இது சீனா அல்ல – இந்தியா

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

மஞ்சுளா நவநீதன்


1947இல் சுதந்திரமடைந்த இந்தியாவுக்கு 1950இல் பெரும் சிந்தனையாளர்களும், மற்ற சட்ட விற்பன்னர்களும், நாட்டிலும் நாட்டு மக்களிடமும் அக்கறையுள்ளவர்களும், இந்த நாட்டு மக்களுக்காக சமைத்த ஒரு அரும்பெரும் புத்தகம், நம் நாடு கொண்டிருக்கும் அரசியலமைப்புச் சட்டம்.

அப்படிப்பட்ட அக்கறையுள்ள நாட்டு நலம் விரும்பிகளை விட முக்கியமானவர்கள் நம் நாட்டில் அவர்களின் பின்னே வந்த சுயநலமும் பொறாமையும், அழுக்காறும், அசிங்க சிந்தனைகளும், சர்வாதிகாரப் போக்குகளும் நிறைந்த அரசியல் வாதிகள்.

நாடு சுதந்திரமடைந்த போது இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் கூட நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிலை வரலாம் என சிந்திக்கத் தவறிவிட்டார்கள் அன்றைய நாட்டுத்தலைவர்கள். அதற்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. அன்றைய சுதந்திரத் தாகமும், காந்தியின் பின்னே அடியொற்றித் தோன்றிய அவர்தம் சீடர்களும், காந்தியை அரசியல் பூர்வமாக எதிர்த்தாலும், அனைவரும் வணங்கத்தக்கதாக இருந்த எதிர்கட்சித்தலைவர்களும் அன்று அப்படி இருந்தார்கள்.

ஆகவே, அன்றைய காற்றின் மீது நடந்துகொண்டிருந்த அரசியல்வாதிகளுக்கு மாற்றாக, நிலத்தில் கால் ஊன்றிய – அல்லது சகதியில் ஊறிய – அரசியல்வாதிகள் மட்டுமின்றி பாதாளம் வரைக்கும் செல்லக்கூடிய சிந்தனைகள் கொண்ட அரசியல்வாதிகள் இன்று தோன்றும்போது, நடைமுறையில் இருக்கும் விஷயங்களுக்கு ஏற்ப நம்மை அரசியல் சட்டத்தை மறுபார்வை பார்க்கத் தூண்டுகிறார்கள் இந்த அரசியல் தலைவர்கள்.

***

முரசொலி ஆசிரியரும் தி இந்துவின் ஆசிரியர்களும் இன்று 15 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்திடம் நீதி கேட்டு நெடிய பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவும் வழங்கியுள்ளது. இந்துவிற்கு மத்திய தொழில் காவல் துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு , அது அவசியம் இல்லை என்று ஜெயலலிதா கோரியபின்பு, இந்துவும் உடன்பட்டிருக்கிறது.

இன்றைய கேள்வி கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை முக்கியமா, அல்லது சட்டமன்றத்தின் உரிமைகள் (ப்ரிவிலேஜஸின் மொழி பெயர்ப்பு உரிமை அல்ல. ஆனால் அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்) முக்கியமா என்பது.

பதில்: கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைதான்.

நமது ஜனநாயக அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதார விதிகளில் ஒன்று கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை. அந்த விதியின் விளைவே நமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க மக்களுக்கு இருக்கும் உரிமை. (ஆங்கிலத்தில் சொன்னால், the right of representation is the derived from the right to have and express an opinion)

மக்களுக்கும் மக்களுக்கு கருத்துக்களை சொல்லும் பத்திரிக்கைகளுக்கும் தங்களது கருத்துக்களை தெளிவாகவோ ஆணித்தரமாகவோ தவறாகவோ வெளிப்படுத்த உரிமை உண்டு. யார் சொல்வது சரி என்பதல்ல இன்றைய கேள்வி. தவறான கருத்தைக் கூட சொல்ல ஒரு பத்திரிக்கைக்கும் தனி மனிதனுக்கும் உரிமை உண்டு என்பதுதான் இன்றைய அரசியலமைப்புச் சட்டம் சொல்வது. சரியான கருத்தை மட்டுமே சொல்ல உரிமை உண்டு என்றால், இன்று நாட்டில் ஏராளமான அரசியல் கட்சிகள் இருக்க முடியாது. ஒரே ஒரு சரியான கருத்தை மட்டுமே சொல்லக்கூடிய ஒரு கட்சி ஆட்சிமுறைதான் இந்தியாவில் இருக்க முடியும். அப்போது இது இந்தியாவாக இருக்க முடியாது. அது சீனாவாக மாறிவிடும்.

***

இந்து மட்டும் ஒழுங்கா, சீனாவின் ஜனநாயக அத்ஹ்உமீறல்களைப் பற்றி ஒரு செய்திக் குறிப்பு கூட வராமல் பார்த்துக் கொள்கிற இந்துவிற்கு ஜனநாயகம் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது என்று கேள்வி எழக்கூடும். இன்று ஜனநாயகம் பற்றிப் பேசும் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள்தானே பத்திரிக்கைகள் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன போன்ற வாதங்களையும் எழுப்பலாம்.

உண்மைதான். ஆனால் இந்த விவாதத்துக்கு தேவையற்ற விஷயங்கள் அவை. ஏனென்றால் நேற்று துக்ளக் மீதும், குமுதம் மீதும் ஏவிவிட்ட தலைவர்கள் இன்று பத்திரிகை சுதந்திரம் பற்றிப் பேசுகிறார்கள் என்பது முரண்பட்ட ஒன்று தான். ஆனால் அந்தக் காரணத்துக்காக இப்போது முரசொலியைத் தாக்க சட்டபூர்வமான உரிமையை சட்டசபைக்கு வழங்கவேண்டும் என்று சொல்வது அபத்தம்

திருடனுக்கும் உரிமைகள் உண்டு. திருட்டுக்கு அடி வாங்குவது வேறு, செய்யாத தவறுக்கு திருடன் அடிவாங்குவது வேறு. தான் திருடும் போது வேண்டாத நீதிமன்றம், தான் அடிபடும்போது தேவையாகத்தான் இருக்கும். அதுதான் முறையும்கூட. அதற்காகத்தான் இன்று நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் போன்றவற்றின் மூலம் நம் சமூகம் நம் சமூகத்தின் அங்கத்தினர்களை ஓரளவுக்குக் காப்பாற்றுகிறது. அன்று நீ திருடினாயே, இன்று நீ திருடும்போது மட்டும் உனக்கு நீதிமன்றமும் போலீசும் வேண்டுமா என்று கேட்பது அபத்தமானது.

***

உண்மை. இதற்கு மேல் நம் நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் திமுகவாலும், காங்கிரஸாலும் மிதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் தனி மனித உரிமைகள் எமர்ஜன்ஸியின் போது துவம்சம் பண்ணப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ் இன்றும் கூட எமெர்ஜென்சி தவறு என்று ஒப்புதல் வாக்குமூல அளிக்க வில்லை தான். ஆனால், அந்த காரணத்துக்காக, இன்று அஇவர்களுக்கு குரலெழுப்ப உரிமை கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது. (அருகதை வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீதி என்பது அருகதையையும் தகுதியையும் பார்த்து வழங்கப் படுவதல்ல. ஒரு கொலைக்காக தண்டனை பெற்ற ஒருவனை அதே காரணத்துக்காக எந்த நிரூபணமும் இல்லாமல் இன்னொரு கொலைக்காகத் தண்டிக்க முடியாது.)

ஆனால், இப்படிப்பட்ட பாரபட்சம் மிகுந்த குரல்களாலும், இப்படிப்பட்ட கட்சி சார்புள்ள எதிர்ப்புணர்வுகளாலும்தான் நம் நாட்டில் ஜனநாயகம் வாழ்கிறது ஓரளவுக்கேனும். இன்று தி இந்து ஆசிரியர்களை சிறையில் போட முயலும் தமிழக சட்டமன்றத்தின் உறுப்பினர்கள். நாளை தாங்கள் செய்யாத குற்றத்த்துக்கு சிறை செல்ல நேரிட்டால் இதே இந்துவின் ஆதரவை நாடுவார்கள்.

அரசியலை வேடிக்கை பார்க்கும் நாம், இன்றைய அரசாங்கத்தின் அதிகாரத்தால், ஜனநாயகம் அழிக்கப்படும்போதெல்லாம், கருத்து சுதந்திரம் மறுக்கப்படும் போதெல்லாம் குரலெழுப்புவோம். அதுவே நம் கடமை. அதுவே நம் அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு உரித்தானதாக ஆக்கிய நம் மூத்த தலைவர்களுக்கு நாம் செய்யும் நன்றி.

இதில் கட்சி பேதமோ, அரசியல் சார்பு பேதமோ இருக்கலாகாது. அ தி மு க வின் ஒரு உறுப்பினர் கூட முன்வந்து அரசியல் கருத்தை இதற்குத் தெரிவிக்காதது கவலை ஊட்டுகிறது. இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய அடிமைத்தனம். அ தி மு க அரசியல் கட்சி தானா என்ற சந்தேகம் வருகிறது.

***

கருணாநிதி கைது செய்யப் பட்டபோதும், ஜெயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்ட போதும், நாம் ஒன்றை மறந்து விடுகிறோம். காவல்துறை அரசு பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஏவல் செய்யும் துறையாய் இருக்க வேண்டிய அவசியம் என்ன ? எதற்கு போலிஸ் மந்திரி இருக்கிறார் ? நீதித்துறை அரசுசாராமல் இயங்குஇவது போல் ஏன் காவல்துறையும் இஇயங்க வழி வகுக்கக்கூடாது ? காவல்துறைக்கு அப்படிப்பட்ட சார்பற்ற அதிகாரம் கிடைத்தால் தான் அரசியல்வாதிகளின் கைப்பாவையாய் அவர்கள் செயல்படுவது நிற்கும்.

***

சட்டசபைக்கு என்ன உரிமை இருக்கிறது ? சட்டசபைக்கு இருக்கும் ஒரே உரிமை சட்டசபைக் குறிப்புகளிலிருந்து நீக்கப் பட்ட குறிப்புகளை வெளியிட்டால் அந்த ஏடு பற்றி நடவடிக்கை எடுக்கலாம். அவ்வளவு தான். மற்றபடி சட்டசபை உறுப்பினர்கள் பற்றி பொய்யாக எழுதினால் கூட அவதூறு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வது ஒன்று தான் அவர்கள் செய்யக் கூடியது. சட்டசபைக்கு உள்ள உரிமை, சுதந்திரக் கருத்துக்கு உள்ள கடமையைச் சுருக்க அனுமதிக்க முடியாது. சட்டசபையின் உரிமையே, கருத்து சுதந்திரத்தினால் அவர்களுக்குக் கிடைத்த உரிமை தான். அந்த உரிமை தான் அரசியல் ஆட்சி மாற்றங்களுக்கும் அதன் மூலமாக நாடு நிர்வகிக்கும் வழிமுறை மாற்றங்களுக்கும் வழி வகுக்கிறது. சட்டசபைக்கு வானளாவிய அதிகாரம் என்று சும்மாவேனும் யாரோ ஒருவர் சொன்னதை வைத்துக்கொண்டு இப்படி வெறியாட்டம் ஆடுவது நிறுத்தப் படவேண்டும்.

மீண்டும் மீண்டும் ஏன் இந்தக் கேலிக் கூத்துகள் தமிழ்நாட்டில் நடக்கின்றன என்று யோசிக்க வேண்டும். ஒரு கேலிச்சித்திரத்துக்காக சிறைத் தண்டனையையும், ஒரு தலையங்கத்துக்காக சிறைவாசத்தையும் அனுபவிக்க நேர்கிற அளவு சர்வாதிகாரச் சார்பு கொண்ட தலைவர்களை நாம் ஏன் இன்னமும் அரசியலில் பங்கு பெற அனுமதிப்பது மட்டுமல்லாமல், ஆட்சி பீடத்திலும் ஏற்றிக் கொண்டிருக்கிறோம் என்று நாம் யோசிக்க வேண்டும்.

*****

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்