மறைந்த எழுத்தாளருக்கான மரியாதையும் மதிப்பீடுகளும்

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

பாரதிராமன்.


கடந்த 23 ஆகஸ்டு, 2003 அன்று சென்னை பாரதியார் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தை ஒரு முன்மாதிரியான கூட்டமென்று சொல்லலாம்.

அரங்கு நிறைந்திருந்தது மட்டுமல்ல, அதை நிறைத்தவர்கள் இலக்கியப் படைப்பாளிகளும் தீவிர வாசகர்களும்தான். கூடியிருந்தது மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் குடும்பத்திற்காகத் திரட்டப்பட்ட நிதியை வழங்குவதற்கானது.

தமிழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் குடும்ப நிலை புதுமைப்பித்தன் காலம் தொடங்கியே பரிதாபத்துக்குரியதாகவே இருந்து வருகிறது. நமது நாட்டைப் பொருத்தவரையில் புராணகால தருமி முதல் நேற்றைய பாரதிவரை புலவர்களை விட்டுப் பிரிந்ததேயில்லை வறுமையும் துன்பமும். இருந்தாலும் அவற்றையும் மிஞ்சி அவர்கள் எதிர் நீச்சல் போட்டுவந்திருக்கிறார்கள் சமூகக் கேடுகளைக் களைய வேண்டுமென்ற புனித நோக்குடன். அவர்களது மறைவுக்குப் பின்னரே சமூகம் அவர்கள் பணியை நினைவு கூர்ந்ததேதவிர அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கான மரியாதையைத்தர மறந்துவிட்டது, மறுத்துவிட்டது.

காலப்போக்கில் மற்ற எல்லாத் துறைகளிலும் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் தமிழ் படைப்பாளிகளுக்கு அது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. இக்கேவலத்தை இனியும் நீட்டிக்க விடக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக இக்கூட்டம் அமைந்தது அதன் முக்கியச் சிறப்பு.

கூட்டத்தில் பங்கு பெற்ற அனைவரின் கருத்தாகவும் அது

இருந்தது.

மிகக் குறுகிய கால அவகாசத்தில் சக படைப்பாளிகளும் நண்பர்களும் மனமுவந்து அளித்த ஒரு லட்ச ரூபாய் நிதியை மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் மனைவி உஷாராணியிடம் வழங்கிய போது பேசிய மா. அரங்கநாதன் கோபிகிருஷ்ணன் எழுத்தைப் பாராட்டியததோடு புதுமைப்பித்தனைப்போல் அவர் பட்ட துன்பங்களையும் விவரித்தார். நண்பர்கள் விரைந்து செயல்பட்டு அவரது குடும்பத்திற்கு உதவ வந்த முன்னோடிச் செயலையும் பாராட்டினார்.

முன்னதாக அனைவரையும் விளித்துப் பேசிய வெளி ரங்கராஜன் கோபிகிருஷ்ணனின் எழுத்தின் தனித்துவத்தை சிலாகித்தார். பல விதமான மன அழுத்தங்களுக்கும் உடல் உபாதைகளுக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கிடையிலும் எதையும் வெளிக்காட்டாமல் எழுத்து குறித்த தீவிரமான நம்பிக்கைகளுடன் மிக எளிய மனிதராய் வாழ்ந்துகாட்டியவர் அவர் என்றார். தன் சகாக்கள் அமரந்தாவும் லதா ராமகிருஷ்ணனும் குடும்ப நிதி திரட்ட எடுத்துக்கொண்ட சீரிய முயற்சிகளைப் பாராட்டி நன்றி கூறினார்.

அமரந்தாவும் லதா ராமகிருஷ்ணனும் தாங்கள் மேற்கொண்ட பணி செவ்வனே நிறைவேற உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு இம்முயற்சி வரும் தலைமுறை எழுத்தாளகளுக்கும் பயன்படுமாறு ஒரு நிரந்தர அமைப்பை உருவாக்குவதில் முடிய வேண்டும் என விரும்பினார்கள். அடுத்துப் பேசிய பலரும் இதையே வலியுறுத்தினார்கள்.

ந. முத்துசாமி பேசுகையில் சமுகத்தை மட்டுமே நம்பியிராமல் எழுத்தாளர்கள் மேல் நாடுகளில்போல சொந்தக் கால்களில் நிற்கப் பழகிக்கொள்ளவேண்டுமென்றார். ஞானக்கூத்தன் கோபிகிருஷ்ணனுடனான நெருங்கிய பழக்கத்தை நினைவு கூர்ந்தார். அவரைக் கவிதை எழுதத் தூண்டியதைக் கூறி அவர் தம்மிடம் காட்டிய அளவுக்கு மீறிய பணிவையும் பாராட்டினார். ஞாநி நமதுஎழுத்தாளர்களின் அவல நிலைக்கு முதலாளி- தொழிலாளி வர்க்க வித்தியாசங்களே காரணம் என்றார். இப்போது எடுக்கப்படும் முயற்சிகளோடுகூட படைப்பாளிகலின்சமூக கெளரவத்தையும் அவர்களுக்கான ஊதியங்களையும் உயர்த்துவதற்கான வழிமுறைகளும் காணப்படவேண்டும் என்றும் வற்புத்தினார் அவர்.

படைப்பாளிகள் சில வேண்டாத பழக்கங்களுக்கு அடிமையாகிப்போவதைக் குறைகூறுவதைக் கண்டனம் செய்தார் கவிஞர் விக்கிரமாதித்தன். அவர்களை அந்த நிலைக்கு தள்ளுவதே சமுகம்தான் எனச் சாடினார் அவர். ஏனோ எனக்கு அருணகிரிநாதரும், காளிதாசனும், பாரதியும், கண்ணதாசனும் நினைவுக்கு வந்தனர். அவர்கள் தங்கள் பழக்கங்களுக்குச் சமூகத்தையா சாடினார்கள் ? இருந்தாலும் அப்போதைய சமூகத்தைப்போல் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமலிருக்க நாம் முயல வேண்டும்.

எஸ். ராமகிருஷ்ணனும் கோணங்கியும் பல நெருக்கடிகளுக்கு இடையிலும் எழுத்தாளர்கள் சமுக முன்னேற்றத்தையே மனதில் கொண்டு எதி ர் நீச்சல் போட வேண்டியிருப்பதைக்கூறி அவர்களுக்கான மரியாதையை வழங்கவேண்டியது சமூகத்தின் கடமையாகிறது என்றனர்.

அனைவரது பேச்சிலும்இனியும் தமிழ் எழுத்தாளர்கள் பொருளாதார அவலங்களுக்கு இரையாகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டியது சமூகத்தின் நன்றிப் பொறுப்பு என்ற சங்கல்பம் வெளிப்பட்டது. அது எவ்வாறு செயலாக்காப்படப்பொகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மற்றுமொரு சந்தேகம். நடைபெற்றது மறைந்த எழுத்தாளருக்கான இரங்கற் கூட்டமா அல்லது பாராட்டுக் கூட்டமா ? எவருடைய பேச்சுக்கும், கோபிகிருஷ்ணன் பாராட்டப்பட்டபோதுகூடவும் கை தட்டல்கள் இல்லை.இதைக் குறிப்பிட்டே கைதட்டலாம் பரவாயில்லை என்றார் ஞானக்கூத்தன். ஆனாலும் கூட்டத்தில் ஓர் அனுதாப அமைதியே மேலோங்கிக் காணப்பட்டது. ஒன்று மட்டும் சந்தேகமின்றித் தெளிவாகியது-நலிவுற்ற எழுத்தாளர்களைப் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து காக்க சமூகம் தீர்மானித்துவிட்டது என்பதே அது.

இனி தமிழ் எழுத்தாளர்கள் குடும்பக் கவலைகளின்றி நிம்மதியாக படைப்புத் தொழிலில் மும்முரமாக ஈடுபடலாம், சாதனைகள் புரியலாம், இறுதியில் நிம்மதியாக மறையலாம்..மரியாதையையும் மதிப்பீடுகளையும் தங்கள் வாழ் நாளிலேயே பெற்று இன்புறலாம்!.

———————பாரதிராமன்.—————–

bharathiraman@vsnl.com

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.