இளமுருகு எழுதிய ‘பாத்ரூம் ‘ பற்றிய கட்டுரை பற்றி

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

ஜெயமோகன்


இளமுருகு எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒன்று. இந்தியர்களில் பெரும்பாலோருக்கு சுகாதார உணர்வு இல்லை. ஏன் ? அதற்கான காரணங்கள் பல. அவை இந்திய சமூக அமைப்பு மற்றும் தட்பவெப்ப நிலை முதலியவற்றை அடிப்படையாக கொண்டவை . உதாரணமாக இந்தியர்கள் உடலை மிக மிக சுத்தமாக வைத்துக் கொள்பவர்கள் என்பதில் ஐயமில்லை. பெரும்பாலோனோர் எளிய முறையிலானாலும் வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள்தான். ஆனால் சுற்றுபுறச்சூழலை அசுத்தமாக வைத்திருக்கிறார்கள். இதற்கு காரணம் தட்ப வெப்ப நிலை. சூரியன் சுட்டெரிக்கும் இந்த தேசத்தில் குப்பைகள் அழுக்குகள் ஆகியவை எளிதாக காய்ந்து மட்கி போகின்றன. இன்றுகூட நமது பெருநகரங்கள் மனிதர்கள் சாகாமல் வாழும் இடங்களாக இருப்பது கணிசமான மனிதக்கழிவுகளை வெயில் காயவைத்து விடுவதனால்தான். ஆனால் மக்கள்தொகை குறைவாக இருக்கும்போதுதான் வெயில் சரிப்படும். நவீன கும்பல் கலாசாரத்தில் அது சரிப்படாது. இரண்டாவதாக இங்குள்ள சமூக அமைப்பு. நமக்கு ஒரு சிவில் சமூக கற்பனை உருவானதே நூறு வருடத்துக்குள்தான். அதற்குமுன்பு சில திருவிழாக்கள் தவிர மற்ற நாட்களில் சாஅதி சாதியாக சாதிக்கு ஒரு தெருவாக நாம் பிரிந்து வாழ்ந்தோம். நமக்கு கும்பல் உணர்வு உருவானதே ஒழிய சமூக உணர்வு உருவாக வில்லை . இப்போது கூட எந்த ஒரு விஷயத்துக்கும்[ குடிதண்ணீர் உதாரணம்] ஒரு சாதி அல்லது ஒரு தெரு கும்பலாக இறங்குமே ஒழிய ஒரு சமூகமே திரண்டு மெல்ல அணிவகுத்து நீண்டகால போராட்டத்தில் ஈடுபடுவது இங்கு கிடையாது .இது சுகாதார விஷயத்தில் அப்பட்டமாக தெரியவருகிறது . பொது இடத்தில் அசிங்கம் செய்துவிட்டு உடனே அவ்விடத்தைவிட்டு நகர்ந்து விட்டால்போதும் பிறகு வருபவன் அவனது வேலையை கவனிக்கட்டும் என்ற உணர்வு வருவது இப்படித்தான். இது எல்லா விஷயங்களிலும் நம்மிடம் உள்ளது.மூன்றாவதாக துப்புரவு என்பது இழிவான தொழில் , அசிங்கத்தில் வாழ்வது அதைவிடமேல் என்ற எண்ணம். இது நமது சாதி மனநிலையிலிருந்து உருவாவது. நமது பெரும்பாலான வீடுகள் அலுவலகங்களில் கழிப்பறைகளை அதை,பயன்படுத்துவோர் துப்புரவு செய்வது இல்லை. துப்புரவு என்பதே தெரியாத சூழலில் வாழும் எளியமக்கள்தான் செய்கிறார்கள் .[இதைப்பற்றி அருமையான கட்டுரையை ஒருவர் மருதம் இதழுக்கு அனுப்பியுள்ளார். வெளியாகப்போகிறது]

இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்ட கடைசி தலைவர் காந்தி என்றால் உடனே ஒருகும்பல்என்னை வசை பாட கிளம்பிவிடும். ஆனால் அது உண்மை. தன் செய்திகளில் முக்கியமானதாக காந்தி பொது சுகாதாரம் என்ற அம்சத்தை கொண்டிருந்தார் . சர்க்கா போலவே ஒரு கக்கூஸையும் போகுமிடமெல்லாம் கொண்டு சென்றார். துப்புரவை தானே நிகழ்த்துவதன் அருமையை நமது உயர்சாதியினருக்கு ஓயாமல் எடுத்து சொன்னார்.தானே பொது கழிப்பிடங்களை தொடர்ந்து சுத்தம் செய்தார் . இதை நாராயண குருவிலும் காணலாம்.ஆனால் அதன்பிறகு நமக்கு வந்த தலைவர்கள் சந்தன மணம் கமழும் கக்கூஸ்களையே கண்டு வளார்ந்தவர்கள். அவர்கள் நம் சுத்தத்தை பொருட்படுத்தவில்லை. [செல்வி ஜெ ஒருமுறை பர்கூர் போகும் வழியில் ஒருமுறை கழிப்பிடம் போகலாம் என்பதற்காக தர்மபுரி அரசு பேருந்து நிலையத்தில் 30 லட்ச ரூபாய் செலவில் கக்கூஸ் கட்டப்பட்டது. ] இதுதான் நமது தேசம். காந்தியை மனித விரோதியாக காட்டவேண்டியது இன்று நமது அரசியல் தரப்புகளுக்கெல்லாம் அவசியதேவை. அந்த வேகத்தில் துப்புரவையும் விட்டுவிட்டார்கள். நான் சில தருணங்களில் இதைப்பற்றி பேசபோக சுத்தம்Xஅசுத்தம் என்றெல்லாம் சூத்திரங்களை போட்டு பின் நவீனத்துவ விளக்கம் அளித்து அசுத்தமாக இருப்பது உரிமை,எதிர்ப்பு, வற்க குணம் என்று விளக்கி நான் சொல்வது சாதிவாதம் என்று சொல்லிவிட்டார்கள் . இளமுருகு கட்டுரையும் தமிழ்நாட்டில் உயர்சாதி கண்ணோட்டமாககருதப்படும். நாம் முதலில் இதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேச ஆரம்பிக்கலாம். ஆனால் இதை பற்றி பேசுவதே கொடுமை என்கிறார்கள் அறிவுஜீவிகள் . 1997 ல் சில தருமபுரி கிராம்க்களில் சுகாதார முகாம்களில் பங்கு கொண்டேன். மக்களை சென்றடையமுடியும் என்ற எண்ணத்தை அவை ஏற்படுத்தின.ஆனால் அது ஒரு இயக்கமாக நடக்கவேண்டும்.

***

jeyamohanb@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்