சுதந்திரம் என்றால் என்ன ?

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

சத்தி சக்திதாசன்


நகரத்தின் மீது விடியல் விழுந்து விட்டது என்பதைப் பறைசாற்றும் வண்ணம் வாகனங்கள் விழித்துக் கொண்டு வேகமாக சாலையின் இருமருங்கிலும் ஒன்றையொன்று முண்டியடித்துக் கொண்டு ஓடின .

ஆட்டோ ரிக்ஷா ஸ்டாண்ட் அருகே நடைபாதையோரத்தில் படுத்திருந்த முத்து நெட்டி முறித்தவாறே தூக்கக் கலக்கத்துடன் எழுந்தான் .

. ‘ டேய் இவளுக்கு பொறந்தவனே , சீக்கிரம் போயி டாக் கடையில ரெண்டு கிளாஸ் டா வாங்கியாந்திடுடா , பொட்டிக்கடை முனுசாமி பிளாட்பாரத்தை கழுவுறேன்னு உம்மேலே தண்னியை ஊத்தப் போறாண்டா ‘ சத்தம் போட்டாள் அருகே எழும்பி புடைவையைச் சரி செய்து கொண்டிருந்த அலமேலுப் பாட்டி

‘சும்மா போவியா , கொஞ்சமாத் தூங்கிக்றேனே ‘ முணுமுணுத்தவாறே எழுந்து பல்லைத் துலக்கிக் கொண்டே நடந்த முத்து குழாயடியில் வந்ததும் அங்கேயிருந்த மூன்று பேரைக் கண்டதும், ‘அம்மா எம்மாம்பெரிசு இந்த எலி ‘ என்று கத்தவும் ‘என்ன எலியா ? ‘ என்றவாறே மூவரும் பதறியடித்து ஓட சிரித்தவாறே குழாயில் முகத்தயலம்பி விட்டு டாக்கடையை நோக்கி நடந்தான் முத்து.

‘என்னா முத்து ரெண்டு டாயா ? பாட்டியோட

கணக்கா ? ‘ என்றவாறே வேலன் கிளாஸ்களில் டாயை ஊற்றினான்.

நாட்டின் நடைபாதை நாயகர்களின் எதிர்காலச் சந்ததிகளில் ஒருவன் முத்து .அவனுக்கு வயது எட்டு இருக்கும் , அப்படித்தான் அலமேலுப் பாட்டி சொல்றாள். இரண்டு வருடங்கள் முன்னால் வரை தன்னை கடவுள் பிளாட்பாரத்தில் படைத்ததாகத் தான் எண்ணிக் கொண்டிருந்தான்.

தெருவில் மற்றைய குழந்தைகள் தனது தாய் தந்தையருடன் நடந்து போகும் போதும் , பிளாட்பாரத்தில் இரண்டடி தள்ளிக் குடும்பம் நடத்தும் மாரியின் மகள் செல்லம் அவனை அப்பா என்றும் , சரசுவதியை அம்மா என்றும் கூப்பிடும் போது , முத்து வியப்பதுண்டு .

ஒருநாள் பாட்டியைக் கேட்டே விட்டான் ‘ பாட்டி அது யாரு அப்பா , அம்மா செல்லம் கூப்பிடறாளே ? ‘

‘ முட்டாள்பய மவனே ! செல்லத்தை விட நீ அதிர்ஸ்டக் கட்டடைடா , உனக்கு அப்பா , அம்மா கடவுள் தெரிஞ்சுக்கோ ‘ என்றாள் அலமேலுப்பாட்டி.

அப்போதெல்லாம் பெருமையுடன் வானத்தைப் பார்த்துக் கொள்வான் மெதுவாக வாயில் அப்பா அம்மா என்று முணுமுணுத்தவாறே.

அப்புறம் தான் ஒருநாள் பாட்டி பொட்டிக்கடை முனுசாமியிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு விட்டான்

‘மாப்பா , பாவம் தெருவில குப்பத்தொட்டிக்கு பக்கமா, ஒருநாள் குழந்தையா அழுதுகிட்டிருக்கிறப்போ பாத்தேன் மனசு கேக்கல்ல, தூக்கியாந்திட்டான். பெத்துப்போட்டுட்டு ஓடினாளே! எங்கேன்னாலும் மகராசியா இருந்துட்டுப் போகட்டும் ‘

றுவயதானாலும் ஏனோ அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது , அம்மா என்றொரு சொல் ஏனோ தெய்வத்தன்மை பொருந்தியதாக தெரியவில்லை . பாட்டி என்கிற பதம் அவனது மனக் கோவிலில் சிலையாகியது.

அதுக்கப்புறம் இரண்டு வருடமாக அவன் பாட்டியிடம் இதைப்பத்தி எதுவுமே கேக்கல்ல.

‘ ஏண்டா கிறுக்கனுக்குப் பொறந்தவனே ! வேலைக்கு கிளம்புவியா ‘ திரும்பவும் அதட்டினாள் அலமேலு

‘ பாட்டி நானு போயிட்டு வாறேன் ‘ என்றவனைப் பார்த்து,

‘டேய் காலங்காத்தால வெறு வயித்தோட போயி என்னடா பண்ணப்போறே , இந்தாடா வேலுவோட கடேல ரெண்டு இட்லி வாங்கித் துன்னுட்டுப் போடா ‘ என்றவாறே , மடியை அவிழ்த்து சில்லறைகளை அவன் கையில் கொட்டினாள் பாட்டி..

ஏழு வயதிலேயே தி.நகரில் ஒரு கடையினில் எடுபிடி வேலை எடுத்துக் கொடுத்து விட்டாள் பாட்டி . கலையில் 8 மணிக்கு போனால் மாலை 7 மணிக்குத்தான் திரும்புவான் முத்து . மாசத்துக்கு 450 ரூபாய் கொடுத்தார் கடை முதலாளி அப்படியே பாட்டியின் கையில் கொடுத்து விடுவான் .

செலவுக்கு மட்டும் அவனுக்கு நாளுக்கு ஏதோ சில்லறைகளைக் கொடுத்து விடுவாள்.

‘இங்க வாடா முத்து , தரையைப் பெருக்குடா ஒரே குப்பையா இருக்கு ‘ என்ற முதலாளி ராமைய்யா , பெருக்கி முடிவதற்குள் ‘ ஓடிப்போய் ஒரு கிளாஸ் தண்னி எடுத்துட்டு வாடா, இவன் வேற தண்ணி கொண்டாறதுக்குள்ள மனுஷன் தாகத்திலே செத்திடுவான் ‘ என்று அலுப்புக் கொட்டியவாறே கத்துவார்.

னால் முத்துவுக்குத் தெரியும் மதியம் ஒரு மணியானது ஓடி வந்து ‘ டேய் இவனுகளே ! அவன் பாவம் பச்சைப் புள்ளடா அவனைப் போய் சாப்பிட்டுட்டு வரச் சொல்லுங்கடா ! டேய் மணி கல்லாப் பெட்டாலருந்து பணம் எடுத்துக் கொடுடா ‘ என்றும் கரிசனமாகக் கத்துவார்.

இவன் மேல ராமைய்யாவுக்குப் ஏதோ பாசம் , ஒருசமயம் அவர் சின்ன வயசில முத்துவை மாதிரி கஷ்டப்பட்டிருப்பாரோ என்னமோ ?

முத்துவுக்கு ஒன்னு மட்டும் புரியல்ல , இவன் வயதுப் பையன்கள் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு ஸ்கூலுக்குப் போறோம் என்னுட்டுப் போறானுகளே ! அப்பிடி என்னதான் பண்ணுவாங்க ?

சில சமயம் சாப்பிடப் போயிட்டு இரண்டு வடையை வாங்க்ிக் கிட்டு அருகிலிருக்கும் ஸ்கூலோட வேலியோரம் நின்னு அவன் வயதுப் பையன்கள் ஓடி விளையாடுவதைப் பார்ப்பான்.

அவன் மனம் ‘என்னமோ பாவம் இவனுகளுக்கு வேலை செய்ய ராமைய்யா மாமா கடை போல ஒண்ணு

கிடைக்கல்லப் போல இருக்கு ‘ என்று எண்ணிக் கொள்ளும் . இருந்தும் ஏனோ துள்ளி விளையாடும் அந்தச் சிறுவர்களின் முகத்தில் இருந்த பொறுப்பற்ற மகிழ்ச்சி அவனை என்னமோ பண்ணிடும்.

அந்தப் பள்ளிக் கூடத்தின் மைதானத்தின் நடுவில் கொடிக்கம்பத்தில் காற்றடிக்கும் போது கம்பீரமாக பறக்கும் அந்த இந்தியத் தேசியக் கொடியை காரணம் புரியாமல் பெருமிதத்துடன் பார்ப்பது அவன் வழக்கம்.

அன்று அவசரம் அவசரமாக கடையிலிருந்து வந்து கொண்டிருந்தான் முத்து , காலையில புறப்படும் போது ‘ ஏண்டா இவனே ! சாயந்தரம் வர்றப்போ , அரசமரத்தடிப் பிளையாருக்கு ஒரு சிதறு தேங்காய் போட்டுட்டு , சட்டுப் புட்டுன்னு வந்து சேருடா ‘ என்ற பாட்டியின் வாசகங்கள் ஞாபகத்திலிருந்தன .

ஏதாவது ஒரு சேதி வைத்துக்கொண்டுதான் பாட்டி புள்ளையாரைப் பாத்துட்டு வாடா என்று சொல்லுவாள் என்று அவனுக்குத் தெரியும். அவனை வேலைக்கு அனுப்பி விட்டு அவள் மட்டும் சும்மா குந்திக்கிட்டு இருப்பவளல்ல . அங்கேயிருக்கும் கடைகளைத்தையும் பெருக்கிச் சுத்தப் படுத்தி மசாமாசம் ஒரு 350 ரூபாயாவது சேர்த்திடுவாள்.

அது மட்டுமில்லாம , அவன் வரும்போது சாதமும் , மீன் குழம்பும் மணக்க மணக்கப் பண்ணி வைத்திடுவாள் .

பிளாட்பாரத்தில்தான் வாழ்க்கை என்றாலும் பாட்டி கெட்டிக்காரி ஓரத்திலே இருந்த ஒரு சிறு பகுதியில மூணு கல்லை வைச்சு ஒரு அடுப்பு ரெண்டு மண்பானைகள் என ஒழுங்கு படுத்தியிருந்தாள்

பாட்டியின் முகம் நெஞ்சில் நிழலாட பாசநினைவுகள் அவளுக்கு தீபமேற்ற அவசரமாக புள்ளையாருக்குத் தேங்காயைப் போட்டுட்டு ட்டோ ரிக்ஷா ஸ்டாண்ட் அருகிலிருந்த அவனது வாசல் ஸ்தலம் பிளாட்பாரத்தை வந்தடைந்தவனின் காதுகளில் பாட்டி சரசுவதியிடம் பேசிக் கொண்டிருந்தது விழுந்தது.

‘ என்ன அலமேலு அக்கா , போறதுன்னே முடிவு பண்ணீட்டியா ? முத்துவுக்குத் தெரியுமா ‘ ‘ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தாள் சரசுவதி.

‘ அடி மூளை கெட்டவளே ! ரெண்டு வருஷமா பாவம் அவன் என்னை நம்பிக் கையில கொடுக்கிற பணத்தையும் அத்தோட எங்கிட்ட இருந்த கொஞ்ச நகை நட்டையும் வித்து , நகருக்கு வெளியில ஒரு சின்ன மண்குடிசையாப் பாத்து பேரம் பேசி பணமும் குடுத்திட்டேன் , இனி மாசாமாசம் ஒரு நூத்தி இருபத்தைஞ்சு ரூவா கொடுத்தாச் சரிடி அதை நாம ஒரு மாதிரி சமாளிச்சுக்குவோம், அவனுக்கும் ஒரு வீடாச்சுடி ‘

பாட்டியின் குரல் அவனுக்கு ஏதோ வானத்திலிருந்து தெய்வத்தின் அசரீரி போல ஒலித்தது . தாங்கள் வீடுகளில் வசிப்பது என்று மற்றையோர் பேசக் கேட்டிருக்கிறான் அது ஏதோ எட்டாக் கனவு என்பது அவனது நினைவு. தனது வீடு பிளாட்பாரம் தான் எனபதுதான் இதுவரை அவனறிந்த உண்மை.

வீட்டின் பெருமையை அவன் அறிந்திருக்கவில்லை னால் ஏதோ தனக்கும் பாட்டிக்கும் நல்லகாலம் பிறக்கிறது என்று மட்டும் புரிந்தது.

ஓடி வந்து பாட்டியைக் கட்டிக்கிட்டான் .

‘ எல்லாத்தையுமே கேட்டிட்டியா முட்டாப் பய

மவனே ! ‘ பாட்டி ஓட்டைப் பல்லு வழியே அலங்கோலமாய்ச் சிரித்தாள் னால் அவனுக்கு மட்டும் அதில் ஏதோ அழகு தெரிந்தது.

அடுத்த நாள் காலை பாட்டியும் அவனும் பெட்டிகளைக் கையில் எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு பஸ்ஸிலேறிப் புறப்பட்டார்கள்.

எல்லோரும் ரவாரமாக வீதிகளை

அலங்கரிப்பதும் , கட்டிடங்களில் தேசியக் கொடிகளை ஏற்றிக் கொண்டும் இருந்தார்கள்.

‘ பாட்டி என்ன பண்ணுறாங்க பாட்டி ‘ புதிராகக் கேட்டான் முத்து

‘ விவரங் கெட்டவனே ! நாளக்குச் சுதந்திரதனமில்ல அதுதான் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு பண்றாங்கடா, நாமளும் எங்கலோட வீட்டில ஒரு கொடி கட்டுவோம் , எங்கிட்ட பெட்டியீல ஒரு கொடியிருக்குடா ‘ என்றாள் பாட்டி.

‘அந்தக் கொடி ஏன் பாட்டி ? ‘ இன்னும் புரியவில்லை முத்துவிற்கு

‘ சும்மா போடா ! இது தெரியாதா ? அதுதான் நம்மளோட நாட்டோட தேசியக் கொடிடா , அதைப் பறக்க விடுறதுக்காகத்தான் எம்புருசன் தன்னோட உசிரை விட்டிச்சாக்கும் ! ‘ பெருமையோடு முத்துவைப் பார்த்தாள் பாட்டி.

‘அதுசரி பாட்டி , உங்கிட்ட அந்தக் கொடி எப்ப்டி வந்திச்சு பாட்டி ? ‘ தொடர்ந்தான் முத்து.

‘ ஓ அதுவா ? அதான் சொன்னேனேடா , எம்புருஷன் , சுதந்திரப் போரட்டத்தில உசிர விட்டப்போ அதுகிட்ட இருந்த ஒரே ஒரு சொத்து அதுதான் என்னு சொல்லி எங்கிட்ட கொடுத்தாங்கடா ‘ மீண்டும் பெருமிதத்துடன் பாட்டி

பஸ்ஸிலிருந்து இறங்கி அவர்களது குடிசை இருக்கும் இடத்தை நோக்கி நடந்தார்கள் பல குடிசைகளைத் தாண்டி அவர்களின் குடிசை இருந்த ஏரியவுக்குள் வந்ததும் பாட்டி அதிர்ந்து விட்டாள் !

அந்தக் குடிசை இருந்த இடம் காலியாகவும் அனைத்துக் குடிசைகளும் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டும் இருந்தது.

அதிர்ச்சியிலிருந்து மீள முடியாதவளாக அருகே அழுது கொண்டிருந்த ஒரு வயதான பெண்னிடம்

‘ஏய் புள்ளே ! என்ன நடந்திச்சு இங்கே ? நான் என் பணத்தை முழுசா அந்தப் புரோக்கரண்டை குடுத்திட்டேனே ! ‘ கண்களில் கண்ணீர் முத்து முத்தாகத் திரள அடுக்கினாள் பாட்டி.

முத்துவின் கண்களிலும் கண்ணீர் வந்தது ஆனால் அதன் காரணம் வேறு . இதுவரை அந்தக் கிழப்பாட்டி அழுது பர்த்ததேயில்லை அவள் கன்களில் நீரைக் கண்டதும் முத்துவின் கண்களில் ஆறு பெருகியது

‘ பாட்டி நீயும் ஏமாந்துட்டியா ?அதான் அந்தப் பாவி பரமசிவம் (அந்த ஊர் பணக்காரன்) இந்த நிலத்தை மடக்கிப் போட்டுக்கிட்டு 5 மாடிக் கட்டிடம் போடப் போறேண்ணு சொல்லி , பொலிஸாரோட வந்து எல்லத்தையுமே இடிச்சிட்டான் , ஜயோ நான் என்ன பண்ணுவேன் ? ‘ என்று ஒப்பாரி வைத்தாள் அந்தப் பெண் .

பாட்டி பெட்டியைக் கையிலெடுத்தாள் .

‘பாட்டி நாம எங்கே போறோம் ? ‘ என்றான்

‘ அதிர்ஸ்டமில்லாப் பய மவனே ! நமக்குத்தான் அவன் குடுத்த பிளாட்பாரம் இருக்கே வாடா ‘ என்றவாறு கண்களைத் துடைத்தவாறு பாட்டி புறப்பட அவள் பின்னால் முத்து வாழ்க்கையில் முதலாவது பாடம் படித்த அனுபவத்துடன் தொடர்ந்தான்.

பஸ் அந்த ஊர் எல்லையைத் தாண்டும் போது , ட்ராபிக் ஜாம் காரணமாக ஓரிடத்தில் சற்றுத் தாமதமானது அப்போது அருகேயிருந்த திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேடை முழுவதும் தேசியக் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த ஊர் அரசியல்வாதி பேசிக்கொண்டிருந்தார் அவர் அருகே பரமசிவம் தேசிய உடையில் அமர்ந்திருந்தார்.

‘ தோழர்களே ! எமது நாட்டின் சுதந்திரம் மகத்தானது , விலை மதிப்பற்றது . எத்தனையோ உன்னத உயிர்களின் இழப்பால் பெறப்பட்டது . அதன் காரணமாக இன்று சமூகத் தொண்டர் பரமசிவம் போன்றோர் இந்தச் சேரியின் மத்தியில் 5 மாடிக் கட்டிடத்தைக் கட்டி , இந்தப் பகுதியின் பொருளாதர வளர்ச்சியைப் பெருக்குகிறார். ‘

அரசியல்வாதி அடுக்கிக் கொண்டே போனார் , பஸ் புறப்பட்டுச் சென்றது.

ஆட்டோ ஸ்டாண்ட் அருகேயிருந்த பிளட்ட்பரத்தில் பாட்டியையும் முத்துவையும் கணடவுடன் கூட்டமே குடி விட்டது பரமசிவத்தை திட்டித் தீர்த்தவர்கள் , பாட்டிக்கு , முத்துவுக்கும் பழையபடி அதே இடத்தை ஒதுக்கிக் கொடுத்தார்கள். ஏனோ அந்தச் சிறுவனின் முகத்தில் தன்னைச் சுற்றி நின்ற பிளாட்பார பிரஜைகளைப் பார்த்தது ஓர் சமுதாய உணர்வு பொங்கியது.

மீண்டும் விடியல் , மீண்டும் பாட்டியின் கத்தல் பல்லைத் துலக்கிக் கொண்டே

‘ பாட்டி சுதந்திரம் என்னா என்ன ? ‘ ஆவலாகக் கேட்டான் முத்து.

‘அது எனக்கும் உனக்கும் புரியாத ஒண்ணுடா ‘

மீண்டும் அலங்கோலமாகச் சிரித்தாள் பாட்டி .

—-

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்