திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்
வீட்டிலிருந்து புறப்பட்டுப் போகிற வழியில் எதிரே வருகிற வாகனங்களில் கவனத்தைச் செலுத்த விடாமல் இரண்டு யோசனைகள் அவனை இழுத்துக் கொண்டிருந்தன. ஒன்று – மாமாவை சமாளிக்க வேண்டும். மற்றது – மாமாவைக் கொண்டு அம்மாவைச் சமாளிக்க வேண்டும்.
முடியும் என்றே தோன்றியது. தான் இப்போதெல்லாம் மிகச் சாதுரியமாகச் செயல்படுவதாக, அதாவது, சொந்த வீட்டிலேயே சரமாரியாகப் பொய் சொல்லி நாடகம் போடுவதில் கைதேர்ந்து விட்டதாக அவன் நினைத்தான். அது நியாயமில்லையென மனம் குறுகுறுத்த வேளையில் திருவள்ளுவரைக் கொண்டு வந்து முன்நிறுத்தி பொய் சொல்வதற்கு விதிவிலக்குண்டு என்று அவர் சொன்னதை சாதகமாக்கி தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவும் முடிந்தது.
நாலைந்து நாட்களாக மாமாவைப் பார்க்கப் போகவில்லை. அவர் முன்ன மாதிரியில்லை. அப்பெல்லாம் அவரைப் பார்த்தாலே போதும் அவரது உற்சாகம் மற்றவரில் டக்கென்று தொற்றிக் கொள்ளும். அப்படியொரு வசீகர ஆளுமை. முன்னுக்கு நின்றாரென்றால் கை கட்டச் சொல்லும். தோற்றம் போலவே உள்ளடக்கமும் உயர்வு. வஞ்சகம் இல்லாத குணம். சொல்லும் செயலும் நேராய் இருக்கும். சுறுசுறுப்புக்குப் பஞ்சமிருந்ததில்லை. எந்த இராயிருட்டியிலும் அவசரத்துக்கு ஓடி வர அவரால் முடியும். உணவை எடுத்துக் கொண்டாலும் உறைப்பு புளிப்பு எல்லாமே தூக்கலாயிருக்க வேண்டும்.
இப்ப எல்லாமே மட்டு. கண்டதையும் வாயில் வைக்க முடியாது. உப்பு புளிப்பு உறைப்பு எண்ணையில் பொரித்தது எதுவுமே கண்ணில் காட்டக் கூடாது. எல்லாத்திலும் பத்தியம். நினைச்ச மாதிரி வெளிய திரிய உடம்பு இடம் கொடுக்காது மட்டுமல்ல வெளிக்கிட வீட்டிலும் விடமாட்டார்கள். இரத்தக் கொதிப்புக்கு ஐஞ்சாறு வகைக் குளிசை நேரந் தவறாது போட வேண்டுமென்ற கட்டளை தொடர்ந்து அமுலில் இருக்கிறது. உடல் ஆரோக்கியம் குன்றினால் மனமும் துவண்டு போவது இயற்கை. இந்த நிலைமையில், முன்னர் போல எடுத்த எடுப்பில் அடிடா பிடிடா என்று எந்த விசயத்தையும் சொல்ல முடியாது. விசயத்தை அவரிடம் ஆறுதலாகச் சொல்லும் மார்க்கத்தை கணக்குப் போட்டுக் கொண்டே அவன் தெருவின் ஓரமாக நடந்தான்.
சந்தியில் திரும்பினால் ஒரு சில்லறைக் கடையும் நாலு சிற்றோடு வீடுகளும் ஒரு கிட்டங்கியும் தள்ளி மாமாவின் வீடு. மாமா வீடு மனதில் வருகிற போது வாசலோடு ஒட்டி தெருவிற்கும் நிழல் கொடுக்கும் மாமரந்தான் முன்னுக்கு நிக்கும். பள்ளிக்கூடப் பொடியளோடு சேர்ந்து மாங்காய்க்குக் கல்லெறிந்து வீட்டு ஓடுகளில் பட்டு, மாமியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது எப்படி மறக்கும்!
மாமா கல்யாணம் கட்டிய புதிதில் சாவகச்சேரி சந்தையிலிருந்து கொண்டு வந்து நட்ட கறுத்தக்கொழும்பான் ஒட்டுக்கன்று அது. அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அங்கு நிற்கிறது. தெருவிற்கும் பக்கத்து வீட்டிற்கும் கொப்புகளைப் பரப்பி அட்டகாசமாக நிற்கிறது. சித்திரை வைகாசியில் கொள்ளையாய்க் காய்க்கத் தொடங்கி விடும். ஏறி ஆயத்தான் அவனுக்கு விருப்பம். மாமா நின்றால் ஏறவிட மாட்டார். கொக்கைச் சத்தத்தால் முற்றினதாகப் பறித்துக் கொடுப்பார். காய்க்கும் காலம் முற்றுப் பெறும் வரை அவனது சட்டையில் படுகிற மஞ்சள் கறைகளை போக்குவதற்கு அம்மா மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறாள்.
பக்கத்து வீட்டு விக்கினேஸ்வரன் கோட் முதலியார். மாமரத்தின் இருப்பினால் அவருக்கு மாமாவில் கொஞ்சம் கடுப்பு. கொப்புகள் அத்துமீறி தனது வளவின் வான்பரப்புக்குள் வந்து விட்டதாகவும் காகங்கள் எச்சமிட்டு முற்றத்தை நரகலாக்குவதாகவும் கொட்டுப்படுகிற காய்ந்த சருகுகளை கூட்டிக்கூட்டி விளக்குமாறு தேய்ந்து போவதாகவும் மாமாவிடமே தனது விசாரத்தை வெளிப்படுத்திக் கொண்டார் அடுத்த நாளே கூலிக்கு ஆள் பிடித்து அந்தப் பக்கம் போன கொப்புகளை வெட்டி இடத்தையும் துப்புரவாக்கிக் கொடுத்தார் மாமா. இதனால் விக்கினேஸ்வரனின் விசாரம் குறைவதற்கு மாறாக விசுவரூபம் எடுத்தது.
மாமியோடு சளசண்டியாகப் பழகும் தனது மனைவியை நசுக்கிடாமல் தூது அனுப்பினார். மாமரம் ஆழமாக வேர் விட்டு அத்திவாரத்தை உடைத்து விடும், அதை அடியோடு வெட்டிவிட்டு அந்த இடத்தில் கப்பல் வாழை வைத்து வீட்டைக் காப்பாற்றிக் கொள் என்று கதையோடு கதையாக மாமியிடம் வத்தி வைத்து விட்டு வந்தாள் அவள். அன்றைக்குத்தான் சற்று ஆறுதலாக புதுக் கோணத்தில் மாமரத்தைப் பார்த்தாள் மாமி. வானத்தை இந்த அளவிற்கு வளைத்துப் பிடித்திருக்கிற மரம் நிலத்திற்குள் எப்படி வேர் விட்டிருக்கும் என்று பயந்து போனாள். புருசனிடம் சொன்னாள். அவர் மசியவில்லை. மல்லுக் கட்டிப் பார்த்தாள். அந்தப் பேச்சையே எடுக்க வேண்டாம் என்று ஒரேயடியாகச் சொல்லி விட்டார். பிறகு பார்த்ததில், அத்திவாரத்துக்கு அபாயம் நேர்ந்ததாகவும் தெரியவில்லை. இப்ப மாமரம் கிழடு தட்டிப் போய்விட்டது. பென்னாம் பெரிய இடத்தை வீணாகப் பிடிச்சுக் கொண்டு இருக்கிறதைத் தவிர வேறு என்ன பிரியோசனம் இருக்கப் போகிறது!
சட்டை ஒட்டிப் பிடிக்கும் அகோர வெய்யில். மாமா வீட்டுப் பக்கமாக தெருவைக் குறுக்கறுக்கிற போதே மாமரத்து நிழலில் இரண்டொரு பேர் வெய்யிலுக்கு ஒதுங்கி நிற்பதை அவன் கண்டான். உயரக் கொப்புகளில் கொத்துக் கொத்தாய் பூக்கத் தொடங்கி பிஞ்சுகளும் பிடித்து விட்டிருந்தன. கொப்புகளுக்கிடையில் அணில்கள் பாய்ந்து மறைந்த அசைவு தெரிந்தது. காகமொன்று பறந்து வந்து கொப்பில் வசதியாக நின்று எச்சம் போட்டுவிட்டு உடனேயே அடுத்த சுற்றுக்குக் கிளம்பியது. வயசு போனாலும் வற்றாத ஜீவநதியாய் அதைக் கண்டான் செல்வம். அவனும் வாசலுக்கு வர, மாமா மகள் பாக்கியலட்சுமி மச்சாளும் வெளியே அவசரமாய் வர, ஆளையாள் முட்டாத குறை.
“என்ன மச்சாள் ?”
“ஆதி சைக்கிள் எடுத்துக் கொண்டு போனவன். சந்தியில ஆமி நின்டு ஆக்களை ஏத்திறாங்களாம்.”
தூரத்தில் கறையானாக மொய்த்த சனத்தை அப்போதுதான் பார்த்தான். “நீங்க நில்லுங்கோ மச்சாள். நான் பாத்து வாறன் ‘ என்று சொல்லிக் கொண்டே வேகமாக நடந்தான். அந்தத் தெரு வளைவில் தொடங்கி அடுத்த தெருத் திருப்பத்தில் முடியும் பெரிய பலசரக்குக் கடைக்கு எதிர்ப்பக்கமாக சைக்கிள்கள் தாறுமாறாய் நின்றன. சிலது சரிந்தும் கிடந்தன. திகைப்பு அடங்காத சனம் சைக்கிள்களை ஆராய்ந்து உரித்தாளிகளின் முகவரி தேடிற்று. வாயில் வந்ததை அரற்றிற்று.
“என்ன நடந்தது ?”
“ட்றக்கில வந்தாங்கள். வெய்யிலில சப்பாணி கொட்டச் சொன்னாங்கள். முக்காவாசியும் படிக்கிற பிள்ளைகள். அள்ளிப் போட்டுக் கொண்டு போறாங்கள்.”
“எங்க ?”
“சரியாய்த் தெரியேல்லை.”
“பாவம். தாய் தகப்பன் என்ன பாடுபடப் போகுதுகளோ. அங்க பார் பொம்பிளைப் பிள்ளையளின்ர சைக்கிள்”
கடை முதலாளி வெளியே வந்து எல்லோருக்கும் கேட்கும்படி சொன்னார். “சைக்கிள்களைப் பூட்டி திறப்புகளைத் தாங்கோ. தேடி வந்தா குடுப்பம்.”
ஆதியுடைய சைக்கிளின் அடையாளம் செல்வத்திற்குத் தெரியாது. மச்சாளைக் கூட்டி வந்து காட்ட உடனடியாகத் திரும்பி நடந்தான். நெஞ்சு இடித்தது.
முற்றத்தில் பாக்கியலட்சுமி மச்சாளின் சத்தம் வரவேற்றது. ‘உனக்கு எத்தனை தரம் சொல்லீற்றன் தேவையில்லாம வெளீல போகாதையென்டு.”
“நான் தேவையோடதான் போனனான்” என்று நிலத்தைப் பார்த்துக் கொண்டு அனுங்கியபடியே ஆதி சொன்னான்.
“என்னடா தேவை உனக்கு. லீவு நாள் என்டா ஊர் சுத்தாம இருக்கேலாதாடா.”
“நான் ஊர் சுத்தப் போகேல்லை, லைப்பிறறிக்கு போனனான். விசயம் விளங்காம சும்மா கத்தாதீங்க. தாயை முறைத்துப் பார்த்துக் கொண்டே சொன்னான் ஆதி. கையிலிருந்த தென்னோலை நார் நாராகக் கிழிந்து கொண்டிருந்தது.
“எக்கேடென்டாலும் கெட்டுப் போ.” கத்தி விட்டு மச்சாள் வீட்டிற்குள் பின்வாங்கினாள். உள்ளே போனபின்னும் புறுபுறுப்புக் கேட்டது.
“ஆதி நீ அந்தச் சந்தியால போகேல்லையா ?” என்று செல்வம் கேட்டான்.
“ஆமியைக் கண்டுட்டு மற்றத் தெருவால சுத்திப் போனனான்.”
“ஆமியைக் கண்டா வீட்டை வரத் தெரியாதா உனக்கு ?”
அதற்கு அவன் பதில் சொல்ல விரும்பவில்லையென்பது முகத்திலேயே தெரிந்தது. நார் நாராகிப் போன ஓலையை எறிந்து விட்டு ஈக்கிலை உடைக்கத் தொடங்கினான் – ஆக்களில் காட்ட முடியாத கோபத்தை அதில் காட்டுவது போல.
“சரி சரி நீ போய் படிக்கிற வேலையைப் பார். மச்சாள் விடுங்கோ, வந்திற்றான் தானே.”
தாய் பிள்ளைக்கிடையில் வருகிற முறுகல் அவனுக்குத் தெரியாதா என்ன! நச்சு நச்செனக் கத்துகிற பெண்சாதியில் கோபம் வந்தாலும் புருசன் அடங்கிப் போய் விடுகிறான். வாயைக் கொடுத்து வம்பை வளர்க்க அவன் தயாராயிருப்பதில்லை. பிள்ளை அப்படியில்லை. தாய் கத்தினால் பதிலுக்குக் கத்தலாம். புருசனை மடக்கிப் போட்ட அளவிற்கு பிள்ளையை மடக்க முடிவதில்லை. எக்கேடென்றாலும் கெட்டுத் துலைஞ்சு போ என்று கை கழுவி விடுவது போல் முகத்தை நீட்டிக் கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடிவதில்ைலை. இரண்டொரு நாளைக்கு மெளன பாஷையில் விவகாரங்கள் நடைபெறும். பிறகு தன்னையறியாமல் தாய் பிள்ளை சேர்ந்து கொள்ளும்.
“அதை இழுத்துப் போட்டு இப்பிடி வந்து இரு, எப்ப மூதூரால வந்தனீ ?” விறாந்தைக் கதிரையைக் காட்டினார் மாமா. உள்ளே போன மகளுக்குக் கேட்கிற மாதிரி – “படிக்கிற பிள்ளைகள் வெளிய தெருவ போகாம என்ன செய்யிறது. ஆமி பிடிக்கிறது இன்டைக்கு நேத்தா நடக்குது. இதுக்கெல்லாம் ஒரு விடிவு வராமலா போகும். சும்மா சும்மா பிள்ளைகளைப் பேசக்கூடாது என்று பொதுவில் சொல்வது போல் சொன்னார்.
ஆதி தன் அறைக்குள் போய் கதவை வேண்டுமென்றே பலமாகச் சாற்றிக் கொண்டான். செல்வத்தின் முகத்தைப் பார்த்தார் மாமா. போன விசயம் என்னாச்சு என்று அவர் கேட்டது அவனுக்கு மட்டுமே கேட்டது. மாமா தளர்ந்து போனாலும் கணீர்ப்பேச்சு அப்படியே இருந்தது. அவரிடம் விசயத்தைச் சுற்றி வளைக்க வேண்டிய தேவையில்லை என்று தோன்றியது. பையிலிருந்த கடிதத்தை எடுத்துக் கொடுத்தான் உள்ளே போன மச்சாள் வருகிறாவெனப் பார்த்துக் கொண்டே.
மாமா கடிதத்தை வாசித்தார். அவரது நெஞ்சும் வயிறும் உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்ததை அவன் பார்த்தான். வாசித்து முடித்த பின்பு அவர் வாய் பேசவில்லை. காதால் வடிந்த வியர்வையை சால்வையால் துடைத்தார்.
“தம்பியிர ரிசல்ட் கேள்விப்பட்டனீங்களா மாமா ?”
“ஓம். கோயிலுக்குப் போற வழியில அம்மா சொல்லீற்றுத்தான் போனவ.”
“இப்ப அம்மாட்டை எப்பிடிச் சொல்றது ?”
“நீ தம்பியைக் கண்டனியா ?”
“இல்லை.”
“நான் நினைச்சது சரிதான். சேர்ந்து போன பொடியள் எல்லாரும் படிச்ச பொடியள். சரியான தீர்மானத்துக்கு வந்த பிறகுதான் ஒன்டாப் போயிருக்கிறாங்கள். அவங்களை மாத்திறது அவ்வளவு லேசில்லை.”
“எனக்கும் விளங்குது மாமா. மூர்த்தி சொல்லுது தம்பியோட நேர கதைக்கக் கிடைச்சா மாத்திப் போடலாம் என்டு.”
“அது நடக்காத காரியமப்பு. நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சன். இந்த மாதிரி புலிக்குப் போன ஏழெட்டு வீடுகளில தாய் தகப்பனை விசாரிச்சுப் பாத்திற்றன். அவங்கள் ஆருமே திரும்பி வரேல்லை. கூட்டி வரலாம் என்டே வைச்சுக் கொள்ளுவம் – இங்க வைச்சிருக்கிறது ஆபத்து.”
“நல்லாப் பாஸ் பண்ணியிருக்கிறான். எங்களுக்குக் குடுத்து வைக்கேல்லையே மாமா.”
“அது உண்மைதான். ஆனா, இப்படியொரு துணிவும் தெளிவும் எங்கட குடும்பத்தில ஆருக்கும் இருந்ததில்லை. எழுத்தைப் பாத்தியா – தேங்காய் பிளந்த மாதிரி எழுதியிருக்கிறான். எனக்கு இன்னம் தேகம் நடுங்குது. எங்க இருந்தாலும் அவன் சிறப்பா இருப்பான். நீண்ட ஆயுளோட நல்லா இருக்க வேனும்.”
“என்டாலும், அம்மா அப்பாவை கொஞ்சமும் நினைக்காம இப்படிச் செய்து போட்டானே மாமா.”
“தம்பி இனிமேல்பட்டு பிள்ளையை நோகாதே. ஆதியைப் பார், சொல்வழி கேக்கிற பிள்ளைதான். இப்ப தாயோட முறுகிக் கொண்டு நிக்கிறான். பிள்ளைகளுக்கு எல்லாப் பக்கத்திலும் நெருக்குவாரம். அதுகள் என்ன செய்யும் ?”
“அம்மாட்டை எப்பிடி மாமா சொல்றது ?”
“நீ சொல்ல வேணாம். கொஞ்ச நாள் போகட்டும். ரிசல்ட் வந்த புழுகத்தில இருக்கிறா. பாவம், அதைக் கெடுக்கக் கூடாது. சரியான நேரம் பாத்து நான் சொல்றன். அதுவரைக்கும் கடிதம் பத்திரம்.”
“இனி என்ன நடக்கப் போகுதோ.”
“செல்வம் பயப்பிடாதை. நாளைக்கு நடக்கப் போறதை தெரியாம இருக்கிறதிலதான் இந்த சீவியத்தின்ர ஜீவனே இருக்குது. பத்துமாசம் சுமக்கிற பிள்ளை என்ன பிள்ளை என்று தெரியாம இருக்கிறதில்தான் தாயினுடைய உண்மையான சந்தோசமே அடங்கியிருக்கு. முடிவு தெரிஞ்ச பந்தயம் பார்க்க நல்லாயிருக்குமா ? நீ வாழும் வளரும் பிள்ளை. எதுக்கும் யோசிக்காதே. இருட்டு எந்த நேரமும் இருக்காது. கட்டாயம் விடியும். நம்பிக்கையோட இரு.”
கடிதத்தைத் திருப்பிக் கொடுத்தார் மாமா. செல்வத்திற்கு தேத்தண்ணி கொண்டு வந்த மச்சாள் கேட்டாள்.
“என்ன கடிதம் ?”
“அது கனடாலயிருந்து டானியல் போட்ட கடிதம். எப்ப வாறது என்டு கேட்டு எழுதியிருக்கிறார்” என்று மிக இயல்பாகப் புழுகிவிட்டு அப்பிராணியாக செல்வத்தைப் பார்த்தார் மாமா. அவனுக்கு வியப்பாக இருந்தது. எப்போதோ டானியலைப் பற்றி அவன் மாமாவிடம் குறிப்பிட்டிருக்கிறான். அதை யானை மாதிரி ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார். அது போக, சரியான சமயத்தில் அதைப் பாவித்துமிருக்கிறார். வயசாகி விட்டாலும் மிடுக்கு குறையவில்லை.
மாமரத்து நிழலில் வெய்யிலுக்கு ஒதுங்கிய யாரோ சத்தம் போட்டுக் கதைப்பது தெருவிலிருந்து கேட்டது. மாமாவும் இந்த மாமரம் மாதிரித்தான். அவருக்குப் பக்கத்தில் வந்து நின்றாலே கடும் கோடையில் நிழலுக்கு ஒதுங்கிய மாதிரித்தான்.
வயசு போனாலும் வற்றாத ஜீவநதி!
karulsubramaniam@yahoo.com
- மா ‘வடு ‘
- குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்
- உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள்
- உருளைக்கிழங்கு குண்டுகள்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)
- எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘
- பெரியபுராணம் காட்டும் பெண்கள்
- திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்
- நல்ல புத்தகங்களை தேடுவது
- எம காதகா.. காதலா!
- மீண்டும்
- எனக்கு வரம் வேண்டும்
- மரணம்
- பிரியம்
- பிறிதொரு நாள்
- ஏழையின் ஓலம்
- காதலுக்கு என்ன விலை ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு
- கவிதைகள்
- பேரனுக்கு ஒரு கடிதம்…
- நானோ
- நேற்றின் சேகரம்
- அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே
- உருகி வழிகிறது உயிர்
- மீண்டும் சந்திப்போம்
- வள்ளி திருமணம் (பால பாடம்)
- ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.
- இது என் நிழலே அல்ல!
- கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004
- பழையபடி நடந்திடுவேன்..
- விடியும்!- நாவல்- (34)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5