கரைப்பார் கரைத்தால்

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

ஜோதிர்லதா கிரிஜா


‘இந்தப் பெண்ணை இதற்கு முன்னால் எங்கேயோ பார்த்திருக்கிறோமே?’ என்று இளங்கோ மண்டையை உடைத்துக்கொண்டான். ஏற்கெனவே பார்த்திருந்தது மட்டும் நினைவில் பதிந்திருந்ததே ஒழிய, எங்கே, எப்போது, எந்தச் சந்தர்ப்பத்தில் போன்ற விவரம் எதுவுமே நினைவுக்கு வரவில்லை. அந்தப் பெண்ணின் பெயர் வரலட்சுமி என்று அவன் அம்மா அவனுக்குச் சொல்லி யிருந்தாள். அந்தப் பெயரில் யாரையும் அவன் கேள்விப்பட்டது கூட இல்லை – திரைப்பட நடிகைக க¡லம் சென்ற எஸ். வரலட்சுமி ஒருவரைத் தவிர. பேருந்து நிறுத்தம், திருமண விழா இது போன்ற ஏதோ ஒன்றில் அவளைத் தான் தற்செயலாய்ப் பார்த்திருந்திருக்கக் கூடும் என்று அவனுக்குத் தோன்றியது.
ஜாதகப் பொருத்தம் நன்றாக இருப்பதாக அவன் அம்மாவும் அப்பாவும் அய்யர் மூலம் அறிந்த பிறகே பெண்பார்த்தலுக்கு அவனை இட்டுச் சென்றார்கள். திருமணத்தைக் கூடிய வரையில் ஒத்திப் போடவே அவன் விரும்பினான். ஆனால் இந்தப் பெரியவர்கள் தங்கள் வயதைக் காரணம் காட்டி, அழுது, சினந்து, ஆகாத்தியம் செய்து எப்படியோ இளைஞர்களைத் தங்கள் வழிக்குக் கொண்டுவந்து விடுகிறார்கள்.
அந்தப் பெண் எல்லாரையும் பார்த்துக் கும்பிட்டபின், அவன் அப்பா அனுமதித்ததன் பேரில் எதிரே விரித்து வைக்கப்பட்டிருந்த பாயில் உட்கார்ந்தாள். அவனுடைய அப்பா, “ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் பாத்துக்கிடுங்க. என்ன?” என்றார். குரல் அதட்டுகிற தொனியில் ஒலித்தது.
அந்தப் பெண் தன் தலையை உயர்த்தி அவனைப் பார்க்கவே இல்லை. ஒருவேளை தான் வீட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்த போதே கதவிடுக்கின் வழியாகவோ ஜன்னல் இடைவெளி வழியாகவோ தன்னைக் கவனித்திருந்திருப்பாளோ என்று அவன் எண்ணினான். எந்தப் பெண்ணுமே – அதுவும் இந்தக் காலத்தில் – தனக்கு நிச்சயம் செய்ய்ப்பட இருந்தவனை ஓரத்துப் பார்வை கூடப் பார்க்காமல் இருக்க மாட்டாளே என்றெண்ணி அவன் தன்னுள் சற்றே வியப்படைந்தான். எனவே அவள் இடுக்கு ஒன்றின் வழியாகத் தன்னைப் பார்த்திருப்பாள் என்னும் தனது ஊகம் சரியாகத்தான் இருக்கும் என்றும் நினைத்துத் தன்னுள் புன்னகை புரிந்துகொண்டான்.
“என்னம்மா! தலையை நிமித்தி என் மவனைப் பாக்கவே மாட்டேன்றாப்ல உக்காந்துக்கிட்டு இருக்கியே!” என்று அவன் அப்பா தொடர்ந்து அவளைக் கலாய்த்தார்.
அதன் பின் அவளுடைய அப்பாவும், “பெரியவர் சொல்றாரில்லே? ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் பாத்துக்கிடுங்க!” என்றார்.
அப்போது அவனுடைய அம்மா குறுக்கிட்டாள்: “வீட்டுக்குள்ளாற நொழையறப்பவே பாத்திருப்பாளா யிருமக்கும். அதான் குனிஞ்ச தலை குனிஞ்சபடியே குந்திக்கிட்டு இருக்கா!”
“அப்படித்தான் இருக்கும்!” என்று பெண்ணின் அம்மா தமுக்கடிக்க அந்தக் கூடத்தில் சிரிப்பலைகள் கிளம்பின. எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்த அந்தக் கணத்தில் அவன் அவளை முனைப்பாகக் கவனித்தான். அவள் முகத்தில் வெட்கமோ சிரிப்போ இல்லை என்பதையும், மாறாக அது இறுக்கம் கொண்டிருந்தது என்பதையும் அவனால் உணர முடிந்தது. அதில் ஒரு சிடுசிடுப்புக்கூடத் தென்பட்டதாய் அவனுக்குத் தோன்றியது. ‘ அவளுக்கு இந்தக் கலியாணத்தில் விருப்பம் இல்லையோ?’ என்று அவன் எண்ணினான். ‘இவளுக்கு வேறு யார் மீதோ நாட்டம் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அதனாலதான் முகம் இறுக்கமாய் இருக்கிறது! இவளை விசாரிக்காமல் இவளுடைய அழகுக்கு ஆசைப்பட்டு இப்போது தலையை ஆட்டிவிடக்கூடாது. பின்னால் ஏதேனும் பிரச்சினை வரும். இருவர் வாழ்க்கையும் நரகமாகிவிடக் கூடும்…’ – இப்படி யோசித்த அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.
“அய்யா! ஒரு நிமிஷம்!” என்று பெண்ணின் அப்பாவை நோக்கி அவன் சொல்ல, எல்லாரும் சற்றே திகைப்புடன் அவனைக் கவனித்தார்கள்.
சட்டென்று புன்னகை செய்த அவர், “என்ன! இந்தக் காலத்துப் பிள்ளைங்க எல்லாத்தையும் போல நீங்க எம் மகளைத் தனியாச் சந்திச்சுப் பேசணுமாக்கும்!” என்று வினவியபின், மகளைச் சாடையாகக் கணத்துக்கும் குறைவான நேரம் பாத்த்து விட்டு, “அதெல்லாம் என்னத்துக்குங்க? அவளுக்கு மேலுக்குச் சொகமில்லே. அதான் கொஞ்சம் விட்டேத்தியா இருக்கா. நாங்க பொண்ணு பாக்க ஒங்களை வரச்சொன்னதே உங்க ஃபோட்டோவைக் காட்டி அவ கிட்ட சம்மதம் வாங்கின பெறகுதானே? அதனால தனியாப் பாத்துப் பேசுறதெல்லாம் எதுக்குங்க? எங்க குடும்பத்துல அதெல்லாம் வழக்கமில்லீங்க. தப்பா எடுத்துக்காதீங்க!” என்றார். குரலில் ஒரு குழைவு ததும்பினாலும், கூடவே ஒரு கண்டிப்பும் ஊடாடியது. அவளைச் சந்திப்பதை அவர் விரும்பவில்லை என்பது தெற்றெனத் தெரிந்ததாய் அவன் எண்ணினான். அவரது அந்தப் பேச்சு அவனது ஐயத்தை மேலும் உறுதிப் படுத்தியது. அவன் ஒரு முடிவுக்கு வந்தான். அதை அப்போதைக்கு வெளியிடுவதில்லை என்றும் தன்னுள் தீர்மானித்துக்கொண்டான்.
எனவே, பெண்ணைத் தனியாய்ச் சந்தித்துப் பேசுவதை ஒரு கண்டிப்பான நிபந்தனையாக்காமல், “சரிங்க! உங்க இஷ்டம். ஆனா, பொண்ணு கிட்ட என்னைப் பிடிச்சிருக்குதான்னு திட்டவட்டமாக் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. அப்பால, உங்க மக கண்ணைக் கசக்கக்கூடாது. . .” என்றான் வெளிப்படையாக.
அவன் அவ்வாறு பட்டென்று பேசியது கேட்டு அவன் அம்மாவுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாயத்தான் இருந்த்து. பெண் அழகாக இருந்ததோடு செயலுள்ள குடும்பம் என்பதாலும் – ஜாதப் பொருத்தமும் அபாரமாக இருப்பதாய்ச் சோதிடர் சொல்லி யிருந்ததாலும் – அவன் அம்மாவுக்கு அவளை இழக்க மனமில்லை என்பதை அவள் தன்னை ஓரத்து விழிகளால் சற்றே முறைத்ததிலிருந்து அவனும் புரிந்து கொண்டான்.
அந்தப் பெண் இப்போதும் குனிந்தது குனிந்தபடியே உட்கார்ந்து கொண்டிருந்தாள். எனவே அவன் தான் எடுத்த முடிவிலிருந்து மாறத் தாயாராக இல்லை.
“என்னோட மக கண் கலங்கும்படியான முடிவை நான் எடுப்பேனுங்களா? நான் கேட்டுட்டுத் தான் முடிவெடுத்தேன், தம்பி! கல்யாணம்கிறது சில பொண்ணுங்களுக்கு மனக் கஷ்டம் குடுக்கிற ஒண்ணுன்னு உங்களுக்கே தெரியும். பெததவங்களையுன் ஒடம்பொறந்தவங்களையும் விட்டுப் பிரியப் போற வருத்தத்துல அது இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாமேன்னு சொல்லிக்கிட்டு இருந்திச்சு. எனக்கு வயசு ஆயிக்கிட்டு இருக்கிறதை எடுத்துச் சொல்லிச் சம்மதிக்க வெச்சேன். அதான் விட்டேத்தியா இருக்குது. வேற ஒண்ணுமில்லீங்க, தம்பி! கல்யாணம் ஆன பெறகு நாங்க வருந்தி வருந்திக் கூப்பிட்டாலும் கூட பொண்ணுங்க ஏறெடுத்தும் பாக்க மாட்டாளுங்க!” என்று பெண்ணின் அப்பா சிரித்த சிரிப்பில் அவனையும் அந்தப் பெண்ணையும் தவிர மற்ற எல்லாரும் கலந்து கொண்டார்கள்.
வழியெல்லாம் மண்டையை உடைத்துக் கொண்டாலும் அந்தப் பெண்னை அதற்கு முன் தான் எப்போது, எங்கே பார்த்திருந்தான் என்பது அவனுக்கு ஞாபகம் வர மறுத்தது. அப்பா, அம்மா ஆகியோரை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு அவன் வெளியே சுற்றப் போனதில், அவர்களது அப்போதையத் தொணதொணப்பிலிருந்து தப்பினான். என்றாலும், வீட்டுக்குப் போன பின் குறிப்பாக அம்மா தன்னைத் துளைக்காமல் விட மாட்டாளே என்று எண்ணி அவன் சிரித்துக்கொண்டான்.
வழியில் காப்பி குடிக்க ஓர் ஓட்டலுக்குள் நுழைந்த கணத்தில் அதுகாறும் அவனுக்குக் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த அந்த ஞாபகம் சட்டென்று அவனுள் உதித்துவிட்டது. அவன் தன்னையும் மறந்து புன்சிரிப்புடன் தலையை ஆட்டிக்கொண்டான்.
‘ஆமா. இதே ஓட்டல்லதான் அவளை ஒரு இளைஞனுடன் அன்னைக்கு ஒருநாள் பார்த்தேன். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப ஆர்வமாப் பார்த்துக்கிட்டே சிரிச்சுப் பேசிட்டிருந்தாங்க. கண்ணியமான இடைவெளி விட்டு எதிரெதிரேதான் உக்காந்திருந்தாங்கன்னாலும் அவங்க காதலர்கள்ங்கிறது நல்லாவே புரிஞ்சிச்சு. ‘ரெண்டு பேருமே அழகாய் இருக்காங்க. நல்ல ஜோடிப் பொருத்தம்’ அப்படின்னு அவங்களைப் பார்த்ததுமே நான் நினைச்சுக்கிட்டேன்! நான் நினைச்சது சரிதான். அந்தப் பொண்ணுக்கு இந்தக் கல்யாணத்துலே துளிக்கூட விருப்பமில்லே. அதான் முகத்தை அப்படி இறுக்கமா வச்சுக்கிட்டு இருந்திச்சு….’ – இந்த ஞாபகத்தால் ஏற்கெனவே அவன் செய்திருந்த முடிவு மேலும் வலுப்பெற்றது.
… “அம்மா இன்னைக்கு நாம பார்த்துட்டு வந்த பொண்ணு எனக்கு வேணாம்மா!“என்று அறிவித்த மகனைக் கமலம் திகைப்புடன் பார்த்தாள்.
“என்னடா சொல்றே? எம்புட்டு அழகுடா அது! அத்தப் போயி வாணாம்ன்றியே! நல்ல செயலுள்ள குடும்பமாவும் இருக்கு!”
“அம்மா! அந்தப் பொண்ணு முகத்துல ஒரு சுரத்தே இல்லே. அதுக்கு இஷ்டமில்லைன்னுதான் எனக்குத் தோணிச்சு. அதை அத்தோட ஆஃபீசுக்குப் போய்ப் பாத்துப் பேசி உண்மையைத் தெரிஞ்சுக்கணும்னுதான் முதல்ல யோசிச்சேன். அப்பால அந்தப் பொண்ணை ஒரு ஓட்டல்ல இன்னொரு ஆளோட சேத்து வச்சுப் பாத்தது எனக்கு திடீர்னு நெனப்பு வந்திச்சு. அதான் வாணாம்குறேன். ஆனா நான் அந்தப் பொண்ணைச் சந்திச்சுப் பேசவும் போறேன். என் மனசில ஒரு யோசனையும் இருக்கும்மா!”
“என்னடா யோசனை?”
“அப்புறமாச் சொல்றேன். உங்களோடவும் அப்பாவோடவும் ஒத்துழைப்புக் கூட அதுக்கு வேணும்மா!”
“என்னடா செய்யப் போறே?”
“அதை அந்தப் பொண்ணைப் பாத்துப் பேசினதுக்குப் பெறகுதாம்மா உங்ககிட்ட சொல்ல முடியும்! என்னோட முடிவை இப்ப அவங்களுக்குச் சொல்ல வேண்டாம்மா. நான் சம்மதிச்சுட்டதாவே இருக்கட்டும். அவங்களே ஃபோன் போட்டுக் கேட்டா மட்டும் என் மகனுக்குச் சம்மதம்தான்னு பொய் சொல்லிடுங்க!”
“என்னமோ போ! இந்தக் காலத்துப் பசங்களே விசித்திரம்தான்!” என்ற கமலம் தன் மகனின் முடிவைக் கணவருக்குத் தெரிவிக்க எழுந்து அவரது அறைக்குப் போனாள்.
மறு நாளே இளங்கோ வரலட்சுமியின் அலுவலகத்துக்குப் போய் அவளைச் சந்தித்துப் பேசித் தான் ஊகித்தது சரிதான் என்பதை அவளிடமிருந்தே தெரிந்துகொண்டான். அவன் சொன்ன யோசனையை அவள் ஏற்றுக்கொண்டதோடு கண்ணீர் மல்க அவனைக் கும்பிட்டு நன்றி தெரிவிக்கவும் செய்தாள். அவன் சிரிப்புடன் அதை வலுவாக மறுத்துவிட்டுத் தன் திட்டத்தைச் செயல் படுத்த அவளுடைய காதலனின் சம்மதத்தைப் பெற அவனது முகவரியையும் கேட்டுப் பெற்றுக்கொண்டான். அவளும் அப்போது தங்களுடன் இருப்பது நல்லது என்றும் எனவே அவனிடம் பேசி அன்று மாலையே எந்த இடத்தில் சந்திக்கலாம் என்பதை முடிவு பண்ணுமாறும் அவளிடம் அவன் கூறினான். அவள் அவன் முன்னிலையிலேயே தொலைபேசியில் சுருக்கமாய் விஷயத்தைச் சொல்லிவிட்டு இளங்கோவையும் அவனுடன் பேசச் செய்தாள். அன்று மாலை மெரினா கடற்கரை யருகே குறிப்பிட்ட ஓட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசலாம் என்று முடிவு செய்தார்கள்.
. . . மறு நாளே வரலட்சுமியின் முகம் தனது இயல்பான மலர்ச்சிக்குத் திரும்பிவிட்டதைக் கவனித்து அவள் அம்மா லலிதா வியப்படைந்தாள். பெண்பார்த்தலுக்குப் பிறகு குடம் குடமாய்க் கண்ணீர் வடித்த மகள் மறு நாள் மாலையே இயல்பாக ஆனதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று அவளுக்குத் தெரியவில்லை. ‘ஒருவேளை அவனோட ஓடிப்போய் ரிஜிஸ்தர் கல்யாணம் பண்ணிக்கிற திட்டம் எதாச்சும் வச்சிருக்குறாளோ! அந்தப் பையனைப் பாத்து இவரு மெரட்டிட்டும் வந்தாச்சு. கைக¡லை உடைச்சிறுவேன்னு பயமுறுத்தியும் ஆச்சு… ஆஃபீசுக்குப் போக விடாம தடுக்கலாம்னு பாத்தா இப்ப இன்ஸ்பெகஷனாமே! இவரும் அவளோட ஆஃபீசரைப் பாத்துப் பேசியாச்சு. விஷயத்தையும் சொல்லியாச்சு. அந்தப் பையன் நல்லவன், அப்படியெல்லாம் எதுவும் பண்ண மாட்டாங்க ரெண்டு பேரும். அதுக்கு நான் உத்தரவாதம்னுட்டாரு அந்த மனுஷன்! இவளோட மூஞ்சியைப் பாத்தா சந்தேகமாவில்ல இருக்கு!’ என்றெல்லாம் அவள் எண்ணங்கள் ஓடின.
. .”எம்புட்டு மானக்கேடாயிறுச்சு! பாவி மக இப்பிடிப் பண்ணிப் பிட்டாளே! அவளைப் பொண்ணு பாக்க வந்தவன் இப்ப்டியும் பொச கெட்டவனா யிருப்பானா! அவன் தான் பொச கெட்டவனாய் இருக்குறான்னா, அவனைப் பெத்தவங்களும் அவனோட சேந்து ஒத்துழைச்சிருக்குறாங்களே! மண்டபத்துக்குள்ள ம•ப்டியில போலீஸ் அதிகராரிங்களைக் கூட்டியாந்து, மேடையில திடீர்னு அந்தப் பையனை இந்தப் பொச கெட்டவனே இட்டாந்து வந்துல்ல குந்த வச்சுட்டான்! போலீசுக்காரங்க போட்ட போடுலெ இந்த மனுஷனால ஒண்ணுமே பண்ண முடியல்லியே!…”
வீட்டுப் பாடம் எழுதிக்கொண்டிருந்த லலிதாவின் மகன், “அம்மா! உங்களுக்கு ஃபோன் !”என்று அழைத்ததும், அவள் திகைப்புடன் ஒலிவாங்கியைக் காதில் பொருத்திக்கொண்டாள்.
“நான் இளங்கோவோட அம்மா பேசறேம்மா. தயவு செஞ்சு ஃபோனை வெச்சுடாதீங்க. உங்க கோவம் எங்களுக்குப் புரியுதும்மா. ஆனாலும் நான் சொலறதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டுட்டு அப்பால் நீங்க என்னயத் திட்டினாலும் நான் கேட்டுக்கறேங்க. …என்னம்மா? லைன்ல இருக்கிங்களா?”
“ இருக்கேன், இருக்கேன். சொல்லுங்க.”
“அம்மா! எனக்கு ஒரு மக இருந்தா! ராணின்னு பேரு. ராணி மாதிரிதான் இருப்பா. .உங்க மக மாதிரிதான் அவளும் அழகுன்னா அழகு அப்பிடி ஒரு அழகு. அவளும் உங்க மக மாதிரியே ஒருத்தனை லவ் பண்ணினா. அது எங்களுக்குப் பிடிக்கல்லே. ரொம்ப ஏழைப்பட்ட குடும்பம்.. அதனால என்னை விட இவரு ரொம்பவே குறுக்கே நின்னு தடுத்துட்டாரு. வீட்டுக்குள்ளாற பூட்டி வச்சு அது ஆ•பீசுக்குப் போகாம பாத்துக்கிட்டம். …அம்மா! அய்யோ! இப்பவும் என்னால அழுகையை அடக்க முடியல்லேம்மா. அது தூதூதூ…. . .க்குல தொங்கிடிச்சும்மா. அது அப்படிச் செய்யும்னு நாங்க சொப்பனத்துல கூட நினைக்கல்லீங்கம்மா. எம் மகன் இளங்கோவுக்குத் தங்கச்சி மேல உசிரும்மா. அவ கல்யாணத்தை நாங்க நிச்சியம் பண்ணினப்போ அவன் மலேஷியாவுக்கு ஆ•பீஸ் வேலையாப் போயிருந்தான். உள்ளூர்ல இருந்திருந்தா ஒருக்கா தடுத்திருப்பானோ என்னவோ. திடீர்னு ஒரு வாரத்துக்குள்ள நிச்சியம் பண்ணிட்டோம். அவளை ஒரு ரூம்ல போட்டு அடைச்சு வச்சுட்டதால அவளால அவனோட பேச முடியல்லே. இருபது வருசம் பொத்திப் பொத்தி ராசாத்தியா வளத்த பொண்ணை நிமிசமாப் பறி குடுத்துட்டோம்மா. அது மாதிரி உங்க மக செய்துடக் கூடாதுன்னுதான் என் மகன் அப்படி ஒரு திட்டம் போட்டுட்டாம்மா. . .முதல்ல, உங்க மகளைச் சந்திச்சதுக்குப் பெறகு உங்க வீட்டுக்காரரோடதான் என் மகன் பேசுறதா இருந்தான். ஆனா அதனால எந்தப பிரயோசனமும் இல்லேன்னு உங்க மகதான் சொல்லி அவனைத் தடுத்திருச்சு. அதனாலதான் இப்படிப் பண்ணிட்டான் என் மகன். எல்லாம் உங்க மகளோட நல்லதுக்காகத்தாம்மா! எங்களை மன்னிச்சிறுங்க! எங்களுக்கு ஏற்பட்ட சோகம் உங்களுக்கு ஏற்படக் கூடாதுன்றதுக்காகவும் தாம்மா! என் மகனையும் எங்களையும் நல்ல மனசு பண்ணி மன்னிச்சிறுங்கம்மா!”
. . . . . . . . .

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா