வாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

மத்தளராயன்


ஒவ்வொருத்தருக்கும் வாய்த்த இந்து பத்திரிகை அனுபவம் தனியானது. என்னுடையது இது.

‘விஷ்ணுபுரம் ‘ குறுநாவலில் இருந்து. 60-களில் நிகழ்ந்ததாக ஒரு சின்னப் பையன் (நான் தான்) பார்வையில் சொல்லப்படும் கதை இது.

‘இண்டு ‘ பேப்பர் என்பது வாசல் தெளித்தவுடன், ஈரமான திண்ணையில் நல்லையா சைக்கிளிலிருந்தே வீசி விட்டுப் போவது. நான் எழுந்து வெளியே வரும்போது தாத்தா ‘ஸ்போர்ட்ஸ் பேஜை ‘ திருப்பியிருந்தால் அடுத்த நிமிடம் கவாஸ்கரையும் வடேக்கரையும் மட்டையோடு பார்க்க ‘இண்டு ‘ என் கையில்.

அதென்னமோ, இந்தப் பக்கத்தில் ‘யாரெல்லாம் செத்துப் போனது ‘ என்று படிக்க ஆரம்பித்தவுடன் அவர் முகத்தில் ஒரு சந்தோஷம்.

‘டாய்லெட் காலியா இருக்கா ?.. ‘

நல்லையா தாமதமாக வந்து தொலைத்தால் டாக்டர் சதானந்தம் ஆஸ்பத்தியில் கார்பனேட் மிக்சர் வாங்க நான் தான் ஓட வேண்டும்.

இந்தக் கார்பனேட் மிக்சர் கெட்ட ஆஸ்பத்திரி வாடையடிக்கிற சமாச்சாரம். கையில் எடுத்துப்போனால் தெருவே விசாரிக்கும் – ‘வயிறு சரியில்லையா ? ‘.

எத்தனை பேரிடம் தான் சொல்வது – ‘எனக்கில்லை.. ‘.

இந்து பேப்பரை ஏழு மணிக்கு முன்னால் போடவேண்டும் என்று ஒரு சட்டம் வேணும்.

————————————————-

அந்த நகரசபைத் தேர்தலில் டாக்டர் சதானந்தம் தான் ஜெயித்தார். டாக்டருக்கும் அவரை எதிர்த்து நின்ற ஓட்டல் சர்வர் பாலுசாமிக்கும் ஒரே எண்ணிக்கையில் ஓட்டு – சரியாக இருநூற்று நாற்பத்தேழு – கிடைத்தது. திருவுள்ளச்சீட்டு போட்டுப் பார்த்து டாக்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாத்தா ஓட்டுப் போடப் போகவில்லை. எலக்ஷன் அன்று ‘இண்டு ‘ பேப்பர் வரவில்லை.

( ‘தகவல்காரர் ‘ குறுநாவல் தொகுப்பு – 1994)

இந்து பத்திரிகையுடன் எனக்கு இருக்கும் உறவு நெருங்கிய சிநேகிதனுடன் கொள்வது போன்றது. எந்த நாட்டில் இருந்தாலும், தினசரி காலையில் கம்ப்யூட்டரைத் திறந்ததும், சொந்த மின்னஞ்சலைக் கூடப் பார்க்காமல் இந்துப் பத்திரிகை வலைத்தளத்துக்கு ஓடச் சொல்வது அது.

கார்டியனும் டைம்ஸும் நித்தியப்படிக்குப் பாராயணம் செய்தாலும், இந்து படிக்காவிட்டால் பிறவாத நாள்தான்.

ஊரில் இருக்கும்போது நாலு நாள் படிக்க முடியாமல் போனாலும், ஏதோ செய்ய வேண்டிய காரியம் பாக்கி இருப்பதாகத் தோன்ற வாரக் கடைசியில் தேடி எடுத்துச் சேர்த்துப் படிக்க வைப்பது அந்தச் சிநேகிதம்.

அவ்வப்போது சின்னதும் பெரிதுமாக இந்து தப்புச் செய்யும்போது எரிச்சலடைவதும் இந்த நெருக்கத்தால் தான். சமீபத்தில் ‘ஆயிஷா ‘ பற்றிய ஒரு பேட்டிக் கட்டுரை.

ஒரு தடவை நவீன ஓவியக் கண்காட்சிக்கு வழக்கமான கலை விமர்சகர் இல்லாமல் போனதாலோ என்னவோ வேறு யாரையோ இந்து பத்திரிகை அனுப்பி வைக்க அவரும் எழுதியிருந்தார் – ‘எல்லாப் படத்திலும் பாதிப்பாதி மனித உடல். ரத்தம் மாதிரி அங்கங்கே சிவப்புத் திட்டு. நசுங்கிப் போன வஸ்துக்களாக என்னென்னமோ நிற்கின்றன ‘.

நான் கடிதம் எழுதிப்போட்டேன் – ‘என்ன, ஆக்சிடெண்ட் ரிப்போர்ட் பண்றவரை அனுப்பி வச்சீங்களா ? ‘

அடுத்த வாரம் முதல் அந்த நபரைக் காணோம்.

போன வருடத் தொடக்கத்தில் என்று நினைக்கிறேன் – வாஜ்பாய் படம் போட்டுப் பக்கம் முழுக்க இந்தியில் (மத்திய அரசின் ஏதோ துறை கொடுத்த) விளம்பரம் அடிக்கடி வெளியிட்டு பிளட் பிரஷரை எகிற வைத்தது இந்து.

இந்து புத்தக மதிப்புரைகள் – முக்கியமாக டைம்ஸ் லிட்டரரி சப்ளிமெண்டிலிருந்து எடுத்துப் போடுகிறவை தனி ரகம்.

அம்பை அவ்வப்போது எழுதும் கட்டுரைகளும், கங்காதரின் சில ‘ஸ்லைஸ் ஓஃப் லைப் ‘ கட்டுரைகளும் (மனுஷன் போஜனப் பிரியன்), நண்பர் வழக்கறிஞர் விஜயன் – இப்போது அவர் அடி உதை வாங்கி இந்து உட்பட எந்தப் பத்திரிகையிலும் செய்தியாக வருவதில்லை – தொலைபேசி, படிங்க உடனே என்று அன்புக் கட்டளையிட்டுப் படிக்க வைக்கும் ராஜிவ் தவான் கட்டுரைகளும், முத்தையாவின் மெட்ராஸ் ம்யூசிங் கட்டுரைகளும் குறிப்பிடப்பட வேண்டியவை.

சென்னையிலேயே இருந்தாலும் தமிழ் இலக்கியம் பற்றிப் பெரிதாக ஒன்றும் கரிசனம் இல்லை இந்துவுக்கு. அதில் வரும் செவ்வாய்க்கிழமை விமர்சனங்களே அத்தாட்சி.

மற்ற மொழிகளில் காத்திரமான படைப்புக்களை விமர்சனம் செய்திருக்க, தமிழில் அத்தி பூத்தாற்போல எப்போதாவது ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தி வைப்பார்கள்.

அதை விடக் கொடுமை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று நாலு திராவிட மொழிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு விமர்சனப் பகுதிதான். அதன் தலைப்பே விநோதமாக இருக்கும். உதாரணத்துக்கு, செப்டம்பர் 9, 2003 பத்திரிகையிலிருந்து –

Religious poetry – Crusader of oppressed – Kannada literary heritage – Kafka in translation.

இதில் ‘ரிலீஜியஸ் பொயட்ரி ‘ தமிழ்ப் புத்தக விமர்சனம். ‘துடித்து நீ எழுவாய் ‘ என்று கொ.பொ.சொக்கலிங்கம் எழுதிய புதுக்கவிதைத் தொகுப்பு. திருப்பாவை, திருவெம்பாவை பாணியில் எழுதப்பட்டது.

‘குருஸேடர்ஸ் ஓஃப் ஒப்ரஸ்ட் ‘ பெரியார் பற்றிய தெலுங்குப் புத்தகத்தின் அறிமுகம். தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

‘கன்னடா லிற்றறரி ஹெரிடேஜ் ‘ என்பது ‘பிராசீன கன்னட கிரந்த சம்பந்தனே ‘ என்ற கன்னட இலக்கிய வரலாறு குறித்த முக்கியமான பதிவு.

கடைசியில் வந்த ‘கஃப்கா இன் டிரான்ஸ்லேஷன் ‘ ‘கஃபகயுடெ கதகள் ‘ மலையாள நூல் அறிமுகம்.

தமிழிலும் கப்கா கதைகள் வந்திருக்கின்றன. தமிழில் பெரியார் வரலாறாக ந.வேலுச்சாமி எழுதிய புத்தகத்தைத்தான் தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழ் இலக்கிய வரலாறு குறித்து நுணுக்கமாக ஆய்ந்து எழுதப்பட்ட புத்தகங்கள் ஏராளம். ஆனால் இந்து பத்திரிகையில் அறிமுகமாக அவற்றுக்கெல்லாம் அருகதை இருப்பதாகத் தெரியவில்லை.

இவ்வளவுக்கும், இந்து ஆசிரியர் என்.ராம் மார்க்சீயர். இலக்கியப் பரிச்சயமுள்ளவர். கேரளத்தின் கையூர் தியாகிகள் பற்றி நிரஞ்சனா எழுதிய கன்னட நாவலான ‘சிரஸ்மரணா ‘ தமிழில் ‘நினைவுகள் அழிவதில்லை ‘ என்று மொழிபெயர்க்கப்பட்டபோது அதற்கு அருமையான முன்னுரை எழுதியவர். (இந்தக் கதை, லெனின் ராஜேந்திரன் இயக்கத்தில் மலையாளத் திரைப்படமாக வெளிவந்தது).

ஆனாலும், இந்து விமர்சனம் மூலம் தொடர்ந்து நல்ல ஆங்கிலப் புத்தகங்களைப் பரிச்சயம் செய்து கொள்ள முடிவதில் மகிழ்ச்சியே. போன ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7, 2003) ‘லிட்டரரி ரெவ்யு ‘ இணைப்பிதழில் ‘A classic resuurected ‘ என்ற பெயரில் பார்த்தோ தத்தா எழுதிய கட்டுரை உதாரணம்.

மேரி செண்டன் எழுதிய ‘Portrait of a Director – Satyajit Ray ‘ என்ற பெங்க்வின் வெளியீடு பற்றிய கட்டுரையில் புத்தகத்தையும் கடந்து அதை எழுதிய மேரி செண்டனையும், சத்யஜித்ராயையும் பற்றி நிறைவாக எழுதியிருக்கிறார் பார்த்தோ தத்தா.

செண்டன் எழுதிய இந்த வாழ்க்கை வரலாறு வெற்றிகரமான படைப்பானபோதிலும், ராய் அந்தப் புத்தகத்தை விட்டு விலகியே இருந்தாராம். ஆண்ட்ரு ராபின்சன் என்ற இன்னொரு ஆங்கிலேய எழுத்தாளர் புதிதாக ஒரு வாழ்க்கை வரலாறு எழுத சத்யஜித்ராயை அணுகியபோது அவர் பொங்கி வெடித்தாராம் – ‘வங்காளி தெரியாத எந்த எழுத்தாளரோடும் இனிமேல் நான் ஒத்துழைக்கப் போவதில்லை ‘.

இந்துப் பத்திரிகை கதவிலக்கம் 859-860, அண்ணாசாலை, சென்னை, தமிழ்நாடு என்ற முகவரியிலிருந்து வெளியாவது. அதன் ஆசிரியர் என்.ராம் தமிழ் பேசத் தெரிந்த தமிழர்.

பத்து நாள் முன்னால் ஓவியர் பூபேன் கக்கர் காலமானார். தமிழ்ப் பத்திரிகைகள் அதைப் பற்றி மூச்சுவிடவில்லை. இங்கே ஓமக்குச்சி நரசிம்மனை வரைந்தாலும் கிளாஸ்கோ பேபி போல் கொழு கொழு கன்னத்தோடு சித்தரிக்கும் அம்புலிமாமா ஓவியர்களையே பொதுவாகப் பத்திரிகையுலகம் அறியும். தீபாவளி பொங்கலுக்குச் சிறப்பிதழ் போட்டால், யாருப்பா அங்கே மருதுன்னு ஒருத்தர் இருக்காராம். போய் ரெண்டு பொம்மை போட்டு வாங்கிட்டு வா என்று ஆளனுப்பிவிட்டுச் சிரத்தையாகச் சினிமா வம்பு எழுதிக் கொண்டிருப்பார்கள்.

பூபேன் கக்கர் மறைவை ஆங்கிலப் பத்திரிகைகளும் கண்டு கொள்ளாமல் போனது கொடுமை. அதற்கு ‘அந்தாளு ஒரு கே பெயிண்டர். கண்ட கசத்தை எல்லாம் படமாகப் போட்டவன் ‘ என்ற அலட்சியமே பிரதான காரணம். பூபேன் ஓரினப் புணர்ச்சியாளராக இல்லாமல் போயிருந்தால் அவருடைய மரணத்தைப் பற்றிப் பெரிதாக எழுதியிருப்பார்கள் என்றில்லை இதற்கு அர்த்தம்.

சார்ட்டர்ட் அக்கவுண்டண்டான பூபேன் வரைந்ததெல்லாம் மெலிதான அங்கதம் இழையோடும் படங்களை. பெரும்பாலும் கீழ்த்தட்டு மக்கள், கொஞ்சம் மேலே இருக்கப்பட்ட கீழ் நடுத்தட்டு மக்கள். இவர்கள் ஜீவித்து, தொழில் செய்து பிழைக்கும் இடங்கள்.

பிளாஸ்டிக் பூங்கொத்தோடு நிற்கிறவன், கெடியாரம் பழுது பார்க்கிறவன் கடை, ஜிலேபி சாப்பிடுகிறவன், சின்னதாக நடராஜர் விக்கிரகம் வைத்த வீட்டு முன்னறை ஷோகேஸ் இத்யாதி.

படத்தில் பெரும்பாலும் ஆண்கள் தான். அதுவும் கிழடு தட்டிப்போனவர்கள். அவர்கள் அசங்கியமான காரியத்தில் ஈடுபடுவதாகச் சொல்லி கவர்ன்மெண்ட் காலரிகளில் பூபேன் கக்கர் படம் வாங்க வேண்டும் என்று தடுத்து வைத்திருந்தார்கள் அரசாங்க அதிகாரிகள். காவியுடுப்புச் சேனை அவருடைய ஓவியக் கண்காட்சியை மும்பாயில் தடுத்து நிறுத்தி பாரதக் கலாச்சாரத்தைக் காத்தார்கள்.

எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் அவர் படம் மாட்டிய அறையில் படத்துக்கு முதுகைக் காட்டிக் கொண்டு சங்கடமாக உட்கார்ந்து மூணு தலைமுறை பத்திரிகை ஆசிரியர்கள் வந்து போனார்கள் என்று படித்தேன். படம் பல லட்ச ரூபாய் விலை பெறும் என்று தெரியவந்தபோது அவர்கள் உடனே அழுக்குப் பிளாஸ்டிக் உறைக்குள் படத்தை வைத்துவிட்டு திரும்ப பிருஷ்டத்தைக் காட்டியபடி உட்கார்ந்தார்கள். தற்போது படத்தை விற்று விட்டு பேங்க் பேலன்ஸை ஏற்றிக்கொண்டு நிம்மதியாக இருப்பதாகக் கேள்வி.

பூபேன் குஜராத்தியில் நாடக ஆசிரியரும் கூட. அவருடைய படங்களின் அங்கதம் நாடகத்திலும் தட்டுப்படும். ஒரு பல குடியிருப்பு இடத்தில் (திருச்சிப் பக்கம் ஸ்டோர் என்பார்கள்) ஒருத்தன் பல பெண்களைக் கவர்ந்து இழுக்கிற கதை நினைவுக்கு வருகிறது. ‘அவன் இங்கிலீஷில் ரைம்ஸ் சொல்லியபடியே காதலிப்பான் ‘ என்ற பெருமை அந்தக் கதாநாயகனுக்கும் பெண்டுகளுக்கும்.

பூபேன் ‘சுந்தரி – ஒரு நடிகர் தயாராகிறார் ‘ என்ற இந்தி நாடகத்துக்கு, அரங்க நிர்மாணிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். பெண் வேடம் போட்டு ஏமாற்றும் ஒருவன் பற்றிய உண்மைக்கதையின் நாடக வடிவம் இது.

பூபேன் ஒரு விமர்சகராக, பூபேன் என்ற ஓவியரைப் பேட்டி காணுவதாக எழுதிய கட்டுரையின் பகுதியை இந்துப் பத்திரிகையில் சதாநந்த மேனோன் எடுத்துப் போட்டிருந்தார். டங்க் இன் சீக் நகைச்சுவையான அதிலிருந்து –

விமர்சகர் பூபேன் – ரயில்வே பட்ஜெட் உங்கள் ஓவியப் படைப்பாக்கத்தை எவ்விதம் பாதிக்கிறது ?

ஓவியர் பூபேன் – இது ஒரு முக்கியமான கேள்வி. கார்கில் யுத்தம் குஜராத்தில் வெங்காய உற்பத்தியை எவ்விதம் பாதித்தது அல்லது, பிரதமர் வாஜ்பாய் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டது, இந்தி சினிமா ‘லகன் ‘ படப்பிடிப்பை எங்ஙனம் பாதித்தது என்பது போலவோ தான் இது. நேரடியாகப் பாதிக்காவிட்டாலும் தொடர் இயக்கமாக ரயில்வே பட்ஜெட் என் படைப்பாக்கத்தைப் பாதித்திருப்பது உண்மைதான். ரெண்டாம் கிளாஸ் ஏ.சி டிக்கெட் விலையேறிப் போனதால், நான் சுற்றுவதைக் குறைத்துக் கொண்டேன். இப்போது குஜராத்தை மட்டும் வைத்துப் படம் வரைந்து கொண்டிருக்கிறேன். மேலும், சுற்றுவது நின்று போனதால், தினசரி காலை சரியாக ஒன்பது மணிக்கு என் ஓவியக்கூடத்துக்குப் போய் கிருஷ்ண பகவானைத் தரிசித்துவிட்டு, மகோன்னதப் படைப்புக்களை வரைந்து கொண்டிருக்கிறேன். எனவே மகோன்னதமான படைப்புக்கள் நான் உருவாக்க ரயில்வே பட்ஜெட்டே காரணம்.

பூபேன் ஒரு தலைவரைப் படமாக வரைய ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் இறந்து போனார். அது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஓவியத்தை.

‘இருபதாம் நூற்றாண்டு தெலுங்குக் கவிதைகள் ‘ ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பைக் குறித்து இந்துப் பத்திரிகையில் (செப்டம்பர் 14, 2003 ஞாயிற்றுக்கிழமை) ராமச்சந்திர குஹா எழுதும்போது கருத்துத் தெரிவிக்கிறார் –

‘தெலுங்கு தேசக் கவிஞர்கள் மெய்யாலுமே தங்களைப் படுசீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் உருதுக் கவிஞர்களுக்கு வட இந்தியாவில் கிடைத்த மேலதிகமான மரியாதை இவர்களுக்கும் கிடைக்கிறதாக இந்தக் கவிதைத் தொகுப்பிலிருந்து தெரிய வருகிறது. தெலுங்குக் கவிஞர்களின் கவிதை மனப்பாடம் செய்யப் படுகிறதாம். எடுத்து ஓதப்படுகிறதாம். உரையாடல்களுக்கு நடுவே எடுத்துக் காட்டப்படுகிறதாம். கவிதைகளைப் பற்றியும் கவிஞர்களைப் பற்றியும் மக்கள் விவாதித்துக் கொண்டேயிருக்கிறார்களாம். பத்திரிகைகள் கவிதை கவிதை என்று கேட்டு வாங்கிப் பிரசுரிக்கின்றனவாம். சமூக, அரசியல் இயக்கங்களில் கவிஞர்கள் முன்னணியில் இருக்கிறார்களாம் ‘.

செவ்வாய்க் கிரகத்தில் உயிரினம் இருக்கிறது என்பதற்கொப்பான மகத்தான கண்டுபிடிப்பு இது.

இதெல்லாம் நிசமாகவே இருந்தால் மகிழ்ச்சிதான். தமிழிலும் அப்படியே நடந்தேறினால் ? ஏடு கொண்ட்ல வாடா!

வேறு யாரைக் கவனிப்பார்களோ மாட்டார்களோ – சென்னைக் கடற்கரையில் இன்னேரம் இரண்டு கோயில்கள் எழும்பி இருக்கும். ஒன்று ஐம்பது வருடத் தலவரலாறு கொண்ட கோயில் – கண்ணதாசனுக்கு. மற்றது அதற்கு நேர் எதிரே புத்தம்புதிதாக டிஸ்டெம்பர் பெயிண்ட் அடித்து, டிசைனர் டைல்ஸ் பதித்து – வைரமுத்துவுக்கு.

எங்கேயாவது யாராவது டொம் என்று அதிர்வேட்டுப் போட்டு எதையாவது கொண்டாடினால் நான் நான் என்று முன்னால் வந்து நின்று அதைச் சிலாகிக்கிற சாக்கில் முடியுமட்டும் தங்கள் முதுகில் புறங்கையை வளைத்துத் தாங்களே தட்டிக் கொண்டு மகிழ்கிற பெரிய மனிதர்கள், சீனியர்கள், சூப்பர் சீனியர்கள் நிறையவே உண்டு.

வயதாகிக் குரல் வளம் போய் ஹொகனேக்கல் அருவிக்குக் குளிக்க டூரிஸ்ட் பஸ்ஸில் வந்தது போன்ற பெருங்கூட்டத்தோடு மேடையேறி கொஞ்சம் போல் பாடி, அதுவும் முடியாத நிலையில் மேல் ஸ்தாயி பிரயோகத்தின் போது சும்மா கையை மட்டும் மேலே தூக்கிக் காட்டி சபா ரசிகரைக் கற்பனையில் அனுபவிக்க விடும் சீனியர்கள் பற்றி சுப்புடு எழுதியது நினைவு வந்து தொலைக்கிறது.

டிசம்பர் சங்கீத சீசன் சமயம் தவிர வாயைத் திறக்காத இவர்களுக்கு எப்போதாவது தொலைபேசி வந்தால், அது தூர்தர்ஷனிலிருந்து இருக்கும். ‘எந்த வித்துவான் போய்ச் சேர்ந்துட்டான்னு கேளு. அனுதாபச் செய்தி சொல்லக் கூப்பிடுவான் ‘ – இது போன வருடத்துக்கு முந்திய சங்கீத சீசன் ஜோக்.

செஞ்சுரி அடிக்க இன்னும் நாலு ரன் மாத்திரம் பாக்கி இருக்கும் ’96 நாட் அவுட் ‘ செம்மங்குடி சீனிவாச அய்யர் இந்துப் பத்திரிகை நூற்று இருபத்தைந்து வருடப் பிறந்த நாளைக் கொண்டாடும்போது வாழ்த்தும் அழகே தனி. (தி ஹிந்து, செப்டம்பர் 13, 2003 சனிக்கிழமை)

‘ஒரு தடவை எனக்கு ஏதோ முக்கியக் காரியம் இருந்ததால், டிசம்பர் கச்சேரிக்குப் போகாமல், மெட்ராஸை விட்டுக் கிளம்பி வெளியே போய்ட்டேன். ஹிந்து கஸ்தூரி டிரங்க் கால் அடிச்சுக் கோவிச்சுண்டார் – ‘ஹிந்து பத்திரிகை யாருக்குச் சொந்தம் ? நம்ம எல்லோருக்கும் இல்லியோ. நீங்க சங்கீத சதஸ்லே கலந்துக்காம வெளியூருக்குப் போனா ஹிந்துவுக்குன்னா அவமானம் ? வாங்கோன்னா ‘.

அதானே ? செம்மங்குடியும் அரியக்குடியும் இல்லாமல் சங்கீத விழாவா ? அதைப் பற்றி இந்து சப்ளிமெண்டா ?

தமிழ்நாட்டுப் பாரம்பரிய மங்கல இசைக் கருவியான நாதசுவரத்தைப் புறக்கணித்து விட்டு சாக்ஸஃபோனை மேடை ஏற்றும் இன்றைய இசைவிழா நேரங்களில், ஹிந்து ராம் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனுக்கும், மதுரை பொன்னுத்தாய்க்கும் டிரங்க் கால் போட்டுக் கூப்பிடுகிறாரா என்று தெரியவில்லை.

***

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்