குரு தட்சிணை

This entry is part [part not set] of 26 in the series 20020210_Issue

அலர்மேல் மங்கை


அந்த வகுப்பறை மிகவும் நிசப்தமாகிப் போனது. மெட்றாஸ் ஐ.ஐ.டி ராதாராமன்களும், வெங்கட்ராமன்களும், சீனிவாசன்களும் மிகவும் வெட்கித் தலை குனியும் நிலைக்குப் போனார்கள். இன்னும் இரண்டு வாரங்களிலோ, இரண்டு மாதங்களிலோ இவர்கள் பெயர் ராட் என்றும், வின்க்கி, ச்சினு என்றும் மாறிவிடும் என்று சிவ சுப்பிரமணியன் என்ற சிவா நினத்துக் கொண்டான். மெட்றாஸ் ஐ.ஐ.டியின் பெரிய தலைகள் சிவாவை மன்னிக்கவே முடியாது என்பது போல் ஒரு அற்பப் பார்வை பார்த்தனர். சிவா போன்றவனுக்கு யுனிவர்சிட்டி அப் மிச்சிகன் போன்ற உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் எப்படி அட்மிஷன் தந்தது என்று இன்னும் ஒரு மாதம் ராட்களும், வின்க்கிக்களும், ச்சினுக்களும் மண்டையை உடைப்பார்கள். நன்றாக உடைக்கட்டும்.

சிவா அந்த வகுப்பறையை மெதுவாகச் சுற்றிலும் நோக்கினான். ராதாராமன்களும், வெங்கட்களும் தவிர, மும்பை ஐ.ஐ.டி சுனில் நாக்ரேயும், கரக்பூர் ஐ.ஐ.டி பிபின் முகர்ஜியும், ஷுபாங்கர் கோஷும் அவனைப் பரிதாபமாகப் பார்த்தனர். அவர்கள் சிவா என்ற சிவ சுப்பிரமணியத்தை மன்னிக்கத் தயாராகி விட்டார்கள். இவர்களைத் தவிர இரண்டு சீன முகங்களும், மீதி அத்தனையும் வெள்ளைக்கார அமெரிக்க முகங்களும். ப்ரொபஸர் ரிச்சர்ட் நோலன் முகத்தில் இருந்த திகைப்பு விலகி லேசான புன்னகை தெரிந்தது.

‘ரெம்ப நல்லது, மிஸ்டர். ஸீவ ஸுப்ராமேனியன்…உங்கள் நேர்மை எனக்குப் பிடிக்கிறது. கம்ப்யூட்டர் டிசைன் நீங்கள் தொடரப் போகும் எம்.எஸ்ஸுக்கு மிக முக்கியம். இந்திய பல்கலைக் கழகங்கள், கட்டிட டிசைன்களுக்கு கம்ப்யூட்டரை இன்னும் அறிமுகப் படுத்தவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமூட்டும் விஷயம்….! ‘

நோலன் சிறிது நிறுத்தினார். அவர் நிறுத்திய உடன், ‘ராட் ‘டின் கை உயர்ந்தது. அவன் முன் இருந்த சிறு அட்டை, ஆங்கிலத்தில் ‘ராதா க்ரிஷ்ணன் ‘ என்று பறை சாற்றியது. அவன் பெயரை ஒரு முறை ஆழப் படித்து விட்டு, நோலன் அவனை,

‘யெஸ், மிஸ்டர். ரதா க்ரீஷ்ணன்.. ‘ என்று புன்னகைத்தார். அவன் சிவா மீது ஒரு ஏளனப் பார்வை வீசி விட்டு தொடர்ந்தான்,

‘ப்ரொபஸர். நோலன்..இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனமான் ஐ.ஐ.டி, கம்ப்யூட்டர் டிசைனை ஒரு கட்டாயப் பாடமாகப் போதித்து வருகிறது என்றும், ஐ.ஐ.டி ஸிவில் எஞ்ஞினியரிங் மாணவர்கள் டிசைன் செய்துள்ள கட்டிட டிசைன்கள் உலகத் தரம் வாய்ந்தது என்பதிலும் ஐ.ஐ.டி மாணவனான நான் பெருமை கொள்கிறேன்… ‘ என்று நிறுத்தினான்.

நோலன் மீண்டும் புன்னகைத்தார்.

‘வெரி இண்ட்ரஸ்டிங் ..எனிவே….. நாம் பாடத்தைத் தொடரலாம். மிஸ்டர்.சீவா, வகுப்பு முடிந்ததும் நீங்கள் என்னை வந்து அறையில் சந்தியுங்கள் ‘ என்றார்.

ராதா க்ரிஷ்ணனை மெட்றாஸ் ஐ.ஐ.டி கூட்டம் நன்றியுடன் பார்த்துப் புன்னகைத்தது. சிவா சிறிதாகச் சோர்ந்தான். ஆர்.இ.ஸியில் கம்ப்யூட்டர் டிசைனை ஒழுங்காகப் படித்திருக்கலாம் என்று நொந்து கொண்டான். அதென்னவோ கம்ப்யூட்டர் அவனை எப்போதும் சிறிது கலவரப் படுத்தியது. ஸிவில் இஞ்ஜினியரிங் அவனை எந்த அளவு உற்சாகப் படுத்தியதோ அந்த அளவு கம்ப்யூட்டர் துறை அவனைத் துன்பப் படுத்தியது. சிவில் எஞ்சினியரிங்கில் எடுத்திருந்த மதிப்பெண்களும், ஜி.ஆர்.இ யிலும், டோபலிலும் எடுத்திருந்த அதீதமான மதிப்பெண்களும் யுனிவர்ஸிட்டி அப் மிச்சிகன் போன்றதொரு பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித் தந்தது. ஆனால் கம்ப்யூட்டர் எயிடட் டிசைனும் ப்ரொபஸர் நோலனும் சிறிது புளியைக் கரைத்தார்கள்.

ப்ரொபஸர் நோலனின் அறை….

மிகச் சிறிய சதுர அறை. சுவற்றின் மூன்று பக்கங்களிலும் கூரை வரை புத்தக அலமாரி. உலகத்தில் சிவில் இஞ்சினியரிங்கிலும், ஸ்ட்ரக்சுரல் இஞ்சினியரிங்கிலும் எழுதப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் அந்த அலமாரிகளில் வரிசயாகவும், தாறு மாறாகவும் அமர்ந்திருந்தன.கம்ப்யூட்டர் ஒன்றில் உலகின் மிகச் சிறந்த கட்டிடங்கள் ஸ்க்ரீன் சேவராக ஓடிக் கொண்டிருந்தது. அதில் தில்லியில் உள்ள லோடஸ் டெம்ப்பிளைக் கண்டதும் சிவாவிற்குப் பெருமையாக இருந்தது. சிறிய காபி மேக்கர் ஒன்று ஒரு மூலையில். சுவற்றில் ‘மோனே ‘ வரைந்த பெயிண்டிங்கின் காப்பி பெரிதாகப்பட்டு ப்ரேமில் தொங்கியது. மேஜை மீது இரண்டு, மூன்று வெள்ளைக்கார குழந்தைகளும், பெண்களும், போட்டோக்களாக.. தலை கீழ் ‘ப ‘ வடிவில் அமைந்திருந்த மேஜையில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்த ப்ரொபஸர் நோலன் சிவாவைக் கண்டதும் புன்னகைத்தபடி புத்தகத்தை மூடி வைத்தார்.

‘குட் அப்டர்னூன் டாக்டர். நோலன்…. ‘

‘குட் அப்டர்னூன் மிஸ்டர். சுப்ரமேனியன்… ‘

அவனுடைய அழகான பெயரை அவர் துவம்சம் செய்வதை அவன் பொருட்படுத்தவில்லை. போகட்டும். இவரால் நிறைய ஆக வேண்டி உள்ளது. இவருடைய கருணையும், தயவும்தான் அவனை உய்ப்பிக்க வேண்டும்.

‘ஹாவ் அ ஸீட்… ‘ என்று நாற்காலியைக் காட்டினார். சிவாவுக்குச் சிறிது தயக்கமாக இருந்தது.

‘தட் இஸ் ஓகே..இருக்கட்டும்.. ‘

‘ப்ளீஸ் பி கம்பர்ட்டபிள்…ஹாவ் அ ஸீட். ‘

என்று கூறி விட்டு மூக்குக் கண்ணாடியை அணிந்து கொண்டார். சிவா தயக்கத்துடன் அமர்ந்து கொண்டான். இந்தியப் பேராசிரியர்களுக்கு இருப்பது போல மாணவர்களை மணிக் கணக்கில் நிற்க வைத்துப் பேசும் அற்ப ஆனந்தம் அமெரிக்கப் பேராசிரியர்களுக்கு இருப்பதில்லை. நோலன் மேஜை மேலிருந்து சிவ சுப்ரமணியன், டிபார்ட்மன்ட் அப் சிவில் இஞ்சினியரிங் என்று எழுதப்பட்டிருந்த பைலைத் திறந்தார். சிவாவுக்கு நாடித்துடிப்பு சிறிது தாறுமாறாகியது. அவன் எம்.எஸ் சேர அனுப்பிய விண்ணப்பம், பி.ஈ யில் அவனுடைய மதிப்பெண்கள், இந்தியப் பேராசிரியர்களின் பரிந்துரைகள், டோபல், ஜி.ஆர்.இ மதிப்பெண்கள், என்ற அவனைப் பற்றிய விபரங்கள் அனைத்தும் இருந்தன. ப்ரொபஸர் நோலன் ஒவ்வொரு பக்கமாக அவனுடைய புத்திசாலித்தனத்தைப் பறைசாற்றும் விஷயங்களை ஆராய்ந்தார். சிவாவுக்குச் சிறிது நடுக்கமேற்பட்டது.

‘அடடே…யுனிவர்சிடி மிகப் பெரிய தவறு செய்து விட்டது…உன்னைப் போன்றவர்களுக்கு இது இடமில்லை.. ‘

என்று கூறப் போகிறார் என்று தீர்மானம் செய்து விட்டான்.

நீண்ட ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு லேசான புன்னகையுடன் நிமிர்ந்தார்.

‘வெரி வெல்..மிஸ்டர் சுப்ரமேனியன்…ஐ அம் வெரி இம்ப்ரஸ்ட்… ‘

சிவா புரியாதவனாக அவரை வெறித்தான்.

அவன் கண்களில் தெரிந்த குழப்பமும், பயமும் அவருக்கு வேடிக்கையாக இருந்தது.

‘ஆர் யு ஓகே ?… ‘

‘யெஸ்…யெஸ் டாக்டர். நோலன்… ‘

இப்பொழுது மிகப் பெரிதான ஒரு புன்னகையைப் படர விட்டார்.

‘ நீங்கள் மிகவும் பதட்டமடைந்தவராகத் தெரிகிறிர்கள். ஒன்றும் இல்லை. ரிலாக்ஸ்..உட் யு லைக் டு ஹாவ் ஸ்ம் காபி ? ‘

‘ நோ…ஐ ஆம் பைன்… ‘

பாலும், சர்க்கரையும் இல்லாத தண்ணீர்க் காபியை யார் குடிப்பது ?

ப்ரொபஸர் நோலன் வற்புறுத்தவில்லை. பைலைத் திறந்தபடியே மேஜை மீது வைத்தார்.

பின் தொடர்ந்தார்….

‘உங்கள் மதிப்பெண்களும், சிவில் இஞ்சினியரிங்கில் உங்களுக்கு இருக்கும் ஆர்வமும் மிகவும் அருமை…உங்கள் மதிப்பெண்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்தினாலும், கம்ப்யூட்டர் எயிடட் டிசைனில் உங்கள் மதிப்பெண்கள் சிறிது ஏமாற்றமளிக்கின்றன… ‘

சிவா சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டான். டாக்டர் நோலன் மீண்டும் தொடர்ந்தார்..

‘இன்று நீங்கள் வகுப்பில் ‘ஆட்டோகாட் ‘ என்ன என்று தெரியாது என்று கூறிய போது எனக்கு அது சிறு அதிர்ச்சியைத் தந்த போதிலும், உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன். ஆனால் கம்ப்யூட்டர் எய்டட் டிசைன் கோர்ஸை நீங்கள் படிப்பதற்கு முன்னால் நீங்கள் கம்ப்யூட்டரைப் பற்றி சில அடிப்படை விஷயங்களைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அதற்கு இன்னொரு கோர்ஸ் அத்யாவஸ்யம்… ‘

நிறுத்தி விட்டு தண்ணீர்க் காபியைப் பருகினார்.

‘எனவே நீங்கள் இந்த செமஸ்டர் எடுத்திருக்கும் கம்ப்யூட்டர் எயிடட் டிசைனில் இருந்து விலகி முதலில் கம்ப்யூட்டரின் அடிப்படைக்கான கோர்ஸ் ஒன்று எடுக்க வேண்டும்…. ‘

எல்லாவற்றுக்கும் சிவா ‘பூம் பூம் ‘ மாடாகத் தலை ஆட்டினான்.

சிவாவுக்காக ‘கம்ப்யூட்டர் சயன்ஸ் 201 – இண்டிபெண்டென்ட் ஸ்டடி ‘ என்ற கோர்ஸை ப்ரொபஸர் நோலன் உருவாக்கினார். ஒரு சிறிய சிவில் இன்ஜினியரிங் ப்ராஜெக்டை கம்ப்யூட்டர் துணை கொண்டு முடிக்க வேண்டும். வாரம் ஒரு முறை ப்ரோபஸர் நோலனைச் சந்தித்து ரிப்போர்ட் தர வேண்டும் என்றும் முடிவாகியது. கம்ப்யூட்டர் சயன்ஸ் 201 ஐ முடித்த பின்பே அடுத்த செமெஸ்டரில் கம்ப்யூட்டர் எயிடட் டிசைன் கோர்ஸை எடுக்க அவன் அனுமதிக்கப் படுவான் என்பதையும் நோலன் விளக்கினார்.

நோலனுடன் பேசி முடித்து விட்டு ஸ்டூடன்ட்ஸ் அபார்ட்மண்ட் போகும் வழியில் சிவாவுக்குத் தன் மீதே எரிச்சலாக வந்தது. ஆர்.இ.ஸி யில் எல்லாரும் கம்ப்யூட்டரைத் தட்டிக் கொண்டிருந்த போது இவன் மட்டும் ஷட்டில் காக், டேபிள் டென்னிஸ் என்று அலைந்த நாட்களை நினைத்துக் கொண்டான். அபார்ட்மெண்டுக்குப் போகப் பிடிக்கவில்லை சிவாவுக்கு. இன்று சுதாகர் ரெட்டி சமைக்கும் முறை. கம்ப்யூட்டர் சயின்ஸில் எம்.எஸ் படிக்கும் ஆந்திர மா நிலத்து மாணவன். அவன் சமைக்கும் கொஞ்சம் கூட வேகாத சாதமும், ‘டின் ‘னில் தண்ணீரில் ஊறிய பீன்ஸைப் போட்டு சாம்பார் என்ற பெயரில் அவன் செய்யும் கொடுமையும்…

சிவா சிரித்துக் கொண்டான். தேவையில்லை..இவ்வளவு அவசரமாக ஓடி வாயில் திணித்து, வயிறு ஏற்றுக் கொள்ள அப்படியொன்றும் அது அமிர்தமில்லை. மெதுவாகவே போகலாம். சிவா யுனிவர்சிட்டி ‘ஜிம் ‘மை நோக்கி நடந்தான்.

இண்டோரில் அமைந்திருந்த வாக்கிங் ட்ரெயிலில் இருபது நிமிடங்கள், மனதுக்குள் கந்தர் சஷ்டி கவசம் சொல்லிக் கொண்டே நடந்தான். அந்தத் திருச்செந்தூர் முருகன்தான் அவனை ப்ரொபஸர் நோலனிடம் இருந்து காக்க வேண்டும். அடுத்து வெயிட் ரூமுக்குள் நுழைந்தான். வித விதமான உடற் பயிற்சிக் கருவிகள். வெள்ளைக்கார, கறுப்பு மாணவர்கள் ஆவேசமாகவும், தீவிரமாகவும் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். சிலரைப் பார்க்கவே சிவாவுக்குப் பயமாக இருந்தது. சிலர் ராட்சத உயரம்..இது போன்ற ராட்சத உயர மாணவர்களிடம் நோலன் சிறிது ஜாக்கிரதையுடன்தான் நடந்து கொள்வார் என்று சிவாவுக்குத் தோன்றியது. எக்ஸர்ஸைஸ் சைக்கிள் மீது அமர்ந்து ஓட்டத் துவங்கிய ஐந்து நிமிடங்களில் நோலன் ஷார்ட்ஸ், டி-ஷர்ட், கையில் தண்ணீர் பாட்டில் சகிதம் உள்ளே நுழைந்த போது சிவா ஒரு நிமிடம் திகைத்துப் போனான். அடுத்த ஐந்து நொடிகளில் அவர் கண்களில் படாமல் வெளியேறினான்.

‘இதென்ன எங்கே போனாலும் பூதம் விடாமல் துரத்துகிறதே ‘என்று தனக்குள் முனகிக் கொண்டான். போகட்டும், பூதத்திடம் இருந்து சஷ்டி கவசமும், திருச்செந்தூர் முருகனும் காப்பாற்றுவார்.

நாட்கள் வேகமாகப் பறந்தன. நோலனைச் சந்திக்க வேண்டிய நாட்கள் மட்டும் சிவாவுக்கு மிக மெதுவாக நகர்ந்தது. அவர் கொடுத்திருந்த ப்ராஜெக்ட் அதிகக் கஷ்டமில்லைதான். ஆனால் அதை கம்ப்யூட்டர் மூலமாகச் செய்ய வேண்டும் என்பதில்தான் அவனுக்குச் சிறிது பிரச்னை. சில நேரம் சுதாகர் ரெட்டி கம்ப்யூட்டரில் உதவி செய்தான். பல நேரங்களில் சிவா தனிமையில் கம்ப்யூட்டருடன் திண்டாடினான். டென்ஷனைக் குறைக்க வாரம் இரு முறை ‘ஜிம் ‘முக்குப் போக முடிவு செய்தான். இருபது நிமிடங்கள் ‘கந்தர் சஷ்டி கவசம் ‘ கூறியபடி வாக்கிங் ட்ரெயிலில் நடந்தான். பின்பு வெயிட் ரூமுக்குள் நுழைந்து ரெம்பவும் பயப்படுத்தாத உடற் பயிற்சி சாதனங்களில் சிறிது கவனம் செலுத்திய போதுதான், ப்ரொபஸர் நோலனும் அவன் வரும் நாட்கள் எல்லாம் அவரும் உடற் பயிற்சி செய்வதைக் கவனித்தான். பூதம் ஒரே நிமிடத்தில் தெய்வமாகத் தெரிந்தார். ‘அடடா…கண் முன்னே தெய்வம் நிற்கிற போது பூசாரி எதற்கு ? ‘ என்று புல்லரித்தது, அவனுக்கு. இனி செமஸ்டர் முடியும் வரை சுதாகர் ரெட்டியின் சாம்பாரையும், புளியோதரையையும் பயமில்லாமல் விமர்சிக்கலாம். ப்ரொபஸர் நோலனுக்கு வெயிட் ரூமில் வெயிட் எடுத்துக் கொடுத்து அசத்தி விட்டால், அவருடைய அருள் பாலிக்காதா என்ன ? ஆஹா! ஜிம்முக்கு வந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று! கம்ப்யூட்டருடன் மட்டும் மாரடிக்கும் அறிவு ஜீவிகளான ‘ராட், ச்சின்னு, வின்க்கி ‘க்களுக்கு ஜிம்மின் அருமையும் பெருமையும் தெரியப் போவதில்லை, அதனால் வரும் ஆதாயங்களும் தெரியப் போவதில்லை.

மறு நாள் முதல், மாலைகளில் ப்ரொபசர் நோலன் வரும் நேரமாக ஜிம்முக்குப் போகத் துவங்கினான். வெயிட் ரூமில் போய் அவருக்கு ‘குட் ஈவ்னிங். டாக்டர் நோலன் ‘ என்றான். முதல் நாள் கண்களில் சிறிய ஆச்சர்யத்தைக் காட்டினார். ஜிம்முக்கு வருவதில் அவனுக்கு இருக்கும் ஆர்வத்துக்கும், அவனுடைய உடலுக்கும் இருக்கும் முரண்பாட்டை ஒரு கணம் அவருடைய அறிவு ஏற்க மறுத்திருக்கும். அந்த முதல் நாள் அவரை, அதிகம் அணுகாமல் நிறுத்திக் கொண்டான். மறு நாள் சிறிது தைரியத்துடன் நெருங்கினான். பூதத்தை தெய்வம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் பயந்தால் எப்படி ?

‘குட் ஈவ்னிங், டாக்டர் நோலன்… ‘

‘குட் ஈவ்னிங்…எப்படி போகிறது படிப்பு எல்லாம் ? ‘

அந்த வாரம் அவரைச் சந்தித்துத் தர வேண்டிய ரிப்போர்டை இன்னும் தரவில்லை, அவன். எனவே அதை மட்டும் தவிர்த்து விட்டு வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினான்.

‘அற்புதமாகப் போகிறது…அதிலும், ‘ஸ்ட் ரக்சுரல் இஜ்ஞினியரிங் அனலிஸிஸ் ‘ ரெம்பவும் பிடித்து போய் விட்டது. ‘

‘அப்படியா ? டாக்டர் ஹாரி தானே டாச் பண்ணுகிறார் ?

‘அமாம்… ‘

‘மிகவும் அற்புதமான ப்ரொபஸர் அவர்..யுனிவர்சிட்டி அப் கலிபோர்னியா, பெர்க்லி, மாணவர் அல்லவா அவர்! அவருடைய வ்குப்பில் அமர்வதே ஒரு ‘ஜென் ‘ அனுபவம்… ‘

‘மிக நன்றாகச் சொன்னீர்கள், டாக்டர் நோலன்..மிகவும் அற்புதமான ஆசிரியர்தான் அவர்..சந்தேகமில்லாமல் ‘ என்று ஆமோதித்தான். இதற்குள் அவரை நெருங்கி அவர் கையில் வைத்திருந்த உடற் பயிற்சி உபகரணத்தை வாங்கி, அடுத்ததை எடுத்துத் தந்தான்.

‘தாங்க் யூ ‘ என்று வாங்கிக் கொண்டார், மறுப்பேதும் சொல்லாமல். பூதம் தெய்வாம்சத்தின் முதல் படியில் ஏறி விட்டது.

தினமும் மாலை வேளைகளில் ஜிம்முக்குப் போய் அவர் உடற் பயிற்சி செய்யும் போது உடன் இருந்து பேசிக் கொண்டே வெயிட்டும், மற்ற சாதனங்களையும் எடுத்துக் கொடுத்து உதவினான். ஒவ்வொரு நாளும் ஒரு உலகப் பிரச்னையைப் பற்றியும், சிவில், ஸ்ட்ரக்சுரல் இஞ்சினியரிங்கில் ஏற்பட்ட புதிய ஆராய்ச்சிகளையும், அல்லது இந்திய சமூக அவலங்களைப் பற்றிய அவரது கருத்துகளும், அதற்கு சிவாவின் விளக்கங்களும் என்று தினமும் சுவாரஸ்யமாகப் போனது. ஒரு நாள் கூட அவனுடைய ‘கம்ப்யூட்டர் சயன்ஸ் – இண்டிபெண்டெண்ட் ஸ்டடி ‘ கோர்சைப் பற்றி எதுவும் விசாரிக்கவில்லை அவர். வாரம் ஒரு நாள் மட்டும் டிபார்ட்மெண்ட்டில் அவருடைய அறைக்குச் சென்று ஒரு ரிப்போர்ட் சமர்ப்பித்தான். இண்டிபெண்டண்ட் ஸ்டடி என்பதால், அவர் அவனுக்கு அதிக ஆலோசனைகள் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லாதது போலவே பேசினார். அவருடைய முகத்தில் ஏதேனும் அதிருப்தி தெரிந்தாலும் மறு நாள் ஜிம்மில் இன்னும் அதிக நேரம் அவருடன் உலக விஷயங்களைப் பற்றிப் பேசி அவருக்கு அதிக வெயிட்களை எடுத்துக் கொடுத்து உதவினான். அவர் அவனை ‘சிவா ‘ என்று உரிமையுடன் அழைக்கும் அளவும், அவன் அவரை ‘குட் ஈவ்னிங் ‘ என்று வரவேற்காமல், ‘ஹாய் ‘ என்று வரவேற்கும் அளவும் அவர்களுடைய நட்பு வளர்ந்தது. பூதம் தெய்வாம்சத்தை நோக்கி நிறைய படிகள் ஏறி விட்டிருந்தது.

செமஸ்டர் பரீட்சைகள் நெருங்கின. காய்ச்சல் வந்தது போல் மாணவர்கள் இயங்கினார்கள். ப்ராஜக்ட் என்றும், ப்ரெசெண்ட்டேஷன் என்றும், பைனல் எக்ஸாம் என்றும் உண்ணவும், உறங்காமலும் அலைந்தார்கள். சிவாவும் ஸ்ட்றக்சுரல் இஜ்ஞினியரிங் அனலிஸிஸ், ஸ்ட்றெந்த் அப் மட்டிரியல்ஸ், ஹைட்ராலிக்ஸ் லாப் ஆகியவற்றில் பிஸியாகவும், உறக்கமின்றியும் உழைத்துப் படித்தான். இருந்தாலும் வாரம் மூன்று முறைகளாவது ஜிம்முக்கு போய் நோலனுடன் பேசி அவருக்கு வெயிட் எடுத்துக் கொடுப்பதையும் நிறுத்தவில்லை. மூன்று கோர்ஸ்களுக்கும் திறம்பட பரீட்சை எழுதினான், ப்ராஜக்டுகளை முடித்தான். கம்ப்யூட்டர் சயன்ஸ்-இண்டிபண்டண்ட் ஸ்டடியில் முடிந்த அளவும், தெரிந்த அளவும் ப்ராஜக்டை முடித்து நோலனிடம் கொடுத்தான். தெய்வம் ‘பி ‘ க்ரேடாவது கொடுக்கும் என்ற நம்பிக்கையில். ஸெமஸ்டர் முடித்த கையோடு அன்று மாலை ஜிம்முக்குப் போனான். மனது லேசானது போலவும், சந்தோஷமாகவும் உணர்ந்தான். கந்தர் சஷ்டி கவசமும், திருச்செந்தூர் முருகனும் காப்பாற்றி விட்டது போன்ற பிரமை. வழக்கத்துக்கு மாறாக அன்று நோலன் வரவில்லை. முதன் முதலாக அவன் அன்று வெயிட் ரூமில் வெயிட் தூக்கி உடற் பயிற்சி செய்து அபார்ட்மண்ட்டுக்குத் திரும்பினான்.

ஒரு வாரம் கழித்து க்ரேட் ரிபோர்ட் வந்தது. மிகவும் ஆவலுடனும், அவசரத்துடனும் பிரித்தான். உள்ளே,

ஸ்ட்ரக்சுரல் இஜ்ஞினியரிங் – ‘ஏ ‘

ஸ்ட்றெந்த் அப் மட்டாரியல்ஸ் – ‘ஏ ‘

ஹைட்ராலிக்ஸ் லாப் – ‘ஏ ‘

கம்ப்யூட்டர் சயன்ஸ் 201- இண்டிபெண்டெண்ட் ஸ்டடி – பெயில்

என்று இருந்தது.

Series Navigation

அலர்மேல் மங்கை

அலர்மேல் மங்கை