சந்திரவதனா
அலை வந்து கால்களை நனைத்தது. மெல்லிய குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆங்காங்கு மரங்களின் கீழும், கற்களிலும், தரைகளிலும் அமர்ந்திருந்து இளஞ்சோடிகள் காதல்லீலைகள் புரிந்து கொண்டிருந்தனர். வெள்ளவத்தைக் கடற்கரையின் அந்தக் குழுகுழுப்பிலோ, மகிழ்வலைகளிலோ என் மனம் குதூகலிக்க மறுத்தது.
இந்து என் மனநிலையைப் புரிந்து கொண்டவளாய், என்னை சந்தோஷப் படுத்த எண்ணி ஏதேதோ கதைத்தாள். சிரித்தாள். நானும் ஒப்புக்குச் சிரித்துக் கொண்டு நடந்தேன்.
ஆரவாரப்பட்டுக் கொண்டு வேகமாக ஓடி வந்த கடல் அலைகளில் ஈரமாகிப் போன என் சட்டையின் கீழ்ப்பகுதி, என் கால்களில் ஒட்டிக் கொண்டு நின்றது. என் மனசு மட்டும் எதிலுமே ஒட்டாமல் வெறுமையாக இருந்தது.
அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, தங்கைமாருடன் இந்தக் கடற்கரையில் நடந்த இனிய காலங்கள்….! சிரித்து, ஓடி, விழுந்து, ஒழித்து….! எத்தனை இனிமை! நினைவுகள் தந்த சிலிர்ப்பில் மனம் களித்து, உடனேயே கலைந்தது.
‘சந்தியா! என்ன மெளனமாகீட்டாய் ? எதையும் நினைச்சு நினைச்சு மனசைக் குழப்பிக் கொண்டிராதை. இந்தளவாவது வந்து அப்பாவோடை இருக்க முடிஞ்சதை நினைச்சுச் சந்தோஷப்படு. ‘என் சோகத்தையெல்லாம் துடைத்தெறிந்து விடுவதாய் கங்கணம் கட்டிக் கொண்டவளாய் இந்து என்னை அன்பாகக் கடிந்தாள்.
ஊற்றாய் சுரந்து எனக்குள்ளே அருவியாகப் பிரவகித்துக் கொண்டிருந்த சோகம் அவளின் அன்புத் தொடுகையில் தடுமாறி அணைமீறி விழிவழி பாய்ந்து கடலுடன் கலந்தது.
`அப்பா….! போயிட்டார். முந்தநாள் எல்லாம் முடிந்து போய் விட்டது. என்ரை அப்பா என்னை விட்டுப் போயிட்டார். இந்த உலகத்தை விட்டே போயிட்டார்.ஒ
அப்பா….! எத்தனை வாட்டசாட்டமாக இருந்தவர். மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டு வாட்டசாட்டமான கட்டுடலுடன் அவர் நடக்கும் ராஜ நடையே ஒரு தனி அழகுதான். இராஜ ராஜ சோழன் சிவாஜியைப் பார்த்து அப்பாதான் நடிக்கிறாரோ என்று சின்ன வயசில் எனக்கு ஒரு சந்தோசமான சந்தேகம் வரும்.அப்படி ஒரு அழகும் ஆளுமையும் அப்பாவிடம். அவர் வாழ்வு இத்தனை வேகமாக முடிந்திருக்கத் தேவையில்லை.எதையும் நம்பவும் முடியாமல், ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் மனசு விம்மி விம்மித் துவண்டது.
வவுனியாவில் வைத்தியர்கள் பற்றாக்குறையாம். பாதிக்கப் பட்டது யார் ? எம் தமிழர்கள்தான். நாற்பத்தியாறு வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டிய வவுனியாவின் மூன்று பெரிய வைத்தியசாலைகளுக்குமாக மூன்றே மூன்று வைத்தியர்கள் மட்டுமே. அடிபட்டுப் போன தமிழர்களில் என் அப்பாவும் ஒருவர் என்ற போதுதான் கொடுமையின் தீவிரம் என்னையும் குதறியது. மனம் குமுறியது.
ஆனாலும் நேற்று வவுனியா ரெயில்வே ஸ்டேசனுக்கு வரும் வரை நான் அழவேயில்லை. அம்மாவைக் கட்டித் தழுவி விடை பெறுகையில் என்னையும் மீறி ஏக்கம் பெருமூச்சாய் வெளிவந்தது. நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. அப்போதும் நான் அழவேயில்லை. எங்கே அம்மா அழுது விடுவாளோ என்ற பயம் தான் என்னைத் தடுத்திருக்க வேண்டும்.
திடாரென்று அம்மா யேர்மனிக்கு ரெலிபோன் பண்ணி அப்பா மரணத்தின் வாசலில் நிற்கிறார் என்ற போது மனம் புலம்ப விழி கசிய அவசரமாய் விமானமேறி விட்டேன். வழியெல்லாம் அப்பாவை நினைத்து அழுத மனசு, யேர்மனியில் விட்டு வந்த என் குழந்தைகளையும் நினைத்து அழுதது. உயிருக்கு உத்தரவாத மில்லாத தாய்நாட்டை நோக்கிய இந்தப் பயணம் சரிதானா ? என் குழந்தைகளைச் சிறகிழக்கப் பண்ணப் போகிறேனா ? என்ற குற்ற உணர்வுகள் என்னைக் குடைந்தெடுத்தன.
வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்டேசன் ரோட்டின், அந்த வீட்டுக்குள் நுழைந்த போது, ஏக்கம் தோய்ந்த விழிகளுடன் காத்திருந்த அப்பா, வாடி, வதங்கி நோயின் வலியில் வேதனை ஓடி இருந்த விழிகள் ஒரு கணம் பிரகாசிக்க, தினவெடுத்த அந்தத் தோள்கள் சற்று ஒடுங்கிப் போயிருந்தாலும், பாசப்பிரவாகத்தில் துடிதுடிக்க ஓ வென்று கதறியபடி எனை ஆரத்தழுவி விம்மிய போது குடைந்தெடுத்த குற்ற உணர்வுகள் பறந்தோட, அவர் விழி துடைத்து, தலை கோதித் தாயானேன்.
என்னைத் தன் தோளில் சுமந்து, சமுதாயத்தில் தலை நிமிர்த்தி வாழும் படியாக நேர்த்தியாக வளர்த்தெடுத்த என் அப்பாவுக்கு தன் தலை சாய்க்க, என் தோள் தேவைப் பட்டிருந்தது.
ஏழு நாட்கள்…! ஏழே ஏழு நாட்கள்.
பன்னிரண்டு வருடங்களின் பின் அப்பாவுடனான அந்த ஏழு நாட்களில் ஒரு குழந்தையாய் அப்பா நடந்து கொண்ட விதம் என் பயணத்துக்கு அர்த்தம் கூறியது. அனர்த்தம் நிறைந்த எனது நாட்டை நோக்கிய என் வரவுக்கான அவசியத்தைக் கூறியது. இன்னும் என்னவெல்லாமோ கூறியது. அப்பாவின் இந்த இறுதி நாட்களிலாவது, எங்கோ அந்தகாரத்துக்குள் பிள்ளைப் பாசத்தைத் தேட வையாது, ஓடி வந்து இந்த ஏழு நாட்களையும் உயிர்ப்புடைய தாக்கியதில் எனக்குள் நிம்மதி நிறைந்த தாய்மைப் பூரிப்பு ஏற்பட்டது.
அதனால்தானோ என்னவோ எட்டாவது நாள், அப்பாவின் ஜீவன் அவரை விட்டுப் போன போது, நான் ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை. என் மனம் மட்டும, அப்பாவுடன் கை கோர்த்து என் அழகிய பருத்தித்துறை மண்ணில் நடந்த நாட்களை அசை போட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நினைவுகளும் மீட்டப்பட்டு மனம் சிலிர்த்தது.
கண்ணின் மணி போலக் காத்து, என்னை வளர்த்த என் அப்பாவை விட்டு….! எப்படி முடிந்தது என்னால் ? பன்னிரண்டு வருடங்கள்…. நான்…. எனது கணவன் …. எனது பிள்ளைகள்…. என்று ஒரு வகை சுயநலத்துடன் இருந்து விட்டேனே!இந்தப் பன்னிரண்டு வருடத்தின் ஒவ்வொரு கணத்தையும் என்னைப் பெற்றெடுத்து, தாலாட்டி, சீராட்டி வளர்த்து இந்த சமூகத்தில் நடமாட வைத்த அப்பா அம்மா என்ற இந்த இரண்டு ஜீவன்களும் எப்படிக் கழித்திருப்பார்கள்! எனக்கு என் பிள்ளைகள் முக்கியமாகி விட்டார்கள். இவர்களுக்கு நான் பிள்ளையில்லையா ? இவர்களுக்கு முக்கியமான நான் எங்கோ இருந்து விட்டேனே!
தள்ளாத வயதில் என்னைப் பெற்றவர்களைத் தவிக்க விட்டு, பிள்ளைப் பாசத்துக்காக ஏங்க விட்டு, நான் சுமந்து பெற்ற என் பிள்ளைகளுக்காக என்னை அர்ப்பணித்து….! மனசு கிடந்து அல்லாடிக் கொண்டே இருந்தது.
ஊரில் பருத்தித்துறையில் மாளிகை மாதிரி வீட்டில் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் புடைசூழ ஒரு சந்தோச சாம்ராச்சியத்தையே கட்டியாண்டவர்களை,சொந்தம் என்று சொல்ல யாரும் இல்லாத படி தாண்டிக்குளம் தாண்டி வந்து வவுனியாவில் தன்னந் தனியாகத் தங்க விட்டு….! நினைவுகள் சாட்டைகளாக மனசை விளாசிக் கொண்டேயிருந்தன. வந்தவர்கள் நினைத்திருக்கலாம். யேர்மனிக்குப் போனதோடு என் மனம் கல்லாகி விட்டதென்று. வந்தவர்கள் யாரும் சொந்தக்காரர்கள் அல்ல.
குருமன் காட்டுச் சந்தியில் நிற்கும் சிங்களக் கூலிப்படைகளுக்கு கேட்கும் படி குழறியழும் துணிவு யாருக்கும் இல்லையென்றாலும் அவர்கள் எல்லோரும் மூச்சிழுத்து அழுது கொண்ருந்தார்கள். மூக்கைச் சீறி சேலைத் தலைப்பால் துடைத்தார்கள்.
அப்பாவுக்கும் அப்பாவைச் சுற்றிக் கொண்டு நின்று அழும் இவர்களுக்கும் இடையிலான பிணைப்பு சொந்தம் இல்லை. ஆனால் சொல்லில் வடிக்க முடியாத பந்தம்.
அப்பாவின் கால் மாட்டில் இருந்தழும் நாகேஸ் அன்ரி என்னை விட இளையவள்.அவள் தான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரி. எண்பத்தாறில் நடந்த ஒரு கொடுரத்தில் அநுராதபுரத்தில் இவள் கணவனும் வெட்டிப் பிளக்கப் பட்டு விட்டானாம். ‘அப்பா…! அப்பா…! ‘ என்று உருகி உருகி அழுதாள்.
அப்பாவின் வலது பக்கம் நின்றழும் பக்கத்து அறை பரிமளாவும் ‘அப்பா…! அப்பா…! ‘ என்று விசும்பினாள். என் வயதிலிருக்கும் அவளும் கணவனை இழந்தவள்தான். மதவாச்சியில் அவள் கணவன் கண்ட துண்ட மாக்கப் பட்டு காலங்கள் ஓடி விட்டதாம்.
இப்படியே அந்த வீட்டுக்குள் இருக்கும் ஏழு குடும்பங்களும் தமக்குள் ஒவ்வொரு சோகக் கதையைச் சுமந்து கொண்டு என் அப்பாவுக்காக விம்மி விம்மியழுதன.
அவர்கள் எல்லோருக்கும் என் அப்பா, அப்பா முறையாக இருந்தார். அம்மா, அம்மா முறையாக இருந்தார். இதே போல் என்னை விட இளைய நாகேஸ் அன்ரி எல்லோருக்கும் நாகேஸ் அன்ரிதான். அப்பாவும் அவளை நாகேஸ் அன்ரி என்றுதான் கூப்பிடுவாராம். பாதிக்கப் பட்டவர்கள் என்ற முறையில் அவர்கள் தமக்குள் அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அன்ரி….!என்ற உறவு முறைகளை ஏற்படுத்தி பாசப் பிணைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
என் அப்பாவில் அவர்களுக்கிருக்கும் உரிமை எனக்கில்லைப் போல் ஒரு குற்ற உணர்வு என்னைக் குத்திக் கொண்டிருந்தது. அப்பா படுக்கையில் வீழ்ந்த போது, நான் யேர்மனியில் இருக்க சொந்தப் பிள்ளைகள் போல், சகோதரர்கள் போல் பாசத்தைக் கொட்டிப் பார்த்தவர்கள் இவர்கள் தானே! இவர்கள் பாசத்தின் முன் நேசத்தின் முன் நான் எம்மாத்திரம்..! மனசு கூசிப் போயிருந்தது.
எல்லாம் முடிந்து, அன்றைய இரவு எங்கள் மனங்களைப் போலவே அப்பாவின் படுக்கையும் வெறுமையாகக் கிடக்க, ஷெல்கள் மட்டும் எந்தத் தயக்கமுமின்றி காற்றைக் கிழித்து, இரவின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டிருந்தன.
‘அம்மா….! இனி இங்கை தனிய இருந்து என்ன செய்யப் போறியள் ? நாளைக்கு நீங்களும் என்னோடை வாங்கோ. வந்து அங்கை கொழும்பிலை இருங்கோ. கொழும்பிலை இருந்தியள் எண்டால் நான் யேர்மனிக்குப் போனாப் பிறகும் உங்களோடை பிரச்சனையில்லாமல் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கும் கொஞ்சம் வசதியாயிருக்கும். ‘
அம்மாவைக் கேட்டுப் பார்த்தேன்.
‘இல்லை. அப்பாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை யெல்லாம் செய்து முடிச்சுப் போட்டுத்தான் இந்த இடத்தை விட்டு நகருவன். ‘
அம்மா ஒரேயடியாக மறுத்து விட்டா.
அம்மாவுக்கு அப்பா மீதுள்ள பிடிப்பும் பிரியமும் நானறியாததல்ல. அப்பா கூட வயது போன காலத்திலும் அம்மா மீது மிகவும் பிரியமாகவே இருந்தார். இந்த நிலையில் அம்மாவை எந்த வற்புறுத்தலும் அசைக்காது என்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன்.
அதுக்காக அம்மா, அப்பாவுக்கான கடமைகளை முடிக்கும் வரை காத்திருக்க எனக்கு அவகாசம் இல்லை. எனக்கு அவசரம். எனது பிள்ளைகள் யேர்மனியில்.! நான் அவர்களிடம் போய்ச் சேர வேண்டும். வேலைக்கு மேலதிக லீவு போட இயலாது. நாளைக்கு ஃப்ளைட் (Flight). எல்லாவற்றிற்கும் மேலால் வவுனியா பாஸ் நாளையுடன் முடிவடையப் போகிறது. புதுப்பிப்பதென்றால் கொழும்பு வரை போய் திரும்பி வர வேண்டும். அதற்கெல்லாம் எனக்கு நாட்கள் காணாது. என் பிள்ளைகளிடம் நான் போய் விட வேண்டும். அதனால் நான் புறப்பட்டு விட்டேன்.
உயிர் தந்து தன் உடலில் எனைச் சுமந்த என் அம்மாவை விட உயிர் கொடுத்து நான் என் உடலில் சுமந்த என் பிள்ளைகள் எனக்கு முக்கியமாகப் பட்டதால் என் அம்மாவைத் தன்னந்தனியாக விட்டு விட்டு நான் புறப்பட்டு விட்டேன்.
வவுனியா ரெயில்வே ஸ்டேசனில் ரெயின் வரும் வரை காத்திருந்த போதுதான் அதுவரை அடக்கி வைத்திருந்ததெல்லாம் அணை உடைத்த வெள்ளமாய் மனமுடைத்து வெளிப்பாய்ந்தது.
பின்னே என்ன ? இந்த வவுனியா ரெயில்வே ஸ்டேசனில் அப்பா ஸ்டேசன் மாஸ்டராக இருந்த போது அவர் கை பிடித்து இந்த பிளாட் போர்மில் (Flatform) நடந்த நாட்கள் எத்தனை சுகமானவை. வெள்ளை சேர்ட், வெள்ளை ரவுசர், வெள்ளைத் தொப்பி அணிந்த அப்பா மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டு ராஜ நடை போட்ட அந்த இடம் இன்று சிங்களக் கூலிப் படைகளால் மொய்க்கப் பட்டு, ஏதோ ஒரு அசாதாரண அருவருப்பான பயப் பீதியுடனான இடமாக மாறியிருந்தது.
விடுமுறை நாட்களை அப்பாவுடன் கழித்த, அப்பாவுக்கென கொடுக்கப் பட்டிருந்த ரெயில்வே குவார்ட்டர்ஸ் எந்தக் கலகலப்புமில்லாமல் அமைதியைப் போர்த்தியிருந்தது. அந்தப் படிகளில் அப்பாவுடன் நான் ஒட்டிக் கொண்டிருந்து கதைத்துக் கொண்டு….!
நான் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கி விட்டேன். பக்கத்தில் நின்ற பெண்தான் என் சோகத்தின் முழுக் காரணம் தெரியாவிட்டாலும் சோகம் பற்றித் தெரிந்தவளாய் என்னைச் சமாதானப் படுத்தினாள்.
ரெயின் வந்து சிலிப்பரேட்ஸ் கொம்பார்ட்மெண்ட் கதவு திறந்து ஏறிய பின்பும் என் விசும்பல் அடங்கவில்லை. அம்மாவைத் தன்னந் தனியாக விட்டுச் செல்கிறேன் என்ற நினைவே என்னைக் கொன்றது.
இறாகமவில் சிங்கள கூலிப்படைகள் ரெயினுக்குள் ஏறி செக்கிங் என்ற பெயரில் எம்மைக் குடைகிறவரை என் விழியோரம் கசிந்து கசிந்து கொண்டேயிருந்தது.பக்கத்திலிருந்த இளம்பெண் கட்டிக் கொண்டு வந்த இடியப்பப் பார்சலைக் கூட திறந்து காட்டச் சொல்லி அவர்களில் ஒருவன் கிளறிப் பார்த்த போது, விழி நீர் உறைந்து மனசு அழ மறந்து பயத்தில் வெட வெடத்தது. மிடறு விழுங்கக் கூட துணிவில்லாது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தது நான் மட்டுமல்ல. அந்த கொம்பார்ட்மெண்டுக்குள் இருந்த அனைவரும்தான்.துணிவாகக் காட்சியளித்தவர்கள் கூட விழி பிதுங்க விறைத்தது போல இருந்தார்கள்.
கொழும்புக் கோட்டையில் நிம்மதி மூச்சுடன் இறங்கிய போதுதான் சில பேரின் நிம்மதிகள் கூலிப்படைகளால் சூறையாடப் பட்டிருப்பது தெரிந்தது. அறுபதைத் தாண்டிய ஆண்கள் சிலரும் பருவ வயதிலுள்ள பெண்கள் சிலரும் சந்தேகத்தின் பேரில் கைதாகி இருந்தார்கள். அவர்கள் இனிக் காணாமல் போய் விடலாம். அல்லது களுத்துறைச் சிறையிலோ வேறெங்கோ அடைத்து வைக்கப்படலாம்.
நினைவுகள் சுமைகளாக அழுத்த ரணமான மனத்துடன் வெள்ளவத்தை வந்த எனக்கு ஒத்தடமாக இருப்பவள் எனது பால்ய காலத்து நண்பியான இந்த இந்துதான்.
ஒத்தடத்தையும் மீறிய வலி எனக்குள். வெள்ளவத்தைக் கடற்கரையின் இயற்கை அழகிலோ, இந்துவின் ஆறுதல் வார்த்தைகளிலோ சமாதானப்பட மறுத்தது என் மனம். நாளை நான் யேர்மனியை நோக்கிப் பறக்கப் போகிறேன். என் அம்மாவைத் தனியாக விட்டு விட்டு, யேர்மனியில் விட்டு வந்த என் குழந்தைகளிடம் ஓடப் போகிறேன்.
என் முடிவு சரிதானா ? என் குழந்தைகளுக்காக என்னைப் பெற்ற தெய்வத்தை விட்டுச் செல்வது சரிதானா ? குற்ற உணர்வுகள் என்னைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தன. ஆனாலும் நான் நாளை காலை யேர்மனியை நோக்கிப் பறக்கப் போகிறேன். பேச்சிலே, பாட்டிலே, கவிதையிலே பெற்றவளைத் தெய்வம் என்று புகழ்வது மிகவும் சுலபம். நியத்திலே அந்த தெய்வத்தை தவிக்க விட்டு விடுவதுதான் இங்கு அதிகம். அதைத்தான் நானும் செய்யத் தயாராகியிருந்தேன்.
தாரை தாரையாக நான் வடிக்கும் கண்ணீரில் உடைந்து எங்கெங்கோ சிதறிப் போன இந்தப் பாசச் சங்கிலித்துண்டங்கள் இணைக்கப் படுமா ?
-முற்றும்-
சந்திரவதனா
யேர்மனி
(2001 இல் பிறேமன் யேர்மனியிலிருந்து வெளிவரும் பூவரசு நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.)
chandra1200@yahoo.de
- .. இருள் செய் நெருப்பு…
- அறியப்படாத பக்கங்கள் -கட்டுரை(சுயசரிதம்)
- மனவெளி கலையாற்று குழுவினரின் 11வது அரங்காடலின் தோல்விக்குக் காரணம் என்ன ?
- ஆட்டோகிராஃப் ‘காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா ‘
- டுபாக்கூர் கவியரங்கம்
- அமைச்சுப் பதவி
- கடிதம் ஜூலை 29,2004
- கடிதம் – ஜூலை 29,2004
- கடிதம் ஜூலை 29,2004 – நாக இளங்கோவனுக்கு சில கேள்விகள்
- கடிதம் ஜூலை 29,2004 – வஹ்ஹாபிசம், வெட்டுக்கிளி கட்டுரைப்பற்றி ..
- எனை கைது செய்து போகிறாய்.
- மெய்மையின் மயக்கம்-10
- கவிதை
- எது நாகரிகம்…. ?
- கவிக்கட்டு 17 – உன்னத உறவு
- காலத் தடாகம்….
- நலம்…நலமறிய ஆவல்!!
- ‘ தீக்கழுகு ‘ அல்லது ‘எமனுக்கே அதிர்ச்சியிது ‘
- அநாதை
- ‘தைச்சீ ‘
- அன்புடன் இதயம் – 25 – கவியரசனே கண்ணதாசனே
- வேடத்தைக் கிழிப்போம் – 4(தொடர் கவிதை)
- வினை விதைத்தவர்கள்!
- இதுவும் கடந்து போகும்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 30
- சங்கிலித் துண்டங்கள்
- ‘ஏய் ‘, ‘கில்லி ‘, ‘சுள்ளான் ‘-எதிர்காலத் தமிழகம் ?
- ஹோமோ செக்சுவாலிடடி( Homosexuality)
- கிரிஸ்துவமும் பிரிட்டிஷாரும் சாதியமும்
- உன்னிடம்
- எனவேதான்,
- ஒருவீடும் விவாகரத்தும்
- என்னைச் சுட்ட பிஞ்சுகளே! தீயே உன் மேல் கோபம் !
- சிறகுகளை விரிக்கும்போது!
- பெரியபுராணம் -2
- நாக்குகள்
- இயல்பாய் ஒரு தடவை…
- மீள்பிறக்கும் ஹைடிரஜன் எருச்சுனை முடுக்கும் எதிர்கால மோட்டார் வாகனங்கள் [Renewable Hydrogen-Powered Fuelcell Future Motor Vehicl
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-5
- ஞாயிற்றைக் கைம்மறைப்போர்
- உருளை சலாட்(டூசல்டார்பர்) – சுவிட்சர்லாந்து