அலைவரிசை

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

நரேந்திரன்


‘செக்கப் பழுத்த சிறுநீரில் சித்தரத்தை

ஒக்க வறுத்த ஒரு துவரை – நக்கி நக்கிப்

பாலில் கரைத்து நெடி பாராமல் உள்ளருந்த

ஓலமிடும் பாங்கே தனி. ‘

(சொக்கன் தந்தருளிய ‘ஜேபர்வாக்கிய ‘த்தில் நகுபோலியன்)

***

டாக்டர் வீரபத்திரன் அவருடைய முப்பத்திரண்டு வருட சர்வீசில் பார்க்காத பேஷண்டுகளில்லை; கேட்காத பிதற்றல்களில்லை. ஆனாலும் இன்றைக்கு இது ‘டூ மச் ‘ என்ற எண்ணத்துடன் அவரெதிரில் அமர்ந்திருந்தவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிதற்றலின் உச்சம் தொட்டிருந்தான் அவன். நம்புவதா, வேண்டாமா என்கின்ற குழப்பத்துடன் அவனைப் பார்வையில் எடை போட்டுக் கொண்டிருந்தார். கிறுக்குப் ப_ c2லாய் இருப்பானோ ? பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே!

இளைஞன். முப்பது வயதிருக்கலாம். முள்ளுத்தாடியுடன், முகம் நிறைந்த சோகத்துடன், இரத்தமாய்ச் சிவந்திருந்த கண்களின் கீழ் கருவளையம் பிரதானமாகத் தெரிய, முகத்தில் சொல்லமுடியாத அவஸ்தையுடன்….

‘ஒரு வாரமா மண்டைக்குள்ள ரேடியோ, இன்னிசைக் கச்சேரி, கிராஸ் டாக்குன்னு ஒரே சத்தமாக் கேக்குது டாக்டர். விடாம இருபத்து நாலு மணி நேரமும் கன்னா பின்னான்னு ஒரே இரைச்சல். சாப்பிட முடியாலே. தூங்க முடியலே…ரொம்ப இம்சை ‘

‘காதுக்குள்ற வண்டு கொடையற மாதிரி. அப்பிடித்தானே ? ‘

‘இல்ல டாக்டர். நிஜமாலுமே ரேடியோதான். ஆல் இண்டியா ரேடியோ…ஆகாஷ்வாணி…ரேடியோ மிர்ச்சி…இந்த மாதிரி!! சமயத்துல பி.பி.சி, ஏ.பி.சி கூடத் தெளிவா கேக்குது…!! ‘

‘எப்போலேர்ந்து இப்பிடி ? ‘

‘போன திங்கக்கிழமை ராத்திரி எக்மோர் ஸ்டேஷன் படிக்கட்டுல கால் தடுமாறி, இரும்புத் தூண்ல தலை இடிச்சி மயக்கமாயிட்டேன். அப்பலேர்ந்து இதே ரோதனைதான்…டாக்டர் ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்களேன்…அய்யய்யோ சத்தம் தாங்க முடியலியே…. ‘

‘குடிச்சிருந்தியாக்கும் ? ‘

‘கொஞ்சம் போலத்தான். ஃப்ரெண்டோட பர்த்டே பார்ட்டி…இப்ப அதுவா முக்கியம் ? ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்களேன்… ‘

டாக்டர் வீரபத்திரன் அவனின் காது, கண், மூக்கு எனச் சகல இடத்திலும் டார்ச்சடித்து, தனக்குத் தெரிந்த அத்தனை வித்தைகளையும் காட்டித் தோண்டித் துருவிய போதும் சந்தேகத்திற்கிடமாக ஒன்றும் தென்படவில்லை.

‘காது, மூக்குல ப்ளீடிங் எதுவும் இருந்திச்சா ? ‘

‘அதெல்லாம் ஒண்ணுமில்லே… ‘ அவன் குரலில் இப்போது கொஞ்சம் எரிச்சல் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தது.

‘ஒடனே ஒரு டாக்டர பாத்துருக்க வேணாமோ ? ஒரு வாரத்துக்கும் மேல ஆயிடிச்சேப்பா! சரி..சரி…எதுக்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்திரலாம். வேணும்னா சி.டி. ஸ்கான் கூடப் பண்ணிரலாம்….இதுக்கு முன்னாடி எப்பவாச்சும் தலையில அடிபட்டிருக்கா ஒனக்கு ? ‘

‘ம்…எட்டு வயசு இருக்குறப்ப அம்மிக்கல்லு மேல விளுந்து மண்டை ஒடஞ்சி போயி, மண்டைக்குள்ற தகடு வெக்க வேண்டியதாயிடுச்சாம். அம்மா சொல்லியிருக்கா… ‘ என்றான் இடது முன்தலையைக் கையில் தடவியபடி.

‘தகடு எதுவும் ஷார்ட் ஆகிப்போச்சோ ? ‘ என்ற யோசனையுடன் வழுக்கையைச் சொறிந்து கொண்ட டாக்டர் வீரபத்திரனின் அரை செஞ்சுரி+ வாழ்க்கையில் சந்தேகமில்லாமல் இது ஒரு சிக்கலான கேஸ்தான். அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் அவருக்கு. ஏதாவது மாத்திரையைக் கொடுத்து கை கழுவி விட்டு விடலாம்தான். ஆனால் அப்படிச் செய்வதற்கு அவரது மனசாட்சி லேசில் இடம் கொடுக்காது. வேறு யாராவது நல்ல ஸ்பெஷலிஸ்டிடம் அனுப்பி வைக்கவும் அவரது தன்மானம் இடம் தராது.

டாக்டர் வீர் பழைய காலத்து ஆசாமி. தனக்குத் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை என்று நினைக்கிற….யூ நோ…கொஞ்சம் ‘ஆல்-இன்-ஆல் அழகுராஜா ‘ டைப். அதிலும், புதிதாக படித்து விட்டு வருகிற டாக்டர்களைக் கட்டோடு வெறுப்பவர். ‘அம்புட்டுப் பயலும் ஆக்கங்கெட்ட கூகைகளப்பா. காசு குடுத்துல்லா படிச்சிட்டு வாராய்ங்க! ‘ எனச் சங்கம் வளர்த்த தமிழில் எள்ளி நகையாடுவார்.

சட்டென ஒரு தீர்மானத்திற்கு வந்தவராக, நான்கைந்து பவர்ஃபுல் ட்ரான்குவிலைசர் மாத்திரைகளை பரபரவெனச் சீட்டில் எழுதினார்.

‘ரெண்டு நாளைக்கு மாத்திரை எளுதியிருக்கேன். நல்லா தூக்கம் வரும். இந்த எக்ஸ்-ரேயை எடுத்திட்டு நாளான்னக்கி மத்தியானத்துக்கு மேல வந்து பாரு.. ‘ என்று அவனை அனுப்பி விட்டு, அவரின் நண்பரான ரமேஷ் சர்மாவுக்கு ஃபோனடித்தார்.

சர்மா கொஞ்சம் டெக்னிகல் ஆசாமி. சென்னையில் ‘கால் சென்டர் ‘, சாஃப்ட்வேர் கன்ஸல்டன்ஸி எனச் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருப்பவர். டாக்டர் வீரபத்திரனுக்கு அவரது டெக்னிகல் சமாச்சார அறிவின் மீது அபாரமான நம்பிக்கை. சங்கதியை விளக்கி, இப்படியெல்லாம் ஆவதற்கு இடமுண்டா ? எனக் கேட்க,

‘எஸ். இட் இஸ் பாஸிபிள்..அமெரிக்காவுல பல் டாக்டர் கிட்டப் போய் சொத்தைய அடைக்க ஃபில்லிங் வச்சிகிட்ட ஒருத்தனுக்கு இது மாதிரி ஆயிருக்கு. ‘ஐ லவ் யூ லூஸி ‘ சீரியல்ல நடிச்சாளே லூஸிலிபால், அவளுக்குக் கூட அப்பிடி ஆனதா படிச்சிருக்கிறேன். பட், விஞ்ஞான பூர்வமா இது சாத்தியமா, இல்லையான்னு இதுவரைக்கும் நிருபணமாகல்லே… ‘ என்றார்.

‘வெள்ளிக்கிளமை மதியத்துக்கு மேலே பேஷண்டை வரச் சொல்லியிருக்கேன். முடிந்தால் நீரும் வாருமேன்.. ‘ – டாக்டர் வீரபத்திரன்.

‘கண்டிப்பா வர்றேன். இந்த மாதிரியான கேஸெல்லாம் ரொம்ப அபூர்வமாச்சே…ஐ டோண்ட் வாண்ட் டு மிஸ் இட்… ‘ – ரமேஷ் சர்மா.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவன் நிறைய வதங்கிப் போயிருந்தான். முள்ளுத்தாடி முழுத்தாடியாக மாறிப்போயிருந்தது.

‘வாய்யா தியாகராஜன்! இப்போ எப்பிடி இருக்கு ? நல்லாத் தூங்கினியா ? ‘

‘இன்னம் அப்பிடியேதான் இருக்கு டாக்டர். தூங்குறப்போ பரவாயில்லே. முளிப்பு வந்தவுடனே சத்தமும் கூடவே வந்துடுது ‘

‘எல்லாம் சரி பண்ணிடலாம். இவரு என்னோட நண்பர் ரமேஷ் சர்மா. ஸ்பெஷலிஸ்ட். உனக்காகத்தான் இவர இங்க வரச் சொல்லியிருந்தேன். ஒரு சின்ன டெஸ்ட் பண்ணிரலாம்… ‘

தியாகராஜன் ஒரு சுழல் நாற்காலியில் அமர்ந்தான். பாட்டுச் சத்தமும், செல்ஃபோன் கிராஸ் டாக்குகளும், இன்னபிற சத்தங்களும் அவன் காதுகளைத் துளைத்துக் கொண்டிருந்தன. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை அவனுடையது. சத்தம் நிற்க நரகலைத் தின்னவும் அவன் தயார். இரைச்சல் நின்றால் சரி.

‘இப்போ உனக்கு என்ன சத்தம் கேக்குதோ, அதை அப்படியே திருப்பிச் சொல்லணும். அதை அப்பிடியே ரெகார்ட் பண்ணி அனலைஸ் பண்ணப்போறேன். சரியா ? ‘ என்றபடி டேப் ரிகார்டரின் பட்டனை அழுத்தி, ‘லெட்ஸ் கோ! ‘ என்றார்.

‘கொசவபாலையம் இசக்கிமுத்து அவர்கலே, இதோ உங்கலுக்காக, ‘நிறையப் பேசுகிறாய். பல்லை உடைப்பேன் ‘ படத்திலிருந்து சூப்பர் ஹிட் பாடலான ‘கும்தலக்கடி கும்மா…நான் கொடுக்கட்டுமா சொம்மா ‘… ‘

டாக்டர் வீரபத்திரன் நாற்காலியை கொஞ்சம் நகர்த்த,

‘குஞ்ச நேரம்

குஞ்சாஆ நேரம்

குஞ்சிப் பேசக் கூடாத்ஆ ? ‘

‘என்னய்யா பெரிய ரோதனையா இருக்கு… ‘ என்றபடி நாற்காலியை கால் வட்டம் திருப்பி, ‘இப்போ ? ‘,

‘திஸ் இஸ் விங் கமாண்டர் மல்ஹோத்ரா ஸ்பீக்கிங். லெட்ஸ் ட்ரை எ நோஸ் டைவ்… ‘

இன்னொரு கால் வட்டத்தில்,

‘ஆயாளு ஒரு தள்ளிப்பிள்ளியல்லே…நிங்ஙள் ஒண்ணும் பேடிக்காண்டா…ஞான் அவனைச் சவட்டிக் களையும்… ‘ எனச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் மலையாளத்தில் பறைய,

அவர் வெறுத்துப் போய் நாற்காலியை சன்னலுக்கருகில் தள்ளிக் கொண்டு போக, சட்டென்று,

‘எம்.கே அண்டு சன்ஸ், பன்னிரெண்டு கோடியே இருபத்தி எட்டு இலட்சம்…ஜெ.ஜெ எண்டர்பிரைசஸ், பதினெட்டு கோடியே ஏழு இலட்சம்…கோபால்சாமி அண்டு கோ, ஒன்பது கோடியே எண்பது இலட்சம்…ராம… ‘

இத்தனை நேரமும் எதுவும் பேசாமல் கவனித்துக் கொண்டிருந்த ரமேஷ் சர்மா துள்ளியெழுந்தார். தாங்க முடியாத ஆச்சரியம் அவருக்கு.

‘வெயிட் எ மினிட்…இது ஏதோ வங்கிக் கணக்கு மாதிரியில்ல இருக்கு…டெய்லி ட்ரான்சாக்சனை ஹெட் குவார்டர்ஸ்க்கு, வயர்லஸ் நெட்வொர்க் மூலம் ட்ரான்ஸ்பர் பண்றாங்க போலிருக்கு…பட் தட் இஸ் இம்பாஸிபிள்…அது எப்படி முடியும் ?!!! ‘ என்றார் நம்ப முடியாதவராக.

ரேடியோ ட்ரான்ஸ்மிஷனை இண்டர்செப்ட் பண்ணுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் டேட்டா ட்ரான்ஸ்பரை தடுத்துக் கேட்பது என்பது சாதாரணமானதல்ல. ஏகப்பட்ட கம்ப்யூட்டர் உபகரணங்கள், மென் பொருள்கள் தேவைப்படக்கூடிய சமாச்சாரம் அது. இது ஏதோ ஜீனி வேலையாகவல்லவா இருக்கிறது ?

மேற்படி ‘பிஸினஸ் மேக்னெட் ‘கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி எதுவென்று ரமேஷ் சர்மாவுக்கு நன்றாகத் தெரியும். அவருக்கும் அதே வங்கியில் ஒரு கணக்கு உண்டு. சட்டென்று லேப்-டாப்பை எழுப்பி, வயர்லஸ் நெட்வொர்க் டிவைசைப் பக்கவாட்டில் சொருகி, ஆண்டனாவை தியாகராஜனின் பக்கம் திருப்பி வைத்தார். தான் டைப் செய்வதை அவனால் சொல்ல முடிகிறதா என்று பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் விசைகளைத் தட்ட,

‘யூசியூசிபேங்க் டாட் காம் ‘

‘74635744 ‘

‘a3q$3A ‘

‘ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு ‘

அன்பிலீவபிள்…வங்கி உபயோகிக்கும் சாஃட்வேரில் ஏதோ ஓட்டை இருக்க வேண்டும். பாஸ்வேர்டைக் கூட என்கிரிப்ட் பண்ணாமல் அல்லவா அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை பெரிய செக்யூரிட்டி ரிஸ்க் இது ?

டாக்டர் வீரபத்திரனும், ரமேஷ் சர்மாவும் அடுத்த அறைக்குள் சென்று ரகசியம் பேசிவிட்டுத் திரும்பி வந்தார்கள்.

‘மிஸ்டர் தியாகராஜன் நீங்கள் ஒன்றும் கவலைப் பட வேண்டாம். அமெரிக்காவில் இதுபோல நிறையப் பேருக்கு நடந்திருக்கிறது. இதைச் சரிப்படுத்த ஸ்பெஷல் தொப்பி ஒன்று அங்கு விற்கிறதாம். எனது நண்பரைத் தொடர்பு கொண்டு உடனடியாக அந்தத் தொப்பியை வரவழைக்கப் போகிறேன். நான்கைந்து நாட்களுக்குள் வந்து விடும்…அதுவரை டாக்டர் கொடுக்கும் மருந்துகளைச் சாப்பிட்டுக் கொண்டிருங்கள்… ‘ என் றார் சர்மா.

தியாகராஜன் புறப்பட ஆயத்தமாக,

‘எதற்கும் உங்கள் அட்ரசைக் கொடுத்து விட்டுப் போங்கள். நானே நேரடியாக வந்து தொப்பியை உங்களிடம் சேர்பித்து விடுகிறேன். எங்கே தங்கி இருக்கிறீர்கள் ? ‘

‘சைதாப்பேட்டை சார் ‘ என்றான் தியாகராஜன் அசதியுடன்.

ஞாயிற்றுக் கிழமை. மாலை நேரமானதால் சாலையில் நடமாட்டம் எதுவுமில்லை. ஜனங்கள் டி.வி. பார்த்துக் கொண்டு வீடுகளில் அடைந்து கிடந்தார்கள். டாக்டர் கொடுத்த மருந்து வேலை செய்ததாலோ, அல்லது வாரக் கடைசி என்பதாலோ காதில் சத்தம் சிறிது குறைவாக இருக்க, தியாகராஜன் மெதுவாக பிரதான சாலை வரை நடந்து போய்த் திரும்பி வந்து கொண்டிருந்தான். வேலைக்குப் போய் இரண்_ ce வாரத்திற்கும் மேலாகி விட்டது. நல்லவேளையாக மேனேஜர் கொஞ்சம் அண்டர்ஸ்டேண்டிங் உள்ள ஆசாமி. குணமான பிறகு திரும்பி வந்தால் போதும் என்று சொல்லிவிட்டார்.

யோசனையுடன் வந்து கொண்டிருந்தவன், அவன் வீடிருக்கும் சந்தின் முனையில் யாரையோ எதிர்பார்ப்பது போல நின்றிருந்த மாருதி வேனைத் தாண்டிச் செல்ல முயற்சிக்க, திடாரெனத் தோன்றிய நான்கைந்து பேர் அவனைக் கோழி அமுக்குவது போல அமுக்கி வேனுக்குள் ஏற்றினார்கள். ஆரம்ப அதிர்ச்சிகள் விலகி, ‘விடுங்கடா டேய்…ஐயோ…காப்பாத்துங்க! காப்பந்துங்க! ‘ என அவன் அலற ஆரம்பிக்க, தலையில் ‘  6மாட்டேர் ‘ என்று அடி விழுந்தது.

அதன் பிறகு ஒரே அந்தகாரம். இருட்டு.

தியாகராஜனுக்கு விழிப்பு வந்தபோது எல்லாம் அமைதியாக இருப்பதை உணர்ந்தான். இரண்டு வாரங்களாக விடாமல் துரத்திக் கொண்டிருந்த ரீங்காரம் போயே போச்சு. தூரத்தில் காகம் கரையும் ஓசை கூடத் தெளிவாகக் கேட்டது.

முன்பின் அறிமுகமில்லாத அறை. கட்டில்.

நடந்தவைகள் நினைவுக்கு வர, சட்டென்று எழுந்திருக்க முயற்சிக்கையில் கட்டிலுடன் தான் சேர்த்துக் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான். அவன் வயதுடைய நான்கைந்து இளைஞர்கள் கட்டிலைச் சுற்றி நின்று கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவர்களில் ஒருவன் யாருக்கோ ஃபோன் செய்து, ‘முளிச்சிட்டான் சார் ‘ என்று தகவல் சொல்லிக் கொண்டிருந்தான்.

‘யாருய்யா நீங்கள்ளாம்…அவுத்து வுடுங்கய்யா என்னை ‘ எனக் கதறினவனை ஒருவரும் சட்டை செய்யவில்லை. வேளா வேளைக்குச் சாப்பாடு கொண்டு வைத்தார்கள். பாத்ரூம் போனாலும் கூடவே யாராவது ஒருவன் வாசனை பிடித்துக் கொண்டு நின்றிருக்க, தியாகராஜனுக்கு நடப்பவை ஒன்றும் புரியவில்லை. யார், எதற்காக தன்னை இப்படிக் கடத்தி வந்திருக்கிறார்கள் ? யாராவது அவனுடன் முகம் கொடுத்து பேசினால்தாே

‘c9 ?

வங்கிக் கணக்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ளத்தான் தன்னைக் கடத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.

அடுத்த நான்கு நாட்கள் நடந்தைவைகள் மிகவும் விசித்திரமாக இருந்தன. தினமும் ஒரே மாதிரியான ஷெட்யூல். ஒவ்வொரு நாளும் அவனைக் காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு, நகரின் மிகப் பிரபலமான வங்கிக்கருகில் நிறுத்தி, ‘கேக்குதா ? கேக்குதா ? சொல்லு…சொல்லு ‘ என்று உயிரை எடுத்தார்கள்.

ஒன்றும் கேட்கவில்லை என்று சத்தியம் செய்தாலும், ‘பொய்யா சொல்றே படவா ராஸ்கோல் ? ‘ என்று மொத்தி எடுத்தார்கள். ஒவ்வொரு நாளும் தடித்தடியாய் ஏழெட்டுப் பேர் பிரசன்னமாகி, ‘இன்னம் ஒரு நாள்தான் உனக்கு டைம். அதுக்குள்ற சொல்லாட்டி நடக்கிறதே வேறே! ‘ என்று மிரட்டி அவன் வயிற்றில் புளியைக் கரைத்தார்கள்.

ஜீன்ஸ் அணிந்து, பாப் கட்டடித்து, வெள்ளைச் சட்டையை முழங்கை வரைக்கும் மடித்து விட்ட நாரீமணி ஒருத்தியும் அவர்கள் நடுவே தோன்றி, ‘இன்னா மேன் ? சொல் மாட்யா ? மூக்லே கொத்வேன்! ‘ எனக் கொஞ்சும் டமிலில் கதைத்து விட்டுப் போனாள். அவள் பார்க்கும் பார்வை வேறு சரியில்லாமல் இருக்க, இன்னும் இரண்டொரு நாளில் கற்புக்கு களங்கம் வரலாம் என மத்திய நரம்பு மண்டலம் முன்னெச்சரிக்கை விடுத்தது.

ஆறாவது நாள், இரண்டு பேர் அவனைப் பிடித்து, மூக்கை மூடி, வாயை அகலத் திறந்து அரை பாட்டில் விஸ்கியை ‘களக்கு, களக்கு ‘ என்று வலுக்கட்டாயமாக அவன் வாயில் ஊற்றினார்கள். கொஞ்சம் போதை ஏறியதும், திரும்பவும், ‘சொல்லுறா…சொல்லுறா…!! ‘

சட்டியில் இருந்தால்தானே ஐயா அகப்பையில் வரும் ?

சமயத்தில், என்னைக் கடத்தி வருகையில் நீங்கள் போட்ட போட்டில் எனக்கு எல்லாம் சரியாகி விட்டது என்று சொல்லலாமா என்று நினைத்துக் கொள்வான். நம்புவார்கள் என்று அவனுக்குத் தோன்றாததால், நடப்பது நடக்கட்டும் என்று இருந்தான். அவ்வப்போது தன் அம்மாவை நினைத்து அவனுக்கு அழுகை வந்தது. அவனைக் காணாமல் அவள் ஒருத்திதான் பதறிக் கொண்டிருப்பாள் என்பதால்.

உயிரோடு திரும்பிச் செல்வோம் என்ற நம்பிக்கை இழந்திருந்தவன் எதிரில் திடாரென ஒருநாள் ரமேஷ் சர்மா பிரசன்னமானார். அவரைச் சுற்றிப் பழ வாசனை அடிக்க, கண் சிவந்து, நாக்கு குழறியது.

‘ஏம்பா தியாகராஜன். என்னாத்துக்கு இப்பிடி முரண்டு பிடிச்சி உடம்பை புண்ணாக்கிக்கிரே ? நாமென்ன இல்லாதவங்கிட்டயா திருடப்போறோம் ? ஜனங்க சொத்தை கொள்ளையடிச்சு மலேசியா, சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்துன்னு பதுக்கி வச்சிருக்கிறவங்கிட்ட கொள்ளையடிச்சா தப்பில்லைய்யா. அதெல்லாத்தையும் திரும்பவும் பொதுமக்கள் கிட்ட கொடுத்துரப் போறோம். ராபின் ஹூட் படிச்சதில்லே நீ ? ‘

‘என்னன்னமோ சொல்றீங்களே..எனக்கு ஒண்ணுமே புரியலியே ? நீங்கள்ளாம் யாரு ? நக்ஸலைட்டா ? ‘

‘எஸ்.ஆர்.எம் கேள்விப்பட்டதில்லே ? சோஷியல் ரிஃபார்ம் மூவ்மெண்ட். திருடங்கிட்ட இருந்து திருடப் போறம். எப்பிடி ஐடியா ?…இப்போ நீ சொல்லப் போறியா இல்லையா ? ‘ என்ற சர்மாவின் குரலில் கடுமை ஏறியிருந்தது.

‘சார் எனக்கு எல்லாம் சரியாப் போயிடுச்சு சார். சத்தம் எதுவும் இப்போ கேட்கிறதில்லை. என்னக் கடத்தி வரப்போ உங்க ஆளுங்க என் தலையில அடிச்ச அடியில எல்லாம் சரியாயிடுச்சி…என்னை விட்டுருங்க… ‘ என்று பேசிக் கொண்டே போனவன், சட்டென நிறுத்தி, ‘ஆ!!! ‘ என்றான்.

அவன் நோக்கிய திசையில், ஓங்கிய கிரிக்கெட் மட்டையுடன் ஒருவன் வேகமாக வந்து கொண்டிருந்தான்.

*

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்

அலைவரிசை

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


சோலையை ஊடுருவிய காலை வெய்யில் வாசலில் வந்து நின்ற வீணாவின் முகத்தைச் சுட்டது. ராஜாவை இன்னமும் காணவில்லை. ஒரே பிள்ளை அஜித்தின் ஆறாவது பிறந்த நாள் இன்று. எல்லாமே புதிதாக அணிந்து பனியில் குளித்த மலராய் பிள்ளை ஜொலித்தான். எப்போதும் போல வீட்டில் கேக் வெட்டிக் கொண்டிராமல் அன்றையப் பொழுதை வெளியே போய் குடும்பத்தோடு கழிக்க விரும்பினாள் வீணா. நாட்டு நிலவரம் சீராயில்லை என்றான் ராஜா. அம்மாவின் விருப்பத்தை பிள்ளையும் ஆமோதித்து நச்சரிக்க சாம்பல்தீவுக் கடற்கரைக்குப் போவதென்று முடிவாயிற்று. முந்தின இரவு ஒரு மணி வரை விழித்திருந்து தயாரித்த வகை வகையான நொறுக்குத் தீன்கள் உள்ளிட்ட எல்லா ஆயத்தங்களோடும் வீணா காத்திருந்தாள்.

நகரத்தோடு மிகவும் நெருங்காமலும் அதிகம் விலகாமலும் இருந்தது அவர்களின் வீடு. ஒரே மகள் வீணாவிற்கென்று குமாரசுவாமி பார்த்துப் பார்த்துக் கட்டியது அது. வீடு கட்டிய கையோடு வீணாவிற்கு மாப்பிள்ளையும் பார்த்து கட்டி வைத்து விட்டார் அவர். ராஜாவிற்கு அவர்கள் அளவிற்கு செல்வச் செழிப்பு இல்லாவிட்டாலும் உத்தியோக லட்சணம் மிகுந்த குடும்பப் பின்னணி இருந்தது. அரச திணைக்களமொன்றின் பொறியியலாளர் அவன்.

வீணா தொலைபேசியில் அலுவலகத்திற்குக் கதைத்தாள். அவர் லீவு போட்டு விட்டுப் போய் அரை மணித்தியாலமிருக்கும் என்று கணக்காளர் சொன்னார். பத்து நிமிடங்களில் வந்து விடக்கூடிய தூரந்தான். எங்கே போனார் ? சரியாக நாற்பது நிமிடங்களின் பின் வந்து சேர்ந்தான் ராஜா. வழியில் கொஞ்சம் பிந்திப் போச்சு வீணா என்றான்.

வீணா கணவனுக்குப் பக்கத்தில் ஏறிக் கொண்டாள். அஜித் பின் சீற்றில் துள்ளி ஏறி அப்பாவின் கழுத்தைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான்.

வழியில் அரச படைகளின் மூன்று சோதனை மறிப்புகள். தமிழ்ப் பிரதேசமாயிருந்தும் தமிழர்கள் என்பதால் கார் கடும் சோதனைக் குள்ளாகியது. முறுக்கு சான்விச் வைத்த பாத்திரங்கள் கூடத் தப்பவில்லை. அவர்களைத் தாண்டிப் போவதற்குள் ஏன் வந்தோம் என்று ஆகிவிட்டது. கடற்கரையை நோக்கிய குறுகிய பாதையில் கார் திரும்பிய போது ராஜா சொன்னான்.

“சொன்னாக் கேட்டாத்தானே .. நினைச்சதைச் செய்ய வேனும் உனக்கு”

அவள் தலையை நிமிர்த்தினாள். “பிள்ளை ஆசைப்பட்ட படியாத்தான் கேட்டனான்”

“அவன் சின்னப்பிள்ளை .. நாங்கள் தான் யோசிக்க வேனும்.”

“நீங்க பிந்தி வந்ததுக்கு நான் என்ன செய்யிறது.”

அவனது மெளனம் அவளுக்கு எரிச்சலை உண்டாக்கிற்று.

“நீங்க முந்தியே வெளிக்கிட்டாங்களாமே ? ”

“வருகிற வழியில் அண்ணன் வீட்டிற்குப் போயிருந்தேன்.”

அவள் ஏன்; என்று பார்வையால் கேட்டாள்.

“சுரேசும் வந்தா பிள்ளைக்கு விளையாட ஆளிருக்கும் என்று பார்த்தேன். அவன் பள்ளிக்குப் போயிற்றான்.”

“நாங்க மட்டும் போறது என்றுதானே நேற்று யோசிச்சது பிறகெதுக்கு மற்றாக்கள் ? ”

ராஜா சடுதியாக பேச்சை நிறுத்திக் கொண்டான். கேள்வியும் பதிலும் இப்படியே தொடர்ந்தால் பிறந்த நாள் – பிரச்னை நாளாக மாறும் அபாயம் தெரிந்தது.

“அப்பா நண்டு பிடிச்சா இதுக்குள்ள போட்டு மூடலாமாப்பா” .. .. என்று சிறிய பிளாஸ்டிக் பெட்டியைக் காட்டி அஜித் கேட்டான். வெறுமனே தலையாட்டினான் ராஜா. மூடியை மூடக் கூடாது மகனே என்று வீணாதான் பிள்ளைக்குப் பதில் சொன்னாள். கடற்கரை வந்தது. பீச் ஹோட்டல் சந்தடியில்லாமல் மொட்டை மரமாயிருந்தது. காரை அங்கே தான் நிற்பாட்ட வேண்டும். ஒரு மரியாதைக்காக மூன்று கூல் ரிங்ஸ் வாங்கிக் கொண்டு வந்தான் ராஜா.

ஆழ்ந்த துயிலில் இருக்கும் குழந்தையின் மிருதுவோடு கடல் பட்டுப் போல இருந்தது. நீண்ட நாட்களாய் மனிதக் கறை படாத மணல் திட்டுகள் வெண்ணெய் நிறத்தில் தொலை தூரத்திற்கு நீண்டிருந்தன. அஜித்திற்கு புதிய சஸ்பெண்டர் போட்டு விட்டாள் வீணா. ராஜா மகனைத் தூக்கிக் கொண்டு போய் நீரில் இறக்கி விட கால்களைத் தொட்டுச் செல்லும் சின்ன அலைகளுக்குப் பயந்து பின்வாங்குவதும் திரும்ப வருவதுமாக அவன் துள்ளினான். வீணா கடலில் இறங்கினாள்.

வீணா தூரத்துக்குப் போகாதே அந்தப் பக்கம் ஆழம் என்றபடியே அவளது கையைப் பிடித்து ராஜா இழுக்க அவள் சிரித்தாள். சிரிப்பைக் கண்டதும் அவனுக்கு ஆறுதலாயிற்று.

“அங்க பாத்தியா – தட்டத்தனிய பிள்ளை விளையாடுறான்… சுரேஷ் வந்திருந்தால் பிள்ளைக்குப் பிராக்காய் இருந்திருக்கும்.”

“சரி சரி விடுங்க….அவங்களைக் கூட்டிக் கொண்டு வராவிட்டால் உங்களுக்குப் பத்தியப் படாது.”

“இப்ப நான் என்ன சொல்லீற்றன் என்று கோவிக்கிறாய்.”

“ஆர் கோவிச்சது – நீங்க தான் தேவையில்லாம இன்;றைக்கு இந்தப் பிரச்னையைக் கிளப்பிறீங்க.”

“இதில் என்ன பிரச்னை ? ”

“அவனைக் கூட்டி வரப் போறனென்று என்னிடம் சொன்னீங்களா ? ”

“வருகிற வழியில்தான் யோசனை வந்தது”

“சுரேஷ் இல்லாவிட்டால் எங்க மாமா மகனைக் கூட்டி வந்திருக்கலாமே”

“ஆர் முரளியா .. அவனுக்குப் பதினைஞ்சு வயசு அவன் எப்படி பிள்ளையோடு விளையாடுவது ? ”

“அவனும் சின்னப்பிள்ளைதான். எங்கட ஆக்களென்றால் உங்களுக்கு ஒரு நாளும் சரி வராது.”

“பிறந்த நாள் அதுவுமா ஏன் தேவையில்லாம வாக்குவாதம் வீணா”

“நீங்கதானே துவங்கினது”

“ஏன் உங்கட எங்கட என்று பிரிச்சுப் பிரிச்சுப் பேசுகிறாய் வீணா”

“தேவையில்லாமல் என் வாயைக் கிளறாதீர்கள் ”

“எனக்குக் காது செவிடில்லை மெதுவாக் கதை .. .. பிள்ளைக்குக் கேட்கப் போகுது.”

“உங்கட ஆக்களைச் சொன்னா பொத்துக் கொண்டு வருகுது உங்களுக்கு”

“வீணா .. .. தேவையில்லாமக் கதைக்காதை”

“நான் தேவையோடுதான் கதைக்கிறேன்”

“இப்ப வாயைப் பொத்தப் போகிறாயா இல்லையா ? ”

அவள் முறைத்துப் பார்த்தாள்.

“என்னடி முறைப்பு. பொத்தடி வாயை” .. .. அவளது முகத்தில் தண்ணீரினால் விசிறினான் ராஜா.

குழிக்குள் மறைந்து கொண்ட நண்டுக் குஞ்சொன்றை பிடிப்பதில் தீவிரமாயிருந்த அஜித் சப்தம் கேட்டு நிமிர்ந்தான். நண்டைப் பிடிச்சிற்றியா மகனே என்று கேட்டுச் சமாளித்துக் கொண்டே தலை குனிந்தான் ராஜா.

ஆழமான பகுதிக்கு வீணா தனியாக நகர்ந்தாள். அவனுக்குப் பயமாக இருந்தது. எனினும் கவனிக்காதது போல மற்றப் பக்கம் திரும்பி நின்றான். அவளையே தலை முழுகுவது போல் ஒரு தரம் நீருக்குள் மூழ்கி எழுந்தான். அவள் இன்னும் தூரமாக நகர்ந்தாள். கடலில் ஒரே சீரான மெல்லிய அலை இப்போது உருவாகி நகர்ந்து கொண்டிருந்தது. தங்கள் இருவரின் மன அலைகள் ஏன் ஒரே கோட்டில் பிரயாணம் செய்ய முடியவில்லை என்பது புரியாமல் அவன் குழம்பினான். தன் கணவன் தன் பிள்ளை என்ற பிடிப்போடு எல்லாவற்றிலும் ஒத்துப் போகும் வீணா இந்தச் சின்ன விசயத்தில் மட்டும் முரண்படுவதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த முரண்பாடு மட்டும் இல்லாமலிருந்தால்!

அவன் பெருமூச்சு விட்டான்.

எல்லோரையும் புரிந்து கொள்ளக்கூடிய தன் புருசனால் தன் உணர்ச்சிகளை மட்டும் ப+ரணமாகப் புரிந்து கொள்ள முடியவில்லையே என வீணா கவலையில் ஆழ்ந்தாள்.

சூரியன் இப்போது உச்சிக்கு வந்து விட்டது. கரைக்கு வந்து மகனோடு மணல் வீடு கட்டினான் ராஜா. அவசரத்தில் புறப்பட்டதால் காலை சாப்பிடவுமில்லை.

வீணா குளித்துக் கொண்டேயிருந்தாள்.

“அப்பாவுக்குப் பசிக்குது அம்மாவிடம் சொல்லு அஜித்.”

“அம்மா அப்பாவுக்குப் பசிக்குதாம் வாங்கோ.”

அவளிடமிருந்து பதிலில்லை.

“அம்மா எனக்கும் பசிக்குதும்மா.”

“பசிச்சா போய்ச் சாப்பிடுங்க.”

அவன் அஜித்தைக் கூட்டிக் கொண்டு துணி விரிக்கைக்கு நடந்தான். வீணா இல்லாமல் அவனால் சாப்பிட முடியாது. ராத்திரி முழுக்க புருசனுக்கு இது பிள்ளைக்கு இது என்று கண் விழித்து எல்லாம் செய்தவளை விட்டு எப்படி உண்பது! வழமையில் புருசனும் பிள்ளையும் சாப்பிட்ட மிச்சந்தான் அவளுக்கு. அப்படியான வீணா இல்லாமல்!

அஜித் அம்மாவிடம் போனான். கொஞ்ச நேரம் கழித்து அம்மாவும் பிள்ளையும் கரைக்கு வந்தார்கள். அவள் தலையைத் துவட்டி உடுப்பை மாற்றிக் கொண்டு பிள்ளைக்குச் சான்விச் கொடுத்தாள். இன்னொரு தட்டில் சான்ட்விச் எடுத்து ஓரமாய் வைத்தாள். அம்மாவைச் சாப்பிடச் சொல்லும்படி மகனிடம் கண் காட்டினான் ராஜா. கட்லட்ஸ் முறுக்கு அடுக்கி இன்னொரு கோப்பையில் வைத்தாள். கூல்ரிங்ஸ் இரண்டு கிளாஸ்களில் ஊற்றி வைத்தாள். அவள் எதையும் வாயில் வைக்கவில்லை.

சூரியன் நடுஉச்சிக்கு வர> நிழல்கள் சின்னதாக முன்னுக்கு விழுந்தன. அவள் மணலைக் கோதி கையில் இறுக்கி கொஞ்சம் கொஞ்சமாக நழுவவிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் நகர> தான் ஆரம்பத்தில் சினக்காமல் இருந்திருக்கலாம் என்று வருந்தினான் ராஜா. தான் கொஞ்சம் பணிந்து போயிருந்தால் பிரச்னை நீண்டிருக்காது என்று எண்ணினாள் வீணா.

“சாப்பிடு வீணா” .. .. ராஜா தலை குனிந்தபடி சொன்னான். அவள் சும்மாயிருந்தாள்.

“சாப்பிடம்மா” .. .. என்றான் பிள்ளை. பிள்ளை கேட்டதற்காகச் சாப்பிடுவது போல ஒரு சான்;ட்விச்சை எடுத்துக் கடித்தாள் வீணா. அந்த ஆறுதலில் ராஜா விரிக்கையில் சரிந்தான்.

மணல் கூடுதலாகச் சுடத் தொடங்க> அவர்கள் புறப்படத் தயாரானார்கள். வீணா மகனோடு பின் சீற்றில் ஏறிக் கொள்ள கார் வீட்டை நோக்கிப் புறப்பட்டது. அம்மாவும் அப்பாவும் ஏன் உம்மென்று இருக்கிறார்கள் என்று புரியாமல் தான் பிடித்து வைத்திருந்த நண்டுக் குஞ்சின் மிருதுவான ஓட்டை தடவிக்கொண்டிருந்தான் பிள்ளை.

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்