ஜார்ஜ் டபிள்யூ புஷ் : தீவிரவாத கிரிஸ்தவ மத அடிப்படைவாதி

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

காரி ஸ்லோன்


ராணுவ சக்தியை பயன்படுத்தும்போதெல்லாம் அமெரிக்கா கடவுளை தன் துணைக்கு அழைத்துக்கொள்ளும் பழக்கத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. நியூ இங்கிலாந்து புயூரிட்டான்-கள் என்றழைக்கப்படும் கிரிஸ்தவ மத அடிப்படைவாதிகள், பைபிளின் இஸ்ரவேல் யூதர்களின் வழித்தோன்றல்களாக, தங்களை கடவுளின் புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களாக கருதிக்கொண்டார்கள். மோஸசுக்கும், ஜோசுவாவுக்கும் டேவிடுக்கும், இன்னும் இதர பழைய ஏற்பாடு இறைதூதர்களுக்கும் கடவுள் உதவி அவர்களது எதிரிகளை அழிக்க உதவியதுபோல, பத்துக்கட்டளைகளை நிறைவேற்றியும், கடவுளுக்கு கீழ்ப்படிந்து சேவை செய்தும் இருந்தால் தங்களுக்கும் அப்படி தங்களது எதிரிகளை நாசம் செய்ய உதவுவார் என்று நம்பினார்கள்.

பிளைமவுத் தோட்டத்தில் வில்லியம் பிராட்போர்டு எவ்வாறு கடவுள் 50 பில்கிரிம்களை 400 பெக்வாட் செவ்விந்தியர்களை அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவர்களது கோட்டைக்கு தீவைத்து கொல்ல உதவினார் என்று எழுதுகிறார். ‘நெருப்பில் இவர்கள் பொசுங்குவதும் அவர்களது உடலிருந்து வெளிவரும் ரத்தம் அந்த நெருப்பை அணைப்பதும், காண பயங்கரமாக இருந்தது. அங்கிருந்து வரும் நாற்றமும், பொசுங்கிய காற்றும் கொடுமையாக இருந்தது. ஆனால் வெற்றி என்பது கடவுளுக்கு இனிப்பான பலி. கடவுளை பெருமைப்படுத்தினார்கள் அவர்கள். கடவுளும் அவர்களுக்கு அதிசயம் புரிந்தார். எதிரிகளை கைக்குள் வைத்து மூடி அவர்களுக்கு வெகுவிரைவில் வெற்றியை கொடுத்து எதிரியை அவமானம் செய்தார். ‘

அர்பெல்லா என்ற கப்பலில் செல்லும்போது தன்னுடன் கூட இருந்தவர்களுக்கு செய்த ‘கிரிஸ்தவ சேவையின் மாதிரி ‘ என்ற பிரசங்கத்தில், பின்னால் மசாசூசெட்ஸ் கவர்னராக இருந்த ஜான் வின்த்ரோப் அவர்கள், தவறாத கடவுள் சேவை கடவுளிடம் பிரியமான தேசமாக இந்த புதிய தேசத்தை வைத்திருக்கும் என்றும், எதிரிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்களை கொன்றொழிக்க அனுமதி அளிப்பார் என்றும் பேசினார். ‘பைபிளின் கடவுளே நம் கடவுள். அவருடைய மக்கள் போல நம்முடன் இருப்பார். அவர் நம்மை எல்லா வழிகளிலும் கட்டளையிட்டு நம்மை ஆசீர்வதிப்பார். நாம் பத்து பேராக இருந்தாலும் ஆயிரக்கணக்கான எதிரிகளை கொல்ல நமக்கு பலம் கொடுப்பார் ‘

புயூரிட்டான்கள் எனப்படும் இந்த மத அடிப்படைவாதிகள் எதிரிகளை சாத்தானின் வேலையாட்களாகப் பார்த்தார்கள். கடவுளால் ஆணையிடப்பட்ட கிரிஸ்துவ மத பரப்பலை தடுக்க சாத்தானின் ஆட்கள் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள் என்றும் பார்த்தார்கள். ‘வோண்டர்ஸ் ஆஃப் த இன்விஸிபிள் வேர்ல்ட் ‘ என்ற புத்தகத்தில் புயூரிட்டான்கள் பற்றி எழுதிய காட்டன் மாதர் ‘ நியூ இங்கிலாந்து ஆட்கள் கடவுளின் மக்கள். இவர்கள் சாத்தானின் பிரதேசங்களில் தங்கவைக்கப்பட்டார்கள். யேசுவின் ரத்தத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட பழைய வாக்குறுதியின் காரணமாக இவர்கள் சாத்தானின் பிரதேசங்களில் குடிபுகுவதை கண்டு சாத்தான் மிகவும் துயரம் அடைந்திருக்கிறான் என்று எளிதில் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு சாத்தான் கோபமடைந்து இந்த ஏழை தோட்டத்தை அழிக்க உடனே எல்லாவகை முயற்சிகளையும் மேற்கொண்டான் ‘

அரசியல் அமைப்பு ரீதியான சர்ச்சையும் அரசாங்கத்தையும் பிரிக்கும் கொள்கை, கலாச்சார பன்முகத்தனம், அரசியல்ரீதியான ஒப்பந்தங்கள், தன்னடக்கம், நிச்சயமின்மை போன்ற பல்வகையான காரணங்களால் அமெரிக்க ஜனாதிபதிகள் தங்களுடைய முன்னோர்களான ப்யூரிட்டான்களின் மத அடிப்படைவாதத்தை அதிகம் பேசாமல் இருந்திருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் சர்ச்சுக்கு போவதையும், மத போதகர்களை பகிரங்கமாக சந்திப்பதையும், தங்களது மத நம்பிக்கையை பகிரங்கமாக உரைப்பதையும், அமெரிக்காவின் வளத்துக்கும், ஜனநாயகத்துக்கும், சுதந்திரத்துக்கும் பகிரங்கமாக கடவுளுக்கு நன்றி செலுத்துவதையும் மட்டுமே வைத்துகொண்டு தங்களை சமாதானப்படுத்திக்கொள்கிறார்கள்.

இன்றைய ஓவல் ஆபீஸின் குடியாளர் மிகவும் வேறுபட்டவர், ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவர்கள் ஒரு ப்யூரிட்டான் மத அடிப்படைவாதி போலவே பேசுகிறார். செப்டம்பர் 11 ஆம்தேதி நடந்த கொடுமையான நிகழ்ச்சிகளின் பின்னர், ‘நம் நாடு கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரலாற்றால் உறுதிசெய்யப்பட்டு, நீதியின் மாதிரியாக செயல்பட ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது ‘ என்று சொன்னார்.

உலகத்தை, நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையே நடக்கும் ஒரு ஒழுக்கவியல் ரீதியான போர்க்களமாக புஷ் பார்க்கிறார். இருள் சக்திகளுக்கும் ஒளிச்சக்திகளுக்கும் இடையேயான போராக பார்க்கிறார். மார்ச் 30 ஆம் தேதி 2002இல் ரேடியோவில் பேசும்போது, ‘நாம் நம்முடைய கவலைகளையும், அக்கைறைகளையும் அவர் முன் வைக்கிறோம். கடவுளின் கருணையை நோக்கி நிற்கிறோம். சாத்தான் இருக்கலாம் என்றும் அவன் வலிமையாக இருக்கலாம் என்றும் நம்பிக்கையுடன் இருக்கலாம். ஆனால் அது வெற்றிபெறாது. வரலாறு என்பது ஒரு ஒழுக்கவியல் திட்டம் என்று நமக்கு உறுதிகூறப்படுகிறது. நீதியும் கொடுமையும் எப்போதுமே போரில் இருந்துவருகிறது. கடவுள் இரண்டுக்கும் இடையே நடுநிலை வகிப்பதில்லை. அவரது குறிக்கோள்கள் சிலவேளைகளில் மக்களால் எதிர்க்கப்படலாம். ஆனால் எப்போதும் தோற்கடிக்கப்பட்டதில்லை ‘

2002இல் நாக்ஸ்வில் நகரத்தில் பேசியதில், புஷ் எவ்வாறு தீயதுசெய்வோரிடம் நடந்து கொள்ளவேண்டும் என்று கூறினார். ‘தீயதை சரியான முறையில் எதிர்ப்பது என்பது நல்லது செய்வதன் மூலமே. அதனை நான் சற்று சரியாகச் சொல்கிறேன். வீட்டுக்குள் தீயதை எதிர்ப்பது என்பது நல்லது செய்வதன் மூலம். வெளிநாட்டில் தீயதை எதிர்ப்பது என்பது ராணுவத்தை அவிழ்த்துவிட்டுத்தான் ‘

ராணுவ தீவிரவாத தேசியவாதம், மத அடிப்படைவாதத்துடன் இணையும்போது உலகம் கவலைப்பட நிச்சயம் காரணம் இருக்கிறது. நாட்டின் தலைவர்கள் தங்களை கடவுளின் விருப்பத்தாலும் அவரது கைப்பாவையாகவும் கருதிக்கொள்ளும்போது, அவர்கள் மனித கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதில்லை. அதுவும் அவர்களது கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு நிச்சயம் செவிசாய்ப்பதில்லை. ஏனெனில் கடவுள் அவர்களது அருகே எப்போதும் இருக்கிறார். (ஹென்றி டேவிட் தோரோ சொன்னது போல) அவர்களிடம் ஒற்றை கடவுளின் பெரும்பான்மை இருக்கிறது. ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா போர்களும் சிலுவைப்போர்களே. அவர்களது ஆதரவாளர்கள் செயிண்ட்களாக ஆகிவிடுகிறார்கள். போரை எதிர்ப்பவர்கள் கடவுளை மறுப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள். கடவுளின் ஆசீர்வாதத்தால் மேன்மைப்பட்டவர்கள் எளிய உண்மையையும், எங்கே நல்லது இருக்கிறது என்பதையும் காணத்தவறமாட்டார்கள். வெளிநாட்டு சாத்தானை அழிக்க, அப்பாவிகளை கொல்வதும், அவர்களது கால் கைகளை உடைப்பதும், கட்டடங்களையும் பாலங்களையும் அழிப்பதும், உலக சந்தைகளை நொறுக்குவதுமான மாபெரும் அழிவுகள் நியாயமான பக்க அழிவுகளே. (collateral damage)

கடவுளின் போர்வீரனுக்கு, எல்லா போர்களுமே வெற்றிபெறக்கூடியவை. கடவுள் தோழமையோடு இருக்கும்போது எப்படி ஒருவர் தோல்வி அடையமுடியும் ? ரிச்சர்ட் த லயன் ஹார்ட்டட்-இடம் கேளுங்கள். ஜார்ஜ் புஷ்ஷ்உக்கு தெரியவேண்டும். கடவுள் சில சமயங்களில் மர்மமான முறைகளில் வேலை செய்கிறார். வெற்றிகள் தோல்விகளாகின்றன, தோல்விகள் வெற்றிகளாகின்றன.

****

infidels.org

***

Series Navigation

காரி ஸ்லோன்

காரி ஸ்லோன்