கழிப்பறைகளும் விழிப்புணர்வும்

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

மஞ்சுளா நவநீதன்


சேரியில் வசிக்கும் ஒருவரிடம் சென்று உங்களுக்கு ரூ 10,000 தருகிறேன். அதில் ஒரு கழிப்பறை கட்டிக் கொள்ளலாம், அல்லது ஒரு கலர் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிக் கொள்ளலாம என்று சொன்னால் அவர் நிச்சயம் ‘டி வியே வாங்கிக்கறேன் சார் ‘ என்று தான் சொல்வார். (இதையே ஒரு பெண்ணிடம் கேட்டால் வேறு பதில் வரலாம் என்று எண்ணுகிறேன்.) எம் ஜி ஆர் பதவியில் இருக்கும்போது கிராமத்தில் பொது பெண்கள் கழிப்பறை பெருமளவில் கட்டுவது பற்றிப் பேசியது என் நினைவில் இருக்கிறது. அது தொடர்ந்து செய்யப்படவில்லை.

கழிப்பறை என்பது சுகாதாரம் பற்றிய ஒரு விஷயம் மட்டுமல்ல, இந்தியாவின் சாதியச் சமுதாயத்தைக் கட்டிக் காப்பாற்றும் அம்சங்களில் ஒன்று. அதுவும் மக்களால் சுத்திகரிக்கப் படும் கழிவுகள் , சுகாதாரமின்மையையும் , அதையே வக்கிரமாய்க் காரணம் காட்டி , ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை என்றும் பின்தங்க வைக்கவும் பயன்படும் ஓர் ஆயுதம். இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற உணர்வில்லாமல், காந்தி புண்ணியத்தில் ஆங்காங்கே ‘பங்கி நிவாரணச் சங்கங்கள் ‘ அமைக்கப் பட்டு ஒரு பெரிய தீர்வைக் கொடுத்தார்கள். அது என்னவென்றால், மலத்தை தலையில் சுமப்பதற்குப் பதிலாக தள்ளுவண்டியில் தள்ளிக் கொண்டு செல்ல வழி வகுத்தது. இதன் அபத்தத்தை என்னவென்று சொல்வது. நான் பாட்டுக்கு அசுத்தம் செய்வேன் சுத்தம் செய்வதற்கு வேறு சாதியாளின் வேலை என்ற அப்பட்டமான சாதியத்தில் பிறந்த அசட்டை யான விஷயம் இது. ஆனால் நம்மிடையே இருக்கும் புரட்சியாளர்கள் இஅசுத்தம் செய்வதைக் கலகமாய்ப் பார்க்கிறார்களாமே.

முடிந்தவரையில் இந்தச் செயலை நவீனப் படுத்துவதும், இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைப்பதும் தான் சுகாதாரம மட்டுமல்ல, சமூக ஒன்றிணைவிற்கும் வழி வகுக்கும். வேலையில்லாத் திண்டாட்டம் இதனால் பெருகிவிடும் என்பது போன்ற மொன்னைச் சாக்குகளைச் சொல்வது தவறு. (வேலையில்லாத் திண்டாட்டம் பிரசினை என்றால் ஒரு தலைகீழ் கோட்டா அமைப்பை உருவாக்கி வேறு ‘மேல் சாதிக்காரர்கள் ‘ மலம் அள்ளும் வேலையில் கட்டாயமாய் 80 சதவீதம் இருக்க வேண்டும் என்று சட்டம் போடலாம். உடனே எல்லோரும் புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். ) இதனால் வேலை இழப்பவர்களுக்கு கழிப்பறைப் பொருட்களான செராமிக் தளங்கள் தயாரிப்புப் போன்ற தொழிற்சாலைகளில் பெருவாரியாய் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று சட்டம் இயற்றலாம்.

கக்கூஸ் கழுவுபவர்களுக்கு வேலை போய்விடும் இதனால் இதை நவீனப் படுத்தக் கூடாது என்று சொல்வது, சக்கரம் கண்டுபிடிக்கப் பட்டபோதே, சக்கரத்தினால் சுமைக் கூலிகளுக்கு வேலை போய்விட்டது என்று சொல்லக் கூடிய அபத்தத்தைப் போன்றது. இன்னமும் ஆட்கள் சுத்திகரிக்கிற மல அறைகள் இருப்பதற்கு என்ன காரணம் ? ‘உழைப்பின் உயர்வு ‘ என்ற பெயரில் எல்லாரும் கக்கூஸ் கழுவுவோம் என்ற உயர்ந்த நோக்கில் செய்யப் பட்ட காந்திய வழி இதற்கு ஒரு காரணம். இன்னொன்று மற்ற வேலைகளைப் போலத் தானே இஇதுவும் என்ற அறிவாளிகளின் மெத்தனம். இது மற்ற வேலைகள் போன்றதல்ல. அதுவும் வேலையின் அடிப்படையில் மக்கள் மீதான மதிப்பை நிரந்தரமாய் மனதில் பதித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இந்த வேலைகள் எப்போதோ நவீனமயமாக்கப் பட்டிருக்க வேண்டும்.

பொதுக் கழிப்பறைகள் இந்தியாவில் சுத்தமாய் இல்லை என்பதற்கு தனியார் மயமாதல் மட்டும் காரணமல்ல. கழிப்பறையின் தூய்மை தன்னுடைய வேலை இல்லை என்று எண்ணும் மக்கள் குழுவும் ஒரு காரணம். எங்கும் எப்படியும் கழிப்பறையாய் உபயோகித்துக் கொள்ள வசதி உண்டு என்றால் ஒரு குறிப்பிட்ட அடைக்கப் பட்ட கழிப்பறையைப் பற்றி இவர்கள் ஏன் கவலைப் படவேண்டும் ?

சுலப் இண்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் கழிப்பறைப் பராமரிப்பில் கவனம் செலுத்துகின்றன. இதில்லாமல், பூங்காக்களை பெரும் நிறுவனங்கள் பராமரிப்பது போல , கழிப்பறைகளைப் பராமரிக்க முன்வரவேண்டும். எல்லா பொது வியாபார இடங்களிலும் – துணிக்கடை, உணவகம் போன்றவை – கழிப்பறை இருந்தாக வேண்டும். பயனீட்டாளர் அமைப்புகள் ஆங்காங்கே உள்ள பொதுக் கழிப்பறைகளையும், வியாபாரத் தலங்களில் உள்ள கழிப்பறைகளையும் பற்றிய ஆய்வு நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பொதுக் கழிப்பறைகள், பஸ் நிறுத்தங்கள், உணவு விடுதிகள், ரெயில் ஸ்டேஷன்கள் போன்ற பொது இடங்களில் தான் இருக்க வேண்டுமே தவிர, சேரிகள், அடுக்குமாடி வீடுகள், ஸ்டோர்கள் என்று அழைக்கப் படும் வீட்டுத் தொகுப்புகள் இவற்றில் பொதுக் கழிப்பறை இருக்கலாகாது. ஒவ்வொரு வீட்டிலும் – கிராமத்து வீடுகள் உட்பட – ஒரு கழிப்பறை இருக்க வேண்டும். கழிப்பறை கலாசாரம் உருவாக இதுவே வழி. அன்றாட உபயோகத்திற்குப் பொதுக் கழிப்பறை உபயோகப் படுத்தவேண்டாத ஒரு சூழ்நிலை உருவானால் தான் சுற்றுப்புறத் தூய்மை உருப் பெறும். தனக்கே சொந்தமான ஒரு கழிப்பறை இருக்கும் போது அதைத் தூய்மையாய் வைத்துக் கொள்ளும் அக்கறை சொந்தக் காரருக்கு வருகிறது. பொது இடம் தன்னுடையது என்ற உணர்வு இன்னமும் மக்களிடையே வரவில்லை என்பதற்கு, சுற்றுப் புறச் சூழல் சுகாதாரச் சீரழிவு மட்டுமல்ல, எந்தப் போராட்டங்களிலும் முதல் அடி வாங்கும் அரசாங்க பஸ்களே சாட்சி.

இந்தப் பிரசினையுடன் தொடர்புடைய இன்னொரு பிரசினை பிணங்களை எரிப்பது பற்றியது. உடனடியாக நவீனப் படுத்த வேண்டிய இன்னொரு தொழில் இது. மின் எரியூட்டகங்களை அமைத்து , இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களை திசை திருப்புவது மிக மிக அவசியம். இதே போல் பாதாளச்சாக்கடையை தூய்மைப் படுத்துவது, தெருக்கூட்டுவது போன்ற தொழில்களும் நவீனமயமாக்கப் படுவது மிகவும் அவசியம். தொழில் நுட்பத்தை இது போன்ற ஆபத்தான, எந்த மனத் திருப்தியும் தராத தொழிலுக்குப் பயன்படுத்துவதில் முதன்மை காட்டாமல், வங்கிகளை நவீனப் படுத்துகிறோம் என்று சில பல கோடாஸ்வரர்களை உருவாக்கும் முனைப்புத் தான் முற்போக்குச் சிந்தனை என்று வழங்கப்படுவது சோகமான விஷயம்.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்