காணாமல் போனவர்களின் மணல்வெளி

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

கே.பாலமுருகன்


நான் காணாமல் போயிருந்தேன்

பெரிய சாலைக்குள் நுழையும் சிறிய சந்தில் நின்று கொண்டிருந்தபோதுதான் வெயில் பலமாகத் தலைக்கு மேலாக எரிந்து கொண்டிருந்தது. முதுகில் கம்பளி பூச்சிகள் ஊர்வது போல வெயில் படர்ந்து கொண்டிருக்கையில் எனக்கு மூளையில் ஏதோ ஒருவிதமான சலசலப்பு. யாரோ கையை விட்டு மூளை குழம்பை அள்ள முயற்சிப்பது போன்ற அழுத்தம். காலம் எனக்கு வெளியே எவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது? காலத்தை மட்டும்தான் சுதாரித்துக் கொள்ள இயலவில்லை.
“சார்! இது எத்தனாவது வருசம்? இன்னிக்கு தேதி என்ன?”
கேட்பவர்கள் கைகளால் மூக்கை மூடிவிட்டு நகர்ந்து ஓடுகிறார்கள். யார் அவர்கள்? எப்பொழுது இங்கு வந்திருப்பார்கள்? நான் எப்பொழுது இங்கு வந்தேன்? ஒரே மாயமாக இருந்தது. அன்றைய விடியலுக்குப் பிறகு ஏதோ மயக்கத்திலிருந்து விழித்தெழுந்ததைப் போல பிரக்ஞை. தலைக்கு மேல் புளிய மரம், கிளைகளைப் பரப்பி ஒய்யாரமாய் நின்றிருந்தது. எதிர்புறமிருந்த சீனக் கடையில் சிலர் காப்பி அருந்தி கொண்டு வேகமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அந்தக் கடையில் முதலாளி ஆப்பே சட்டியை நெருப்பில் வைத்து, தூக்கி வீசி சாகசம் செய்து கொண்டிருந்தான். அவர்களுக்கு இன்று என்ன திகதியாக இருக்கும்? என்ன கிழமையில் இப்படிச் சாவகாசமாக அமர்ந்து கதையடித்துக் கொண்டிருக்க முடியும்?
“தம்பி! நில்லுப்பா! இன்னிக்கு என்ன தேதி?இது என்ன எடம்?”
பரபரப்பான சாலையைக் கடக்க தயங்கி நின்ற சிறுவனைப் பார்த்துக் கேட்டேன். வெளிச்சமான முகம் அவனுக்கு. பிரகாசமாக இருந்தான். இலேசாகப் புன்னகைத்தான். தலையை இருபுறமும் ஆட்டிக் கொண்டான். கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு வேகமாகச் சிரித்தான். அவன் சிரிப்பொலியை என்னால் கேட்க முடியவில்லை. அதன் அதிர்வும் கதிர் வீச்சும் என் காது துவாரத்தில் சுருள் சுருளாகப் புகுந்து விழிப்புநிலையை அறுக்க முயன்றது. தள்ளி அமர்ந்து காதுகளைப் பொத்திக் கொண்டேன். கண்களை மூடியதும் யாரோ என்னை இறுக்கி தூக்குவது போல இருந்தது.
“ஐயோ! என்ன விட்டுடு! ஐயோ! ஐயோ! முடிலே. .”
இப்பொழுது அந்தச் சிறுவன் என்னை நெருங்கி வந்தான். அவன் நெருங்க நெருங்க எங்களுக்கான இடைவெளி குறைந்து கொண்டேயிருந்தது. அனல் போல ஏதோ ஒன்று என்னை வட்டமிடத் தொடங்கின. அம்மாச்சி கிழவி தூரத்திலிருந்து கத்துகிறாள். அப்போய் கிழவன் அவன் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டிருக்கிறான். வெள்ளை சட்டை அணிந்த ஒருவர் கைக்காட்டி என்னை அழைக்கிறார். எல்லாமும் நெருங்கி வருகின்றன.
“குமாரு! நீ காணாம போய்ட்டடா! நீ யாருக்கும் கிடைக்காம ரொம்ப தூரத்துலே ஒரு பட்டணத்துலே இருக்கெ. . உன்னோட உடம்பெ பாரு. . கருத்து போய், முடிலாம் அடர்த்தியா

வளர்ந்து. . . சட்டை துணி இல்லாமெ அனாதையா கெடக்கறெ. எழுந்து நின்னு உன் கோலத்தெ பாரு! நீ காணாம போய் 3 வருசம் ஆச்சிடா குமாரு!”
சடாரென்று ஒரு தடிப்பான கால் என் மேல் வந்து விழுகிறது. தலையைக் காட்டி யாரோ உதைக்கிறார்கள். சுதாரித்துக் கொள்வதற்குள் மீண்டும் மீண்டும் உதை விழுகிறது.
“டெ! சனியனே! அவுத்துப் போட்டுகிட்டு இங்க என்னா பண்றெ? எழுந்து போ! இங்க கோயிலுகிட்ட வந்து படுக்காதனு சொன்னா கேக்கறயா? எழுந்து ஓடு”
மணியோசை கேட்டதும்தான் புளிய மரத்தைக் கடந்து ஒரு கோவில் கோபுரம் இருந்ததைப் பற்றி தெரிந்து கொண்டேன். அடுத்த அடி விழுவதற்குள் அங்கிருந்து எழுந்து கொண்டு மெல்ல ஓடினேன். அந்தச் சிறுவன் நடந்து வந்த திசையை எக்கிப் பார்த்தேன். அங்கு அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரவர் நகர இயக்கத்தில் பரபரத்துக் கொண்டிருந்தனர். அட்டவணை வாழ்க்கையில் அடுத்து நடக்கவிருக்கும் சம்பவத்தைப் பற்றி ஏற்கனவே நிர்ணயித்துக் கொண்டு அலைமோத தயார்நிலையில் இருக்கும் மனிதர்கள், நான் நிர்வாணமாக அலைவதைப் பற்றி கவலைப்படவோ அதைப் பார்த்து விமர்சிக்கவோ இயலாது என்று நான் பைத்தியநிலையில் இருந்தபோது கண்டிப்பாக அறிந்திருந்திருப்பேன்.
இந்தப் பைத்தியக்காரர்களுக்கு மத்தியில் மேலுமொரு உண்மையான பைத்தியமாக நான் அலைந்து திரிந்த காலம் வசந்தகாலம் என்றே நினைக்கிறேன். இப்பொழுது விழிப்பு தட்டியுள்ளது. என் நிர்வாணத்தைப் பார்த்து வெட்கப்படத் துவங்கியுள்ளேன். என் உடலில் பயங்கரமான துர்நாற்றம். சகித்துக் கொள்ள முடியாமல் அழுது புரண்டேன். நகரம் பெரும் கோபத்துடன்
சுழன்று கொண்டிருந்தது.
தூரத்தில் ஒர் அடர் மரத்திலிருந்து யாரோ இறங்கி வந்து என்னையே வெறித்துக் கொண்டிருந்தார். அவர் நல்ல உயரம். வெளிரிப் போன முகச் சாயல். அரும்பு மீசையுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நானும் நன்றாக உற்றுப் பார்த்தேன்.
“டெ! என்னா பாக்கறே? நான்தாண்டா உடும்புக்கார தாத்தா! எங்கடா காணாம போய்ட்டெ? எங்களலெல்லாம் மறந்துட்டியா? வாடா செல்லம். தாங்க முடியலடா. அன்னாடம் யாராவது காணாம போய்க்கிட்டே இருக்காங்கடா. . குமாரு வந்துருடா. . காணாம போவதடா. . நம்ப டைகர் குட்டிகூட உடும்பு பிடிக்க போலாம்டா”
“ஐயோ அம்மா! ஐயோ காப்பாத்துங்க!”
அலறிக் கொண்டு திசை தெரியாமல் ஓடினேன். நகரம் இப்பொழுது மெல்ல தன் நிறத்தை மாற்றியமைத்துக் கொண்டிருந்தது. இருள் வளர்ந்து கொண்டே என் நிர்வாணத்தை இறுக மூடியது. காட்டுப் பூச்சிகளின் சத்தம் பெருகி வந்து மனிதர்களின் ஓசைகளை விழுங்கத் துவங்கின. ஆற்றோரமாக வந்து நின்றேன். ஆற்றிலிருந்து யார் யாரோ முக்கி எழுந்து என்னைப் பார்ப்பது போல தோன்றியது. பசி மயக்கத்தைச் சமாளித்துக் கொண்டே கையில் அகப்பட்ட ஒரு பழைய துணியை எடுத்து உடலை முடிந்தவரை மறைத்துக் கொண்டு வெளியே வந்தேன். சீனக் கடையில் மீதமிருந்த உணவுகளைக் கட்டி

குப்பையில் தூக்கி வீசியிருந்தார்கள். கைகளுக்குக் கிடைத்ததைப் பசியின் கொடூரத்தால் தின்று தீர்த்தேன். வயிறு பலூனைப் போல உப்பிக் கொண்டது. மீண்டும் புளிய மரத்தின் ஓரமாக வந்து அமர்ந்தேன். பெரிய சாலையில் பெரிய பெரிய லோரிகளும் கார்களும் இடைவெளிவிடாமல் நகர்ந்து கொண்டே இருந்தன. புளிய மரத்திலிருந்து யாரோ அழைப்பது போன்ற ஓசை எழும்பியது. தலையை மேலே தூக்கி அழைப்பு கேட்ட திசையைப் பார்த்தேன். முதலில் தோன்றி மாயமாகிப் போன சிறுவன்தான். சிரித்துக் கொண்டு மரக் கிளையில் ஆயாசமாய் தொங்கிக் கொண்டிருந்தான்.
“டெ! குமாரு! உங்கப்பா காணாம போய்ட்டாரே! எங்க இருக்காருனு தெரியுமா? ஒரு பெரிய மணல்வெளி. . அதுலே காணாம போறவங்களாம் வந்து சரிஞ்சிக்குவாங்களாம். . அங்கத்தான் காணாம போனவங்களோட உலகம் இருக்காம். . நீயும் அங்கத்தான் இருக்கடா. . உங்க அக்கா மீனாவும். . கம்பத்துலே இருந்த சகுந்தளா அக்காவும். . உன் உடும்புக்கார தாத்தாவும். . தனபாலன் அண்ணனோட பொண்ணும். . . அப்பே கிழவியும். . எல்லாரும் அங்கத்தான் மணல்வெளில இருக்காங்கடா குமாரு. . சூன்யமா இருக்குடா. . எல்லாம் அழறாங்கடா. . காணாம மட்டும் போவக்கூடாதுடா”

மீனா அக்கா காணாமல் போயிருந்தாள்
இரண்டாம் நம்பர் தோட்டத்தில் இருந்தபோது மீனா அக்காளுக்கு 17 வயதுதான். அம்மாவுடன் 4ஆம் நம்பர் காட்டில் மரம் வெட்டிக் கொண்டும் மாலையில் மாரியம்மன் கோவிலில் பூ கட்டி விற்றுக் கொண்டும் பரவசமாகச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தாள். மீனா அக்காவுடன் இருந்த காலம் கதைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டும். மீனா அக்காவுக்கு மட்டும் ஆயிரத்திற்கு மேலான கதைகள் கைவசமிருக்கும். எப்பொழுது எங்கு பார்த்தாலும் தோட்டத்திலுள்ள பிள்ளைகளை அழைத்து வட்டமாக உட்கார வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு கதையைச் சொல்லிக் கொண்டேயிருப்பாள். இருளுக்குள் வாழத் துவங்கிய காலத்தில்தான் அக்காவிற்கு கதை சொல்லும் பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
இரண்டாம் நம்பர் தோட்டத்தில் இரவில் மின்சாரம் இருக்காது. ஒருசிலர் மட்டும் கொஞ்சம் வசதி படைத்திருந்ததால் ஜெனரேட்டர் மூலம் விளக்கை எரியவிட்டுக் கொண்டு சமாளித்துக் கொள்வார்கள். இரவு முழுக்க அந்த வீடுகளில் ஜெனரெட்டர் அபாரமான சத்தம் போட்டுக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அந்தச் சத்தத்தைப் பழகியிருந்தார்கள். உறங்கும் நேரம் வந்துவிட்டால் அதையும் அடைத்துவிட்டு இருளுக்குள் அமிழ்ந்து போய்விடுவார்கள். எங்கள் வீட்டில் இரவில் வெளிச்சத்தைப் பார்த்தே பல வருடங்கள் ஆகியிருந்தன. மெழுகுவர்த்தி ஒன்று இரண்டு அங்கும் இங்குமாக மூலையில் எரிந்து கொண்டிருக்கும். அது கொடுக்கும் ஒளியைக் கொண்டே இரவு வேலைகள் நடந்துகொண்டிருக்கும்.
மீனா அக்காள் மட்டும் வெளியிலுள்ள வாங்கில் அமர்ந்து கொண்டு இருளுக்குப் பயந்து கொண்டு அங்கு வந்து சேர்ந்துவிடும் பிள்ளைகளுக்கு ஏதாவது கதை சொல்லிக் கொண்டிருப்பாள். அந்தக் கதைகளில் நகைச்சுவை இருக்கும், அதற்கும் மேலாக எங்காவது ஒரு இடத்தில் வெளிச்சமும்

இருக்கும். அந்தக் கதையில் ஒளிரக்கூடிய வெளிச்சத்தில் எல்லோரும் இருளைப் பற்றி மறந்து அப்படியே உறங்கிவிடுவோம். யார் எப்பொழுது உறங்கினார்கள் என்பதே தெரியாது. அம்மாவும் அப்பாவும் சண்டையிட்டுக் கொள்வதுகூட எங்கோ தூரத்தில் கேட்பது போல ஒலித்துக் கொண்டிருக்கும். இருள் எங்கள் முகத்தில், கைகளில் கால்களில் வீட்டுச் சுவரில் என்று எல்லாவற்றையும் ஆக்கிரமித்து இடைவெளியை ஏற்படுத்தியிருக்கும். மீனா அக்காவோ சுமதி அக்காவோ அம்மாச்சி பாட்டியோ அம்மாவோ அழுது கொண்டிருப்பதுகூட கேட்கும். இருளில் யார் அழுது கொண்டிருக்கிறார் என்று தெரியாது. ஆனால் தினமும் இரவில் இருளைப் பொருத்துக் கொள்ளமுடியாமல் யாராவது ஒருவர் அழுது கொண்டேயிருப்பார்கள்.
அன்றைய தினம் இருளிலிருந்து விடுப்பட்டு, காலையின் முதல் வெளிச்சத்தில் எழுந்து பார்த்த போது வீடே பரபரப்பாக இருந்தது. வாயில் ஒழுகி இறுகியிருந்த வாநீரை துடைத்துக் கொண்டே எழுந்து திடமாக நின்று கொண்டேன். அம்மா பாட்டி எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். அப்பா வீட்டில் இல்லை. சுமதி அக்காள்தான் சொன்னாள். மீனா அக்காள் காணவில்லை என்று. நேற்று இரவே அவள் காணாமல் போயிருக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டிற்குப் பின்புறம் ஓடிச் சென்று பார்த்தேன். வாங்கின் கீழ் குனிந்து தேடினேன். மீனா அக்கா எங்குமில்லை.
“அட ஆண்டவா! இவ எங்க போயி தொலைஞ்சாளோ? என் மவளே காப்பாத்து சாமி!”
தோட்டம் முழுவதும் தேடியும் மீனா அக்கா கிடைக்கவேயில்லை. முட்டிக் கொண்டு வந்த அழுகையை, சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டேன். அக்காள் இருளோடு கரைந்துவிட்டாள். எங்கு போயிருப்பாள்? எங்கள் வீட்டில் நடந்த முதல் துர்சம்பவம் அதுதான். எப்பொழுதோ பட்டணத்தில் வாங்கிய பொம்மைகள் விளையாட்டு கார்கள் காணாமல் போனபோது ஏற்பட்ட சூன்யம், மீண்டு மெல்ல என்னைச் சூழ்ந்து கொண்டது.

உடும்புக்கார தாத்தா காணாமல் போயிருந்தார்
உடும்புக்கார தாத்தா நல்ல உயரம். அவரை எக்கிப் பார்க்கும்போது கழுத்து இலேசாக கணக்கும். நெடித்து வளர்ந்து கொண்டு ஜாம்பவானைப் போல தோட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். தாத்தாவின் பொழுது போக்கு உடும்பு பிடிப்பதுதான். 18 வருடமாக உடும்பு பிடிப்பதில் தாத்தா திறமையானவர் என்றே சொல்லலாம். அதனால் அவருடைய பெயர் உடும்புக்கார தாத்தா என்றே தோட்டத்தில் வழக்கமாகியிருந்தது. தோட்டத்திலிருக்கும் சின்ன பையன்களை அழைத்துக் கொண்டு காலையிலேயே காட்டிற்குச் சென்றுவிடுவார். வரும்போது டைகரின் புண்ணியத்தில் ஒரு உடும்பாவது சிக்கிக் கொண்டிருக்கும். அன்று வீட்டில் உடும்பு கறிதான்.
“இப்படி உக்காருடா. . உடும்பு இடுப்புக்கு நல்லதுடா. அது எப்படிக் கெட்டியா பிடிச்சா விடாதோ. . அந்த மாதிரி உறுதி இடுப்புக்குக் கெடைக்கும்டா. . நல்லா சாப்டு”
சமைத்த உடும்பு கறியை வெளிவாங்கில் வைத்துக் கொண்டு என்னையும் அருகில் அமர்த்திக் கொள்வார். இருவரும் இருளைக் கடந்து உடும்பைச் சுவைத்துக் கொண்டிருப்போம். தாத்தாவுடன்

இருந்த காலம் உடும்புப் பிடி போல மனதில் கெட்டியாகப் பற்றியிருக்கிறது. தாத்தாவிற்கு வெளிக்காட்டு ஆட்களுடன் எப்பொழுதும் சண்டைதான். அவர்களை எங்குப் பார்த்தாலும் வாக்குவாதம் முற்றி கைகலப்புவரை சென்றுவிடும்.
வெளிக்காட்டு ஆட்கள் ஏற்கனவே முரட்டு சுபாவம் உடையவர்கள். பலதடவை தாத்தாவை எச்சரித்து விட்டார்கள். உடும்பு பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர்களின் பிள்ளைகளையும் இணைத்துக் கொண்டு காட்டையும் நாசமாக்கிவிடுகிறார் என்று தாத்தாவின் மேல் அவர்களுக்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது.
அன்று தாத்தா வழக்கம் போல உடும்பு பிடிப்பதற்கான எல்லாம் பொருட்களையும் எடுத்துக் கொண்டு டைகரையும் சங்கிலியால் கட்டி அழைத்துக் கொண்டு 4 ஆம் நம்பர் காட்டுக்குள் போனவர்தான். மதியம் கடந்து மாலை உதிர்ந்து இரவு வளர்ந்து அடர்ந்திருந்தது. உடும்புக்கார தாத்தா கடைசிவரை வரவேயில்லை. காடு முழுக்க தேடியும் தாத்தாவைப் பற்றி எந்தத் தடயமும் இல்லாமல் போனது. அன்றுதான் நான் தாத்தாவைக் கடைசியாக டைகருடன் வைத்து பார்த்தது.
வெளி வாங்கை இருள் நேரத்தில் பார்க்கும் போதெல்லாம் மனம் கணக்கிறது. தாத்தா அமர்ந்திருப்பது போலவே ஒரு பிரமை. மீனா அக்காள் காணாமல் போய் 6 மாதத்திலேயே நிகழ்ந்த அடுத்த துர் சம்பவம் இது. தாத்தாவின் திடீர் மறைவைப் பற்றி பாட்டியிடம் சொல்லும்போது அவர் எதையும் கேட்காதது போல வாயில் எதையோ போட்டு மென்று கொண்டே இருந்தார்.
அதன் பிறகு தாத்தா இருப்பதாக நினைத்துக் கொண்டு தாத்தாவிடம் வழக்கமாகப் பேசும் அதே வார்த்தையைப் பேசிக் கொண்டிருப்பார். எனக்கென்னவோ தாத்தா எங்களுக்குள் இருப்பது போலவே தோன்றியது. மனம் ஒருவகை பித்து நிலையிலேயே சுழன்று கொண்டிருந்தது.
அப்பா தனசேகர் காணாமல் போயிருந்தார்
“வீடு தெய்வம் மாதிரி!”
“நம்ப உள்ளத்தெ, நினைவுகளெ, ஒவ்வொரு உறவையும் சுமக்கறெ தெய்வம் வீடு. . அதெ பறிகொடுத்துறாதெ அய்யா!”
நல்லம்மா பாட்டி வாசலில் அமர்ந்து கொண்டு பக்கத்து வீட்டு மனிதர்கள் கேட்கும்படியாகப் பிதற்றிக் கொண்டிருந்தார். தாத்தா காணாமல் போன தினத்திலிருந்தே பாட்டிக்கு இப்படித்தான். எதாவது புலம்பிக் கொண்டே இருப்பார். அப்பா வெளிவாங்கில் அமர்ந்து கொண்டு ஆழ்ந்த சிந்தனையிலும் கவலையிலும் கைகளைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார்.
“என்னாங்க பண்றது இப்பெ? அப்பயே வட்டிக்குக் கடன் வாங்க வேணானு சொன்னேன். . அப்பறம் கொடுத்துக்கலாம் இப்பறம் கொடுத்துக்கலாம்னு கதியா கெடந்தீங்க! இப்ப பாத்திங்களா நெலமையே? வீட்டெ தாரெக் பண்ண போறானுங்க. அந்த வட்டிக்காரன் பயங்கரமானவன், கருணை இல்லாதவனு சொன்னாங்க எல்லாம். . கேட்டீங்களா?”
“ஏய்! சும்மா வெறுப்பேத்திக்கிட்டு இருக்காதெ! உள்ள போ!”

அம்மா அழுகையைத் தனக்குள்ளே விழுங்கிக் கொண்டு உள்ளே நுழைந்து கொண்டார். அப்பா இரவு முழுவதும் அந்த வாங்கிலேயே அமர்ந்தவாறு வானத்தை வெறித்துக் கொண்டிருந்தார். அவருடன் நானும் விழித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அப்பொழுது 17 வயதாகியிருந்தது. அப்பாவை நேருக்கு நேராகச் சந்தித்து நாளையிலிருந்து நான் வேலைக்குப் போகிறேன், என்று சொல்லிவிடலாமா என்று தோன்றியது. மனம் போல உடலை எங்கேயும் நகர்த்த இயலவில்லை.
நாளைவரைதான் அவகாசம். அப்பாவால் நிச்சயம் அவ்வளவு பணத்தை அடைக்க முடியாது. அம்மா துணிமணியை ஒரு பெரிய சாக்குப் பையில் கட்டி வைக்கத் துவங்கியதும்தான் இலேசாக அழுதேன். யாருக்கும் கேட்காதபடி அழுதேன். மீனா அக்காவும் உடும்புக்கார தாத்தாவும் வாழ்ந்த வீட்டைத் தொலைத்துவிட்டு எங்கேயோ போகப் போகிறோம் என்று மட்டும் புரிந்தது.
உறக்கம் மெல்ல என்னை விழுங்கிக் கொண்டது. உறங்கி எழும்போதுதானே எப்பொழுதும் எனக்கான துர் சம்பவம் காத்திருக்கும். அதைப் பற்றியே மறந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நம்பிக்கையில் மீண்டும் உறக்கத்திலிருந்து எழுந்தேன். வெளிவாங்கில் அப்பா இல்லை. அம்மா வாசலில் கால்களை அகல பரப்பி அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தார். இருளும் அழுகையும் சூழ்ந்திருக்கும் இந்த வீட்டை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொண்டேன். யாரோ எதற்காகவோ வீட்டின் எங்கோ ஒரு மூலையில் அழுது வடிந்து கொண்டிருப்பது போல தோன்றியது. காலையிலிருந்து அப்பாவைக் காணவில்லையாம். மனம் இறுகி ஓர் ஆழ்ந்த பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது போல உணர்வு. அப்படியே வாங்கில் உட்கார்ந்து கொண்டு பாதி மயக்கத்தில் இருந்த பாட்டியைப் பார்த்தேன்.
“போய்ட்டாண்டா அவனும். . குடும்ப சாபம்டா. . எல்லாரும் காணாம போறானுங்கடா”
அம்மாவுடன் எல்லோரும் பட்டணத்தில் இருக்கும் கேசவன் பெரியப்பா வீட்டிற்குக் கிளம்பினோம். வீட்டைவிட்டு வெளியேறும்போது அம்மா வாங்கிலேயே அமர்ந்து கொண்டு நெஞ்சில் அறைந்தவாறே அழுததை எல்லோரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சாத்திய வீட்டுக்குள்ளிருந்து யாரோ முணுமுணுப்பதும் கேட்டது. அது மீனா அக்காளின் குரல் போலவும் சட்டென்று தாத்தாவின் குரலைப் போலவும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
“வீட்டைத் தொலைச்ச ஒவ்வொரு மனுசனும் அவனோட உடம்புலெ உள்ள எல்லாம் உறுப்புகளையும் தொலைச்ச மாதிரி”
சூன்யம் நிரம்பிய வெற்றுடலுடன் அம்மாவுடன் எல்லோரும் சாக்குப் பைகளை எடுத்துக் கொண்டு தோட்டத்து பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தோம். அப்பா இல்லாத சூன்யம், மீனா அக்கா இல்லாத சூன்யம், தாத்தா இல்லாத சூன்யம்.
நான் காணாமல் போயிருந்தேன்
வேலையும் கிடைக்காமல், தொடர்ந்து படிக்கவும் இயலாமல் பெரியப்பா வீட்டின் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு வீட்டின் நான்சுவரின் மதிய வெயில் ஒழுகுதலிலே காலம் கரைந்து கொண்டிருந்தது. பெரியப்பாவின் மூன்று குழந்தைகளுமே துருதுருவென ஒரு இடத்தில் இருக்க

முடியாமல் வீடு முழுக்க அலைந்து அடம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். கோபம் தலைக்கு மேல் ஏறி மீண்டும் சர்ரென சரிந்து கொள்ளும்.
மதிய வெயிலில் உடலெல்லாம் வியர்த்து வழிய எதையோ இழந்தவனைப் போல கால்கள் இரண்டையும் பரப்பிக் கொண்டு குழந்தைகளின் ஓயாத சத்தத்தினூடாக எவ்வளவு நாள் இப்படி அமர்ந்திருக்க முடியும்? வீட்டை விட்டு ஒரு பைத்தியநிலையில் வெளியேறினேன். எல்லோரையும் விட்டுவிட்டு, பெரியப்பா குழந்தைகளையும் வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு சாலையில் வேகமாக ஓடியது மட்டும்தான் கடைசியாக என்னை நான் பார்த்தது.
யாரும் விரும்பாத பல வெயில் பொழுதுகளில் கொஞ்சம் கொஞ்சமாக என்னை நான் தொலைத்திருக்கிறேன். என் உலகம் மெல்ல மெல்ல சுருங்கி வந்திருக்கிறது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை காணாமல் போகும் மனிதர்களின் துயரம் சிறுக சிறுக நகரத்தில் உக்கிரமடைய தொடங்கிய நாட்களில் என்னையும் அறியாமல் நான் என்னைக் காணாமல் ஆக்கிக் கொண்டிருந்திருக்கின்றேன். அகால இருள் காணாமல் போனவர்களின் துக்கத்தை அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்திருக்க வேண்டும்.
“என் புள்ள காலைலே பள்ளிக்குப் போனிச்சியா. . இன்னும் வீட்டுக்கு வரலே. “
“எவனோ காடிலே வந்து உங்க மகளே அடிச்சி தூக்கிட்டுப் போனதே எல்லாரும் பார்த்தோம்”
“ஐயா. . என் மகளே கண்டுபிடிச்சி கொடுத்துருங்கயா. . கூட்டாளி வீட்டுக்குப் போறேனு சொல்லிட்டுப் போனவதான் இன்னும் வரலயா. . மூனு நாளு ஆச்சியா. . கடவுளே என் மகளே காப்பாத்து”
“என் பொண்டாட்டி கடைக்கு போய்ட்டு வரேனு சொல்லிட்டு போனாங்க. . அதுக்கு பிறகு வரவே இல்லங்க. . என்னாச்சி எங்க போனானு தெரியலே. . பிள்ளைங்கலாம் அம்மாவெ தேடி அழறானுங்க”
“என் தம்பி வீட்டு முன்னுக்குத்தான் விளையாடிகிட்டு இருந்தாங்க. . 10 நிமிசத்துல ஆளெ காணம்ங்க”
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை நகரத்தில் பரவத் துவங்கிய நாட்கள் மெல்ல நினைவுக்கு வந்து கொண்டிருந்தன. அன்றைய நாட்களில் வெயில் அதிகமாக நகரத்தில் எரிந்து கொண்டிருந்தது. காணாமல் போனவர்களின் பெயர்களும் முகங்களும் என்னை விரட்டி நானே அறிய மறுக்கும் ஓர் உலகத்தில், என் விழிப்பு அறுந்து தொங்கிய ஒரு நரகத்தில், பிசிறு தட்டிய மனநிலையுடன் காணாமல் போனவர்களின் பள்ளத்தில் சரிந்து ஜடமாக நடந்து பேசி, சிரித்து வாழ்ந்திருக்கிறேன்.
“அம்மா. . நீ எங்கமா இருக்கே? நம்பலாம் எங்கமா இருக்கோம்?”
என் கண் முன்னே விரிந்து இயங்கிக் கொண்டிருக்கும் நகரம் உண்மையானாதா? அல்லது காணாமல் போனவர்களின் மாயை உலகமா? மெல்ல விழிப்புநிலையை உறுதி செய்தவாறு எழுந்து திடமாக நின்று கொண்டேன். எங்கிருந்தோ யாரோ அன்புமிக்க குரலுடன் அழைப்பதைப் போலவே கேட்டது.

“மீனா அக்கா! தாத்தா! அப்பா!”
என்னைப் போல உறவுகளைத் தொலைத்தவர்கள் தங்களின் காணாமல் போனவர்களின் பெயர்களை அழைத்துக் கொண்டே நகரத்தில் நுழையத் துவங்கினர். வெற்றிடங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. இருப்பவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்குமான இடைவெளி பலமடைந்து கொண்டிருந்தது. என் அம்மாவைப் போலவே ஒரு பெண்மணி தன் மகளுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
“அம்மா! உன் பிள்ளையெ கெட்டியா பிடிச்சிக்கமா. . இனியும் யாரும் காணாம போகக்கூடாதுமா.. பத்திரமா இருமா”
மண்டியிட்டு அழுது கொண்டிருந்தேன். காணாமல் போனவர்களின் கைகள் என்னை நெருங்கி வந்தன. உலகம் இழந்தவர்ககளைப் பற்றி என்று கவலைப்படும்? தெரியவில்லை. என் தோற்றம் மெல்ல கரைந்து கொண்டிருப்பதும் இந்த உலகத்திலிருந்து நானும் யாரும் கவனியாத ஒரு பொழுதில் அக்கறை இல்லாத மனித கூட்டத்தின் நடுவில் காணாமல் போய்க் கொண்டிருப்பதும் சமமாக நிகழ்ந்து கொண்டிருந்தன.
முடிவு
நன்றி: உயிரெழுத்து மாத இதழ் (ஜூன்)
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
http://bala-balamurugan.blogspot.com/

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்