பேரழிவுச் சீரமைப்பு -உளவியல் கண்ணோட்டம்-2

This entry is part of 47 in the series 20050120_Issue

ஸ்ரீமங்கை


இிரு வாரங்களுக்கு முன்பு இவ்விணையத்தில் பேரழிவுச் சீரமைப்பில் உளவியல் கண்ணோட்டம் குறித்து எழுதியிருந்தேன். இது குறித்து தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன். பல நண்பர்கள் மின்மடல் மூலம் தொடர்பு கொண்டு சீரமைப்புப் பணிகளில் உளவியல் பங்கு குறித்து தகவல் தெரிவித்திருந்தனர். அனைவருக்கும் எனது நன்றிகள்.

மும்பையில் மகரிஷி தயானந்த் கல்லூரியில் உளவியல் துறைப் பேராசிரியை திருமதி. சுந்தரி அவர்களுக்கு வந்த அழைப்பின் பேரில், பதினெட்டு மாணவர்கள், இரு பேராசிரியைகள் கொண்ட குழு குளச்சல் நோக்கி உளவியல் சீரமைப்பிற்காகப் புறப்பட்டிருக்கிறது. இப் பதினெட்டு மாணவர்களில் பதின்மர் உளவியல் துறை மாணவர்கள்.மற்ற ஆறு மாணவர்கள் மற்றத் துறைகளைச் சார்ந்தவர்கள். கல்லூரி இயக்குனர் திருமதி.வர்மா அவர்கள் முயற்சியால், கல்லூரி நிர்வாகம் ,இக்குழுவின் போய்வரும் செலவை ஏற்றுக்கொண்டிருக்க, தனியார் நிறுவனங்கள் மற்ற செலவுகளை ஏற்க முன்வந்திருக்கின்றன.

பேராசிரியை திருமதி சுந்தரி அவர்கள் , இக்குழுவின் உளவியல் சீரமைப்புப் பணி குறித்துத் தந்த தகவல்கள் இவை.

உளவியல் சீரமைப்பை இக்குழு இரு வழிகளில் கையாளுகிறது.

1. உளவியல் ஆலோசனை (counselling). பள்ளி மாணவ மாணவியர் மத்தியில் , ஊக்கம் அளிக்கவும், தெளிவாக வாழ்க்கையை எதிர்நோக்கவும் , தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மாணவன்/மாணவியையும் இக்குழுவின் அங்கத்தினர் அருகி, ஆலோசனை வழங்குவர். முக்கியமாக, 10 வது, 12-வது வகுப்பு மாணவ/மாணவியரை கூர்ந்து கவனித்து ஆலோசனை வழங்குவது என்பது திட்டமிடப்பட்டிருக்கிறது.

2. உளவியல் மருத்துவம் (therapy). மிகப்பாதிக்கப்பட்ட மக்கள் ( சிறு குழந்தைகள், பெண்கள்) அடையாளம் காணப்பட்டு, உளவியல் ரீதியான மருத்துவம் அளிக்க இக்குழு தயாராக இருக்கிறது. இதற்கு தேவையான உளவியல் மருந்துகள் சேகரிக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிற நாடுகளில் நிகழ்ந்த பேரழிவில் தேவைப்பட்ட மருந்துகள், மருத்துவ முறை, ஆலோசனைமுறை முதலியன கவனமாக ஆராயப்பட்டு, தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட இடத்தின் கலாச்சார, சமூக,பொருளாதார அடிப்படையில் மாற்றப்பட்டு இச் சீரமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனுபவம் வாய்ந்த டாக்டர்.திருமதி. சுந்தரி அவர்களும், மும்பையின் Instititute of Psycho therapy ‘-ஐச் சார்ந்த முதுவியல் மாணவர்கள் ஆறு பேரும் , தனித்தனியான ( one to one) ஆலோசனையும், சிகிச்சைக்கான ஆயத்தங்களும் மேற்கொள்வர். ஒரு நாளைக்கு நூறு பேர் சீரமைப்புப்பணியில் சிகிக்சை அளிக்கப்பட வேண்டும் என திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இச்சீரமைப்புப்பணியில் எடுத்துக்கொள்ளப்படும் முறைகள்:

1. இசை மூலம் அமைதிப்படுத்துதல்.

2. மன அமைதிப்படுத்தும் பிற முறைகள் ( இது குறித்து விளக்கம் கிடைக்கவில்லை.சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது)

3.EMDR ( Eye Movement Desensitisation and Re processing ) என்ற உளவியல் முறை சிகிக்சையாக PTSR ( Post Trauma Stress Disorder ) என்னும் மனச் சோர்விற்காக அளிக்கப்படும். பெரும்பாலான சீரழிவுகளின் சீரமைப்பில் இவ்வணுகுமுறை கையாளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நேரக்குறைவால், இவ்வணுகுமுறை குறித்து பேராசிரியை. சுந்தரி அவர்களிடம் கேட்டுப் பின் விரிவாக எழுதலாமென்றிருக்கிறேன்.

இது தவிர சிறுகுழந்தைகளுக்காக விளையாட்டுப் பொருட்கள், உணவு, மாணவ/மாணவியருக்கான எழுது கருவிகள் முதலியன நன்கொடையாக வசூலிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டிருக்கின்றன.

இக்குழுவின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

தகவல் திரட்டித் தந்ததற்கு நன்றிகள் – பேராசிரியை. திருமதி. ஸ்ரீவரமங்கை, கணனித்துறை,மகரிஷி தயானந்த் கல்லூரி, லோவர் பரேல்,மும்பை

இக்குழுவின் அனுபவங்களை , விரிவாகப் பின் பகிர்ந்துகொள்வோம்

அன்புடன்

ஸ்ரீமங்கை ( க.சுதாகர்)

kasturisudhakar@yahoo.com

Series Navigation