ஐயம், சந்தேகம், அயிர்ப்பு – (இலக்கிய நாடகம் – பகுதி 6)

This entry is part of 48 in the series 20060519_Issue

கரு.திருவரசுகாட்சியில் வருவோர்: புலவர் பக்குடுக்கை நன்கணியனார், கவிஞர்.

காட்சி நிகழும் இடம். அழகிய மலைச்சாரல்.

காட்சி நிலை. புலவர் குன்றின்மேல் அமர்ந்திருக்கிறார். கவிஞர் அருகில் நிற்கிறார்.

கவிஞர்- புலவரய்யா, நாம் சற்றுமுன் கண்டது “பெருங்கதை அல்லது உதயணன் கதை” என்னும் காவியத்தில் வரும் காட்சிகள்.

புலவர்- ஆமாம் கவிஞரே! இந்தப் பெருங்கதையை முதன்முதலில் ” பிருகத்கதா” என்ற தலைப்பில் குணாட்டியர் என்பவர் பைசாச மொழியில் இயற்றியதாகவும், அதனைக் கங்கமன்னன் துர்விந்தன் என்பான் வடமொழியில் ஒரு காவியமாக இயற்றியதாகவும், அவனுடைய ஆட்சிப்பகுதியிலிருந்த கொங்குவேளிர் எனும் புலவர் அதைத் தமிழில் காவியமாக எழுதினார் என்பதும் செய்தி.

கவிஞ- கதையின்பமும் நல்ல இலக்கியச் சுவையும் கொண்டது இந்தப் பெருங்கதை.

புல- ஆமாம், நீங்கள் எடுத்துக் காட்டிய அந்தக் காட்சிகூட நல்ல கற்பனை நயமுள்ள காட்சிதான்.

கவிஞ- காட்சியும் கதையும் மேலும் சுவையாகத் தொடர்கிறது புலவரே! உதயணனின் புதுமையான திறமையான காதல் தூதை அவன் மனைவி வாசவதத்தை ஐயப்பட்டுக் கண்டுபிடிப்பதைமட்டும் தொடுவதுதான் எனது நோக்கம்.

புல- உதயணன் வாசவதத்தையையும் காதலித்துத்தான் மணம்புரிந்தான். அப்புறம் பதுமாவதி, இப்போது மானனீகை, என்று தொடரும் ஒரு காதல் மன்னனை ஐயப்படுதல் குற்றமா?

கவிஞ- ஐயப்பட்டுக் கண்டுப்பிடித்தும் ஆனதென்ன? அவன் காலத்து வழக்கப்படி வாசவதத்தையே பின்னர் மானனீகையை உதயணனுக்கு மணம் முடித்து வைக்கிறாள்.

புல- அதுமட்டுமா? நான்காவதாக விரிசிகை என்பவளையும் மணந்து நான்கு தேவியரோடு உதயணன் வாழ்ந்ததாகக் கதை, இல்லையா!

கவிஞ- ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் எனும் உயரிய வாழ்க்கையில்தான் சந்தேகம் என்பது சொந்தம் வைத்துக்கொள்ளக்கூடாது. அப்படிக் காட்டவந்த, தமிழில் புகழ்பெற்ற காவியக் கதையான இராமாயணத்திலே கூட இராமன் சீதைமேல் ஐயப்பட்டு அவளைத் தீக்குளித்து வரச்சொல்கிறானே, அது சரியா?

புல- இராமன் அதை ஊருக்காகச் செய்தான், உலகத்துக்காகச் செய்தான் என்று சொல்லப்பட்டாலும் அவன் ஐயப்பட்டது பட்டதுதான். பெண்கள் ஆண்கள்மேல் ஐயப்படுவதுதான் மிகுதி என்ற உங்கள் எண்ணத்தை உடைத்தெரிய இராமன் ஒருவனே போதும்.

கவிஞ- அதே இராமாயணத்தில் இன்னொரு காட்சி புலவரே! கம்பனின் படைப்பிலே ஒரு சிறந்த பெண்ணாக வரும் அந்தச் சீதை நல்லாள்கூட, ஓரிடத்தில் இலக்குவன்மேல் ஐயம் கொள்கிறாள். அந்தக் காட்சியையும் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் புலவரே!

புலவ- இராமன் சீதையைப் பரணசாலைக் குடிலில் வைத்து, அவளுக்குக் காவலாகத் தம்பி இலக்குவனை வைத்துப் போனபின் அவள் மாய மானைப் பிடித்துத்தரவேண்டுமென்று இலக்குவனை விரட்டிய காட்சிதானே, பார்ப்போம், பார்ப்போம்!

(காட்சி நிறைவு)

காட்சி- 9

காட்சில் வருவோர்: இலக்குவன், சீதை.

காட்சி நிகழும் இடம். ஒரு காடு, அந்தக் காட்டில் பரணசாலைக் குடில்.

காட்சி நிலை: குடிலின் முன்னே சீதை. இலக்குவன் வில் அம்போடு அவளுக்குக் காவல் பணியாளனாக நிற்கிறான்.

சீதை- கொழுந்தனாரே! சற்றுமுன் ஓடியதே ஒரு பொன்மான், அது எனக்கு வேண்டும், நீங்கள் அதைத் பிடித்துத் தாருங்கள்!

இலக்குவன்- அந்த மான் உண்மையான மானா? அது பொய்மான் அண்ணியாரே! வேறு ஏதாவது கேளுங்கள், நான் கட்டாயம் கொண்டுவந்து தருவேன்!

சீதை- எனக்கு அந்த மான்தான் வேண்டும். அது எவ்வளவு அழகாகத் துள்ளி ஓடியது, பார்த்தீர்களா!

இலக்- துள்ளி ஓடியது சரி, ஓடுமுன் அதைச் சரியாகக் கவனித்தீர்களா? அது சாதாரண மான் இல்லை. பொய்மான், மாயமான். அதன் உடல் எல்லாம் தங்கத்தாலும் கால், வால், காதுகள் எல்லாம் மாணிக்கக் கற்களாலும் செய்யப்பட்டதுபோல இருந்தன. தங்கத்தாலும் மாணிக்கத்தாலும் செய்யப்பட்ட மான் துள்ளி ஓட முடியுமா? அது மானல்ல, அரக்கர் செய்யும் மாயம். இப்படியொரு மானை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை, அண்ணியாரே!

சீதை- ஏன் இருக்கமுடியாது! நீங்கள் பார்த்ததில்லை என்பதால் அப்படி ஒரு மான் இருக்கமுடியாது என்று சொல்லிவிடுவதா?

இலக்- இல்லை அண்ணியாரே! அது திண்ணமாக மானில்லை. யாரோ ஏற்பாடு செய்து அனுப்பிய சதி. அண்ணன் என்னை உங்களுக்குக் காவல் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அந்தக் காவலை, என் கடமையை உடைப்பதற்காக யாரோ செய்யும் சதி.

சீதை- சதியோ விதியோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு விளையாட்டுத் துணைக்கு அந்த மான் வேண்டும். நீங்கள் அதைப்பிடித்துத் தரபோகிறீர்களா, இல்லையா!

இலக்- அந்த மானைப் பிடிப்பது எனத் துணிந்துவிட்டால் அது மாய மானாக இருந்தாலும் சரி, மந்திர மானாக இருந்தாலும் சரி, அதை நான் பிடித்துவிடுவேன்! அந்த மானோடு ஏதோ சூதும் துள்ளி விளையாடுவதாக எனக்குப் படுகிறது. எனவேதான் உங்களைத் தனியே விட்டுப்போக அஞ்சுகிறேன், ஐயப்படுகிறேன்.

சீதை- அப்படியா, நான் எவ்வளவு கேட்டுக்கொண்டாலும் நீங்கள் போகப்போவதில்லை!

இலக்- ஆமாம், உறுதியாக!

சீதை- அப்படியானால் நானும் ஐயப்படுகிறேன் கொழுந்தனாரே!

இலக்- நீங்களுமா!… அது பொய்மான் என்றுதானே!

சீதை- மான்மேல் எனக்கு ஐயமில்லை, உங்கள்மேல்தான் எனக்கு ஐயம் ஏற்படுகிறது!

இலக்- என்மேலா, என்மேலா, என்னவென்று?

சீதை- நான் தனியளாக இருக்கிறேன், நீங்கள் ஏதோ கெட்ட எண்ணத்தோடுதான் என்னைவிட்டுப் போக மறுக்கிறீர்கள் என்று நான் ஐயப்படுகிறேன்.

இலக்- ஓ!… என்ன சொல்லிவிட்டீர்கள்! சரி, நான் உடனே அந்த மானைப்பிடிக்கப் புறப்படுகிறேன்.(என்று புறப்பட்டவன் சற்று நிதானித்து, சீதை நிற்குமிடத்துக்கு முன்னே குறுக்கலாக ஒரு நீண்ட கோடு போட்டு) நான் உங்களுக்குமுன்னே ஒரு கோடு போடுகிறேன். அண்ணியாரே! என்ன நடந்தாலும் யார் அழைத்தாலும் நீங்கள் இந்தக் கோட்டைத் தாண்டி நீங்கள் செல்லக்கூடாது. நான் விரைவில் வருகிறேன்!

(என்று சென்றுவிடுகிறான். காட்சி இருளாகிறது. இருளின் ஒரு மூலையில் வட்ட ஒளியில் புலவரும் கவிஞரும் தோன்றுகின்றனர்.)

புல- சீதை இலக்குவன் மேலேயே ஐயப்பட்டாள் என்பது ஒரு கொடுமைதான்!

கவிஞ- சந்தர்ப்பம்! சூழ்நிலை! நான் நமது சந்திப்பின் தொடக்கத்திலேயே பாடவில்லையா!

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் – அதற்குச் சந்தர்ப்பம் சூழ்நிலை தாய்தந்தை யாகும்.

புல- நல்லறிவும் குணத்தெளிவும் இருந்தால் இந்தச் சந்தர்ப்பம் சூழ்நிலை எல்லாம் மனிதரை அசைக்கமுடியாது.

கவிஞ- மெய்தான் புலவரே! அடுத்து வருவது, நீங்கள் சொல்வதற்கு விளக்கமான காட்சி. சோழ வளநாட்டில் அமைச்சராயிருந்த சீநக்கர் என்பவரும் பொய்யாமொழிப்புலவரும் நெருங்கிய நண்பர்களாயிருந்தனர். புலவர் ஊர்தோறும் அலைந்து பாடிக்களைத்துப் போனால் அமைச்சர் வீட்டுக்கு வந்துவிடுவார்.

புல- பாடிக் களைப்பதுதானே புலவர் தொழில்.

கவிஞ- அமைச்சரின் வளமனைக் கதவுகள் புலவருக்காக எப்போதும் திறந்திருக்கும். அமைச்சரின் துணைவியாரும் அமைச்சர் இல்லத்தில் இருக்கிறாரோ இல்லையோ, புலவருக்கு வேண்டிய அனைத்தும் வேண்டியபடி செய்து கவனிப்பார். புலவர் வந்துவிட்டால் உண்ணல், உடுத்தல், உறங்கல் எல்லாமே அமைச்சரின் இல்லத்தில்தான். ஒருநாள், அமைச்சரின் படுக்கையின்மேல் புலவர் அமர்ந்துகொண்டு சுவடி படித்தவாறு அமைச்சரின் வருகைக்காகக் காத்திருந்தார்

(காட்சி நிறைவு)

thiru36@streamyx.com

Series Navigation