பலிகொடுத்து வழிபடுவதைப் பற்றி…

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

மு. சுந்தரமூர்த்தி


ஒரு காலத்தில் திண்ணன் என்கிற வேடன் திருக்காளத்தியில் தான் வேட்டையாடிய மிருகங்களின் இறைச்சியை சிவலிங்கத்துக்கு படைத்து வழிபட்டதும், வெறும் தாவர உணவுகளை மட்டும் உண்ணும் அந்தணர் ஒருவர் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிவனிடம் முறையிட, அவ்வந்தணருக்கு திண்ணனின் சிவபக்தியை புரியவைக்க சிவலிங்கத்தின் கண்களில் குருதி வடிந்ததும், திண்ணன் தன் கண்களைப் பறித்து சிவலிங்கத்துக்கு அப்பி ‘கண்ணப்ப ‘ நாயனாராக மாறியதும் பிரசித்தமான பெரியபுராணக் கதை.

ஒட்டுமொத்தமாக ‘இந்துக்கள் ‘ என்று அனைத்து மக்களையும் ஒரே போர்வைக்குள்அடைக்க முயன்றாலும், இந்துக்கள் என்கிற மக்கள் கூட்டம், பலத்தரப்பட்ட கடவுள் நம்பிக்கைகள், வழிபாட்டுச் சடங்குகள், வாழ்வு முறைகளை உள்ளடக்கியவர்கள். வழிபாட்டு முறைகள் பிரதேச, ஊர், சாதி, குடும்பம், தனி நபர் என்று பல தளங்களில் வேறுபடுகின்றன. பொதுவாக தமிழகத்திலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், மக்கள் தத்தம் உணவுப் பழக்கங்களையே அவர்கள் நடத்தும் வழிபாட்டுப் பழக்கங்களிலும் பயன்படுத்துகின்றனர். தாவர உணவு வகைகளை மட்டும் உண்போர் தாவர உணவுகளையும், புலால் உண்ணக்கூடியவர்கள் இறைச்சி, கருவாடு போன்ற உணவு வகைகளையும் சேர்த்து தாம் வழிபடும் கடவுளர்களுக்கு படையல் செய்து வணங்குவது நாம் அனைவரும் அறிந்த மரபு.

பொதுவாக புலால் உணவு புசிப்பவர்கள், தாவர உணவு வகைகளையும் உண்கிறார்கள். அதேபோல அவர்கள் வழிபாட்டு முறைகளிலும் பலிகொடுத்து, மாமிசப் படையல் செய்து வழிபடப்படும் சிறுதெய்வங்களும், சுத்த சைவ உணவுவகைகள் மட்டும் படைத்து வணங்கப்படும் பிராமணிய பெருந்தெய்வங்களும் சம அளவு முக்கியத்துவம் பெறுகின்றனர். பெரும்பான்மை மக்கள், அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதால், அவர்களுடைய வழிபாட்டு தெய்வங்களாக சிறுதெய்வங்களும் இருக்கின்றனர். மற்றும் இவ்வழிபாடுகளில், விலங்கு பலி முக்கியமான இடத்தை வகிக்கிறது. இவர்கள் அனேகமாக எல்லோருமே படிமுறை சாதி அமைப்பில் இடை மற்றும் கடை நிலையைச் சேர்ந்தவர்கள். ஆனால் அதற்கு எதிர்மறையாக, புலாலை மறுத்து, தாவர உணவு மட்டும் உண்ணும் மக்கட்பிரிவினரின், கடவுள் வழிபாட்டு முறைகள், பிராமணிய பெருந்தெய்வ வழிபாட்டு முறையோடு நின்று விடுகின்றன. சைவ உணவு மட்டும் உண்ணும் பழக்கத்தையும், பிராமணியக் கடவுளர்களை மட்டும் வழிபடும் பழக்கத்தையும் கொண்டவர்கள் சிறுபான்மை மேல்சாதியினர்.

ஆடு, கோழி போன்ற விலங்குகள், பறவைகளை பலி கொடுத்தும், இறைச்சி, கருவாடு போன்றவற்றை படையல் செய்தும் வழிபடப்படும் தெய்வங்கள் சிறுதெய்வங்கள் என பொதுவாக அறியப்படுகின்றனர். ஊருக்கு ஊர், வீட்டுக்கு வீடு மாறுபடுவதாலும், வழிபடுவோர் ஓரிரு தலைமுறைகள் முன்வரை, எழுத்தறிவு பெறும் வாய்ப்பற்றவர்களாக இருந்ததாலும் இத்தெய்வங்களை பற்றிய எழுதப்பட்ட இலக்கியங்கள் இல்லை. செவிவழிக் கதைகளும், பாடல்களும் தாம் இத்தெய்வங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் தரவுகள். சிறுதெய்வங்களை வணங்குபவர்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருப்பினும், தனிப்பட்ட தெய்வங்கள் ஒரு குறிப்பிட்ட ஊருக்கு, குலத்துக்கு, குடும்பத்துக்கு சொந்தமாகிப் போவதாலும், அம்மக்கள் சமூக, பொருளாதார, கல்வி ரீதியில் பின்தங்கி இருப்பதாலும், இத்தெய்வங்கள் உறைவது பெரும்பாலும் சிறிய கோவில்களிலும் அல்லது கட்டிடமே இல்லாத வெட்ட வெளிகளிலும் தான். இக்கோவில்கள் மன்னர்களால் கட்டப்பட்டனவல்ல. இன்றைய நாகரிக உலகத்தின் பெரும் செல்வந்தர்களின் புரவலும் கிடைப்பதில்லை. இவற்றில் பூசை செய்பவர்கள் அநேகமாக வழிபடுபவர்களே அல்லது எளிய சாதிகளைச் சார்ந்த பூசாரிகள். அவர்களும் பெரும்பாலும் வயிற்றுப் பிழைப்புக்கு வேறு தொழில்கள் செய்பவர்களாக இருப்பார்கள். கோவில்களின் விசேஷ நாட்களில் வேண்டுமானால் ஓரளவு பொருளோ, பணமோ கிடைக்கும். வாசிக்கப்படும் இசைக்கருவிகளும் எளிய சாதியினர் வாசிக்கும் பம்பை, சிலம்பு, பறை போன்றவைகளே. சிறுதெய்வங்கள் சமூக அளவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக உள்ளனர்.

மாறக பிராமணிய மதக்கடவுள்களான பெருந்தெய்வங்களுக்கு நடத்தும் வழிபாடுகளில் பால், தயிர், நெய், கோமியம் போன்ற ஒருசில மாட்டு திரவங்களோடு பெரும்பாலும் தாவர உணவு வகைகளே படையல் செய்யப்படுகின்றன. இக்கடவுள்கள், தம்மை வழிபடுவர்களைப் போலவே பல்வேறு வகைகளில் செல்வாக்கு பெற்றவர்கள். இலக்கியங்களில் பாடப் பெற்றவர்கள். பெருங்கோவில்களை உறைவிடமாகக் கொண்டவர்கள். இக்கோவில்கள் பழங்காலத்து மன்னர்களால் அல்லது நவீன உலகின் செல்வந்தர்களால் கட்டப்பட்டவை. அக்கோவில்களை பராமரிக்க பெரும் சொத்துக்களை மானியங்களாகக் கொண்டவை. பெரும்பணக்காரர்களைப் புரவலர்களாகக் கொண்டவை. வேதமந்திரங்களை ஓதும் பிராமணர்களைமட்டுமே பூசாரிகளாகப் பெற்றவை. மன்னராட்சி நடைபெற்ற காலத்திலிருந்து, ‘சமயசார்பற்ற மக்களாட்சி ‘ நடைபெறும் இன்று வரை, ஆட்சியாளர்களின் பக்கபலத்தைப் பெற்றவை. சுருங்கக் கூறின் பெருந்தெய்வங்கள் சமூகத்தின் சாதி, பொருளாதார, அரசியல் மேட்டுக்குடிகளின் மதத்தைச் சார்பு படுத்தும் சின்னங்கள்.

விலங்கு பலியிட்டும், மாமிசம் படைத்தும் வழிபடும் முறை பல்வேறு தருணங்களில் நிகழ்வது. எங்கள் குடும்பங்களிலும், ஊரிலும், சுற்றுவட்டாரத்திலும் உள்ள வழக்குகள் சிலவற்றை கீழே தொகுத்துள்ளேன். இவற்றிலிருந்து இச்சடங்குகள் எம்மக்களின் வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கின்றன என்பதை உணரலாம்.

(1) ஒரு குடும்பத்துகென்று உள்ள குலதெய்வத்துக்கு, குடும்பச் சடங்குகளின்போது பலி கொடுப்பது அல்லது மாமிசம் படைப்பது பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையே உள்ள பொதுவான வழக்கம். எங்கள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு முதல் முறை சிகை நீக்கி காது குத்தும் வைபவம் குலதெய்வங்களுள் ஒருவரரான முனீஸ்வரனுக்கு பொங்கலிட்டு, மூன்று காவுகள் கொடுத்து (வெள்ளாடு, பன்றி, சேவல்) நடத்தப்படும். இக்கடவுளுக்கு கோவில் கிடையாது. ஊரின் மேற்கில் உள்ள ஏரியின் ஒரு கோடியில் உள்ள பாறையொன்று தான் வழிபாட்டுத் தலம். அங்கு உடைந்த யானை, குதிரகள் மீதமர்ந்த முனீஸ்வரனும், மற்ற கன்னிகைகளும் உண்டு. ஏதேனும் ஒரு குடும்பத்தினர் சடங்கு நடத்தும் நாளைத் தவிர இவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. சடங்கு நாளன்று பலி கொடுத்த விலங்குகளின் மாமிசம் அன்று இரவு சமைக்கப்பட்டு, உறவினர்களுக்கும், ஊர்ச்சனங்களுக்கும் பறிமாறப்படும். இச்சடங்குகளை நடத்துபவர்களுக்கும் மாமிசத்தில் பங்கு உண்டு. மூன்று காவுகள் கொடுத்து சடங்கு நடத்த இயலாதோர், குறைந்தபட்சம் ஒரு சேவலாவது வெட்டாமல் பிறப்பு முடியிறக்கமாட்டார்கள். கல்யாணத்துக்கு முன்னர் நடைபெறும் குலதெய்வ வழிபாட்டின்போது, இன்னொரு குலதெய்வமான தேவிகாபுரம் அம்மனுக்கு கூழ் வார்ப்போடு சேவல் பலியும் உண்டு. இந்த அம்மன் கோவில் ‘தூரதேச ‘த்தில் இருப்பதால் வீட்டிலேயே மங்சள்-காவிநிறச் சேலை வைக்கப்பட்ட ஒரு மூங்கில் கூடைப் பெட்டியும், கூடைக்கு ஒருபுறம் நீண்ட வாளும், இன்னொரு புறம் திரிசூலமும் தாம் வழிபாட்டுக்குரிய சின்னங்கள். இன்னுமொரு தெய்வம் காட்டேரி. சிறப்பாக குறிப்பிட்ட காரணங்களுக்காக நேர்ந்துக்கொள்ளும் போதுதான் இக்கடவுளுக்கு பூஜை. இக்கடவுளுக்கு கோவிலோ, சிலையோ கிடையாது. நன்றாக இருட்டிய பிறகு, வீட்டுப் பெண்கள் மட்டும் ஏரிக்கரையோரம் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று, பொங்கலிட்டு, மணல்வீடுகட்டி, மூன்று செங்கற்களுக்கு, மஞ்சள், குங்குமம் இட்டு, கருப்பு கோழி அறுத்து படையல் நடத்தி விட்டு வருவார்கள். இந்த பூஜைக்கு ஆண்கள் போகக்கூடாது. அடுத்தது, இழவு விழுந்த வீட்டில் கருமாதி வரை புலால் மறுத்து, பின் மூன்றாம் நாள் மாமிச உணவோடு தீட்டு கழிக்கப்படும்.

(2). எங்கள் ஊரில் உள்ள ஒரு சின்ன பிள்ளையார் கோவிலைத்தவிர மற்றவை எல்லாமே சிறுதெய்வங்களான மாரியம்மா, பொன்னியம்மா, நூக்கலம்மா கோவில்கள் தாம். ஆடிமாதத் திருவிழா இத்தெய்வங்களுக்கு விசேஷமான திருவிழா. ஒருகாலத்தில் தெருக்கூத்தோடு ஐந்து நாட்கள் பொங்கலிட்டு நடந்து வந்த இத்திருவிழா, இப்போதும் விடியவிடிய வீடியோ திரைப்படங்களோடு நடப்பதாகக் கேள்வி. பிள்ளையார் கோவிலுக்கு பொங்கலிடும் நாள் தவிர்த்து மற்ற மூன்று தெய்வங்களுக்கும் ஆட்டுக்கிடா பலி உண்டு. மாரியம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழாவில் ஆட்டுப் பலியோடு கருவாட்டுக் குழம்புப் படையலும் உண்டு. பொங்கல் சோற்றுக்கு ஆட்டுக் கறிக்குழம்பும், கருவாட்டுக்குழம்பும் சரியான இணைகள். மூன்று ஊர்களுக்குப் பொதுவாக படவேட்டம்மன் என்கிற கோவிலும் உண்டு. இந்த அம்மன் கோவில் திருவிழாவுக்கும், பொங்கலிடுதல், கிடாவெட்டுதல், தெருக்கூத்து (இப்போது வீடியோ!), எல்லாம் உண்டு. இந்த பூஜைகளை உரிய காலத்திலும், தகுந்த முறையிலும் செய்யாதபோது, கிராம தேவைதைகளின் பழிக்கு ஆளாகி, மழை-மாரி பொய்த்து, பயிர்-பச்சைகள் காய்ந்து, மக்களும், மாடு-கன்றுகளும் வாடுவார்கள் என்பது நம்பிக்கை. இவ்வாறு இஷ்டதேவதைகளை பகைத்துக்கொள்ளும்போது, துஷ்டதேவதைகளுக்கு கும்மாளமேற்பட்டு, அவர்களால் இன்னும் அதிகமான கேடுகள் சேரும் என்பதும் நம்பிக்கை.

(3). ஊர்த் திருவிழாக்களைத் தவிர, வட்டாரத் திருவிழாக்களும் ஆண்டுதோறும் நடைபெறும். வேலூர் மாவட்டத்தில் எங்கள் ஊரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஏரி ஒன்றில் நடைபெறும் பொற்கொடியம்மன் திருவிழா அந்த வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம். பச்சைவண்டிகள் கட்டிகொண்டும், மற்ற நவீன வாகனங்களிலும், கால்நடையாகவும் பல்லாயிரக் கணக்கில் சித்திரையில் நடைபெறும் இத்திருவிழாவில் கூடுவது வழக்கம். இத்திருவிழாவை முன்னெடுத்து நடத்துவது, கடை நிலையில் உள்ள சாதி மக்களேயாயினும், இத்திருவிழாவில் சாதிப் பாகுபடின்றி பலதரப்பட்ட மக்கள் பங்கெடுக்கிறார்கள். நேர்த்திக் கடன்களும் பலத்தரப்பட்டவை–பச்சைவண்டிக் கட்டுதல், பொங்கலிடுதல், ஆடு-கோழி பலியிடுதல், வழிகளில் தண்ணீர் பந்தல் அமைத்து, பக்தர்களுக்கு, நீர்மோர், பானகம் முதலிய பானங்கள் வழங்குதல் போன்றன.

(4). பொதுவாக பெரும் பண்டிகைகளின் போதும் ஒரு நாள் கண்டிப்பாக அசைவ உணவுப் படையலுக்கும் ஒதுக்கப்படுகிறது. தீபாவளியும், புத்தாண்டு தினங்களிலும், எண்ணெய்த் தலைக் குளியலோடு, இட்லி, வடை, ஆட்டுக்கறிக் குழம்பும் விசேஷம். தைப்பொங்கல் நான்காம் நாளில் வயலில் பொங்கலிட்டு, கோழிபலி கொடுப்பதும், மாட்டுவண்டிகள் வைத்திருப்பவர்கள் கூட்டாக சேர்ந்து ஆட்டுபலி கொடுப்பதும் உண்டு. கார்த்திகை தீபத்தின்போது, கடைசி நாள் வயலில் பொங்கலிட்டு, கருவாட்டுப் படையல் உண்டு. புரட்டாசி, மார்கழி மாதங்களில் மட்டும் தான் மாமிசம் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டிருக்கும். மற்ற மாதங்களில் சாப்பிடத் தடையில்லை என்றாலும், இப்படி ஏதாவது விசேஷ தினங்களில் மட்டும் தான் பெரும்பாலான மக்களுக்கு மாமிசம் உணவு உண்ண வாய்க்கும்.

பன்னெடுங்காலமாக இருந்த பழக்கமான பலிகொடுத்து கடவுள் வழிபாடு நடத்தும் முறைக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது அல்லது ஏற்கனவே இருந்ததாகச் சொல்லப்படும் ஒரு தடையை தீவிரமாக நடைமுறைப்படுத்தும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் விளைவாக, தமிழகத்தின் பல பகுதிகளில் பலி கொடுத்தவர்கள் அல்லது பலி கொடுக்கக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீதிமன்றங்களிலும் சில வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. சில கலாச்சார இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தும் உள்ளன.

நாட்டுப்புறப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு. மாடுகள் பொதுவாக வயல் வேலைகளுக்கும், பால் உற்பத்திக்கும் வளர்க்கப்படுகின்றன. ஆடு, பன்றி வளர்ப்பின் முக்கிய நோக்கமே இறைச்சி தான். கோழிகள், முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு, பன்றி, கோழி போன்றவை எப்படியும் வெட்டப்பட்டுத்தான் இறக்கின்றன. இயற்கையாகச் சாகும் ஆடு கோழிகள் சொற்பமே. இவற்றை மதச் சடங்குகளின் போது பலியிட்டோ அல்லது வேறு வகையில் வெட்டியோ எப்படியும் சாப்பிடத்தான் போகிறார்கள். பலியிடும் சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், அசைவ உணவு சாப்பிடாதோர்களுக்கும், கால்நடைப் பொருளாதாரத்தை நம்பியிராதவர்களுக்கும் இதனால் நேரிடையாக எந்தவித பாதிப்பும் விளைவதில்லை. ஆகையால் தமக்குச் சம்பந்தமில்லாத ஒன்றில் அவர்கள் மூக்கை நுழைப்பது அநாவசியமானது.

இன்னொரு குடிமகனுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத, காலங்காலமாகச் செய்துவந்த ஒரு செயலை இன்னொரு முறைச் செய்ததற்காக திடாரென கைது செய்யப்பட்டிருக்கும் அப்பாவிகளை உடனடியாக விடுவித்து, அவர்களின் சிறையில் அடைக்கப்பட்ட நாட்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட வேண்டும். சமயசார்பற்ற ஜனநாயக அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டுள்ள நாட்டில், கடவுள் வழிபாட்டு முறைகளை கட்டுப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். தம் குலவழக்கப்படி பலிகொடுத்து வழிபடமுடியாததால் கடவுளின் பழிக்கு ஆளாக நேரிடும் என்கிற அச்சம் ஒருபுறமும், பலிகொடுத்தால் காவல்துறை அடக்குமுறைக்கு ஆளாக நேரிடும் என்கிற அச்சம் இன்னொரு புறமுமாக மன உளைச்சலுக்கும் ஆட்படுத்தப்பட்டிருக்கும் இம்மக்களின் சித்திரவதையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர இத்தடையை முழுமையாக விலக்கவேண்டும்.

இந்த திடார் நடவடிக்கை பெரும்பான்மை மக்களின் சமய சடங்குகள், நம்பிக்கைகளுக்கு சவால் விடுவதோடு மட்டுமல்லாது, பிராமணிய சடங்குகள், சம்பிரதாயங்களுக்கு மட்டும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கி, பிராமணிய இந்து மதத்தை பழக்கவழக்கங்களை அனைத்து மக்கட் பிரிவினரின் மீதும் திணிக்கும் முயற்சியாகும். பிராமணிய மதச் சடங்குகளை நாகரிகமானதாகவும், பிராமணிய மதத்தை பின்பற்றுபவர்களை மேன்மையானவர்களாகவும் காட்டி, பிராமணிய மதத்துக்கு வெளியே உள்ள சடங்குகளை நாகரிகமற்றனவாக சித்தரித்து, தடை செய்யப்பட வேண்டியவை எனக் கூறி அவற்றை பின்பற்றுவோரை குற்ற உணர்வுள்ளவர்களாகவும், குற்றவாளிகளாகவும் ஆக்கி, பிராமணிய மதத்தின், மத நிறுவனங்களின் மேலாண்மையினை உறுதிபடுத்துவதும் இந்த தடைக்குள் ஒளிந்திருக்கும் நோக்கமாக இருக்கவேண்டும். ஒட்டு மொத்த மக்கள் கூட்டத்தையும், தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத மதநிறுவனங்களையும், வேதிய இந்து மதத்தின் இறுக்கத்துக்குள் கொண்டுவர முயலும் இந்துத்துவ அரசியலின் இன்னொரு முயற்சியே இந்தத் தடை. இந்துத்துவ அரசியலின் அராஜகத்தை எதிர்க்கும் அனைத்து மக்கட்பிரிவினரும், தலித், பிற்படுத்தப்பட்ட மக்களும், அவர்களின் சமுக, பண்பாட்டு, பொருளாதார உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து இயக்கங்களும் ஒருசேர இந்த ஒடுக்குமுறையை எதிர்க்க வேண்டும்.

***

munirathinam_ayyasamy@yahoo.com

Series Navigation

மு. சுந்தரமூர்த்தி

மு. சுந்தரமூர்த்தி