திண்ணை – நாடகம்

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

அரியநாச்சி


( பாண்டிச்சேரி )

காட்சி-1

குரல்: திண்ணையில் அமர்ந்து வெளிக்காற்றைச் சுவாசித்துக்கொண்டு, வருவோர் போவோரை வம்படியாக அழைத்து அமரச் செய்து ஊர் செய்திகளையும் உலகச்செய்திகளையும் வந்தவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அவரவரது சொந்த விசயத்தில் ஊடுருவும் போது அவர் ஷஅப்புறம் ‘ என கேட்டு வெளியேறும் வரை திண்ணை கொடுத்த சுகம் உள்ளுர அலைந்துகொண்டிருக்கும்.

(குரல் ஓய்கிறது. மேடையில் ஒளி வருகிறது. வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருகிறார், தலைவர். துண்டால் வாயைத் துடைத்துக்கொண்டு வந்து அமர்ந்தவர்,

தலைவர்: அப்பா! (என சொல்லி அளுத்து தூணில் சாய்கிறார். வலது சன்னல் திறந்து ஒரு பெண் முகம்)

பெண் முகம்: என்னங்க!

தலைவர்: என்ன ?

பெண்: வந்து…

தலைவர்: அதான் வந்துட்டியே சொல்லு.

பெண்: புள்ளைக்கு காச்ச அடிக்குது.

தலைவர்: அதான் காலையிலேயே சொல்லிட்டியே. டாக்டர்ட்ட போவனும் காசு பணம் அழுவனும்னு. போவலாம். போவலாம். காச்சதான. கஞ்சி வச்சி கொடு. சாய்ங்காலமா போய்க்கலாம்.

பெண்: சரீங்க.

(பெண் தலை மறைந்து மீண்டும் வெளியே எட்டிப்பார்த்து)

பெண்: ரொம்ப சூடா இருக்குங்க.

தலைவர்: சூடா இருந்தா…! தண்ணியில் முக்கியா எடுக்க முடியும் ? சொரம் வரும்டி. சொரம் வருசத்துக்கு ரெண்டு மூணுவாட்டி வர்றது நல்லதுதான். அது பாட்டுக்கும் வந்து போகட்டும். நீ அலட்டிக்காம இரு. உனக்கு ஏதாவது வந்து தொலையப்போகுது.

(என சொல்லிவிட்டு அவர் துண்டை உதறி தோலில் போட்டுக்கொண்டு வெளியேறிவிடுகிறார். பெண் முகம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு மறைந்துவிடுகிறது.

அப்போது வாசலை நோக்கி ஒரு வயோதிகர் வருகிறார்)

வயோதிகர்: அம்மா தாயீ…!

(மீண்டும் பெண் முகம் சன்னலை நோக்கி வருகிறது)

பெண்முகம்: இன்னும் சமையல் ஆகல. அப்புறமா வாங்க.

வயோதிகர்: இன்னும் சமையல் ஆகலையா ? (கொஞ்சம் தயங்சி நின்று. மீண்டும் சன்னலைப் பார்த்து) பசிக்குதும்மா. ராத்தியும் சாப்பிடல. கொரக்கலி வாங்குது.

பெண்முகம்: புள்ளைக்கு உடம்பு சரியில்ல. வேதனையா இருக்கு. அடுப்பாங்கர பக்கமே போகப் புடிக்கல. அதான். செத்த நாழி கழிச்சி வந்தீங்கன்னா…

வயோதிகர்: சரிம்மா. என்ன செய்துன்னிங்க.

பெண்முகம்: சொரம் அடிக்குது.

வயோதிகர்: வயிறு வீங்கியிருக்கா.

பெண்முகம்: அதெல்லாம் இல்லை. உடம்பு அணலா கொதிக்குது.

(வயோதிகர் வெளியேறிவிடுகிறார். வெளியேறியவர் சிறிது நேரத்திற்குள் மீண்டும் வாசலுக்கு வந்து)

வயோதிகர்: தாயீ…

(பெண்முகம் சன்னல் பக்கமாக வந்து எட்டிப்பார்க்கிறது. அவர் சன்னல் வழியாக அந்தப் பெண்ணுக்கு ஒரு பச்சைக்கட்டைக் கொடுக்கிறார்)

வயோதிகர்:: இத கசாயம் வச்சிக்கொடும்மா. நல்லாயிடும்.

பெண்முகம்: அவரு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போறதா சொல்லியிருக்காறே.

வயோதிகர்: இது ஒண்ணும் செய்யாது. கொடுத்துப்பாறேன்.

பெண்முகம்: இல்லிங்க.. வந்து… (எனத் தயங்குகிறது. அவர்)

வயோதிகர்: இதக்கொடு. ( என கராராகச் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்)

(சிறிது நேரத்திற்கெல்லாம் தலைவர் அசதியாக வந்து திண்ணையில் அமர்கிறார். பெண் சன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறாள்)

தலைவர்: சமையல் ஆச்சா.

பெண் மகம்: ஆச்சுங்க.

(தலைவர் உள்ளே செல்ல பெண்முகம் சன்னனில் இருந்து மறைகிறது. தலைவர் மீண்டும் வெளியே வருகிறார். வாயைத் துடைத்துக்கொண்டு வந்து திண்ணையில் அமர்கிறார்)

மேடையில் ஒளி குறைகிறது)

காட்சி-2

(மீண்டும் மேடையில் ஒளி)

(மூன்று பெண்பொம்மைகள். அவை மூன்றும் வாசலில் தலைவைத்து படுத்துக்கிடக்கின்றன. அப்போது தலைவன் உள்ளே வருகிறார்.)

தலைவன்: போ. போ. உள்ளே போ. வெளியே வரலாமா ? போ.

(என அதட்டுகிறார். வாசலில் தலை வைத்திருக்கும் அந்த மூன்று முகங்களில் ஒன்று உள்ளே தலையை இழுத்துக் கொள்கிறது. அவர் மீண்டும் பொம்மைகளைப் பார்த்து)

தலைவன்: இப்படித்தான் நடக்கும். வேறெப்படி நடக்க வேண்டும்னு எதிர்பார்க்கிறீங்க ? (சிறிது மெளனம்) நடந்துவிட்டது. என்ன செய்ய. எதுவும் செய்ய முடியாது. போனது போகட்டும் நடக்க வேண்டியதைக் கவனிங்க. போங்க போங்க.

(என்று மீண்டும் அதட்டுகிறார்)

(ஒரு பொம்மை தலையைத் துாக்கி பெரியவரை நோக்கி)

தலைவனின் முதல் மனைவி: இதக்கூட நாங்க கேக்கக்கூடாதா ? எங்களுக்கு உரிமை இல்லியா. பெத்துக்கொடுக்க மட்டுமா நாங்க. ஒன்னு போனா இன்னொன்னை பெத்துப்பெத்து தள்ளிக்கிட்டே இருக்க நாங்க என்ன மிசினா ?

(பெரியவருக்கு கோபம் பொங்கி வருகிறது. ஓடிப்போய். பேசிய பொம்மையின் தலையை எட்டி உதைக்கிறார்)

(அதுவும் தலையை உள்ளே இழுத்துக்கொள்கிறது. தலைவன் அசந்து திண்ணையில் வந்து அமர கடைசியாக இருந்த ஒரு பொம்மை அவரைப்பார்த்து)

தலைவனின் முதல் மனைவி: நீங்க செய்யறது உங்களுக்கே நல்லதா தோணுதா ?

தலைவன்: அத நீ கேக்கக்கூடாது.

தலைவனின் முதல் மனைவி: யார் கேட்கலாம்.

தலைவன்: நீ கேட்கக்கூடாது. அவ்வளவுதான்.

தலைவனின் முதல் மனைவி: என்னத் தவிர யார் வேணுமானாலும் கேக்கலாமா ?

தலைவன்: அடிபட்டுச் சாகப்போற.

தலைவனின் முதல் மனைவி: இனிமேதான் சாகனுமா ?

(அவர் சட்டென எழுந்து, மீண்டும் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறார். கதவிற்குப் பின்னாலிலிருந்து முன்பு வெளியேறிய இரண்டு பொம்மைகளும் வாசலில் தலைவைத்தபடி இருக்கும் பொம்மையை நெருங்கி அமர்ந்துகொள்கின்றன.)

தலைவனின் முதல் மனைவி: இதுக்கு விடிவே இல்லியா. நான் என்புள்ளைய தொலச்சேன். இவ இவளோட இரண்டு புள்ளைங்களையும் தொலைச்சிட்டா. இப்ப நீ.

தலைவனின் முதல் மனைவி: நான் இப்பத்தான் தொலைச்சேன்னு யார் சொன்னது ?

தலைவனின் மூன்றாவது மனைவி: இப்பத்தான உன் புள்ள இறந்திருக்கு.

தலைவனின் முதல் மனைவி: எனக்கு எத்தனப்புள்ளைங்க இருந்துதுன்னு தெரியுமா ?

தலைவனின் இரண்டாவது மனைவி: உங்களுக்குப் புள்ள இல்லன்னுதான என்ன கட்டிக்கிட்டாரு.

தலைவனின் முதல் மனைவி: ஆனா உனக்குப் புள்ள இல்லன்னு இவளக்கட்டிக்கிட்டாறே அத மறந்துட்டியா ?

தலைவனின் இரண்டாவது மனைவி: எனக்குத் தெரியும்னு உங்களுக்கு எப்படித்தெரியும் ?

தலைவனின் முதல் மனைவி: எனக்குத் தெரியாதுன்னு நீ நெனச்சியே அதமாதிரிதான்.

தலைவனின் மூன்றாவது மனைவி: நாம மூணு பேருமே ஏமாந்துட்டோம்.

தலைவனின் முதல் மனைவி: இல்ல நம்மள மாதிரியானவங்கள எல்லாம் ஏமாந்திருக்காங்க.

தலைவனின் இரண்டாவது மனைவி: அப்போ அவருக்கு நெறையா….

(தலைவனின் முதல் மனைவி தலை குனிந்து விசும்புகிறாள். அவளை அனைத்துக்கொண்டு தலைவனின் இரண்டாவது மனைவியும் தலைவனின் மூன்றாவது மனைவியும் அழுகிறார்கள். ஒப்பாரியாக- வார்த்தைகளற்ற பாடலாக நீள்கிறது அப்பாடல்)

காட்சி-3

(மேடையில் ஒளி குறைகிறது)

(மேடையில் மீண்டும் ஒளி வருகிறது)

(திண்ணையில் தலைவன் துாங்கிக்கொண்டிருக்க, ஊரே துாங்கிக்கொண்டிருக்கும் அந்த வேளையில் பின்னரங்கில் பெண்கள் வீட்டு வாசலை பெருக்கிக்கொண்டிருக்கும் ஒலி கேட்க, ஒரு குடுகுடுப்பைக்காரன் வருகிறான். அந்த திண்ணை வீட்டு வாசல் முன் நின்று)

குடுகுடுப்பைக்காரன்: நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

விடிஞ்சா, மவராசனுக்கு பொண்ணும் பொருளும் கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போவுது.

வீட்டு மகராசிக்கு நல்ல சேதி வரப்போகுது. நல்ல சேதி வரப்போது

மாடுங்கண்ணும் வீதியில போறக் கனா வரப்போவது

வந்த கனா நெசமாகப்போவுது.

நெசமாகப்போவுது.

(என சொல்லிவிட்டு அவன் சென்றதும் கதவிடுக்கிலிருந்து மூன்றாவது மனைவி மெல்ல வெளியே வந்து வாசலைக்கூட்டிப் பெறுக்கிவிட்டுத் திரும்புகிறாள். அப்போது வீட்டுக்குள்ளிருந்து மாடு கத்தும் சப்தம் கேட்டு அப்படியே குவலையையும் விளக்கமாரையும் போட்டுவிட்டு வேகவேகமாக உள்ளே சென்று மறைய, பின்னரங்கிலிருந்து அந்த மாடு கண்று ஈனும் வலியை வெளிப்படுத்தும் ஒலி கேட்கிறது. சிறிது நேரத்திற்குள் கன்றின் குரலும் கேட்கிறது.)

திண்ணையிலிருந்து தலைவன் மெல்ல எழுந்து சன்னல் பக்கமாக தலையை திருப்பி

தலைவன்: கன்னு போட்டுடுச்சா ? பொட்டையா கெடாவா ?

மூன்று மனைவிகளின் குரல்கள்: பசுங்கண்ணுங்க.

தலைவன்: ஒன்னு போனா இன்னோன்னு வந்துடும்னு சொன்னேனே. சரியா போச்சா ? ரொம்பத்தான் ஆடுனீங்களே ?

(மீண்டும் படுத்துக்கொள்கிறார்)

(மேடையில் ஒளி குறைகிறது)

காட்சி-4

(மேடையில் மீண்டும் ஒளி வருகிறது)

ஒலி கூடுகிறது. திண்ணையில் இருப்பவர்கள் தெளிவாகத் தெரிகிறார்கள். திண்ணையில் பெரியவர் துணியால் மூடப்பட்டுக்கிடக்க, பெண்களின் ஓலம். வெளியே வருகிறார்கள். வெளியே கிடக்கும் தலைவனின் பிணத்தருகே மூவரும் அமர்ந்து அழுகிறார்கள். ஒப்பாரி வைக்கிறார்கள். மாரடித்துக்கொள்கிறார்கள். பின் திண்ணையில் குழுமியிருக்கும் அனைத்து ஆண்களும் பெரியவரைத் துாக்கிக்கொண்டு வெளியேற அவர்களும் பிணத்தைத் தொடர்ந்து அவர்களோடு தொடர்ந்து செல்ல முயற்சிக்கும் போது தடுக்கப்பட்டு அங்கேயே நிறுத்தப்படுகிறார்கள். வெகுநேரம் கழிந்து அழுகை ஓய்கிறது. மூன்று பெண்களும் திணையில் முதல் முறையாக ஏறி அமர்கிறார்கள். அப்போது தலைவனின் குரல் கேட்கிறது. கரகரத்தக்குரலில்)

தலைவன்: இது ஆண்களின் அரியாசனம். செய்திகளைச் சொல்லும் தடையற்ற ஊடகம். செய்திகளை ஆண்கள் பிரித்துக்கொடுக்க அதைப் பெண்கள் அறிந்துகொள்ள ஏதுவாக திண்ணை இதுவரையிருந்து வந்திருந்தது, உங்களுக்கு. நீங்கள் திண்ணையில் அமர்ந்தால் எதுவும் புரியாது. இதன் பாஷை ஆண்களின் பாஷை. உங்களுக்கு எதுவுமே புரியாது. எழுந்து உள்ளே ஓடிவிடுங்கள். என் தாய் புரிந்துகொண்டதில்லை என் தகப்பன் இருந்தவரை. நீங்களும் அப்படியே. ஓடிவிடுங்கள். புத்தி பேதளித்துவிடப்போகிறது. ஓடிவிடுங்கள் உள்ளே. (அப்போது)

தலைவனின் தலைவனின் முதல் மனைவி: மனைவி மெல்ல எழுந்து திண்ணையை வலம் வருகிறாள். அவளைத் தொடர்ந்து மற்ற மனைமார்களும். திண்ணையில் ஒன்றும் இல்லை. அது வெறும் மேடான தரை என்பதை உணர்கிறார்கள். பின் பயம் தெளிந்தவர்களாக குரல் வந்த திசையைப் பார்க்கிறார்கள். அது திண்ணையில் மத்தியில் இருந்து வருவதாக உணர்ந்து அந்த மத்தியப்பகுதிக்குச் செல்கிறார்கள். அப்போது)

தலைவனின் முதல் மனைவி: தரை. வெறுந்தரை.

தலைவனின் இரண்டாவது மனைவி: ஆனால் மேடான தரை. உயரமான தரை.

தலைவனின் மூன்றாவது மனைவி: அதனால் தான் அவர்கள் உயரத்தில் காணப்பட்டார்கள். மற்றபடி.

தலைவனின் முதல் மனைவி: மற்றபடி என்ற சொல்லுக்கு அவர்களைப் பொருத்தவரை எந்த அர்த்தமும் கிடையாது. அவர்களே மற்றபடிதான்.

தலைவனின் இரண்டாவது மனைவி: ஆம். அவர்களே மற்றபடிதான். ஆனால் மறைந்திருந்து குரல் கொடுக்கும் மறைந்தவனின் குரலில் பயமுறுத்தும் அதிர்வு அடக்கியிருக்கிறது. பயமாகத்தான் இருக்கிறது.

தலைவனின் முதல் மனைவி: அது இந்த மத்தியப்பகுதியில் இருந்து வருகிறது. நாம் அறிவை நம்புவோம். குரல் பயமுறுத்துவதாக இருக்கிறது. ஆனால் அருகிலிருந்துதான் வருகிறது. வரும் இடமும் தெரிந்துவிட்டது. இந்தத் திண்ணையின் மத்தியப்பகுதியில்…. இதோ இந்தப்பகுதியில் இருந்துதான் வருகிறது. தோண்டிப்பார்ப்போம்.

தலைவனின் மூன்றாவது மனைவி: இதுவரை அறியாதது கிடைக்கலாம்.

தலைவனின் இரண்டாவது மனைவி: அறியாததெல்லாம் ஆபத்தானதாகவும் இருக்கலாம்.

தலைவனின் மூன்றாவது மனைவி: ஆபத்தே அறியாமையால் வருவதுதான். அறிந்துகொண்டால் எல்லாம் அலறியடித்துக்கொண்டு ஓடிவிடும்.

தலைவனின் முதல் மனைவி: பார்க்கலாம் தோண்டுங்கள்.

(தோண்டுகிறார்கள். ஒரு பழைய நோட்டுப்புத்தகம் கிடைக்கிறது. அதை தலைவனின் மூன்றாவது மனைவி எடுத்து வாசிக்கிறாள், இப்படியாக)

தலைவனின் மூன்றாவது மனைவி: பெண்ணே நீ அதீதமானவள். ஆயிரம் யானைகளின் பலம் உனக்கு. உன்னை வெல்ல இந்த ெஐகத்தில் எந்த ஐீவராசியாலும் முடியாது. உன் காலடியில் கிடக்கும் இந்த உலகை சற்றே கைதுாக்கி நிறுத்தி அன்போடு அரவணைத்து எல்லா இதயங்களிலும் நீர் வார்க்க உன்னை தயார் செய்துகொள். ‘ (அவள் தொடர்ந்து வாசிக்கிறாள்.) உனக்குக்கிடைத்திருக்கும் இந்த அதீத சக்தியால் நீ படைக்கும் திறன் பெறுகிறாய். வளர்க்கும் திறன் பெறுகிறாய். உன்னால் வெளியாகும் ஒவ்வொரு சொல்லும் செயலின் முன் தோன்றும் செயலின் சொல்வடிவம். கட்டுகடங்காமல் செல்லும் காளைகளின் கடிவாளம் நீ. ஈவிரக்கமற்று கொன்று குவித்து பிணத்தின் மீது ஆட்டம் போடும் அனைத்து மார்த்தட்டிக்கொள்ளும் வீரமரவர்கள் அனைவரையும் அடக்கி ஆண்டு அன்போடு வாழவழிவகுக்க வேண்டியவள் நீ. நீ ஒரு போதும் தோற்றுப்போகமாட்டாய். உனக்குத் தோல்வி என்பதே கிடையாது. யாரையும் நீ வெற்றிபெற நினைக்காததால் உனக்கு வெற்றி என்பதும் கிடையாது.

தலைவனின் இரண்டாவது மனைவி: (திடாரென சத்தம் போட்டு) இது எப்படி இங்கே.

தலைவனின் முதல் மனைவி: உனக்கு இதைப்பற்றித் தெரியுமா ?

தலைவனின் இரண்டாவது மனைவி: தெரியாது. ஆனால் நீ வாசித்ததைக் கேட்கும்போது எனக்குள் ஏதோ உண்டாகிறது.

தலைவனின் மூன்றாவது மனைவி: போனவர், தன் வாழ்நாளில் செய்த எல்லாவற்றிற்கும் எதிரானதாக. நமக்கு சாதமாக.

மீண்டும் குரல்:- உயிரைப்படைக்கும் நீ என்னை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் காலங்காலமாக ஏற்படுத்தி வைத்தக் கட்டுப்பாடுகள் நீங்கள் வாசித்த இந்த வாசகத்தினை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டதே. நீ வெளியே வந்தால் நாங்கள் எங்கேப்போவது. அதனால் திண்ணை எங்களுக்கு என்றும், உட்புறம் உங்களுக்கென்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஏற்படுத்தி… வரைமுறை, கட்டுப்பாடு, ஒழுக்கம் … என வியாக்கியான செய்து தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்படிக்கு பார்த்துவருகிறோம்.

தலைவனின் முதல் மனைவி: இப்போது தெரிந்துவிட்டதே.

குரல்: அதனால் தானே நான் வெளியேறிவிட்டேன்.

தலைவனின் முதல் மனைவி: நீங்கள் வெளியேற வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லையே.

குரல்: அப்படி நீங்கள் எப்போதும் நினைத்தததில்லை. நினைக்கப்போவதுமில்லை. ஆனால் நாங்கள் அப்படி நினைத்திருந்தததாலும், நினைத்துக்கொண்டிருப்பதாலும், வெளியேறுகிறோம்.

தலைவனின் இரண்டாவது மனைவி: இது எங்களைத் தனியாக விட்டுச் செல்வதாக அர்த்தமா ?

குரல்: அப்படித்தான் நாங்கள் நினைக்கிறோம்.

தலைவனின் மூன்றாவது மனைவி: சரியா அது ?

குரல்: தவறுதான். தவறையே செய்து பழகியதால் நல்லதை செய்யத் தெரியவில்லை.

தலைவனின் முதல் மனைவி: நல்லது எது என்றுத் தெரியுமா.

குரல்: தெரிந்ததால் தான் தவறு என்ற ஒன்றை யோசித்து யோசித்து செய்துவருகிறோம்.

தலைவனின் முதல் மனைவி: நீங்கள் வெற்றி பெறவேண்டும் நாங்கள் தோல்வியடையவேண்டும். அப்போது நீங்கள் எங்களோட வாழ விரும்புவீர்கள். இல்லையா.

குரல்: இது உங்களுக்கு தெரியாததுவரை. இப்போது தெரிந்துவிட்டது. இனி எந்த சமாதானமும் கிடையாது.

தலைவனின் முதல் மனைவி: வெளியே செல்லும் நீங்கள் உள்ளே சென்றால் என்ன ?

குரல்:வெளியேறுவதும் உள்ளே செல்வதும் ஒன்றுதான்.

(என சொல்லிவிட்டு குரல் அடங்கிவிடுகிறது. அவர்கள் வெளியில் திண்ணைக்கு வந்து அமர்கிறார்கள். அமர்ந்தவர்கள் சற்றே நிமிர்ந்து அமர்ந்துகொண்டு சுற்றி எதையோ தேடுகிறார்கள். திண்ணையின் கோடியில் தொங்கிக்கொண்டிருந்த தலைவனின் துண்டைக்கண்டதும் மூவரும் எழுந்து போட்டிப்போட்டுக்கொண்டு துண்டை நோக்கி ஓடுகிறார்கள். வெகு நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். களைப்பு வர பாதி வழியிலேயே அயர்ந்து அமர்கிறார்கள்.

முற்றும்

ariyanachi67@yahoo.com

Series Navigation

அரியநாச்சி

அரியநாச்சி