திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்
தனிமை நாடி சுவாமியறையில் கண் மூடி நிட்டையில் இருந்தவருக்கு சில விணாடிகளுக்குள் இருப்புக் கொள்ளவில்லை. இமைகள் திறந்தன. தியானத்திற்கு முயற்சிக்கும் வேளையில் திறந்திருக்கும் ஜன்னல் கூட இடைஞ்சல்தான். சிறிய இடைவெளி தெரிந்தால் போதும் கட்டிலிருந்து அவிழ்த்துக் கொண்ட நாயாக ஓடிப் பாய்கிற மனம்!
வெளிவிசயங்கள் சிரங்குதான். மனதை மேயவிட்டு சொறியச் சொறியச் சுகந்தான். கையில் அரிக்கும். காலில் அரிக்கும். உடம்பெங்கும் அரிக்கும். புண்ணாகிப் போனால் இரத்தம் வரும். நாளாக சீழ் பிடித்து மனைஞ்சு போகும். பிறகு உருப்படாத கேஸ்தான்.
கடிஎறும்பு காலில் ஊர்ந்தது. தட்டிவிட்டார்.
வளவுவேலி தாண்டி ஒரு உரலில் இருவர் மாய்ந்து மாய்ந்து மா இடிக்கும் சப்தம் பக்கத்திலேயே இடிப்பது போல் மிகத் தெளிவாகக் கேட்டது. இதில் உள்ள விசயம் என்னவென்றால் எவ்வளவுக்கெவ்வளவு உள்ளே போக முயற்சிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மனம் வெளியே தாவப் பார்க்கிறது. இடி வாங்கும் உரலில் தாவி, இடிக்கும் உலக்கையில் ஏறி, மா இடிக்கும் காப்பு மாட்டிய கைகளில் படர்ந்து .. .. யாராயிருக்கும் என்று உராயத் தொடங்கி விட்டது.
கொஞ்சம் ஈவு கிடைத்தால் போதும் கட்டவிழ்ந்த கன்றுக்குட்டிதான். கன்று கூடப் பரவாயில்லை. தாய்ப்பசுவின் கட்டுக்குள் நிற்கும். பால்மடியில் வாய் வைப்பதும் புழுகத்தில் தலைகால் தெரியாமல் பாய்வதும் திரும்ப வந்து அடங்கி நின்று வாய்முட்ட இழுப்பதும் என்ற வட்டத்திற்குள் நிற்கும்.
இது கட்டாக்காலி நாய் .. .. குப்பை கூளமெல்லாம் நரகலைத் தேடி நக்கித் திரிகிற நாய். மரத்திற்கு மரம் தாவி, குருத்து பூ பிஞ்சு பேதம் பாராமல் பிச்சுக் கொட்டுகிற குரங்கு!
அவர் எழுந்து ஜன்னலை மூடி திரும்பவும் வந்து சப்பாணி கொட்டி பிரயத்தனப்பட்டு கண்களை இறுக மூடி மனதிற்குள் புகுந்து கொள்ள முயற்சித்தார். பூனை கண்களை இறுக மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமோ!
குரங்கு பாய்வதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருந்தது.
உனக்கு தீனி மெத்திப் போச்சு. கண்டதும் தின்று திமிர் முத்திப் போச்சு. கூடாத கூட்டமெல்லாம் கூடி குளிர் விட்டுப் போச்சு.
அது அடர்ந்து படர்ந்த உலக மாமரம். வானத்தை ஈவு இல்லாமல் மறைத்துப் பரம்பி நிற்கும் பச்சை. நீண்டு பருத்து பொருக்கு வெடித்த கிளைகள். இந்த மாரியில் விசயங்களுக்குக் குறைவில்லாமல் பூத்துக் காய்த்து பூரித்த கோலம்.
உச்சிக்கொப்பிலிருந்து பிரிந்து போன ஒரு பெரிய கிளையில் மரத்தின் எல்லா வளத்தையும் திரட்டிக் கொண்டு மதாளித்துப் போன ஒற்றைக் காய். மரத்திலேயே பழுக்கத் தொடங்கிவிட்ட மஞ்சள் காய்.
நெஞ்சு நிறைய மெடல் குத்தி தோள்பட்டையில் தங்க நட்சத்திரங்களால் மெருகூட்டி பூலோகம் முழுதிற்கும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மாதிரி அயல் அண்டை நாடுகளில் சண்டித்தனமும் சட்டாம்பிள்ளைத்தனமும் செய்கிற அந்த ஆளைப் போலவே முற்றிப் பெருத்த காய்!
அவர் இன்று காலை டாவியில் தோன்றினார். பிபிசி செய்திகளில் அடுத்தடுத்துக் காட்டினார்கள். உலகத்து மக்களிடம் கடவுளுக்குக் கூட இல்லாத கரிசனை அவருக்குண்டு. அவர்களின் மொத்த பாதுகாப்பிற்காக ஈராக்கில் இருப்பதாக அவர் நினைக்கும் மிகப்பெரிய அழிவாற்றலைக் கொண்ட இரசாயன ஆயுதங்கைளை அழிப்பதற்காக, ஈராக்கையே அழிப்பதற்கு ஆயத்தமாகிவிட்டார். ஈராக் தன் சொந்தப் பெற்றோலை விற்க முடியாது. லட்சக்கணக்கான பிள்ளைகுட்டிகள் ஏற்கனவே பசிபட்டினி நோய்நொடியால் இறந்து விட்டார்கள். இருந்தாலும், பேரழிவிற்கான சண்டையை மிக விரைவில் தொடுப்பதென பகிரங்கப்படுத்திவிட்டார்.
மெலிந்தவனைப் பிடித்துக் கட்டி வைத்து அடித்து வீரம் காட்டுவதை அங்கீகரிக்கப்பது போல ஈராக் மீது மீண்டும் படையெடுக்க எல்லா நாடுகளும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டு கை கட்டி நிற்கின்றன. என்னய்யா தர்மம் இது!
சற்றுக் கீழே .. .. அதைவிட சின்னக்காய்தான். ஆனால் கவர்ச்சியான காய். கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமோ!
விழாமல் தொத்துப்பறியில் தப்பி அந்தக் கிளையைப் பிடித்துக் கொண்டது குரங்கு.
இப்ப கீழிறங்கி வரப் போகிறாயா இல்லையா. கட்டி வைச்சாத்தான் அடங்குவாய்
நான் அடங்குவது இருக்கட்டும். வெளிநாட்டில் வெள்ளைப் புறாவைக் காட்டி ஆயுதங்களை மூட்டையாக் கட்டி வந்து சொந்த மக்கள் மேலேயே குண்டு போட்ட பெண்மணி;, சண்டையில் சமாதானம் என்று உலகத்தை ஏய்த்த அம்மணி .. .. இப்போது ஆட்சி வேறு கைக்கு மாறியதும் ஆடிப் போய் என்னவெல்லாமோ உளறிக் கொட்டுகிறார். சமாதானத்திற்கு ஆதரவுதான் ஆனால் புலிகளை நம்ப இயலாது என்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். எத்தனை நாளைக்குத்தான் பொய்யைச் சொல்லி பொதியைச் சுமக்கப் போகிறாவோ தெரியவில்லை.
உன்னைத் திருத்தவே முடியாது. முழுக வார்த்து தலை உணர்த்தி பவுடர் போட்டு துப்புரவாக திண்ணையில் இருக்க விட்டால் சாணத்தில் காலை வைச்சு அந்த அசிங்கத்தோடு வந்து நிற்கிறாய்.
திடாரென உலக்கைச் சப்தத்தின் இடைவெளியில் ஊடறுக்கும் பெண்கள் பேச்சை மாறுகால் மாறுகை ஊன்றி நின்று உன்னிப்பாய் கேட்கும் அவதானத்தில் கீழிறங்க .. .. அதற்குள் விறாந்தையிலிருந்து அம்மாவின் புறுபுறுப்பு வருகிறது. உலக்கை போடும் பெண்ணை ஒரேயடியாய் விட்டு வீட்டிற்குள் நுழைந்தது.
“தேத்தண்ணிக்கு இப்படியா சீனி அள்ளிப் போடுறது. குடும்பப் பொம்பிளைக்கு சிக்கனம் வேனும்” .. .. .. இது அம்மா.
“உங்க மகன் கொண்டு வாற பிச்சைச் சம்பளத்தில நாலு பிள்ளை பெத்து வளத்திருக்கிறன். சிக்கனம் தெரியாமலா ? வயசு போனா சிவனே என்டு கிடவுங்கோவன்” .. .. .. இது மனைவி.
மாமியாரா மருமகளா .. .. .. அரட்டை அரங்கப் பட்டிமன்றத் தொடக்கம்.
இனி அவ்வளவுதான். தேச சஞ்சாரம் செய்ததை இழுத்து வந்து உள்நாட்டில் விடுவதற்குள் பெரும் பாடு. உள்நாட்டை அலசிவிட்டு உள்ளுருக்குள் வருவதற்குள் இடுப்பு உடைந்து போய்விட்டது. இப்போது உள்வீட்டு யுத்தம். இனி மீட்சியே இல்லை
அவர் அசையாமல் இருந்தார். பாய்ந்து திரிந்த களைப்பில் கண் செருகும் மனம். உள்ளுக்குள் ஓட்டம் தணிவது போல் .. .. .. வண்டிச்சக்கரம் நிற்பது போல் .. .. .. அணையப் போகும் நேரத்தில் சுடர் விடும் திரியாக அடங்கும் நேரத்தில் ஒரு மின்னல்!
வெளி விசயங்களை விடப்பா. உள்ளே வந்து மண்டிக் கிடக்கிற குப்பையை கூட்டி ஒதுக்கு. செழும்பு பிடிச்ச மனத்தை சாம்பல் போட்டு தீட்டு. கழுவித் துடைச்சு பளிச்சென்று மினுக்கு. அந்த வெளிச்சத்தில் அஙுே;க ஒழித்திருக்கிற மகாதிருடனைக் கண்டு பிடி
மகாதிருடனா! யார் அது ? அடையாளம் ஏதும் உண்டா ?
அடையாளமா! பிரபஞ்சம் முழுவதுமே அவனது ரேகைதான். சின்ன இலையில் ஆயிரம் ரேகைகள், அத்தனையும் விசித்திரம். அதை விடு. உன்னைப் பார். உள்ளங்கையைப் பார். தினுசு தினுசாய் அவன் போட்டிருக்கும் ரேகையைப் பார். நீயே அவன் அடையாளந்தான். அத்தனை கோடிச் சனத்துக்கும் வித்தியாசமான ரேகை விதவிதமான குரல். ஆனால் எல்லாருக்கும் ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே காற்று ஒரே அன்பு.
பிறகேன் அவரை கள்ளன் என்கிறாய் ?
பின்ன. இவ்வளவும் செய்து போட்டு ‘கீச்சு மாச்சுத் தம்பளம்’ விளையாட்டுக் காட்டுகிறார். கண்ணைப் பொத்தி காதைப் பொத்தி என்னைக் கண்டு பிடி என்று நமக்குள்ளேயே ஒழித்திருக்கிறார். பக்காத்திருடன்!
கண்டு பிடிச்சு என்ன செய்யிறது ?
காலைப் பிடி. கழன்று விடாமல் சிக்கெனப் பிடி. ஆசையும் ஆணவமும் சுற்றி வளைத்து நின்று கொண்டு வரப் போகிறாயா இல்லையா என்று வம்பு பேசும். பிடிச்ச பிடியை விடாதே. அவனோடு சேர்ந்து தோய்ந்து ஈரமாகு. கடலில் கலக்கிற ஆறு மாதிரி அந்தக் கருணை வெள்ளத்தில் கலந்து கரைந்து போ. கரைந்தபடியே காணாமல் போ.
போனால்!
அமைதிதான். ஆனந்தந்தான்.
சுயநலமில்லையா ?
எல்லாமே சுயநலந்தான்!
அம்மாவின் மடிச்சூட்டில் அடங்கிய குழந்தை. கடிஎறும்பு காலில் ஊர்ந்தது கூடத் தெரியவில்லை. தியானம் கை கூடி வந்து கொண்டிருந்தது போல் ஒருஸஸஸஸ!
“உங்களுக்கென்ன நிம்மதியா வந்து குந்திற்றீங்க. உங்கம்மாக் கிழவி என்னை இருக்க விடுதில்லை. பெரிய சில்லெடுப்பாயிருக்கு”
மனைவி வந்து அவரின் தோளைத் தொட்டு உலுக்கினாள்.
***
- எங்கள் கலைக்கூடம் கலைந்தது!
- நீயுமா ?
- முடிக்கு விலையென்ன – உரை வெண்பா
- மீண்டும்
- திரும்பி
- தினகப்ஸா – நாதுராம் கோட்ஸே படத்திறப்பு சிறப்பிதழ்
- கடவுளும் குழந்தையும் (பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள்- 55)
- ஆசான் விருது ஏற்புரை
- மறக்கப்பட்ட புன்னகை- எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்
- உயிரித் தொழில்நுட்பவியல் (Biotechnology) கல்வி
- முதல்முதலாய்….
- விழைவோம் வா..
- சுமை
- போரும் அமைதியும்
- தியானம்
- காலத்தில் செல்லும் வார்த்தைகள்
- நரகம்
- பெண் பிறந்தாள்
- ?
- நினைத்தேன். சொல்கிறேன். தமிழரும். தனிக் குணமும் பற்றி.
- தமிழ்நாட்டின் கோவில் காடுகள் -1
- தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
- படைப்பாளியின் தார்மீக உரிமைகளும், சில கேள்விகளும்
- கடிதங்கள்
- Tamil Short Film Festival
- அரசூர் வம்சம் (தொடர் நாவல் -1)
- தபால்கார அப்துல் காதர்