வாரபலன் (செப்டம்பர் 4, 2003 – இங்கிலீஷ்கார திருடன், வாத்தியார் தினம், வியத்நாம் மிளகு இதர)

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

மத்தளராயன்


இங்கிலீஷ்காரத் திருடன் எப்படி இருப்பான் ?

இங்கிலீஷில் பேசுவான். இங்கிலீஷில் திருடுவான். இங்கிலீஷில் பயப்படவும் செய்வான்.

சமீபத்தில் லிவர்ப்பூல் நகரத்தில் இப்படியான ஒருத்தன் கொள்ளையடிக்கப் பூட்டி வைத்த ஒரு வீட்டுக்குள் புகுந்தான். அங்கே இங்கே பீரோவைத் திறந்து, பெட்டியை உடைத்து, அலமாரியைக் குடைந்து பீராய்ந்ததில் என்னவெல்லாம் தேறியதோ எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பும் முன்னால் வரவேற்பறையில் எட்டிப் பார்த்தான்.

அவ்வளவு தான். ரத்தமே உறைந்து போய், மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கக் கால் சராய் நனையும் அளவு பயமோ பயம். வந்த வேகத்தில் வெளியே குதித்து ஓடினான். ஓடினான்.

எங்கே ஓடினான் ? பயந்த குழந்தை எங்கே போகும் ? வீட்டுக்குத்தான். யாரிடம் போய் முறையிடும் ? அம்மாவிடம் தான்.

சுமார் வயசான திருடனான இவனுக்கு ரொம்பவே வயசான அம்மா இருக்கிறாள். அம்மா, அம்மா என்று அங்கியைப் பிடித்து இழுக்க, அந்தம்மா மூக்குக் கண்ணாடியைக் கண்ணுக்கு மேலே சரியாக்கிக் கொண்டு, என்னடா கண்ணு என்றாள்.

அம்மா, அந்தப் பக்கம் மெர்சிஸைட் பேட்டைக்குப் போனேனா ? அங்கே ரொம்பப் பயங்கரமா ஒண்ணு பாத்தேன். பயமா இருக்கும்மா.

வெடவெட என்று கோழிக்குஞ்சு போல் நடுங்கிக்கொண்டு நின்ற பிள்ளையை அம்மா அணைத்துக் கொண்டு தலையைத் தடவிச் சமாதானப்படுத்தினாள்.

பயப்படாமே சொல்லுடா ராஜா. எங்கே பயங்கரம் ?

ஒரு வீட்டுக்குள்ளே.

அங்கே நீ ஏன் போனே ?

திருடப் போனேம்மா.

தப்புடா கொழந்தே.

இனிமே செய்யமாட்டேம்மா.

சமத்து.

அம்மா கையைப் பிடித்துக் கொண்டே அந்த வயசான திருட்டுக் குழந்தை சாப்பிட்டு, அம்மா கையைப் பிடித்துக் கொண்டே கையலம்பி, அம்மா கையைப் பிடித்துக் கொண்டே படுத்துத் தூங்கி.

எல்லாம் சுபம் என்று இங்கேயே முடித்தால் இதில் ஒரு சுக்கும் இருக்காது.

அந்த மனுஷன் பயந்தெளிந்து வெளியே போனான். பாருக்குப் போய்ப் பயப் பிராந்தியில்லாமல் விஸ்கி குடித்தான். அப்புறம் இன்னொரு வாட்டி திருடப் போனான்.

உய்யாங்க் உய்யாங்க் என்று சைரன் சத்தம்.

புடிடா அவனை.

போலீஸ் வந்து கோழி மாதிரி அமுக்கிப் பிடித்துப் போனது.

போலீஸ் ஸ்டேஷன் போனதும் அவனுக்கு முன் ஜன்ம ஞாபகம் வருவது போல் பழைய திருட்டு நினைவு வந்தது. பயமும் திரும்பி வந்தது.

அழுதபடியே போலீசிடம் செய்த, செய்யாத குற்றங்களை எல்லாம் ஒப்புக்கொண்டான். லாக் அப்பில் தள்ளுவதற்கு முன்னால், தொப்பை இல்லாத போலீஸ்காரரின் கையைப் பற்றிக் கொண்டு கெஞ்சினான்.

சார், சொன்னேனே அந்த மெர்சிஸைட் வூட்டுலே ஒரு தபா புகுந்து பாருங்க சார்.

சே சே. யூனிபார்ம் போட்டுக்கிட்டு அதெல்லாம் பண்ணக் கூடாதுப்பா.

அட அதிலே சார். அங்கே போய்ப் பாருங்க. என்னா ஒரு பயங்கரம். நினைச்சாலே நடுங்குது. லாக் அப்பு எங்கே சார் ? நானே போயிக்கறேன். ரொம்ப டாங்க்ஸ் சார் பத்திரமா என்னை இங்கே கொண்டாந்து வச்சதுக்கு.

சைரன் ஒலித்துக் கொண்டு நகர்க் காவல் கார்களில் ஒரு பெரிய போலீஸ் படையே அவன் சொன்ன வீட்டுக்குப் போய் இறங்கியது.

கதவு சாத்தியிருந்தது. உள்ளே யாரோ இருக்கிறார்கள். யாரோ என்ன, வீட்டுக்காரர் இல்லே இன்னொரு திருடன்.

காலிங் பெல் அடிக்க எல்லாம் நேரம் இல்லே. கதவை உடைய்யா ஒன் நாட் ஒன்.

உடைத்துக் கொண்டு உள்ளே போனால் வீட்டுக்காரர் முன்னறையில் இருக்கிறார். மும்முரமாகப் படம் வரைந்து கொண்டிருக்கிறார்.

இது உங்க வீடாங்க ?

அவர் உடைந்த கதவைப் பார்த்தபடியே ஆமாம் என்று தலையை ஆட்டினார்.

உங்க பேரு ?

மாரிஸன்.

தொழில் ?

பாத்தாத் தெரியலே ? ஓவியம் வரையறது.

ஆங்.. அதென்னது அந்த மேசையிலே ?

இதைப் பார்த்துத்தானா அந்தாளு கண்டமேனிக்குப் பயந்து பெனாத்திட்டுக் கிடக்கான் ?

போலீஸ் மேசைப் பக்கம் போய்க் கூர்ந்து பார்க்க, அங்கே ஒரு குடுவை. அதற்குள் பார்மால் டிஹைட் திரவம். அப்புறம் திரவத்தில் மிதந்தபடி ஒரு தலை. மனுஷத் தலை.

யோவ் ஆர்ட்டிஸ்டு ? இன்னாய்யா இது ?

நாந்தான். என் தலைதான் அது.

ஓவியரின் முகத்துக்கும் மேஜையில் பார்மால் டாஹைடில் மிதந்த தலைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. மேஜைத் தலை கொஞ்சம் தட்டை. அவ்வளவுதான்.

தொப்பியைக் கழற்றித் தலையைச் சொறிந்து விட்டுத் திரும்பத் தொப்பியை மாட்டிக் கொண்டார்கள்.

ஏன் சார் இப்படிப் பயமுறுத்தறீங்க ?

இது பயமுறுத்தறதுக்காக இல்லே. கான்செப்ட் ஆர்ட். கன்ஸூமரிசத்தை எதிர்த்து என்னோட பதிவு. என்னையே புகைப்படம் எடுத்து, வயர் ஃப்ரேம் மாடலா, மாமிசத் துண்டாலே ஒரு மாஸ்க் செய்து.

இங்கிலீஷ்காரப் போலீஸ்காரர்களுக்குக் கலையும், இலக்கியமும் புரிந்தாலும் புரியாவிட்டாலும், படைப்பாளிகளிடம் வம்புக்குப் போக வேண்டாம்;அவர்கள் சாதுப் பிராணிகள் என்பது புரியும்.

மன்னிச்சுக்குங்க சார்.

பரவாயில்லே. டா குடிக்கறீங்களா ?

வேணாம் சார். நாங்க வரோம். வீட்டைப் பத்திரமாப் பாத்துக்குங்க. நீங்க இல்லாத நேரம் பார்த்து கண்ட திருட்டுப் பயலும் நொழஞ்சுடுவான் . ஜாக்கிரதையாப் பூட்டிட்டுப் போங்க. அட, கதவு உடஞ்சு போச்சா ? சும்மாத் தட்டினோம். அது என்னடான்னா.

பரவாயில்லே.

ஆக, நான் இதை எழுதிக் கொண்டிருக்கும்போது, போலீஸ்காரர்கள் ஸ்டேஷனில் நிம்மதியாக இருக்கிறார்கள். ஓவியர் வீட்டில் நிம்மதியாகப் படம் வரைந்து கொண்டிருக்கிறார். ஓவியர் வீட்டு வாசல் கதவைப் புதிதாகப் பொருத்தி விட்டு, மர ஜாமான் விற்கிற கடைக்காரர்கள் நிம்மதியாகக் காவல்துறை கொடுத்த காசை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பயம் இன்னொரு வாட்டி தெளிந்த திருடன் நிம்மதியாகக் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.

இப்பத்தான் சுபம்.

***

செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினம். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள். பழைய ஜனாதிபதி.

அவரைப் பார்க்க ஒரு தடவை தமிழ்ச் சினிமாக் கலைஞர்கள் கூட்டமாக தில்லி ராஷ்ட்ரபதி பவன் போயிருந்தார்கள். கவிஞர் கண்ணதாசனும் அந்தக் கூட்டத்தில் உண்டு.

முதல் குடிமகனாக இருந்தால் என்ன ? அத்வைத, வேதாந்தப் புலியாக இருந்தால்தான் என்ன ? கம்பளம் விரித்தாலும் விரிக்காவிட்டாலும் தரையில் நடக்கிறவர் தானே சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் ?

நடிக நடிகையரைப் பார்த்ததும் குஷி கிளம்பி அந்தப் பெரிய வாத்தியார் உடனே ஒரு அந்தக் காலச்சினிமாப் பாடலைப் பாட ஆரம்பித்து விட்டாராம்.

வாங்கடி வாங்கடி லவுண்டிகளா

இந்த வாத்தியாரைப் பார்க்க வந்தீங்களா

ஜனாதிபதியே பாடியதால் அவரைப் பார்க்கப் போயிருந்த நடிக நடிகையர் எல்லோரும் கூடச் சேர்ந்து அந்தப் பாட்டைப் பாடவேண்டிப் போனது என்று கண்ணதாசன் எழுதியிருந்தார்.

அது கடந்தகாலம். நிகழ் காலத்தில் அதாவது பத்து நாள் முன்பு, ஹாலிவுட் நடிகர் டாம் குரூய்ஸ் ஜப்பானுக்குப் போனார். தன் ‘லாஸ்ட் சாமுராய் ‘ படத்தை அங்கே வெளியிட விளம்பரப்படுத்தப் போனவர் ஜப்பானியப் பிரதமர் ஜூனிச்சிரோ கொய்சுமி வீட்டுக்கும் ஒரு நடை போகலாம் என்று நுழைந்தார்.

நடிகரைப் பார்த்த கொய்சுமி, ஜப்பானியப் பொருளாதாரச் சிக்கல்களைக் கொஞ்ச நேரம் மனதிலிருந்து தள்ளி வைத்து விட்டுக் கையைக் குலுக்கினார்.

வாங்க பாடுவோம்.

டாம் குரூய்ஸ் இது என்ன மாதிரி உபச்சாரம் என்று புரியாமல் மருள, பிரதமர் தோக்கியோ ஆங்கிலத்தில் அவருக்குப் பிடித்த பாப் இசைப்பாடகரான எல்விஸ் ப்ரஸ்லியின் பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்து விட்டார்.

சும்மாச் சொல்லக் கூடாது. நன்றாகவே பாடினாராம். கூடச் சேர்ந்து பாடிய டாம் குருய்ஸ் சொல்வதை நம்பித்தான் ஆக வேண்டும்.

கொய்சுமி கரோக்கேயாக எல்விஸ் பிரஸ்லி பாடல்களை ஒரு குறுந்தகடாகவும் வெளியிட்டிருக்கிறாராம். தலைப்பு ‘கொய்சுமிக்குப் பிடித்த எல்விஸ் பாடல்கள் ‘. (கவனிக்கவும் – வெறும் கொய்சுமி தான். மாண்பு மிகு, தாணைத் தலைவர், டாக்டர் எல்லாம் கிடையாது).

ஜப்பானியப் பிரதமர் தான் பாடணுமா நானும் நல்லாப் பாடுவேனே என்று இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லூஸ்கானியும் மைக்கைப் பிடித்துப் பாடி, குறுந்தகடு வெளியிட்டிருக்கிறாராம். அவர் பூர்வாசிரமத்தில் கப்பலில் பாடுகிற ஊழியம் செய்து வந்ததால் கேட்கச் சகிக்கிறதாகவே அவர் இப்போது பாடியதும் இருப்பதாகக் கேள்வி. தன் குரலில் மற்றவர்கள் நம்பிக்கை வைத்தாலும் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லையோ என்னமோ, பெர்லூஸ்கானி இசைக் கூட்டணி அமைத்துக் கொண்டு பாடியது சகபாடகர் ஒருவரோடு. பிரதமரோடு கூடப் பாடிய அவர் நண்பர் கார் நிறுத்துமிடத்தில் பகுதி நேரக் காவலராகப் பணிபுரிகிறார்.

பாட்டாளிகளின் தோழன் நான் என்று இத்தாலியப் பிரதமர் இப்படிப் பாடி நிரூபித்துக் கொண்டிருக்கும்போது, பாட்டு வேட்டு வைத்தது பிரான்சின் பழைய பிரதமர் லியனல் ழோஸ்பினுக்கு. ஏதோ ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் யாரோ கேட்டார்கள் என்று அவர் வாயைத் திறந்து சங்கீதம் பாட ஆரம்பிக்க, அவருடைய சோசலிசக் கருத்துக்களால் கவரப்பட்டு அவருக்கு வாக்களிக்க நினைத்திருந்தவர்களும், இந்த ஆள் சரிப்பட மாட்டான் என்று கடைசி நிமிஷத்தில் மனதை மாற்றிக் கொள்ள மாற்றுக் கட்சி தற்போது வெற்றிப்பாட்டு பாடிக் கொண்டிருக்கிறது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இப்போது உயிரோடு இருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். கூடவே வருத்தமும் பட்டிருப்பார்.

**

பொற்காலத் தமிழகத்தில் மிளகை விற்றே மாட மாளிகை, கூட கோபுரம் எல்லாம் கட்டியதாக இலக்கியத்தில் வருவது அவரவர்களுக்கு உள்ள தமிழ்ப் பற்றையும், வரலாற்றுச் சிந்தனையையும் பொருத்த அளவு உண்மையாக இருக்கலாம்.

உடுப்பி ஓட்டல் வெண்பொங்கலில் எப்போதாவது வாயில் மாட்டி அரைபட்டுச் சுரீர் என்று உறைக்கிற சரக்கான மிளகு தமிழகத்தில் தற்போது எங்கே விளைகிறது என்று கொச்சி மிளகு பொட்டலம் கட்டி விற்கும் தமிழ்ப் பலசரக்குக் கடைக்காரர்களுக்கும் தெரியாது.

இது இப்படி இருக்க, உலகிலேயே முதலாவது இடத்தைப் பிடிக்கும் மிளகு உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் வியத்னாம் தானாம். வருடாவருடம் விளையும் சுமார் ஏழு லட்சம் டன் மிளகில் எழுபது விழுக்காடு அங்கேயிருந்து தான் ஏற்றுமதியாகிறது.

மிளகு விற்று வளம் பெருக்கிய வியத்னாமுக்கு உலகச் சந்தைப் பொருளாதர வடிவில் இன்னல் வந்திருக்கிறது இப்போது.

ஒரு கிலோ மிளகுக்குக் கிடைத்து வந்த விலையான இரண்டு டாலர், 1999-ல் திடாரென்று இறங்கி எழுபத்தைந்து செண்ட் மாத்திரம் ஆகப் பாதாளத்தில் வீழ, தன் முயற்சியில் சற்றும் தளராத வியத்னாம் மிளகு உற்பத்தியை அரும்பாடு பட்டு மூன்று மடங்கு உயர்த்தியது.

என்ன பிரயோஜனம் ? அதாவது அதை விளைவித்த வியத்னாமிய விவசாயிகளுக்கு. உலகச் சந்தையில் மிளகு விலை இன்னும் கீழே கீழே போய்க் கொண்டிருக்க, அதிகமாக விளைந்தும், விவசாயிக்கு வருமானம் குறைய, பன்னாட்டு முதலாளிகள் வழக்கம் போல் இடுப்பு இன்னும் ரெண்டு இஞ்ச் பெருத்துப் போய்ப் பேண்ட் புதிதாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் கார்கில் போல் விதை நெல்லின் மேலும் இதர தானிய வித்துக்களின் மேலும் உரிமம் கொண்டு வந்து விவசாயியை வயிற்றில் அடிக்கத் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இப்படி விளைந்ததின் விலையைக் குறைக்க வைத்துக் கொள்ளை.

உன் பெயரும் என்பெயரும் வியத்னாம் – நாம்

ஒருதாயின் பிள்ளைகள் வியத்னாம்.

தோள்கள் கோடி கொண்டுவரு கின்றேன் – உன்

தோழனாக நானும் வருகின்றேன்.

வாழும்போதும் வீழும்போதும் வியத்னாம் – நாம்

வேறுபட்டு நிற்பதில்லை வியத்னாம்.

என்று அறுபதுகளில் வியத்னாமில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து மறைந்த கவிஞர் கே.சி.எஸ் அருணாசலம் கவிதை எழுதினார். மூன்றாம் உலக நாட்டு விவசாயிகள் எல்லோரும் உரக்கச் சொல்ல வேண்டியதாக அவர் எழுதி வைத்தது நிலைக்கிறது.

***

சென்னைக் கடற்கரையில் விமான அணிவகுப்பு. இந்திய விமானப் படையின் மிக், சூரிய கிரண ரக விமானங்கள் ஆறு மீட்டர் இடைவெளியே தங்களுக்குள் இருக்கும்படி உயரப் பறந்து மெய்சிலிர்க்க வைக்கும் சாகசங்களை நிகழ்த்திக் காட்டின. மெரினாவில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் இதைக் கண்டு களித்தார்கள்.

விமான அணிவகுப்புக்கு ஒரே நேரத்தில் சென்னைவாசிகள் கடற்கரையில் வெள்ளமாகத் திரண்டதால், சென்னைச் சாலைகளில் நெரிசல். அண்ணாசாலையிலும், கடற்கரையை ஒட்டிய பெருவழிகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்து, மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிப் போனது.

தில்லியில், துணைக்கோள் வழிநடத்துதல் அடிப்படையிலான (ஜி.பி.எஸ்) வாகனப் போக்குவரத்து வசதி இருபதாயிரம் ரூபாய்க்கு விரைவில் கிடைக்கும் .

இந்த ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளில் வந்த மூன்று செய்திகள் இவை. இதில் நான்காவது பரிமாணம் ஏதாவது உங்களுக்குத் தட்டுப்பட்டால் எழுதுங்கள்.

***

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்