அண்ணல் சாம்பலாருக்கு அடியேன் அஞ்சல்

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

மஞ்சுளா நவநீதன்


(என்னுடைய அடுக்கு மொழி கையிருப்பு தலைப்பிலேயே தீர்ந்துவிட்டது. எனவே இனி சொல்லவந்த விஷயங்கள் மட்டும் – அலங்காரமில்லாமல்.)

அண்ணல் சாம்பலாருக்கு அடியேனின் வணக்கங்கள். அக்கினியின் புத்திரனாயிருந்தாலும், கனலின் மைந்தனாயிருந்தாலும் சாம்பல் தானே. யார் கண்டார்கள் ? உங்கள் அடுத்த பெயர் மாற்றம் சாம்பலாராய் இருக்கலாம் என்பதால் இந்தப் பெயரில் உங்களை அழைப்பதில் உங்களுக்கு ஆட்சேபம் இருக்காது என்று நம்புகிறேன்.

முதலில் இந்தப் பெயர் மாற்ற பிசினஸே ஒரு அவலட்சணம். பெயர் மாற்றத்தினால் வேறு என்ன மாற்றம் நிகழவிருக்கிறது. ? நிகழ்ந்திருக்கிறது ? ராஜ ராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் தமிழ் மன்னர்கள் இல்லையா ? அவர்கள் என்ன ஆஸ்திரேலிய மன்னர்களா ? உங்கள் பெயர் ரெங்கராஜன் என்று அறிகிறேன். ரெங்கராஜன் தமிழ்ப் பெயர் இல்லையா ? ரெங்கராஜன் தமிழ்க் கடவுள் இல்லையா ? தமிழ் நாடும் தமிழ்நாட்டிற்கு அண்டை மானிலங்களும் தவிர்த்து வடநாட்டில் எங்கே ரெங்கநாதர் இருக்கிறார் ? அரங்கமாநகருளானைப் பாடிய பாடல்கள் தமிழ்ப் பாடல்கள் இல்லையா ? பாடியவர்கள் தமிழர்கள் அல்லவா ?

இந்தப் பெயர்மாற்றக் கூத்து எந்த அளவிற்கு அபத்தத்திற்குப் போகும் என்பதற்கு முத்துக் கருப்பன் என்ற தன் பெயரை தமிழண்ணல் என்று வைத்துக் கொண்ட ஒருவரைச் சொல்லலாம். முத்துக் கருப்பன் என்ற பெயர் போதுமான அளவு தமிழ் அல்லவாம். என்னய்யா இது ?

தமிழ் ஆய்வுகளில் உள்ள அபத்தத்தையெல்லாம் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள் அதே ஆய்வு கொண்டால், ஒரு மொழி மாறுதல் பெறுவதென்பதும் , ஒரு மொழி இன்னொருமொழியுடன் உறவு பூண்டு சொற்களைத் தருவதும் பெறுவதும் இயல்பான செயல் என்பது உங்களுக்குத் தெரியாதா ?

உங்கள் பேட்டியை வழக்கமான தமிழ் வாத்தியார்க் கும்பலில் ஒருவரின் புலம்பல் என்று ஒதுக்கிவிடத் தான் நினைத்தேன். ஆனால் அந்தக் கடைசி வரி தான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கோபப்படச் செய்தது.

ஞாநியின் கேள்வி இது : ‘ அதாவது தமிழாசிரியர்கள் சமூகத்தைக் கெடுக்கவில்லை , சமூகம் தான் அவர்களைக் கெடுத்துவிட்டது என்கிறீர்கள் ‘

உங்கள்பதில் இது : ‘ஆமாம் அதுதான் முடிவாக நான் சொல்ல விரும்புவது ‘.

சினிமா, சின்னத்திரை பார்த்து பசங்க கெட்டுப் போயிட்டாங்க என்று வீட்டில் புலம்புகிற தொனி யில் நீங்கள் இதைச் சொல்லியிருப்பது கோபத்தை மட்டுமல்ல, வருத்தத்தையும் அளித்தது. தமிழ் வாத்தியார்கள் யாரும் சின்னப் பசங்க அல்ல. அப்படிச் சொல்லிவிட்டு தனிமனிதப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது பொறுப்பற்ற செயல்.

******

தமிழ் வாத்தியார்கள் கெட்டுப் போனதிற்குக் காரணம் உலகமயமாதல் . தமிழ் ஒரு நுகர் பொருளாகிவிட்டது என்று சொல்கிறீர்கள் . ‘தமிழ்ப் பேராசிரியர்கள் இந்த அரங்கில் நடத்தும் தனிப் பேச்சுகளை கூர்ந்து கவனித்தால், தமிழ் என்ற நுகர்பொருளை , ஒரு புதிய வாணிகப் பண்டத்தை எப்படி காசாக்கிக் கொள்ளலாம் என்று முனைவது தான் தெரிகிறது. ‘ உலக மயமாதலுக்கு முன்னால் எப்படி அவர்கள் சிறப்பானவர்களாய் இருந்தார்கள் ? உலகமயமாதல் என்ற வில்லனைக் கையில் வைத்துக் கொண்டு இருக்கிற கேள்விகளையெல்லாம் இதற்குள் செருகுவது சரியல்ல.

இதற்கு உதாரணம் ஞாநி கேட்கிறார். உங்கள் பதில் இது : ‘தமிழை தமிழ்நாட்டுச் சூழலில் மட்டுமாக நீங்கள் பொருத்திப் பார்க்கக் கூடாது. உலகளவில் இன்று 60-70 நாடுகளில் தமிழ் புழங்குகிறது. இங்கே புத்தகம் உற்பத்தி செய்யும் பதிப்பகங்களும் , சிறு பத்திரிகைகளும், காலச்சுவடு போன்ற பத்திரிகை நிறுவனங்களும் வெளிநாட்டுச் சந்தையை மனதில் வைத்தே செயல் படுகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. ‘

இந்தப் பதிலில் உள்ள விஷமம் உங்களுக்கே உறைக்காத அளவிற்கு உங்கள் கருத்துகள் மரத்துப் போயிருக்கின்றன. ஆயிரம் பத்திரிகைகளை விட்டு விட்டு காலச்சுவடு பத்திரிகை நிறுவனத்தைமட்டும் ஏன் பெயர் சொல்லித் தாக்க வேண்டும். அது பிராமணர் ஒருவரால் நடத்தப் படுகிறது என்பது தானே காரணம் ? இந்தப் பதில் ‘தீம் தரிகிட ‘விற்கும் பொருந்தும் அல்லவா ? ஏன் இந்த பதில் ஞாநியைக் கோபமடையச் செய்யவில்லை ? ‘தீம் தரிகிட ‘வைப் பெயர் சொல்லித் தாக்காத வரையில் நல்லது என்று விட்டுவிட்டாரா ? ‘ தீம் தரிகிட ‘ வெளிநாட்டினரைக் கருதித் தான் லாப நோக்கோடு நடத்தப் படுகிறது என்பதை ஞாநி ஒப்புக் கொள்கிறாரா ? தமிழாசிரியர்களைப் பற்றிய ஞாநியின் கேள்வியையும், உங்கள் பதிலையும் உடனடியாகத் திரித்து காலச்சுவடைத் தாக்குவதற்கு ஒரு வாய்ப்பாக நீங்கள் ஏன் பயன்படுத்திக் கொண்டார்கள் ? தமிழாசிரியர்க் கும்பலின் மன நிலையை அறிய உங்களின் இந்த வி ?மத்தனமான பதில் ஒரு பெரும் வாய்ப்பு.

சொல்லப் போனால் தமிழ் மட்டுமல்ல எல்லா விஷயங்களுமே எப்போதுமே வாணிகப் பண்டங்களாகத் தான் இருந்து வந்திருக்கின்றனர். ‘பரிசில் வாழ்க்கை ‘ ஒன்றும் இருபதாம் நூற்றாண்டு விஷயம் அல்லவே.

****

‘ஆதிக்க சாதிகளின் அரசியலை ஆதரிக்காமல் அதற்கு எதிராகத் தோன்றிய அரசியலை தமிழாசிரியர்கள் ஆதரித்தார்கள் என்பது தமிழக வரலாறு ‘ என்று சொல்கிறீர்கள். இந்த ‘ஆதிக்க சாதிகள் ‘ என்ற வார்த்தை பிராமணர்களைக் குறிக்கும் குழூவுக் குறியா ? அப்படி இல்லையென்றால், முதுகுளத்தூர் தொடங்கி கீழ வெண்மணி , திண்ணியம் வரையில் , நடந்த கொடுமைகளில் ஒரு துளிக் கூட பிராமணர்களின் பங்கு இல்லை என்பதை எங்காவது எந்தத் தமிழாசிரியராவது பதிவு செய்திருக்கிறாரா ? பிராமணர்கள் தவிர்த்த , வேறெந்த ‘ஆதிக்க சாதி ‘யை எங்கே எப்படி தமிழாசிரியர்கள் எதிர் கொண்டிருக்கிறார்கள் என்று உங்களால் உதாரணம் காட்ட முடியுமா ? அப்படி உதாரணம் காட்ட முடியவில்லை என்றால் பிராமண எதிர்ப்பு அரசியலுக்காக, ஒரு முழுச் சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய மடமைக்காக அந்தச் சமூகத்திடம் மன்னிப்புக் கேட்கச் செய்ய வேண்டுமல்லவா ?

பிராமணர்களான பாரதி, உ வே சாமிநாதையர், சுஜாதா, பாலசந்தர், கமல் ஹாசன், எஸ் எஸ் வாசன், கல்கி, சுந்தர ராமசாமி, ஏ என் சிவராமன் , க நா சுப்பிரமணியம் , இந்திரா பார்த்தசாரதி, ஆதவன் மற்றும் பிராமண எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிராய் நின்ற ஜெயகாந்தன், புதுமைப் பித்தன் போன்றோரைக் காட்டிலும் , இந்த தமிழாசிரியர்க் கும்பலில் இருக்கிற முதன்மையான ஆள் கூட தமிழுக்கும். தமிழ்க் கலாசாரத்திற்கும் எதுவும் செய்துவிடவில்லை என்றல்லவா நீங்கள் உரத்துச் கூற வேண்டும் ?

****

பிரசினை வணிகக் கலாசாரமோ, உலகமயமாதலோ இல்லை. வணிகக் கலாசாரமும், உலகமயமாதலும் ஏதோ ஒரு வடிவில் எப்போதுமே எங்கேயுமே இருந்துதான் வந்திருக்கின்றன். தமிழ் வாத்தியார்க் கும்பலின் சீரழிவை வெளியே தேடுவதை விட்டு விட்டு உள்முகமாய் விமர்சனம் மேற்கொள்ளுங்கள். தமிழாசிரியர்கள் சமூகத்தில் கொண்டுள்ள நடைமுறை பற்றியதல்ல நம் விமர்சனம். அவர்கள் குழந்தைகள் ஆங்கிலம் படிக்கட்டும் பொறியியல் படிக்கட்டும், தமிழாசிரியர் மட்டுமல்ல எவருமே தமக்கும் தம் குடும்பத்திற்கும் பொறுப்புணர்வு கொள்வது தான் முதன்மையான கடமை . அந்தப் பொறுப்புணர்விற்காக அவர்கள் விமர்சிக்கப் படவில்லை. விமர்சிக்கப் படவும் கூடாது. இந்த விமர்சனங்களின் பின்னணி என்னவென்று சிந்திக்காமல் நீங்கள் மேலோட்டமாக பதில் அளிக்கிறீர்கள். என்னுடைய விமர்சனம் அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு என்ன வேலை செய்கிறார்கள் என்பது பற்றியது.

ஐந்தாவது வகுப்பிற்கு பெளதீகப் பாடம் சொல்லிக் கொடுப்பவர் ஐன்ஸ்டானின் சார்புக் கொள்கையில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டியதில்லை. ஆனால் பெளதீகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் நியூட்டன், ஐன்ஸ்டான் எல்லாம் யார் என்று கேட்டால் ஏதோ அடிப்படையில் கோளாறு என்று தானே எண்ண வேண்டிவரும் ?

ஏன் பல்கலைக் கழக வளாகங்களில் தமிழ் பற்றிய ஆராய்ச்சி விமர்சன பூர்வமற்று நடந்துகொண்டிருக்கிறது ? இன்னமும் ஏன் ஆராய்ச்சி மாணவர்கள் ஆண்டான் அடிமை பாணியில் நடத்தப் படுகிறார்கள் ? மாணவர்களின் ஆய்வுகளை ஏன் பேராசிரியர்கள் திருடிக் கொள்கிறார்கள் ? கள ஆய்வு என்பது கடந்த பத்து வருடங்களாக , அதுவும் பல்கலைக் கழகம் சாராதவர்களின் முயற்சிகளை முன்னோடியாய்க் கொண்டு தானே நடக்கத் தொடங்கியுள்ளது ? இது ஏன் ? தமிழ் பாடத்திட்டத்தை அறிவியல் பூர்வமாய் மாற்றியமைக்க என்ன முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டார்கள் ? படைப்பிலக்கையத்தின் போக்கை ஏன் இவர்கள் எந்த விதத்திலும் பாதிக்க முடியவில்லை ? பாதிப்பது இருக்கட்டும், சிறுபத்திரிகையின் ஆரம்ப வாசகனுக்கு இருக்கிற நுண்ணுணர்வு கூட இவர்களுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணம் ? தமிழ்க் கல்வியை அறிவியல் பூர்வாமான திசையில் செலுத்த என்ன முயற்சிகள் இவர்கள் மேற்கொண்டார்கள் ? இவர்களிடம் அதற்கான அதிகாரம் இருந்தபோதும் இது பற்றிய எந்த உணர்வும் இல்லாமல் தானே இவர்கள் நடந்து கொண்டார்கள் ?

நியாயமான ஊதிய உயர்விற்காக தெருவில் இறங்கிப் போராடத் தெரிந்த அவர்களுக்கு எதிர்காலத் தலைமுறையைப் பாதிக்கும் பாடத்திட்டங்களைச் சீரமைப்பதற்காகப் போராடுவது ஏன் முக்கியமாய்ப் படவில்லை ? உண்மையில் இதற்கெல்லாம் போராட்டமே தாவிஅப் பட்டிருக்காது. இவர்கள் தானே இங்கு கோலோச்சி நின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு என்ன எங்கே தவறு என்றே தெரியாது. அறிவியல் பூர்வமான பார்வையைத் துறப்பதில் தமிழ்ப் பெருமை பற்றிய பொய்ப்பிரசாரங்கள் பெரும் பங்கு வகித்தன. அந்தப் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க வேண்டிய கடமை உள்ள இவர்கள் அந்தப் பிரசாரத்தை எப்படி இன்னமும் மடமைக்குள் செலுத்தலாம் என்று எம் ஜி ஆரின் குலப் பெருமையையும், கருணாநிதியின் இலக்கியச் சிறப்பையும், ஆய்ந்து கொண்டிருந்தார்கள் – இருக்கிறார்கள். தமிழாசிரியர்க் கும்பல் ஏதோ ஒரு பிரசினையின் தீர்வு என்ற பிரமையை ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பிரமை உங்களுக்கும் இருக்கிறது போலும். உண்மையில் இவர்களே பிரசினையின் ஒரு முக்கியமான அங்கம்.

மறுபடியும் பேரியக்கங்கள் வரும் என்று கனவு காண்கிறீர்கள். எந்தப் பேரியக்கமும் அதன் இயல்பிலேயே சமரசத்திற்கான விதைகளைக் கொண்டிருக்கும். தனிமனிதனாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வதற்கு யாரும் இங்கே தடையாக இல்லை. காலம் கனிந்து வரும், பேரியக்கங்கள் வரும் அதுவரையில் நாம் கண்டுகொள்ளாமல் இருப்போம் என்கிறீர்களா ? தனி மனிதனாக செய்யக் கூடிய விஷயங்களைச் செய்ய முனையாமல் பேரியக்கத்திற்கான எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டு, முன்னொரு பிரிவினை அரசியலில் ஒரு தலைமுறை பலியாகி விட்டது. இன்னொரு பிரிவினை அரசியலின் பலிகடாக்களாய் எதிர்காலச் சந்ததிகளை ஆக்காதீர்கள்.

இந்தத் தமிழாசிரியர்கள் , சங்க இலக்கியத்தில் வெண்டைக் காய் , கத்தரிக்காய் என்று ஆராய்ச்சி செய்துவிட்டு, கற்பில் சிறந்தவள் கண்ணகியா ,சீதையா , மூலக் கடை முனியம்மாவா என்று அறிவியல் பூர்வமாய்ப் பட்டி மன்றம் நடத்திவிட்டு இப்போது , சினிமாப் பாடல்களில் வழிவது காதல் ரசமா, பாதரசமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களாவது பேரியக்கம் பண்ணுவதாவது.

உங்கள் முன்னால் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று பேராசிரியர்கள் எஸ் வையாபுரிப் பிள்ளை, சி கனகசபாபதி, தி சு நடராசன், மீரா, தமிழவன், லூர்து, கே ஏ குண சேகரன், மு ராமசாமி , சிவசு, ஜேசுதாசன், நா வானமாமலை, வ ஐ சுப்பிரமணியன் போன்றவர்களின் வழி. ஆக்க பூர்வமான, படைப்பாற்றலின் துணை கொண்டு தமிழையும், தமிழ்க் கலாசாரத்தையும் அணுகும் வழி. தமிழின் அசலான படைப்புலகில் பங்கு பெறும் வழி. உண்மையான படைப்புகளை, உண்மையான படைப்பாளிகளை இனங்கண்டுகொள்ளும் வழி,

இன்னொரு வழி வெற்றுக் கோஷங்களும், துவேஷங்களும் மேற்கொண்டு, அரசியல் மாச்சரியங்களை ஆராய்ச்சி என்ற பெயரில் கொட்டுவது., ஆஸ்திரேலியாவின் மொழியே தமிழ் தான் அண்டார்ட்டிகாவில் பேசுவது தமிழ் தான் என்று பொய்ப் பிரசாரத்தைத் தமிழ்ப் பற்று என்ற பெயரில் பரப்புவது. ஆர் விகுதியைத் தம்முடைய பெயருக்குப் பின்னால் ஒட்டவைத்துக் கொண்டு , நவீன உலகின் பிரக்ஞையே இல்லாத இரண்டாம் நூற்றாண்டுப் பிரகிருதிகளின் வழியில் செல்வது.

உங்கள் பெயரை கனல் மைந்தன் என்று மாற்றிக் கொண்டதன் மூலம் உங்கள் சார்பை ஏற்கனவே காண்பித்திருக்கிறீர்கள் இருந்தாலும், பெருங்காயம் இருந்த பாண்டமாக இன்னமும் பரீட்சா நாடக இயக்கமும், சிறுபத்திரிகை இயக்கத்தின் காத்திரமான பங்களிப்பும் உங்களிடம் ஒட்டிக் கொண்டிருக்க வாய்ப்புண்டு என்பதால் இந்த அஞ்சல். சொல்லுங்கள் உங்கள் வழி யாருடைய வழி ?

******

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்