சில அபத்த எதிர்வினைகளும், உண்மைகளும்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

அரவிந்தன் நீலகண்டன்


கடந்த இருவாரங்களாக திண்ணையிலும் திண்ணைக்கு வெளியிலும் எனது கட்டுரைகள் குறித்து எழுந்துள்ள எதிர்மறை-எதிர்வினைகளின் பிரச்சார தன்மை அபாரமானவை. உதாரணமாக திரு. ‘ரோசா வசந்த் ‘ என்பவர் எனது கட்டுரைகளில் ‘அபத்தங்கள் ‘ இருப்பதாக சொல்லி ‘கிழிக்கிறார் ‘. அதனையடுத்து திண்ணை கடிதங்கள் பகுதியில் திரு.கார்த்திக் என்பவர் எழுதுகிறார், ‘அரவிந்தன் எழுதும் இது போன்ற(சமஸ்கிருதம் கணிணிக்கு ஏற்ற மொழி,இன்னும் சிலர் சொன்னது போல தேவ பாஷை) கருத்துக்களை படித்து விட்டு, யாரும் ஒன்றும் சொல்லாமல் இருந்தால் , இது போல இன்னும் என்ன என்ன பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவாரோ ? ‘ அதே திண்ணை இதழில் திரு.ரவி.ஸ்ரீநிவாஸ் என்பவர் ‘வாசகர்கள் கவனத்திற்கு ‘ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுகிறார், ‘கடந்த வாரத் திண்ணையில் ரோசா வசந்த் எழுதியிருந்த கட்டுரையை நீங்கள் படித்திருப்பீர்கள்….ஒரு சில அடிப்படை விஷயங்களை மீண்டும் மீண்டும் கூறுவது அலுப்பூட்டும் செயல்.காப்ரா எழுதியவை,அறிவியல் குறிப்பாக குவாண்டம் பெளதிகம்,ஆன்மிகம்/கிழக்கத்திய சிந்தனைகள் குறித்து பெரிய அளவில் விவாதம் நடந்துள்ளது. மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான கருத்தை ஏதோ இந்த விவாதங்களே நடக்காதது போல் தமிழ்ச் சூழலில் முன்வைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன…..ஆன்மிக கருத்துக்களுக்கு ஆதரவாக இப்படி அறிவியலாளர்களை பயன்படுத்துவது கோக்/பெப்சி விளம்பரத்திற்கு சினிமா நடிகர்களை/கிரிக்கெட் நட்சத்திரங்களை பயன்படுத்துவதை விட கேலிக்கூத்தான ஒன்று….Let the buyer be beware என்பது போல் Let the reader be beware என்று சொல்ல வேண்டிய சூழல்தான் இங்கு உள்ளது.அதை வலியுறுத்தி,அழுத்தம்திருத்தமாகவே நான் இந்தக் கட்டுரை மூலம் சொல்லவிரும்புகிறேன். ‘ ஆக இவ்வளைவையும் படிக்கையில் உருவாகும் மனபிம்பம் அபாரமானது. ஹிந்து பாசிஸ்டான அரவிந்தன் நீலகண்டன் வேண்டுமென்றே சம்பந்தமேயில்லாமல் எவரோ ஒரு ‘அரைலூஸ் ‘ (இது திரு.ரோசா வசந்த் பேரா.டேவிட் ஹாரிஸனுக்கு கொடுத்த பண்பட்ட பெயர்) வெள்ளைக்காரன் ‘உளறியதை ‘ (இதுவும் திரு.ரோசா வசந்த் ‘readers ‘ஐ ‘beware ‘பண்ண பயன்படுத்திய மற்றொரு கலைச்சொல்) ‘கோக்/பெப்சி விளம்பரத்திற்கு சினிமா நடிகர்களை/கிரிக்கெட் நட்சத்திரங்களை பயன்படுத்துவதை விட கேலிக்கூத்தாக ‘ பயன்படுத்தியதாக ஒரு சித்திரம் மிக அழகாக செய்நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரு.ரோசாவசந்தின் அதி-பண்பட்ட, படு-அதிக நேர்மையான எதிர்வினையில் சில விஷயங்களை குறித்து முதலில் காண்போம், திரு.ரோசா வசந்த் கூறுகிறார்,

‘நீலகண்டன் ஹாரிசனை மேற்கோள்கட்டும் விஷயத்தை ‘Comparing the Two Forms of Quantum Mechanics ‘ என்ற தலைப்பின் கீழ் எழுதியிருக்கிறார். (இப்படி மொட்டையாய் சொல்ல எதற்க்கு ஒரு வெள்ளைக்கார ஹாரிசன், ரஜினிகாந்த் ஒரு பட வசனத்தில் சொன்னால்கூட போதுமே!) நீலகண்டன் ‘பகடியாடும் சடையோன்… ‘ என்று எழுதிய (அது யார்பாட்டு என்று கூட சொல்லகூடாதா ஸார்!) பாட்டுக்கும், குவாண்டம் இயற்பியலுக்கும் என்ன தொடர்பு உண்டோ, அந்த அளவிற்க்குதான் ஹார்ஸன் முனவைக்கும் ‘பெளத்த, ஸங்கிய ‘ விவாதத்திற்க்கும், எய்ன்ஸ்டான்-ஷ்ரோடிஞ்ஞர் விஷயத்திற்க்கும் இருக்கிறது. இப்படி பொத்தாம் பொதுவாக எதை வேண்டுமானலும் தொடர்பு படுத்தி பேசலாம். ‘

இதில் அடிப்படையான விஷயத்தை ரோசா வசந்த் கோட்டை விடுகிறார். அவர் கூறுவது போல டேவிட் ஹாரிஸன் இணைதன்மை காண்பது. ‘பெளத்த-ஸங்கிய விவாதத்திற்க்கும், எய்ன்ஸ்டான்-ஷ்ரோடிஞ்ஞர் விஷயத்திற்க்கும் ‘ அல்ல. இது வெறும் பெயர் அடுக்கலில் ஏற்பட்ட பிழை அல்ல. ஓரே நிலைப்பாட்டில் இருந்தவர்களை வாதித்தவர்களாக கூறுமளவுக்கு மேலோட்டமான படிப்பின் அடிப்படையில் ‘கிழிக்க ‘ முற்படும் மேதாவித்தனம் அவருக்கே உரியது. உண்மையில் போர்,ஹெய்ஸன்பர்க் ஆகியோரை ஒரு அணியிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்,ஸ்க்ராட்டிஞ்சர் ஆகியோரை எதிர் அணியிலும் கொண்டு நடந்த விவாதத்தை. விவாதம் என்றாலும் அது மிகுந்த நட்பும் அன்பும் நிறைந்த சூழலில் நடந்தது. நெய்ல்ஸ் போரை குறித்து ஐன்ஸ்டைன் ‘வேறெந்த மனிதரும் என் அருகாமையில் இருந்ததால் எனக்கு இத்தனை மகிழ்ச்சியினை தந்ததில்லை. ‘ என பின்னாட்களில் ஐன்ஸ்டைன் கூறினார். ஹெய்ஸன்பர்க்கின் எண்கோவை (Matrix) கணிதப்பார்வையும் சரி ஸ்க்ராட்டிஞ்சரின் அலை இயங்கியல் சமன்பாடுகளின் பார்வையும் சரி ஒரே இயற்கை நிகழ்ச்சி குறித்தவைதான். ஆனால் ஹெய்ஸன்பர்க் மற்றும் ஸ்க்ராட்டிஞ்சரின் தத்துவார்த்த பார்வைகளின் விளைவாக ஸ்க்ராட்டிஞ்சரும் ஹெய்ஸன்பர்க்கும் முறையே எண்கோவை (Matrix) கணிதப்பார்வையையும் அலை இயங்கியல் பார்வையையும் சங்கடத்துடன் ஏற்றனர். இவ்விரு பார்வைகளுக்குமிடையில் எழுந்த வாதத்தையே ஹாரிஸன் சாங்கிய-பெளத்த வாதத்துடன் ஒப்பிடுகிறார். இப்பார்வைகளுள் ஒன்று இருமையையும் (கார்ட்டாசிய பருப்பொருள்-ஆற்றல் எனும் இருமையைக் காட்டிலும் ஆழமான இருமை) மற்றொன்று பிரபஞ்ச அறிதலின் ஒருமையையும் கொண்டதாக இருந்தது. ஏற்கனவே ஹெய்ஸன்பர்க் இது குறித்து கூறுகையில் க்வாண்டம் இயற்பியலின் வெற்றி ஒருவிதத்தில் டெமாக்ரிட்டஸின் பருப்பொருட்கள் நுண்துகள் அணுக்களாலானது எனும் நிலைப்பாட்டிலிருந்து பிளேட்டோனிய கோலங்களே பிரபஞ்ச அடிப்படை எனும் நிலைப்பாட்டிற்கு சென்றதை குறிப்பதாக கூறினார். இக்குறிப்பிட்ட விஷயத்தை பொறுத்தவரையில் பிளேட்டானிய சிந்தனைக்கு அடிப்படையாக விளங்கிய பித்தோகாரஸ் சிந்தனையிலும் சரி பின்னர் பிளேட்டானிய சிந்தனையானது நியோ-பிளேட்டானிய சிந்தனையாக பரிணமித்ததிலும் சரி பாரத சிந்தனை மரபின் தாக்கம் மிகவும் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வரலாற்று உண்மையாகும். ஆனால் ரோசா வசந்த்தின் மேற்கத்திய அறிவியலின் தூண்களோ டெமாக்ரிட்டஸ் -> அரிஸ்டாட்டில் ->ப்ரான்ஸின் பேகன்-> நியூட்டன் -> டெஸ்கார்ட்டே எனும் பாஸிட்டிவிச நிலைப்பாட்டில் ஆழமாக இருந்தன. பிளேட்டானிய சிந்தனையானது நியோ-பிளேட்டானிய சிந்தனையாக பரிணமித்ததில் பாரத சிந்தனை மரபின் பங்களிப்பு மிகவும் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வரலாற்று உண்மையாகும். அதன் சில நிலைபாடுகள் கிறிஸ்தவத்திற்குள் உள்-வாங்கப்பட்டன. ஆனால் பாரதத்தை பொறுத்தவரையில் சாங்கியமே அறிவியலுக்கு மிகவும் அடிப்படையாக இருந்தது. வேதாந்தம் சாங்கியத்தின் முன்னகர்வாகவே அமைந்தது. அதன் தளத்தில் சாங்கியத்துவத்தின் உண்மை ஏற்கப்பட்டது. எனவே துரதிர்ஷ்டவசமாக ஸ்க்ராட்டிஞ்சருக்கும், கேப்ராவுக்கும், ஜார்ஜ் சுதர்ஷனுக்கும் அந்த தத்துவம் ஈர்ப்பளித்து தொலைத்துவிட்டது. ஏன் துரதிர்ஷ்டவசமாக ? இல்லையென்றால் பேசாமல் ஏதோ பிளேட்டோ-அரிஸ்டாட்டில் அல்லது காண்ட்-ஹெகல் (ஹெகலின் மீதான சாங்கிய தாக்கம் வேறு விஷயம்.) என்று மட்டுமே கூறிக் கொண்டிருந்திருக்கலாம். தேவையில்லாமல் கார்ல் மார்க்ஸ் ‘பாதி காட்டுமிராண்டி கலாச்சாரம் ‘ என்று கூறியவொரு கலாச்சாரத்துடன் க்வாண்டம் இயற்பியல் உரையாடல் நடத்தும் சாத்தியக்கூறினை பற்றியெல்லாம் பேச வேண்டி வந்திருக்காது. அல்லது திண்ணையின் துரதிர்ஷ்டம். க்வாண்டம் இயற்பியலை குறித்து கட்டுரை எழுதியவன் ஆர்.எஸ்.எஸ் காரனாக இருந்து தொலைத்துவிட்டான். இல்லாவிட்டால் பிளேட்டோ-டெமாக்ரிட்டஸ் என்கிற அளவில் மட்டும் சொல்லிவிட்டு போயிருந்திருக்கலாம். இந்த பிரச்சனையே வந்திருக்காது. சரி நான் அப்படி என்னதான் சொல்லிவிட்டேன் அபத்தமாக ? ஒருவேளை ஹிந்து ஞானிகள் சொன்னதைதான் இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது என்றோ அல்லது ஸ்க்ராட்டிஞ்சரின் அறிவியலே அவர் உபநிஷத் படித்ததால்தான் வந்தது என்றோ அல்லது ஹிந்து மெய்ஞானம்தான் அறிவியலுக்கு வழிகாட்டுகிறது என்றோ கூறிவிட்டேனா-மன்னிக்கவும்-உளறிவிட்டேனா ? அல்லது திரு.ரவி ஸ்ரீநிவாஸ் கூறுவது போல , ‘ஆன்மிக கருத்துக்களுக்கு ஆதரவாக கோக்/பெப்சி விளம்பரத்திற்கு சினிமா நடிகர்களை/கிரிக்கெட் நட்சத்திரங்களை பயன்படுத்துவதை விட கேலிக்கூத்தான ஒன்றாக அறிவியலாளர்களை பயன்படுத்தியுள்ளேனா ?

1. க்வாண்டம் இயற்பியலிற்கு இணையாக என்று கூட நான் கூறவில்லை – அதன் தத்துவ உள்ளீட்டுக்கு இணையாக என நான் கூறுகிறேன்.

2. இவர்கள் கூறியவற்றால் ‘ஆன்மிக கருத்துக்கள் ‘ (அவை என்ன ஆன்மிக கருத்துக்கள் என்பதை நம் EPW-மேற்கோள்-அறிஞர் கூறியிருந்தால் நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் ரோசா வசந்த் கிழிக்கவாவது ஏதுவாக இருக்கும்.) ஏதோ அறிவியல் அங்கீகாரம் பெற்றுவிட்டன என்று எவ்விடத்திலும் நான் கூறவில்லை. அதைப்போலவே இந்த ‘ஆன்மிக கருத்துக்களால் ‘ அறிவியல் அறிஞர்கள் ஒளி பெற்று க்வாண்டம் இயற்பியலை அருளினார்கள் என்றும் நான் கூறவில்லை. மாறாக ‘ஆசிய ஞான மரபுகளுடன் நவீன இயற்பியல் உரையாடுவதற்கான தளத்தை ‘ அவர்கள் உருவாக்கி உள்ளதாகவும் அதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்ததாகவும் கூறியுள்ளேன்.

3. இதன் மூலம் நான் எந்த ஆன்மிக கருத்துக்களை முன்வைக்கிறேன் ? ஒரு குறிப்பிட்ட தத்துவ மரபுடன் ஒரு அறிவியல் புலத்தின் தத்துவ உள்ளீடு உரையாடுவது என்பதை ‘ஆன்மிக கருத்துக்களுக்கு ஆதரவாக அறிவியலாளர்களை பயன்படுத்துவதாக ‘ அறியும் அளவில்தான் EPW இல் கட்டுரை எழுதுபவர்களின் மூளைத்திறன் இருக்கிறதென்றால், EPW வின் தரத்தை நன்றாகவே அறிய முடிகிறது.

இதோ நான் எழுதிய விஷயத்தை அப்படியே தருகிறேன்:

‘அறியப்படும் வஸ்து, அறியும் உபகரணம், அறிபவர் ஆகிய மூன்றும் இணைந்து உருவாக்குவதே நமது பிரபஞ்ச அநுபவம். இதுவே க்வாண்டம் இயற்பியலின் தத்துவ உள்ளீடு. நெய்ல்ஸ் போரும் சரி ஹெய்ஸன் பர்க்கும் சரி இத்தத்துவ உள்ளீட்டின் இணையாக ஆசிய ஞானமரபுகளான ஹிந்து வேதாந்த மரபு, மகாயான பெளத்த தியான மரபுகள் மற்றும் சீன தாவோத்துவம் குறித்து அறிந்திருந்தனர். ஆசிய ஞான மரபுகளுடன் நவீன இயற்பியல் உரையாடுவதற்கான தளத்தை தாம் உருவாக்கியிருப்பதையும் அதன் அவசியத்தையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். ஹெய்ஸன்பர்க்கின் வார்த்தைகளில் ‘நவீன க்வாண்டம் இயற்பியலின் தத்துவ உள்ளீடு கிழக்கின் ஞான மரபுகளுடன் ஒரு விசேஷ உறவினை கொண்டுள்ளது. ‘. நெய்ல்ஸ் போருக்கு டானிஷ் அரசு கலாச்சார மேம்பாட்டினை ஏற்படுத்தியதற்கான விருதினை அளிக்க முடிவு செய்தது. பொதுவாக ‘உயர்குடி ‘ மரபினருக்கே இவ்விருது அளிக்கப்படும். அப்போது விருது பெறுவோர் தம் உயர்குடிக்கான கேடய சின்னத்தை அணிந்து வரவேண்டும். நெய்ல்ஸ் போரின் குடும்பத்திற்கோ அத்தகைய உயர்குடிக்கான கேடய சின்னம் இல்லாததால் அவரே ஒரு சின்னத்தை வடிவமைப்பு செய்தார். அது – தாவோத்துவ ஆன்மிக சின்னமான யின்-யாங் வட்டம். பலவிதங்களில் பிரபஞ்ச தரிசனத்தில் சாங்கியமும் பெளத்தமும் கொண்டிருந்த வேறுபாட்டினையும் இது குறித்து ஐந்தாம் நூற்றாண்டில் பாரதத்தில் நடந்த வாதங்களையும், ஸ்க்ராட்டிஞ்சரின் க்வாண்டம் இயற்பியல் மறுப்பும், ஹெய்ஸன்பர்க்கின் க்வாண்டம் வாதங்களும் மிகவும் ஒத்திருந்ததாக கூறுகிறார் இயற்பியலாளர் டேவிட் ஹாரிஸன். ‘

இனி மீண்டும் பன்-மொழி-கிழி-மேதை ரோசா வசந்திற்கு வரலாம்.

ஹெய்ஸன்பர்க்கிற்கும் ஸ்க்ராட்டிஞ்சருக்கும் இடையே நடைபெற்ற விவாதத்தில் இருவரது வேறுபாடுகளுக்கும் விதையாக விளங்கிய விஷயம் அவர்களது தத்துவ நிலைபாடுகளும் அழகியல் பார்வைகளும் என்பது ஊரறிந்த விஷயம். ஹெய்ஸன்பர்க்கின் பிளேட்டோனிய பார்வையுடன், ஸ்க்ராட்டிஞ்சரின் வேதாந்த பார்வையும், ஐன்ஸ்டைனின் ஸ்பைனோசாத்துவ நிலைபாடும் அங்கே மோதின – பின்னவை இரண்டும் ஓரணியாக. இப்போது கட்டுரையின் போக்கினை கவனித்தால் க்வாண்டம் இயற்பியலின் வெற்றியை அக்கட்டுரை கொண்டாடுவதை காணலாம். அதாவது ஸ்க்ராடிஞ்சரின் வேதாந்த தத்துவ தாக்கத்தால் ஹெய்ஸன்பர்க்குடன் விளைந்த வேறுபாட்டில் ஹெய்ஸன்பர்க்கின் – அதாவது க்வாண்டம் இயற்பியலின் வெற்றியை குறித்து விளக்கும் முதல் கட்டுரை க்வாண்டம் இயற்பியல் முழு உண்மையை காட்டவில்லை என கருதி ஸ்க்ராட்டிஞ்சர் உருவாக்கிய கற்பனை பரிசோதனையுடன் நிறைவு பெறுகிறது. அடுத்த கட்டுரையோ க்வாண்டம் உண்மையின் ஆய்வக நிரூபணத்தை தருகிறது. அக்கட்டுரையினையாவது திரு.வசந்த் சிறிதே ‘கிழிக்கவாவது ‘ படித்திருந்தால் மற்றொரு விஷயத்தை அவர் கண்டிருப்பார். க்வாண்டம் இயற்பியலில் பிரக்ஞையின் பங்கு குறித்து அதீதமாக கூறப்படும் சூழலில் ‘ஒரு ஒளி-மின்செல் (photo-electric cell) ஒளித்துகளான ஃபோட்டானை அளவிடுகிறது எனலாமா ? ‘ என வினவுகிறேன். அதாவது பிரக்ஞையும் அளவிடுதலும் பிரிக்கப்பட முடிந்தவை என சுட்டிக்காட்டப்படுவது ஒருவிதத்தில் பொருள்முதல்வாதத்திற்கு சார்பான கூற்று. என்றால் நான் வேதாந்தத்தின் தோல்வியை குறித்தா இக்கட்டுரைத்தொடரை எழுதுகிறேன் எனலாமா ? ஒரு பாரதியன் எனும் முறையில் எனது தத்துவ ஞான மரபினை அறிவியலின் தத்துவ உள்ளீட்டிற்கு இணையாக காணவும், அதனுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்தவும், தத்துவ ஈர்ப்பின் மூலம் இயற்பியல் தேடலுக்கும், இயற்பியலின் தத்துவ உள்ளீட்டினை விவாதிக்கவும் இளம் மனங்களுக்கு ஒரு தூண்டுதலை ஏற்படுத்த இக்கட்டுரைத் தொடர் எழுதப்படுகிறதே அல்லாமல் ஏதோ ஒரு ஆன்மிக கருத்துக்கும் அல்லது நம்பிக்கைக்கும் அறிவியல் சான்றிதழ் அளிக்க எழுதப்படவில்லை. முதல் கட்டுரை ஐன்ஸ்டைனின் மெய்யியல் பார்வைக்கு க்வாண்டம் இயற்பியல் தந்த அதிர்ச்சியிலிருந்து ஆரம்பிக்கிறது எனவே அது முடியும் போது ஆசிய ஞான மரபுகளின் மெய்யியலுக்கும் க்வாண்டம் இயற்பியலின் தத்துவ உள்ளீட்டிற்குமான உரையாடலுக்கான சாத்தியங்கள் குறித்து சில வாக்கியங்களுடன் முடிவடைகிறது. அதற்கு அடுத்த கட்டுரை ‘ஸ்க்ராட்டிஞ்சர் பூனை ‘ முரண் குறித்தது. அதன் வேர்கள் ஒரு சாங்கிய வாதத்தில் உள்ளன என்பது குறித்து அக்கட்டுரை பேசவில்லை என்பதையும் பின்னர் டேவிட் போம் குறித்த கட்டுரை அவரது கிருஷ்ண மூர்த்தியுடனான உரையாடல்கள் குறித்து ஏதும் கூறவில்லை என்பதையும் கவனித்திருந்தால் இது விளங்கியிருக்கும். ஏனெனில் இக்கட்டுரைத் தொடரில் இவர் கூறுவது போல டேவிட் ஹாரிஸனைத்தான் மேற்கோள்கட்டி இந்திய தத்துவத்திற்க்கும், குவாண்டம் இயற்பிலுக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு தோற்றத்தை தர ‘ வேண்டிய அவசியமில்லை. நேரடியாக ஹெய்ஸன்பர்க்கிலிருந்து ஜியார்ஜ் சுதர்ஷன் வரை பலரை மேற்கோள்களும், விளக்கங்களும் காட்டி ‘ஒரு தொடர்பை ‘ அல்ல இணைத்தன்மையை நிறுவ முடியும். மேலும் தத்துவ இணைத்தன்மையை சுட்டிக்காட்டுவது ஒரு நம்பிக்கைக்கு சான்று அளிப்பதல்ல என்கிற அடிப்படை உண்மை எப்படி புரியாமல் போயிற்று ? (அதற்காக எல்லா தத்துவங்களும் சில நம்பிக்கைகள் சார்ந்தவைதானே என்கிற ரீதியில் பேசமாட்டார் என நம்புகிறேன்.) உதாரணமாக ஐன்ஸ்டைனின் ‘இறைவன் பகடையாட மாட்டார் ‘ என்பது ஒரு தனி-நம்பிக்கைக்கான சான்றளிப்பல்ல. மாறாக ஒரு தத்துவ நிலைபாட்டின் வெளிப்பாடு. க்வாண்டம் இயற்பியலின் பரிணாமத்தை குறித்து பேசுகையில் ஐன்ஸ்டைனின் சோஷலிச மோகத்தையோ அல்லது ஸியோனிஸத்திற்கு அவர் அளித்த தார்மீக ஆதரவையோ குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் போய்விடலாம். ஆனால் ‘இறைவன் பகடையாட மாட்டார் ‘ எனும் அவரது நிலைபாட்டினை குறிப்பிடாமல் எழுதினால் அவ்வாறு எழுதப்படும் இயற்பியலின் வரலாறு முழுமைத்தன்மையுடன் இராது. URLகள் கொடுப்பதில் Googleளுடன் போட்டியிடுவதையே அறிவிஜீவித்தனத்தின் இறுதி எல்லை என கருதுபவருக்கு இது புரியாமல் போனதில் வியப்பில்லை. ‘கிழித்தே பெயர்வாங்க புறப்பட்டிருக்கும் ‘ பன்மொழி மேதாவிக்கும் இந்த எளிய விஷயம் உள்வாங்கப்படமுடியாமல் போனதும் அதிசயமல்லதான். ஏனெனில் கிழிப்பததென முடிவு கட்டியபின் முத்திரை குத்துவதுதான் முக்கியமே தவிர கட்டுரையில் இருக்கும் விஷயங்கள் முக்கியமல்ல அல்லவா ?

மொழி குறித்த ரோசாவசந்த்தின் அபத்தங்களுக்கும், திரு.கார்த்திகேயனின் அபத்த எதிர்வினைக்கும், நோம் சாம்ஸ்கி குறித்தும் பதில் அடுத்த வாரம் தருகிறேன்.

Wearing the emperor ‘s new clothes.

he screams ‘caveat emptor ‘.

Oh! what a humorous scream

he is.

A comically profound

cerebral tragedy- yet

ever he remains a shameless

URL-piling prodigy.

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்