மணி வேலுப்பிள்ளை
மதவாச்சிச் சந்தியில் ஓர் ஓரமாக லொறியை நிறுத்திவிட்டு, நேரே காதர்-கடைக்குப் பின்னாடி இருக்கும் சந்துக்குப் போய், ஒரு மிடறு மெண்டிஸ் ஸ்பெ~ல் வாங்கிக் குடித்தேன். அப்புறம் காதர்-கடைக்குள் நுழைந்து றொட்டியும் மாட்டிறைச்சியும் சாப்பிட்டுவிட்டு ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டு லொறியில் ஏறிக் குந்தினேன்.
தெருவிலிருந்து கிளைவிடும் அந்த ஒழுங்கையில் லொறியைத் திருப்பினேன். காலை வெயில் கன்னத்தில் தெறித்தது. காற்றின் குளுமை காதோரம் கசிந்தது. கசிப்பு வாடை மூக்கில் ஏறியது. புல் பூண்டுகள் மண்டியிட்டன இருமருங்கிலும் குடிசைகள் பின்னடைந்தன. வெகுண்டெழுந்த ஊர்நாய்கள புழுதிவாரித் தூற்றின…
பெரேராவின் குடிசைக்கு எதிரே லொறியை நிறுத்தினேன். அவன் வெளியே ஓடிவந்தான். ஒரு கல்லை எட்டி எடுப்பது போல் குனிந்தான். நாய்கள் பாய்ந்தோடின. “வாங்கோ, சிவா மாத்தையா” என்று வரவேற்றான். நாய்கள் எட்டிநின்று குரைத்தன. ஒரு கல்லை எடுத்து வீசினான். நாய்கள் ஓட்டம் எடுத்தன.
பெரேராதான் எனது நெல்லுத் தரகன். நான் மதவாச்சிக்கு நெல் ஏற்றப் போகும் போதெல்லாம் பெரேராவின் குடிசைக்குப் போய் அவனையும் அக்கம் பக்கத்தவர்களையும் ஏற்றிக்கொண்டு நாட்டுப் புறத்துக்குள் நுழைவது வழக்கம். நெல்லு லொறிகளில் வேலைசெய்வதே அவர்களுடைய பிழைப்பு. ஒழுங்கையில் லொறியைக் கண்டதும் அவர்கள் பெரேராவின் குடிசையைச் சூழ்ந்துவிடுவார்கள்.
அன்று ஏனோ அப்படி எல்லாம் நடக்கவில்லை. மெனிக்கா வந்து பெரேராவுக்குப் பின்னாடி நின்று “சிவா மாத்தையா!” என்று விழிக்கவில்லை. அஞ்சனா வந்து தமக்கையின் பின்னலில் பிடித்துக்கொண்டு என்னை ஓரக்கண்ணால் பார்த்து முறுவலிக்கவில்லை… பெரேரா ஒன்றும் பேசாமல் நின்றான். தூங்காத மூஞ்சியுடன், குளிக்காத தேகத்துடன், வாராத தலையுடன்…
கொஞ்சம் பொறுத்து மெல்ல நெருங்கி கையைப் பற்றி என்னைக் குடிசையின் உள்ளே இட்டுச் சென்றான். மெனிக்கா எழுந்து நின்றாள். ஒரு பாயில் வெள்ளைத் துணியினால் மூடிக்கட்டி உப்பிய நிலையில் ஓர் உருவம்… அஞ்சனா… அவள் செத்துப் போனாள் என்றான் பெரேரா! “ஐயோ…” என்று கத்தினேன். ஏது ? எப்படி ? எதற்காக ? கேள்விகள் தொண்டையை அடைத்தன.
என்னை மதவாச்சிக்கு ஈர்த்தது நெல்லு மட்டுமல்ல. அஞ்சனாவின் ஒயிலும் துடினமும் நளினமும்… என்னைக் கொல்லாமல் கொல்வதில் அவள் பொல்லாதவள். அவள் முன்னிலையில் எனக்குக் கிறுதி வரும். வாக்கினாலும் காயத்தினாலும்தான்; நான் அவளுடன் உறவு கொள்ளவில்லை. மனத்தினால் நான் அவளுடன் உறவு கொண்டவன். நான் அஞ்சனாவிடம் கற்பிழந்தவன். இத்தனைக்கும் அவள் எனது பேத்திக்குச் சரி!
பெரேரா என்னை வெளியே கொண்டுவந்து சாடைமாடையாக விபரம் தெரிவித்தான். அஞ்சனா கருத்தரித்ததாகவும், அதனால் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும்…
யார் அந்தப் பேர்வழி ? எனக்கு அந்த இனந்தெரியாத பேர்வழிமீது மிகுந்த பொறாமையும் அவள்மீது பொல்லாத கோபமும் ஏற்பட்டது. பொறாமைப்படுவதற்கும் கோபப்படுவதற்கும் நான் யார் என்ற கேள்வி என் மனத்தில் எழவே இல்லை.
அஞ்சனாவை அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகள் பற்றி விசாரித்தேன். ஒன்றுமே செய்யவில்லை என்றான் பெரேரா. ஏன் என்று கேட்டேன். கையில் உள்ள காசு போதாது என்றான். உறவினர்கள் ஒன்றும் கொடுத்துதவவில்லையா என்று கேட்டேன். கொடுத்துதவ வேண்டுமே என்பதற்காகத்தான் செத்த வீட்டுக்கே ஒருவரும் வரவில்லை என்றான். ஊர்ச் சங்கம் ஓர் உதவியும் செய்யாதா என்று கேட்டேன். மாதம் ஐந்து ரூபா கட்டி வந்திருந்தால் அது ஆயிரம் ரூபா தந்திருக்கும் என்றான். ஆயிரம் ரூபா போதுமா என்று கேட்டேன். அவன் ஒன்றும் பேசவில்லை.
நான் நெல்லுக் கட்டுவதற்காக வைத்திருந்த காசில் ஆயிரத்து இருநூற்றி ஐம்பது ரூபாவை எண்ணி எடுத்தபொழுது “மாத்தையா” என்று சொல்லி அவன் என்னைக் கட்டிப் பிடித்து விம்மினான். மெனிக்கா ஓடிவந்து “சிவா மாத்தையா” என்று சொல்லி எனது காலடியில் விழுந்தாள்.
அஞ்சனா… அவளுடைய … எப்போது நடந்தது என்று கேட்டேன். முதல்நாள் என்றான் பெரேரா. அவளுக்கு மூன்று மாதங்களாய் மாதவிடாய் வரவில்லையாம். ஆனால் மாதவிடாய் வந்ததாக நடித்தவளாம். மேற்கொண்டு நடிக்க முடியாதபடியால் அவள் நஞ்சு குடித்துச் செத்ததவளாம். வேறு சுகயீனமாய் இருக்காதா என்று கேட்டேன். மெனிக்கா எழுந்து போய் அஞ்சனா சிங்களத்தில் எழுதி வைத்த ஒரு கடிதத்தை எடுத்து வந்து எனக்குக் காட்டி, அதில் அவள் கருத்தரித்த சங்கதி இருப்பதாகத் தெரிவித்தாள். அது எனக்கு மிகவும் எரிச்சலாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.
மனம் தனிமையை நாடியது. ஆனால் பெரேராவும் மெனிக்காவும் என்னை அங்கிருந்து கிளம்ப விடப்போவதில்லை. அவர்கள் என்னை விட்டு விலகப்போவதுமில்லை. அதேவேளை நானும் லொறியும் அங்கு நிற்பதால் அஞ்சனாவின் அடக்கத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டே தீரும். அது முதல்நாள் பிரிந்த உயிர். உடனடியாக அடக்கம் செய்யப்படவேண்டிய உடல். ஆகவே பெரேராவை ஓர் ஓரமாகக் கூப்பிட்டு, நான் ஹொறவப்பொத்தானைக்குப் போய்வரவேண்டி இருப்பதாகத் தெரிவித்தேன். அப்படி என்றால் அங்கிருந்து திரும்பி வரும் வழியில் தனது குடிசைக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போவதாக வாக்குத் தரும்படி அவன் என்னைப் பிடித்துக்கொண்டான். அப்படியே வாக்குக் கொடுத்துவிட்டு லொறியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.
லொறி அந்த ஒழுங்கை வழியே திரும்பிப் போய்க் கொண்டிருந்தது. எனது நெஞ்சம் இன்னும் பெரேராவின் குடிசையில்… அஞ்சனாவின் நினைவில்… இளமை ததும்பும் அவள் மேனியில் நிலைகொண்டது. அதுவரை ஒடுங்கிய உணர்வலைகள் பொங்கியெழுந்து நெஞசத்தில் மோதுண்டன. நான் லொறியைச் செலுத்தவில்லை, லொறியே என்னைச் செலுத்தியதுபோல் இருந்தது… திடாரென ஒரு நாய் வீலிட்டது. எனக்குச் சுயநினைவு திரும்பியது. லொறியை நிறுத்தினேன். யாரோ ஒருவன் ஓலமிட்டபடி ஓடிவந்து அந்த நாய்க் குட்டியைத் தூக்கி வைத்துக்கொண்டு ஒப்பாரி வைத்தான். சப்பளிந்த நாய்க் குட்டியின் இரத்தம் அவனுடைய முழங்கைவழி ஓடி நிலத்தில் சிந்தியது
எனது பிழை. அதில் சந்தேகமே இல்லை. அதற்குப் பிராயச்சித்தமாக ஐம்பது ரூபா தாள் ஒன்றை எடுத்து நீட்டினேன். அவன் காசை வாங்கிக்கொண்டு எட்டி நடந்தான். நான் புறப்பட்டேன். நான் கொஞ்சத் தூரம் போனவுடன் அவன் அந்த நாய்க் குட்டியின் வாலில் பிடித்து அதனை ஒரு சுலட்டுச் சுலட்டி அங்கிருந்த பற்றைக்குள் வீசிவிட்டு, குனிந்து கொஞ்சம் மண்ணைக் கிள்ளி முழங்கையில் உரஞ்சிக்கொண்டு ஓட்டம் எடுத்தான்.
எங்கேயாவது போய் தனிமையில் இருந்து அஞ்சனாவின் நினைவில் மூழ்கவே மனம் விரும்பியது. அந்த நாய்க் குட்டி முதல்நாள் செத்திருந்தால் அஞ்சனாவை அன்று உயிருடன் கண்டிருக்கலாமே என்று ஒரு விசித்திரமான எண்ணம் என்னைப் பீடித்துக்கொண்டது.
ஹொறவப்பொத்தானைக்கு போய்க் கொண்டிருந்தபொழுது எனக்கு வயிற்றைக் கலக்கியது. ஒரு வண்டித் தடத்தில் லொறியைத் திருப்பி ஒரு குட்டையை அண்டி நிறுத்தினேன். கீழே இறங்கி எட்டி நடந்து ஒரு மர நிழலில் குந்தினேன். குட்டையில் தாமரை இலைகள் மிதந்து கொண்டிருந்தன. எருமைகள் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்தன. குருவிகள் அவற்றின் மூக்குகளை அகழ்ந்து கொண்டிருந்தன. ஈக்களும் வண்டுகளும் நான் குந்தியிருந்த இடத்தை மோப்பம் பிடித்து முற்றுகையிட்டன. குட்டையில் கால் கழுவிக்கொண்டு லொறிக்குள் ஏறி இருக்கையில் சரிந்தேன்.
என் நெஞ்சமெல்லாம் அஞ்சனா நிறைந்திருந்தாள். அவளுடன் கூடி வாழ்ந்த உணர்வே எனக்கு ஏற்பட்டது. ஊரில் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி மக்கள் எனக்கு அந்நியர்களாகவே தெரிந்தார்கள். வெறும் பிழைப்பு வாழ்க்கை ஆகாது என்று மனம் சொல்லியது. அஞ்சனாவை நான் வைத்திருந்ததாகக் கற்பனை செய்வதிலேயே வாழ்வின் அர்த்தம் தெரிந்தது. அஞ்சனாவின் தற்கொலையுடன் எனது வாழ்வும் கருகிவிட்டதாகவே புலப்பட்டது.
அந்த உணர்வுகளுடன் கண் அயர்ந்துவிட்டேன். விழித்தபொழுது இருட்டியிருந்தது. மண்ணுலக நிதானம் மெல்ல மெல்லத் திரும்பியது. இனிமேல் மதவாச்சிக்குத் திரும்புவதே நல்லது என்று பட்டது. மதவாச்சிச் சந்தியில் ஓர் ஓரமாக லொறியை நிறுத்தினேன். நேரே காதர்-கடைக்குப் பின்னாடி இருக்கும் சந்துக்குப் போய் ஒரு மிடறு மெண்டிஸ் ஸ்பெ~ல் வாங்கிக் குடித்தேன். காதர்-கடைக்குள் நுழைந்தபொழுது சோறும் மான் இறைச்சியும் சாப்பிடலாம் என்றார்கள். அது வேண்டாம் என்று சொல்லிவிட்டு இரண்டு துண்டு பாணில் தேன் பூசிச் சாப்பிட்டேன். திரும்பவும் அந்தச் சந்துக்குப் போய் ஒரு டசின் பியரும் ஒரு போத்தில் மெண்டிஸ் ஸ்பெ~லும் வாங்கிக்கொண்டு புறப்பட்டேன்.
தெருவிலிருந்து கிளைவிடும் அந்த ஒழுங்கையில் லொறியைத் திருப்பினேன். காற்றின் குளுமை காதோரம் சீறியது. கசிப்பு வாடை மூக்கில் ஏறியது. புல் பூண்டுகள் மண்டியிட்டன. குடிசைகள் இருமருங்கிலும் பின்னடைந்தன. வெகுண்டெழுந்த ஊர்நாய்கள் புழுதிவாரித் தூற்றின…
பெரேராவின் குடிசைக்கு முன்பாக ஒரு பெற்றோமாக்ஸ் எரிந்தது. அக்கம் பக்கத்தவர்கள் அங்கே திரண்டிருந்தார்கள். பெரேராவும் மெனிக்காவும் வெளியே ஓடிவந்து “சிவா மாத்தையா… சிவா மாத்தையா” என்று ஆர்ப்பரித்தார்கள். லொறியை ஒரு புறமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினேன்.
அவர்களை அவன் இராச்சாப்பாட்டுக்கு அழைத்திருப்பதாக அறிந்துகொண்டேன். அடக்கம் முடிந்த அன்றிரவு அக்கம் பக்கத்தவர்களுக்குச் சாப்பாடு போடுவது ஊர் வழமை என்று கேள்விப்பட்டேன். நான் வந்து சேரப் பிந்தியதே இன்னும் பந்தி வைக்காத காரணமாம்! பியரையும் சாராயத்தையும் எடுத்து பெரேராவிடம் கொடுத்தேன். ஆரவாரமும் வாதப் பிரதிவாதங்களும் ஆரம்பித்தன. அப்பொழுது யாரோ ஒருவன் “மாத்தையா! அனே, மாத்தையா!” என்று கூப்பிடுவது காதில் விழுந்தது. எல்லோரும் ஆரவாரத்தை நிறுத்தி என்னையே பார்த்தார்கள். நான் பெரேராவைப் பார்த்துக் கண்களைக் கூசினேன். அவன் கையில் ஒரு விளக்குடன் வந்து என்னைக் கூட்டிக்கொண்டு கோடிப் புறமாகப் போனான். மூத்திர நெடி மூக்கில் மோதியது.
என்னை மேற்கொண்டு நகரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவன் அப்பால் எட்டி அடி எடுத்து வைத்தபொழுது மீண்டும் “மாத்தையா! அனே, மாத்தையா!”… பெரேரா அவனை அதட்டி, விளக்கை மேலே தூக்கிப் பிடித்தான். கண்ணாமண்டை நைந்து போயிருந்தது. பெரேரா விளக்கைப் பதித்தான். கைகள் கட்டப்பட்டிருந்தன. விளக்கு இன்னும் கீழே பதிந்தது. அரையில் ஆடை இல்லை. பெரேரா விளக்கை நிலத்தில் வைத்தான். கால்கள் சாரத்தால் கட்டப்பட்டிருந்தன.
அவன்தான் எனது லொறியில் அகப்பட்ட நாய்க் குட்டியைத் தன்னுடையது என்று பொய் சொல்லிக் காசு வாங்கியவன் என்று பெரேரா சொன்னான். அவன் திரும்பவும் என்னை “மாத்தையா!” என்று கூப்பிட்டு தன்னை அவிழ்த்துவிடச் சொல்லும்படி மன்றாடினான். அவன் நாய்க் குட்டியைச் சுலட்டி வீசியதை ஊர்ச் சங்கக் காரியதரிசி கண்டவனாம். அப்பொழுது காரியதரிசி அந்தப் பற்றைக்குள் ஒளித்திருந்து கசிப்புக் குடித்தவனாம். அஞ்சனாவை அடக்கம் செய்வதற்கு நான் காசு கொடுத்து உதவியதை அறிந்த குடிசைவாசிகள் திரண்டு வந்து இவனிடமிருந்து காசைப் பறித்து அடித்து உதைத்துக் கொண்டுவந்து அங்கே கட்டிப் போட்டார்களாம்…
கட்டவிழ்த்த கையோடு அவன் ஓட எத்தனித்தான். நான் அவனை ஓட வேண்டாம் என்று சொல்லித் தடுத்தேன். பெரேரா அந்த ஐம்பது ரூபாவை எடுத்து என்னிடம் நீட்டினான். நான் அந்தக் காசை வாங்கி வைத்துக்கொண்டு அவனுக்குச் சாராயமும் சாப்பாடும் கொண்டுவரும்படி பெரேராவிடம் சொன்னேன். பெரேரா விலகியவுடன் அந்தக் காசை அவனிடமே திருப்பிக் கொடுத்து, குரலைத் தாழ்த்தி, அஞ்சனாவுடன் சம்பந்தப்பட்ட பேர்வழி யார் என்று கேட்டேன். “தயானந்தா…” என்று முணுமுணுத்தான். அது யார் என்று கேட்டேன்… அவனுடைய பதிலிலிருந்து அது ஊர்ச் சங்கக் காரியதரிசி என்பது புரிந்தது.
பெரேரா சாராயமும் சாப்பாடும் கொண்டுவந்தான். அவன் சாராயத்தை வாங்கி ஒரே மிடறில் குடித்துவிட்டு சாப்பாட்டை வாங்கிக்கொண்டு ஓட்டம் எடுத்தான். நானும் பெரேராவும் முற்றத்துக்குத் திரும்பி மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டோம். தாமரை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது. சோறு, மான் இறைச்சி, மாசிச் சம்பல், கருவாட்டுப் பொரியல், நெத்தலிச் சொதி, அவித்த முட்டை…
அடுத்த நாள் காலை நாங்கள் எல்லோரும் எங்கள் பிழைப்பக்குத் திரும்பினோம். அன்று மாலை வழக்கம் போல நூற்றி ஐம்பது மூடை நெல்லுடன் நான் யாழ்ப்பாணம் புறப்பட்டேன். லொறி தெருவில் ஏறும்வரை பெரேரா கூட வந்தான். எனக்குக் கிடைத்த துப்பை உறுதிப்படுத்துவதற்காக யார் அந்தப் பேர்வழி என்று கேட்டேன். “தயானந்தா…” என்றான். அது முன்கூட்டியே தெரியுமா என்று கேட்டேன். தெரியும் என்றான். ஏன் தடுக்கவில்லை என்று கேட்டேன். பெரேரா லொறியை விட்டு இறங்கி நின்று, அது ஊர்ச் சங்க காரியம் என்று சொல்லிக், கை அசைத்து விடை கொடுத்தான்.
manivel7@hotmail.com 2003/01/05
- மக்களை முட்டாளாக்கும் சினிமாக்காரர்கள் – பித்தனின் கோபங்கள்.
- தோள்களை நிமிர்த்திடு
- தராசு
- கேடயங்கள்
- பொய் – என் நண்பன்
- காதல்கள்…
- விண்கோள் செவ்வாயிக்கு 2001 விண்வெளித் தீரப் பயணங்கள் [2001 Mars Odyssey, Mars Express & Mars Rover Flights]
- கசப்பும் கற்பனையும் ( ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை ஸ்பானிஷ் சிறுகதைகள். ஃபெர்னான்டோ ஸோரன்டினா, ஆங்கிலம் வழியாகத் தமிழில் எம
- புரிந்துகொள்ள முடியாத புதிர் -ஜெயந்தனின் ‘அவள் ‘ – (எனக்குப் பிடித்த கதைகள் – 78)
- குமரிஉலா 4
- வெங்காயம்! வெடிகடுகு! வெட்கம், சீச்சீ!
- குறிப்புகள் சில செப்டம்பர் 25 2003 மருத்துவ கல்வியும்,மருத்துவ தொழிலும்,-இணையம்,இந்திய அரசு,இறையாண்மை-நகலாக்கம் சர்வதேச தடை முயற
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு நவீன விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை
- சங்கராச்சாரியாரின் தத்துவ ஒழுக்கக்கேடு
- அவன் அவனாக!
- தேரழுந்தூர் கம்பன் அதோ-!
- க்ருஷாங்கினி கவிதைகள்
- இந்தியா
- ஊடல் மொழி.
- சிக்கல்
- யாகூ குழுமங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 3 சென்ற இஇதழ் தொடர்ச்சி..
- ஒரு சுமாரான கணவன்
- பிழைப்பு
- அக்கரைப் பச்சை
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தைந்து
- விடியும்! நாவல் – (15)
- காத்தவராயனுக்கு காத்திருப்பது
- மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்!
- கடிதங்கள்
- ஹே, ஷைத்தான்!
- தமிழில் குழந்தைப் பாடல்கள்
- பாரதி நினைவும் காந்தி மலர்வும்
- வாரபலன் (குந்தர் கிராஸ், பெண்மொழி, கல்கத்தாவின் சென்னைவாசிகள் பற்றி பாரதி) செப்டம்பர் 20, 2003
- ஈகோவும் வெற்றியும்
- பூட்டு
- இரு கணினிக் கவிதைகள்
- இரு தலைக் கொள்ளி எறும்புகள்!
- அதிர்ஷ்டம்