முள்பாதை 51

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

அன்று இரவு நான் படுத்துக் கொண்டேன். ராஜி அம்மாவுடைய அறையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது திருநாகம் மாமி “பாக்குப் பொட்டலம் இருந்தால் கொஞ்சம் தர்ரீங்களா?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தாள்.
எனக்கு வியப்பாக இருந்தது. நான் எப்போதும் பாக்கு போட மாட்டேன். மாமிக்கும் அது தெரியும். மாமி வந்திருப்பது பாக்குகப் பொட்டலத்திற்காக இல்லை என்று எனக்குப் புரிந்துவிட்டது. மாமி கட்டில் அருகில் வருவதற்கு முன் மறுபடியும் ஒருதடவை கதவு வரையில் போய் வெளியே தலையை நீட்டி அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்துவிட்டு உள்ளே வந்தாள்.
மாமியின் தொரணை எனக்குத் தெரிந்ததுதான். ரகசியமாக என்னிடம் ஏதோ விஷயத்தைச் சொல்வதற்காக வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டேன்.
“என்ன விஷயம் மாமி?”
குரலைத் தாழ்த்தி என் ஒருத்திக்கு மட்டும் கேட்பது போல் மெதுவாக “சின்னம்மா! வயதில் பெரியவள் சொல்கிறேன். நான் சொன்னது ஒருநாளும் பொய்த்தது இல்லை. நீங்க பாம்புக்கு பால் ஊற்றி வளர்க்கறீங்க” என்றாள், கண்களை சுழற்றிக் கொண்டே.
“அப்படி என்றால்?”
“என் பேச்சைக் கேட்டு அந்த ராஜேஸ்வரியை உடனே இங்கிருந்து அனுப்பிவிடுங்கள்” என்றாள்.
“ஏன்? என்ன ஆகிவிட்டது?”
“என்ன ஆகிவிட்டது என்று நிதானமாக கேட்கிறீகளே, ஒரு பக்கம் வீடு பற்றி எரிந்து கொண்டு இருக்கும்போது.”
“விஷயம் என்னவென்று சொல்லுங்கள்.”
“சலித்துக்கொள்ளாதீங்க.. வயதில் பெரியவள். பழமும் தின்று கொட்டையைப் போட்டவள். உங்கள் வீட்டு உப்பை சாப்பிட்ட விசுவாசம் இருப்பதால் சொல்கிறேன். மதியம் நீங்க அந்தப்பக்கம் கடைத்தெருவுக்குப் போனீங்களா, இந்தப் பக்கம் மாப்பிள்ளை வந்தவிட்டார். மதியம் சித்த தூங்குவோம் என்று வாசற்படியில் தலையை வைத்துக் கொண்டு படுத்தேனே ஒழிய தூக்கம் வரவில்லை. நீங்க வீட்டில் இல்லை என்றதும் மாப்பிள்ளை கிளம்பிப் போயிருக்கலாம் இல்லையா. போகவில்லை. சரி உங்களுக்காகக் காத்திருக்கிறார் என்று நினைத்தால் எந்த புத்தகத்தையாவது புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம் இல்லையா. அதுவும் செய்யவில்லை. குடிக்க தண்ணீர் வேண்டுமென்று அந்தப் பெண்ணிடம் கேட்டார். டம்ளரில் தண்ணீர் கொண்டு போன மகராஜி உடனே திரும்பி வரவில்லை. நான் தூங்கிக் கொண்டு இருக்கிறேன் என்று நினைத்தாள் போலும். என்னதான் செய்கிறாள் பார்ப்போம் என்று மெதுவாக எழுந்து போய்ப் பார்த்தேன். இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை ஏதோ கேட்டுக் கொண்டே சத்தியம் செய்து தரச்சொல்லி கையை நீட்டினார். இந்த மேனா மினுக்கி மாட்டேன் மாட்டேன் என்பதுபோல் தலையை அசைத்துக் கொண்டிருந்தாள்.”
கைகளை ஆட்டியபடி, ரகசியம் சொல்வது போல் மாமி சொன்ன தோரணைக்கு எனக்கு சிரிப்பு வந்தது. ஆனால் எப்படியோ கட்டுப்படுத்திக் கொண்டேன். மாமி எந்த உத்தேசத்துடன் அந்த சமாசாரத்தை என்னிடம் சொல்ல வந்தாளோ அதை என் மனம் டக் என்று புரிந்துகொண்டு விட்டது. இத்தனை நாளும் ராமருக்கு அனுமார் செய்ததுபோல் பணிவிடை செய்து, தன்னைத் தவிர வேறு யாராலும் அம்மாவின் மனதில் இந்த அளவுக்கு இடம் பிடிக்க முடியாது என்று இறுமாப்புடன் இருந்து வந்த மாமிக்கு ராஜேஸ்வரியின் வருகை பேரிடியாக இருந்தது. ராஜேஸ்வரியின் பக்கபலம் இருப்பதால் தன்னை விட்டை விட்டு வெளியேற்றி விடக்கூடும் என்ற சந்தேகம் மாமியின் மனதில் துளிர்த்துவிட்டது. அதனால் ராஜேஸ்வரியை தன்னுடைய எதிரியாக நினைத்து அவள்மீது தன் கோபத்தை காட்டத் தொடங்கியிருக்கிறாள்.
யோசனையில் ஆழ்ந்திருந்த என்னை லேசாக தட்டிக் கொண்டே “சின்னம்மா! நீங்க ரொம்ப அப்பாவி. உங்களுடைய நலனுக்காகத்தான் சொல்கிறேன். வேறு விதமாக நினைக்காதீங்க” என்றாள்.
“ச்ச.. ச்ச… உங்களைப் போய் தவறாக நினைப்பேனா? ராஜேஸ்வரி இவ்வளவு நம்பிக்கை துரோகம் செய்ய முற்படுவாள் என்று நினைத்தால் எனக்கு மூளை கலங்கிவிட்டாற்போல் இருக்கிறது. இருந்தாலும் சாரதி எனக்குக் கணவனாக வரப்போகிறவன். அவனுக்கு புத்தி இப்படி போகலாமா? நீங்களே சொல்லுங்கள்.”
“அம்மம்மா! அந்த வார்த்தையைச் சொல்லாதீங்க. மாப்பிள்ளையைச் சொன்னால் நான் சும்மா இருக்க மாட்டேன். என்ன இருந்தாலும் ஆண்களுக்குக் கொஞ்சமோ நஞ்சமோ சபல குணம் இருக்கத்தான் செய்யும். நம்முடைய பொருளை நாம்தானே பத்திரமாக காப்பாற்றிக் கொள்ளணும்.” சாரதியின் பக்கம் வக்காலத்து வாங்கிக் கொண்டது போல் மாமி பேசினாள்.
மாமியின் கைகளை பிடித்துக் கொண்டு வேண்டிக் கொள்வது போல் சொன்னேன். “மாமி! அம்மாவின் பேச்சை விட உங்களுடைய சொல்லுக்கு அதிகம் மதிப்புத் தருகிறேன். இந்த பொறுப்பை உங்களிடம்தான் ஒப்படைக்கிறேன். சாரதி ராஜேஸ்வரி இரண்டு பேரின் மீதும் ஒரு கண் வைத்திருங்கள். அம்மாவிடம் இப்போ எதுவும் சொல்ல வேண்டாம். உங்களுக்குத்தான் தெரியுமே. ராஜியைப் பற்றி நாம் என்ன சொன்னாலும் அம்மாவின் காதுகளில் இப்போ விழாது. சமயம் பார்த்து கையும் களவுமாக பிடிக்கும் விதமாகச் செய்து அம்மாவுக்கு நேரில் காட்டுவோம். அப்போ அம்மா ராஜியை வீட்டை விட்டு வெளியேற்றாமல் இருக்க மாட்டாள்” என்றேன்.
மாமியின் முகம் மலர்ந்துவிடது. “ஆமாம். நீங்க சொன்னதும் உண்மைதான். வாயால் சொன்னால் பிரயோஜனப்படாது. கண்ணால் பார்த்தால்தான் நம்பிக்கை வரும். நீங்களும் அந்தப் பெண்ணை கண்காணித்துக் கொண்டு இருங்கள்” என்று எச்சரித்தாள்.
“கண்காணிக்காமல் இருப்பேனா? எவ்வளவு துரோகம்? எவ்வளவு நாடகம்?” பற்களை கடித்தபடி கோபத்தைக் காட்டினேன். “உண்ட வீட்டுக்கு துரோகம் செய்வது என்பார்கள். இதுதான்போலும்” என்றேன்.
“சரியாகச் சொன்னிங்க.” தலையை ஆட்டிவிட்டு மாமி போய்விட்டாள்.
‘சொல்பேச்சு கேட்கிறவங்க இருக்கணுமே ஒழிய மாமி போன்றவர்கள் இருந்தால் அமைதியாக இருக்கும் குடும்பம் குரு§க்ஷத்ரமாக மாறிவிடாதா?’ என்று நினைக்கத் தோன்றியது.

************

இந்த நிகழ்ச்சி நடந்த பிறகு பதினைந்து நாட்கள் வரையில் சாரதி எங்கள் வீட்டுக்கு வரவில்லை. அவனுக்குக் கோபம் வந்து விட்டதாக வீட்டில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இந்த விஷயமாக அம்மா என்மீது குற்றம் சுமத்தி அப்பாவிடம் ஆற்றிய சொற்பொழிவை கேட்டுத்தான் தீரணும். குழந்தைகளுக்கு ஒழுக்கம் வரவேண்டும் என்றால் கணவன் மனைவி இருவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமாம். கணவன் மனைவிக்குள் எந்த ஒருவருக்காவது இங்கிதஞானம் இல்லை என்றால் குழந்தைகள் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வார்களாம்.
சாப்பிடும் நேரத்தில் அம்மா என்மீது கோபத்தைக் காட்டியபடி ஆற்றிய சொற்பொழிவின் சாரம் என்னவென்றால் அப்பா எனக்கு நிறைய சலுகை கொடுத்து என்னை உருப்படாமல் செய்துவிட்டாராம். அவருடைய பக்கபலம் இருப்பதால்தான் நான் இப்படி இஷ்டம் வந்ததுபோல் நடந்து கொள்கிறேனாம். அப்பா சாப்பிட்டுக் கொண்டே வழக்கம் போல் மௌனமாக கேட்டுக் கொண்டார். நடுநடுவில் கேட்டுக் கொள் என்பதுபோல் என் பக்கம் பார்த்தார். தவறு செய்தது நான் என்றால் அம்மா அப்பாவின் மீது எரிந்து விழுந்தது எனக்குப் பிடிக்கவில்லை. அநியாயமாக அவரை குற்றவாளியாக்கி அம்மா மண்டகப்படி செய்தபோது எனக்கு வருத்தமாக இருந்தது.
மறுநாள் அப்பா என்ன சொன்னாரோ, அம்மா எப்படி சமாதானப்படுத்தினாளோ தெரியாது. பதினைந்து நாட்கள் கழித்து சாரதி எங்கள் வீட்டுக்கு வந்தான். அவனுக்குப் பிடித்தமான உணவு வகைகளை தயாரிக்கச் செய்து அம்மா விருந்து வழங்கினாள். மிஸெஸ் ராமனையும் விருந்துக்கு அழைத்தாள். ஏனோ அந்த அம்மாள் வரவில்லை. சமீபகாலத்தில் மிஸெஸ் ராமனுக்கும் எங்களுக்கும் இடையே போக்குவரத்து கொஞ்சம் குறைந்துவிட்டது. காரணம் இன்னது என்று தெரியவில்லை.. ஆனால் அம்மாவுக்கும், மிஸெஸ் ராமனுக்கும் நடுவில் ஏதோ பூசல் தொன்றியிருந்தது. வழக்கம் போல் அம்மா சாரதி சாப்பிட வரும்போது தானே சுயமாக எனக்குத் தலை பின்னிவிட்டாள். நகைகளை எடுத்துக் கொடுத்தாள். புடவையை எடுத்துக் கொடுத்து அதையே கட்டிக்கொள்ளச் சொல்லி ஒருதடவைக்கு இரண்டு தடவை எச்சரித்த போது என் மனதில் எரிச்சல் ஏற்பட்டது. ‘அம்மா! நகைகளையும், புடவையையும் அணியச்செய்து என்¡ன அலங்கரிக்க முடியுமே தவிர, என் முகத்தில் முறுவலை எப்படி தவழச் செய்வீங்க? என் நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை வேவு பார்க்கச் சொல்லி ராஜியிடம் சொன்ன மனிதனை நான் ஏன் மதிக்க வேண்டும்?’ என்று நினைக்கத் தோன்றியது.
சாரதி வந்த சற்று நேரத்திற்கெல்லாம் தலையை வலிப்பது போல் தலையைப் பிடித்துக் கொண்டு முகத்தை சோகமாக வைத்துக் கொண்டேன். அம்மா அந்த சமயம் என்னைப் பார்த்த பார்வையை என்னால் ஆயுசுக்கும் மறக்க முடியாது. அம்மாவும் அப்பாவும் சாரதியை பலவருடங்கள் கழித்து வெளிநாட்டிலிருந்த திரும்பி வந்த மகன் போல் கொண்டாடினார்கள். அந்த அன்புக்குக் கரைந்து போகாமல் சாரதியால் இருக்க முடியவில்லை.
ஒரு வாரத்தில் சாரதியின் கோபம் போய்விட்டது. பழையபடி எங்கள் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்தான். அம்மாவின் இதயத்திலிருந்து பெரிய பாரம் நீங்கியது. சாரதி விருந்துக்கு வந்த அன்று இரவே என்னை அழைத்து கடுமையாக எச்சரித்தாள்.
“இதோ பார் மீனா! கவனமாக கேட்டுக்கொள். மறுபடியும் ஏதாவது வேண்டாத காரியத்தைச் செய்து பிரச்னையை உண்டாக்கினாய் என்றால் சும்மா இருக்க மாட்டேன். சாரதியின் மதிப்பு உனக்கு என்ன தெரியும்? அவனை கொத்திக் கொண்டு போவதற்கு ஆயிரம் பேர் கழுகுபோல் காத்திருக்கிறார்கள். மிஸெஸ் ராமனுக்கு என்ன ஜாட்டியம் வந்ததோ என்னவோ, ஜட்ஜ் மகள் சுநீதாவுடன் ஈழிக்கொண்டு ஊரைச்சுற்றி வருகிறாள். சாரதி என் பேச்சை மீறிப் போகமாட்டான் என்ற நம்பிக்கைக எனக்கு இருக்கிறது என்றாலும், என் ஒருத்தியின் முயற்சி மட்டும் போறாது. நீ சின்னக் குழந்தை ஒன்றுமில்லை. கணவனாக வரப் போகிறவனின் மனதை உன் பக்கம் திருப்பிக்கொள்ளும் சாமர்த்தியம் உனக்கு இருக்க வேண்டும். புரிந்ததா?” என்று அதட்டினாள்.
புரிந்தது என்பது போல் தலையை அசைத்தேன். எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. என்னை வேவு பார்க்கச் சொன்ன சாரதி நன்றாகத்தான் இருக்கிறான். வெசவுகளை கேட்டுக்கொள்ள வேண்டிய தலையெழுத்து எனக்கு.
சாரதி முன்னைப் போல் என்னிடம் சகஜமாக பழக முயற்சி செய்தாலும் அது வெறும் நடிப்புதான் என்று அவன் கண்களில் தென்பட்ட அதிருப்தியிலிருந்து புரிந்து கொண்டேன். அவனைப் போல் எனக்கு நடிக்கத் தெரியாது. அதனால் பற்று இல்லாதவள் போல் வெறுமையாக இருந்து வந்தேன். எங்களுக்கு நடுவில் ஓரளவுக்கு இருந்த நெருக்கம் கூட காணாமல் போய்விடது.
அம்மாவோ கூடுமான வரையில் எங்களுக்குத் தனிமை கிடைக்க வேண்டுமென்று தவியாய் தவித்தாள். அது எங்களுக்கு தர்மசங்கடமாக இருந்தது. முன்பின் பழக்கமில்லாதவர்களைப் போல் என்ன பேசுவதென்று தெரியாமல் வினாடிகளை எண்ணிக் கொண்டிருப்போம்.
அம்மா கூடிய சீக்கிரத்தில் எங்களுடைய திருமணத்திற்கு முகூர்த்தம் வைத்து விட வேண்டுமென்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் ஜோசியரோ எங்க இருவரின் ஜாதகங்களுக்கு பொருத்தமாக ஒரு மாதத்திற்குள் முகூர்த்தம் இல்லை என்று சொல்லிவிட்டார். அம்மாவுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் ஏனோ இந்த விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கவில்லை. “சரி. நல்ல முகூர்த்தம் எப்போ இருக்கிறதோ பார்த்துச் சொல்லுங்கள்” என்றாள். அடுத்தமாதக் கடைசியில் முகூர்த்தம் இருப்பதாக ஜோதிடர் தெரிவித்தார்.
அதற்கு முன்னால் நல்ல நாள் பார்த்து நிச்சயதார்தத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று அம்மா முடிவு செய்தாள். சாரதி இல்லை என்றால் இந்த ஜென்மத்தில் எனக்கத் திருமணம் நடக்காதோ என்பது போல் அம்மா காட்டும் இந்த பரபரப்பை, தவிப்பைப் பார்த்த போது எனக்கு வியப்பு, எரிச்சல் இரண்டும் ஏற்பட்டன. நியாயமாக பார்க்கப் போனால் ஆஸ்தியும், அந்தஸ்தும் இருக்கும் எனக்காக சாரதிதான் தவம் கிடக்க வேண்டும். அம்மா என்னை தாழ்த்துவது போல் நடந்துகொள்வது எனக்குப் பிடிக்கவில்லை.
அன்று மதியம் அம்மா ரொம்ப நாட்கள் கழித்து கிளப்புக்குச் சென்றாள். சமீபகாலமாக அம்மா கிளப் விவகாரங்களைப் பெரும்பாலும் குறைத்துக் கொண்டு விட்டாள். கல்யாண காரியங்கள் இருப்பதால் தனக்கு ஒழியாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டாள். இதுவரையில் யாருமே நடத்தியிராத அளவுக்கு ஆடம்பரமாக, அபூர்வமான நிகழ்ச்சியாக என் திருமணத்தை நடத்த வேண்டும் என்பது அம்மாவின் கனவு. இனி எங்கே, எவ்வளவு பெரிய அளவில் திருமணம் நடந்தாலும், கிருஷ்ணவேணியம்மாள் மகளின் திருமணத்திற்கு ஈடு இல்லை என்று எல்லோரும் நினைக்க வேண்டும். இதுதான் அம்மாவின் விருப்பம்.
தினமும் வீட்டில் திருமணத்தைப் பற்றிய பேச்சுதான் நடந்துக் கொண்டிருந்தது. அம்மா தனக்குத் தெரிந்வர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு செலவு ஆகுமோ பட்ஜெட் போட்டுக் கொண்டிருந்தாள். அப்பா மட்டும் “இன்னும் நாள் இருக்கிறதே. எதற்காக இவ்வளவு பரபரப்பு?” என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்பாவுக்கு ஆடம்பரம் கொஞ்சம் கூட பிடிக்காது.
ஏதோ முக்கியமான வேலை இருந்ததால் அம்மா கிளப்புக்குக் கிளம்பிப் போனாள். நானும் ராஜியும் ஹாலில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தோம். நான் சினிமா பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தேன். ராஜேஸ்வரி ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்தாள். திருமணம் நெருங்கி வருவதால் அதற்குள் முடிக்க வேண்டும் என்று நேரம் கிடைத்த போதெல்லாம் ஸ்வெட்டரை பின்னிக்கொண்டிருந்தாள்.
“அண்ணி! அண்ணாவுக்குக் கடிதம் எழுதி எவ்வளவு நாள் ஆச்சு? இன்னும் பதிலே வரவில்லை” என்றாள் ராஜி.
கிருஷ்ணன் இங்கே வந்த அன்றே ராஜியை விட்டுக் கடிதம் எழுத வைத்தேன். அதில் இங்கே தான் சௌக்கியமாக இருப்பதாகவும், தன்னுடைய திருமணப் பேச்சை இப்போதைக்கு எடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுப்பதாகவும் எழுதியிருந்தாள். நானும் கடிதம் எழுதி அதே கவரில் வைத்தேன். ஒரே ஒரு மாதம் அவகாசம் கொடுக்கச் சொல்லியும், அதற்குள் ராஜிக்கு என்னால் வரன் பார்க்க முடியவில்லை என்றால் அவளை மெலட்டூருக்கு அனுப்பி வைத்து விடுவதாகவும் எழுதியிருந்தேன். அந்தக் கடிதம் கிருஷ்ணனுக்கு போய்ச் சேர்ந்ததோ இல்லையோ தெரியாது. அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
வாசலில் கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. “மாமி வந்து விட்டாள் போலிருக்கு” என்றாள் ராஜி.
ஆனால் உள்ளே வந்த நபர் அம்மா இல்லை, சாரதி. அவனைப் பார்த்ததும் ராஜி சட்டென்று உல்லன் கண்டை எடுத்துக் கொண்டு உள்ளே போகப் போனாள். நான் அவளுடைய புடவைத் தலைப்பை அழுத்தமாக பிடித்துக் கொண்டேன். அவள் விடச் சொல்வது போல் என்பக்கம் பார்த்தாள். நான் அவளை உட்காரச்சொல்லி கண்ணாலேயே ஜாடை காட்டினேன். ராஜி சங்கடப்பட்டுக்கொண்டே உட்கார்ந்து கொண்டாள்.
சாரதி எங்களுக்கு எதிரே இருந்த சோபாவில் உட்கார்ந்துகொண்டே ராஜியின் பக்கம் பார்த்து “ராஜேஸ்வரி! நீங்க கொஞ்சம் உள்ளே போறீங்களா? நான் மீனாவுடன் பேச வேண்டும்” என்றான்.
ராஜி மிரண்டு விட்டவள் போல் தலையை அசைத்தாள். என் கையில் சிக்கியிருந்த புடவைத் தலைப்பை விடுவித்துக் கொண்டே நாலே எட்டில் உள்ளே போய்விட்டாள். என் கன்னத்தில் சூடாக ரத்தம் பாய்ந்தது. ராஜியை இப்படி வலுக்கட்டாயமாக உள்ளே போகச் சொன்னதற்கு சாரதியின்மீது கோபம் வந்தது. சூடாக ஏதாவது பதில் சொல்லியிருப்பேன். ஆனால் அம்மாவின் எச்சரிக்கை நினைவுக்கு வந்ததால் லகான் போட்டது போல் நின்றுவிட்டேன். சீரியஸாக மடியில் இருந்த புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன்.
“மீனா! உன்னிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்கப் போகிறேன். எந்த தயக்கமும் இல்லாமல் பதில்சொல்லணும்.”
என்னவென்பது போல் பார்த்தேன்.
சாரதி குரலை கனைத்தக் கொண்டான். “அடுத்த வாரம் நமக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது. இந்தத் திருமணத்திற்கு நீ மனப்பூர்வமாக சம்மதிக்கிறாயா?”
நான் பதில் சொல்லவில்லை.
“மீனா! நீ ஒன்றும் சின்னக் குழந்தையில்லை. விஷயத்தை நேராகச் சொல்லிவிடுவது நம் இருவரின் எதிர்காலத்திற்கும் நல்லது. திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்.”
“முதலில் உங்களுடைய அபிப்பிராயம் என்னவென்று சொல்லுங்கள்.”
“முதலில் கேள்வி கேட்டது நான். பதில் சொல்ல வேண்டியவள் நீ. உன் பதிலைக் கேட்ட பிறகு உனக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கட்டாயம் தீர்த்து வைக்கிறேன். நாமிருவரும் வருங்கால கணவன் மனைவி என்று இல்லாமல் வெறும் நண்பர்களாக இந்த நிமிடம் பேசிக்கொள்வோம்.”
நான் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு பிறகு நிதானமான குரலில் சொன்னேன். “நீங்கள் கேட்ட கேள்வி எனக்குப் புரிகிறது. ஆனால் என்னால் தெளிவாக பதில் சொல்ல முடியவில்லை. ஏன் என்றால் எதையும் நான் என் கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டேன். அம்மாவின் அபிப்பிராயத்தை என்னுடையதாக எடுத்துக்கொள்வேன். உங்கள் விஷயத்¨தில் மட்டும்தான் என்று இல்லை. சின்ன வயதிலிருந்தே நான் இப்படித்தான். அம்மாவுக்கு எது நல்லது என்று படுமோ அதுதான் எனக்கும் நல்லது என்று தோன்றும். உதாரணமாக நான் கட்டியிருக்கும் இந்தப் புடவையை எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய கட்டங்கள், நடுவில் பூக்கள். எனக்குக் கொஞ்சம் கூட பொருந்தாது. கடைக்குள் போனபோது இந்தப் புடவையைப் பார்த்ததும் ‘சீ… எவ்வளவு காடீயாக இருக்கு?’ என்று அருவருப்படைந்தேன். ஆனால் அம்மா இந்தப் புடவையைத்தான் செலக்ட் செய்தாள். புடவையில் கலரும், டிசைனும் அற்புதமாக இருக்கு என்றாள். இப்போ பார்த்தால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. எனக்கு புடவை என்றாலும் ஒன்றுதான். கணவன் என்றாலும் ஒன்றுதான். அம்மா உங்களை எனக்குத் தகுந்த கணவன் என்று தேர்வு செய்து இருக்கிறாள். நானும் அதை மனப்பூர்வமாக நம்புகிறேன்.”
சாரதி வாயடைத்து விட்டவன் போல் பார்த்தான். “அவ்வளவுதானே தவிர உனக்கு என்று தனிப்பட்ட அபிப்பிராயம் எதுவும் இல்லையா?”
“அபிப்பிராயமா? அப்படி என்றால்?”
“என்னைப் பற்றிய விருப்பு வெறுப்புகள்.”
“எனக்குத் தெரியாது. இருந்தாலும் புடவை, நகை வாங்கும் போது முன் கூட்டி யோசிக்கணும். அவை நமக்குப் பொருந்துமா பொருந்தாதா என்று பார்க்கணும். திருமண விஷயத்தில் விருப்பு வெறுப்புகள் எதற்கு? சிறியவர்கள் நாம். நமக்கு இந்த விஷயத்தில் என்ன தெரியும்? பெரியவர்கள் சொத்து சுகத்தைப் பார்ப்பார்கள். எல்லாம் சரியாக இருந்தால் பொருத்தமாக இருக்கிறது என்று முடிவு செய்வார்கள். உண்டா இல்லையா சொல்லுங்கள்?”
சாரதி பதில் சொல்லவில்லை. பெருமூச்சு விட்டான்.
“நீங்க கேட்க வந்த முக்கியமான விஷயம் இதுதானா?”
“ஆமாம்.” பலவீனமான குரலில் சொல்லிக் கொண்டே தலையை அசைத்தான்.
“நல்ல ஆள்தான் போங்க. நான் வேறு என்னவோன்னு நினைத்தேன். இந்தச் சின்ன விஷயத்திற்காகவா ராஜியை உள்ளே போகச் சொல்லி துரத்தினீங்க? நீங்க யாரையோ காதலிக்கிறீர்களாக்கும், இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று நிச்சயதார்த்தத்தை கான்சல் செய்வதற்கு அம்மாவிடம் சொல்லச் சொல்லி கேட்க வந்தீங்களாக்கும் என்று நினைத்தேன். உங்களுடைய போக்கைப் பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றியது” என்றேன்.
சாரதி அதிர்ந்துவிட்டவன் போல் பார்த்தான். நான் எழுந்து ராஜியை அழைப்பதற்காக உள்ளே போய் விட்டேன்.
அன்று மதியம் என்னிடம் பேசிய பிறகு சாரதிக்கு என்ன ஆச்சோ அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். அவன் எங்கள் வீட்டுக்கு வருவதை நிறுத்தவில்லை. பார்க்கப் போனால் இன்னும் அடிக்கடி வந்து கொண்டிருந்தான். வந்த போதெல்லாம் ஏதாவது சாக்கு வைத்துக் கொண்டு ராஜியிடம் பேசிக்கொண்டிருந்தான். நான் எதிரே இருந்தால் அவளிடம் அளவுகடந்த அக்கறையைக் காண்பித்தான். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவளுடைய கையைப் பற்றி “உங்களுடைய விரல்கள் ரொம்ப நளினமாக இருக்கு” என்று பாராட்டினான். லூசாக பின்னிக்கொண்டால் உங்களுக்கு அழகாக இருக்கும் என்றும் அறிவுரைகளை வழங்கினான். சாரதியின் மனதில் என்ன இருக்கிறெதென்று எனக்குத் தெளிவாக புரியவில்லை. ஆனால் அவன் இப்படி நடந்து கொள்வதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்று மட்டும் புரிந்தது.
ராஜி அவனுடைய செயல்களைக் கண்டு மிரண்டு போய்விட்டாள். அவன் இந்தப் பக்கம் வருகிறான் என்று தெரிந்தால் போதும் மின்னல் வேகத்தில் அந்த இடத்தை விட்டு மாயமாகிக் கொண்டிருந்தாள்.
கடைசியில் ஒரு நாள் சாரதி கேட்டுவிட்டான். “மீனா! உன் சிநேகிதியுடன் நான் இப்படி உரிமையுடன் பழகினால் உனக்கு ஒன்றுமே தொன்றவில்லையா?”
அப்பாவியைப் போல் பார்த்தேன். “நினைத்துக்கொள்ள என்ன இருக்கு இதில்? எனக்கு ஒன்றும் தோன்றவில்லையே?”
சாரதி குழப்பத்துடன் என்னைப் பார்த்தான். “உனக்கு என்மீது ஒருநாளும் கோபமே வராதா?”
“ஏன் வராது? எந்தக் காரணத்தினாலேயாவது உங்களுக்கு வேலை போய்விட்டால் எனக்கு ஆத்திரமாக இருக்கும். கடனாளியாகி தெருவுக்கு வந்துவிட்டால் கோபம் வரும். பணம் படைத்த ஆண்மகனிடம் எந்தப் பெண்ணுக்காவது கோபம் வருமா? பணம் இல்லாதவர்களின் நிழலைக் கூட என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அப்படிப் பட்டவர்களை முழுவதுமாக வெறுக்கிறேன்.”
சாரதி கண்ணிமைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். பந்தயத்தில் தோற்றுப் போனவன் போல் அவன் முகம் தென்பட்டது. பட்டணத்திலேயே பிறந்து வளர்ந்த ஒருவன் காட்டு மனிதனை பார்ப்பது போல் இருந்தது அந்தப் பார்வை. அவன் கண்களுக்கு நான் வடிகட்டின முட்டாள் போலவும், கடைந்தெடுத்த அசடு போலவும் தென்பட்டிருக்க வேண்டும்.
திருநாகம் மாமி அன்றாடம் எனக்கு ரகசியமாக விவரங்களை தெரிவித்துக் கொண்டிருந்தாள். சாரதி நாங்கள் வீட்டில் இல்லாத போது ராஜிக்கு போன் செய்து பேசுகிறான். வீட்டில் நாங்கள் இருந்த போதும் வாய்ப்பு கிடைத்த நேரத்தில் அவளிடம் பேசிக்கொண்டுதான் இருந்தான்.
ஒருநாள் இரவு ராஜி திடீரென்று வீட்டுக்குப் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.
“என்ன காரணம் சொல்லு?” என்று கேட்டேன்.
“அண்ணனிடமிருந்த கடிதம் வரவில்லை.”
“இதுதானா விஷயம்? இந்த மாதக் கடைசியில் வருவதாக சொல்லியிருக்கிறானே?”
“எனக்கு இங்கே இருக்கணும் என்று தோன்றவில்லை.”
“அதுதான் காரணம் என்னவென்று கேட்கிறேன். நீ சொல்லும் அந்தக் காரணம் எனக்கும் சரி என்று பட்டால் கட்டயம் அனுப்பி வைக்கிறேன். இல்லாவிட்டால் சிறையில் இருப்பதாக நினைத்தாலும் சரி, நீ இங்கேதான் இருந்தாகணும். நான் உன்னை அனுப்பப் போவதில்லை.”
“அண்ணீ! உன்னிடம் எப்படிச் சொல்லுவேன்?” ராஜியின் விழிகளில் கிர்ரென்று நீர் சுழன்றது.
நான் அவள் தோள் மீது கையை போட்டு நயமான குரலில் சொன்னேன். “இத்தனை நாட்களும் இருந்துவிட்டு என் கல்யாணத்திற்கு முன்னால் கிளம்பிப் போகிறேன் என்கிறாயோ? என் திருமணத்தைப் பார்ப்பதில் உனக்கு விருப்பம் இல்லையா?”
ராஜி நிமிர்ந்து என் பக்கம் பார்த்தாள். அவள் வாய்க்கு பூட்டு போடப்பட்டு விட்டது. அதற்குப் பிறகு போகிறேன் என்ற வார்த்தையை அவள் சொல்லவில்லையே தவிர ஊமைவேதனை அனுபவித்துக் கொண்டிருப்பது போல் தென்பட்டாள். சாரதி தன்னிடம் எடுத்துக் கொள்ளும் உரிமையை சகித்துக் கொள்ளவும் முடியாமல், என்னிடம் சொல்லவும் முடியாமல் நலிந்து போய்க் கொண்டிருந்தாள். அவளுக்காக சில வேதனைகளை சகித்துக்கொள்ளவும், வெசவுகளை வாங்கிக் கட்டிக் கொள்ளவும் நான் தயாராக இருப்பது போல் அவளும் எனக்காக சில இடைஞ்சல்களை பொறுத்துக்கொள்ளட்டும். ஒருத்தருக்காக ஒருத்தர் வருத்தப்படுவதில், வேதனையை அனுபவிப்பதில் எங்களுடைய நட்பு மேலும் புனிதமடையும்.
அன்று மாலையில் குளித்துவிட்டு உடைகளை மாற்றிக்கொள்ளும் போது திருநாகம் மாமி அறைக்குள் வந்தாள். “அப்பா உங்களை வரச்சொன்னார்” என்றாள்.
என் காதுகளை என்னால் நம்பவே முடியவில்லை. அப்பா என்னிடம் தனிமையில் பேசி எத்தனை நாட்கள் ஆகிவிட்டது? “எங்கே இருக்கிறார்?” என்று கேட்டேன்.
“ஆபீஸ் அறையில்” என்று சொல்லிவிட்டு மாமி போய்விட்டாள். நான் வேகமாக ஆபிஸ் அறை பக்கம் போனேன். அம்மா குளியல் அறையில் இருந்தாள். முக்கியமான விஷயம் இருந்தால் தவிர அப்பா என்னை அழைக்க மாட்டார். என்னவாக இருக்கும்?
நான் உள்ளே சென்றேன். அப்பா பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தார். எங்க இருவருக்கும் நடுவில் பேப்பர் குறுக்கே இருந்ததால் நான் வந்ததை அப்பா கவனிக்கவில்லை. நான் குரலை கனைத்தக் கொண்டேன். அப்படியும் அப்பா பேப்பரை எடுக்கவில்லை. என் வருகையை உணர்ந்த பிறகும் வேண்டுமென்றே பார்க்காதது போல் இருக்கிறார் என்று புரிந்துகொண்டேன்.
கடைசியில் நானே கேட்டேன். “என்னை அழைத்தீங்களாமே?”
அப்பா பேப்பரை நிதானமாக மடித்து வைத்தார். மூக்குக் கண்ணாடியை நீக்கி அதை பேப்பர் மீது வைத்தார். பிறகு சீரியஸான குரலில் கேட்டார். “நம் விட்டில் ராஜி இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கப் போகிறாள்.?”
அவருடைய கேள்விக்கு திகைத்துப் போனேன். அப்பாவின் உத்தேசம்தான் என்ன? ராஜி இந்த வீட்டுக்கு வேற்று மனுஷி என்பதுபோல் பேசுகிறாரே?
“அவளுக்கு நாம் திருமணம் முடிக்கும் வரையில்.” பிடிவாதமாக சொன்னேன்.
“திருமணம்தானே! அவள் யாரென்று தெரிந்தால் உங்க அம்மா முதலில் உன்னையும் என்னையும் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள். அவளை நீ இங்கே அழைத்து வந்தது முதல் எப்போ என்ன நடக்குமோ என்ற பயத்தில் நான் சரியாகத் தூங்கவே இல்லை. அந்த விஷயம் உனக்குத் தெரியுமா?”
நான் தலை குனிந்தபடி நின்றிருந்தேன். அப்பா சற்று நேரம் பேசவில்லை. என் உற்சாகம் அப்படியே வடிந்து விட்டது. அப்பா என்னை அழைத்தது எச்சரிப்பதற்காகத்தானா?
அப்பா மெதுவான குரலில் கேட்டார். “சமீபகாலமாக சாரதி ராஜியிடம் காட்டும் அக்கறையை நீ கவனித்தாயா?”
“கவனித்தேன்.”
அப்பா வியப்புடன் பார்த்தார். “கவனித்த பிறகும் சும்மா பார்த்துக் கொண்டு இருந்தாயா?”
“என்ன செய்யட்டும்? சாரதியை என்னால் எதுவும் சொல்லமுடியாது. இதில் ராஜியைக் குற்றம் சொல்ல முடியாது. அவள் எந்த தவறும் செய்யவில்லை.”
அப்பா ஒரு நிமிடம் என்னை கூர்ந்து பார்த்தார். பிறகு கனிவான குரலில் என்னை அழைத்தார். “மீனா! இங்கே வாம்மா.”
அப்பாவின் அருகில் சென்றேன்.
“கண்ணம்மா! நீ என் மனதைக் கஷ்டப்படுத்த மாட்டாய் என்று எனக்குத் தெரியும். கமலாவின் குழந்தைகளை நான் எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ உனக்குத் தெரியாதது இல்லை. ராஜியின் காரணமாக எதாவது ரகளை ஏற்பட்டால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. நான் உங்க அம்மாவுக்கு பயப்படுவது ராஜி யாரென்று தெரிந்து விடுமோ என்பதற்காக இல்லை. சாரதிக்கும் ராஜிக்கும் நடுவில் ஏதாவது நடந்து விடுமோ என்று. உன் திருமணத்தைப் பற்றி நானும், அம்மாவும் எத்தனை ஆசைகளை வைத்திருக்கிறோமோ உனக்குத் தெரியாதது இல்லை.”
ரொம்ப நாட்ளுக்குப் பிறகு அப்பா இப்படி கனிவுடன் பேசியது என் இதயத்திலிருந்து பாரம் நீங்கினாற்போல் இருந்தது. என்னையும் அறியாமல் கண்களில் நீர் தளும்பியது.
“ஒரு விஷயம் சொல்கிறேன். கேட்கிறாயா?”
கேட்கிறேன் என்பது போல் தலையை அசைத்தேன்.
“மெலட்டூரிலிருந்து கிருஷ்ணன் வந்திருக்கிறான். நாளைக்கு திரும்பிப் போகிறான். ராஜியை அவனுடன் அனுப்பிவிடு. நீ சொன்னதுபோல் அவளுடைய திருமணத்தை நாமே நடத்துவோம். ஆனால் இங்கே நம் வீட்டில் இல்லை. மெலட்டூரில்தான் அந்த சுபகாரியம் நடக்கணும். ராஜிக்கு நாம்தான் வரனைப் பார்த்து முடிக்கணும் என்ற உன் பிடிவாதம் கிருஷ்ணனுக்கு சங்கடமாக இருக்கும். கல்யாணம் அங்கே நடந்தால் அவனுக்கு திருப்தியாக இருக்கும். என்ன சொல்கிறாய்?”
“கிருஷ்ணன் வந்தானா? எப்போ?” பதற்றத்துடன் கேட்டேன்.
“நேற்று வந்தான். பக்கத்து ஊரில் ஏதோ மர்டர் கேஸ் நடந்ததாம். கிளயிண்டை என்னிடம் அழைத்து வந்தான்.”
“எங்கே தங்கியிருக்கிறான்? அவன் வந்ததே எனக்குத் தெரியவில்லையே?”
அப்பா என் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். “எங்கே தங்கியிருக்கிறான் என்று எனக்குத் தெரியாது. நேற்று நேராக கோர்ட்டுக்கு வந்து சந்தித்தார்கள். ஏதோ ஹோட்டலில் தங்கியிருக்கிறார்களாம்.”
“எந்த ஹோட்டல்?”
அப்பாவின் முகம் சீரியஸாக மாறியது. “எனக்குத் தெரியாது. நான் கேட்கவில்லை” என்றார்.
எனக்கு ரொம்ப ஏமாற்றமாக இருந்தது. அவனும் சொல்லவில்லை. அப்பாவும் கேட்கவில்லை. ஏதாவது கேஸ் வந்துவிட்டால் அப்பாவுக்கு வேறு எதுவும் நினைவில் இருக்காது.
அதற்குள் அப்பாவுக்காக யாரோ வந்துவிட்டதால் அறையை விட்டு வெளியேறினேன். அன்று மாலை முழுவதும் டெலிபோன் முன்னால் மணை போட்டுக் கொண்டு உட்காரந்திருப்பது போல் எங்கேயும் நகராமல் உட்கார்ந்து கொண்டேன். ஆனால் போன் ஒலிக்கவே இல்லை. கிருஷ்ணன் போன் செய்யவே இல்லை. கிருஷ்ணன் இந்த ஊரில் எவ்வளவு நாட்கள் இருப்பான்? இருக்கிறானா? போய்விட்டானா? அப்பாவிடம் கேட்போம் என்றால் சரியான சமயம் கிடைக்கவில்லை. நிச்சயதார்த்தம் அருகில் வந்து விட்டதால் அதற்கான ஏற்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டு அம்மா அப்பாவின் கூடவே இருந்தாள். நிச்சயதார்த்தத்தைப் பற்றி அப்பா அவனிடம் சொல்லியிருப்பார். இந்தப் பரபரப்பில் என்னை சந்திப்பது சாத்தியம் இல்லை என்று நினைத்து போய்விட்டிருப்பானோ. ஏதோ நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் நாட்களை தள்ளிக் கொண்டு இருந்தேன்.
எதுவும் நடக்கவில்லை என்றால்? சாரதிக்கு மனைவியாகணும் என்று என் தலையில் எழுதியிருந்தால்?
இல்லை இல்லை. கட்டாயம் ஏதோ நடக்கும். என் மனதில் திரும்பத் திரும்ப யாரோ சொல்லிக் கொண்ருந்தார்கள்.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்