கடிதங்கள் – அக்டோபர் 23,2003

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue


திரு.ஜெயபாரதன் அவர்களுடைய கட்டுரையின் ஒரு பகுதி குறித்து…

{ஜெ.பா: முன்பு ஒருமுறைத் தெரியாமல் ‘பாலா’ என்பவரைப் பெண்ணென்று சொல்லிவிட்டதில், அவருக்கு என்மீது தாங்க முடியாத கோபம்! ‘பரிமளா என்ற பெயரைக் கொண்ட நான் ஓர் ஆடவன்’ என்று முந்திக்கொண்டு தன் முகத்திரையை அகற்றினார்!}

‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து மிக மரியாதையாகவே திண்ணையில் நான் அவருக்குப் பதில் அளித்திருந்தேன். நான் அவர் மீது கோபப்பட்டேன் என்பதற்கு ஆதாரம் என்னவென்பது குழப்பமாகவே இருக்கிறது. அவர் தெரிவித்தால் தெளிவேன். என் பெயர் ‘பரிமளா’வா ? ‘பரிமளம்’ என்னும் என் இயற்பெயரில் சில கட்டுரைகளைத் திண்ணையில் எழுதிவருகிறேன்! (நுனிப்புல் மேய்வதாக அடுத்தவர் மீது குற்றம் சுமத்துபவரைப் பற்றி நான் என்ன சொல்வது ?)

திண்ணை வாசகர்களுக்கு என் பெயரில் உள்ள வேடிக்கை தீர்ந்துபோயிருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இதை ஆரம்பித்து வைத்தவர் இன்னும் தூங்கிக்கொண்டிருப்பது போல் தெரிகிறது. ‘முந்திக்கொண்டு தன் முகத்திரையை அகற்றினார்’ என்பதற்கு என்ன பொருள் ?

பரிமளம்

janaparimalam@yahoo.com


ஆசிரியருக்கு

ஜெயமோகனைப்பற்றி திரு ரவி சீனிவாஸ் எழுதியிருந்ததை படித்தேன். நுட்பமான எந்த விஷயத்தையும் புரிந்துகொள்ளமுடியாத தகவல் அறிஞர் அவர் என்பதற்கு அவரது கட்டுரைகளும் கடிதங்களுமே ஆதாரம். ஆனால் இதில் அவர் நரி என்றெல்லாம் எழுதியது அநாகரீகமானது. அதை திண்ணைவாசகர்களும் பொதுவாக ரசிக்கிறார்களோ என்ற எண்ணம் மேலும் வருத்தம் அளிக்கிறது

சூரியா

suurayaa@rediffmail.com


ஆசிரியருக்கு

ஜெயமோகன் உரை திண்ணையில் வெளியாயிருந்தது.ஜெயமோகன் பேச்சிற்கு கலைஞர் கருணாநிதி முரசொலியில் பதில் எழுதியிருந்தார்.இணையத்தில் நான் முன்வைத்த சில கருத்துக்களை சிறு மாறுதல்களுடன் இங்கு தருகிறேன்.

ஜெயமோகன் அவசரப்படவேண்டாம், காலம் தீர்மானிக்கும் நமது படைப்புகள் பற்றி,நீங்களும் எழுதுங்கள், நானும் எழுதுகிறேன் என்று கலைஞர் பதில் எழுதியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.கலைஞரின் பதில் அதிமுக-திமுக அரசியல் தொனியில் உள்ளது.இலக்கியவாதியாக அவர் பதில் தரவில்லை,ஆணவமிக்க அரசியல்வாதியாக பதில் தந்துள்ளார்.பிரச்சாரம் என்பது வெளிப்படையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, பூடகமாக இருக்கலாம்.பிரச்சாரம் என்ற அடிப்படையில் திராவிட இயக்க எழுத்துக்களை நிராகரிக்கும் போது இலக்கியம்-சமூகம் குறித்து ஜெயமோகன் என்ன நினைக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.

தினமணியில் வெளியான, அறிவுமதி கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த சிவத்தம்பியின் வாக்கியங்களை கவனிக்க வேண்டும். பிரச்சாரம் என்று பாரதியின் பல கவிதைகள்,பாரதிதாசனின் பல கவிதைகளை ஒருவர் நிராகரிக்கலாம்.பனி மனிதனிலும் பிரச்சாரம் உள்ளது.திருக்குறளும் பிரச்சார நூல் என்று கூட கருதப்படலாம்.எனவே பிரச்சாரம் என்று வாதிட்டால் பிரச்சாரம் என்று எதை குறிப்பிடுகிறோம், அதை எப்படி அடையாளம் காண்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. கல்கியின் சரித்திர நாவல்களில் பிரச்சாரமும், பெளத்த மத எதிர்ப்பும் இல்லையா ? கல்கியின் இலக்கிய இடம் மறுபரீசலனை செய்யப்பட வேண்டும் என்றால் கலைஞரின் இடமும்தான். புதுமைப்பித்தன் கல்கியை இலக்கியவாதியாக ஏற்றாரா ? ஜெயமோகன் சுஜாதாவை நடைக்காக பாராட்டுவது போல் வேறு சிலர் கலைஞரைப் பாராட்டலாம்.ஆனால் அது துதிபாடலாக மாறினால் அதை விமர்சிக்கலாம்.வண்ணதாசன் கலைஞரை ஒரு கூட்டத்தில் புகழ்ந்து பேசிவிட்டார் என்பதற்காக அவரை துரோகி போன்று சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.அது குறித்த விமர்சனம் வேறு விதமாக இருந்திருக்க வேண்டும்.

அவசரப்படாமல் ஜெயமோகன் நிதானமாக ஒரு கட்டுரை எழுதியிருக்கலாம். தன் நூல்களின் வெளியீட்டு விழாவில் இதைப் பற்றி பேசியிருக்க வேண்டியதில்லை, அதுவும் அத்தகைய தொனியில்.அப்துல் ரகுமானின் 3% 97% பேச்சு அபத்தமானது. இன்று சராசரித் தமிழன் தனுஷ்,விஜய்,அஜீத் நடித்த திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டு, மன்மத ராசாவை ஒரு நாளில் பலமுறை கேட்டுக் கொண்டு,தொலைக்காட்சித் தொடர்களை குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.சங்கத்தமிழையோ அல்லது சங்கசித்திரங்களையோ எத்தனை பேர் படிக்கிறார்கள். தொல்காப்பியர்,புதுமைப்பித்தன் என்றால் who is that என்று கேட்கிற ஒரு தலைமுறை உருவாகியுள்ளது.இரு தரப்பினரும் இவற்றை உணர்ந்ததாகத் தெரியவில்லை.முன்னூறு பேர் என்பது ஒரு மதியக் காட்சி திரைப்படத்திற்கு வரும் கூட்டத்தை விட குறைவானது. ஒரு இலக்கிய கூட்டத்திற்கு அத்தனை பேர்தான் வருகிறார்கள் என்பதுதான் கவலைதர வேண்டிய விஷயம்.ஆனால் அதற்கே இத்தனை பிரமைகள்,பிரகடனங்கள். நடப்பது கேவலமான இலக்கிய அரசியல்.

நரேந்திரன் வெளிப்படுத்தும் கவலையை பலர் வெளிப்படுத்துகிறார்கள்.இது குறித்து பின்னர் எழுதுகிறேன். கலீல் கிப்ரான் தீர்க்கதரிசியில் குழந்தைகள் குறித்து எழுதியுள்ளதைப் படியுங்கள் என்று சொல்லாம். America Born Confused Desis கள் என்று பேசுவோர் America Born Creative Desi கள் குறித்து ஏன் பேசுவதில்லை.

American Chai என்ற திரைப்படம் இந்த விவாதத்திற்கு பொருத்தமான ஒன்று.அது பற்றி வேறோரு சந்தர்பத்தில்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

ravisrinivasin@yahoo.co.in


ஜெயமோகன் கூற்றும் எனது பதிவும்

0.01 ஜெயமோகனின் படைப்பு மனது சாதரண மத்தியதரவர்க்கத்து பிராமண மனதுதான்.இவரது ஆர்ப்பாட்டம், அரசியல்,எழுத்து,வாழ்வை அணுகும்முறை எல்லாமுமே இந்த குறுகிய வட்டத்திலிருந்நுதான்.

0,02 ஜெயகாந்தன் 2000-ல் சென்னை காலச்சுவடு புத்தக வெளியீடு விழாவில் ஜெயமோகன் பற்றி தெரிவித்த கருத்தும் இப்போது சொல்வதும் நேர்மாறானது, ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தியது போல பேசுவதையும் நிறுத்தி விடலாம்

0.03 கலைஞர் எழுதுவது இலக்கியமா இல்லையா என்று தீர்ப்பு சொல்லும் பணியை இவர் ஏன் அவசரமாக மேற்கொண்டிருக்கிறார்.கொஞ்சம் எட்டி யோசித்தால் கலைஞரின் அரசியல் எதிரியின் கவனத்திற்கு இவர் சபலப்படுவது புரிகிறது.

0.04 பழமைவாதத்தை மறைமுகமாக வலியுறுத்தும் காலவதியான தத்துவபிண்ணணியிலிந்து விலகி நவீனத்துவம் பற்றி யோசிப்பது ஜெயமோகனுக்கு நல்லது

– பூமா ஈஸ்வரமூர்த்தி

Booma_moorthy@hotmail.com


அம்மாளு அல்லது அபர்ணா அவர்களது கடிதம் படித்துப் புரிந்து கொள்ளக் கஷ்டமாக இருந்தது. இருப்பினும், நான் எழுதியதைப் பற்றி எழுதினார்கள் என்று படித்து புரிந்ததை வைத்து இந்தக் கடிதம் எழுதுகிறேன்.

மனிதர்கள் மனிதர்களை அடித்துக்கொல்வதிலிருந்து வன்முறை மூலம் பிரச்னைகளை தீர்ப்பதிலிருந்து வேறுபட்ட வழி ஒன்றை காந்தி நமக்குக் காட்டினார். அதனை வெற்றிகரமாக செய்வது எப்படி என்றும் உதாரணம் காட்டிச் சென்றார். அவர் வழி வந்த மார்டின் லூதர் கிங், மண்டேலா போன்றவர்கள் மனித இனம் முழுமையாக ஒரே குலமாகப் பார்ப்பதன் மூலம் பிரச்னைகளை குறைக்கலாம் என்று கூறிச் சென்றிருக்கிறார்கள். இது ஒரே இனத்துக்குள் வன்முறையில்லாமல் பிரச்னைகளை அணுகுவது பற்றியது.

நான் பேசுவது உணவுப் பழக்கம். குழு குழுக்களாகப் பிரிந்து இருந்த மனித இனம் ஒரு காலத்தில் அடுத்த குழு மனிதனை போரில் கொன்று உண்டபோது கூட, அது புரோட்டானுக்கான வழியாக இல்லை. (நான் படித்தது வரை.) அஹிம்சை என்பதனை ஒரு அரசியல் வழியாக மனித இனத்துக்குள் பயன்படுத்துவது என்பதனை முன்பு எழுதியிருந்தேன். ஆனால், உணவுப் பழக்கமாக ஆடு கோழி போன்றவைகளிலிருந்து புரோட்டான் எடுத்து உண்பதை இப்போது எழுதியிருக்கிறேன். அஹிம்சை என்பதனை உணவுப்பழக்கமாகவும் முதன்முதலில் நீட்டியது யூத கிரிஸ்தவம் இல்லை. (இன்றும் இல்லை) ஜைன, புத்த மதங்கள்தாம். அதனையே கட்டுரையிலும் எழுதியிருக்கிறேன். அவை இந்தியாவில் ஏற்கெனவே தோல்வி அடைந்துவிட்டன.

இன்றைக்கு கோவில் முன்னால், ஆடு கோழி பலி கொடுப்பது என்பது மட்டுமே நான் எடுத்துக்கொண்ட விஷயம். அதனைத் தடுப்பது என்பது பிரம்மசமாஜம் ‘நாகரிக ‘இந்துமதத்தை கட்ட முனைந்தது போல, வெள்ளைக்காரர்கள் முன் நாகரிக இந்துமதத்தைக் கட்ட விரும்பும் முயற்சிதான் என்று எழுதியிருக்கிறேன்.

யூத கிரிஸ்தவ நியமங்கள் என்று நான் எழுதியது பாலுறவு சம்பந்தப்பட்ட தகாதவை என்று இன்று ஒதுக்கப்படும் விஷயங்கள். அதனையே மடிசஞ்சிக் கலாச்சாரம் என்று குறித்திருக்கிறேன். யூத கிரிஸ்தவ நியமயங்கள் என்று கூறுவதற்குள் இஸ்லாமிய விழுமியங்களும் சேர்த்தித்தான்.

சாராயம் சாப்பிடுவதில்லையே தவிர, இன்னும் அம்மா சமைக்கும் ஆட்டுக்கறி பிரியாணி போன்றவற்றை சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். விடுவதாக இல்லை.

ரோஸா வஸந்த் அவர்கள் நான் திரித்து எழுதுகிறேன் என்று குறிப்பிடுகிறார்கள். எங்கே அப்படி திரித்து எழுதியிருக்கிறேன் என்று குறிப்பிட்டால் நலம். ஈவில் என்ற கருத்தாக்கமும், அதன் ஊற்றான சாத்தான் என்ற உருவமும் இந்திய மதங்களில் இல்லை. அதே போல, உலகம் மனிதன் அனுபவிக்கப் படைக்கப்பட்டது என்ற கருத்தாக்கமும் இல்லை. இயற்கையில் மனிதன் ஒரு அங்கமே தவிர, அவன் உச்சம் இல்லை,

நான் சப்பைக்கட்டு கட்டுவேன் என்று பயந்து அவர் உதாரணங்கள் சொல்லமாட்டேன் என்று சொன்னால் நான் என்ன செய்வது ?

சின்னக்கருப்பன்.

karuppanchinna@yahoo.com


ஆசிரியருக்கு,

ஜெயபாரதன் ஆணவத்துடன் எழுதுவதை தவிர்த்துவிட்டு Outlook ல் வெளிவந்த கட்டுரை குறித்து அப்பத்திரிகைக்கு விரிவாக பதில் சொல்லியிருக்க வேண்டும்.மேலும் epw தலையங்கத்திற்கும் (http://www.epw.org.in/showArticles.php ?root=2003&leaf=10&filename=6324&filetype=html) பதில் எழுதட்டும். இந்தியாவின் aerb (ATOMIC ENERGY REGULATORY BOARD) முழுமையான தன்னாட்சி கொண்டதா ?மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பு தொழிற்சாலைகளின் கட்டுப்பாட்டில் இருந்தால் எப்படி இருக்கும் ? AERB அத்தகைய நிலையில்தான் உள்ளது.திண்ணையில் அவர் எழுதுவதை பலர் படித்தாலும் அணுமின் உற்பத்தி, அணுத் தொழில் நுட்பம் குறித்து பல கருத்துக்கள் உள்ளதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்புக் குறைவு.உதாரணமாக அணுக்கழிவுகள் குறித்த சர்ச்சை.www.ieer.org என்ற இணையதளத்தில் உள்ள தகவல்களையும், அவர் இது குறித்து எழுதியுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்க்குமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.உலகெங்கும் அணுமின் உற்பத்தியின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.மாற்று ஆற்றல் சக்திகள் குறித்தும், அணுமின் உற்பத்தி ஏன் எதிர்க்கப்படுகிறது என்பது குறித்து அறியவும் ஆண்டு தோறும் வெளிவரும் State of The World அறிக்கைகளைப் வாசகர்கள் படிக்கலாம்.

அ.மார்க்ஸ், ரோசா வசந்த போன்றவர்களுக்கு ஞாநி தங்கள் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக எழுதும் போது அல்லது அவர் எழுதுவது உவப்பாக இருக்கும் போது அவர் ‘பிராமணர் ‘ என்பது தெரியாது.கருத்து பேதம் வந்துவிட்டால் அல்லது அவர்கள் எதிர்ப்பதை/எதிர்க்கும் நபரை அவர் எதிர்க்காவிட்டால் அது தெரியும்.வாழ்க அன்னார் பகுத்தறிவு.ஞாநி எப்படிப்பட்டவர் என்பது அவருடன் பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும்.பெரியார் கோயில்களில் பலியிடலை ஆதரிக்கவில்லை, எதிர்த்துள்ளார் என்று வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.கலைஞர் கருணாநிதி உட்பட யாரும், நானறிந்த வகையில் இதை மறுக்கவில்லை, தங்கள் தரப்பிற்கு ஆதரவாக பெரியார் பலியிடலை ஆதரித்துள்ளார் என்று சான்று காட்டவில்லை.ஒருவர் அசைவ உணவை ஆதரிக்கலாம், பலியிடலை மூட நம்பிக்கை என்று எதிர்க்கலாம். ஒருவர் சைவ உணவையே உண்டாலும் பலியிடல் வழிபாட்டின் ஒரு அம்சமாக உள்ள போது அரசு அதில் தலையிடல் தேவையற்றது எனக் கருதலாம்.இதையெல்லாம் புரிந்து கொள்ள பெரியாரியம் தேவையில்லை, சாதாரண பகுத்தறிவு அல்லது commonsense போதும். அ.மார்க்ஸ் திண்ணையில் எழுதவில்லை, கவிதாசரணில் எழுதியதை முன்வைத்தே இங்கு இதை குறிப்பிடுகிறேன்.

கவிஞர்களை அழிக்கமுடியாது கவிதையல்ல பிதற்றல்.,கவிஞரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் முன்பே நீங்கள் பிதற்றுபவர் என்று முடிவிற்குவர இது போன்ற கவிதைகள்( ?) உதவும் என்று விக்ரமாதித்தியனுக்கு சொல்ல விரும்புகிறேன்.பாரதி அபின் பிரியர் என்பது ஆதார பூர்வமாக நிறுவப்பட்ட உண்மையா ?

அபின் பிரியர்களெல்லாம் பாரதியாவதில்லை, மங்கையிரிடம் மயங்கியவரெல்லாம் காளிதாசானவதில்லை, குடிகாரர்களெல்லாம் கண்ணதாசனாக பரிமணிப்பதில்லை.மேலும் குடிகார்கள், பல்வேறு போதைகளுக்கு அடிமையானவர்களால் துயருறும்,பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு யார் பதில் சொல்வது. கவிஞன் என்று பிறர் கருதுவது பொறுப்பற்று திரிவதற்கும், குடிக்கு அடிமையாவதற்கும் வழங்கப்பட்டும் உரிமை அல்ல.கவிதை என்பது தனி நபர்களின் பலவீனங்களை, சறுக்கல்களை மறைக்க உதவும் போர்வை அல்ல.போதையில் தள்ளாடினால் அது கவித்துவ நடையாகாது, தள்ளாடல்தான். ஸ்திரிலோலர்கள் பால்வினை நோய்களுக்கு காரணமாகவும், அவற்றை பரப்புபவர்களாகவும் இருக்கிறார்கள். அருணகிரி நாதரும், அண்ணாமலை ரெட்டியாரும் எத்தனை பேரிடம் இவை பரவ காரணமாயிருந்தார்களோ , யாருக்குத் தெரியும். எத்தனை பெண்கள் இவற்றால் அவதியுற்றார்களோ.கண்ணதாசன் எழுத்தை ரசிக்கும் சமூகம்தான் அவரை விமர்சிக்கவும் செய்யும்.இந்த போதைகள் இல்லாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கக்கூடும்.ஒரு காலகட்டத்தில் மதுவிற்கு பதிலாக அவர் பெத்தடின் ஊசிக்கு அடிமையானதும் அனைவருக்கும் தெரியும்.ஒரு போதையிலிருந்து இன்னொன்றிற்கு… போதையால் பாதிக்கப்பட்டவர்க்கு தேவை முறையான சிகிச்சையும், மீண்டும் போதையை நாட வைக்காத சூழலும். நீ கவிஞன் உன் படைப்பே முக்கியம், போதையல்ல, என்ற மனோபாவமல்ல.

கவிஞன் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய் என்ற உரிமையை சமூகம் தர வேண்டும் என்று கவிஞன் எதிர்பார்க்கலாம். அது பிறருக்கும் (அரசியல்வாதி, பிறதுறைக் கலைஞர்கள், உடல் உழைப்பாளிகள்) பொருந்துமா ? பாரதி கவிதைக்கு அபின் காரணமா இல்லை அபின் உட்கொண்டதையும் மீறி, போதை தந்த உபாதைகளையும் தாண்டி அவன் கவிதை எழுதினானா ?

Yale GlobalOnline ல் வெளிவந்துள்ள என் கட்டுரையை வாசகர் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். http://yaleglobal.yale.edu/display.article ?id=2648 என்ற இணையமுகவரியில் அதைக் காணலாம்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்


Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்