நீலக்கடல் – (தொடர்) – 27

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


Les mortels sont egaux; la vertu fait le rang,

Et l ‘homme le plus juste est toujours le plus grand

– Voltaire

போர்லூயி, ஹோட்டல் தெ வீல், குவர்னர் அலுவலகம். காலனி நிருவாகத்திற்கே உரிய பெரிய்ய்ய்ய மேசை பெரிய்ய்ய்ய நாற்காலி. மகோகனிமரத்தில் இழைத்திழைத்து மெருகூட்டி, கடைந்து செய்தகால்கள், கவையங்களுக்குச் செப்பலங்காரம். செப்பில் கைப்பிடி. கீழே அராபிய நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட பூ வேலைப்பாடுகள் கொண்ட தரை விரிப்பு. மேசைக்கெதிரே இரு பக்கங்களிலும் ஊதா நிறத்தில் மெத்தைவைத்துத் தைத்திருந்த நாற்காலிகள். குவர்னரைக் காணவரும் முக்கிய கும்பெனி அதிகாரிக்கும், தீவிலிருந்த பறங்கியர்களுக்குமென உபயோகத்திலிருப்பது. சில மலபாரிகளும்( ?) உட்கார அனுமதிக்கப்பட்டார்கள். வலதுபுறத்தில் விருந்தினர் நாற்காலிகளுக்குப் பின்புறம் பர்மா தேக்கை உபயோகித்துப் புதுச்சேரித் தச்சர்கள் செய்வித்திருந்த அலமாரிகள். குவர்னருக்கு வேண்டிய தகவல்கள் அனைத்தும் ஏடுகளில் எழுதப் பட்டு வரிசைப்படுத்தபட்டுள்ளன. கும்பெனிக் கணக்கு, கும்பெனிக்குத் தெரிவிக்கவேண்டிய சொந்தக் கணக்கு. அவரது சேன்மாலோ நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களின் நகல்கள். தீவில் செய்து முடித்த பணிகள், செய்யவேண்டிய பணிகள், மக்கட் தொகை: பிராஞ்சு மக்கள், மலபாரிகள், பூர்வீகமக்கள், மரூன்கள், விருப்பு வெறுப்புகள், வெற்றி தோல்விகள், சந்தோஷங்கள் துக்கங்கள், இங்கே சொல்லமறந்தவை அட்டவணைப்படுத்தப்பட்டு, எண்ணிலும் எழுத்திலும், அவதாரமெடுத்திருந்தன. விரல்களுக்கிடையில் பூதக்கண்ணாடிகொண்டு படிக்கவேண்டி வரிசைப் படுத்தபட்டிருந்தன. வரலாறு எழுதப்படவும், உங்களுக்குக் கதைசொல்லவும் காத்திருந்தன. இது தவிர நேரமிருக்கும்போதெல்லாம் குவர்னர் படிப்பதற்கென்று ‘கடற்செலவு ‘ (Art de naviguer) ‘ குறித்த புத்தகம் லிஸ்பனிலிருந்து தருவிக்கபட்டது, அங்கிருந்தது. பிரான்சிலிருந்து பிரெஞ்சுத்தீவு வழியாகப் பயணம் செய்திருந்த ஓர் அதிகாரியிடம் வாங்கியிருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட பிரெஞ்சு இலக்கியங்களும் அடுக்கியிருந்தன.

குவர்னர் சற்றுமுன்புதான் வழக்கம்போல, அருகிலிருந்த மருத்துவச் சாலைக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுத் திரும்பியிருந்தார். சிவந்த பூசணிப் பழத்திற்கு முகம் எழுதியபோல தலை. தோள்வரை இறங்கியிருந்த வெண்பஞ்சுப் பொய்முடி. உதடுகளிறுக்கிக்கொண்டு எப்போதும்போல புன்னகைக்கும் முகம். மனிதர்களைக் கணக்கிடும் கண்கள். எதிராளிகள் விளங்கிக்கொள்ளவியலாத பார்வை – பெயர் மாஹே தெ லாபூர்தொனே.

பங்கா கயிற்றுடனிருந்த கறுப்பனிடம் சற்று வேகமாக இழுக்குமாறு கட்டளை பிறப்பித்தார். ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டு, திரைச்சீலைகள் ஒதுக்கப்பட்டன. தூரத்தில் கிட்டங்கிகளுக்கு சாமான்கைளை சுமந்துகொண்டு கறுப்பின ஆட்களும் மலபாரிகளும் போவது தெரிந்தது. அருகே கால்வாய்களில் இரண்டொரு கப்பல்களின் பாய்விரிதத கொடிமரங்கள். சாளரங்களின் கதவுகளின் மறுமுனை மேல்நோக்கி உயர்த்தப்பட்டன. நீண்ட அங்கியைக் கழற்றி அருகிலிருந்த மலபாரியிடம் கொடுக்க அவனருகிலிருந்த தாங்கியில் மாட்டினான்; கழுத்துப் பட்டையைத் தளர்த்திக் கொண்டு, கையுறைகளை உருவி, கவையத்தில் அதற்கெனவிருந்த சிறிய உட்பகுதியில் வைத்து மூடினார்.

நீங்களும் நானும் நினைத்தபடி எல்லாம் நடப்பதுண்டா ? இவருக்கு நடக்கின்றது. பத்துவயதில் கப்பலேறியதில் கற்றுக்கொண்டது அதிகம். முதன்முதலில் பதினெட்டாயிரம் பவுண்களுடனுன் வாங்கிய லெ போந்திஷேரி கப்பலும், நடத்திய வாணிபமும் கொண்டுவந்து சேர்த்தது ஏராளம்.

கணக்கெழுதும், உதவியாளரை அழைத்து, சொந்த வியாபாரத்தின் வரவு செலவுகளை எழுதி வைத்திருந்த பேரேட்டினை கொண்டு வரச் செய்தார். நனைத்த கடற்பஞ்சினில் விரல்களைத் தொட்டு, ஈரப்படுத்திக்கொண்டு பக்கங்களை நாசூக்காகப் புரட்டினார். கணக்குத் தெளிவாக இருந்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் தன்னுடைய செல்வம் மூன்று லட்சம் பவுணிலிருந்து இன்றைக்கு பதினொருலட்சத்தைத் தொட்டிருக்கிறது. வருடத்திற்குச் சராசரியாக ஒரு லட்சம் பவுண் கூரையைப் பிரித்துக் கொட்டியிருக்கிறது. பாரீஸைச் சேர்ந்த, ழான் கொத்தன் என்கிற வங்கி அதிகாரி மூலம் வடக்கு ஐரோப்பிய வணிகத்தில் செய்திருந்த முதலீடு மட்டுமே இந்த வருடத்தில் 46000 பவுணை வரவுக் கணக்கில் சேர்த்திருக்கிறது.

கனவுகள் நிறைவேறுவதில் மக்ிழ்ச்சி, சந்தோஷம். செல்வம் ஏற்படுத்திய மயக்கம், ‘போதாது ‘ என்கிறது, மேலும்மேலும் சம்பாதிக்கச் சொல்கிறது. முடிவுக்கு வர விரும்பாத போதை, திசை அறியாமல் பயணிக்கிறது. தெரிந்தவர்கள் திறமைசாலி என்கிறார்கள். தெரியாதவர்கள் அதிர்ஷ்டசாலியென்கிறார்கள். உண்மையில் பிரெஞ்சுத் தீவின் குவர்னர் லாபூர்தொனே ஒரு நுளை நரி. தொட்டதெல்லாம் பொன்னாக்கும் தந்திரசாலி.

கும்பெனி அறியக் காப்பியை வாங்கினார் விற்றார். கும்பெனி அறியப் பட்டினை வாங்கினார் விற்றார். கும்பெனி அறியப் பருத்தித் துணிகளை வாங்கினார் விற்றார். கும்பெனி அறியத் தங்கத்தையும் வெள்ளியையும் வாங்கினார் விற்றார். கும்பெனி அறியாமல் ( ?) அடிமைகளை வாங்கினார், விற்றார். செல்வம் குவிந்தது.

பிரெஞ்சு தேசத்து ஆயுதங்களும், வெடிமருந்துகளும், சாராயமும் தங்கக்கட்டிகளும் மதகாஸ்கர், கிழக்கு ஆப்ரிக்க நாடுகள், இந்தியா ஏன் இங்கே தீவிற்கேக் கூட தேவையாயிருந்தது. இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்குப் பகுதிக்கோ, இந்தியாவிலிருந்து சீனாவுக்கோ, பிரான்சுக்கோ, ஸ்பெயினுக்கோ அல்லது இவற்றின் எதிர் திசைகளிலோ, கும்பெனியின் வியாபாரம் அபரிதமாகப் பெருகியபோதெல்லாம் இவரது வியாபாரமும் கும்பெனிக்குத் தெரிந்தோ தெரியாமலோ செழித்தது. செல்வமும் குவிந்தது.

இல்லையென்றால் பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஷர்லோத்தை இரண்டாவது மனைவியாகக் கைப்பிடிக்க முடியுமா என்ன ?

எவனோ என்னவோ எழுதிப்போட, கும்பெனி இவரிடம் விளக்கம் கேட்டது. இதற்கென்றே எழுதிவைத்திருந்த கணக்கினைக் காட்டியதும், அவர்கள் வாயையும் மற்றதையும் பொத்திக்கொண்டார்கள். இந்த ஆறாண்டுகளில் தீவின் வளர்ச்சி தெளிவாய் இருக்கிறது.

கடலில் வீணாகக்கலந்த பூஸ் நதித்தண்ணீர் உப்பாகவிருந்தது. தீவிலிருந்த மக்கள் தண்ணீருக்காக பெரிய நதியைத் தேடி ஓடவேண்டியிருந்தது. பெரிய நதியை போர்லூயிக்குத் திருப்பப் முடியுமா ? என்று கேள்விகேட்டார்கள். பெரிய நதி தனது ஓட்டத்தில் ஓரிடத்தில் கடல் மட்டத்தைவிட உயர்ந்த இடத்திலிருந்து பாய்வதைப் பயன்படுத்திக்கொண்டு மளமளவென்று காரியங்கள் நடந்தன. மக்களுக்குத் தண்ணீர் கிடைத்தது. மலைகளுக்கிடையே அமைதியாகக் கிடந்தக் கடல் நீர் நிறைந்துக்கிடந்த வடமேற்குப் பகுதியில் கப்பல்கள் கட்டவும், பழுதுபார்க்கவும் ஏற்படுத்திய துறைமுகம், இன்றைக்குப் பிரெஞ்சு கிழக்கிந்திய கும்பெனியின் ஆபத்துதவி. மருத்துவமனை, பண்டகசாலை, பெரித வீதிகள், நிருவாகக் கட்டிடங்கள் என எழுப்பப்பட்டு, போர்லூயி மற்றவர்களை ஆச்சரியப்படுத்திக்கொண்டிருக்கிறது.

குவர்னரின் உதவியாளர், நெருங்கி நின்றார்.

‘ம்… ‘

‘குவர்னர் பெருமான் மன்னிக்க வேணும். தங்களைச் சந்திக்கவேணுமென்று மிஸியே போல் வெகு நேரமாய் காத்திருக்கிறார். ‘

‘வரச்சொல் ‘

‘உள்ளே வரலாமா ? ‘

‘வாருங்கள்..! வாருங்கள்! உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன். வெகு நேரமாய் காத்திருந்தீர்களோ ? ‘

‘இல்லை சற்றுமுன்னர்தான் வந்திருந்தேன் ‘

இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள். குவர்னருக்கும், போல் பிரபுவுக்கும் உள்ள உறவு குவர்னருக்கும் தீவின் குடிமகனுக்கும் உள்ள உறவிலும் வலிமையானது. இருவருக்கும் பூர்வீகம் பிரெஞ்சு தேசத்து சேன்-மாலோ நகரம். இருவருமே சிறுவயதிலே கடற் பயணத்தை விரும்பி மேற்கொண்டவர்கள், கூட்டாக வியாபாரம் செய்பவர்கள், நண்பர்கள். குவர்னரின் உதவியாளர் குறிப்பறிந்து ஒரு விருந்தினர் நாற்காலியைக் கொண்டுவந்து மெதுவாக இட்டார். போல்பிரபு குவர்னருக்கு நன்றி சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.

‘குழந்தை லூயி-பிரான்சுவா எப்படி இருக்கிறான் ?, ஷர்லோத் நலமா ? ‘

‘சேசு அருளால் இருவரும் நலமாகவே உள்ளார்கள் ‘

‘பண்ணை வேலைகள் எப்படி நடக்கின்றன ? மிஸியே தெலக்குருவா பண்ணையிலிருந்து தப்பிய மரூன் பிடிபட்டானா ? ‘

‘பிடிபட்டிருந்தால் குவர்னர் அலுவலகத்திற்கு இந்த நேரம் தெரிவித்திருப்போமே. எங்களிடமே பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் கும்பெனி நிம்மதியாகவிருக்கிறது. நமது தேசத்திலிருந்து ஏதேனும் புதிய செய்திகள் ?

‘உங்களிடம் சொல்வதற்கு தயக்கங்கள் ஏதுமில்லை ‘.

பணியாள் ஒருவன் இரு மதுக் குப்பிகளில் உள்ளூர்ச் சாராயத்தை அளவாக ஊற்றி மேசையில் இடையூறின்றி வைத்துவிட்டு மெல்ல அகன்றான். இருவரும் கைகளில் மதுக்குப்பிகளை எடுத்து மற்றவருடையதை இலேசாகத்தொட்டு ‘பிரெஞ்சு முடியாட்சிக்காக ‘ என பரஸ்பரம் வாழ்த்திக் கொண்டார்கள்.

‘என்ன சொல்ல வந்தேன் ? ‘ குவர்னர்.

‘சொல்வதற்குத் தயக்கங்கள் ஏதுமில்லை என்று ஆரம்பித்தீர்கள் ‘, போல் பிரபு.

‘ஆம். உமக்கு அனைத்தும் தெரியும். இந்தத் தீவுக்கு நான் செய்துள்ள காரியங்களையும் நீர் அறிவீர். ஆனால் கும்பெனி என்னை முழுமையாக நம்புவதில்லை. அரசாங்கமும் அப்படியே. புதுச்சேரியை மராத்தியர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு என்னுடைய படைகள் அங்கு போய்சேருவதில் தாமதமேற்பட்டாலும் மலபார்க் கடற்கரையில் மாஹே பகுதியை நாயர்மார்களின் தொந்தரையிலிருந்து காப்பாற்றியிருந்தேன். அவர்களோ என்னுடைய புதுச்சேரிப் பயணம் கும்பெனிக்காக அல்லவென்றும் சொந்த காரணங்களுக்காகவென்றும் நினைத்தார்கள். இதற்குக் காரணமானவன் யாரென்று தகவல் வந்திருக்கிறது ‘

‘யார் ? ‘

‘வேறு யாராக இருக்க முடியும் ? புதுச்சேரி குவர்னராக இருக்கின்ற துய்ப்ளெக்ஸ்தான் (Duplex) ‘

‘இங்கிருந்த பெனுவா துய்மா (Benoit Dumas), புதுச்சேரி குவர்னர் பொறுப்பிலிருந்த லெனுவார் (Lenoir) இடத்திற்குச் சென்றபோது சந்திர நாகூர் குவர்னராகவிருந்த துய்ப்ளெக்ஸ் பிரெஞ்சுத் தீவு குவர்னராக வேண்டுமென்று நினைத்தான். எம்மை தீவின் குவர்னராக நியமிக்கக்கூடாதென குவர்னர் துய்மாவிற்குக் கடிதமும் எழுதினான். எனினும் நடப்பதை அவனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதுமுதல் என்னிடம் பகைமை பாராட்டுகிறான். ‘

‘… ‘

அது அப்படியென்றால், ஸ்பெயினுக்கும் பிரித்தானிய அரசுக்கும் நடக்கின்ற யுத்தம் இந்தியாவிலும் இந்து மகா சமுத்திரத்திலும் எதிரொலிக்கும் என்கின்ற கவலை எப்போதும்போல இருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் ஆதரவாளர்களான நாம் வெகுகாலம் போர் நமக்கானதல்ல என்றிருக்கமுடியாது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் கடற் துறைக்கு எழுதிய விபரம் ஞாபகம் உள்ளதா ? வேண்டிய ஆயுதக்கப்பல்களை கொடுத்துதவுமாறு வேண்டினேன். நான் எட்டு கப்பல்கள் கேட்டிருந்ததற்கு நமது அரசாங்கம் ஐந்தைக் கொடுத்துவிட்டார்கள். நமது தேசத்திலிருந்து தீவிற்கு வந்துசேர்ந்தபோது, மராத்தியர்கள் புதுச்சேரியை மிரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களது புதுச்சேரி கோட்டை முற்றுகை தோல்வியில் முடிந்தது. நான் அங்கே சென்றது மாஹே பகுதியைக் காப்பாற்ற உதவிற்று.

நமக்கும் ஆங்கிலேயருக்கும் உள்ள போர் அபாயம் இந்திய உபகண்டத்தில் இப்போதைக்குக் கூடுதலாகவே உள்ளது. இந்தியர்கள் அண்ணன் தம்பிகளென்றாலும், ஆள்வதற்காகக் அடித்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். இருக்கின்ற ராஜாங்கங்கள் ஆங்காங்கே ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள நம்மவர் கால்களிலும், ஆங்கிலேயர் கால்களிலும் விழுந்து அபயம் கேட்டுத் திரிகின்றார்கள். இதனை எதிர்பார்த்தே தீவினை வலிமையான துறைமுகமாக உருவாக்க விரும்பினேன். எந்த நேரமும் நமது கப்பல்கள் இந்தியாவுக்கு விரைந்து சென்று நமது படைகளுக்கு உதவத் தயார் நிலையிலிருக்கவேணுமென்று விரும்பினேன். ஆனால் நமது அரசாங்கம், எனக்கு ஒத்துழைப்பதில்லை. ‘

கூறிமுடித்த ஆவேசத்துடன், மதுக்குப்பியிலிருந்த சாராயத்தை ஒரு மிடறு குடித்து உலர்ந்திருந்த நாவை ஈரப்படுத்திக்கொண்டார். வெண்ணிற திரவம் சிவந்த தொண்டையில் ஒரு பெரிய புழுவைப்போல மெல்லப் பயணித்து இறங்கியது. போல் அஞ்ஞெலும், இப்போது தன் பங்கிற்கு ஒரு மிடறு விழுங்கி குப்பியை மேசை மீது வைத்தார்.

‘இந்த விஷயத்தில் நமது அரசாங்கத்தின் மன நிலைதான் என்ன ? ‘

‘அவர்களுக்குப் பிரான்சுதேசத்து பிரச்சினை, இந்திய உபகண்டத்திலோ, இந்து மகா சமுத்திரத்திலோ பரவாமல் பார்த்துக் கொள்ள வேணுமென்று நினைக்கிறார்கள் அதற்காக ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனியின் முன்னால் அதிகாரி ஹென்றி லோத்தர் (Henry Lowther) என்பவனைக்கொண்டு சமதானம் பேசியிருக்கிறார்கள். அவன் சென்ற வருடம் முழுவதும் லண்டனுக்கும் பாரீஸுக்குமாக பயணம் செய்து, இறுதியாக, லண்டனுக்கேத் திரும்பிவிட்டதாகக் கேள்வி. இப்போது, மீண்டும் இந்து மகாசமுத்திரத்தில் ஆங்கிலேயர்கள் போர்க் கப்பல்களின் ஒரு பிரிவை அனுப்பியுள்ளதாக அறிகிறேன்.

‘.. ‘

இவ்வாறு இருக்கையில் நமது அரசாங்கம், இங்கிருக்கும் போர்க்கப்பல்களைத் திருப்பி அனுப்பவேணுமென்று எழுதுகிறது. நான் பதிலுக்குக் குவர்னர் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக எச்சரித்து எழுதினேன். எனக்குச் சமாதானம் சொல்கின்றவகையில், நமது தேசத்திலிருந்து கடிதாசி வந்திருக்கிறது. ‘

‘புதுச்சேரி செய்திகள் ஏதேனும் உண்டாா ? ‘

‘நெப்த்யூன் என்கின்ற கப்பல் இந்த நேரம் அங்கே பாய்விரித்துப் புறப்பட்டிருக்கவேணும். வந்தபிறகே தகவல்கள் அறிய முடியும். ‘

‘பெர்னார் குளோதன் இந்தத் தெய்வானை என்கின்ற பெண்னை மண முடிக்காமற் பார்த்துக் கொள்ளவேணும். நீங்கள் உங்கள் நண்பர் குளோஸ் ரிவியேருக்கு எழிதியிருந்த கடிதம் நினைவிலிருக்கின்றதா ? ‘

இச்சம்பவம் அவரது கடந்த காலத்தைச் சார்ந்தது. செல்வி புவாலி (Mlle de Poily) என்கின்ற பெண்ணை இவருக்கு நிச்சயம் செய்திருக்க இவர்கப்பலேறினார். அவளோ காத்திருத்துவிட்டு வேறொருவனோடு போய்விட்டாள். லா பூர்தொனேயின் நண்பர், அப்பெண்ணிடம் இவர் கொண்டிருந்த காதலை சிலாகித்து எழுதியதோடு நடந்த சம்பவத்திற்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். அக்கடிததத்திற்குப் பதிலெழுதிய லாபூர்தொனே நடந்த சம்பவத்தால் தனக்கு வருத்தமேதும் இல்லையென்றும் தனக்குக் ‘காதலைவிடக் காரணம் பெரிது, காரணத்தைவிட கெளரவம் பெரிது ‘ எனத் தெரிவித்திருந்தார். இதனைச் சில பண்ணை பிரபுக்களும், மதகுருமார்களும் அறிவார்கள்.

குவர்னர் முகத்தைச் சுளித்தார். உண்மையில் அவரது வாழ்க்கையில் நடந்தத் துர்ச்சம்பவம் அது.

‘நமக்கு விருப்பமில்லாததுபோல, காமாட்சிஅம்மாளுக்கும் இந்த விடயத்தில் பிள்ளைகளிடத்தில் கருத்துவேறுபாடு உள்ளது அந்தப் பெண்மணிக்கும் தனது மகள் ஒரு பறங்கியனை மணமுடிப்பதில் விருப்பமில்லாதவளாக இருக்கிறாள். எனவே இப்படியானத் திருமணம் ஒருபோதும் நடக்காது. தவிர இதையெல்லாம் உத்தேசித்தே அவனைப் புதுச்சேரிக்கு அனுப்பினேன். இது முழுவிபரமும் பின்னர் தெரிவிக்கிறேன். நாம் நினைத்தபடி நடக்கும். முக்கியமாய் ஒன்றை உம்மிடம் சொல்லவேணுமென்று நினைத்தேன். உம்முடைய புத்திரனை எச்சரிக்கைச் செய்யும். பெண்கள் விடயத்தில் அவன்மீது ஏராளமான புகார்கள் வருகின்றன. உம்முடைய பெண் பிரிஜித்திற்கு பெர்னார் குளோதனை மணம் முடித்துவைப்போம். கவலைப்படாதேயும் ‘

‘நண்பர் குவர்னராகவும், உறவுக்காரராகவும் இருக்கையில் எனக்கென்ன கவலை. புதுச்சேரியிலிருந்து அடிமைகள் குறித்தத் தகவல்கள் கூட அநேகமாக அங்கிருந்து கப்பல் வந்த பிறகென்றுதான் நினைக்கிறேன். ‘

‘கப்பல் வருகின்றவரை நாம் காத்திருக்கவேண்டுமென நீர் அறியமாட்டாரா ?

‘உண்மைதான். நான் புறப்படவேணும். என் மனைவியும் பிள்ளைகளும், நண்பர் குழந்தையையும், குழந்தையின் தாயாரையும் பார்த்துவரவேணுமென்று பிரியப்படுகிறார்கள். எப்போது வரலாம் என்று ஆட்கள் மூலம் தவல் சொல்லி அனுப்புங்கள். புறப்படுகிறேன். ‘

‘அதற்கென்ன, சொல்லி அனுப்புகிறேன் அவசியம் தாங்கள் குடும்பத்துடன் வரவேணும். ‘ ‘

போல் அஞ்செல் புறப்பட்டுச் செல்ல காமாட்சி அம்மாளும் , சீனுவாச நாயக்கரும் குவர்னர் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள்.

/தொடரும்/

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா