பங்களாதேஷின் பாகிஸ்தானிகள்: பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

சின்னக்கருப்பன்


1947இல் இந்தியா பிரிக்கப்பட்டபோது, இந்தியாவிலிருந்து ஏராளமான பிகார் மாநில முஸ்லீம்கள் அருகாமையிலிருந்த வங்காள, கிழக்குப் பாகிஸ்தானுக்குச் சென்றார்கள்.

அவர்கள் பேசும் மொழி பிகாரில் முஸ்லீம்கள் பேசும் உருது மொழி. வங்காள மொழி பேசும் வங்காளத்தில் அவர்கள் வேற்றாற்களாகவே உணர்ந்தார்கள். 1971இல் பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தின் போதும், அவர்கள் தங்களை தீவிரமான பாகிஸ்தானியர்களாகவே அடையாளம் கண்டு, பாகிஸ்தானிய ராணுவத்துக்கு உதவி புரிந்து பங்களாதேஷ் மக்களுக்கு எதிராகவும், அங்கிருந்த சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராகவும் இருந்தார்கள்.

1971இல் பங்களாதேஷ் சுதந்திரம் அடைந்த பின்னால், இவர்கள் பங்களாதேஷின் மக்களால் வெறுத்தொதுக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு கடந்த 30 வருடங்களாக மோசமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த முகாம்களிலிருந்து அவர்கள் வெளியே செல்வது கூட தடை செய்யப்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு பல முறை பங்களாதேஷ் குடியுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் இவர்கள் அதனை மறுத்து தங்களை பாகிஸ்தானியர்களாகவே அடையாளம் கண்டுகொண்டிருந்திருக்கிறார்கள். ஆகவே, 1977இல் புட்டோ, ‘இவர்கள் பாகிஸ்தானியர்கள். இவர்கள் பாகிஸ்தானுக்கு வர எல்லா முயற்சியும் செய்வேன் ‘ என்று சொன்னதோடு சரி, அதற்குப்பின் ஒரு துரும்பைக்கூட நகர்த்தவில்லை.

1985இல் ஜியாவுல் ஹக் அவர்களும் இதே போல பேசிவிட்டு மறந்துவிட்டார்.

1992இல் இந்த பாகிஸ்தானியரைப் பற்றி முழுமையாக சர்வே எடுத்த ரபிதா என்ற மெக்காவைச் சார்ந்த அமைப்பு, இவர்கள் மொத்தம் 238,414 பேர்கள் என்று குறிப்பிட்டது. அன்றைய பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் இவர்களில் 325பேரை பாகிஸ்தானுக்கு பலத்த விளம்பரத்துக்கு இடையே அழைத்துச் சென்றதும் இவர்கள் மீண்டும் மறக்கப்பட்டுவிட்டார்கள்.

மறக்கப்பட்ட இந்த மக்கள் சுமார் 66 முகாம்களில் பங்களாதேஷ் எங்கும் பரவிக்கிடக்கிறார்கள். அடிப்படை வசதிகள் இன்றி, உரிமைகள் இன்றி, ஏமாற்றமும், நம்பிக்கையும் பின்னிப்பிணைந்து என்றாவது ஒரு நாள் பாகிஸ்தான் சென்றுவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் பாகிஸ்தானே காணாமல் போனாலும் போய்விடும்.

லட்சக்கணக்கான ஆப்கானியர்களுக்கு இடமும் வசதியும் உரிமைகளும் கொடுத்த பாகிஸ்தான் அரசாங்கமும் ராணுவமும், இந்த சுமார் 2 லட்சம் மக்களை பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்ல மறுத்துக்கொண்டிருக்கிறது. பங்களாதேஷ் அரசாங்கம் இவர்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுமார் 3 கிலோ அரிசி மட்டுமே கொடுக்கிறது. சவூதி அரசாங்கம் இவர்களுக்கு ஈது-உல்-ஜாஹா அன்று மாமிச உணவு வழங்குகிறது.

இருப்பினும் இவர்கள் ‘ ஆதி ரொட்டி காயேன்கே, மகர் பாகிஸ்தான் ஜாயேங்கே ‘ (பாதி ரொட்டி சாப்பிட்டாலும் பாகிஸ்தான் செல்வோம்) என்று கோஷம் எழுப்பிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது ஒரே குரலாக பாகிஸ்தானில் இருக்கும் எம்.க்யூ.எம் என்ற அல்டாஃப் ஹ்உசேனின் கட்சி பயங்கரவாதக் கட்சியாக அறிவிக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறது. அல்டாப் ஹ்உசேன் இங்கிலாந்தில் தஞ்சம்புகுந்திருக்கிறார்.

***

என்னுடைய கோரிக்கை.

இவர்கள் மனிதர்கள். அதைவிடவும் முக்கியம் இவர்கள் முன்னாள் இந்தியர்கள். இந்தியாவின் பீகாரிலிருந்து சென்றவர்கள். பீகாரில் எண்ணற்ற முஸ்லீம்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 100 கோடி. அதில் இன்னும் 2 லட்சத்தை சேர்ப்பதால் எந்தவித மோசமும் நடந்துவிடாது.

மனித நேயம் கருதி, இந்த பீகாரின் முஸ்லீம்களுக்கு, அவர்கள் விருப்பப்பட்டால், இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

இவர்கள் தங்களை வெகு தீவிரமாக பாகிஸ்தானியர்களாகக் கருதிக் கொண்டிருப்பதற்குக் காரணம் இவர்கள் வங்காளம் பேசும் ஒரு நாட்டில் உட்கார்ந்திருப்பதுதான். அதைவிடவும் முக்கியம், பங்களாதேஷின் உள்ளே இவர்கள் பாகிஸ்தானிய ராணுவத்துக்கு சுதந்திரப் போராட்டக் காலத்தில் உதவியவர்கள் என்ற உண்மையான கருத்து இருப்பதும் காரணம். அதனை இவர்கள் மறுக்கவுமில்லை, மறைக்கவுமில்லை. அதனாலேயே இவர்கள் தங்களை பாகிஸ்தானியர்களாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

ஏன் இவர்கள் தங்களை இந்தியர்களாகக் கூறிக்கொள்ளவில்லை எனக் கேட்கலாம். அதற்குக் காரணம் சுயமாக இவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி, அன்றைய ‘முஸ்லீம்களின் சொர்க்கபூமியாக ‘ காட்டப்பட்ட பாகிஸ்தானுக்குச் சென்றதுதான். அப்படி சென்றுவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வருகிறேன் என்று கேட்பார்கள்.

இந்தியர்கள் இருதேசக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்கள். இன்றைய நவீன காலத்தில், மதம் தேசத்தின் அடிப்படையாக இருக்க முடியாது என்பது , பங்களாதேஷ் பாகிஸ்தானிடமிருந்து பிரிந்த போதே புரிந்திருக்கவேண்டும். அது அதற்குப் புரியவில்லை. இன்னும் அதனை அடிப்படையாகக் கொண்டே காஷ்மீரைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட தவறான கருத்தின் மூலம் தோன்றிய பிரச்னையின் குழந்தைகள் இவர்கள்.

இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற எல்லோரும் தங்கள் தங்கள் நாடுகளைக் கொண்டு சுயாட்சி நடத்திக்கொண்டிருக்கும்போது, இவர்கள் மட்டுமே அனாதரவாக நிற்கிறார்கள். சட்டப்படி இவர்கள் இந்தியாவின் பொறுப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தார்மீக அடிப்படையில் பார்த்தால் இவர்கள் இந்தியாவின் குடிமக்கள்தான். பங்களாதேஷில் இருக்கும் இந்துக்களை விட உரிமைகள் அற்று முகாம்களில் அடைக்கப்பட்டு சிறைக்கைதிகள் போல வாழ்கிறார்கள் இவர்கள்.

இவர்கள் இந்தியாவின் குழந்தைகள். அனாதரவாக நின்றுகொண்டிருக்கும் இவர்களுக்கு தாயுள்ளம் கொண்ட இந்தியா குடியுரிமை வழங்க வேண்டும். சாதாரண குடிமக்களாக, பீகாரின் மக்களோடு மக்களாக, இணையும் இவர்கள் நிச்சயம் சிறந்த இந்தியக் குடிமக்களாகத் தான் இருப்பார்கள். இவ்வளவு நாள் பாகிஸ்தானால் உதாசீனம் செய்யப்பட்டாலும், இவர்கள் வன்முறையை ஆயுதமாக எடுக்கவில்லை. இவர்கள் சாதாரண குடிமக்களே.

இதுநாள் வரை தன்னை பாகிஸ்தானியர் என்று கூறிக்கொண்டிருக்கும் மக்கள் எப்படி இந்தியாவுக்கு விசுவாசமானவர்களாக இருப்பார்கள் எனக் கேட்கலாம். அவர்கள் சுயமாக இந்தியக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டு, இந்தியாவின் தங்கள் பழைய கிராமங்களுக்கோ, பீகாரின் நகர்ப்புறங்களுக்கோ சென்றால், இந்தியாவின் வளமையான ஜனநாயக, சுதந்திர அமைப்பைப் பார்ப்பார்கள். வேண்டுமானால், 5 வருடங்கள் இவர்களுக்கு தற்காலிக குடியுரிமை வழங்கி அதன் பின்னர், எந்த வித குற்றமும் இழைக்காமல் இருந்தால் முழு குடியுரிமை வழங்கலாம்.

அவர்களது இடம் பீகார்தான். அவர்களது தேசம் இந்தியாதான். அவர்களை இந்தியாவுக்கு அழைக்கும் மனம் நமக்கு வேண்டும். அவர்கள் முஸ்லீம்கள் என்று பாரபட்சம் காட்டக்கூடாது. என்னதான் குழந்தை தவறு செய்தாலும், தாய் குழந்தையை வெறுத்து விடுவதில்லை. அது போல, இந்தியா இவர்களை அரவணைக்க வேண்டும்.

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்