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 40000மாக உயர்ந்தது. மேலும் கோமிண்டாங்கின் செய்கைகளால் ஆத்திரமடைந்த சோவியத் யூனியன் தனது முழு ஆதரவை கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கொடுக்க முடிவெடுத்தது.

இதற்கிடையில் சியாங்கின் கோமிண்டாங் கட்சி நான்ஜிங்கைத் தலைநகராகக் கொண்டு ஏறக்குறைய சீனாவின் எல்லாப் பகுதிகளையும் ஆண்டு கொண்டிருந்தது. இந்த சமயத்தில் கோமிண்டாங் சீனாவை ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டைப் போடும் நோக்கத்தில் ஜப்பான் தனது படைகளை அனுப்பி வைத்தது. ஆனால் மஞ்சூரியாவில் இருக்கும் தனது ராணுவம் ஆலோசனைக் கூறியும் ஜப்பான் சூழ்நிலை தனக்குச் சாதகமாக இல்லாத காரணத்தால் சீனாவின் மேல் படையெடுக்க மறுத்துவிட்டது. ஜப்பானின் இந்த முடிவினால் அதிருப்தியடைந்த ஜப்பானிய ராணுவத்தைச் சேர்ந்த சில சதிகாரர்கள் 1931ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெற்கு மஞ்சூரியாவில் ரயில் தண்டவாளங்களை வெடி வைத்துத் தகர்த்து பின்னர் பழியை சீனர்களின் மேல் போட்டுவிட்டனர். இதனால் கோபமுற்ற கோமிண்டாங் ராணுவம் அந்தப்பகுதியில் படையெடுத்து முக்டென் (இன்றைய ஷென்யாங் பகுதி) மற்றும் ஜப்பானியர்களின் வசம் இருந்த ஷாண்டோங் மாகாணத்தின் தெற்குப் பகுதியான ஷாங்காய் ஆகியப் பகுதிகளைக் கைப்பற்றியது. பின்னர் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ஜப்பான், சீனாவின் கடைசிப் பேரரசரான ‘புயி ‘யின் தலைமையில், மஞ்சூரியாவை மையமாகக் கொண்டு மஞ்சுகுவோ என்ற கைப்பாவை அரசை நிறுவியது.

அதே காலகட்டத்தில் மா சே துங்கிற்கும் பல சோதனைகள். கோமிண்டாங் அரசு மாவின் தமக்கை மற்றும் அவரது இரண்டாம் மனைவியான யாங் கைஹூய் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றி கொன்றுவிட்டது. மேலும் CCPயின் கொரில்லாப்படையைச் சேர்ந்த வீரர்கள் ஜியாங்ஸி மாகாணத்தில் இருக்கும் ஃபூஷியான் என்ற இடத்தில் மாவுக்கு எதிராக கிளர்ச்சி உண்டு பண்ணவும், மாவின் ஆணைப்படி 2000க்கும் மேற்பட்ட வீரர்களைக் கொன்று கிளர்ச்சியை அடக்க வேண்டியதாகி விட்டது. இவை போதாதென்று ஜப்பானிய தாக்குதல்களை எதிர்கொண்டு போரிடுவதற்குப் பதிலாக கோமிண்டாங் கம்யூனிஸ்ட்டுக்களை சுற்றி வளைப்பதிலேயே குறியாக இருந்தன. அந்தத் தாக்குதலைச் சமாளிக்க மா தனது கொரில்லாப் படைக்கு நாலு அம்சம் கொண்ட போர் வியூகத்தை அமைத்துக் கொடுத்தார். அந்த நாலு அம்சத்தையும் இப்போது பார்ப்போம் :

1. எதிரிகள் முன்னேறும்போது கொரில்லாப் படை பின்வாங்க வேண்டும்

2. எதிரிகள் இளைப்பாறும்போது அவர்களை சீண்டி மன உளைச்சலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்

3. எதிரிகள் களைத்திருக்கும் போது அவர்களை கொரில்லாப் படை தாக்கவேண்டும்

4. எதிரிகள் பின் வாங்கும் போது, கொரில்லாப்படை தாக்குதலை உச்சப்படுத்தி முன்னேற வேண்டும்

இந்த நாலு அம்ச போர் வியூகம் பல வெற்றிகளுக்கு வழி வகுத்தது. இதற்கிடையில் கம்யூனிஸ்ட்டுகள் ஜியாங்ஸி மாகாணத்தில சீன-சோவியத் குடியரசை நிறுவி அதற்கு மா சே துங்கை சேர்மனாகவும் தேர்ந்தெடுத்தது. மா நிலச் சீர்திருத்தங்களை ஏற்படுத்தி அந்தக் குடியரசில் உள்ள ஏழை விவசாயிகளின் ஆதரவையும் அதனால் அடைந்த புகழினால் கம்யூனிஸத்தின் ஆதிக்கத்தையும் விரிவு படுத்தினார். ஆனால் அவர் அந்தப் பதவியில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க முடியவில்லை. CCPயின் மத்திய கமிட்டி ஷாங்காயிலிருந்து ரூயிஜின்னுக்கு இடம் பெயெர்ந்த போது மாவுடைய அதிகாரங்களும் பதவியும் பறிக்கப் பட்டிருந்தன. மாவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட அவரது உட்கட்சி எதிரிகள் கோமிண்டாங்குடனான சண்டையில் மா அறிமுகப்படுத்திய கொரில்லா போர் முறையைக் கைவிடுத்து நேர் எதிர் தாக்குதலில் ஈடுபடுமாறு கம்யூனிஸ்ட்டுக்களை வற்புறுத்தினார்கள். கோமிண்டாங் ராணுவத்துடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் மிகக் குறைந்த சிகப்பு ராணுவம் இந்த மாற்றத்தால் பெருத்த சேதத்துக்குள்ளாயின.

1934ம் ஆண்டு கோமிண்டாங் ஐந்தாவது முறையாக கம்யூனிஸ்ட்டுகளை சுற்றி வளைக்க முற்பட்ட போது சிகப்பு ராணுவத்திற்கும் CCPக்கும் பின் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. அதனால் மா தனது படையுடனும் ஆதரவாளர்களுடன் சீனாவின் தென் கிழக்கு பகுதிலிருந்து வட மேற்குப் பகுதிக்கு ஒரு நீ….ண்ட பயணம் (The Long March) மேற்கொண்டார். 18 மலைத்தொடர்கள், 11 மாகாணங்கள், 24 நதிகளைக் கடந்து முடிந்த அப்பயணம் சுமார் 9600 கிலோமீட்டர் துரத்தைக் கடந்து ஒரு வருடம் கழித்து ஷான்க்ஸி மாகாணத்தில் முடிவடைந்தது. 10000 பேருடன் தொடங்கிய அப்பயணம் சுமார் 8000 பேருடனேயே முடிவடைந்தது. மீதமுள்ளவர்கள் கோமிண்டாங் படைகளின் தாக்குதல்களுக்கும், பற்பல மாகாணங்களின் சிறிய படைகளின் தாக்குதல்களுக்கும் கடுமையான பயணச்சூழ்நிலைக்கும் பலியாயினர். ஆனால் வழியில் சேர்ந்துகொண்டவர்களையும் சேர்த்து சுமார் 22000 கம்யூனிஸ்ட்டுகள் ஷான்க்ஸின் மாகாணத்தை அடைந்தனர். அந்தப் பயணத்தின் வெற்றி மா ஒரு சிறந்த தலைவனாக உருவெடுக்க உதவியது. மேலும் சூ யன்லாய் போன்றவர்களின் ஆதரவையும் பெற வழி வகுத்தது. சுன்யி என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் மா கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு ராணுவத்திற்கும் தலைமை தாங்கினார்.

1937ம் ஆண்டு இரண்டாம் சீன-ஜப்பானிய போர் தொடங்குவதற்கு முன் கோமிண்டாங் ராணுவம் ஜப்பானியர்களுக்கு எதிரான போரில் கம்யூனிஸ்ட்டுகளுடன் ஒன்றுபட்டு போரிட்டால் தான் வெற்றி பெற முடியும் என்பதைப் புரிந்து கொண்டது. ஆனால் அதற்கு கட்சியின் தலைவரான சியாங் கை ஷெக் உடன்படாததால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளும் வரை அவரை பலவந்தமாகக் காவலில் வைக்கவும் துணிந்தது. ஜூலை மாதம் 7ம் தேதி தொடங்கிய இரண்டாம் சீன-ஜப்பானிய போரில் பெய்ஜிங்கைக் கைப்பற்றிய ஜப்பானிய ராணுவம் அடுத்த இரண்டே நாட்களில் தியான்ஜின்னையும் கைப்பற்றி ஆகஸ்ட் 13ம் தேதி ஷாங்காய் நகரை முற்றுகையிட்டது. அடுத்த மூன்று மாதங்களில் ஷாங்காய் நகரமும் ஜப்பானியர்களின் வசம் வந்துவிடவே கோமிண்டாங் ராணுவம் தனது தலைநகரான நான்ஜிங்கை நோக்கி வடமேற்காகப் பின்வாங்கியது. டிசம்பர் மாதம் 10ம் தேதி நான்ஜிங்கை முற்றுகையிட்ட ஜப்பானியத் தாக்குதலை மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாத கோமிண்டாங் ராணுவம் நான்ஜிங்கை விட்டு ஓடியது. அந்த வெற்றிக்குச் சில மணி நேரங்களுக்குப் பிறகு தொடங்கிய ஜப்பானிய ராணுவத்தின் ரத்த வெறி பிடித்த, மிருகத்தனமான வெறிச் செயல்கள் இன்றளவும் அவர்களை உலகச் சமுதாயத்தின் முன்னால் தலைகுனிய வைத்துள்ளது.

கமாண்டர் அசாகாவின் தலைமையில் நான்ஜிங்கைக் கைப்பற்றிய ஜப்பான் ராணுவம் 20000 முதல் 350000 வரை சீனப்பொதுமக்களையும் சரணடைந்த சீன வீரர்களையும் கொன்று குவித்தது. 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரத்தவெறி தாக்குதல் இது. நிராயுதபாணிகளான மக்கள் மீது நடந்த இந்த தாக்குதலை விட மோசமான படுகொலை வேறெதுவும் இருக்க முடியாது. ஜப்பானிய ராணுவ வீரர்கள் நகரத்தைக் கொள்ளையடித்து பின்னர் தீ வைத்துக் கொளுத்தினர். பிடிபட்ட சீன மக்களை வித விதமாக சித்திரவதைச் செய்து கொன்றனர். உயிருடன் எரித்தும், உயிருடன் புதைத்தும் அங்கங்களை வெட்டியும் துப்பாக்கி முனையில் இருக்கும் கத்தியால் குத்தியும் கூட்டம் கூட்டமாக நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டும் அந்த அப்பாவி மக்களைக் கொன்று குவித்தனர். அப்படியும் வெறி அடங்காதவர்களாக சுமார் 20000 முதல் 80000 வரை வயது வித்தியாசமில்லாமல் பெண்களையும் சிறுமிகளையும் கற்பழித்தனர். கற்பழித்த பெண்களில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் மீதமுள்ளவர்களை பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்திக் கொண்டனர். உலகிலேயே மிகப்பெரிய அளவில் நடந்த கற்பழிப்புக் கொடுமை இது. அவர்களது அராஜகத்தைக் கண்ட சீன மக்கள் பீதியால் உறைந்தனர். முன்னேறும் ஜப்பானிய ராணுவத்தை தடுக்கும் வழி தெரியாமல் வேடிக்கைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டனர்.

சமீபத்தில் ஜப்பானியப் பள்ளிப் பாட நூல்களில் ஜப்பானிய ராணுவம் நான்ஜிங்கில் நடத்திய மிருகச்செயல்கள் மறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டதும் அதனைத் தொடர்ந்து சீனாவில் உள்ள ஜப்பானியத் தொழில் நிறுவனங்கள் தாக்குதல்களுக்கு உள்ளான செய்திகளையும் நீங்கள் படித்திருப்பீர்கள். ஒரு முன்னேற்றமடைந்த நாடு, மனித நாகரீகத்தின் உச்சத்தை அடைந்த நாடு என்று கருதப்படும் ஜப்பானின் இந்த பொறுப்பற்ற செயலும் அதைத் தொடர்ந்த விளைவுகளுக்கு அதன் எதிர்வினைகளும் நம்பமுடியாதவைகளாக இருந்தன.

சரி, மா நடத்திய புரட்சி வரலாறுக்கு மீண்டும் வருவோம். 1937 முதல் 1945 வரைத் தொடர்ந்த இரண்டாம் சீன-ஜப்பானிய போரில், மா தனது யானான் ராணுவ மையத்திலிருந்து ஜப்பானியர்களுக்கு எதிரான போரை நடத்திச் சென்றார். மாவின் வழிமுறைகளை சியாங் மட்டுமின்றி அமெரிக்காவும் எதிர்த்து வந்தது. அமெரிக்கா சியாங்கை ஒரு முக்கியமான ஆதரவாளராக நினைத்தது. அவரது துணை கொண்டு ஜப்பானியர்களின் தாக்குதல்களை முறியடிப்பதுடன், போரை மிகச் சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வருவதும் அமெரிக்காவின் திட்டம். ஆனால் சியாங்கின் திட்டமோ வேறு விதமாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தவுடன் கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை சியாங் உணர்ந்திருந்தார். அதனால் ஜப்பானியப் போருக்கு அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் நிதி உதவிகளையும் தளவாட உதவிகளையும் கொண்டு தனது ராணுவத்தை பலப்படுத்தும் திட்டத்துடன் சியாங் இருந்தார். அமெரிக்காவால் அவரது இந்தத் திட்டத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகும் அமெரிக்கா சியாங்கிற்கு உதவி செய்வதைக் கை விடவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. சீனாவின் உள்நாட்டுப் போரில் மாவின் தலைமையில் போராடும் கம்யூனிஸ சிகப்பு ராணுவத்திற்கு எதிராக சியாங்கையும் அவரது கோமிண்டாங் கட்சியையும் உபயோகப்படுத்திக் கொள்வது தான் அது. மாவின் தலைமையில் போராடும் கம்யூனிஸ்ட்டுக்களை ஒடுக்கிவிட்டால் கம்யூனிஸம் தழைப்பதை தடுக்க முடியும் என்று அமெரிக்கா நம்பியது. அமெரிக்கர்கள் நிலைக்கு எதிராக சோவியத் யூனியன் மா சே துங்கிற்கு உதவ முடிவு செய்து தளவாடங்களை அதிக அளவில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கொடுத்து உதவியது. ஆனால் அமெரிக்காவுடனான நேரடி மோதலைத் தவிர்க்கும் பொருட்டு சோவியத் யூனியன் மாவுக்கு மறைமுகமாக உதவிகளை அளித்தது.

ஜப்பானியர்களுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருக்கும்போது மா 1939ம் ஆண்டு தனது மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, திரைப்பட நடிகையான ஜியாங் சிங்கை மணந்தார். இந்த நான்காவது மனைவி பிற்காலத்தில் மாவின் அரசாங்கத்தில் பெரும் பங்கு வகித்து வாழ்வின் உச்சத்தையும் பின்னர் அதளபாதாளத்தையும் தொட்ட கதையைப் பிறகு பார்ப்போம்.

1940களில் மா கட்சியில் தனது ஆதிக்கத்தைப் பெருமளவு வளர்த்துக் கொண்டார். கட்சியும் 10000லிருந்து 1.2 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாக வளர்ந்தது. 1943ம் ஆண்டு மா CCPயின் மத்திய கமிட்டிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவின் சிந்தனைகள் சிகப்புப் புத்தகமாக (Red Book) அச்சிடப்பட்டு கட்சியின் புதிய உறுப்பினர்கள் அப்புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டார்கள். 1945ம் ஆண்டு CCP சிகப்புப் புத்தகத்தை அதிகாரப்பூர்வமாக தனது கட்சியின் கோட்பாட்டுப் புத்தகமாக ஏற்றுக் கொண்டது.

இனி இரண்டாம் உலகப்போரும் இரண்டாம் சீன-ஜப்பானியப் போரும் முடிவுக்கு வந்த பிறகு மா சே துங் கோமிண்டாங்கின் ஆதிக்கத்தை முறியடித்து சீனாவின் முடிசூடா மன்னனான வரலாற்றை கடைசி பாகமாக அடுத்த வாரம் பார்ப்போம்.

கே.ஜே.ரமேஷ்

kalelno5@yahoo.com

Series Navigation