ஓணான்கள்

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

அம்ாிதா ஏயெம்


நெடிய நேரான கிறவல் வழி அது. விவசாய பொறியியல் இயந்திர வேலைத் தளத்திற்கு பக்கத்திலிருந்த புளிய மரத்தடியிலிருந்து தொடங்கி கெம்பஸின் வடக்குப் புற எல்லையிலுள்ள மிருக விஞ்ஞுானப் பிாிவின் பண்ணையையும் எல்லையிடும் மதில் வரை முடியும் வழி அது. கறடு முரடான சின்ன சின்ன பள்ளமும் கொண்டு, இரு பக்கமும் இறுக்கியும், தொய்ந்த முள்ளுக்கம்பி வேலி கொண்ட வழி அது. இளம் இரத்தச் சிவப்பு தோய்ந்த வழி அது. இந்த வழிபோல்தான் இதைச் சுற்றியுள்ள மக்களின் விதியினாலும், வன்மத்தாலும் வரையப்பட்ட வாழ்க்கையும்.

வழியின் தொடக்கத்தில் புளியமரத்தில் அந்த பதினேழு மந்திகளும் இருப்பதைக் கண்டேன். சிறாவும், தாறாவும், பல்லிழித்தன. சீபாபும், தீபாவும் பயங்காட்டின. இவர்களின் நாளின் தொடக்கம் இந்த மரத்தில்தான் தொடங்குகின்றன. துாங்கி எழுந்த பின் துாங்கிக்கொண்டிருக்கும். வானரங்களிலிருந்துதானாமே வாழ்க்கையும் தொடருகின்றன ? என்னவோ, நான் புளியமரத்தைக் கடந்து, ஆட்டுக்காலை, மாட்டுக்காலை, கோழிக்காலைகளைக் கடந்து, பன்றிக் காலையை நெருங்கி வழியின் அந்த முடிவை அடைந்துவிட்டேன். என் தலைக்கும் உடலுக்கும் எதிரே என் நடையையும், என் அசைவையும் எதிர்த்து தடையாய் ஆறரை அடி உயரத்திற்கு மதில் இருந்தது. போதாக்குறைக்கு முட்கம்பி வேலி வேறு. ஏன் வழியின் முடிவும், வாழ்வின் முடிவும் இவ்வளவு தடைகளைக் கொண்டிருக்க வேண்டும் ?; பாதுகாப்புக்காகவா ? அப்படியென்றால் யாருக்கு ? எதற்கு ? என யோசிக்கிறேன்.

மதிலுக்கருகிலிருந்த முட்கம்பி வேலியின் கொங்கிறீட் கட்டையில் காலை வைத்து, மதிலுக்கு அப்பால் எட்டிப் பார்க்கின்றேன். சின்ன சின்ன புற்பற்றைகள். இடிபாடுகள், காடுகளாக்கப்பட்ட காணிகள். மதிலுக்கு மேலால் பாய எண்ணுகிறேன். பற்றைகளுக்குள் என்ன பதுங்கியிருக்கின்றன என்று தொியாதவரையில் பாய்வது புத்தி சாதுாியமல்ல என்று நினைக்கின்றேன். அங்குமிங்கும் பார்க்கிறேன். காடாக்கப்பட்ட வளவுக்குள் எவரையும் காணவில்லை. அப்போது மெல்லிய உருவம் தொியத் தொடங்கியது. நான் கூப்பிட அருகே வரத் தொடங்கியது. ஐந்தாறு ஆடுகள் இருக்கும் ஆட்டு மந்தையையும் கூட்டிக்கொண்டு மதிலுக்கு அருகே வரத் தொடங்கியது. வந்துவிட்டது. இந்த உருவம்தான் இடையன். இந்த இடையன்தான் சின்னான். எனக்கும் சின்னானுக்கும் இப்போது உயரத்தில் ஆறு அடி வித்தியாசம் இருந்தது. உயரத்தில் இருப்பவர்கள் உயர்ந்தவர்களும், தாழத்திில் இருப்பவர்கள் தாழ்ந்தவர்களுமாமே.

சின்னான் உண்மையில் இடையன்தான். தந்தையையும், அண்ணனையும் இடையில் இழந்ததாலா ?, அதன் காரணத்தால் நிம்மதி இடையில் தொலைந்து போனதாலா ?, அதனால்; கல்வியை இடையில் விட்டதாலா ?, அதனால் பிரேமதாச எப்போதோ கொடுத்த கிழிந்துபோன நீலக் களிசானை இடையில் அணிந்து கயிறு கட்டி ஆடு மேய்க்கும் இடையனாய் ஆனதாலா ? சின்னான் இடையனான் என்று சொல்லத் தொியவில்லை.

கெம்பஸ் ஆலமரத்தடிப் பிள்ளையார் கோவிலில் விசேட பூசைகள் நடைபெறும் போது நிறைய அக்கம் பக்கத்து பிள்ளைகள் தாறாபோல், சிறாபோல், சீபாபோல், தீபாபோல் மரத்தின் மேலால் ஏறி வருவார்கள். ஏறும் போதும், பாயும் போதும் அடிபட வீழ்வார்கள். ஆனால் அலட்டிக் கொள்ளாமல் தங்கள் முயற்சியில் சற்றும் மனந்தளராமல் முன்னேறுவார்கள். ஏனெனில் இந்த பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு வாழ்க்கை கற்றுத் தந்த பாடம் அது. இவர்களின் ஒவ்வொருவாின் வீட்டிலும் அடி விழுந்திருக்கிறது. எதையும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது இவர்களின் இயல்புக்கு மீறிய அழுத்தத்தை காட்டுகின்றது. சிறு வயதில் இயல்புக்கு மீறிய அழுத்தம் வருவதற்கு இவர்களின் இறந்தகாலம் இழப்புக்களையும் இறப்புக்களையும் கொண்டதாகத்தான் இருக்க வேண்டும். அவர்களுடன் உரையாடும் போது ‘உங்கட சொந்தக்காரர்கள் யாரும், இந்தக் கெம்பஸ் அகதிமுகாமிலிிருந்து கூட்டிப் போய் கொல்லப்பட்டிருக்காங்களா ? | என்று கேட்பது வழக்கம். அதற்கு ஆறு பிள்ளைகளில் ஒருவராவது ~ஓம்..|என்று சோகமாக செல்வதும் பதில் சொல்வதும் வழக்கம். கொல்லப்பட்டது தகப்பன் என்பார்கள். அண்ணன்கள் என்பார்கள். மாமாக்கள் என்பார்கள் என்பார்கள். சித்தப்பாக்கள் என்பார்கள். இப்படி என்னுடன் அறிமுகமானவன்தான் இந்தச் சின்னான். தனது தந்தையையும், அண்ணனையும் ஒலிவ் பச்சை வழியில் மறித்து பிடித்ததாம். ஒலிவ் பச்சையிடம் போய் அண்ணனையும் அப்ாபாவையும் கேட்க இளமஞ்சளிடம் என்று சொன்னதாம். இளமஞ்சளோ மண்ணிறத்திடம் என்றதாம். மண்ணிறமோ இரத்தச் சிவப்பிடம் என்றதாம். இ;ன்னும் தொலைந்து போன அல்லது தொலைக்கப்பட்டு போன அண்ணனையும், அப்பாவையும் மீள எடுக்காததால்தான் சின்னான், தகப்பனிழந்து, அண்ணனிழந்து, படிப்பிழந்து, இடையனாகியிருக்கின்றான். அல்லது இடையனாக்கப்பட்டிருக்கிறான்.

பூசை ஆரம்பிப்பதற்கு முன்னால் இந்தப் பிள்ளைகள் ஓடிப் பிடித்து விளையாடுவார்கள். விளையாட்டுக்கள் அடிப்பதையும், இடிப்பதையும், துரத்துவதையுமே அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும். சூாியோதயத்துக்கு சற்று முன்னேயுள்ள இன்னும் விலகாத இருள்மாதிாித்தான் இவர்களின் வாழ்வும், வீடுகளும் இருக்கின்றன. கெம்பஸைச் சுற்றி வட்டமாக, உயரமாக மதில் எழுப்பி, யார், யாரோ உள்ளயிருக்க வெளியே இவர்கள் இருக்கிறார்கள். உள்ளே மீன்பிடி மிதந்து விவசாயம் செழித்து இருக்க, வெளியே மீன்பிடி தாண்டும், விவசாயம் புதைக்கப்பட்டும் இருக்கிறது. உள்ளே பொருளியலும், முகாமைத்துவமும் கடைபரப்பி தெளிந்து நிற்க, வெளியே சிதைக்கப்பட்ட பொருளாதாரங்களுக்கிடையேயும், குழப்பப்பட்ட வாழ்க்க்கை முறைகளுக்கிடையேயும் தங்களின் சுயத்தையும், தங்களின் அன்றாட வாழ்க்கை ஓட்ட வண்டியின் சக்கரங்களையும் அவர்கள் தேட வேண்டியிருக்கிறது. உள்ளே மொழியும், நுண்கலைகளும் விளம்பரம் போட்டு மேடையேற, வெளியே இன்னும் இவைகள் இருட்டறையின் ஓரங்க நாடகமாகவே இருக்கின்றன. உள்ளே தத்துவமும், மெய்யியலும், சமயமும் வித்தகம் செய்ய, வெளியே மெய்களைத் தொலைத்துவிட்டு பொய்களுக்குள் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே சிாிக்க, வெளியே அழுகிறார்கள். உள்ளே ஓடித் திாிய, வெளியே நொண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே கணத்துக்கு கணம் காட்சிகளும் மாறி நிறங்களும் மாறுகின்றன. ஒலிவ் நிறப் பச்சையில் அந்த இருபது ஏக்கர் மைதானம், திட்டமிடாமல் அடுக்கிகவைக்கப்பட்ட நெருப்பு பெட்டி போன்ற கட்டிடங்களின் சுவர்களின் மஞ்சள் நிறங்கள், அவைகளின் ஓடுகளினதும், கொறிடோர்களின் தரையில் பதிக்கப்பட்ட சுிமெந்துக்கல்லாலான மாபிள்களினதும் சிவப்பு நிறங்கள், வீதிகளின் மண்ணிறங்கள் என உள்ளே நிறங்கள் மாற, வெளியே கறுப்பு-வெள்ளைதான். ஒன்று துக்கத்திற்கு, மற்றது சோகத்திற்கு. விதவைகளுக்கும், பிணவீடுகளுக்கும். உள்ளேயுள்ள ஒரு உயர்நிலைக் கல்விஸ்த்தாபனம் என்பது வெளியேயுள்;ள தான் சார்ந்த சுற்றயற் சமூக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாதும், அந்த மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுக்காதும்விட்டால், இந்த உள்ளின் இருக்கை என்பது சுத்த வடிகட்டின சுயநலமும், தேவையில்லாததுமாகும். இந்த உள்ளைச் சுற்றி, வெளிகளிலிருந்து பிாித்து போட்ட அந்தஆறரையடி மதில் என்பது, உள்ளுக்கு வெளிகளிருந்தான பாதுகாப்பல்ல. உள்ளிருந்து வெளியே எதுவும் போகக்கூடாது என்று போட்ட தர்மநுாலோ என்னவோ. உயரத்தில் இருப்பவர்கள் உயாந்தவர்களும், தாழத்தில் இருப்பவர்கள் தாழ்ந்தவர்களுமாம். நான் உயர்ந்தவனும், சின்னான் தாழ்ந்தவனுமாம். இந்த கெம்பஸ் கொங்கிறீட் துாண்தான் என்னை உயர்ந்தவனாக்கி சின்னானை தாழ்ந்தவனாக காட்டுகிறது. வெளியே ஒரு கொங்கிறீட் துாண் இருந்தால் எனக்கு சமனாகவாவது சின்னான் வரலாம் அல்லவா ?. உண்மையில் ஓணானியம் என்பது தன்னிருக்கையைமட்டும் நிலைப்படுத்தலும், ஏமாற்றலும் ஆகும். இந்த மதிலின் ஒரு பகுதிக்கு பின்னாலிருந்த கொங்கிறீட் துாணில் கால் வைத்துக் கொண்டுதான், உயரத்திலிருந்த நான் சின்னானைக் கூப்பிட்டேன்.

~சின்னான்.. எனக்கு ஒரு உதவி செய்ய வேணும்.| என்றேன். ~ ம்..| என்று தலையாட்டினான். ~எனக்கு கொஞ்சம் ஓணான் பிடிச்சி தர வேணும். ஒரு ஓணானுக்கு அஞ்சு ரூபா தருவன்| .. ~முடியுமா| என்று கேட்டேன். ~ஓம்..| என்று தன் றொபர்ட் தலையை மீண்டும் ஆட்டியவாறு சிாித்தான். ~அப்ப நான் ஒரு பன்னிரண்டு மணியப்போல வாறன். பிடிச்சி வையா.| என்றுவிட்டு கொங்கிறிட் கட்டையிலிருந்து இறங்கி வருகிறேன். அப்பாடா என பெருமூச்சு வந்தது. ஆறு மாதமா இந்த ஓணான்கள் என்னைப்போட்டு என்ன பாடு படுத்திவிட்டன. காலை, மதியம், பின்னேரம் என்றில்லாமல் எப்போதும் ஒரு தொண்டுடனும், ஒரு தடியுடனும் திாிய வேண்டியிருக்கிறது. கண்ணில் காணும் எல்லா ஓணான்களுதம் பிடிபடுவதுமில்லை. மெயின் றோட்டிலிருந்து ெஉறாஸ்ட்டல் போகும் வழியிலுள்ள மூன்றாவது மாமரத்தின் பொந்தில் இருக்கும், அந்த ஓணான் (பெயர் வீரப்பன். சுருக்கமாக செல்லப்பெயர் வீரா.) மட்டும் இன்னும் பிடிபடாமல் தப்பிக்கொண்டே இருக்கிறது. எத்தனை தரம் முயன்றிறிருக்கிறேன். முடியவில்லை. வருகிற, போகிற வேளைகளில் வீராவைக் கண்டால் துாரத்தே சைக்கிளை போட்டு விட்டு;, பேக்கையும் வைத்துவிட்டு, பாதணிகளைக் கழற்றிவிட்டு, அருகிலிருந்த தென்னைமரத்திலிருந்த ஈாக்கிலால் தொண்டு செய்து, பதுங்கி பதுங்கி, வீராவுக்கு கிட்ட போக, எனது கஸ்டகாலம், வீராவின் நல்ல காலம், மாமர இலைகள் காலில் பட்டு சரசரக்க, வீரா பறக்கும். சில வேளைகளில், தன்முயற்சியில் சற்றும் மனந்தளரா விக்கிரமாதித்தன் மாதிாி, தடியுடன் மாமர நுனிவரை, நான் மாமரத்தில் ஏறி துரத்த, நுனியிலிருந்து விரைவாக கீழே ஓடி பொந்துக்குள் புகுந்து விளையாட்டுக் காட்டும். பொந்துக்குள் தடியைவிட்டு கலக்க, வெளியே வராது. ஏனெில் பொந்தில் வேறு கிளை வழிகளும் இருக்கலாம். கொஞ்ச நாளைக்கு பிறகு வீராவிற்கு அவனின் வீரத்தை பாராட்டி, மன்னிப்பு வழங்கி விட்டேன். இப்போது நன்றாக வீரா கொழுத்துவிட்டிருந்தான். எப்படியும் ஒரு நாளைக்கு இரு தடவையாவது காண்பது வழக்கம்..

ஓணான் பிடிப்பது ஒரு கலை. கையினால் பிடிப்பது, அது ஒரு தனிக் கலை. ஓணானைக் கண்டால், சத்தம் போடாமல் மெல்ல மெல்ல கிட்டப் போய், வலது கைப் பெருவிரல் பிடாியிலும், அதே கையின் ஆட்காட்டி விரல் கழுத்திலும் இருக்கத்தக்கதாக கணப்பொழுதில் விரைவாக ஆளை அமுக்கிவிடவேண்டும். பிடி கொஞ்சம் தவறினாலோ, ஆட்காட்டி விரலை ஓரே கடி கடித்துவிடும். இப்படித்தான இரு முறை கடித்து எனக்கு ஏரிரி போடவேண்டி வந்தது. பிடிபட்ட ஓணானை லேபிற்கு கொண்டு போய், முதுகுப் பக்கம், வயிற்றுப் பக்கம், ஓரப் பக்கம் மூன்றையும் போட்டோ எடுத்து, மெழுகுத் தடடில் வைத்து, ஒவ்வொரு செதிலாக கிளப்பி, கவ்விப் பிடித்திருக்கும் ஒட்டுண்ணிகளை அகற்றி, போமலின் கீசாவிற்குள் போட வேண்டும். பின் ஓணானை வெட்டி, இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற அங்கங்களிலுள்ள ஒட்டுண்ணிகளை எடுக்க வேண்டும். பின் நுணுக்குக் காட்டியிலுள்ள கமறாவினால் பொசிட்டிவ் சிலைட் படமாக்கி, புறொஜக்டாினால், வெள்ளித் திரையில் விம்பங்களை அள்ளி வீசி எறிந்தால், அப்பா.. எவ்வளவு வகையான ஒட்டுண்ணிகள். தெள்ளுகளாயும், உண்ணிகளாயும், பேன்களாயும். புழுக்களாயும் எவ்வளவு வடிவான ஒட்டுண்ணிகள். எவ்வளவு நிறமான ஒட்டுண்ணிகள். இளம் சிவப்பு, இள மஞ்சள், கறுப்பு, மண்ணிறம், பச்சை என எவ்வளவு வகையான நிறங்கள். முட்டை வடிவு கொண்டு ஒன்று, வட்டத் தலையில் கூரான ஆயதம் கொண்டு ஒன்று, முக்கோண உடம்புகொண்டு ஒன்று. முக்கோண உடம்பில் பத்துக் கால்கள் முளைத்து ஒன்று, கால்களில் மயிர்கள் முளைத்து ஒன்று, அதன் மேல் முட்கள் முளைத்து ஒன்றுமாய் நீண்டு, வளைந்து, சுருண்டும் பல வடிவுகள் காட்டும். ஓணான்களுடன் ஒட்டுண்ணிகள் ஒட்டிக்கொண்டிருப்பது உலக வழக்கம்.

நேரம் மதியம் பன்னிரண்டரை மணி. லன்ஜ் ரைம். அதே வழி. சீபாவையும். தீபாவையும் தாண்டிக் கொண்டு மதில் மேலால் எட்டிப் பார்க்கறேன். சின்னான் தொிந்தான். ~..என்ன சின்னான், ஓணான் பிடிச்சாச்சா.. ? | என்று கேட்டேன். ~.ஓம்..| என்று ஓணானைக் காட்டினான். ஒரு ஓணானை ஈர்க்கிற் தொண்டினால் இறுக்கி, ஓணான் ஓடாத மாதிாி, ஈர்க்கின்மேல் பொிய கல் ஒன்று வைத்திருந்தான். உடனே ஐந்து ரூபா கொடுத்து ஓணானைத்த தருமாறு கேட்டேன். அப்போது சரசர என்று சத்தம் கேட்டது. ~இந்தா ஒரு ஓணான்..| என்று சின்னான் கத்தினான். உடனே மதிலிலிருந்து வளவிற்குள் பாய்ந்தேன். அதற்கிடையில் ஓணான் தீபாவளிக்கு நிலத்தில் வம்புக்கு ஏவிவிட்ட வாணம் மாதிாி புசுபுசுவென்று நேராய் ஓடி அந்த வீட்டின் சுவர் மேல் வானம் பார்த்து செங்குத்தாய் நின்றது. அது வீடெனப்பட்டது ஒரு காலத்தில். இப்போது கூரை பறந்து, ஜன்னல், கதவு நிலைகள் ஒழித்து, பூச்சுக்கள் கழன்று, பாசி பிடித்து, சன்னங்கள் படிந்து, வரவேற்பறையில் ஆட்டுப் பிழுக்கையும், படுக்கையறைகளில் இடையர்களின் மலங்களும் கிடந்தன. பாம்புகளும்கூட குடியிருக்கலாம். உமாவரதராஜனின் கள்ளிச்சொட்டு நாயகனும் இதுமாதிாி வீட்டில்தான அடைக்கலம்தேடி ஒழித்திருந்திருப்பானோ என்னவோ. யுத்தத்தினால் சிதைக்கப்பட்ட இந்த வீடே தானே பேசுவதாய் ஒரு வடிவான சிறுகதையும் இந்த வீட்டைவைத்து எழுதலாமே என யோசிக்கின்றேன்.

இப்போது சின்னான் ஈர்க்கில் முறித்து வர ஓடப் பார்த்தான். நான் சின்னானை பிடித்து நிறுத்தினேன். ஓணான் அந்த பூச்சு விழுந்த, போகனாற்றப் பாசி பிடித்த சுவாில் இன்னும் அசையாமல் நின்றது. சின்னானின் இரு தோள்களையும் இரு கையால் பிடித்து எனக்கு முன்னுக்காக்கிி, அவனின் கறுத்த, சட்டை போடாத, மெலிந்த வலது தோளில் எனது நாடியை வைத்து ஆட்காட்டிவிரலை உயர்த்தி ~அங்க பார். .| என்றேன். மண்ணிறமான ~கலோட்டியஸ் வெர்சிகொலர்;, என்ற அந்த ஓணான் ஒலிவ் பச்சை நிறமாக மாறத் தொடங்கியது. கொஞ்ச நேரத்திற்கு பிள் மஞ்சளாய் மாறத் தொடங்கியது. ~சின்னான் .. அதுதான் ஒலிவ் பச்சை நிறம|; என்றேன். சின்னான் கண்கள் விாியப் பார்த்தான். ஓணான் ஒலிவ் பச்சையாய் மாறிய பின், கழுத்து பகுதியிலிருந்தும்., தலையின் இரு ஓரங்களிலிருந்தும் மெல்ல மெல்ல ஒழுங்கற்ற வாிகள் கறுப்பாய் தோன்றத் தொடங்கியது. பின் வாிகள் வந்த வழியே கடைசியாக சிவப்பு படியத் தொடங்கி, கொஞ்ச நேரம் போன பிறகு பழைய நிறம் வந்தது. இப்போது சின்னானி;ன் கண்களைப் பார்த்தேன். கண்களில் ஒளியா ? தீட்சண்யமா ? குரூரமா ? என்று ஏதோவொன்று தொியாமல் இருந்து தொிந்ததைப் பார்த்தேன். நாளை காலை மீண்டும் ஓணானுக்கு வருவதாக் கூறிவிட்டு;, தொண்டில் இருந்த ஓணானையும் எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

காலையில் கெமிஸ்ட்ாி லேபிற்கு பக்கதிலுள்ள அந்த கொறிடோாினுாடாக மெல்ல மெல்ல கால் வைத்து நடக்கிறேன். சில மாணவ பெண்களும், ஆண்களும் எதையோ சுவாலைக்கு காட்டி எாித்துக் கொண்டிருந்தார்கள். அது யூாிக் அமிலமும், ஐதரசன் சல்பைட்டுமாக ஒரு வேளை இருக்கலாம். ஓணானின் மலத்தை மணந்துகொண்டு, கொறிடோாில் பதிக்கப்பட்ட சீமெந்தால் செய்யப்பட்ட மாபிள் பரப்பு ஓணான் தோலில் மெல்ல மெல்ல கால் வைத்து கவனமாக நடந்து மதிலுக்கு அருகே போகின்றேன். ~ சின்னான் ..| என்று கூப்பிட்டேன். சின்னான் அமைதியாக வந்தான். கேட்காமலேயே, ஒரு ஓணானை தொண்டு கட்டித் தந்தான். ஓணானின் வலது பக்க இடுப்பு கிழிந்து, குடல், இரைப்பபை எல்லாம் வந்திருந்தது. ~ சின்னான் .. எனக்கு .. இனி அடிச்ச ஓணான் தேவையில்ல. உயிரோடதான் வேணும்| என்றேன். சின்னானிடம் ஐந்து ரூபா கொடுத்தேன். அவன் அதனை வாங்கவில்லை. எவ்வளவோ வற்புறுத்தியும் வாங்கவில்லை. மீண்டும் மதியச் சாப்பாட்டு நேரத்திற்கு வருவதாகக் கூறிவிட்டு, சின்னான் தந்த வயிறு கிழிந்த ஓணானை லேபிற்கு கொண்டு போய், குடல், இரைப்பையெல்லாம் கையால் வயிற்றுக்குள் தள்ளி குண்டுசியால் ஒரு பக்கத்து தோலைத் தைத்து, குண்டூசிகள் தொியாவண்ணம் போட்டோ எடுத்தேன்.

மதியச் சாப்பாட்டு வேளை, மதிலுக்கு மேலால் எட்டிப் பார்க்கிறேன். கருங்கல்லால், ஈர்க்கிற் தொண்டுகளில் பாரம் ஏற்றி, வயிறு கிழிந்து, ஈரல் உடைந்து, இதயம் சிதைந்து மூன்று ஓணான்கள் இறந்து கிடந்தன. சின்னானைத் தேடினேன். துாரத்திலே சின்னான் மாட்டுக்கு அடிக்கும் கேட்டிக் கம்பினால் ஓணான் ஒன்றுக்கு அடித்துக் கொண்டிருந்தான். நான் கொங்கிறீட் கட்டையிலிலிருந்த காலை நிதானமாக கீழே எடுத்து, உயரத்திதிலிருந்து கீழே இறங்கி வந்த வழியினால் லேபிற்கு திரும்புகிறேன்.

—-

riyasahame@yahoo.co.uk

Series Navigation

அம்ாிதா ஏயெம்

அம்ாிதா ஏயெம்