மந்திரவாதி

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

காஞ்சனா தாமோதரன்


‘……….சந்தை மதிப்புள்ள சரக்குகளுடன் ஒரு லாரி ஞாயிறு இரவன்று கடத்தப்பட்டது. மறுநாள் காலையில் காலி லாரி கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் துப்புத் துலக்கி வருகின்றனர். கள்ளச் சந்தையில் சரக்கின் மதிப்பு பன்மடங்காய் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருட்டுப் பொருள்களை வாங்குபவர்கள் கடுமையான தண்டனையைச் சந்திக்க நேரிடுமென்று காவல்துறையினர் மக்களை எச்சரித்துள்ளனர்…… ‘

வீடு திரும்பும் வழியில் அப்போதுதான் ரேடியோவை இயக்கியிருந்தேன். செய்தி அறிக்கை தொடர்ந்தது. திருட்டுப் பொருள் என்னவென்று புரிந்ததும், இளவேனில் காற்றுக்காகச் சன்னல் கண்ணாடி இறக்கியிருந்ததை மறந்து, வாய்விட்டுச் சிரித்தேன்.

திருடு போனவை புத்தகங்கள்! ஜூன் 21-ஆம் தேதி உலகளாவிய வெளியீட்டுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கையில், ‘ஹேரி பாட்டர் ‘ தொடரின் ஐந்தாம் புத்தகங்களில் சுமார் 7800 பிரதிகள் பிரிட்டனில் திருடப்பட்டிருக்கின்றன. செய்தியின் பரபரப்பில் காரணம் இருக்கிறது. கறாரான கண்காணிப்புடன் தயாரான புத்தகமாம் இது. வழக்கமாக விமரிசகர்களுக்குக் கொடுக்கப்படும் முன்பிரதிகள் கூடக் கிடையாது. வெளியீடு வரை கதை வெளியே தெரியக்கூடாதென்று இறுக மூடி வைத்திருக்கிறார்கள். குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரிடமும் புத்தகம் பற்றிய பலத்த எதிர்பார்ப்பு. முதல் பதிப்பில், அமெரிக்காவுக்கு மட்டுமாக 8.5 மில்லியன் (85 இலட்சம்) பிரதிகள் அச்சாகியுள்ளன. (செனட்டர் ஹில்லரி க்ளிண்டனின் புத்தகம் ஒரு மில்லியன் பிரதிகள்தான்!)

ஹேரி பாட்டர் போன்ற புத்தகங்களின் வெற்றி ‘மார்க்கெட்டிங் ஹைப் ‘பினால் மட்டும் வருவதல்ல என்று உறுதியாகச் சொல்கிறார் எழுத்தாளர்-கவிஞராகிய எங்கள் மகள். சரி, இதில் அப்படி என்னதான் இருக்கிறது பார்ப்போமே என்று வாசிக்கத் துவங்கினேன். நான்கு ஹேரி பாட்டர் புத்தகங்களையும் ஆர்வம் குறையாமல் வாசிக்க முடிந்தது. ஜே.கே.ரெளலிங் என்கிற பிரிட்டிஷ் கதாசிரியையால் 200 தேசங்களின் 55 மொழிகளின் கலாச்சாரங்களின் எல்லைகளைக் கடந்து குழந்தைகளின் மனதையும் கற்பனையையும் தொட முடிந்திருக்கிறது.

வழக்கம் போல் அமெரிக்க ஊடகங்கள், குழந்தை உளவியல் நிபுணர்கள், பேராசிரியர்கள், மதநிறுவனத்தார்கள், பெற்றோர்கள் எல்லாருமாய்ச் சேர்ந்து அமெரிக்கச் சமூகத்தில் ‘ஹேரி பாட்டர் ‘ பாதிப்பு பற்றி அலசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புத்தகம் குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்திருக்கிறது. குழந்தைகளின் மொழிவளத்தைப் பெருக்கியிருக்கிறது. தொலைக்காட்சியால் ‘கவன வெளி ‘ சுருங்கி அறிவு மழுங்கிப் போனதாய்ச் சொல்லப்படும் இந்தத் தலைமுறை, முறையே 309, 341, 435, 734 பக்கங்கள் உள்ள புத்தகங்களைப் பொறுமையாக வாசித்திருக்கிறது; மறுபடியும் மறுபடியும் …மறுபடியும்… வாசித்திருக்கிறது. இன்னும் வாசிக்கத் தெரியாத சிறு குழந்தைகளுக்கு, ஒவ்வோர் இரவும் சிற்சில பக்கங்களாய்ப் பெற்றோர் வாசித்துக் காட்டியிருக்கிறார்கள். (குழந்தை தூங்குவதற்கு முன், அம்மாவோ அப்பாவோ அதன் படுக்கையருகே உட்கார்ந்து ஏதாவது புத்தகம் வாசித்துக் காட்டுவதென்பது பல குடும்பங்களிலும் வழக்கமானது). தொலைக்காட்சி, ‘விடியோ கேம் ‘, திரைப்படம் மற்றும் சட்டத்துக்கு எதிரான சில கேளிக்கைகள் என்று பல்வேறு ஈர்ப்புகளுக்கு மத்தியில், ஒரு புத்தகத்தினால் குழந்தைகளைத் தன்னுள் இழுத்துக் கொள்ள முடிகிறது. இதுதான் மாயம். ஹேரி பாட்டர் கதைகளின் மந்திரமாயத்தை விடப் பெரிய மாயம்.

ஹேரி பாட்டர் கதை ஒரு மந்திரவாத-சாகசக் கதையாய்ப் புனையப்பட்டது. கதையின் நாயகன் அனாதை. தீய மந்திரவாதி வோல்டிமார்ட் அவன் அப்பா அம்மாவைக் கொல்கிறான். ஹேரியையும் கொல்லத் துணிகிறான். முடியவில்லை. ஹேரி இளம் மந்திரவாதிகளுக்கான ஹாக்வார்ட்ஸ் பள்ளிக்கூடத்தில் சேருகிறான். ரான், ஹெர்மியோன் என்ற நண்பர்களின் துணையுடன் பல சாகசங்கள் செய்கிறான். இழந்த பெற்றோரை நினைத்து வேதனைப்படுகிறான். தீயவற்றை எதிர்த்துப் போராடுகிறான். எல்லாவற்றினூடேயும் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொள்கிறான்.

ஹேரி பாட்டரின் அடிப்படைக் கதை உண்மையில் புதியது அல்ல. (தற்கால உலகப் புனைவிலக்கியத்தின் மிகப்பெரும்பகுதி புதிதே அல்ல என்று மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துடன் விவாதித்ததை இங்கு நினைவுகூர்கிறேன்; விவாதம் இன்னும் முடியவில்லை.) மந்திரவாதிகளும் வினோத மிருகங்களும் வேர்தேடும் அனாதைக் குழந்தைகளும் இளம்பதின்ம வயதுப் போராட்டங்களும் நல்லதுக்கும் தீயதுக்கும் இடையேயான இழுபறிகளும் புனைவுக்குப் புதியவை அல்ல. கதாசிரியையின் யதார்த்தமான பாத்திரங்களே அவரது புனைவுக்கு உயிரூட்டுகின்றன என்பது என் வாசகக் கருத்து. ஹேரியும், ரானும், ஹெர்மியோனும் சாதாரணப் பின்னணியிலிருந்து வருபவர்கள். இதமான நட்பில் ஒருவருக்கொருவர் துணையாய் நிற்பவர்கள். தத்தம் தனிப்பட்ட திறமையால் அறிவால் தைரியத்தால் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்கள். மிக மிக முக்கியமாக, குழந்தை வாசகர்கள் தம்முடன் சேர்ந்து நடக்கவும் பறக்கவும் அனுமதிக்கும் நட்பானவர்கள்.

ஹெர்மியோன் பாத்திரம் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நண்பர் குழுவின் ஒரே பெண்பாத்திரம் அது. தற்காலத்தியப் பெண்கள் எழுத்து, செய்தி, பெரிய திரை/சின்னத்திரை, விளம்பரம் முதலியவற்றில் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது கடந்த முப்பத்திச்சொச்ச ஆண்டுகளாய்ப் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம். ஒற்றைப்படையான பாத்திரவார்ப்புகளே அதிகம். உண்மையான சமூகங்களின் ஆண்களும் பெண்களும் முன்னேறிய அளவுக்கு, அவர்களைப் பிரதிபலிக்கும் எழுத்தும் திரையும் முன்னேறியிருக்கின்றனவா என்பது கேள்வியே. ஹெர்மியோன் ஒற்றைவார்ப்புகளை உடைத்தெழும் ஒரு முழுமையான பாத்திரப்படைப்பு. ஹேரி, ரான் போலவே அவளுக்கென்று சில திறமைகள் இருக்கின்றன. உணர்வுகள் இருக்கின்றன. குறைகள் இருக்கின்றன. நல்ல சிநேகிதியாய் இருக்கிறாள். ஹேரி, ரானை விட (உணர்வளவில்) அதிக பலமுள்ளவளாக இருக்க வேண்டிய சில நிர்ப்பந்தங்கள் ஏற்படுகின்றன; யார் யாரை விட்டுத் தூர விலக வேண்டுமென்ற விவேகம் அவளுக்கு அந்த இளம் வயதிலேயே வாய்க்கிறது.

பெரியவர்கள் பாத்திரங்கள் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். பொதுவாகக் குழந்தைகள் புத்தகத்தில் வரும் பெரியவர்கள் குழந்தைகளின் கேலிப்பொருளாக இருப்பார்கள். அல்லது வெகுவாகப் பயமுறுத்தும் கொடியவர்களாக இருப்பார்கள். அல்லது பக்கம் பக்கமாய் அறிவுரை வழங்குபவர்களாய் இருப்பார்கள். ரெளலிங்கின் புத்தகங்களில் கதைக்குத் தேவையான அளவில் தீயவர்கள் இருக்கிறார்கள். பிற பெரியவர்கள் அனைவரும் வாழ்க்கையில் சாதாரணமாய்ச் சந்திக்கும் ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் போலிருக்கிறார்கள். குழந்தைகளின் அறிவை வளர்ப்பதில் அவர்களுக்கு அக்கறை இருக்கிறது. பேச்சில் விவேகமும் நிதானமும் இருக்கின்றன. அவர்களால் புன்முறுவலோடு குழந்தைகளை அணுக முடிகிறது. குழந்தைகளின் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற முடிகிறது. பேச்சினாலன்றித் தம் நடத்தை மூலமே குழந்தைகளுக்கு வழிகாட்டியாய் இருப்பவர்கள் இந்தப் பெரியவர்கள்.

கதாசிரியை ரெளலிங் தம் குறை-நிறையுள்ள பாத்திரங்களை அன்புடன் வளர்த்துச் செல்லும் விதம் இக்காலத்தியச் சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் — பெரியவர்களுக்கும் கூட — பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

சில அமெரிக்கக் கிறித்தவக் குழுக்கள் ஹேரி பாட்டர் புத்தகங்கள் தடை செய்யப்பட வேண்டியவை என்று குரலெழுப்பி வந்திருக்கின்றன. தமது மதம் வெறுத்து ஒதுக்கும் மந்திரவாதத்தைப் பாட்டர் புத்தகங்கள் பரப்புவதாய்ப் புத்தகத்தின் மீது குற்றம் சாட்டுகிறார்கள். தேவையற்றதாய்க் கருதும் புத்தகங்களை ‘புனிதப் பெருந்தீ ‘யில் எரித்து, ‘ஹிட்லர் 2001 ‘ என்ற பட்டப்பெயரைச் சம்பாதித்துக் கொண்டார் ஒரு கிறித்தவ மதகுரு; இவர் எரித்த புத்தகங்களில் ஹேரி பாட்டரும் ஒன்று. (அமெரிக்காவில் புத்தகத்தடை பற்றியோர் உதாரணக் குறிப்பு: ஜே.டி.சாலிஞ்சரின் ‘The Catcher in the Rye ‘ புத்தகம் இன்றும் கூடச் சில உயர்நிலைப்பள்ளிக் கல்வித் திட்டங்களால் அனுமதிக்கப் படுவதில்லை. 1950-களின் நியூயார்க்கில், பள்ளியிலிருந்து வெளியேற்றப்படும் இளம்பதின்ம வயதுப் பையன் ஒருவன் தன்னைப் பற்றியும் தனக்கும் உலகிற்குமிடையேயான தொடர்பு பற்றியும் சிந்திப்பது பற்றியான புத்தகம் இது. தனக்குள் கொந்தளிக்கும் வெறுமை போலியா அல்லது அந்த வெறுமையே இல்லாதது போல் நடிக்கும் சமூகம் போலியா என்ற கேள்வி அவனை வாட்டுகிறது. சமூகமே போலி என்றுணர்ந்து அவன் மனநிலை குழம்பிப் போவதுடன் கதை முடிகிறது. சிறிய அளவுப் புத்தகம். நான் வாசித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று. ஒன்பதாம் வகுப்பில் இப்புத்தகத்தை இலக்கியப்பாடமாய்ப் படித்த எங்கள் மகளும் வகுப்பு நண்பர்களும் என்னிடம் பகிர்ந்து கொண்ட கருத்து: ‘சில கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன. மற்றபடி, கதை உண்மையுள்ளதாய் இருக்கிறது. ‘)

இன்னும் சிலர், பாட்டர் கதைகள் விவிலியக் கதைகளை நினைவூட்டுவதாய்ச் சொல்கிறார்கள். பெரும்பான்மையினரோ இதற்கும் மதத்துக்கும் சம்பந்தமே இல்லை, எதிலும் ஏன் மதத்தை நுழைக்கிறீர்கள், ஆரோக்கியமான வாசிப்புச் சுகம் இது, எங்கள் குழந்தைகளை அனுபவிக்க விடுங்களேன் என்கிறார்கள். எப்போதும் போல், கருத்துக்கள் பல.

ஹேரி பாட்டரின் சில பக்கங்களுக்கு விவிலியக் கதைச் சாயலைக் கற்பிப்பது சுலபம் (சர்ப்பத்துடன் போராடுதல் முதலியன). எழுத்தாளரின் பின்னணியினால் சில குறிப்பிட்ட பிம்பங்கள் எழுத்தில் அழுத்தமாய்ப் பதிவது இயல்பு. அதே சமயத்தில், ‘டிராகன் ‘, சர்ப்பம் உள்படச் சில விலங்குகள் எப்போதுமே அதிகாரமும் சக்தியும் பொருந்தியனவாய், நம்மை நடுங்கச் செய்வனவாய்க் கதைகளில் வருபவை; அவற்றினாலேயே ஒரு படைப்புக்கு — முழுப் படைப்புக்கும் — ஒரு குறிப்பிட்ட மதச்சாயலைக் கற்பிப்பது அவசியமா என்ற கேள்வியையும் கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. பரந்த பார்வையில், இப்புத்தகம் ஓர் ஒழுக்கவாதப் புத்தகமாகத் தோன்றுகிறது. தீயது-நல்லதுக்கிடையான இழுபறி பற்றிய ஒழுக்கவாதம். தற்கால ஆங்கில இலக்கியத்தில் செவ்வியல் புத்தகங்களாய்க் கருதப்படுபவை சிலவற்றுக்கும் இந்த இழுபறியே மையமாகிறது. ஹேரி பாட்டர் கதைப் பின்னணியில் ஒரு தீய மந்திரவாதி வோல்டிமார்ட் இருந்தாலும், ‘தீயது ‘ என்பது பல நுணுக்கமான வடிவங்களில் சூழல் முழுதும் விரவியிருக்கிறது. அவ்வகையில் லெளரிங்கின் ‘தீயது சித்தரித்தல் ‘ முதிர்ச்சியுள்ளது; வழக்கமான குழந்தை இலக்கியத்திலிருந்து வேறுபட்டது. வரும் புத்தகங்களில் இது எந்த வடிவம் எடுக்கிறது, இறுதியில் எப்படித் தீர்வு பெறுகிறது என்பது புரிந்த பின், ஆழமாக அலச முடியும்.

இலக்கியத்தின் ஒட்டுமொத்தப் பாதுகாவலராகத் தன்னை நியமித்துக் கொண்டுள்ள பல்கலைப் பேராசிரியரும் கூரிய விமரிசகருமான ஹரால்ட் ப்ளூம் முதல் பாட்டர் புத்தகத்தைப் படித்திருக்கிறார். பிற புத்தகங்களைப் படிக்க மறுத்து விட்டார். சாஸரிலிருந்து கஃப்கா, பெக்கெட் வரை முக்கிய மேற்கத்தியப் படைப்பாளிகளை ஆழமாய் ஆய்வு செய்தவர் இவர். தற்காலத்தில் வாசிப்பு என்ற சுவையான அனுபவமே கடுமையான அரசியலாகிப் போனதாய் வருந்துபவர். மார்க்ஸீயவாதிகள், வலதுசாரிகள், பெண்ணியவாதிகள், இனவாதிகள், சரித்திர மறுவாசிப்புவாதிகள் என்று பல்வகைக் குழுவாதிகளும் இலக்கியத்தினுள் நுழைந்து, சித்தாந்தத்தின் பெயரால் அழகியலைக் கொன்று விட்டார்கள் என்பவர். ஒரு தலைமுறைக்குப் பின் ஹேரி பாட்டர் புத்தகங்கள் அனைத்தும் குப்பைத்தொட்டிகளில் வீழும் என்பது இவரது கணிப்பு. ஒரு முழுத் தலைமுறையும் ஒரு கணமேனும் வாசிப்பின் இன்பத்தை அனுபவித்ததற்கு ஜே.கே.ரெளலிங்கிற்குக் கடமைப்பட்டிருக்கும் என்ற மறுபக்கத்தைச் சொல்ல இவர் மறந்து போனார் போலும்.

ஹரால்ட் ப்ளூம் போன்றவர்கள் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத குழந்தைகளும் பெற்றோர்களும் ஐந்தாவது ஹேரி பாட்டர் புத்தக வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஹேரி பாட்டர் முதலிரண்டு புத்தகங்களும் திரைப்பட வடிவத்திலும் வெற்றி பெற்றன. புத்தகங்களை வாசித்திராத தம் சோம்பேறிப் பெற்றோருக்கு மின்பிம்பக் கலாச்சாரத்துக் குழந்தைகள் சொன்ன அறிவுரை: ‘படம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் புத்தகத்திலுள்ள பல நுட்பங்கள் படத்தில் வர முடியாது. வாசியுங்கள். ‘

புத்தகங்கள் பிரதிகளை உள்ளடக்கியவை என்கிறார்கள். பல புத்தகங்கள் வாழ்வின் இருளையும் ஒளியையும் நேர்த்தியுடன் படியெடுக்கும் பிரதிகளாகவே நின்று விடுகின்றன. மிகவும் சில புத்தகங்களே அறிவுத் துடிப்புள்ளவையாக, இதமான மருத்துவர்களாக, ஆப்த நண்பர்களாக நம்முடன் நடக்க விரும்புகின்றன. இத்தகைய புத்தகங்களும், வாசிப்பு நேரங்களும், மனதில் புரியும் சாகசங்களும், போற்றும் கைகளில் பொதிந்துள்ள கனவுகளுமாய்த்தான் நாம் வளருகிறோம். பின்னாளில் இந்தக் கற்பனையும் கனவும் அன்றாட யதார்த்தத்தினுள் ஓடி நீர்க்கின்றன. கற்பனையும் கனவு காணும் திறனும் தேங்கிய சமூகங்களும் அவற்றின் வெளிப்பாடுகளும் வறண்டிருப்பது இயல்பு. காய்ந்து வெடித்துப் பிளவுண்ட பரப்பின் நடுவே, ஜே.கே.ரெளலிங்கின் மந்திரக்கோல் நம்முள் உறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்புகிறது. கற்பனையையும் கனவையும் பசுமையாய்த் தெளித்துச் செல்லுகிறது.

தகவல்களுக்கு நன்றி: ‘நேஷனல் பப்ளிக் ரேடியோ ‘, ‘டைம் ‘, ‘நியூயார்க் டைம்ஸ் ‘; ‘கார்டியன் ‘ (லண்டன்)

(2003 குறிப்புகள்.)

Kanchanat@aol.com

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்