வரங்கள் வீணாவதில்லை…

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

புதியமாதவி, மும்பை


சென்னையிலிருக்கும் தேவநேயப் பாவணர் அரங்கத்திற்கு எப்படிப் போக வேண்டும் ?

அவளுக்கு தெரியாது. இருந்தாலும் தெரிந்தது மாதிரி காட்டிக் கொண்டாள். ஓட்டலிருந்து கிளம்பும்போது தான் வாங்கி வந்திருந்த சால்வையை மறக்காமல் எடுத்து வைத்துக்கொண்டாள். அவள் நினத்தமாதிரி சிவப்பும் மஞ்சளும் சேர்ந்து சிரிக்கும் பூங் கொத்துதான் சென்னையில் கிடைக்கவில்லை. ‘சே பேசம்மா மும்பையிலிருந்தே வாங்கிட்டு வந்திருக்கலாம் ‘ என்று தோன்றியது. அவள் தலையில் அவளே செல்லமாக ஒரு குட்டு ..

ரிக்சாக்காரனின் சென்னை- தமிழ் அவளுக்குப் புரியவில்லை. அவளின் மும்பைத் தமிழ் அவனுக்கு புரிந்தது. எங்கெல்லாமோ சுற்றி வளைத்து அவன் அரங்கத்திற்கு கொண்டு விடும்போது விழா நிறைவு பெறும் நேரம்.. யார்க்கும் அவளை அடையாளம் தெரியவில்லை. அவள் தான் இதுவரை தன் முகம் காட்டியதே இல்லையே.

அவன் ஆராய்ச்சிக்கு இன்று அணிவகுப்பு நாள். அவன் ஆய்வுகள் இன்று அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அத்தனையும் புத்தகமாக வெளிவரும் நாள்.. மேடையில் பெரிய பெரிய தலைவர்கள்.. அறிஞர்கள், பேராசிரியர்கள், கவிஞர்கள்..

அவன் ஏற்புரை வழங்கி கொண்டிருந்தான். அந்தக் கூட்டத்தில் 15001 வது நபராக கடைசியில் கைகளில் மலர்களுடன் அவள்.. அவன் ஒவ்வொரு வார்த்தைகளிலும் பூமியை ஒருமுறைச் சுற்றி வந்து கொண்டிருந்தாள். பல நேரங்களில் இந்த நன்றியுரையே தேவையில்லை என்று ஜம்பம் அடிப்பவள்..இன்று அவன் யார் யாருக்கெல்லாம் நன்றி சொல்கிறான் என்று மனசை லாக்-இன் செய்து கேட்டுக் கொண்டிருந்தாள். கடைசியாக அவள் கண்களின் பனித்துளிகள் பூக்களில் கொட்ட காத்திருந்த ஷணங்கள்.. அவன் சொன்னான்….

‘ எனக்கு ஊக்கம் தந்தவள்.. என் வார்தைகளுக்கு அர்த்தம் தந்தவள்..எனக்காக தியாகம் செய்தவள் என் சக்தி.. அவள்தான்..என்.. ‘

இப்போது அவள் கண்களின் பனித்துளிகள் பூக்களில் தெரித்தது.. மனசு பட்டாம் பூச்சியாகி 15000 பேரையும் கடந்து அவன் தோள்களில் சால்வையானது..

கணநேரம்தான்.. கல்பனா சாவ்லாவின் விண்கலத்தைப் போல பூமி உருண்டையைத் தொட வரும்போது தூள்தூளாக. .. விண்ணில் கலந்த் வெளிச்சமானது..ஆமாம்..

இப்போது அவன் துணைவி அவனருகில் மேடையில்..நின்று கொண்டிருந்தாள்.. அவன் வெற்றிகள் அனைத்தையும் பிரசவித்த பெருமை அவள் முகத்தில்.. இருக்காதா பின்னே..தன் துணைவி தன் சக்தி என்றல்லவா அவள் பெண்மையை இந்த கலையரங்கமே கைதட்டி வாழ்த்துச்சொல்லும் வரத்தை..

அவள் வாங்கி வந்த பூங்கொத்து வாட ஆரம்பித்திருந்தது..கூட்டம் கலையும் நேரம்.. அவன் வெளியிட்ட புத்தகத்தையாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்று வாங்குவத்ற்காக நின்ற வரிசையில் அவளும்..கடைசியாக அவள் முறைவருவத்ற்குள்ளாகவே புத்தகங்கள் விற்று தீர்ந்துவிட்டது.. அச்சகத்தில் இன்னும் ஒருவாரத்தில் கிடைக்கும் என்று விழாக் குழுவினர் அறிவிப்பு செய்தார்கள்.

வெளியில் வந்த போது அவள் அவளுக்கே அந்நியப்பட்ட மாதிரி இருந்தது.

அதே ரிக்சாக்காரன் கிடைத்தான்.. ஏறி உட்கார்ந்து ஹோட்டலின் பெயரைச் சொன்னாள்..

அவன் என்னென்னவோ பேசிக் கொண்டு வந்தான்..

‘என்னாயிது .. இம்மாம் பூ வெல்லாம் வாங்கிட்டுப் போனே.. அப்ப்டியே கொணந்திட்டே.. பெரிய இடமின்னா எல்லா அப்படித்தான் மா .. ‘

அவன் வார்த்தைகள் அவள் காதுகளில் விழவில்லை.

இப்போது அவளிடமிருந்த சக்தி எல்லாம் எங்கேயோ தொலைந்து போனமாதிரி.. யாரோ திருடியமாதிரி..

..

அவள் யாருக்கும் ஊக்கம் தரவில்லை..ஆக்கம் தரவில்லை, தியாகம் செய்யவில்லை.. அவளிடம் தியாகம் செய்ய எதுவுமே இல்லை..அதனால் தான் அவள் யாரும் ஆராதிக்கும் சக்தியாகவும் தெரியவில்லை..

நல்லதொரு வீணை செய்தே -அதை

நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ.. ?

சொல்லடி! சிவசக்தி.!..என்னைச்..

சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்..

வல்லமைத் தாராயோ..

சக்தி வல்லமைத் தாராயோ

சக்தி வல்லமைத் தாராயோ/ சக்தி வல்லமைத் தாராயோ.. சக்தி வல்லமைத் தாராயோ

அவள் ஓட்டம் நின்றது..ரிக்சாக்காரன் எதோ வாங்க கடைத்தெருவில் ஓரமாக நிறுத்தியிருந்தான்.. அவளிடம் கட்டாயம் அவன் சொல்லியிருப்பான். அவன் இப்பொது கைகளில் வாழை இலையில் சுற்றி வைத்திருந்த மல்லிகைப் பூக்களுடன் வந்தான்.. அவள் கேட்காமலே சொன்னான்..

‘இன்னிக்கி என்க கலியாண நாலுமா.. இந்த இருவது வருசத்துல் ஒரு தடவையாவது அதுக்கு ஒரு சேலை வாங்கி குடுக்கலாம்னு பாத்தா .. சரிதான் போ என்க முடியுது.. காசு வரும்போது தண்ணி பொடவே பத்த மாட்டேனுது.. ‘

அவள் அமைதியாக அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்..

தங்கியிருந்த ஹோட்டல் வந்தது.. தான் சுமந்து கொண்டிருந்த பூங்கொத்தை அவனிடம் கொடுத்தாள். தேடித் தேடி அலைந்து எல்லா மாநிலத்து கைவினை அங்காடிகளிலும் நுழைந்து அவனுக்காக வாங்கி வந்திருந்த சால்வையை ரிக்சாகாரனிடம் கொடுத்தாள்..உன் திருமண நாளுக்கு என் அன்பளிப்பாக இருக்கட்டுமே.. என்று சொல்லிவிட்டு மீதிச் சில்லறையைக் கூட அவனிடம் வாங்காமல் உள்ளே போகும் அவளையே ரிக்சாகாரன் அதிசயமாக பார்த்து கொண்டிருந்தான்.

வாழ்த்துக்கள் வரங்களாகும்.. என்ற அவன் எழுதிய புத்தகத்தை எடுத்து மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்.

‘வரங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல .அதுவே வாழ்க்கையின் அர்த்தங்கள்.. அதுவே வாழ்க்கையின் தேடல்.. தேடல் தொடரும்போது வரங்கள் வீணாவதில்லை… ‘என்ற வரிகளில் வரங்களைத் தேடிக் கொண்டிருந்தாள். சூரிய வெளிச்சத்தைக் கடன் வாங்கி கொண்டு வந்த நிலவு அவள் தேடலுக்கு வெளிச்சம் காட்ட வந்தது..

புதியமாதவி,

மும்பை 400 042.

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை