மாத்தா ஹரி -அத்தியாயம் – 31

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா



– பிறகென்ன நடந்தது? பவானி.

– எனக்குப் புரியலை கிருஷ்ணா. இப்படி திடீர் திடீரென்று சுவரைபார்த்து புலம்பினா, நா¨ளைக்கு உன்னையும் தேவசகாயம் லிஸ்ட்ல சேர்க்கவேண்டிவரும். என் கதையை மறந்துட்டு வேற வேலையைப் பாரு. தேவசகாயம் என்னை குழப்பியது போதாதென்று உன் பங்குக்கு நீயும் என்னை மாத்தா ஹரியா நினைச்சுக்கிட்டு புலம்பற.

– எங்களைச் குற்றம் சொல்வதிருக்கட்டும், நீயே பலமுறை நான் மாத்தா ஹரியா, பவானியாண்ணு கேட்டிருக்கிற. சரி பிறகென்ன நடந்தது சொல்லு.

– இப்படிக் கேட்டா, நான் என்ன சொல்வேன். யாரைப்பற்றி கேட்கற? ஹரிணியைப் பற்றியா? என்னைப் பற்றியா? மாத்தா ஹரிங்கிற பேருல செயல்படற சமயக்குழுவைப் பற்றி எச்சரிக்கை செய்யவந்த க்ரோ, ஹரிணியிடத்தில் தேவசகாயத்தால் எனக்கு நடந்த கொடூரங்களில் ஒன்றைச் சொல்கிறாள். அநேகமாக இதை ஹரிணி உனக்குச்ச் சொல்லி இருக்க வேண்டும், சில விஷயங்களை நிரப்ப எனது டைரியும் உனக்கு உதவியிருக்கிறது. நான் அவ்வப்போது எழுதிவைத்த டைரிகளில் என்னைப் பற்றிச் சொல்லி இருப்பேனே தவிர, ஹரிணி வாழ்க்கையில் என்ன நடந்திருக்குக்குமென்று ஆரூடமேதும் கணிக்கவில்லை. எதுவென்றாலும் என்னைப் பற்றிக் கேளு, சொல்கிறேன்.

– ஹரிணி சம்பந்தப்பட்டதை அவளிடத்திலேயே கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். மிளகாய்த் தூள் குளியலுக்குப் பிறகு உனக்கென்ன நடந்தது என்பதை அறிவதுதான் எனது கேள்வியின் நோக்கமே..

ஒரு சில விநாடிகள் கரைந்திருந்தன. பவானியிடத்தில் நான் எதிர்பார்த்ததுபோலவே மௌனம், அதற்கான காரணமும் எனக்குப் புரியாமலில்லை. ஒளியற்ற பெருவெளியொன்றின் சிறகுக்குள் அடைகாக்கப்பட்டிருப்பதுபோல உணருகிறேன். ஒரே ஒரு இறகு விலகினாற்போதும் உயிர்பிழைத்துவிடுவேன். பெய்யும் பனியும், சாம்பல் நிறத்திற்கு மாறிக்கொண்டிருந்த இருட்டும், கீழ்வான வெளுப்பும் அதிகாலை என்பதை உறுதிபடுத்துகின்றன. புதைக்கப்பட்ட சாலையில் குதிரைகளின் குளம்படி சத்தமும், சக்கரங்கள் உருளுகிற ஓசையும், சலசலவென்று ஆரம்பித்து, தடதடவென்று ஒலித்து மெதுவாக அடங்குகின்றன. கூண்டுபோல ஒருவாகனம். கதவு திறக்கப்படுகிறது. வாகனத்திலிருந்து பெண்ணொருத்தி இறங்குகிறாள். அவளுக்கு முன்னும் பின்னுமாக கறுப்பு உடையணிந்த மனிதர்கள். அவர்கள் எடுத்துவைக்கிற ஒவ்வொரு அடியிலும் மரணத்தின் முனகல். கழுமரத்தை ஒத்திருந்த மரமொன்றில் அவளை இறுகக் கட்டுகிறார்கள். அவளுக்கு எதிரே, வரிசையில் துப்பாக்கி ஏந்தி அணி வகுத்து நிற்பவர்களில் தேவசகாயத்தின் முகம் எனக்குப் பழகிய முகம்..பன்னிரண்டாவதாக நான் நிற்கிறேன். நானென்றால் இதை வாசிக்கிற ஆணாகிய நீங்கள். நமக்கென்று ஒரு கடமை இருக்கிறது. எதிரே இருக்கிற பெண்ணை வீழ்த்தவேண்டும், ஒன்றே ஒன்று கபாலத்திலோ.. மார்பிலோ பாய்ந்தால் போதும்- சுபம்.

– கேள்வி கேட்டாயேதவிர பதிலைப் பெற நீதான் தயார் நிலையிலில்லை என நினைக்கிறேன்

– உண்மைதான் பவானி. இப்படியொரு பயங்கரத்தை நினைத்துப் பார்க்க எனக்கு முடியலை.

– பொய்சொல்லாதே கிருஷ்ணா. பிரியாணியை ரசிச்சு சாம்பிடும்போது கழுத்தறுபடுகிற ஆடு கோழிகளின் ஞாபகம் வருகிறதா என்ன. பால் வற்றிய முலைக்காம்பை கடித்தபடி பசியில் வாடும் எத்தியோப்பிய குழந்தையை தொலைக்காட்சி செய்தியில் பார்த்தபடி, வயிறுமுட்ட சாப்பிடுவது நமக்கென்ன புதுசா? சில விலங்குகளை மாத்திரம் தேர்ந்தெடுத்து வீட்டில் வைத்திருக்கிறோமே எதற்கென்று நினைக்கிறாய், அதாவது நாய், பூனை ஆடு, மாடென்று நம்மகிட்டே அடங்கிப்போற விலங்குகளா தேர்ந்தெடுத்து அன்பு காட்டறோம். அந்த வரிசையில் பெண்ணையும் சேர்த்துக்கொள். அன்புங்கிறதேகூட ஒரு வித ஆதிக்க மனப்பான்மைதான். சம்பந்தப்பட்டவர்கள் இரண்டுபேருமே ஆண்களென்றால், பிரச்சினைகளில்லை. பரஸ்பர எஜமான் ஆதிக்கத்தை ஒருவன் மற்றவன்மீது செலுத்தி தங்கள் பலத்தின் தராசு தட்டு கீழிறங்காமல் பார்த்துக்கொள்வீங்க. ஆனால் பெண்ணென்றால் வேறு நீதி. அவளும் அண்டிக்கிடக்கிற வீட்டுவிலங்கு. கோமாதாண்ணு கும்பிட்ட மறுநாளே கூசாமல் இருநூறு ரூபாய் கிடைச்சாற்கூட போதுமென்று, கசாப்பு கடைகாரனிடம் மாட்டை வளர்க்கிற மனப்பாண்மையில்தான் பெண்ணைப்பார்க்கறீங்க.

– உண்மையைச் சொல்லணுமென்றால், இதற்கெல்லாம் விமோசனமே இல்லை. அடங்கிப் போகிற விலங்கா இல்லாம, குரல்வளையை கடிக்கிற மிருகமா நீங்க மாறினா ஏதாவது நடக்கலாம். நீ மேலே சொல்லு.

– எங்கள் வீட்டில் பாதாள அறையை தேவசகாயம் பூஜை செய்யவென்றே ஒதுக்கியிருந்தான். உனக்குத்தான் தெரியுமே பிரான்சில் ஒரு பாதாள அறைக்கான தேவைகள் என்னண்ணு? அங்கே பொதுவா உபயோகமற்ற வீட்டுப் பொருள்களைப் போட்டுவைப்போம். அதுவும் தவிர அவை பெரிதாக இருக்குமென்றும் சொல்ல முடியாது. தேவசகாயம் எங்கள் பக்கத்து அப்பார்ட்மெண்ட்காரனையும் கேட்டு, அவனுடைய பாதாள அறையையும் எங்களுடைய அறையோடு இணைத்திருந்தான். இந்தியாவில் இருக்கிறபோதே தேவசகாயம் காளி உபாசகன் என்று சொல்லக்கேள்வி. புதுச்சேரியில் இருக்கிறபோது அடிக்கடி திருவக்கரைக்குச் சென்றுவருவானாம். இங்கே அவனோடு சில பைத்தியக்கார கூட்டமும் சேர்ந்துகொள்ளும். பழம் பூவென்று வீடு முழுக்க நிறைந்துவிடும். நாக்கைத் துருத்திக்கொண்டு, கண்களை விரியத் திறந்தபடி பக்கத்திற்கு ஒன்பது கைககளென்று, கபால மாலையணிந்த காளி. முகமட்டுமல்ல, கரிய அந்த உடலிலும் உக்கிரத்தைப் பார்க்கலாம். அதனருகிலேயே மாலை சாற்றிய மாத்தா ஹரியின் முழு உருவப்படம். நெற்றி நிறைய குங்குமத்துடன், புலித்தோல் விரித்து உட்கார்ந்திடுவான். நெடுநேரம் எதையோ உளறிக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். விடிய விடிய பூஜை நடக்கும்., கட்டி கட்டியாய் கற்பூரத்தை எரிப்பார்கள், கத்தை கத்தையாய் ஊதுபத்தி கொளுத்துவார்கள். எனக்கும் அப்படியொரு பூஜையை நடத்தியிருக்கலாம், யார்கண்டது.

– உனக்கு என்ன நடந்தது நினைவில்லையா?

– நினைவில்லை. தொண்டை கிழிய கதறிய ஞாபகம் இருக்கிறது. வழக்கம்போல அவன் மோர்·பின் ஊசி போட்டிருக்கணும். அடுத்த இரண்டு நாட்களும் உடல் நெருப்பில் போட்டதுபோல வேதனை. கண்களிரண்டும் ஊதிக்கொண்டு ரணமாக இருந்தன. பார்வை போனதுதான் திரும்பாது என்ற பயங்கூட இருந்தது. அந்த இரண்டுநாட்களும், விடிவதும் தெரியாது, இருட்டுவதும் தெரியாது, பகல் இரவு பேதமின்றி
கட்டிலில் கிடந்தேன். பிறகுதான் நடந்தது என்னவென்று க்ரோவுக்கும் ஹரிணிக்கும் நடந்த உரையாடல் தெரிவிக்கிறதில்லையா?

– பல விஷயங்கள் மிகவும் குழப்பமா இருக்கிறது பவானி. உன்னை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே, அவனுக்கு போதை மருந்து பழக்கம் இருந்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொண்ட ஒரு கூட்டம் அவனை உன்னோடு அறிமுகம் கொள்ளச் செய்து திருமணத்தையும் முடித்திருக்கிறார்கள். அவர்களின் உள் நோக்கமென்ன என்பதைப் பிறகு பார்ப்போம். இருந்தபோதிலும், புதுச்சேரியில் இருந்தவரை தேவசகாயம் உன்வரையில் ஒழுங்காகவே இருந்துவந்திருக்கிறான். ஆனால் பிரான்சுக்கு வந்த பிறகு ஒரேயடியாக என்ன நடந்தது? ஹரிணியை பத்தின பிரச்சினை ஏதாவது காரணமாக இருந்திருக்குமா?

– இருக்க முடியாது. சொல்லப்போனால் அந்த விஷயத்தில் மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து அவனைக் காப்பாற்றி இருக்கிறேன்.

– என்ன நடந்தது?

– 1988ம் ஆண்டு ஏப்ரம் மாதம் 27ந்தேதி மிகச் சுருக்கமாக எனக்கும் தேவசகாயத்திற்கும் பதிவுத் திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் என்று சொன்னால் அவனது தரப்பில் தேவசகாயத்தின் அப்பா, அம்மா, அல்லியான்ஸ் பிரான்சேய்ஸ் நண்பர்கள் இரண்டுபேர், பிறகு கல்லூரி நண்பர்கள் என்று சொல்லி மூன்றுபேர், வந்திருந்தார்கள். எனக்கென்று சென்னையிலிருந்து சுதா ராமலிங்கம், கவிஞரும் ஆசிரியையுமான தேவகியென்று ஒரு சிநேகிதி, எனது சீனியர் வக்கீல், அவரது குமாஸ்தா, பிறகு எங்கள் இருவருக்குமே வேண்டியவர்கள் என்றவகையில் பத்மாவும் அவளுடைய அப்பா அம்மாவும் வந்திருந்தனர். அனைவருக்கும் ஒரு ஓட்டலில் விருந்து ஏற்பாடு செய்திருந்தோம். எல்லா புதுமணத் தம்பதிகளையும்போலவே பீச்சு, சினிமா, ஷாப்பிங் என்று எங்கள் குடும்பவாழ்க்கை உல்லாசமாக ஆரம்பித்தது.

அன்றைய தினம் ஒரு ஞாயிற்றுக்கிழமை. தேவசகாயத்திற்கு அசைவம் வேண்டும். எனக்குச் சைவம். அவன் ஓட்டலிலிருந்து அவனுக்குப் பிடித்தவற்றை வாங்கி வந்திருந்தான். இருவரும் அவரவர்க்கு பிடித்ததைச் சாப்பிட்டுமுடித்ததும், முதல் நாள் கோர்ட்டிலிருந்து திரும்பும்போது வாங்கிவந்திருந்த ‘மொழி புதிது’ என்ற சிற்றிதழைப் பிரித்துக்கொண்டு உட்கார்ந்தேன். தேவசகாயம் அருகில்தான் அமர்ந்திருந்தான். நான்காவது பக்கத்தில் ஒரு கவிதை, ‘மலரும் மனமும்’ என்பது அதன் தலைப்பு. ஆச்சரியமாக இருந்தது. நான் கூட அதே தலைப்பில் கவிதை ஒன்று எழுதிய ஞாபகம். தொடர்ந்து படிக்கிறேன், என்ன ஆச்சரியம் அதிலிருப்பதெல்லாம் என்னுடைய வரிகள். ஒரு அதீத அவசரத்துடன் கண்கள், எழுதிய கவிஞரின் பெயரைத் தேடுகின்றன. கவிதைக்குக் கீழே தேவசகாயம் என்று அச்சிடப்பட்டிருக்கிறது.

– தேவா உங்கள் கவிதையொன்று பிரசுரமாகியிருக்கிறது சொல்லவே இல்லையே, என்றேன்.

தேவவசகாயம் சிரிக்கிறான், பிறகு, “நான் நேற்றே வாசித்துவிட்டேன். அக்கவிதையைப் பாராட்டி கடிதம் எழுதவேண்டுமென்று என் நண்பர்களிடத்திலும் சொல்லி இருக்கிறேன்”- என்றான்.

– இது தப்பில்லையா?

– எது?

– அடுத்தவர் கவிதையை எனதென்று உரிமை கொண்டாடுவது.

– யார் அடுத்தவர், நீயா? நான் தாலிகட்டியிருக்கேன் பவானி. உன் உடலில் மாத்திரமல்ல மற்ற உடமைகளிலுங்கூட எனக்குப் பங்கிருக்கு.

– அப்ப ஒன்று செய்யுங்க. நாளைக்குக் கோர்ட்டுக்குப்போயிட்டு, என் மனைவிக்குப் பதிலா, கணவன் நான் வாதாட வந்திருக்கேண்ணு சொல்லுங்க. ஜட்ஜ் மட்டுமல்ல, என் கட்சிக்காரன், பார்வையாளர்கள் அத்தனைபேரும் சிரிப்பாங்க. கணவன் மனைவி உறவுகளை இப்படியெல்லாம் கொச்சைபடுத்தாதீங்க. என்னுடைய உடலைக்கூட எனக்குச் சம்மதமென்கிறபோதுதான் தொடணும்; எனது உடமை எதுவென்றாலும் இவ்விதி பொருந்தும். அடுததவர் பொருளை உடையவர் அனுமதியின்றி எடுத்தால் அதுக்குத் திருட்டுண்ணு பேரு, உரிமைக்குள் வராது.

– இப்போ என்ன நடந்துபோச்சுண்ணு பாடமெடுக்கிற? பெரிய வக்கீலுங்கிற நினைப்பில் அதிகமாப்பேசற.

– உயிரியல் பாகுபாட்டின்படி பெண்ணென்று இனம்பிரிக்கபட்ட ஒரு சராசரி உயிரா, எனது உணர்வுகளைச் சொல்றேன். அவ்வளவுதான். கொடிபிடிச்சு, ஊர்வலமெல்லாம் போகணுங்கிற ஆசைகளெல்லாம் எனக்கில்லை.

– வெண்டைக்காய்..

முணு முணுத்தபடி எழுந்தான். வேகமாய் நடந்து வெளியேறினான். கூடத்தைக் கடக்கையிலும், கோபத்தின் வெளிப்பாடு, சுவாசத்தில் கலந்திருப்பதைக் கட்டிலில் அமர்ந்தபடி உணர்ந்தேன். வெளிக்கதவு அறைந்து சாத்தப்படுகிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் அவனிடத்திலிருந்து பதிலில்லை. பத்மாவிடம் விசாரிக்கையில் ‘நான் பார்க்கவில்லையே’ என்றாள். அவர்கள் வீட்டுக்கு போன் போட்டேன். அங்கேயும் அதுதான் பதில். நடப்பது நடக்கட்டுமென காத்திருந்தேன். மூன்றாம் நாள் ஹரிணியைத் தூக்கிக்கொண்டு வந்தான்.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா