இந்த வாரம் இப்படி – சூன் 14 2002

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue

மஞ்சுளா நவநீதன்


***

அப்துலும் லட்சுமியும்

இரண்டு தமிழர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள். இருவருமே தத்தம் அளவில் சிறப்பான பணி புரிந்தவர்கள். தமிழினத் தலைவர், தமிழ் வாழ்க என்றெல்லாம் மார்தட்டுவதைத் தவிர வேறொன்றும் தமிழுக்குச் செய்யாதவர்கள் மத்தியில் தமிழர்க்கென்று தனித்த குணம் என்ன என்றால் இருவரையுமே உதாரணமாய்ச் சொல்லலாம். கலாம், லட்சுமி இருவருமே குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் அல்ல. டாக்டருக்குப் படித்த லட்சுமி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய விடுதலைப் படையில் பணி புரிந்தவர். இவருடைய மகள் சுபாஷிணி அலி, தொழிற்சங்கங்களிலும், ஆதிவாசிகளிடையேயும் பணி புரிபவர்.

அப்துல் கலாம் விஞ்ஞானம் அறிந்தவர். அரசின் முன்னணிப் பணியில் இருந்தவர்.

தமிழருக்கென்றுள்ள தனித்த குணம் இதுதான். அறிவு தேடி உலகெல்லாம் பரந்து செயல்படவேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர். அதே சமயம் நாமார்க்கும் குடியல்லோம் என்ற போராட்ட குணம். இருவருமே தாம் மேற்கொண்ட பணிக்குச் சிறப்புச் செய்பவர்கள்

*********

லட்சுமி செகால் இடதுசாரிகளின் பிரதிநிதியாக : பிராயச் சித்தமா ?

இடதுசாரிகள் நேதாஜியின் நிலைபாடைக் கடுமையாக் விமர்சித்து வந்தவர்கள். காரணம் ? அவர் ஹிட்லரின் ஆதரவு தேடிப் போய், பிரிட்டனுடன் போரிட நேர்ந்தது தான் காரணம். ஹிட்லருடன் நேதாஜி சேர்ந்ததில் இடதுசாரிகளி ஆட்சேபம் என்ன ? ஹிட்லரின் யூதர்களுக்கான கொலைவெறியா ? அல்ல. ஹிட்லரின் நாடு பிடிக்கும் பேராசையா ? அல்ல. இனவெறியா ? அல்ல. ஒரே காரணம் ஸ்டாலினுக்கு எதிர் முனையில் ஹிட்லர் இருந்தது தான்.

ஆனால் , நேதாஜியின் நூற்றாண்டு விழாவின் போது ஜோதிபாசு தலைமையில் நேதாஜி விழா கொண்டாடப் பட்டது. ‘வரலாற்றுத் தவறு ‘ செய்துவிட்டோம் என்று நேதாஜி பற்றிய கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சனத்தைப் பற்றி ஜோதிபாசு சொன்னார். ‘வரலாற்றுத் தவறு ‘ செய்வதும் அதைத் திருத்திக் கொள்வதாக பத்து வருடம் கழித்து, திருப்பி வரலாற்றை எழுதுவதுதான் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கைவந்த கலை ஆயிற்றே. இன்னும் பத்து வருடம் கழித்து, வீர் சாவர்க்கர், கோல்வால்கர் பற்றியும் புகழ்ந்து ‘திருத்தப்பட்ட பார்வைகள் ‘ வெளியிடப் படலாம். யார் கண்டது ?

நேதாஜியை விமர்சித்த அந்தத் தவறுக்குப் பிராயச்சித்தமாய்த் தான் இப்போது லட்சுமி செகாலை இடதுசாரிக் கட்சிகள் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தியுள்ளன போலும்.

************

அல் கெய்தா காஷ்மீரில் இருக்கிறதா இல்லையா ?

ரம்ஸ்ஃபெல்ட் என்பவர் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர். இந்தியா வந்தார். காஷ்மீரில் அல் கெய்தா ஆட்கள் நடமாடுகிறார்கள் என்றார். னாகிஸ்தானுக்குப் போனார். அல் கெய்தா ஆட்கள் காஷ்மீரில் இல்லை என்றார். இந்தியாவிலிருந்து பார்த்தால் அல் கெய்தா ஆட்கள் தெரிகிறார்கள். பாகிஸ்தானிலிருந்து பார்த்தால் அவர்கள் மாயமாய் மறைந்து விடுகிறார்கள்.

சொல்லிவிட்டு அவர் ஊர் திரும்பியவுடன், கராச்சியில் அமெரிக்கத் தூதுவரகம் முன்பு குண்டு வெடிப்பு. காஷ்மீரில் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது தாக்குதல். ஒரு செய்திக்கான முக்கியத்துவமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் காஷ்மீர இந்துக்கள் கொலை.

************

கராச்சி குண்டுவெடிப்பு

செய்வது அல்குவேதா-தான் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. 1989இல் சோவியத் படைகள் ஆஃப்கானிஸ்தானத்திலிருந்து வெளியேறியதும் பாகிஸ்தானுக்குத் திரும்பிவந்த ஜிஹாதிகளை காஷ்மீருக்கு அனுப்பி அவர்களிடமிருந்து தற்காலிகமாக தன்னைக் காப்பாற்றிக்கொண்டது பாகிஸ்தான். (ஒரே கல்லில் இரண்டு மாங்காய். காஷ்மீரப்பிரச்னையை பெரிதும் ஆக்கலாம். பாகிஸ்தான் அமைப்பை இந்த ஜிஹாதிகள் பங்கப்படுத்தாமல் காப்பாற்றிக்கொள்ளவும் செய்யலாம்). அதே வேலையை பாகிஸ்தான் இப்போதும் செய்யும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதற்காகத்தான் இந்தியா இப்போது ‘க்ராஸ்பார்டர் டெர்ரரிஸம் ‘ (எல்லை தாண்டிய பயங்கரவாதம்) என்பதை தடை செய்யவேண்டும் எனக்கோரி போர்வீரர்களை எல்லையில் நிறுத்திக்கொண்டிருக்கிறது.

அப்படி இந்த அல்குவேதா, பாகிஸ்தான் ஜிஹாதிகள் பாகிஸ்தானுக்குள்ளேயே இருந்தால் என்ன என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு ஒரு அறிகுறிதான், கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் வெடி.

******

எங்கே பா ஜ க

தமிழ் நாட்டில் பா ஜ க என்ற ஒரு கட்சி ஆங்காங்கே சில மையங்களில் உள்ளதே தவிர பரந்த அளவில் எந்தச் செல்வாக்கும் கிடையாது என்பது இந்த இடைத் தேர்தலில் நிரூபணமாகியுள்ளது.நாங்கள் தி மு க-வை ஆதரிக்கப் போவதில்லை என்று ம தி மு க-வை ஆதரித்தனர். வாங்கிய வாக்குகள் ஓரிரு ஆயிரங்களே. மத்தியில் பா ஜ க அரசு இல்லையென்றால் இது இன்னும் ஒரு லெட்டர்பேட் கட்சியாய்த் தான் தமிழ் நாட்டில் இருக்கும் .

இருந்தும் கூட கருணாநிதியும், ஜெயலலிதாவும் பா ஜ கவிற்கு விழுந்து விழுந்து உபசாரம் செய்கிறார்கள்.

**************

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்