அய்யா

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

ஞாநி


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தூர்தர்ஷனுக்காக விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் பங்கு, அதனூடாக பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வு எப்படி மெல்ல வளர்ந்தது என்பது பற்றியும் ஒரு நான்கு வாரத் தொடர் தயாரித்தேன். அதற்காகத் தகவல்கள் திரட்டியதும், நிறைய நூல்களை வாசித்ததும் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது.

அதற்கு நிகரான அனுபவம் இப்போது பெரியார் ஈ.வே.ராமசாமி என்ற ஒரு மாமனிதர் பற்றிய தொடர் உருவாக்கும் பணியிலும் கிட்டியிருக்கிறது. முன்னரே பெரியார் பற்றியும் அவரது எழுத்துகளையும் கணிசமாகப் படித்திருந்தாலும் இப்போது சுமார் மூன்று மாத அவகாசத்துக்குள் எல்லாவற்றையும் தொகுத்து வைத்துப் படிக்கும்போது பெரியார் பற்றிய பிரமிப்பு அதிகரிக்கிறது.

ஒரே சமயத்தில் அவருக்குள் ஒரு குழந்தை, சிந்தனையாளன், சமூக மாற்றத்துக்காக துடிக்கிற போராளி, சமகாலத்துக்குப் புரியாத சிந்தனைப் போக்கை கேலி பேசக் கூடும் என்பது பற்றிய கவலை இல்லாத கலைஞன், அதே சமயம் தன்னோடு சமூகத்தை இழுத்து வந்தாக வேண்டுமே என்ற கவலையுள்ள தொண்டன் எல்லாரும் கலந்திருக்கிறார்கள்.

நான் பல சந்தர்ப்பங்களில் மேடைகளில் சொன்னது போல பாரதியும் பெரியாரும் எனக்கு (அசல் ரத்த உறவில் கிட்டாத ) பெரியப்பா சித்தப்பா போலத் தோன்றுகிறார்கள். பாரதி தனி நபர் செயல்பாட்டு தளத்திலேயே குறைந்த காலம் வாழ்ந்து முடிந்தான். பெரியார் கூட்டு முயற்சிகளை முன்னெடுத்து தன் நெடிய வாழ்நாளில் பல வெற்றிகளை சாதித்திருக்கிறார். இன்று அவரை ஒரு அசல் சிந்தனையாளரா என்று ஐயம் எழுப்புவதும் தலித் விரோதி என்று நிறுவ முயற்சிப்பதும் நியாயமில்லை என்ற என் கருத்து மேலும் உறுதிப்பட்டிருக்கிறது. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை எனினும் ஒருவர் வாழ்ந்த காலச் சூழலில் வைத்தே விமர்சிக்கப்பட வேண்டும்.

மூன்று மாத கால வாசிப்பின்போது தமிழ்ச் சூழலின் பெருமிதங்களும் பற்றாக் குறைகளும் மாறி மாறி மனதில் பளிச்சிட்டன. எஸ்.வி.ராஜதுரை, வ.கீதாவின் ஆய்வுகள் வரலாற்றுணர்வும் சமூக உணர்வும் உள்ள எவரையும் உற்சாகப்படுத்தும் அரிய பங்களிப்புகள். ( இதில் விடியல் பதிப்பகத்தின் பங்குக்கு பிரத்யேக நன்றி குறிக்கப்பட வேண்டும்.) இன்னொரு பக்கம் பெரியாருடன் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்த பலரை தமிழ்ச் சமூகம் சரியாக நினைவு கூரவில்லை, நினைவு கூர உந்துமளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் விவரமாகப் பதிவு செய்யப்படவும் இல்லை என்பது பெரும் வருத்தத்துக்குரியது. பெரியாரின் ஆரம்ப கால சகாக்கள் பொன்னம்பலனார், எஸ்.ராமநாதன், வல்லத்தரசு போன்றோர் பற்றியெல்லாம் தனி நூல்களே எழுதப்பட வேண்டும். இன்றைக்கும் படிக்கப் படிக்க அறிவையும் உணர்ச்சியையும் தூண்டும் எழுத்துக்குரிய குத்தூசி குருசாமி பெயரில் சென்னையில் ஒரு சாலையேனும் உண்டா என்று தெரியவில்லை. நாட்டுடமையாக்க வேண்டிய படைப்பாளிகளில் அவரும் ஒருவர்.

பெரியார் பற்றி நமது பள்ளிக்கூட புத்தகங்களில் சரியான அறிமுகம், உயர் கல்வி அளவில் விரிவான பாடங்கள் இன்னமும் இல்லை. மேம்போக்கான சிறு கட்டுரைகளே போதும் என்று பெரியாரைப் பயன்படுத்தி அரசியல் செல்வாக்கு பெற்ற கழகங்கள் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

கழகங்களின் சொத்துக்களான சன் டிவியோ ஜெயா டிவியோ வெகு எளிதாகப் பெரியார் பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடரை எப்போதோ தயாரித்திருக்க முடியும். பணமோ, வசதியோ அவர்களுக்கு தடை அல்ல.ஆனால் இத்தகைய முயற்சிகளை செய்வதற்கான வாய்ப்பு பொதுத் துறையில் இருக்கும் தூர்தர்ஷனில் மட்டும்தான் எப்போதும் சாத்தியமாகிறது என்பதே என் அனுபவம். பொதுத்துறையைக் காப்பாற்ற வேண்டிய காரணங்களில் இதுவும் ஒன்று.

பெரியார் பற்றி ஒரு படம் தயாரிப்பது என் கடந்த ஐந்தாண்டு காலக் கனவு. ஆனால் அதற்கான பண வசதியைப் பெறுவது எளிதல்ல. ஆட்டன்பரோவின் காந்தி போல பல கோடி ரூபாய் வசதியில் தயாரிக்கப்பட வேண்டிய படம் அது. திரைப்படத்தை விடக் குறைவான விளம்பரமும் கவர்ச்சியுமிருந்தாலும், அதிகம் பேரிடம் சென்று சேரக்கூடிய தொலைக்காட்சி மீடியத்தில் வேலை செய்வதையே நான் விரும்புகிறேன். ஆனால் இதில் மிகக் குறைவான பட்ஜெட்டில்தான் ஒரு தயாரிப்பைச் செய்யமுடியும். அந்த வரையறைக்குள் வேலை செய்ய என் நாடக உலக அனுபவங்கள் எப்போதும் துணை செய்கின்றன.

நாடகத்தில் பெர்டோல்ட் பிரெக்ட் கையாண்ட அந்நியப்படுத்தும் உத்திகள் கலந்த ஒரு டாக்கு-டிராமா வடிவத்தில் ‘வேர்கள் ‘ தொடரை உருவாக்கியது போலவே ‘அய்யா ‘விலும் பின்பற்றியிருக்கிறேன். ‘வேர்கள் ‘ தொடரில் முக்கிய பாத்திரமான குறும்பட இயக்குநர் ஆனந்தி விடுதலைப் போரில் பெண்கள் பற்றி ஒரு படம் தயாரிக்கிறார். குடும்பச் சிக்கலினால் தற்கொலை செய்ய முற்பட்ட அவருடைய தோழி ஒரு மன ஆறுதலுக்காக ஆனந்தியின் படத் தயாரிப்பைக் காண வருகிறார். படத்தில் காட்டப்படும் விடுதலைப்போராட்டப் பெண்களின் வாழ்க்கை ஆனந்தியின் தோழியின் மனதை உருக்குகிறது. தானும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை சந்திக்க வேண்டும் என்று அவர் முடிவு எடுப்பதில் தொடர் முடிகிறது.

இதே உத்தியைப் பின்பற்றி, ‘அய்யா ‘ ஸ்கிரிப்ட்டில் அதே குறும்பட இயக்குநர் பாத்திரமான ஆனந்தி தற்போது பெரியார் பற்றிய படத்தை உருவாக்குவதாகக் காட்டப்படுகிறது. அவருக்கு உதவி செய்யும் பெரியார் தொண்டர் குருசாமியால் வட மாநிலத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டு வரப்பட்ட மாயா என்ற பெண் படத் தயாரிப்பை ஒவ்வொரு கட்டத்திலும் உடனிருந்து பார்க்கிறாள். தன் தந்தையின் நிலபிரபுத்துவ ஜாதி வெறியால் பாதிக்கப்பட்ட மாயாவுக்குப் பெரியாரின் நீண்ட போராட்ட வாழ்க்கை, அவருடைய பெண்ணியப் பார்வைகள் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. பெரியாரின் புரட்சிகரமான கொள்கைகளை தன் ஊரில் பரப்புவதே இனி தன் பணி என்று அவள் தீர்மானித்து ஊர் திரும்புவதுடன் தொடர் முடிகிறது.

இனி மாதிரிக்கு சில காட்சிகள்

காட்சி 4

தன் விடுதி அறையில் உறங்கும் ஆனந்தியின் முகத்தின் க்ளோசப்பிலிருந்து டிசால்வாகத்தொடங்குகிறது. எந்த இடம் என்று தெரியாத பின்னணி. பெரியார் ஈ.வே.ராமசாமியும் ஆனந்தியும். இருவரும் நீண்ட பாதையொன்றில் நடந்தபடி பேசலாம். பெரியார் ஆனந்தியை உரிமையுடன் அதட்டலாக அழைக்கிறார்.

பெரியார்: என்னைப் பத்தி படம் எடுக்கப் போறேன்னு சொல்லிட்டு நிம்மதியா தூங்கிகிட்டிருக்கே நீ ? என்ன எடுக்கப் போறே ? முதல்ல அதை எனக்கு சொல்லும்மா..

ஆனந்தி: முதல்ல உங்களைப் பத்தி படம் எடுக்கலாமான்னு சொல்லுங்க. நீங்கதான் சினிமா கொட்டகையை எல்லாம் இழுத்து மூடணும்னு சொல்லியிருக்கீங்களே. கலை இலக்கியம் எல்லாம் ஜனங்க மூளையை மழுங்கடிக்குது.எதுவும்தேவையில்லைன்னு சொல்லிட்டாங்களாமே.

பெரியார்: ஆமா. பழைய புராண குப்பையை இல்ல கிளறிக் கிளறி நாடகமாப் போடறாங்க. புருஷன் பெண்டாட்டியை என்ன செஞ்சாலும் சரின்னு சொல்றது, கடனுக்காக மனைவியை அடகு வைக்கறது. தாசி வீட்டுக்கு கூடையில என்னைத் தூக்கிட்டுப் போன்னு பெண்டாட்டி கிட்டயே புருஷன் சொல்றது. இந்த மாதிரி பெண்ணடிமைக் கதையையே திரும்பத் திரும்பப் புலவன்களெல்லாம் பாட்டா எழுதறது. அதையே படம் புடிக்கறதுன்னா, அதுல ஜனங்களுக்கு வாழ்க்கைக்கு உபயோகமா என்ன இருக்குது , வெங்காயம்…..நல்ல கருத்தோட நாடகம் போட்டா நான் வேணாம்னு சொல்லியிருக்கேனா ? தம்பி அண்ணாத்துரை நாடகத்துல கணேசன் நடிச்சப்ப நான் பாராட்டி, இனிமே உன் பேரே சிவாஜிதான்னு சொன்னேனே… நம்ம இயக்கத்துலயே நடிகவேள் ராதா நாடகம் போடலியா ? நல்ல விஷயமா இருக்கணும். இல்லாட்டி ஜனங்களோட காசும் விரயம். நேரமும் விரயம். மூளையும் விரயம். புஸ்தகம், நாடகம், சினிமா எதுவானாலும் சிந்திக்கற மாதிரி இருக்கணும்.

ஆனந்தி: நானும் அதைத்தான் செய்ய முயற்சி பண்றேங்கய்யா. ரொம்ப சந்தோஷம். உங்க வாழ்க்கை முழுவதையும் நான் சொல்லணும்னு நினைக்கறேன்.

பெரியார்: 40 வயசுக்கு முன்னாடியா ? அதுக்கு அப்புறமா ?

ஆனந்தி: அதென்ன அய்யா 40 வயசு கணக்கு ?

பெரியார் : 40 வயசு வரைக்கும் நான் மைனரா, காலியா, சீமானாத் திரிஞ்சேன். ஊர்ல பெரிய மனுஷனா இருந்தேன். அப்பவும் ஜாதி கூடாது, முட்டாள்தனம் கூடாதுன்னுதான் இருந்தேன். ராஜகோபாலாச்சாரியும் வரதராஜுலு நாயுடுவும்தான் என்னை காங்கிரசுக்கு இழுத்துகிட்டு வந்தாங்க. காந்தியார் மூலமா ஜாதி, மதத்தையெல்லாம் ஒழிச்சுட முடியும்ன்னு நினைச்சேன். அது நடக்கல. கடைசியில அவரையேதான் மதம் பலி வாங்கிடுச்சே. காங்கிரசை விட்டு நான் வந்தப்பறம் சுயமரியாதை இயக்கம் தொடங்கினோம்.

ஆனந்தி: சீர்திருத்தக் கல்யாணம்லாம் செய்ய ஆரம்பிச்சீங்க. ஆயிரக் கணக்கான திருமணங்கள் நடத்தி வெச்சிருக்கீங்க போலயிருக்கு. குறிப்பா கலப்புக் கல்யாணங்கள்.

பெரியார்: வெங்காயம். கலப்புக் கல்யாணம்னு சொல்லுறதே தப்பு. மனுஷனும் மிருகமுமா கல்யாணம் பண்ணிக்கறாங்க, கலப்புக் கல்யாணம்னு சொல்றதுக்கு ? அய்யர் வெக்காம, அம்மி மிதிக்காம, அருந்ததி பாக்காம, மூச்சு முட்டறா மாதிரி புகை போடாம,பகல்லயே விளக்கு ஏத்தி வெச்சுகிட்டு மேடையில பானை சட்டியெல்லாம் வெச்சு, சாயந்தரம் தாசியைக் கூப்பிட்டு டான்ஸ் ஆட சொல்லிகிட்டு இருக்கற கல்யாணத்தைலாம் ஒழிக்கணும்னு சொன்னோம். நெறையவே ஒழிஞ்சுது.

ஆனந்தி: பெரிய சீர்திருத்தம் இல்லியா அது ?

பெரியார்: என்ன சீர்திருத்தம் ? அந்த வருஷத்து மாடல் அது. கார் மாடல் மாதிரி அடுத்த வருஷம் இன்னும் மாறணும். மாறும். முதல்ல, அய்யர் வைக்காதே;புரியாத மொழியில உன்னை நீயே கேவலப்படுத்தற மாதிரி மந்திரம் சொல்லாதே;வீண் செலவு பண்னாதேன்னு சொன்னோம். நாங்க பண்ண கல்யாணம்லாம் செல்லாதுன்னு கோர்ட்டுல சொல்லிட்டானே. சீர்திருத்தக் கல்யாணம் பண்ணவங்கள்லாம் பேரன் பேத்தி எடுத்தப்பறம் தானே அண்ணாத்துரை வந்து அந்தக் கல்யாணம் செல்லும்னு சட்டம் பண்ணாரு. ஆனா இன்னிக்கும் தாலி கட்டறான். வட மொழியில சொன்னதை தமிழ்ல சொல்றான். அதுவும் மாறணும். தாலியெல்லாம் தேவையில்லை. ஆணும் பெண்ணும் விரும்பினா சேர்ந்து வாழட்டும். நாங்க கல்யாணம் பண்ணிட்டோம்னு மத்தவங்களுக்கு தகவல் சொன்னா போதும். அவங்களுக்குள்ள அன்பு இல்லாம போச்சுன்னா பிரிஞ்சு போற உரிமை வேணும்னு சொல்றேன். கடைசியில ஆணும் பெண்ணும் முழுக்க முழுக்க சமமான மனுஷங்களா இருக்கறதுதான் முக்கியம்.

ஆனந்தி: இதெல்லாம் நீங்க வெளி நாட்டுல சுத்திப் பாத்தப்பறம் தோணிச்சா ? சுயமரியாதை இயக்கம் ஆரம்பிச்சப்புறம் ஏறத்தாழ ஒரு வருஷம் வெளி நாடுகள்ல சுற்றுப்பயனம் பண்ணீங்க இல்ல ?

பெரியார்: நம்ம ரொம்ப நாளா இங்கே இதெல்லாம் சொல்லிகிட்டிருக்கோம். வெளி நாட்டுலயும் இப்படிப்பட்டவங்க இருக்காங்கன்னு கேள்விப்பட்டோம். ஆங்க அங்கே எப்படி வேலை செய்யறாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு போய்ப் பாத்தோம்.

ஆனந்தி: இங்கிலாந்து ஜெர்மனி, சோவியத் யூனியன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல்,துருக்கி, எகிப்து, க்ரீஸ் எல்லா நாடுகளுக்கும் போய்ட்டு வந்திருக்கீங்க. சோவியத் யூனியனைப் பாத்தப்பிறகு கம்யூனிசத்தை ஏத்துகிட்டாங்க இல்லியா ?

பெரியார் : ரஷ்யா போறதுக்கு முன்னாலயே நான் சமதர்மத்தை ஆதரிச்சிருக்கேன். ஒவ்வொருத்தனும் தன் வீடு, தன் குடும்பம், தன் குழந்தைங்கற உணர்ச்சில சொத்து சேர்க்க ஆரம்பிச்சுடறான். குழந்தைங்களையே அரசாங்கம் வளக்கணும்னு சொன்னேன். கல்யாணம், குடும்பம்லாம் இல்லைன்னா, தனியா சொத்து சேர்க்கற ஆசையே வராது. ரஷ்யாலருந்து வந்தப்பறம் சமதர்மத்தை தீவிரமா பிரசாரம் பண்ணோம். ஒரு சமயம் நம்ம இயக்கத்தையே பிரிட்டிஷ்காரன் கம்யூனிஸ்ட் கட்சின்னு தடை பண்ணிடுவாங்கற நெலைமையே இருந்துது. சிங்காரவேலரு, ஜீவானந்தம் எல்லாரும் என்கூட அப்ப வேலை செஞ்சுகிட்டிருந்தாங்க.

ஆனந்தி : அப்பறம் அவங்கள்லாம் உங்களை விட்டுப் பிரிஞ்சுப் போய்ட்டாங்க இல்லியா ?

பெரியார் : ஆமா. என் கூட நெறைய்ய பேரு ஒரு சமயம் ஒண்ணா வருவாங்க. அப்பறம் பிரிஞ்சுப் போய்டுவாங்க. ஆச்சாரியார் என்னை காங்கிரசுக்கு அழைச்சிக்கிட்டு வந்தாரு. அப்பறம் சேரன்மாதேவியில் வ.வே.சு அய்யர் குருகுலத்துல பிராமணப் பிள்ளைங்களுக்கு மட்டும் தனியே உக்கார வெச்சு சாப்பாடு போடறதை நான் கண்டிச்சப்ப, அவர் தனியா போய்ட்டாரு. ராமநாதன் என் கூட ரஷ்யாவுக்குலாம் வந்தாரு. நான் சமதர்மக்கட்சி ரம்பிச்சதும் அவர் போய்ட்டாரு. வகுப்பு வாரியா இட ஒதுக்கீடு வேணும், தேவதாசி முறையை ஒழிக்கணும்னு நான் சொன்னதை யெல்லாம் ஆதரிச்சவங்க நீதிக் கட்சிக்காரங்க. நான் ஜெயில்ல இருந்தப்பவே என்னைக் கட்சித் தலைவராக்கினவங்க. சாமி இல்ல, கோவில் வேணாம், பூசை வேணாம்னு நான் நாத்திகம் பேசறது அவங்களுக்குப் பிடிக்காதுதான். பகுத்தறிவு, சுயமரியாதை, மேல்ஜாதி கீழ் ஜாதிங்கறதை ஒழிச்சுக் கட்டற வேலையில என் கூட திராவிடர் கழக தளபதியா இருந்தவரு அண்ணாத்துரை. தேர்தல்ல நிக்கக்கூடாது, பார்ப்பன – பனியா ஆதிக்கத்தை ஒழிக்காம ஆகஸ்ட் 15ந்தேதி பிரிட்டிஷ்காரன் இந்தியாவை விட்டுப் போகறது தப்புன்னு நான் சொன்னப்ப, அன்ணாத்துரை ஆளுங்க அழுதுகிட்டே என்ன விட்டுட்டுப் போய்ட்டாங்க. அம்மா. நான் ஒரு பிடிவாதக்காரன்.

னந்தி: எதுல பிடிவாதம் ?

பெரியார்: மனுஷனும் மனுஷனும் ஆணும் பொண்ணும் சமமானவங்களா இருக்கணும். பகுத்தறிவைப் பயன்படுத்தி சந்தோஷமா இருக்கணும். இதுக்கு தடையா இருக்கற ஜாதி, மதம், கடவுள், கல்யாணம்,எதுவா இருந்தாலும் ஒழியணும். இதுல நான் பிடிவாதமா இருக்கேன்.அவ்வளவுதான். இதை உன் படத்துல சொல்ல முடியுமான்னு பாரும்மா.

னந்தி: நிச்சயமா சொல்லிடலாம்.

பெரியார்: இதெல்லாம் பிரசாரம் செய்யறது அவ்வளவு சுளுவானது இல்ல. மேடையைக் கொளுத்தி யிருக்காங்க. மகாநாட்டுப் பந்தலை எரிச்சிருக்காங்க. தீவிரமா பிரசாரம் பண்ணவங்களை கொலை பண்ண முயற்சி பண்னியிருக்காங்க. இந்தக் கருத்தையெல்லாம் ஜனங்ககிட்ட போய்ச் சொல்ல லேசுல விட மாட்டாங்க. ஏதாவது முட்டுக்கட்டை போட்டுகிட்டேதான் இருப்பாங்க. பயப்படாம தைரியமா வேலை செய்யணும்.

ஆனந்தி: சரிங்கய்யா.

பெரியார்: அப்பறம் படம் எடுக்கறேன்னுட்டு வீண் செலவெல்லாம் செய்யக்கூடாது. ஒவ்வொரு காசையும் பாத்து சரியா செலவு செய்யணும். சிக்கனமா செய்யணும். எல்லாம் ஜனங்க காசு. தெரிஞ்சுதா ?

ஆனந்தி: சரிங்கய்யா

ஆனந்தி உரக்க ‘சரிங்கய்யா ‘என்று சொல்லியபடி தூக்கத்தில் புரள அவளுடைய கை அருகிலுள்ள மேசையில் இடித்து அதில் அவள் வைத்திருக்கும் சில்லறைகள் நிரம்பிய கிண்ணம் கீழே விழுந்து காசுகள் தரையில் உருண்டோடுகின்றன. ஆனந்தி விழித்துக் கொள்கிறாள்.

காட்சி 26

ஈ.வெ.ரா வீடு. அவரும் நாகம்மாளும்.

நாகம்மாள்: என்னாங்க. இப்பத்தான் பண்ணைபுரம் கூட்டத்துலருந்து வந்தீங்க. உடனே திரும்பவும் ஊருக்குப் போறேங்கறீங்க.

ராமசாமி: லேசா வயித்துவலி இருக்குது. மெட்ராஸ் போய் டாக்டரைப் பாக்கலாம்னுதான்.

நாகம்மாள்; ஏது ஆச்சரியமா உடம்பப் பத்தியெல்லாம் அக்கறை வந்துடுச்சு. மழைதான் பெய்யப்போவுது

ராமசாமி: (கிண்டலாக) அதெல்லாம் பெய்யாது. நீ தினமும் என்னைக் கும்பிட்டுக் கால்ல வுழுந்து எழுந்துருக்கற பத்தினியா இருந்தாத்தானே நீ சொன்னா மழை பெய்யும். ( பலமாக சிரிக்கிறார்)

நாகம்மா: இந்தக் குறும்பு மட்டும் போவாதே உங்களுக்கு. இந்த மோரைக் குடிங்க. வயித்து வலிக்கு நல்லது.

நாகம்மா மோர் கொடுத்துவிட்டு உள்ளே போகிறார்.

பெரியாரிடம் இன்னொரு தொண்டர் பேசுகிறார்.

தொண்டர்: என்னாங்க நாயக்கரே. நாம வைக்கம் போறோம்னு இல்ல சொன்னீங்க.

இப்ப மெட்ராஸ் போவறதா அம்மாகிட்ட சொல்லிட்டாங்க.

ராமசாமி: இல்லாட்டி அம்மா இப்ப ஊருக்குப் பொறப்பட விட மாட்டாங்க. வைக்கத்துக்குப் போவாம எப்பிடி ? இந்தக் கடுதாசைப் பாருங்க ஜெயில்லயிருந்து ஜார்ஜ் ஜோசப்பும் கேசவ மேனனும் எழுதியிருக்காங்க. நீங்களும் பொறப்படத் தயாராயிடுங்க. நான் சி.ஆருக்கு ஒரு கடிதாசு எழுதியனுப்பிட்டு வந்துடறேன்.

தொண்டர்: அவருக்கு என்னத்துக்குங்க கடிதாசு ?

ராமசாமி: வைக்கத்துல என்னைக் கைது பண்ணிட்டாங்கன்னா, இங்க கட்சித்தலைவர் வேலையை யார் பாக்கறது ? அதனாலதான் பொறுப்பை அவர்கிட்ட ஒப்படைச்சுட்டுப் போவறதுக்குக் கடிதாசு..

ராமசாமி கடிதம் எழுதும் காட்சி. ஒன்சைட் பேப்பரை எடுத்து பென்சிலில் எழுதுகிறார்.

cut to வீடியோ எடிட்டிங் ரூம். ஆனந்தி, மாயா, குரு, எடிட்டர் மதன், உதவி இயக்குநர் கணேஷ்.

மாயா: வைக்கம் எங்கே இருக்கு ?

ஆனந்தி: இப்ப கேரளா ஸ்டேட். அப்போ அது திருவிதாங்கூர் சமஸ்தானம்.

மதன்: அங்க என்ன பிராப்ளம் மேடம் ?

ஆனந்தி : தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரங்க கோவிலை சுத்தியிருக்கற தெருக்கள்லயே நடக்கக்கூடாதுங்கறதுதான் பிரச்சினை. வைக்கத்துல மட்டும் இல்ல. கேரளா முழுக்க அதான் நிலைமை.

குரு: போராட்டம் தொடங்கக் காரணமா இருந்தது திருவனந்தபுரத்துல நடந்த ஒரு சம்பவம். அங்கே ராஜாவோட பிறந்த நாளுக்காக ஒரு யாகம் நடத்தி கிட்டிருந்தாங்க. யாகம் நடந்த காம்பவுண்ட்லயேதான் கோர்ட்டும் இருக்கு. கோர்ட்டுக்கு வந்த வக்கீல் மாதவனை அவர் ஈழவர்; தீண்டத்தகாத ஜாதிக்காரர். அதனால யாகம் நடக்கற பக்கமே வரக்கூடாதுன்னு கோர்ட்டுக்குப் போக விடாம தடுத்தாங்க. இதைக் கண்டிச்சுத்தான் போராட்டம் நடந்துது.

மாயா: படிச்ச வக்கீலுக்கே அதான் ட்ரீட்மெண்ட்டா ?

ஆனந்தி: படிப்பும் இல்லாதவங்க கதி என்னன்னு யோசிச்சுப் பாரு.

மதன்: ஏன் திருவனந்தபுரத்துல போராட்டம் நடத்தாம வைக்கத்துல நடத்தினாங்க ?

குரு: அங்கேதான் கோவிலுக்கு நாலு பக்கமும் தெருக்கள். எந்தத் தெருலயும் தாழ்த்தப்பட்டவங்க போகக்கூடாதுன்னு தடை இருந்தது. அதனால அதைத் தேர்ந்தெடுத்தாங்க. அய்யா போனதும் போராட்டம் சூடு பிடிச்சிடுச்சு. திரும்பத் திரும்ப ரெண்டு தரம் அவரைக் கைது பண்ணாங்க.

cut to ஈ.வெ.ரா வீடு: நாகம்மாள், பெரியார் தங்கை கண்ணம்மாள்.

நாகம்மாள்: அடுத்து நீங்களும் மூட்டை கட்ட வேண்டியதுதான். கடிதாசு வந்துடுச்சு. அவரைக் கைது பண்ணிட்டாங்களாம். நான் வைக்கம் மறியலுக்குப் பொறப்படறேன். என்னைக் கைது பண்ணதும் நீங்க பொறப்பட்டு வாங்க.

கண்ணம்மாள்: உங்ககிட்ட மெட்ராசுக்கு வயித்துவலிக்கு வைத்தியம் பாக்கறேன்னு சொல்லிட்டு வைக்கத்துக்குப் போய்ட்டாரா.

நாகம்மாள்; அவர் கதை தெரிஞ்சதுதானே. நெஜத்தைச் சொன்னா நான் போக விடமாட்டேன்னு அப்பிடி செஞ்சிருக்காரு. அவர் சொல்றப்பவே எனக்குத் தெரியும். இவுராவது வைத்தியம் பாத்துக்கறதாவது. நமக்குத் தெரியாதுன்னு கொழந்தை மாதிரி நினச்சுகிட்டு சொல்றாரு.

கண்ணம்மாள்: அண்ணனே ஒரு கொழந்தைதான்.

நாகம்மாள்: அதனாலத்தான் என்கிட்ட உனக்கு எதுக்கு இன்னொரு கொழந்தைன்னு சொல்லிட்டாரு. அந்த மொதப் பொண்ணு அஞ்சு மாசத்துல போயிடுச்சு இல்ல. அதும் முகத்தைக் கூட இவுரு பாக்கலியே. ஊர் ஊரா பொது வேலையா சுத்திகிட்டிருந்தாரு. எனக்கு மனசு கேக்கல. இன்னொரு குழந்தை வேணும்னு இவரை ராமேஸ்வரத்துக்குலாம் கட்டாயமா கூட்டிகிட்டுப் போனேன்.

கண்ணம்மாள்: அப்ப கூப்பிட்டதும் வந்திருக்காரு. இப்ப கூப்பிட்டா வரமாட்டாரே.

நாகம்மாள்: அப்ப மட்டுமென்ன, வந்துட்டு, கடைசியில என்கிட்ட சொல்றார். நமக்கு எதுக்கு குழந்தை. வேணும்னா நூறு பிள்ளைங்களை எடுத்து வளத்துக்கலாம்ன்னுட்டாரு.

கண்ணம்மாள்: சொன்னபடிதான் செஞ்சுட்டாங்களே. கட்சி வேலையா வரவங்க எல்லாரும் உங்க பிள்ளையாத்தான் ஆயிட்டாங்க. வீட்டுல எந்த நேரமும் பந்தி நடந்துகிட்டிருக்குது.

நாகம்மாள்; பந்தின்னதும் ஞாபகம் வருது. வைக்கம் புறப்படறதுக்கு என்கூட ஏழெட்டு பேர் வராங்க. சாப்பாடு தயார் பண்ணணும்.

cut to வைக்கம் visuals. montage. போராட்ட முகாம். காந்தி கடிதம் எழுதுதல். சிறையில் ஜார்ஜ் ஜோசப் கடிதம் படித்தல்.ராஜாஜி கடிதம் எழுதுதல்.பெரியார் சிறையில் கடிதம் படித்தல் போன்றவை.voice over

voice over: வைக்கத்தில் போராட்ட முகாம் கல்யாண வீடு மாதிரி இருந்தது. கேரளா முழுவதும் ஈ.வெ.ராவும் கோவை அய்யாமுத்துவும் மற்றவர்களும் செய்த பிரசாரத்தினால் பணமும் தொண்டர்களும் வந்து குவியவே போராட்டம் சூடு பிடித்தது. பஞ்சாபிலிருந்து சுவாமி சிரத்தானந்தா ஆட்களையும் பணத்தையும் அனுப்பினார். இதை காந்தி ஏற்கவில்லை. இந்து மதம் சம்பந்தப்பட்ட தீண்டாமைப் பிரச்சினையில் மற்ற மதத்தினர் கலந்து கொள்ளக் கூடாது என்றார். ஜார்ஜ் ஜோசப் மன்னிப்பு கேட்டுக் கொண்டு போராட்டத்திலிருந்து விலக வேண்டும் என்று காந்தி எழுதினார். தமிழ்நாட்டில் நிறைய வேலை இருக்கிறது. அதை விட்டுவிட்டு எதற்காக கேரளாவில் வேலை செய்கிறாய் என்று ஈ.வே.ராவுக்கு ராஜாஜி கடிதம் எழுதினார். சீனிவாச அய்யங்கார் வைக்கத்துக்கே போய் பெரியாரை திரும்பிவரச் சொன்னார்.ஆனால் போராட்டம் வலுவடைந்தது. பெரியாரை சிறையில் அடைத்ததோடு உள்ளூர் சனாதனிகள் திருப்தி யடையவில்லை. எதிரிகளை அழிப்பதற்கான சத்ருசம்ஹார யாகம் நடத்தினார்கள்.

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி