மழைநீர் சேகரிப்பு, உயிர்ப்பலித் தடுப்பு சட்டங்கள் யாருக்காக ?

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

அசுரன்


அண்மையில் தமிழக அரசு மழை நீர் சேகரிப்புச் சட்டம், கோயில்களில் உயிர்ப் பலியிடுவதைத் தடுக்கும் சட்டம் ஆகிய இரு சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இரண்டிலுமே அரசுக்கு அறிவியல்பூர்வமான பார்வை இல்லை என்பதே உண்மை.

மழை நீர் சேகரிப்பைப் பொறுத்த வரையில் அதன் தேவை அனைத்துத் தரப்பு மக்களாலும் அறிவியலாளர்கள், சுற்றுச்சூழல்வாதிகளாலும் நன்கு உணரப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களேகூட எப்படியாவது விடிவு வந்தால் சரி என்ற எண்ணத்திலேயே உள்ளனர். இதனால்தான் அனைவருமே காலக்கெடுவை நீட்டிக்கக ிகோரினார்களே தவிர, தமிழகத்தில் இந்தச் சட்டத்தை யாரும் நேரடியாக எதிர்க்கவில்லை.

ஆனால், 4 கன அடி அளவில் குழி வெட்டி கூழாங்கல், செங்கற்துண்டுகள், சல்லிகளால் நிரப்பவேண்டும் என்ற பொதுவான வாய்ப்பாடே எந்திரகதியில் அனைத்து பகுதிகளிலும் வலியுறுத்தப்பட்டது. மாறாக, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலுமுள்ள மண்ணின் தன்மையைக் கணக்கில்கொண்டு, அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டிருக்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால் அது நிறைவானதாக இருந்திருக்கும்.

மேலும் இப்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பொழிந்துகொண்டிருந்தாலும்கூட, எப்போதும் வளமாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த 2 போகங்களாக பயிர்கள் விளையாமல், நீரின்றிக் கருகின. தற்போதும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மழை இல்லை; மக்களின் கையிலும் பணமும் இல்லை. இந்நிலையில் மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு பணத்திற்கு எங்கே போவார்கள் ?. மேலும், கட்டாமல் விட்டால் உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து அமைத்துவிட்டு, பெருந்தொகைக்கு ‘பில் ‘ போட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தில் பெயரவில் குழி தோண்டி, கட்டியிருக்கிறார்கள். இது எவ்வகையிலும் மழைநீரைத் தேக்கப் பயன்படாது.

மேலும், சரியான திட்டமிடலற்ற இத்தகைய அமைப்புகள் எலி வளைகளாகவும், கொசுக்களின் அரண்மனைகளாகவும் மாறிவிடும் ஆபத்தும் உள்ளது. இதனால் எப்போதும் மூளைஸ்ரீ காய்ச்சல் ஆபத்துள்ள திருச்சி போன்ற இடங்களிலும், மலேரியா ஆபத்துள்ள தர்மபுரி போன்ற இடங்களிலும், தற்போது டெங்கு காய்ச்சல் பரவி உயிர்ப்பலி எடுத்துவரும் கேரளாவிற்கு அருகிலுள்ள தமிழக எல்லைப்பகுதியிலும் (கன்னியாகுமரி) அந்நோய்கள் பரவவும் இது வழியேற்படுத்துவதாக அமைந்துவிடும் ஆபத்தும் உள்ளதாக டாக்டர் இரமேஷ் போன்றோர் அச்சப்படுகின்றனர்.

மொத்தத்தில், தாம் பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளதாகக் கூறி, ஆட்சியாளர்கள் பெருமைப்பட்டுக்கொள்வதன்றி, மணல், சல்லி, சிமென்ட், பிளாஸ்டிக் குழாய் வியாபாரிகள் ஆதாயம் அடைந்ததன்றி இந்தத்திட்டத்தால் பெரிய அளவில் இப்போதைக்கு எப்பயனும் இல்லை என்றே கொள்ளலாம்.

0 0 0

கோயில்களில் உயிர்பலியிடுவது தடுப்பு சட்டமும் இப்படித்தான். இதில் எவ்வித விலங்காபிமானமோ அல்லது பறவாபிமானமோ இல்லை. சுற்றுச்சூழல், பகுத்தறிவு குறித்த விழிப்புணர்வோகூட இல்லை. இருப்பதெல்லாம் ‘நான் சொன்னால் நீ கேட்கணும் ‘ எனும் ஆணவமே!.

கோயில்களில் கோழிகள், ஆடுகள், பன்றிகளைப் பலியிடுவதென்பது இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவரும் ஒரு பழக்கம். யாரும் கோயிலில் இவற்றைப் பலியிட்டு வியாபாரம் செய்வதில்லை. தனக்கோ, தன் குடும்பத்திற்கோ அல்லது ஓர் ஊருக்கோ துன்பம் நேரும்போது நலமாக்கிட கடவுளிடம் வேண்டுகோள் வைக்கும் மக்கள் தம் நேர்த்திக்கடனைத் தீர்க்கவே இவற்றைப் பலியிடுகின்றனர். அப்போது ஒட்டுமொத்த குடும்பமோ, ஊரோ, பக்தர்களோ பங்கேற்கும் துயருற்றவர்களின் துயர் நீங்கிட மனமுருகிக் கடவுளிடம் வேண்டுகின்றனர். அங்கே லாப நட்டக் கணக்கை யாரும் பார்ப்பதில்லை. சாதி, மதங்களைஜ் தாண்டிய கூட்டுக்கொண்டாட்டமாகவே அது இருக்கிறது. சில ஏழையருக்கு கறிச்சோறு கிடைக்கும் நாளும் அந்நாளே!

இத்தகைய சூழலில் நடைமுறைப்படுத்தப்படுகிற இந்தச் சட்டமானது ‘ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மதம் ‘ என்ற நோக்கத்தோடு செயல்படுகின்ற இந்துத்துவ சக்திகளின் வரவேற்பைப் பெற்றிருப்பதும் நமக்கு ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது. வெளிளைத்தோலுடைய, பூணூல் போட்ட, மீசை இல்லாத கடவுள் உங்களுடையவராக இருக்கலாம். அவரை ‘சைவமாக ‘ வணங்குவதே சரியானது என்று நீங்கள் நினைக்கலாம். தவறில்லை.

ஆனால், தமிழ் மக்களின் கடவுள் பனை மரம் போலக் கறுப்பானவர், ஆட்டுக்கிடா மீசை வைத்திருப்பவர், வியர்வை நாற்றமடிப்பவர், ஆட்டின் கழுத்தைக் கடித்து இரத்தம் குடிப்பவர், கள், சாராயம் குடித்துவிட்டு ஆடுபவர், சுடலையில் போய் எலும்பை எடுத்துக் கடிப்பவர், எந்தக் கோபுரமுமின்றி ஊருக்கு வெளுயே எல்லையில் காவல் இருப்பவர். வெளிளைக் கடவுளை எப்படி வணங்கவேண்டும் என்று ஆகமங்கள் வைத்திருக்கிறார்களோ அதைப்போலவே இவரையும் எப்படி வணங்குவதென்ற முறையை வைத்துக்கொண்டு, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வணங்கி வருகின்றனர் உழைக்கும் மக்கள்.

இக்கடவுளை இப்படி வணங்கக்கூடாது என்று மக்களுக்குக் கட்டளையிட நீ யார் ?

இது மூடநம்பிக்கை என்று சொன்னால்…

– நாள் நட்சத்திரம் பார்த்து அந்த பூசை, இந்த பூசை என்றெல்லாம் நடத்துவது…

– மழை பெய்யவும், எதிரிகளை அழிக்கவும் யாகம் செய்வது…

– மழை வேண்டி கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது…

என்பதெல்லாம் மூட நம்பிக்கைகள் இல்லையா ?

இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று சொன்னால்…

– கற்பூரம் ஏற்றுவது…

– திருவிழா என்ற பெயரில் பல இலட்சம் பேர் ஒரே இடத்தில் கூடுவது…

– சதுர்த்தி என்ற பெயரில் ஊர்வலம் போவது, நச்சு வண்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது…

– யாகம் என்ற பெயரில் பல்லாயிரம் லிட்டர் நெய்யை தீயில் ஊற்றுவது…

– வேண்டுதலென்று பல்லாயிரம் தேங்காய்களை உடைத்து வீணாக்குவது…

என்பதெல்லாம் சூழல் கேடில்லையா ?

இது விலங்காபிமானம், பறவாபிமானம் என்று சொன்னால்…

– நாள்தோறும் கோடிகோடியாய் உயிர்க்கொலை செய்யும் கறிக்கடைகள்…

– கொல்லப்படுவதற்காகவே கறிக்கோழிகளை உற்பத்தி செய்யும் ‘பிராய்லர்கள் ‘…

என்பனவெல்லாம் தடைசெய்யப்படாதது ஏன் ?

இவையெல்லாம் இந்து மதத்தில் இல்லை என்று வாதிடுவீர்களானால்…

இதைச் செய்பவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல என்றும் அரசே ஒரு அவசரச்சட்டம் மூலம் அறிவித்துவிடட்டும்.

0 0 0

கடைசியாக ஒரு ஐயப்பாடு…

மக்களுக்குப் பயனற்ற இந்தச் சட்டங்கள் எல்லாம் யாருக்காக ? எதற்காக ?

**

(asuran98@rediffmail.com)

Series Navigation

அசுரன்

அசுரன்