காய்ச்சல்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

நாகூர் ரூமி


—————-

சாலை, வீடு, தாழ்வாரம், முற்றம் — எங்கு பார்த்தாலும் அதன் ஆக்கிரமிப்பு. நான் போகமுடியாத இடமுண்டா ? என்று கேட்டுக்கொண்டே மேலேறி வந்தது. ஒவ்வொரு நாளும் இப்படித்தானா ? நான் ஏன் கவனிக்கவில்லை ?

முற்றத்தில் — செல்லமாக ‘முத்தத்தில் ‘ — போய் அமர்ந்தேன். ரொம்ப உணவாக ஏறியது என்மேல். முதலில் தலையில்தான். பின்பு விரல்களின் மேல் பக்கம், தோள், அதற்குக்கீழே, இரு விலாப்பகுதிகளும். அதுசரி, இந்த ‘உணவாக ‘ என்பது ‘உணர்வாக ‘ என்பதன் மரூஉவா ?! சரி, எதுவாக இருந்தால் என்ன, உணவாக என்பது சரிதான். வெயிலின் இதத்தை மெதுவாக நான் உண்டுகொண்டிருந்த மாதிரிதான்.

கண்களை மூடினேன். விழி மூடிகளின் உள் புறங்களில் இதமான சூடாக காய்ச்சல் கனத்தது. இந்த ‘சல்லகடுப்பு ‘ வந்தாலே — ரொம்ப அதிகமாக அல்ல — ஒரு ரசிக்கத்தக்க அனுபவம்தான். கைவிரல்களை இறுக்கமாகப் பொத்த முடியாது. ஒரு கூச்சம், நடையில், பேச்சில், எல்லா அசைவுகளிலும் ஒரு தளர்ச்சி. ஏன் ஒரு நிதானம் என்று சொல்லக்கூடாது ?!

நான் நடந்தாலே ஏன் ஓடுறே என்பான் ரவி. இப்போ ஆமையைவிட — ச்சே, இந்த ஆமையை விட்டால் ‘மெதுவாக ‘வுக்கு வேறு உதாரணமே கிடையாதா ? — மெதுவாக நடக்கிறேன். அடிமேல் அடியாக, ஒட்டுக் கேட்கப் போவதுபோல். செருப்பு போட்டுக்கொண்டு வெயிலில் நடக்கும்போதுதான் எவ்வளவு இதம்!

ஆனால் இந்த அசதி பார்ப்பவர்களுக்கு நான் ஒரு நோயாளி என்பதாக அடையாளம் சொல்லும்போது எரிச்சலாக வருகிறது.

ரொம்ப அக்கறையாக, ‘என்ன காச்சலா ? ஏன் இப்டி வெயில்ல அலையிறிங்க ? ‘ என்பான். கொஞ்சம் சுகமாக எதையும் அனுபவிக்க விடமாட்டான்கள். ஞான சூன்யங்கள்.

‘யோவ், ஒனக்கென்னயா ஒவ்(ம்) வேலெயெப் பாத்துகிட்டு போய்யா…ஆளப்பாரு ரொம்ப கரிசனமா கேக்க வந்துட்டான் ‘னு கத்த வேண்டும் போல இருக்கும்.

ஆனால் இதை மெதுவாக — அல்லது காய்ச்சலாக — சொல்லி முடிப்பதற்குள், ‘ஏந்தம்பி ரொம்பக் கஷ்டப்படுறே ?…காச்ச சரியாப்போனவொன்னெ திட்டு ‘ன்னு பந்தாவா சொல்லி கில்லி தொலச்சிட்டான்னா ரொம்ப அவமானமாப் போய்விடும். இதெல்லாம் சில அசெளகரியங்கள்தான்.

‘ஆமா — ‘மா ‘ கொஞ்சம் இழுத்து — காச்சதான், — ‘கா ‘ கொஞ்சம் அழுத்தி — மொகத்தப் பாருங்க பேயடிச்ச மாதிரி இருக்கு ‘

பெரிய விஞ்ஞானி. என் முகத்தைப் பார்த்து கதையைச் சொல்லுவான். இதையெல்லாம் பொறுத்துக்கணும். மடப்பயல்கள். காய்ச்சலடிச்சா முகம் பேயடித்த மாதிரிதானா இருக்கும் ? ஏன், தலையெல்லாம் கலைந்து, டிஷவல்டா, ஒரு கேர்லஸா, முகம் ஒரு ஃபிலாஸஃபர் மாதிரி இருக்காது ? நோயின்னாலே ஏதோ பேய் மாதிரியில்ல விரட்டுகிறான்கள்…இந்த லேசான சல்லகடுப்பு இருக்கிறதே, இது வசந்த காலம் மாதிரி. வருஷத்துக்கு ஒரு தரம் எனக்குக் கொடுத்துவைக்கும். ஆஹா, அப்ப…இவன்களுக்கு எங்கே தெரியப்போகுது ?

ஒரு ஐடியா தோன்றியது. ஒரு பாயையும் தலையணையையும் எடுத்து முற்றத்தில் போட்டு, ஒரு டவலை முதுகில் போட்டுக்கொண்டு படுத்தேன். வெயில் உடனே ஆனால் மெதுவாக என்னுள் இறங்க ஆரம்பித்தது. கடல் மாதிரி வெப்பத்தை வாங்க ஆரம்பித்தேன். வெப்பம் உள்ளிறங்குவதை நன்றாக உணர் முடிந்தது. இறங்கும்போது கவனமாகக் கேட்டால் ஒரு இனம்புரியாத ஒலி — ரொம்ப நுண்ணியமானது — வந்த மாதிரி இருந்தது. ஏதோ ஊர்ந்த மாதிரியும் இருந்தது. உண்மையிலேயே வெயில் சப்தித்ததா ? இல்லை பூச்சி மாதிரி ஊர்ந்ததா ? இல்லை இரண்டுமேயா ? வெயில் இதமாக இறங்கியபோது பதமான வெந்நீரில் குளிர் நாளில் குளிப்பது போலிருந்தது. தவிர்க்க முடியாமல் எமிலி டிக்கின்ஸன் ஞாபகம் வந்தது.

பனிக்காலத்துப் பிற்பகல்களில்

ஓர் ஒளிச்சாய்விருக்கும்

அது நம்மை அழுத்தும்

தேவாலய ராகங்களின் கனத்தைப்போல்…

தெய்வீக காயம் தரும் அது

அது வரும்போது

நிலம் செவிமடுக்கும்

என்ன பொயட் அவள்! திடாரென்று மணற்பொடிகளெல்லாம் நெருப்பாய் பறக்கும் பாலவனத்தில் ஒருவன் வெறுங்காலுடன் ஓடிவருகிறான். தலைதெறிக்க. உண்மையிலேயே தலைதெறிக்க. தோலெல்லாம் தீய்ந்து கருகி ரத்தம் சுணையாய்க் கொட்டுகிறது. ஒருகணம், ஒரேயொரு கணம், யாரோ போர்த்திவிட்ட மாதிரி பாலையில் நிழல் கவிகிறது. அந்தக் கணத்தில் அவன் ‘உயிர் வரு ‘வதைப் புரிந்து கொள்கிறான். மறுபடி நிழலை யாரோ உருவிக்கொள்கிறார்கள். அவன் தோல்பூராவும் உருகியும் ஏன் எலும்பெல்லாம் தெரியவில்லை ?

ச்சீ… நான் ஏன் இப்படி சம்மந்தமில்லாமல் கற்பனை செய்கிறேன் ? நான் எங்கே செய்தேன் ?

‘அட அறிவு கெட்டவனே…ஏண்டா இப்டி வெயில்ல கெடந்து வதங்குறா ? ஒடல்லதான் காச்சல்னா வெயில்ல வேறெ கெடந்து வதங்கணுமா ? எந்திரிச்சி உள்ளெ போயி படுடா ‘

உரத்துச் சொல்லி பாட்டி தன் பாட்டித்தனத்தைக் காப்பாற்றிக் கொள்கிறாள்.

வியர்த்துக் கொட்டியது. உடம்பு பூராவும். உழைத்துக் களைத்ததுபோல். உடம்பு பூராவும் கண்கள். பாயைச்சுருட்டிக் கொண்டு எழுந்து அறைக்குப் போனேன். ஃபேனைப்போட்டேன். தாகமாக இருந்தது. சொன்னேன். பாட்டி வெந்நீர் போட்டுக்கொண்டுவந்து கொடுத்தாள்.பச்சைத் தண்ணீர் ஆகாதாம். வெயில் ஆகாதாம். வெந்நீர் ஆகுமாம்.

எப்போதும்போல வேகமாக ஒரே மடக்கில் குடிக்க முடியவில்லை. மெதுவாகத்தான் முடிந்தது. ஒரு ஐந்து நிமிஷம் ஆனது. பாகற்காயை அரைத்துக் கரைத்துக் குடிப்பதுபோல் இருந்தது.

முதல் முறையாகத் தண்ணீருக்கு ஒரு சுவையைக் கொடுத்திருந்தது காய்ச்சல்.

போர்த்திக்கொண்டு படுத்தபோது வெப்பம் உள்ளுக்குள் கனத்தது.

வெயிலுக்கு எடை உண்டோ ?

‘இப்புடியே சம்பளமில்லாத லீவு போட்டுக்கிட்டு வெயில்ல படுத்திரு. காச்ச நல்லாப் போகும். குடும்பம் வாழ்ந்துடும் ‘

பாட்டிக்கு லெளடு ஸ்பீக்கராக இருப்பதில் தன்னை மறைத்துக்கொண்டுவிட்ட திருப்தியும் தொனித்தது அத்தையின் ‘அக்கறை ‘யான வசவில். சரி போகட்டும். அவள் காய்ச்சல் அவளுக்கு. என் காய்ச்சல் எனக்கு.

அதுசரி, வெயிலுக்கு எடை உண்டோ ?

============

அரும்பு, ஜுலை 89

ruminagore@yahoo.com

திண்ணை பக்கங்களில் நாகூர் ரூமி

  • அவரோகணம்

  • குட்டியாப்பா

    Series Navigation

  • நாகூர் ரூமி

    நாகூர் ரூமி