ஈராக்: அமெரிக்க ஆளுகையின்கீழ் பெண்ணுரிமை

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

அசுரன்


அரபு நாடுகளிலேயே சட்டரீதியில் மிகச் சுதந்திரமானவர்களாக வாழ்ந்து வந்தவர்கள் ஈராக்கிய பெண்கள்தான்ி. ஆனால், சதாம் உசேனின் கோரப்பிடியிலிருந்து ஈராக்கிய மக்களை விடுதலைசெய்ய வந்ததாய்ச் சொல்லி, இன்று ஈராக்கைக் கைப்பற்றியுள்ள அமெரிக்கர்களின் ஆளுகையிலோ ஈராக்கிய பெண்களின் உரிமைகள் பறிபோய்வருகின்றன என்பதே உண்மை.

ஈராக்கை தற்போது ஆண்டுகொண்டிருக்கும், அமெரிக்க ஆதரவினாலான இடைக்கால நிர்வாகம் கடந்த டிசம்பர் 29ஆம் நாள் நிறைவேற்றியுள்ள 137வது தீர்மானமானது ஈராக்கில் 1959 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தனிநபர் தகுதிநிலைச் சட்டங்களை (Personal status laws) மாற்றீடு செய்கிறது. 1959ஆம் ஆண்டைய சட்டப்படி கல்வி பெறும் உரிமை, வேலை, இயக்க உரிமை, பரம்பரைச் சொத்துரிமை, மணமுறிவு, குழந்தையின் பாதுகாவல் உரிமை போன்றவை மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன.

தற்போதைய இசுலாமிய சட்டங்கள் (சரியத்) ஈராக்கிலுள்ள பல்வேறுபட்ட மதக்குழுக்களின் மத குருமாரால் நடைமுறைப்படுத்தப்படும். சமய உட்பிரிவுகளுக்கு ஏற்ற வகையில் இவை நடைமுறைப்படுத்தப்படும். இத்தீர்மானமானது தற்போதைய இடைக்கால அரசை நடத்திவரும் அமெரிக்க ஏஜென்டான பால் பிரிமரின் ஒப்புதலைப் பெற்றாலே சட்டமாக்கப்படமுடியும்.

இரகசியமாக, பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல், பொது விவாதம் செய்யாமல், இடைக்காலக் குழுவின் சிறுபான்மை பிரிவினரால் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்திற்கு அமெரிக்காவின் நியூயார்க்கை மையமாகக்கொண்டு செயல்படும் MADRE என்ற சர்வதேசப் பெண்ணுரிமை அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவ்வமைப்பு இது தொடர்பாக பால் பிரிமருக்கு கடிதம் எழுதியுள்ளது.

இத்தீர்மானம் தொடர்பான செயல்பாடுகள், விவாதங்கள் எல்லாமே வெறும் 15 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன. இத்தீர்மானத்தை நிறைவேற்றிய யாருமே ஈராக்கிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. மேலும், அந்த இடைக்கால நிர்வாக அமைப்பில் இடம்பெற்றுள்ள 3 பெண் பிரதிநிதிகளும் கூட இத்தீர்மானத்தை எதிர்த்துள்ளனர்.

‘இது எங்களை மீண்டும் வீடுகளுக்குள் அடைத்துவிடும், கதவுகளை மூடிவிடும். ஆப்கானிஸ்தானில் என்ன நடந்ததோ அதுதான் இங்கும் நடைபெறப்போகிறது ‘ என்கிறார் அமிரா ஹசன் அப்துல்லா என்ற குர்திஸ் வழக்கறிஞர்.

ஈராக் அதிபர் சதாம் உசேன் அமெரிக்கப் படைகளால் கைதுசெய்யப்பட்ட பின்னர் ஷியா மற்றும் சன்னி பிரிவு இசுலாமிய மதக்குருமார்கள் தத்தமது சமூகங்களில் பிரபலமடையவும், செல்வாக்கு செலுத்தவும் தொடங்கியுள்ளனர் என்பதையும் நாம் இத்தருணத்தில் நினைவில் கொள்வது அவசியம்.

கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்க அதிபர் புஷ்சுக்கு கடிதம் எழுதியுள்ள சில அமெரிக்க வழக்கறிஞர்கள், ‘இத்தீர்மானத்தை திரும்பப்பெறச்செய்வது தவிர்க்க இயலாததாகும், அல்லது அமெரிக்காவின் நடவடிக்கைகளால் ஈராக்கிய பெண்களின் வாழ்நிலை மிக மோசமாகிவிடும். அப்படி நடைபெறுவதை நாம் அனுமதிக்கக்கூடாது ‘ என்று கூறியுள்ளனர்.

இப்படி ஒருபுறம் சிக்கல்கள் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது, தற்போது ஈராக் தலைநகரான பாக்தாத்திலிருந்துகொண்டு, ஈராக்கின் இராணுவ மற்றும் அரசியல் நிலை குறித்து ஆய்வுசெய்துவரும் அமெரிக்க பாதுகாப்புத்துறை துணைச்செயலர் பால் உல்ஃபோவிட்ஸ் வாஷிங்டன் போஸ்ட் இதழில் பெண்களின் உரிமைகள் குறித்து எழுதியுள்ள ஒரு கட்டுரை கடும் எதிர்ப்பைப் பெற்றுள்ளது. ஏனெனில், ‘புதிய ஈராக்கில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரையில் ஈராக்கின் ஆளும் அமைப்புகளிலும் அமைச்சரகங்களிலும் பெண்கள் கட்டாயம் சமவுரிமை எடுத்துக்கொள்ளவேண்டும், இதில் அதிக பெண்கள் ஈடுபடவேண்டும் என்று எழுதியுள்ள அவர் பெண்ணுரிமைக்கு பெரும் ஆபத்தாக எழுந்துள்ள 137வது தீர்மானத்தைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதத்தில்ி கையொப்பமிட்டுள்ள கரோலின் மலோனி என்ற வழக்கறிஞர், ‘முன்னர் ஈராக்கை ஒரு இரக்கமற்ற சர்வாதிகாரி ஆண்டபோது, பெண்கள் தம் அடிப்படை உரிமைகளைப் பெற்றிருந்தனர், கல்வி பெற்றிருந்தனர், சமூகத்தில் பங்குபெற்றிருந்தனர். ஆனால், போருக்குப் பிந்தைய ஈராக்கில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்படுகின்றனர். மட்டந்தட்டப்படுகின்றனர். ஈராக் ஆட்சிமன்றக்குழு எடுத்துள்ள நடவடிக்கைகள்ி ஈராக்கிய பெண்களை ஆபத்தான பள்ளத்தில் தள்ளி, மனித உரிமைப் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இப்போது அங்கு பெண்ணுரிமை தொடர்பான குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. நாம் இந்நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்தாகவேண்டும், இல்லையென்றால் பயனில்லை ‘ என்கிறார்.

நடப்பு நிலைமைகளைப் பார்க்கும்போது, புதிய ஈராக்கிய அரசியலமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் சமவுரிமை அளிக்கப்படும் என்று புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறியுள்ளது நிறைவேறுமா என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

மேலும், ஈராக்கிய சமூகத்தில், சதாமின் ஆட்சியில் அனைவரும் சமமாக நடத்தப்பட்ட நிலைமைக்கு மாறாக இனி ஒவ்வொரு சமூகக்குழுவிற்கும் தனித்தனியான சட்டங்களை உருவாக்குவது என்பது அங்கு பிளவுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தி, ஈராக்கிய சமூகக் கட்டமைப்பை உடைத்துவிடும் என்ற அச்சத்தையும் பலரும் வெளுப்படுத்தியுள்ளனர். பிரித்தாளும் சூழ்ச்சியாளர்கள் அல்லவா ‘வெளிளையர்கள் ‘.

ஈராக் ஒரு சர்வாதிகாரியின் கொடூர ஆளுகையின் கீழ் இருப்பதாகச் சொன்னார்கள். அப்போதுதான் அரபு நாடுகளிலேயே வளர்ச்சித்திட்டங்கள் நிறைந்ததாக, அனைவருக்கும் கல்வி, மருத்துவம், தடையில்லா மின்சாரம, குடிநீர்ி போன்ற வசதிகள் ஈராக்கிய மக்களுக்குக் கிடைத்தன. பெண்களுக்கு அதிக அதிகாரம், வாய்ப்புகள் கிடைத்தன.

ஈராக்கை அந்த சர்வாதிகாரியிடமிருந்து விடுதலை செய்வதாய் வந்தார்கள்- வென்றார்கள். கட்டிடங்களெல்லாம் இடிபாடுகளாய் மாறின, திரையரங்குகளில் ‘நீலப் ‘ படங்கள் திரையிடப்படுகின்றன, போதைப்பொருட்களும் கிடைப்பதாய்ச் சொல்கிறார்கள், வேலையில்லை, ஊதியமில்லை, உணவில்லை எதுவுமேயில்லை.

அமெரிக்க அதிபர் புஷ்ஷின் நேரடிப் பார்வையில் நடைபெறும் ‘விடுதலை பெற்ற ‘ ஈராக்கில் சுதந்திரம் படும்பாடு இதுதான்.

….

(asuran98@rediffmail.com)

Series Navigation

அசுரன்

அசுரன்