பழையபடி நடந்திடுவேன்..

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

செங்காளி


(என் தாயார் அவர்களின் நினைவாக)

ஒவ்வொரு தடைவையும் டெட்ராய்ட்டிலிருந்து இந்தியா போனவுடனே, நாங்கள் செய்யும் முதல் வேலை கிராமத்திற்குச் சென்று அங்குள்ள எங்கள் குலதெய்வத்தை வழிபடுவது.

அடுத்ததாக உறவினர்கள், நண்பர்கள் இவர்கள் குடும்பங்களில் யாரும் காலமாகிவிட்டிருந்தால் அந்தக் குடும்பங்களுக்குச் சென்று துக்கம் விசாரித்து வருவது. இதில் என் தாயார் மிகவும் கண்டிப்பாக இருப்பார். கல்யாணம் காட்சிக்குப் போகாவிட்டாலும் இந்த மாதிரி சமயங்களில் போய் ஆறுதல் சொல்லிவருவது முக்கியம் என்பார். உறவுகள் நட்புகள் தொடர்வதில் மிகவும் கவனமாக இருப்பார்.

பிறகு சுற்றத்தார் வீடுகளுக்கும் மற்ற இடங்களுக்கும் போய் வருவது. இதில் என்னைவிட என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தது என்னுடைய மாமா அதாவது என்னுடைய ஒரு அத்தையின் கணவரான பொன்னுசாமியை நாங்கள் பார்த்துவருவது. அம்மாவுக்கு என்னமோ தன்னுடைய சொந்தத் தம்பிகள் இரண்டு பேர், மற்றும் என்னுடைய மற்ற மூன்று அத்தைகளின் கணவன்மார்கள் இருந்தாலும் எல்லாரையும்விட இவர் மேல்தான் மிகவும் அன்பும் மதிப்பும். அதற்குக் காரணமும் உண்டு.

பொன்னுசாமி மாமா உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக வேலை பார்த்து இப்பொழுது ஓய்வில் இருக்கிறார். பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருப்பார். வேட்டி, அரைக்கை சட்டை, துண்டு இவைகள்தான் அணிவார். எல்லாமே கதரில்தான் இருக்கும். ஆனால் எந்தக் கட்சியையும் சேர்ந்தவரல்ல. எப்பொழுதும் சிரித்த முகமாக இருப்பார். சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடில்லாமல் எல்லாரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் பேசுவார், பழுகுவார். மிகவும் முற்போக்கான சிந்தனையுடையவர்.

அவர் பல பள்ளிகளில் தலைமையாசிரியராக இருந்திருக்கின்றார். இப்படி அவர் வெவ்வேறு பள்ளிகளில் வேலை பார்த்ததற்குக் காரணம் அந்தந்த ஊர் மக்கள்தான். அவர் ஒவ்வொரு பள்ளியையும் மிகவும் திறம்பட நிர்வாகம் செய்து மாணவர்களிடையே ஒழுக்கத்தையும் படிப்பில் நல்ல முன்னேற்றத்தயும் கொண்டுவருவதைப் பார்த்து, தங்கள் ஊர் பள்ளிக்கு அவர் வரவேண்டுமென்று பெரிய இடத்தில் சொல்லி மாற்றல் வாங்கி அவரை வரவழைத்துவிடுவார்கள்.

எங்கள் ஊரான நாமக்கல்லிலிருந்து ஒரு பத்து கல் தொலைவிலுள்ள ஆமையூரில் உள்ள பள்ளியில் அவர் இருந்தபொழுது அங்கு அவர் செய்த பல முன்னேற்றங்கள் எனக்கு இன்றும் நன்றாக ஞாபகத்தில் இருக்கின்றன.

அந்தப் பள்ளியில் அதற்குப் பக்கத்திலுள்ள கிராமங்களிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகள்தான் அதிகமாகப் படித்தனர். பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை தரை மட்டமாக இருந்த நிலமையைப் போக்கி இரண்டே ஆண்டுகளில் முதல்தரமான முடிவுகள் வரும்படி செய்தார். தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த அவர், ஆங்கிலத்தில் பேச, கேட்க அதிகம் வாய்ப்பில்லாத கிராமத்துச் சிறார்களான அவருடைய மாணவர்களுக்கு அதில் மிகவும் திறமையும் ஆர்வமும் வர வழி செய்தார்.

மாணவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டின்மேல் இருக்கும் ஆர்வத்தைக்கண்டு அதற்கு வேண்டிய மைதானத்தை நன்கு அமைத்ததோடு, சிறந்த விளையாட்டு வீரர்களிடம் தங்கள் பள்ளியைப்பற்றிச் சொல்லி, அவர்களை தங்கள் பள்ளிக்கு அழைத்துவந்து மாணவர்களுக்கு பயிற்சியும் உற்சாகத்தையும் கொடுக்கச் செய்தவர்.

அந்தப் பள்ளியைச் சேர்ந்த பெரிய நிலப்பரப்பு எதற்கும் பயன்படுத்தப்படாமல் தரிசுபோல் இருந்தது. பள்ளிக் கிணற்றில் அப்பொழுது தண்ணீர் நிறைய இருந்தது. இவர் என்ன செய்தாரென்றால் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் இவர்கள் உதவியோடு, நிலத்தை வெட்டித்திருத்தி இரண்டு போகம் நெல்சாகுபடி செய்ய வழி செய்ததோடு, வேண்டிய காய்கறித் தோட்டத்தையும் அமைத்து மாணவர்களுக்குச் சுவையான மதிய உணவு கிடைக்கும்படி செய்தார். பள்ளியின் உள்ளேயும் வெளியேயும் மரங்களையும் செடிகளையும் நட்டுப் பள்ளியை ஒரு பூஞ்சோலையைப்போல மாற்றினார்.

மாணவர்களுக்கு எல்லாச் சுதந்திரத்தையும் கொடுத்திருந்தாலும் அவர்களின் ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கண்டிப்பாக இருந்தார்.

இப்படி எல்லா வேலைகளிலும் பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்கைளையும், ஊர்மக்களையும் உற்சாகத்துடன் ஈடுபடும்படி செய்த அவருடைய முயற்சிகளுக்காகக் கல்வி அதிகாரிகளாலும் மக்களாலும் மிகவும் பாராட்டப்பட்டவர்.

தனது ஐம்பத்தைந்து வயது வரை எந்தவிதமான நோயுமின்றி இருந்த அவருக்கு திடாரென்று நோயில் விழுந்து, வலது காலிலும் கையிலும் உணர்ச்சியையிழந்த நிலையை அடைந்தார். மூன்று மாதங்கள் படுக்கையில் இருந்த அவர், கையும் காலும் முழுமையாகச் சரியாகாத நிலையிலும் பள்ளிக்குப் போக விரும்பினார். ஆனால் மருத்துவர்கள் மிகவும் கண்டித்ததினால் இப்பொழுது முழு ஓய்வு எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கின்றார்.

அவருடைய மகன் மாறன் திருமணம் செய்துகொண்டு இப்பொழுது மும்பையில் வேலையில் இருக்கின்றார். அப்பாவும் மகனும் சகோதரர்களைப் போலத்தான் பழகுவார்கள். தந்தையின் பேரில் அளவற்ற அன்பு கொண்டிருந்த அவர், கூடவே இருந்து தன் அப்பாவைக் கவனித்துக்கொள்ளலாம் என்று மும்பை வேலையை விட்டுவிட்டு ஊருக்கே வர முயற்சி செய்ய, மாமா அதைத் தடுத்துவிட்டார். ஆனாலும் மாறன் மாதம் ஒருமுறை தவறாது ஊருக்கு வந்து மாமாவுக்கு வேண்டியதையெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டுப் போகின்றார். மற்றபடி எந்த அவசர உதவியென்றாலும் என் பெற்றோர்களும் அவருடைய நண்பர்களும் பார்த்துச் செய்துவருகின்றனர்.

அவர் மகள் பூமாலையினால்தான் அவருக்கு மிகப்பெரிய இடி (அது ஒரு சோகமான கதை). எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கையை நடத்திவருகின்றார்.

இன்றைக்கு அவரைப் பார்க்கத்தான் என் துணைவி சிவகாமியும் நானும் எங்கள் குழந்தைகளான எட்டு வயது பாரி ஐந்து வயது நிலா இவர்களோடு புறப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஊருக்கு வந்த அடுத்த நாளே தொலைபேசியில் அவருடன் நான் பேசியிருந்தாலும் அம்மாவை மறுபடியும் மாமா எப்படி இருக்கின்றார் என்று கேட்டேன். அதற்கு அம்மா, ‘நன்றாகத் தேறி வர்றார்.. ஆனா பாவம் உங்க அத்ததான் கொஞ்சம் சங்கடப்பட்டுக்கிட்டிருக்குது.. ‘ என்றார். ‘அத்தையா..ஏன் என்ன.. ‘ என்றேன். ‘எல்லாத்தையும் நீங்களே போயி பாத்திட்டு வாங்க ‘ என்று சொல்லி அம்மா எங்களை வழியனுப்பி வைத்தார்.

மாமாவின் ஊர் நாமக்கல்லிலிருந்து ஆறு கல் தொலைவிலுள்ள கணவாய்ப்பட்டி என்னும் கிராமம். பெயருக்கேற்றபடி இரண்டு பெரிய கரடுக்குகளுக்கு இடையே போகும் சாலை வழியாகத்தான் அந்தக் கிராமத்துக்குப் போகவேண்டும். நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்தபொழுது கிட்டத்தட்ட இரவு மணி ஏழு ஆகிவிட்டது.

வீட்டின் முன்கதவு திறந்தே இருந்தது. எல்லாரும் உள்ளே நுழைந்தபொழுது அத்தை கையில் ஏதோ பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சமையலறயிலிருந்து பின்புறத் தாழ்வாரத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். நாங்கள் வரும் சத்தத்தைக் கேட்டுத் திரும்பி எங்களைப் பார்த்தவுடனே, ‘வாப்பா நடனு, வாம்மா ‘ என்று வரவேற்றவர், தன் கையிலிருந்த பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, பாரியையும் நிலாவையும் அணைத்துக்கொண்டார். எங்களைக் கூட்டி வந்த கார் ஓட்டுநர் நசீரைப் பார்த்துவிட்டு, ‘வாப்பா நசீர் ‘ என்றார். ‘வாங்க..மாமா சாப்பிட்டுக்கிட்டிருக்கிறாரு ‘ என்று சொல்லிவிட்டுக் கீழே வைத்த பாத்திரத்தை ஒரு கையில் எடுத்துக்கொண்டு மறு கையில் நிலாவின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டே, நாங்கள் பின்தொடர, நடந்தார்.

பின்தாழ்வாரத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்தவாரு தனக்கு முன்னாலிருந்த மேசை மீது வைத்திருந்த தட்டிலிருந்து மாமா சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு எதிர்த்தாற்போல் தாழ்வாரத்தில் பத்து பதினைந்து சிறுவர் சிறுமியர்கள் இலைபோட்டுச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். வயது ஆறிலிருந்து பத்து பன்னிரண்டுக்குள் இருக்கும் அவர்களுக்கு. எங்களைப் பார்த்தவுடன், ‘வாப்பா, வாம்மா ‘ என்ற மாமா, பாரியையும், நிலாவையும் காட்டி அந்தச் சிறுவர்களிடம், ‘பசங்களா அமெரிக்காவிலிருந்து வந்திருக்காங்கன்னு சொன்னனில்ல, இவுங்கதான், இவரு பாரி, இந்தக்குட்டி பேரு நிலா ‘ என்று அறிமுகப்படுத்தினார். அதற்குள் அத்தை, ‘சரி நீங்க சாப்பிட்டு முடிங்க..இவுங்க கூடத்திலே உட்காந்திருக்கட்டும் ‘ என்றார்.

நாங்கள் எல்லோரும் கூடத்தில் வந்து அமர்ந்தோம். சிறிது நேரத்தில் மாமா சாப்பிட்டுவிட்டு தட்டிலேயே கைகழுவிவிட்டு தடியை ஊன்றிக்கொண்டு உள்ளே வந்தார். அவரை பிடித்துக்கொள்ள ஓடிய நசீரையும் தடுத்துவிட்டு மெதுவாக நடந்து வந்து அமர்ந்தார். ‘நசீர்.. யாரும் பிடிச்சிக்காம நடந்தாத்தான் நல்லது..அப்பத்தான் சீக்கிரமா நல்லா நடக்கமுடியும் ‘ என்று நசீரின் மனம் புண்படாமலிருக்கும் வகையில் சொன்னார்.

பிறகு நான் அவர் உடல் நலம் விசாரிக்க, ‘இன்னும் ஆறு மாசத்திலே பழையபடி நடக்க ஆரம்பித்திடுவேன் ‘ என்று மிகுந்த மன உறுதியுடன் சொன்னார். இதற்குள் வெளியே இருந்த சிறுவர்களும் உள்ளே வந்தனர்.

சிறிது நேரம் கழித்து அத்தை, ‘சரி வாங்க..எல்லாரும் சாப்பிட்டிட்டு வந்து பேசலாம் ‘ என்று எங்களையெல்லாம் ஒரு பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றார். சிவகாமி, நான், நசீர் மூவரும் உட்கார, பாரியும் நிலாவும் தங்களுக்கு வடை மட்டும் போதும் என்று சொல்லிவிட்டு ஆளுக்கு இரண்டு எடுத்துக்கொண்டு கூடத்திற்கு வந்துவிட்டார்கள். எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு அத்தையும் சாப்பிட உட்கார்ந்தார். சாப்பாட்டுக்கிடையில் நான் அத்தையைப் பார்த்துக்கேட்டேன், ‘யாருங்க அத்தை இந்த பசங்கெல்லாம் ? ‘.

சற்று நேரம் அமைதியாகவிருந்த அத்தை சொன்னார், ‘நம்ம ஊரு சேரிலே இருக்கிற பசங்கப்பா. பாவம் பகல்ல வேலைக்குப் போயிடறதுனாலெ கொஞ்சம் பேருக்கு பள்ளிக்கூடம் போக முடியிறதில்லை. போறவிங்களும் சரியாப் படிக்கிறதில்ல.. அதனாலத்தான் மாமா எல்லாரையும் இங்கே ராத்திரிக்கு வரச்சொல்லி பாடம் நடத்தறாரு. உங்களுக்குத்தான் தெரியுமே.. அவரால சும்மா இருக்க முடியுமாதுன்னு ‘

‘அது சரீங்க அத்தை..ஆனா தினம் அவிங்களுக்கு சாப்பாடும் இங்கெதானா ? உங்களாலெ மாமாவையும் பாத்துக்கிட்டு எப்படி எல்லாருக்கும் சமைச்சுப்போட முடியுது ? ‘

‘அதெல்லாம் ஒண்ணும் பெரிசில்லப்பா.. நம்ம தோட்டக்காரப் பையனும் ஒரு பொண்ணும் வந்து எல்லா வேலையும் செஞ்சு கொடுத்திட்டுப் போயிருவாங்க..எனக்கு என்ன மாமா அவருக்குப் பிடிச்சமாதிரி எல்லாத்தையும் செஞ்சுகிட்டு நிம்மதியாக இருக்கணும்..அதான் வேணும்..ஆனா ஊர்க்காரங்கதான் ஒருமாதிரியா நடந்துகிறாங்க..அதென்ன சேரிப்பசங்களையெல்லாம் வீட்டுக்குள்ளே விட்டுக்கிட்டுன்னு சொல்லிக்கிட்டு முன்னமாதிரி நம்ம வீட்டுக்கு வர்றது போறது இல்ல..இதை மாமாகிட்டச் சொன்னா அவரு ‘முட்டாளுங்க..அவிங்க வராம நமக்கு என்னம்மா கொறைஞ்சு போச்சுங்கிறார் ‘ ‘

இதைச் சொல்லிவிட்டு அத்தை அமைதியாக இருந்தார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சிவகாமி ‘அப்பா செய்யறதில என்ன தப்புங்க அம்மா..அதுவும் இந்தக் காலத்திலெ போயி ‘ என்றார். அதற்கு அத்தை ஒன்றும் பதில் சொல்லாமல் மென்மையாகச் சிரித்தார். மாமாவின் மனம் கோணாமல் எல்லாவற்றையும் செய்து வரும் அத்தையைப் பார்க்க பெருமையாகவும் அதே சமயத்தில் சிறிது கவலையாகவும் இருந்தது.

எல்லாரும் சாப்பிட்டு முடித்தவுடனே மறுபடியும் கூடத்திற்கு வந்தோம். ஏதொ ரொம்ப நாள் பழகியமாதிரி பாரியும் நிலாவும் அங்கிருந்த சிறுவர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். பாரி ஏதொ சொல்ல அதை மற்றவர்கள் ஆவலோடு கேட்டுக்கொண்டிருக்க, நிலா மட்டும் ஒரு புத்தகத்தை படித்துக்காட்டச் சொல்லி தன் பக்கத்திலிருந்த சிறுமியை துளைத்தெடுத்துக்கொண்டிருக்க இதையெல்லாம் சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார் மாமா. நாங்கள் வந்ததைப் பார்த்தவுடனே நிலா, ‘இவங்க நல்லா தமிழ் படிக்கிறாங்க அப்பா ‘ என்று சொல்ல எல்லோரும் சிரித்தனர்.

மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு நாங்கள் புறப்பட்டோம். ‘எதாச்சும் வாங்கிக்கிட்டு வரட்டுங்களா அத்தை ‘ என்று நான் கேட்க, ‘அதெல்லாம் ஓண்ணும் வேண்டாம்பா.. ‘ என்றார். ‘மாமா உங்களுக்கு ‘ என்று கேட்க, சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘ஓண்ணு செய்யுங்க..இந்தப் பசங்களுக்கெல்லாம் பேனா பென்சில் புத்தகம் எல்லாம் கொஞ்சம் வாங்கிக்கொடுத்திட்டுப் போங்க.. ‘ என்றார். என்னென்ன வேண்டுமென்று கேட்டு விபரங்களை வாங்கிக்கொண்டு, ‘சரீங்க மாமா அப்படியே செய்யறோம்..போயிட்டு இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வர்றோம் ‘ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டோம்.

போகும் வழியில் சிவகாமி, ‘பாவங்க..அம்மா எப்படி இவ்வளவு பொறுமையா எல்லாம் செய்யறாங்களோ..அப்பாவும் எவ்வளவு தைரியமா இருக்கிறாரு ‘ என்று சொல்லி ஆச்சரியப்பட்டார். ஆனால் அவர்களை நன்கு தெரிந்த எனக்கு இது ஒன்றும் ஆச்சரியமாகப்படவில்லை. பாரி, ‘பாட்டி is great ‘ என்றும் நிலா, ‘தாத்தா is cool ‘ என்றும் சொல்லி அவர்களுடைய அம்மா சொன்னதை ஆமோதித்தனர்.

————————————————————————————

இதுவரைக்கும் ஒருவரைப்பற்றி உண்மையாக நடந்த, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத்தான் மேலே விவரித்துள்ளேன். சிலரின் பெயர்களையும் ஊர்களையும் மட்டும் மாற்றியுள்ளேன்.

———————————————————————————–

natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி