கால நதிக்கரையில்……(நாவல்)-29

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

வே.சபாநாயகம்



மேல மந்தையை நெருங்குகையில் சிதம்பரம் நின்று அங்கு வலப்புறம் இருந்த அவர்களது சிறிய வீட்டைப் பார்த்தார்.

“என்ன பாக்குறீங்க? இதையும்தான் வித்தாச்சே! இதில பாக்க என்ன இருக்கு? வாங்குனவன் வெளியூர்க்காரன். அவன் அப்படியே போட்டு வச்சிருக்கான். இதுவும் இடிஞ்சுதான் கெடக்கு”

“இதுலதானே எங்க பாட்டி கடேசி காலத்துலே இருந்தாங்க! பாவம், சாகுறப்ப நாங்க எத்தினி பேரப் பிள்ளைங்க இருந்தும் நெய்ப் பந்தம் பிடிக்க சின்னத் தம்பி ஒருத்தனைத் தவிர நாங்க யாரும் இருக்க முடியாமப் போனதை நெனச்சாத் துக்கமா இருக்கு. பேத்திகள் மட்டும் எல்லோரும் இருந்தாங்க” என்று பாட்டிக்காக மனம் கசிந்தார் சிதம்பரம்.

“ஏன்? என்ன ஆச்சு?”

“பெரியண்ணன் தொலைதூரத்தில வேலையிலே இருந்தாரு. மத்த நாங்க மூணு பேரும் காலேஜுல படிச்சிக்கிட்டிருந்தோம். அப்பா எங்க படிப்புக் கெட வேண்டாம்னு அப்ப சேதி அனுப்பலே. எல்லாருக்கும் மறுநாள்தான் கார்டு போட்டி ருந்தாங்க. ஆனா அப்பா தனியாளா அப்ப சிரமப்பட்டதை அப்புறம்தான் தெரிஞ்சு கிட்டோம்” என்று சொல்லிய சிதம்பரம் பாட்டியின் மரணத்தை ஒட்டி அப்பாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை நினைவுபடுத்திப் பார்த்தார்.

பாட்டி செத்தபோது உள்ளூர் திரௌபதி அம்மன் திருவிழாவில் பூசாரி தட்டெடுப்பது சம்பந்தமாக பெரியப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட சுயஜாதிக் காரர்கள் சிதம்பரம் வீட்டுக்கு நல்லது கெட்டது எதற்கும் போவதில்லை என்று
ஜாதிக் கட்டுமானம் பண்ணி வைத்திருந்ததால், பாட்டி செத்ததற்கு உடன் பங்காளிகள் நாலு குடும்பம் தவிர வேறு யாரும் வரவில்லை. பெரியப்பா அதற்கு முன்பே காலமாகி இருந்தார். பெரியப்பா மகன்கள் இரண்டு பேர் இருந்தார்கள் என்றாலும் நீண்ட நாட்களாய்ப் பேச்சு வார்த்தை இல்லாததால் ஒப்புக்கு அன்று வந்திருந்தார் கள். அவர்கள் எதிர் கோஷ்டியுடன் நெருக்கமான நட்புடையவர்கள். அவர்களால் அப்பாவுக்கு எந்த பலமும் இல்லை.

பறையடிப்பவர்கள், வெட்டியான், வண்ணான், நாவிதன் யாரும் வராதபடி தடுக்கப்பட்டார்கள். இதில் மனதை வருத்தும் விஷயம் என்னவென்றால் – வராத வர்கள், தடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் அதற்கு முதல் நாள் வரை, பாம்புக்கடிக்
காகவோ, வேறு மருந்து மற்றும் யோசனைகளுக்காகவோ அப்பாவிடம் வந்து போனவர்கள். அதற்காக அப்பாவிடம் விசுவாசம் கொண்டிருந்தவர்கள். அம்மா அதைச் சொல்லி ஆதங்கப்பட்டதுடன் ஊரின் மிக மூத்த மனுஷியின் கடைசிக் காரியம் எப்படி நடக்குமோ என்று கலங்கி இருக்கிறார்கள். ஆனால் அப்பா கலங்கவில்லை. பண்ணையாட்களை அனுப்பி வெளியூர் உறவினர்களுக்குத் தகவல் அனுப்பினார்கள்.

பக்கத்து கிராமத்தின் பெரிய மிராசுதாரரான அம்மாவின் அக்கா மாப்பிள்ளை, சேதி சொன்ன ஆட்கள் மூலம் நிலைமையை அறிந்து மிக ஆத்திரம் அடைந்தவராய் தன் செல்வாக்கில் இருந்த தன் ஊர் வெட்டியான், பறையடிப்பவர், வண்ணான்,
நாவிதன் இன்னும் அடியாட்கள் பலரோடு வந்து தடுத்தவர்கள் தலை குனியும்படி அமோகமாக இறுதிச் சடங்கை குறைவில்லாமல் நடத்திக் கொடுத்தார். அவரது ஏற்பாட்டின்படி – வெளியூர் உறவினர்களும் உள்ளூர் உடன் பங்காளிகளும் உள்ளூர்
பிறஜாதிக்காரர்களுமாய் கூட்டம் அலை மோத, தாரைதப்பட்டை, அதிர் வேட்டு வெடிமுழக்கங்களுடன் 90 வயது வாழ்ந்த பாட்டியின் நிறை வாழ்வை கௌரவிக்கிற மாதிரி – இறுதி யாத்திரை அமர்க்களமாய் நடந்து முடிந்திருக்கிறது.

அப்பாவு வாழ்வும்சரி, சாவும்சரி எளிமையாக இருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். அவர்களுக்குப் பிறரது கவனத்தை ஈர்க்கும்படியோ படாடோபமாகவோ எதையும் செய்வதில் எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் இப்போது அவர்களால் தடுக்கமுடியாதபடி மாப்பிள்ளையின் தலையீடும், கௌரவப் பிரச்சினையுமாய் அமைந்துவிட மௌனமாய் அதை ஏற்க வேண்டி வந்தது. வராதவர்களை, அவர்களைத் தடுத்தவர்களைப் பற்றி அம்மாவுக்கு மிகுந்த அதிருப்தி இருந்தாலும் அப்பா அவர்கள் மீது கோபப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் வெறும் கருவிகள், நாளையே அவர்கள் தன்னிடம் வருவதை யாரும் தடுக்கக்க முடியாது என்பதை அறிந்தவர்கள். அது அப்படியே ஆயிற்று. பதினாறாம் நாள் காரியம் முடிந்த மறுநாளே அவர்களில் பலர் பாம்புக் கடிக்காகவும் மற்ற வைத்தியத்துக்காவும் கூச்சமின்றி அப்பாவை நாடி வந்தார்கள். அப்பா எந்தவித மனத்தடையும் இன்றி எப்போதும் போல அவர்களுக்கு உதவி செய்து அவர்களை நாணமுறச் செய்ததும் நிகழ்ந்தது.

பதின்ம வயதுக்கு முன்னரே சிதம்பரத்துக்கு பாட்டியுடனான நெருக்கம் குறைந்து போனதால் பாட்டியின் நினைவுகள் முழுமையாய் இல்லை. அப்பா பெரியப்பா இருவரில் அப்பாவிடம் தான் பாட்டிக்கு ஒட்டுதல் அதிகம். பெரியப்பாவின் முரட்டு சுபாவம் அம்மாவையும் நெருங்க விடவில்லை. பேரப்பிள்ளைகளில் சின்ன மகன் குழந்தைகளிடம் பாட்டிக்குக் கொஞ்சம் பாசம் உண்டு. அப்பாவுக்கும் பெரியப் பாவுக்கும் பாகப்பிரிவினை நடந்தபோது பாட்டிக்கு வீட்டின் ஒவ்வொருவர் பாகத்திலும் ஒரு அறை ஒதுக்கப்பட்டது. பாட்டி யாரிடம் இருப்பது என்ற பிரச்சினைக்குப் பாட்டியே முடிவு செய்தபடி பெரியப்பா வீட்டு அறையில் சாமான்களை வைத்துக் கொண்டு அப்பா பகுதியில் உள்ள அறையில், தானே சமைத்துக்குக் கொள்ள ஏற்பாடாயிற்று. பாட்டி தன்னால் ஒருவருக்கும் சிரமம் வேண்டாம் என்பதோடு மருமகள் இருவரிடமுமே சுமுகமான உறவு இல்லாததாலும் பிடிவாதமாக தன்னை ஏலம் போடுவதை ஏற்கவில்லை.

மிகவும் தள்ளாமை வந்தபிறகும் கண்பார்வை மங்கியபோதும் பாட்டி யாரிடமும் இருக்கப் பிடிவாதமாக மறுத்து விட்டார். அதனால் அப்பாவே கொஞ்ச நாட்கள் பாட்டிக்குச் சமைத்துப் போட்டிருக்கிறார்கள். பிறகுதான் பாட்டி விரும்பிய படி மேல மந்தைக்கு அருகில் இருந்த அப்பாவின் பாகத்தில் இருந்த வீட்டைச் செப்பனிட்டு பாட்டியை அதில் இருக்கச் செய்து, சமைத்துப் போடவும் கூடமாட உதவிக்கு அருகில் இருக்கவும் பங்காளி வழியில் ஒரு மூதாட்டியை அப்பா ஏற்பாடு செய்தார்கள்.

பின்னாளில் சிதம்பரம் அம்மாவிடம் பாட்டியைத் தள்ளாத வயதில் அப்படித் தனியாக விட்டதற்காகக் குற்றம் சாட்டும் தொனியில் பேசிய போது அம்மா, தன் ஆதங்கத்தை ஒரு குற்றச்சாட்டுபோல் சொன்னது நினைவுக்கு வருகிறது. “நானா வச்சிக்க மாட்டேன்னேன்? அவங்கதான் ஒத்துப்போவலே! அந்தக் காலத்துலே உங்கப் பாட்டி என்னை எப்பிடிப் படுத்தி வச்சாங்கன்னு ஒனக்குத் தெரியுமா? கல்யாணமான புதிசுலே, புள்ளாயார் சுத்திக்கு நா செஞ்ச கொழுக் கட்டைய எடுத்துக்கிட்டு ஊடுஊடாப் போயி ‘மருமவ செஞ்சிருக்கிற கொழுக்கட்ட லட்சணத் தப் பாத்தியா?’ ன்னு காட்டுனவங்கதானே?” என்று எல்லா மருமகள்களையும்
போலப் பழங்கணக்குகளைப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் பாட்டி இந்த வீட்டில் இருந்தவரையில் – அம்மாவிடம் பேசாது இருந்தபோதும் – அம்மா ஊருக்குப் போயிருந்த சமயங்களில் பேரப்பிள்ளைகளை அனுசரணையாய்க் கவனித்துக் கொண்டது சிதம்பரத்துக்கு ஞாபகம் இருக்கிறது.
பேரப்பிள்ளைகளை உட்கார வைத்து காலையில் பழைய சோற்றைப் பிழிந்து தட்டுகளில் போடும்போது சமயத்தில் சன்னமான புழு இருப்பதுண்டு. புழு இருந்து விட்டால் தம்பி துள்ளிக் குதிப்பான். அதை அப்படியே அள்ளி வெளியே குத்தாகப் போடுவான். பாட்டி, “அடேய்! சோத்தை எறைக்காதே! ஒரு பருக்கையை எறச்சா ஒம்பது நாளு பட்டினி கெடக்கணும்!” என்று அவனைக் கண்டிப்பார்.

அப்போது அது மிரட்டல் மாதிரிதான் இருந்தது. பின்னாளில் இரண்டாவது உலகப்போரின் போது கடுமையான ரேஷன் வந்தபோது மக்கள் அரிசி கிடைக்காமல் கோதுமையையும், சோளத்தையும் சமைத்துச் சாப்பிட வேண்டி வந்தபோது பாட்டி
யின் எச்சரிக்கை உண்மையாயிற்று. கோயம்புத்தூர் விவசாயக்கல்லூரியில் படித்த சின்ன அண்ணன் விடுதியில் அரிசிச் சோறு போடும் நாட்களில், பட்டை போட்ட அளவுச் சோற்றின் ஒரு பருக்கையைக் கூடச் சிந்தாமல் சாப்பிட நேர்ந்ததைச்
சொல்லி ‘பாட்டி வாக்குப் பலித்துவிட்டது’ என்று சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

தம்பி இன்னொரு வகையிலும் பாட்டிக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வான். வீட்டுக்குள் தாழ்வாரத்தில் அமர்ந்து பாட்டி ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கையில் பாட்டியின் நீட்டிய கால்கள், நடந்து போகத் தடையாயிருக்கும். சிதம்பரமோ மற்ற பிள்ளைகளோ அப்போது பாட்டியைச் சிரமப்படுத்தாமல் ஒதுங்கிப் போவார்கள். ஆனால் தம்பி அப்படி ஒதுங்கிப் போகாமல் ஒரே தாவாகப் பாட்டியின் கால்களைத் தாண்டித்தான் போவான். குனிந்து அரிசியில் கல்பொறுக்கிக் கொண்டிருக்கும் பாட்டி நிமிராமலே “ஆருடா சின்னக் காளையா?” என்று கேட்பார் கள். ஆனால் தம்பி அதையெல்லால் லட்சியம் செய்ய மாட்டான்.

பாட்டிக்கு ஒரு பெரிய மரப்பெட்டி அப்பாவின் பகுதியில் இருந்தது. ஒரு ஆள் தாராளமாய்ப் படுத்து புரளும் அளவுக்கு அகலமும் நீளமும் கொண்ட இடுப்பளவு உயரம் கொண்ட பெட்டி அது. அதில்தான் பாட்டியின் பாத்திர பண்டங்களும் இதர பொருள்களும் இருந்தன. அதன் கதவைத் தூக்கி நிமிர்த்துவது கஷ்டமாக இருக்கும். ஆனாலும் பாட்டி தினமும் அதை இரண்டு மூன்று தடவைகளாவது திறக்காமல் இருப்பதில்லை.

பாட்டியின் செருவாட்டுப் பொக்கிஷமும் அதில் தான் இருந்தது. ஒரு பெரிய சுருக்குப் பை நிறைய அந்தக் காலத்து வெள்ளி ரூபாய் நாணயங்கள் – ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் மொட்டைத்தலை பதித்த கனமான நாணயங்கள் – அதில் இருந்தன. யாரும் இல்லாத நேரமாய் பாட்டி அதை எடுத்து நீட்டிய கால்களுக்கிடையே வைத்து எண்ணிப் பார்ப்பது தினசரி நிகழ்ச்சி. அம்மாவோ பிள்ளைகளோ யாராவது வந்து விட்டால் விரித்த கத்தரிக்கோல் மூடிக் கொள்கிறமாதிரி பாட்டியின் நீட்டி விரித்த கால்கள் நெருங்கி சுருக்குப் பை மறைக்கப்பட்டுவிடும். ‘அப்படி தெனமும் என்னதான் அதுல பாக்குணுமோ? கால் மொளச்ச ஓடியாப் போயிடும்?’ என்று அம்மா அதை விமர்சிப்பதுண்டு. பாட்டி தினமும் எண்ணிச் சரிபார்க்க வேண்டிய அவசியமே இல்லைதான். பூட்டப்பட்ட பெட்டியின் பெரிய சாவி எப்பொழுதும் பாட்டியின் இடுப்பிலேயே சொருகப் பட்டிருக்கும். அப்படியே சாவி கிடைத்தாலும் யாரும் பெட்டியைத் திறக்கப் போவதில்லை. ஆனாலும், கண்பார்வை மங்கிய காலத்திலும்கூட, தடவித்தடவி எண்ணிப் பார்ப்பதை பாட்டி நிறுத்தியதில்லை. ஆனால் அப்படிப் பார்த்துப் பார்த்து பூட்டி வைத்த பணம் பாட்டியுடனேயே போய்விடவில்லை தான்.

வெள்ளிப் பணங்கள் நிறைய பாட்டியிடம் இருப்பது தெரிந்த பெரியப்பாவின் பிள்ளைகள் பாட்டி செத்தபிறகு பங்கு கேட்டுத் தகராறு செய்வார்களோ என்று அம்மா பயந்ததுண்டு. ஆனால் பாட்டியின் சாவை ஒட்டிய கரும காரியங்களுக்கான செலவிலும் பங்கேற்க வேண்டி வரும் என்று அவர்கள் அதை கிளப்பாமல் விட்டு விட்டார்கள். அப்பாவின் மறைவுக்குப் பிறகு இருபது ஆண்டுகளுக்கு மேலாய் அம்மா அதைப் பத்திரமாய் வைத்திருந்து பிள்ளகள் அனவருக்கும் தலைக்கு பத்து வெள்ளிப் பணம் என்று பாட்டியின் நினைவாக வைத்துக்கொள்ளக் கொடுத்தார்கள். அப்போதே அதன் விலை அதிகம். அசல் வெள்ளி நாணயம் என்பதால் ஒன்றே ஐம்பது ரூபாய்க்கு மேல் விலை போவதாக இருந்தது. அந்தப் பணத்தில் ஒரு நாணயத்தை மட்டும் இன்னும் சிதம்பரம் பாட்டியின் நினவாக வைத்திருக்கிறார்.

பாட்டிக்கு சிதம்பரத்தையும் சின்ன அண்ணனையும்தான் பிடிக்கும். பெரியண்ணன் குழந்தையிலிருந்தே பெரியம்மா வீட்டில் வளர்ந்ததால் அதிகம் பாட்டியுடன் பழக்கமில்லை. சின்னண்ணன் கல்லூரியிலிருந்து வரும்போது வாங்கிவரும் பழங்களில் பாட்டிக்கென்று தனியாக எடுத்துப்போய்க் கொடுப்பார். அப்பா சிதம்பரத்தையும் அப்படி விடுமுறையில் வரும்போது ‘நீ வாங்கிக்கிட்டு வந்த பழத்துலே கொஞ்சம் கொண்டு போயி பாட்டிக்குக் குடுத்துட்டு விசாரிச்சுட்டு வாடா’ என்பார்கள். தான் தனித்துப் போய்விடவில்லை, பேரப் பிள்ளைகள் பாசமாய் இருக்கிறார்கள் என்று பாட்டிக்கு ஒரு ஆறுதல் ஏற்படட்டும் என்பதற்காக அப்பா அப்படிச் சொல்வார்கள். சிதம்பரமும் அப்படியே செய்வார். ஆனால் பாட்டி பரப்பிரும்மம் போல. அதற்கெல்லாம் பூரித்துப்போவதோ, பேரப்பிள்ளைகள் தன்னை வந்து பார்க்காது போனாலும் அதுபற்றி ஆதங்கப்படுவதோ இல்லை.

அப்படித்தான், தனக்கு பேரப்பிள்ளைகள் எல்லோரும் வந்து நெய்ப் பந்தம் பிடிக்காதது பற்றியும் லட்சியம் பண்ணி இருக்கப் போவதில்லை என்று பட்டது.

“வா, போகலாம்” என்று திரும்பி, மருதுவுடன் சிதம்பரம் நடந்தார். மேல மந்தைக்கு வந்து மாரியம்மன் கோயில் எதிரே கொட்டப்பட்டிருந்த மணலில், அடர்ந்து கவிந்திருந்த வேப்ப மரநிழலில் அமர்ந்தார்கள்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்