சிந்திக்க ஒரு நொடி : நடிப்பு சுதேசிகள்

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

வாஸந்தி


நடிப்பு சுதேசிகள்

மக்கள் மன்றத்தின் புனிதத்தைத் துச்சமாக நினைப்பவர்கள் தேசத் துரோகிகள்

அரசியல்வாதிகள் புனிதர்களாக இருக்கவேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் நமது

தேசத்தில் 5000 சொச்சம் பாராளுமன்ற மற்றும் மாநில அவை உறுப்பினர்கள் இறங்கியிருக்கும் கேடுகெட்ட நிலைக்கு, பதவிக்காகவும் அதிகாரத்துக்காகவும் அவர்கள் பங்கு கொள்ளும் எலிப்பந்தயம்தான் காரணம் என்று சொல்வது எலிகளைக் கேவலப்படுத்துவதாகும்—- நானீ பல்கீவாலா.

ஜன நாயக தத்துவம் ஜனித்த கிரேக்க நாட்டின் சுயசிந்தனையாளரும் தத்துவ மேதையுமான ப்ளேட்டோ

கல்வி அறிவில்லாதோர் அதிகம் உள்ள நாட்டில், ஜன நாயகம் என்பது , கும்பல் அராஜகமாகிவிடும் ஆபத்து கொண்டது என்றார்.கல்வி அறிவில்லாதவர்களே அநாகரிகமாக நடப்பவர்கள் என்ற ப்ளேட்டோவின்

நினைப்பு, ஒரு குறுகிய வட்டம் சார்ந்த மேல்தட்டு நினைப்பு. நமது பாரதப் புண்ய பூமியில் அரசியல் அநாகரிகம் என்பது பேதமற்றது. அறிந்தோர் அறியாதோர், இருப்போர் இல்லாதோர் என்ற வித்தியாசம்

பாராட்டாதது. புதிய காங்கிரெஸ் கூட்டணி அரசு மத்தியில் அமர்ந்ததிலிருந்து நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒரு நாள் கூட ஒழுங்காக நடக்க விடாமல் எதிர் கட்சிகள், முக்கியமாக பாரதிய ஜனதா கட்சியும் , சங்கப் பரிவாரங்களும் அதன் கூட்டணி நண்பர்களும், அடாவடித்தனம் செய்து, காட்டுக்கூச்சல் போட்டு வெளிநடப்பு நடத்தியதும், மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தவேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மத்திய பட்ஜெட் விவாதிக்கப்படாமலேயே

நிறைவேற்றப்பட்டதும், நமது அரசியல் எத்தனை நீசத்துக்கு இறங்கிவிட்டது என்று துல்லியமாகக் காட்டிவிட்டது.

இவர்கள் பேடிகள் என்று திட்டவட்டமாக நான் சொல்கிறேன். நாட்டுப்பற்றும் அரசியல் சாஸனத்தில் மரியாதையும் உள்ளவர்கள் இந்த அளவுக்கு நாட்டையும் அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களையும் கேவலப்படுத்தமாட்டார்கள். மக்கள் பிரதினிதிகளான தாங்கள் ‘மக்களின் மறுப்பதற்கில்லாத வாழும் உரிமைகளை நிலை நாட்டவும் அவர்களது சுதந்திரத்தைக் காக்கவும் ‘ உறுதி மொழி எடுத்து, நாடாளுமன்றத்தில் காலடி வைத்தவர்கள் , சத்தியங்கள் காக்கப்படவேண்டியதில்லை என்ற தங்களது

‘நேர்மையைப் ‘ பறை சாற்றிவிட்டார்கள். ‘கறை படிந்த ‘ அமைச்சர்களை வெளியேற்றச் சொல்லும் எதிர்கட்சியனரின் கோஷத்தில் நியாயம் இருந்தாலும் எத்தனை நாட்கள் அதற்காக வெளிநடப்பு செய்வது ? காங்கிரெஸ் செய்யவில்லையா ? பர்னாண்டஸ் பேசும்போதெல்லாம் வெளிநடப்பு செய்யவில்லையா என்கிறீர்கள். ஆனால் பல முக்கியமான விஷயங்களில் காங்கிரெஸ் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது உங்களுக்கு ஒத்துழைப்பு தந்தது. இல்லாவிட்டால் உங்களால் அந்த அளவுக்கு செயல்பட்டிருக்க முடியாது. ‘கறைபடிந்த ‘ விஷயத்தோடு நிற்கிறதா உங்கள் போராட்டம் ? உங்களது வாய் மெல்லலுக்கு ஆளும் கட்சியினரும் அவல் கொடுப்பது சரியான கூத்து. காந்தியைக் கொன்றது ஆர் எஸ் எஸ் தான் என்று வேலை மெனெக்கட்டு திட்டவட்டமாக ஒரு அமைச்சர் சொல்கிறார். இன்னொருவர் நீங்கள் பூஜிக்கும் வீர் சவர்கரை சுதந்திர தியாகியே அல்ல மாறாகப் பிரிவினைக்கு வித்திட்டவர் என்கிறார். சாதாரண

நடைமுறை வாழ்வில் இங்கிதமில்லாமல் பேசாத , ‘நாகரிக மேல்தட்டு ‘ மனிதர்கள் அரசியல் களத்தில் இப்படிப் பேசுவதற்கு என்ன காரணம் ? ஆள வந்து நூறு நாட்கள் ஆவதற்குள் ஆணவம் கண்ணை மறைக்கிறதாகக் கொண்டால் , எதிர்கட்சியனரான பா.ஜ.கவும் அதன் தோழமைக் கட்சிகளும் நடத்திய வெட்கக்கேடான நித்திய வெளிநடப்பிற்கு தேர்தல் தோல்வியை சந்திக்கும் திரனில்லாத கோழைகள்

அவர்கள் என்பதே காரணம் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

தினமும் மக்களவையில் நடந்த அமற்களத்துக்கும் நாட்டு நடப்புக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லாதது

அவர்கள் யாரையும், முன்னாள் பிரதமரையும் சேர்த்து,துன்புறுத்தாதது அவர்கள் எத்தனை பெரிய நடிப்பு சுதேசிகள் என்று தெளிவாக்கிவிட்டது. விவாதிக்கப் பட வேண்டிய எத்தனை விஷயங்கள் இருந்தன! அஸ்ஸாம் பற்றி எரிந்தது. விலை வாசி எகிறிக்கொண்டிருந்தது. பணவீக்கம் உச்சத்தைத் தொட்டது. ஈராக்கில்

பிணைக்கைதிகளின் நிலை தெரியவில்லை. அவசியமாக பட்ஜெட் விவாதிக்கப்படவேண்டியிருந்தது.

இவையெல்லாம் அவர்களை நம்பி அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களை நேரடியாகத் தாக்கும்

விஷயங்கள். ஆனால் நமது மாண்புமிகு எதிர்கட்சியனருக்கு, தாங்கள் மாசில்லாதவர்கள், தாங்களே தேசபக்தி கொண்டவர்கள் என்றும் வெளிநாட்டவரை தலைவியாகக் கொண்ட ஒரு கட்சி தேச விரோதமானது என்றும் காட்டவேண்டிய அரசியல் கட்டாயத்தில், தேசமும் மக்களும் கடைசி பட்சமாகிப் போனார்கள். அமைச்சர் சிபு சோரனை உங்கள் கட்சி ஆளும் மானிலத்தில் 10 ஆண்டுகள் பழையதான வழக்கில் கைது செய்யப்பட்டது நீதி மன்ற விவகாரம். ஆனால் ஓராண்டு கால வழக்கில் உமா பாரதி கைதானதற்கு

சோனியா காந்தியே நேரடி காரணம் என்கிறீர்கள். இதைவிடக் கேவலமாக யாரும் அரசியல் செய்யமுடியாது. சட்டத் தடையை மீறி , இனக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி, மசூதியில்

கொடியேற்றுவது தான் உங்கள் தேசபக்தியின் அடையாளமா ? சட்டத்தடையை மீறுவது எந்த நாட்டில் அனுமதிக்கப்படும் ? தேசியக் கொடியை ஏற்றச் சென்றதற்காகக் கைது செய்தார்கள் என்று இப்போது

நீங்கள் மக்கள் காதில் பூ சுற்றுகிறீர்களே, நீங்கள் அப்பட்ட நடிகர்கள்- தேச விரோதிகள்.

ஜன நாயகத்துக்கு ஆபத்து நமது மக்களால் வருவதல்ல. தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதினிதிகளாலேயே வருவது.தமிழகத்து மானில அவையில் நடக்கும் கூத்து இன்னொரு கோணத்தின் அடையாளம். எதிர்கட்சியினர் எந்த விவாதத்திலும் ஈடுபடமுடியாமல் அமர்த்தப்படுவதும் அவர்கள் வெளிநடப்பு செய்வதும் தொலை காட்சி பார்வையாளர்களுக்குப் பழகிப் போன அவமானம்.தேர்தலின் போது மக்களே மகேசனாகத் தோன்றுவதும், தேர்தலுக்குப்பின் ஜெயித்தவர் மகேசனாகிப்போவதும் அரசியல் களத்தில் நிகழும் மயக்கம்.

பாமரனுக்கு அரசியல் சாஸனத்தின் புனிதமும் அதன் முக்கியத்துவமும் தெரியாமலிருக்கலாம். ஆனால் தனது நம்பிக்கையை சிதைத்தவர்களை அடையாளம் காணத் தெரியும்.

—-

vaasanthi@hathway.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி