முள்பாதை 44

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

கால்மணி நேரம் கழித்து சுந்தரி வந்தாள்.
நான் என்ன செய்வதென்று தெரியாமல், சும்மாவும் இருக்க முடியாமல் அத்தையின் பக்கத்தில் அமர்ந்து பூக்களை தொடுத்துக் கொண்டிருந்தேன். சுந்தரி எங்களைத் தாண்டிகொண்டு அறைக்குள் வேகமாகப் போனாள். சற்று நேரம் கழித்து ராஜி எங்களிடம் வந்தாள்.
“அம்மா! அண்ணி அழுதுகொண்டு இருக்கிறாள். ஊருக்குப் போகிறேன் என்று துணிமணி எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறாள்.”
“ஊருக்குக் கிளம்புவதாவது? என்ன நடந்தது?” திகைத்துப் போனவளாக அத்தை கேட்டாள்.
“நான் எத்தனை தடவை கேட்டாலும் பதில் சொல்லவில்லை. நீ வந்து பாரு.”
அத்தை எழுந்து அறைப் பக்கம் போகப் போனாள். அதற்குள் சுந்தரியே வெளியில் வந்தாள்.
“என்னம்மா? என்ன நடந்தது?” பதற்றத்துடன் சுந்தரியிடம் கேட்டாள் அத்தை.
“உங்க மகன் என்னை போ என்று சொல்லிவிட்டார்.” விசும்பிக் கொண்டே சொன்னாள்.
“அவனா? உன்னையா? எதுக்கு?”
“வந்த பிறகு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.” சுந்தரி உண்மையிலேயே ரொம்ப அழுதிருப்பாள் போலும். கண்களும் முகமும் சிவந்து உப்பியிருந்தன.
அத்தை சுந்தரியின் கையைப் பற்றிக் கொண்டாள். “என்ன நடந்தது என்று சொல்லும்மா. அவன் தவறு செய்திருந்தால் நிச்சியமாக அவனைக் கண்டிக்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வரும்போது நீ ஊருக்கு போவதாவது?” என்றாள்.
சுந்தரிக்கு மறுபடியும் துக்கம் பொங்கி வந்தது போலும். கண்களில் நீர் சுழன்றது. தலையை குறுக்காக அசைத்துக் கொண்டே “எனக்கு மதிப்பு இல்லாத இடத்தில் நான் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன். அத்தை! என் கையை விடுங்கள். கொல்லையில் புடவையை உலர்த்தியிருக்கிறேன். போய் கொண்டு வருகிறேன்” என்றாள் அழுகையினூடே.
என் பக்கத்தில் அமர்ந்திருந்த மங்கம்மா திறந்த வாய் மூடாமல் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அத்தை சுந்தரியை அறைக்குள் அழைத்துச் சென்றாள். அவர்களுடன் ராஜியும் உள்ளே போனாள்.
மங்கம்மா ரகசியம் பேசுவது போல் குரலை தாழ்த்தி என்னிடம் “வேடிக்கைதான். புருஷன் பெண்டாட்டிக்குள் ஏதாவது சண்டையோ என்னவோ? அவன் அவளை போ என்று சொல்லி விட்டானாமே?” என்றாள்.
தாங்க முடியாத அளவுக்கு கோபம் வந்தது எனக்கு. இருந்தாலும் சமாளித்துக்கொண்டேன். இந்த சூழ்நிலையில் வாயைத் திறக்காமல் மௌனமாக இருப்பதுதான் உத்தமம். வீடு கொள்ளாமல் உறவினர்கள் இருக்கிறார்கள். ரசாபாஸமாக ஏதாவது நடந்தால் அவர்கள் முன்னால் அசிங்கமாக இருக்கும்.
இருந்தாலும் கிருஷ்ணன் சுந்தரியிடம் நயமாகப் பேசி சமாதானப் படுத்துவதை விட்டுவிட்டு போய்விடு என்று சொல்லுவதாவது? அந்தப் பெண் அவனை அவமானப் படுத்துவது போல் ஏதாவது சொல்லியிருப்பாளோ?
மங்கம்மாவை யாரோ அழைத்ததால் எழுந்து போனாள்.
உள்ளே அத்தை சுந்தரியிடம் கெஞ்சுவது போல் பேசுவது எனக்குத் தெளிவாக கேட்டுக் கொண்டிருந்தது.
“முதலில் அவன் வீட்டுக்கு வரட்டும். வந்த பிறகு விஷயம் என்னவென்று கேட்டுக் கொள்கிறேன். உண்மையிலேயே உனக்கு அவமானம் நேர்ந்த விட்டதாக எனக்கும் பட்டால் நானே உன்னை அனுப்பி வைக்கிறேன்” என்றாள்,
அரைமணி நேரம் கழித்து கிருஷ்ணன் வந்தான். அவன் பின்னாலேயே வேலைக்காரன் சாமந்தி பூக்கூடை எடுத்து வந்து கூடத்தில் இறக்கி வைத்துவிட்டு போனான். மது ஓடி வந்து “அண்ணா! உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள்” என்றான்.
கிருஷ்ணன் வெளியில் போகப் போனான்.
“கிருஷ்ணா! இப்படி வா முதலில்” என்று அழைத்தபடி வந்த அத்தை மகனை அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
கிருஷ்ணன் என்னைத் தாண்டிக் கொண்டு அ¨றுக்குள் போனான். எனக்கு உடனே அங்கிருந்து எழுந்து போய் விடவேண்டும் என்று தோன்றியது. ஆனால் உடலும், உள்ளமும் ஒத்துழைக்கவில்லை. அறைக்குள் நடந்து கொண்டிருக்கும் உரையாடலைக் கேட்கும் உரிமை தனக்கு இருக்கிறது என்று மனம் பிடிவாதம் பிடித்ததால் பூக்களைத் தொடுத்தபடி அங்கேயே உட்கார்ந்திருந்தேன்.
உள்ளே நடக்கும் உரையாடல் ஸ்பஷ்டமாக காதில் விழுந்து கொண்டிருந்தது.
“கிருஷ்ணா! என்ன இது? சுந்தரி போய் விடுகிறேன் என்கிறாளே?”
“போவதானால் போகட்டும் அம்மா! போகணும் என்று நினைப்பவர்களைப் பிடித்து வைத்தாலும் இருக்க மாட்டார்கள்.”
“என்னதான் நடந்தது? நீ அவளைப் போய் விடு என்று சொன்னாயாமே?”
“நானா? போய் விடு என்று அவளைச் சொன்னேனா? அப்படிச் சொன்னாளா உன்னிடம்?” கிருஷ்ணனின் குரல் வியப்புடன் ஒலித்தது.
“ஆமாம். உள்ளே வரும்போதே அழுதுகொண்டே வந்தாள். என்ன ரகளை இது? ஒரு பக்கம் மாப்பிள்ளை வீட்டார் வரப் போகிறார்கள். வீடு முழவதும் உறவுக்காரர்கள்.” அத்தைக்கு சும்மாவே அழுகை வந்து விடும்.
“சுந்தரியைக் கூப்பிடு. எங்கே அவள்?”
“கொல்லைப்புறம் உட்கார்ந்திருக்கிறாள். வீட்டிற்குள் வரச் சொல்லி எத்தனை கெஞ்சினாலும் மறுத்து விட்டாள். வண்¨டியைக் கூப்பிடவில்லை என்றால் நடந்தே போய் விடுவாளாம். இதைவிடத் தலைகுனிவு வேறு எதாவது இருக்குமா?”
“ராஜி! நீ போய் அந்தப் பெண்ணை இங்கே அழைத்து வா.”
ராஜி போய் சுந்தரியை அழைத்து வந்தாள். வலுக்கட்டாயமாக இழத்து வந்தது போல் அவளுடைய கை ராஜியின் கைப்பிடியில் சிறைப்பட்டிருந்தது.
“அண்ணா! வரச்சொன்னால் மாட்டவே மாட்டேன் என்றாள். வலுக்கட்டாயமாக அழைத்து வந்தேன்.”
“அம்மாவிடம் என்ன சொன்னாய்? நான் உன்னை போய்விடு என்று சொன்னேனா?” கோபத்தை அடக்கிய குரலில் கிருஷ்ணன் கேட்டான்.
“நீங்க … நீங்க என்னுடைய பேச்சைக் கேட்கவில்லை என்றால் அதனுடைய அர்த்தம் அதுதானே?” சுந்திரியின் குரல் அழுகைனூடே ஒலித்தது.
“சரி. இந்த ஒருநாள் மட்டும் என்னுடைய பேச்சை கேள். நாளை முதல் வாழ்நாள் முழுவதும் உன்னுடைய பேச்சை கேட்கிறேன்.” அமைதி கலந்த குரலில் சொன்னான் கிருஷ்ணன்.
“என் வார்த்தைக்கும், எனக்கும் மதிப்பு இல்லாத இடத்தில் இருக்கணும் என்ற தலையெழுத்து எனக்கு ஒன்றும் இல்லை. நான் ஒன்றும் நாதியற்றவள் இல்லை.”
“சுந்தரி! என்ன பேச்சு இது?” அத்தை லேசாக கடிந்து கொண்டாள்.
“அத்தை! நீங்களே சொல்லுங்கள். என் கண்ணால் சுயமாக பார்த்த பிறகும் என்னை நானே எப்படி ஏமாற்றிக் கொள்வது? உங்கள் மனதில் எனக்கு மதிப்பு இருக்கோ இல்லையோ இன்றைக்கே தெரிந்து போகணும். உங்களுக்கு அவளிடம் உண்மையிலேயே எந்த விதமான ஈர்ப்பும் இல்லை என்றால் பயம் எதற்கு?”
“பயமா? வீட்டுக்கு வந்த பெண்ணை அவமானப்படுத்துவது மரியாதைக் குறைவு இல்லையா?”
“அப்படி என்றால் இது எனக்கு நேர்ந்த அவமானம்தான். நான் அப்படித்தான் நினைக்கிறேன்.”
“நடந்ததில் எனக்கும் பங்கு இருக்கு என்பதை மறந்து விடாதே.”
“உங்களை என்னால் மன்னிகக முடியும். ஆண்களின் பலவீனம் எனக்குப் புரியும்.”
அறையில் சற்று நேரம் நிசப்தம் நிலவியது.
“என்ன அண்ணா? என்னதான் நடந்தது?” ராஜி பதற்றத்துடன் கேட்பது காதில் விழந்தது.
கிருஷ்ணன் ராஜியின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. “சரி. எல்லாவற்றையும் விட்டுவிடு. உன்னை இருக்கச் சொல்லி கேட்டுக் கொள்கிறேன். உன் மனதிற்கு வேதனை ஏற்பட்டிருந்தால் என்னை மன்னித்துவிடு. இப்போ வேறு எந்த பிரச்னையும் கிளப்ப வேண்டாம். பின்னால் விவரமாக சொல்லுகிறேன்.”
“நான் இருக்கணும் என்று உண்மையிலேயே நீங்க நினைத்தால் அவளை இந்த நிமிடமே அனுப்பி விடுங்கள். சொல்லுவதற்கு உங்களுக்குத் தயக்கமாக இருந்தால் நான் சொல்லி விடுகிறேன்.”
“அது நடக்காத காரியம்.”
“அப்படியென்றால் என் பயணத்தை நிறுத்துவதும் அசாத்தியம்.”
“நன்றாக யோசித்துக் கொள். இன்று நீ என் பேச்சைக் கேட்காமல் போய்விட்டால் விஷயம் ரொம்ப தூரத்திற்குப் போகும்.”
“ஏற்கனவே ரொம்பதூரம் போய்விட்டது என்றுதான் பயப்படுகிறேன். அதுதான் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் இருக்க நினைக்கிறேன்.”
“சரி. உன் விருப்பம்.”
கிருஷ்ணன் எழுந்து கொணடான். அத்தை கூப்பிட கூப்பிட காதில் வாங்கிக் கொள்ளாமல் வெளியே வந்து விட்டான்.
அவனை நிமிர்ந்து பார்க்கும் துணிச்சல் எனக்கு இருக்கவில்லை. இதைவிடப் பெரிய அவமானம் எனக்கு வேறு இல்லை என்று தோன்றியது.
சுந்தரி என்னைக் கடந்து கொண்டு போய் விட்டாள். ராஜியும், அத்தையும் வெளியே வந்தார்கள். ராஜி என் அருகில் வந்தாள். நடந்ததில் எனக்கும் பங்கு இருப்பதை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ அவளுடைய பார்வை என் முகத்தில் நிலைத்துவிடது.
நான் ராஜியின் கையைப் பற்றி இழுத்து என் அருகில் உட்கார வைத்தேன். நடந்ததை எல்லாம் சுருக்கமாகத் தெரிவித்தேன். ராஜி திகைத்துப் போனவளாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
கையிலிருந்த பூச்சரத்தைப் பக்கத்தில் வைத்துவிட்டு சொன்னேன். “ராஜி! ஊருக்குப் போவதற்கு எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. சுந்தரியிடம் சொல்லு.”
நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆசாரிமாமா உள்ளே வந்தார். மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்களாம். அவர்களுக்கு உடனே காபி அனுப்ப வேண்டுமாம். அந்த ஏற்பாடுகளை கவனிக்கச் சொல்லி அவசரப்படுத்தினார். அத்தை அரக்க பரக்க உள்ளே போனாள். வீடு முழுவதும் சந்தடியாகி விட்டது.
ராஜி வீடு முழுவதம் தேடினாள். சுந்தரியைக் காணவில்லை. போய் விட்டிருந்தாள். அந்தப் பெண்ணின் பிடிவாதமும், வீம்பும் எனக்கு வியப்பை அளித்தன. தான் சொன்னது நடக்கவில்லை என்பதற்காக இவ்வளவு கோபமா? ஒரு பெண் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது சரி இல்லையோ.
உறவினர்களுக்கு இடையே இந்த விஷயம் எப்படி பரவியதோ தெரியவில்லை. குசுகுசுவென்று பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள். எனக்கு முள்மீது இருப்பது போல் இருந்தது. காரியங்கள் பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தன. அத்தை மற்றும் ராஜியின் முகங்களில் கவலை தென்பட்டது.
சுந்தரி கிளம்பிப் போய் விட்டாள் என்று தெரிந்ததும் அத்தை சாமிகண்ணுவை பின்னாலேயே போகச் சொல்லி அனுப்பி வைத்தாள்.
மாப்பிள்ளை வீட்டார் சாப்பிட்டு முடித்த பிறகு வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டு எழுந்து கொண்டார்கள்.

*******
இரவு பத்துமணியாகிவிட்டது. வராண்டாவில் இருந்த சின்னதாத்தா உள் பக்கம் திரும்பி பெரிதாக குரல் கொத்தார். “கமலா! உங்க சம்பந்தி வந்திருக்கிறார். கால் அலம்ப ஜலம் கொண்டுவா. வாங்க … வாங்க. உங்களுக்கே இது நியாயமாக இருக்கா? எல்லோரையும்விட முன்னாடியே வரவேண்டிய நீங்க இவ்வளவு தாமதமாக வருவதா?”
சின்ன தாத்தாவுக்கு சுந்தரி கோபித்துக் கொண்டு போய்விட்ட சமாசாரம் தெரியும்.
ராஜி சொன்னதிலிருந்து வந்த ஆசாமி சுந்தரியின் தந்தை என்று புரிந்து கொண்டேன். தந்தையுடன் சுந்தரியும் வந்திருப்பாணோ என்ற எதிர்பார்ப்புடன் ராஜியும், நானும் வாசலுக்குச் சென்றோம். புருஷோத்தமனைப் பார்த்ததும் சுந்தரியின் தந்தை என்று சொல்லிவிட முடியும். ஜாடை ரொம்பவே இருந்தது.
தாத்தாவின் வரவேற்பைக் கண்டு அவர் ஒன்றும் பூரித்துப் போகவில்லை. உள்ளேயும் வரவில்லை. ராஜி எடுத்து வந்த தண்ணீர் சொம்பை வாங்கி கால்களையும் கழுவி கொள்ளவில்லை.
“கிருஷ்ணன் எங்கே?” என்று கேட்டார்.
“உள்ளே இருக்கிறான். நீங்க உள்ளே வாங்க.” அத்தை பணிவான குரலில் சொன்னாள்.
“அவனை இங்கே கூப்பிடுங்கள். அவனுடன் பேசத்தான் வந்திருக்கிறேன்.”
அவருடைய தோரணையைக் கண்டு அத்தையும், ராஜியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதற்குள் ஏதோ வேலையாக கிருஷ்ணன் அங்கே வந்தான்.
“ஏண்டா? நீ ஏதோ புத்திசாலி என்றும், பொறுப்பு தெரிந்தவன் என்றும் இத்தனை நாளும் நினைத்து வந்தேன். இதுதானா நீ செய்யும் காரியம்?” கர்ஜிப்பது போல் கத்தினார்.
கிருஷ்ணன் அவருக்கு எதிரில் வந்து நின்று கொண்டான். அவன் முகம் கடினமாக இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் புருஷோத்தமன் வந்த நோக்கத்தை கண்டுபிடித்து விட்டான் போலும். அமைதியான குரலில் கேட்டான். “இப்போ நீங்க சண்டை போட வந்தீங்களா இல்லை கல்யாணத்திற்கு வந்தீங்களா?”
“இரண்டிற்கும் இல்லை. உன்னிடம் விளக்கம் கேட்க வந்தேன். பெண்பிள்ளையை இருட்டு வேளையில் அப்படி தனியாக அனுப்பி வைப்பாயா? நீயும் ஒரு மனிதன் தானா? கொஞ்சமாவது உனக்கு மூளை இருக்கா?”
“நான் இரு சொன்ன பிறகும் அவள் கேட்கவில்லை. நான் என்ன செய்யட்டும்?”
“இரு என்று சொன்னாயா? தலையில் சாணத்தைக் கரைத்து கொட்டிவிட்டு இரு என்று சொன்னால் யாராவது இருப்பார்களா? அவ்வளவு வெட்கங்கெட்டவர்கள், நாதியற்றவர்கள் யாருடா இங்கே?”
கிருஷ்ணன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றவனாக இதழ்களை இறுக்கி அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சின்னதாத்தா இடையில் புகுந்த சொன்னார். “நடந்ததேதோ நடந்து விட்டது. சிறிய விஷயத்தைப் பெரிசுப்படுத்திப் பேசுவது சரியில்லை. வீடு முழுவதும் உறவினர்கள் இருக்கிறார்கள். நாம் அப்புறமாக நிதானமாக பேசிக் கொண்டால் நன்றாக இருக்கும்.”
“நீங்க கூட அவன் பக்கமே பேசுறீங்களே? என் மகள் இருட்டில் தனியாக ஒற்றையடி பாதையில் நடந்து வந்தாள் என்றால் அவள் மனசுக்கு எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டிருக்கும்? தாய் மகன் இருவருக்கும் மூளை எங்கே போச்சு? போனால் போகட்டும் என்று சும்மா விட்டு விடுவார்களா? இருட்டில் எந்த பூச்சியோ பொட்டோ தீண்டியிருந்தால் என் மகளின் கதி என்ன? அப்படி அவள் போகிறேன் என்று பிடிவாதமாக சொன்னால் ஆளை துணைக்கு அனுப்பியிருக்கக் கூடாதா? இல்லை நீதான் கொண்டு விட்டிருக்கக் கூடாதா?”
அவருடைய கத்தலைக் கேட்டு வீட்டில் அங்கே இங்கே என்று கூடியிருந்த உறவினர்கள் எல்லோரும் வாசலுக்கு வந்து விட்டார்கள். எல்லோரும் கும்பலாக நின்றுகொண்டு ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“அவள் கிளம்பிப் போனதே எங்களுக்குத் தெரியாது” என்றான் கிருஷ்ணன் விளக்கம் தருவது போல்.
“தெரியாதா? எப்படித் தெரியும்? சுயநினைவு தெரியும் நிலையில் நீ இருந்தால் தானே? உனக்கு என்னுடன் வேலை முடிந்து விட்டது. வடிகட்டின முட்டாள் போல் நானும் முன்னாடியே வரதட்சணை பணத்தை உன் கையில் கொடுத்துவிட்டேன். உன் தங்கையின் கல்யாணம் முடிந்து விடும். இனி உனக்கு மற்றவர்களுடன் என்ன வேலை? நானும் என் மகளும் எப்படிப் போனால் உனக்கு என்ன வந்தது?”
கிருஷ்ணன் ஒரு அடி முன்னால் வைத்து வலிய வரவழைத்துக் கொண்ட பணிவுடன் மென்மையான குரலில் சொன்னான். “தயவுசெய்து நீங்க இந்த விஷயமாக மேற்கொண்டு எதுவும் பேசவேண்டாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் மற்ற உறவினர்களைப் போல் இருங்கள். இல்லையா கிளம்பிப் போய் விடுங்கள். நாம் அப்புறமாக பேசிக் கொள்ளலாம். இப்பொழுது வேண்டாம்.”
அந்த வார்த்தைகளை கேட்டதும் புருஷோத்தமன் எண்ணெயில் விழுந்த அப்பம் போல் குதிக்கத் தொடங்கிவிட்டார். “என்னது? என்னையே போகச் சொல்கிறாயா? அவ்வளவு பெரிய மனுஷன் ஆகிவிட்டாயா? பேஷ்! இந்த திமிரு எல்லாம் அந்தப் பெண்ணைப் பார்த்துதானே? டேய்! வீட்டுக்கு வந்து போய்க்கொண்டு இருக்கிறாளே, இனி கழுத்தில் தாலி கட்டி விடலாம்னு மனதில் கும்மாளம் போட்டுக் கொண்டு இருக்கிறாயோ என்னவோ. உங்க மாமா மாமியின் விஷயம் உனக்குத் தெரியாது. எனக்கு நன்றாகத் தெரியும். உன்னை வீட்டு வாசற்படி ஏறவே விடமாட்டார்கள். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவார்கள். உன்னைப் போன்ற படிக்காத பட்டிக்காட்டு மூஞ்சிக்கு மகளைக் கட்டி வைப்பார்கள் என்று நினைத்தாயா?”
கிருஷ்ணனின் முகம் கன்றிச் சிவந்து விட்டது. கண்கள் நெருப்புத் துண்டங்களாக ஜொலித்தன. புருஷோத்தமனின் தோளைப் பற்றி அப்படியே தள்ளிவிட்டான். அந்த தள்ளலுக்கு பின்னால் விழப்போனவர் எப்படியோ சமாளித்தக் கொண்டார்.
“கிருஷ்ணா! அவசரப்படாதே.” சின்ன தாத்தா சட்டென்று இருவருக்கும் நடுவில் புகுந்து கிருஷ்ணனின் கைகளை பலமாக பற்றிக் கொண்டார்.
கிருஷ்ணனின் குரல் சிம்ம கர்ஜனையாக ஒலித்தது. “மரியாதையாக அவரை உடனே இந்த இடத்தை விட்டு போகச் சொல்லுங்கள்.”
“போகவில்லை என்றால் என்ன செய்து விடுவாய்? அடிப்பாயா?” புருஷோத்தமன் கருவிக் கொண்டே முன்னால் வரப்போனார்.
ஆசாரிமாமா சட்டென்று தடுப்பது போல் புருஷோத்தமனின் கையைப் பிடித்துக் கொண்டார். “அய்யர்வாள்! எதுக்கு இந்த ரகளை? பெரியவர்கள் செய்ய வேண்டிய காரியம் இதுதானா? சிறிசுகள் தெரியாமல் ஏதாவது செய்தால் பார்த்தும் பார்க்காதது போல் போகணும். தனிமையில் கூப்பிட்டு புத்திமதி சொல்லணும். அவவளவுதானே தவிர இப்படி சந்தி சிரிக்கும்படி நடந்து கொள்ளலாமா? என் பேச்சைக் கேளுங்கள். கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.”
“இந்த புத்திமதி எல்லாம் அவனிடம் சொல்லிக்கொள். என்னையே கை நீட்டி அடிக்க வந்து விட்டான். அவனுக்கு ஒரு முடிவு கட்டவில்லை என்றால் என் பெயர் புருஷோத்தமன் இல்லை.” தோளில் கிடந்த அங்கவஸ்திரத்தை உதறி போட்டுக் கொண்டு திரும்பி வேகமாக நடந்தார். நாலடி வைத்தவர் பின்னால் திரும்பி கண்களை உருட்டி அத்தையின் பக்கம் பார்த்தார். “கமலாம்மா! பார்த்துக் கொண்டே இரு. என்னை அவமானப்படுத்தியதற்கு நீயும் உன் மகனும் அனுபவிக்கத்தான் போறீங்க. பகை என்று வந்துவிட்டால் நான் பாம்புதான். நினைவில் வைத்துக்கொள்.”
கோபத்தை, ஆவேசத்தை பலவந்தமாக விழுங்கிக் கொள்வது போல் கிருஷ்ணன் காட்சியளித்தான். உறவினர்கள் எல்லோரும் என் பக்கம் வித்தியாசமாக, ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினார்கள். இதற்கெல்லாம் காரணம் நான்தான் என்று தெரிந்துவிட்டது. எல்லோரின் கண்களும் என்னை பரிசீலிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தன. எனக்கு உடல்மீது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் இருந்தது.
அத்தை, ஆசாரி மாமா, சின்ன தாத்தா மூன்று பேரும் கிருஷ்ணனை அவசரப்பட வேண்டாம் என்றும், மாப்பிள்ளை விட்டார் வந்திருக்கும் இந்த நேரத்தில் சண்டையை வளர்த்தால் ரசாபாஸமாகிவிடும் என்றும் சமாதானப்படுத்த முயன்றார்கள்.
எல்லோரும் பேசி முடித்துவிட்டு படுத்துக் கொள்ளும் போது இரவு ஒரு மணியாகிவிட்டது. இன்னும் பத்து மணி நேரம்தான். எப்படியோ கண்களை மூடிக்கொண்டால் முகூர்த்தம் முடிந்ததும் கிளம்பிப் போய்விடலாம். நான் போய்விட்டால் தானே எல்லாம் சரியாகிவிடும். இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேன். என் மனம் முழுவதும் கசப்பான உணர்வு பரவியது.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்