தியாகத் திருவுரு வீர சாவர்க்கர்

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

அரவிந்தன் நீலகண்டன்


மே 28 1883

நாசிக் அருகே உள்ள பாகூர் கிராமத்தில் தாமோதர்பந்த் சாவர்க்கர்- ராதாபாய் தம்பதிகளுக்கு இரண்டாவது மைந்தராக விநாயக தாமோதர சாவர்க்கர் பிறக்கிறார்.

1893

கிராம தொடக்கப் பள்ளியில் பயிலும்போதே பத்தாவது வயதில் அவரது கவிதைகள் பூனா பத்திரிகைகளில் பிரசுரமாகின்றன.

1898-1899

தாமோதர்பந்த் சபேக்கர் ஏப்ரல் 18 1898 ஆம் ஆண்டு பூனா பிளேக் கமிஷனர் ராண்ட்டினைக் கொன்றதற்காக தூக்கிலிடப்பட்டார். (பிளேக் நிவாரணம் என்கிற பெயரில் குடிசைகளை கொளுத்துதல் மற்றும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தல் ஆகியவற்றை செய்த காரணத்தால் ராண்ட்டை தேசியவாதிகள் ஏற்கனவே கண்டித்திருந்தனர்.) சபேக்கரின் மற்ற இரு சகோதரர்கள் – வசுதேவ் மற்றும் பால கிருஷ்ண சபேக்கர்கள் மே 1899 இல் தூக்கிலிடப்பட்டனர். விநாயக சாவர்க்கர் இச்செய்தியால் மிகவும் தாக்கப்பட்டார். தமது குடும்ப தெய்வமான அஷ்டபிரஹரணதாரிணியின் முன் தேசவிடுதலைக்காக தம் அனைத்தையும் தியாகம் செய்வதாக சூளுரைக்கிறார்.

1899

மித்திர மேளா அமைப்பினை ஆரம்பிக்கிறார்.

1901-1902

மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றியடைந்து பெர்கூஸன் கல்லூரியில் சேர்கிறார். ‘ஆரியன் வீக்லி ‘ பத்திரிகைகளில் ஆங்கில ஆட்சிக்கு எதிரான கட்டுரைகளை எழுதுகிறார்.

1904

மித்திர மண்டல் அபிநவபாரத சங்கம் என மாற்றப்படுகிறது. பாரதத்தின் முழு விடுதலையே அதன் இலட்சியமென அறிவிக்கப்படுகிறது.

1905

BA தேர்ச்சி

ஜூன் 9 1906

இலண்டன் செல்கிறார். அதற்கான உபகார தொகைக்காக பண்டித ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவிடம் விண்ணப்பிக்கிறார். அவ்விண்ணப்பத்தில் வீர சாவர்க்கர் எழுதுகிறார் : ‘விடுதலையை சுதந்திர உணர்ச்சியை நான் நம் தேசத்தின் இதயத்துடிப்பாகவும் உயிர்மூச்சாகவும் உணர்கிறேன். என் இளம் வயது முதல் நம் தேசம் விடுதலையை இழந்ததையும், அதனை மீட்டெடுப்பதற்கான சாத்தியக் கூறுமே எனது இரவுகளின் கனவாகவும் எனது பகல்களின் எண்ணமாகவும் இருந்துவருகிறது. ‘ இலண்டனில் தீவிர புரட்சிகர இயக்கங்களில் வீர சாவர்க்கர் ஈடுபடுகிறார். இங்கிலாந்திலிருந்து தீவிர தேசபக்த இலக்கியங்களையும் ஆயுதங்களையும் ஆயுதங்கள் செய்யும் தொழில்நுட்பம் குறித்த இலக்கியங்களையும் பாரதத்திற்கு அனுப்புவதில் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் ஈடுபடுகின்றனர். சிப்பாய் கலகம் என காலனியவாதிகளால் வர்ணிக்கப்பட்ட 1857 நிகழ்ச்சியை ‘முதல் இந்திய விடுதலைப்போர் ‘ என பிரகடனம் செய்யும் ‘எரிமலை ‘ எனும் மறுக்கமுடியாத சான்றுகள் நிறைந்த வரலாற்று ஆய்வுநூல் வீர சாவர்க்கரால் எழுதப்பட்டது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வவேசு ஐயர் அவர்களால் செய்யப்பட்டு பின்னர் ஹாலந்தில் புரட்சிவீரர் லாலா ஹர்தயாள் அவர்களால் வெளியிடப்பட்டது. ( பின்னாளில் தேசியவாதிகள் பணம் திரட்ட இந்நூலின் அடுத்த பதிப்புகளை வெளியிட வீர சாவர்க்கர் உதவினார். அவர்களுள் முக்கியமானவர்கள் பகத்சிங்கும், நேதாஜி போஸும்.)

ஜூலை 1910

ஸர் கர்ஸான் வில்லி வீர சாவர்க்கரின் அணுக்கச் சீடரான மதன்லால் திங்க்ராவால் கொல்லப்படுகிறார். திங்க்ராவின் செயலைக் கண்டித்து இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றுவதை வீர சாவர்க்கர் எதிர்க்கிறார். அதற்காக வன்முறையாக தாக்கப்படுகிறார். அதே சமயம் நாசிக்கில் வீர சாவர்க்கரின் தமையன் கணேஷ் ராவ் சாவர்க்கர் விடுதலைகீதங்களின் தொகுப்பினை வெளியிட்டதற்காக கைது செய்யப்படுகிறார். நாசிக் நகர கலெக்டர் ஜாக்சன் தேசியவாதிகளால் சுட்டுக்கொல்லப்படுகிறார். காவல்துறை தீவிரவாத செயல்களின் பின்னால் வீர சாவர்க்கரை சந்தேகிக்கிறது. வீர சாவர்க்கர் இலண்டனில் காவல்துறையினராலும் இரகசிய போலிசாராலும் வேட்டையாடப்படுகிறார். வவேசு ஐயர் மற்றும் மேடம் காமா ஆகியோரது வேண்டுகோளின்படி அவர் பாரிஸ் செல்கிறார். ஆனால் ‘என் தோழர்கள் வேட்டையாடப்படும் போது நான் இங்கிருப்பது சரியல்ல ‘ எனக் கூறி அவர் இங்கிலாந்து வருகிறார். இலண்டனில் வீரசாவர்க்கர் கைது செய்யப்படுகிறார். அவர் மீதானக் குற்றச்சாட்டு: ‘ மேன்மை தங்கிய அரச பெருமானுக்கு எதிராக அவரது பிரிட்டிஷ் இந்திய பேரரசை இழக்கச்செய்யும் படியாக சதி நடத்தியது, இலண்டனிலிருந்து ஆயுதங்கள் வாங்கியும் அதனை இந்தியாவில் விநியோகித்தும் அதன் மூலம் அரசுக்கு எதிராக போர் நடத்தியது ‘. எஸ்.எஸ். மோரியா கப்பலில் பாரதம் அனுப்பப்படுகிறார்.

ஜூலை 8, 1910

எஸ்.எஸ்.மோரியா மர்செய்ல்ஸில் வருகிறது. வீர சாவர்க்கர் கழிவறை மேல் ஜன்னல் வழியாக கடலில் குதித்து நீந்தி பிரான்ஸு கரையை அடைகிறார். அங்கு ஒரு பிரஞ்சு காவலாளியின் அலட்சியப் போக்கால் ஆங்கில சிப்பாய்கள் அவரை கைது செய்கின்றனர்.

ஜூலை 22 1910

பம்பாய் யெரவாடா சிறையில் அடைக்கப்படுகிறார். ஒரு தனிநீதி மன்றம் அவரை விசாரிக்கிறது. தமது சார்பாக எதையும் பேச அவர் மறுக்கிறார். நீதி மன்றம் குற்றம் சாட்டப்பட்டவர் பேரரசுக்கு எதிராக போர் தொடுத்ததாகக் கூறி தீர்ப்பளிக்கிறது.

டிசம்பர் 23 1910

வீர சாவர்க்கருக்கு முதல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு அவரது அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

ஜனவரி 30,1911

நாசிக் சதிவழக்கில் மற்றொரு ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகிறது. அவருக்கு இரும்பு கழுத்துப்பட்டை அளிக்கப்படுகிறது. அபாயமானவர் என்பதைக் குறிக்கும் ‘D ‘யுடன் ’50 வருடங்கள்: 24-12-1910 முதல் 23-12-1960 ‘ எனும் வாசகங்கள் அடங்கிய கழுத்துப்பட்டை அளிக்கப்படுகிறது. அவரது எதிர்வினை ‘இத்தனைக் காலம் பிரிட்டிஷ் அரசு இங்கு நீடிக்கும் என கருதுகிறீர்களா ? ‘

பிப்ரவரி 24 1911

ஹேக் நீதி மன்றம் பிரிட்டிஷ் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குகிறது. ஆனால் வீர சாவர்க்கரை பிரஞ்சு மண்ணில் கைது செய்தமையில் ஒரு சிறு ஒழுங்கின்மை இருப்பதாகவும் ஒப்புக்கொள்கிறது.

ஜூன் 27,1911 – ஜூலை 4,1911

வீர சாவர்க்கர் அந்தமானுக்கு அனுப்பப்படுகிறார்.

1911-1913

வீர சாவர்க்கருக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. தனியறை சிறைவாசம், கனத்த விலங்கிடப்பட்ட கைகளால் தென்னை மட்டை மற்றும் மரத்தை சிறுதுண்டுகளாக உடைத்தல்; காலை ஏழுமணி முதல் இரவு ஏழு மணிமுதல் இரண்டே கப்புகள் நீர் அருந்தி செக்கிழுத்தல், தென்னை நார்களை பிய்த்து வெறுங்கையால் நூலாக்குதல் ஆகியவை தொடர்ந்து கொடுக்கப்படுகின்றன.

நவம்பர் 14,1913

வீர சாவர்க்கரால் கையெழுத்திடப்பட்டு அவரது சார்பில் ஒரு மனு பிரிட்டிஷ் அரசுக்கு அளிக்கப்படுகிறது. அதில் அவர் தாம் இச்சிறையிலிருந்து நீக்கப்பட்டால் சட்டத்திற்குட்பட்ட செயல்பாடுகளுடன் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக கூறும் வாசகங்கள் இருக்கின்றன.

நவம்பர் 16, 1913

வீர சாவர்க்கர் தம் தோழர்களுக்கு தாம் புரட்சி நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டதாக தெரிவிக்க வேண்டுமென பிரிட்டிஷ் அரசு கூறுகிறது. வீர சாவர்க்கர் அதற்கு அரசு இடைத்தரகு இன்றி நேரடி தொடர்பு ஏற்படுத்த கோருகிறார். அவ்வாறில்லையெனில் தாம் ஏதும் செய்ய இயலாதெனக் கூறுகிறார். அந்தமான் சிறையைப் பார்வையிட்ட சர்.ரெஜினால்ட் கிரடாக்கு தம் அறிக்கையில் வீர சாவர்க்கர் இன்னமும் ‘திருந்தவில்லை ‘ என கூறுகிறார்.

1914

அந்தமான் சிறை ஆவணங்கள் 1912,1913,1914 ஆகிய ஆண்டுகளில் பிரிட்டிஷ் விரோத இலக்கியங்களை சிறைக்குள் வைத்திருந்தமைக்காக வீர சாவர்க்கர் எட்டு முறை தண்டனை அளிக்கப்பட்டார். மானுடத்தன்மையற்ற சித்திரவதைகள் அதிகரிக்கின்றன. வீர சாவர்க்கருடன் கைது செய்யப்பட்ட இந்து பூஷன் ராய் தற்கொலை செய்து கொள்கிறார். உலஸ்கர் தத் மனநிலை இழக்கிறார். நானி கோபால் உண்ணாவிரதம் இருந்து இறக்கும் தருவாயை அடைகையில் அவரை உண்ணாவிரதத்தை கைவிட்டு வேலை நிறுத்தம் செய்யுமாறு கூறி வீர சாவர்க்கர் சாவிலிருந்து காப்பாற்றுகிறார். வீர சாவர்க்கருடன் கைது செய்யப்பட்ட மற்றொரு கைதி உபேந்திரநாத் பனர்ஜி வீர சாவர்க்கரின் உற்சக மொழிகள் தம்மை சாவிலிருந்து காப்பாற்றியமையை நன்றியுடன் பின்னாளில் நினைவு கூர்வார். வீர சாவர்க்கர் அந்தமானில் எழுத்தறிவு இயக்கம் ஆரம்பிக்கிறார். அடிக்கடி கைதிகளின் செல்கள் மாற்றப்படும். அவரது செல்லுக்கு வரும் கைதிகள் படிக்க இலக்கண பாடங்களும், எழுத்தறிவுடையோர் மனமுடையாமலிருக்க விடுதலை உணர்ச்சியூட்டும் கவிதைகளும், சிறையின் கற்சுவர்களில் நகத்தாலும் முட்களாலும் கற்களாலும் வீர சாவர்க்கரால் பொறிக்கப்பட்டிருக்கும். சிறையில் வீர சாவர்க்கர் 10,000 வரிகளுக்கும் அதிகமான ‘பானிபட் ‘ எனும் காவியத்தை இவ்விதத்தில் இயற்றுகிறார்.

அக்டோபர் 3, 1914

அன்று அவர் எழுதிய விண்ணப்பத்தில் அரசியல் கைதிகளை விடுவித்தால் அவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்காகப் போராடுவர் என வீரசாவர்க்கர் கூறுகிறார். அந்த விண்ணப்பத்தில் ‘எனது விடுதலை எனக்கு முக்கியமில்லை. எனவே என்னை விடுதலை செய்யாமல் என்னைத்தவிர ஏனைய அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள். ‘ எனக் கூறுகிறார். சர்.கிரடாக் பின்வரும் வார்த்தைகளால் வீர சாவர்க்கரின் விண்ணப்பதை நிராகரிக்கிறார்: ‘அவர்களது இரகசியத்தொடர்புகளை நாம் கண்காணித்து வருகையில் தெரிவது என்னவென்றால் அவர்கள் இத்தருணத்தை (முதல் உலகப்போரை) தமக்கு ஆதரவாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதே. ‘

1914-1918

வீர சாவர்க்கருக்கு அளிக்கப்பட்ட பல தண்டனைகள்:

அ) கனத்த விலங்கிடப்படல்

ஆ) பின்பக்கமாக கைகள் முறுக்கி விலங்கேற்றப்பட்டு காலை முதல் மாலை வரை நிற்க வைத்தல்

இ) இடுப்பு முதல் பாதம் வரையில் இரும்புகம்பிகளால் பிணைக்கப்பட்டு இரண்டு நாட்கள் வரை குனிய முடியாமல் நிற்க வைத்தல்

ஈ) பாதங்கள் ஒன்றை ஒன்று சேராமல் cross-bar fetters

உ) சுவரில் உயரமாக கொக்கியில் இருகைகளையும் இணைத்து நாள் முழுவதும் நிற்கவைத்தல்

1918

முதல் உலகப்போர் முடிவடைகிறது. வீர சாவர்க்கர் தவிர மற்ற அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

1919

மே 1919 வீர சாவர்க்கரின் மனைவி அவரை பார்க்க அனுமதிக்கப்படுகிறார். வீர சாவர்க்கரின் சிறைவாச காலத்தில் வறுமையால் ஒருமுறை சுடுகாட்டுப் பிண்ட உணவை கூட உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டவர் அந்த அம்மையார். வீர சாவர்க்கருக்கு காச நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை சந்தேகிக்கிறது. எனினும் வீர சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்து மாற்றப்படவில்லை.அந்தமான் சிறையின் முதன்மை கமிஷனரின் அறிக்கை வீர சாவர்க்கர் இன்னமும் தமது கொள்கையில் மாறவில்லை எனவே அவரை விடுதலை அல்ல சிறைமாற்றம் செய்வது கூட உசிதமல்ல எனக்கூறுகிறது.

1921

வீர சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்து யெரவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார். வீர சாவர்க்கர் 1918 முதலே தமது மனதில் உருவாக்கிய நூலான ‘ஹிந்துத்வா ‘ எழுத்துருவம் பெற்று இரகசியமாக கடத்திச்செல்லப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது.

ஜனவரி 6 1924

வீர சாவர்க்கர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். ஆனால் ரத்னகிரி மாவட்ட எல்லையைத் தாண்டக்கூடாதெனும் கட்டுப்பாடு அவருக்கு விதிக்கப்படுகிறது.

1924 முதல் 1937

சாதியத்திற்கு எதிரான தீவிரப்போராட்டத்தில் ஈடுபடுகிறார். பின்வரும் நூல்களை எழுதுகிறார்: ‘ஹிந்து பத பாதஷாகி ‘, ‘எனது நாடுகடத்தல் ‘, ‘கைவிடப்பட்ட வாள் ‘, ‘மாப்ளா கலவரம் ‘. 1927 இல் மகாத்மா காந்தி அவரை ரத்னகிரி வந்து சந்திக்கிறார். மதமாற்றத்தால் ஏற்படும் அபாயங்களை இருவரும் ஒருமனதினராக காண்கின்றனர்.

1930 நவம்பர்

வீர சாவர்க்கர் பெரும் சமபந்தி போஜனத்தை நடத்துகிறார். வீர சாவர்க்கருக்கு எதிரான டைம்ஸ் ஆப் இண்டியா அதன் டிசம்பர் 9, 1930 இதழில் ‘காங்கிரஸ் காரர்கள் நடத்தும் எந்த ஜாதி ஒழிப்பு வைபவத்தை விடவும் பெரும் வெற்றியுடையதாக அமைந்ததாக ‘ வர்ணிக்கிறது. வீர சாவர்க்கர் அக்கூட்டத்தில் சாதிமுறை முழுமையாக ஒழிக்கப்படவேண்டும் என அறைகூவல் விடுக்கிறார்.

1931 பிப்ரவரி 22

வீர சாவர்க்கர் பதித பாவன மந்திர் எனும் கோவிலை வடிவமைத்து அதில் சாதி மத வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்க வலியுறுத்துகிறார். வழிபாடுகளை செய்ய தலித்களை நியமிக்கிறார். ‘தீண்டாமையை நீக்கினால் மட்டும் போதாது முழுமையாக சாதி அமைப்பே ஒழிந்தால்தான் தலித்கள் தலை நிமிர முடியுமென உணர்ந்த மிக அரிதான தலைவர் ‘ என பாபா சாகேப் அம்பேத்கர் வீர சாவர்க்கரை பாராட்டுகிறார்.

ஏப்ரல் 1933

தமது பத்திரிகையான ஜனதாவின் விசேஷ பதிப்பில் டாக்டர் அம்பேத்கர் வீர சாவர்க்கரின் சாதி எதிர்ப்பு முயற்சிகளை கெளதம புத்தருடன் ஒப்பிடுகிறார்.

மே 10 1937

வீர சாவர்க்கர் மீதான அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு பூரண விடுதலை அளிக்கப்படுகிறது.

டிசம்பர் 1937

வீர சாவர்க்கர் அலகாபாத் ஹிந்துமகாசபை மாநாட்டில் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஜப்பானில் இந்திய தேசிய விடுதலை அமைப்பினை உருவாக்கிய ராஷ்பேகாரிபோஸுடன் வீர சாவர்க்கர் தொடர்பு கொள்கிறார்.

ஆகஸ்ட் 1 1938

இரண்டாவது உலகப் போரின் கருமேகங்கள் சூழ்கின்றன. பூனாவில் 20,000 பேர் கொண்ட ஒரு பொதுக் கூட்டத்தில் வீர சாவர்க்கர் பின்வருமாறு கூறுகிறார்: ‘எந்த தேசம் இந்தியாவின் விடுதலைப்போராட்டத்தில் உதவுகிறதோ அது நமது நண்பன். எந்த தேசம் நம்மை எதிர்க்கிறதோ அது நம் எதிரி. எத்தேசம் நம்மை குறித்து நடுநிலை வகிக்கிறதோ, அதனிடம் அதே நடுநிலையை நாம் வகிக்கவேண்டும். அதன் உள்நாட்டு வெளிநாட்டு விஷயங்களில் நாம் மூக்கை நுழைக்க தேவையில்லை. ‘ வீர சாவர்க்கர்- ராஷ் பேகாரி போஸ் கடிதத் தொடர்பு அதிகரிக்கிறது. ஹிந்து மகாசபை கிளை ஜப்பானில் தொடங்கப்படுகிறது.

அக்டோபர் 1939

வீர சாவர்க்கர் அழைப்பின் பேரில் வைஸ்ராயை சந்திக்கிறார். போரில் ஒத்துழைப்புக்கு பிரதியாக பிரிட்டிஷ் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து தர வைஸ்ராயை சம்மதிக்க முயற்சிக்கிறார். இளைஞர்களை இராணுவத்தில் சேருமாறு கோருகிறார். பின்னாளில் பிரிவினையின் போது பிரிட்டிஷ் இந்திய இராணுவம் பிளக்கப்பட்ட போது இந்திய இராணுவம் வலிமையுடையதாக இருக்க இது உதவிற்று. ஆனால் வீர சாவர்க்கர் இதனை இந்திய இளைஞர்கள் இராணுவ பயிற்சி பெற கிடைத்த பொன்னான வாய்ப்பாக கருதுவதாக தெரிவிக்கிறார். ஒரு தேச விடுதலைக்கு அத்தேச இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இராணுவம் அவசியம் எனக் கூறுகிறார்.

ஜூன் 1940

பார்வார்ட் பிளாக்குடன் ஒத்துழைப்பது குறித்து திட்டமிட வீர சாவர்க்கரை நேதாஜி சந்திக்கிறார். இச்சந்திப்பு பிரிட்டிஷ் உளவாளிகளின் கவனத்தை ஈர்க்கிறது. இச்சந்திப்பில் நிகழ்ந்தவை இரு தரப்பினராலும் பதிவு செய்யப்படவில்லை. பத்திரிகை செய்திகள் இப்பேச்சில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என தெரிவிக்கின்றன.

ஜனவரி 1941

பாரதத்திலிருந்து நேதாஜி தப்பி வெளியேறுகிறார். அதற்கு முன் இறுதியாக வீர சாவர்க்கரை மட்டுமே சந்திக்கிறார். இச்சந்திப்பும் அடைத்த கதவுகளுக்கு பின்னே நடைபெறுகிறது.

1944

ஜப்பானில் ராஷ் பேகாரி போஸுடன் நேதாஜி சுபாஷ் போஸ் சந்திக்கிறார். சுதந்திர இந்திய அமைப்பின் தலைமைப் பொறுப்பை ராஷ் பேகாரி போஸ் நேதாஜியுடன் ஒப்படைக்கிறார். இந்திய தேசிய இராணுவத்தின் பெரும் உதயம். சிங்கப்பூர் வானொலி ஒலிபரப்புகள்

ஜூன் 25 1944

சிங்கப்பூர் வானொலி ஒலிபரப்பில் நேதாஜியும், ராஷ் பேகாரி போஸும் வீர சாவர்க்கருக்கு தம் நன்றியையும், வணக்கங்களையும் முறையே சமர்ப்பிக்கிறார்கள். ‘சில அரசியல் தலைவர்கள் தெளிவான பார்வையின்மையின் காரணமாக இந்திய இராணுவ வீரர்களை கூலிப்படையாளர்கள் எனச் சொல்கையில் வீர சாவர்க்கர் அச்சமின்றி இளைஞர்களை இந்திய இராணுவத்தில் இணையுமாறு கூறுவது மனமகிழ்ச்சி அளிக்கிறது. ‘ என நேதாஜி கூறுகிறார். ‘வீர சாவர்க்கருக்கு வணக்கம் தெரிவிப்பது தியாகத்திற்கே வணக்கம் தெரிவிப்பதான மகிழ்ச்சியும் கடமையுமான செயலாகும். ‘ என ராஷ் பேகாரி போஸ் கூறுகிறார்.

1945

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் மூலம் பிரிட்டிஷ் அரசு இனியும் பாரதத்திற்கு விடுதலையை தவிர்ப்பது ஆபத்தானது என்பதை உணர்கிறது. வீர சாவர்க்கர் சீக்கிய தலைவர் மாஸ்டர் தாராசிங் ஆகியோர் பிரிவினையை எதிர்க்கின்றனர். வீர சாவர்க்கர் முதல் மாரடைப்பைச் சந்திக்கிறார். நினைவிழப்பால் அவதிப்படுகிறார்.

ஆகஸ்ட் 15 1947

எவ்வித ஆரவாரமும் இன்றி சுதந்திர தேசக்கொடியை வீர சாவர்க்கர் ஏற்றுகிறார். நேதாஜியின் சகோதரர் சரத் சந்திர போஸை விடுவிக்க அரசுக்குக் கோரிக்கை வைக்கிறார்.

1948

பிரிவினை கலவரங்களால் அகதிகள் டெல்லியிலும் பஞ்சாபிலும் நிரம்பி வழிகின்றனர். காஷ்மிரில் பாகிஸ்தானிய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு. பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்கவேண்டிய 55 கோடி ரூபாயைக் கொடுக்க படேல் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீப்புகளை நிறுத்த வேண்டுமென நிர்ப்பந்திக்கிறார். மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு இந்தியா 55 கோடி ரூபாயைக் கொடுக்க இந்திய அரசினை நிர்பந்திக்கும் உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்.

ஜனவரி 30 1948

கோட்ஸே காந்திஜியைக் கொல்கிறார். கோட்ஸே முறையே காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்துமகாசபை ஆகிய இயக்கங்களில் இருந்து விலகியவர். பின்னர் ஹிந்து ராஷ்ட்ர தளம் எனும் அமைப்பபினை நிறுவி செயல்படுகிறார். வீர சாவர்க்கரை மிகவும் மதிக்கும் கோட்ஸே, வீர சாவர்க்கருக்கு மகாத்மா கொலைக்குற்றத்திற்கு முன்னரே எழுதிய கடிதங்களில் வீர சாவர்க்கரை தாம் பெரிதும் மதிப்பதாகவும் ஆனால் வீர சாவர்க்கரோ தம் அமைப்பிற்கு தொடக்கத்தில் செய்த பொருளுதவிக்கு அப்பால் எவ்வித ஆதரவும் வழங்கவில்லை எனவும் ஆதங்கப்படுகிறார்.

பிப்ரவரி 4 1948

காந்தி கொலை தொடர்பான சதியில் உட்படுத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார். வீர சாவர்க்கருக்கு ஆதரவாக வாதாட தேசபந்து சி.ஆர்.தாஸின் சகோதரர் பி.ஆர்.தாஸ் முன்வருகிறார். டாக்டர். அம்பேத்கர் வீர சாவர்க்கர் மீது சுமத்தப்பட்ட கொலைக்குற்றம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கருத்து தெரிவிக்கிறார்.

பிப்ரவரி 10, 1949

149 சாட்சிகள், 354 ஆவணங்கள், 10,000 கடிதங்கள் மற்றும் 80க்கும் மேற்பட்ட இருப்புகளுக்கு பின் காந்தி கொலை வழக்கின் தீர்ப்பு பின்வருமாறு கூறியது: ‘விநாயக தமோதர சாவர்க்கர்: அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு, குற்றமற்றவராக கருதப்படுகிறார். எனவே விடுவிக்கப்படுகிறார், ‘

26 ஜனவரி 1954

வீர சாவர்க்கர் பாரதத்தின் மீதான சீன ஆக்கிரமிப்பு அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஆகஸ்ட் 26, 1954

வீர சாவர்க்கர் சுட்டிக்காட்டிய சீன ஆக்கிரமிப்பு அபாயத்தை பாபா சாகேப் அம்பேத்கரும் ராஜ்ய சபையில் சுட்டிக்காட்டுகிறார்.

செப்டம்பர் 1965

எதிரியின் பிரதேசத்தில் இந்தியவீரர்கள் நுழைந்ததை தம் வாழ்நாளின் மிகவும் மகிழ்வேற்பட்ட தருணம் என்கிறார்.

பிப்ரவரி 3 1966

பாரத பாரம்பரிய முறைப்படி உணவைத் துறந்து உயிர் துறக்கும் முறைமையை கை கொள்கிறார் வீர சாவர்க்கர். உணவு உட்கொள்வதை நிறுத்துகிறார். ஹிந்து பாரம்பரியத்தின் சிறந்த நிர்-ஈஸ்வரவாதியான வீர சாவர்க்கர் தம் மரணப்படுக்கையிலும் தமக்காக எவரும் பிரார்த்தனைகள் போன்றவை மேற்கொள்ள வேண்டாம் எனவும், தமது அந்திம காலத்தில் கிரியைகள் ஏதும் செய்யாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு மின்சார சுடுகாட்டில் எரிக்க வேண்டுமெனவும் எவ்விதச் சடங்குகளும் செய்யக் கூடாது எனவும் கூறுகிறார்.

பிப்ரவரி 26 1966 இரவு 11:10

‘தாம் பாரதத்திற்கு அளித்த மிக உன்னத பரிசை கடவுள் திரும்பப் பெற்றுக்கொண்டார். ‘ – மூத்த காந்தியவாதியான எஸ்.ராமகிருஷ்ணன் வீர சாவர்க்கரின் மரணம் குறித்து.

2004

மணிசங்கர் ஐயர் என்பவரால் வீர சாவர்க்கரின் மேற்கோள் அந்தமானில் நீக்கப்படுகிறது.

—-

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்