பா.சத்தியமோகன்
இரண்டாம் காண்டம்
6. வம்பறா வரிவண்டுச் சருக்கம்
34. திருஞான சம்பந்த நாயனார் புராணம்
1897.
வேதநெறிகள் தழைத்து ஓங்குவதற்காக
மேன்மையுடைய சைவத்துறைகள் விளங்க
பூதங்களின் பரம்பரையான சைவ அடியார்கள் கூட்டம் தழைக்க
தூய்மையான திருவாய் மலர்ந்து அழுதவரான
குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த சீகாழிப்பகுதியில் தோன்றிய
திருஞானசம்பந்தரின் பாதமலர் தலைமீது கொண்டு
திருத்தொண்டின் இயல்புகளைச் சொல்வோம்.
1898.
வளர்கின்ற தன்மை கொண்ட பிறைச்சந்திரனை
தலை மீது அணிந்த சிவபெருமானின் நிலைபெற்ற சைவத்துறையில்
வழிவழியாய் வந்த குடியான சோழரின்
காவிரியாறு வளம் செய்யும் நாடு
பொலிவு பெறும்படி நிலை பெற்றது
அழியாத மதிலின் பக்கத்தில்
மேகங்கள் வந்து தங்கும்-
திருக்கழுமலம் என்ற சீகாழி பழைய பதியாகும்.
(கழுமலம்- சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று)
1899.
அந்தணச் சிறுவர்கள் அரிய மறைகள் ஓதுகின்ற ஒலியுடன்
வளர்கின்ற பாக்குமரங்களின் செழுமையான சோலைகள் புறத்தில் சூழ
ஒப்பில்லாமல் ஓங்குதலால் கழுமலம் என்ற அந்நகரமானது
ஊழிக்காலத்தில் மிதப்பது மட்டுமல்ல
எப்பொழுதும் கடல் மேலே மிதக்கும் தோற்றமுள்ளது.
1900.
திருமாலும் நான்முகனும் முதலிய தேவர்கள் அடங்க
எழுகின்ற நீர்ப் பெருக்குகள்
விரிந்த கதிர்களுடைய பெரிய மணிகள் அழுத்திய மேடைமீது
வீசின அலைகளால் உண்டான கீற்றுகளோ
பொங்கும் பாற்கடலைக் கடைந்த காலத்தில்
மந்தர மலையை வரிவரியாய்ச் சுற்றிய வாசுகி என்ற பாம்பாகிய
வடத்தைப் போல் விளங்கும்.
1901.
மருதநிலத்தின் புறத்தே
பசிய இலைகளிடையே நெருங்கிய இதழ்களுடன்
நீர்ப்பூவான செந்தாமரை மலர்கள்
கரிய கடலில் மலர்கின்ற இளங்கதிரவன் பல தோன்றியது போன்ற
நல்லநீர் நிலைகள் எங்கும் விளங்கின.
1902.
மனதில் கொண்ட வேதநெறி ஒழுக்கமுடைய வேதியர்களின்
ஓமப்புகை படலங்கள் எக்காலமும் இரவை உண்டாக்கின
கிளர்ச்சி பெற்ற விபூதியின் ஒளியால்
பொருந்திய நண் பகலை எக்காலமும் உண்டாக்கி
அவை பல வழிகளிலும் காற்றில் செல்வதால்
அகன்ற உலகில் விளங்கும் அந்தப் பழைய ஊருக்கு
வேறு இரவும் வேறு பகலும் மிகை.
1903.
பரந்த விளைவுடன் கூடிய வயல்களில்
சிவந்த தாமரை மலர்கள் பொங்கும் தீக்கு சமம்
அவ்வயல் பரப்பில் வளர்ந்த தேமா மரத்தின் பழம் பிளக்க
வெளிப்படும் சாறு நறு நெய்க்குச் சமம்
மக்களைத் தவிர மரங்களும் வேள்வி செய்யும் இயல்புடையதோ
எனும்படி அவ்வூர் விளங்கியது.
1904.
கதிரவன் கடலில் மறைய
இரவில் விளங்கும் வெண்சந்திரன்
சிவந்த ஒளியுடைய சந்திரனாகி விட்டது ஏனெனில்
சோலைகள் தோறும் புகுந்து வெளிப்பட்டு
நெருங்கிய மரங்களின் தேனில் தோய்வதால்
மகர்ந்தங்களில் நெடுநேரம் பயில்வதால்!.
1905.
மணம் கமழும் தாமரையும் அந்தணர்கள் போலவே
புறஇதழ்களும் நூலும் தாங்கி
தூய்மையான நுண்மையான துகள் அணிந்து
துளித்து வருகின்ற நீர்ததும்பித்
தேன் பொருந்த வண்டின் இசையால்
இனிய சாமவேத கீதம் பாடும் அழகிய நகரம் அது.
1906.
பொன்னால் ஆன குழைகள் அணிந்து காதில் அசைய
அழகிய பட்டுடையில் பூந்தானை பின்னால் செருகி
தமக்குரிய தொழில்களுடைய தீ உண்டாக்கும் —
வேதிகை உடைய மெழுக்கு பொருந்தச் செய்து
வெண்நிறக் கோலம் இடுகின்ற
ஒலி இடும் வானின் எழும் மேகம் போன்ற கூந்தலுடைய
ஒளியுடைய அருந்ததியின் கற்பு பெற்று
இல்வாழ்க்கைத் துணையாய் விளங்கும்
குலமகளிர் நிரம்பிய வளங்களால் மாடங்கள் விளங்கின.
1907.
வேள்விகளில் பெரியோர் புரியும் சடங்குகளை
விளையாடுமிடங்களில் மண்ணின் புழுதி பொருந்த அமைத்து
பொன்னால் ஆன கிண்கிணிகள் ஒலிக்கச்
சக்கரம் பூட்டிய அழகிய சிறுதேர் ஊர்ந்து
அந்தத் தேர் ஊர்தலால் மண்தூசுப் பொடிபடியுமாறு
விளையாடும் சிறுவர்கள்
நெருங்கியுள்ள தெருக்கள் எங்கும் உள்ளன.
1908.
சுடர் விடுகின்ற நீண்ட மணிகள் பதித்த தெருக்களின்
வெண்ணிற சுண்ணச் சாந்தால் ஆன மாளிகைகள்
மேக மண்டலத்தைத் தொடுகின்றன
நீணட நாசிகள் தோறும் கட்டிய கொடிகளோ
இருள் பரவிய இரவில்
விண்மீன்கள் எனும் புதிய பூக்கள் பூப்பதற்கு
பகல் பொழுதில் தளிர்ப்பது போல நெருங்கியுள்ளன.
1909.
அந்த இடத்தின் நீர்மடைகளில் எங்கும் மணிகளின் குவியல்கள்
வயல்களில் எங்கும் நீர் வெள்ளத்துடன் கயல்மீன்கள்
வயல்களின் பக்கங்களில் பூக்குவியல்கள்
வெளியில் எங்கும் வேள்விகளின் பொலிவுகள்
கிளர்ச்சியுடைய சோலைகளில் எங்கும் ஒலிக்கும் வண்டுகளின் கூட்டங்கள்
மதில்களில் எங்கும் தவழ்கின்ற மேகங்கள்.
1910.
அந்தத் தலத்திற்கு பனிரெண்டு திருப்பெயர்கள்
பிரமபுரம்,
வேணுபுரம்,
புகலி ,
பெரியவெங்குருகு,
பூந்தராய்,
நீரினுள் ஒப்பிலாது விளங்கும் திருத்தோணிபுரம்
சிரபுரம்,
முன்வரும் புறவம்,
சண்பை நகர்,
வளரும் காழி,
கொச்சை வயம்,
போற்றுகின்ற திருக்கழுமலம் என்பன.
1911.
அப்பகுதியில் அந்தணர்களின் குடியில் வந்த முதன்மை உடையவரும்
குற்றம் நீங்கும் வேதங்களின்படி ஒழுக்கம் உடையவரும்
கவுணியர் கோத்திரம் மேன்மையடையும்படி செப்பும்
கோத்திரத்தின் உட்பிரிவில் தோன்றியவரும்
சிவபாத இருதயர் என
இந்த உலகம் வாழும் பொருட்டு தவம் செய்யும் இயல்புடையவருமான
ஒருவர் வாழ்ந்தார்.
1912.
அவரது மனைவியார் வாய்ப்புடைய அந்தணர் மரபில் வந்தவர்
எவ்வுலகமும் பெற அரிய பெருமையுடையவர்
பகவதியார் எனும் அழகுடைய பெயருடன் போற்றப்படுபவர்
கற்பால் மேன்மையுறும் சிறப்புடன்
தன் கணவரின் கருத்துக்கு ஏற்ப அமைந்து ஒழுகுபவர்.
1913.
தாய்வழி தந்தைவழி எனும் இரு மரபும்
வைதிக சைவநெறி வந்த உரிமையுடைய அந்த இருவரும்
பாம்பை அணிந்த சடைமுடியார் திருவடி தவிர
மற்றொன்றும் அறியமாட்டார்
துதிக்கத்தக்க திருநீற்றின் அன்பிலே வாழ்பவர்
வேதவிதிப்படி வரும் மனை வாழ்க்கைத் திறத்தில்
யாவரும் வியப்படைய வாழும் நாளில்-
1914.
உலகில் சமணர் பெளத்தர் பொய் மிகுந்து
ஆதியான அரிய வேத வழக்கங்கள் அருகி
அடியார்களிடத்தில் திருநீற்றுச் சாதனத்தின் விளக்கம்
போற்றப் பெறாமல் ஒழிவது கண்டு
குற்றமிலாத சிவபாத இருதயர் பெரிதும் வருத்தம் உற்றார்.
1915.
மனையறத்தில் இன்பம் தரும் மகவு பெறும் விருப்பம் கொண்டு
அந்நிலையில் சிறந்து நின்று
ஆடுகின்ற சிவபெருமானின் திருவடிக்கமலம் நினைத்து
முன்னர் பரசமயங்களின் தீமை நிராகரித்து
திருநீற்றின் விளக்கம் மிகுதிப்படுத்தும் அழகிய திருமகனைப் பெறுவதற்காகப்
போற்றும் தவம் புரிந்தார்.
1916.
பெரியநாயகி அம்மையாருடன் வீற்றிருக்கும் தோணியப்பரின்
சேவடிகளை பெருகி எழும் அன்பால் வணங்கி
கணவரின் கருத்து முற்றப்பெறும் படி
பரவும் பகவதியார் மணி வயிற்றில்
உருவம் தெரிய வரும் பெரும்பேறு பிள்ளைப்பேறு
உலகம் உய்வதற்கே.
1917.
ஆளும் தன்மை கொண்ட பெரியநாயகியுடன்
தோணியப்பரின் திருவருளையும் துதித்து அருள் பெற்று
மூண்ட மகிழ்ச்சியினால் கருக்கொண்ட காரணத்தால்
மறைநூலில் விதித்த சடங்கின்படி ஈரைந்து மாதங்களிலும்
நன்மை உண்டாகுமாறு உறவினர் கூடி
பேரின்பம் கிளர்வுறும் நாளில்-
1918.
சூரியன் முதலான கோள்கள் யாவும் அதனதன்
அழகிய உச்சி இடங்களில் பெருக்கவும் வலிமையுடன் நிற்கவும்
சோதிட நூலார் விரும்பும் வேளை வரவும்
செம்மை மிகு திருவாதிரை நாள் திசை விளக்கம் அடையவும்
மற்ற சமயங்களின் தடுக்கிய நிலை ஒழியவும்
முதன்மையான சைவமும் வைதிகத்துறையும் தழைத்து ஓங்கவும்-
1919.
தொண்டர்களின் மனம் களிக்க
தூய திருநீற்று நெறி எட்டுதிசைகளிளும் நடக்க
ஏழுலகங்களில் உள்ள உயிர்கள் மகிழ்வில் திளைக்க
தேவ குலங்கள் அதிசயிக்க
அந்தணர்களின் வேள்விகள் பெருக
பெரிய தவம் செய்பவர்களின் செயல் நிறைவு பெற-
1920.
எட்டுத் திசைகளின் பெருமைகள் யாவும்
தென்திசையே வெற்றி கொள்ளவும்
மேல் உலகினையும் பிற உலகினையும் விடவும்
இம்மண்ணுலகே சிறப்படைந்து வெல்லவும்
அசைதல் இல்லாத செழுந்தமிழே
மற்ற மொழி வழக்குகளை வெல்லவும்
இசையறிவும் மெய்யறிவும் பொருந்தும் நிலை பெருகவும்-
1921.
முயற்சியுடைய மக்கள்
படைப்பு என்னும் நான்முகனின் படைப்புத் தொழில் குணம்
தலைமை பெறுவதற்காகவும்
நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் குற்றங்கள் நீங்கவும்
சீர்காழிப் பதி வாழும் திருத்தோணியில் எழுந்தருளும் சிவபெருமான்
அருள் பெருகுவதற்காகவும்-
1922.
தீய நெறிபெருக்கும் புல்லறிவின் சமணசமயம் முதலிய
பிற சமயங்களான புரைநெறிகள் பாழாகவும்
நல்ல ஊழி தோறும்
தான் அழியாமல்
தவம் பெருக்கும் சண்பை என்ற நகரில்
குற்றம் அற்ற சரம் அசரம் என்ற உயிர்களிலெல்லாம்
சிவத்தன்மை பெருக்கும் பிள்ளையாராக
ஞானசம்பந்தர் அவதாரம் செய்தார்.
(சரம்- இயங்குவன; அசரம்- இயங்காதன)
1923.
அப்பொழுது
அழகுடைய கழுமலநகரில் உள்ளவர்கள் எவரும்
உடம்பில் ஒரு இடம் விடாமல் மயிர்ப்புளகம் எய்தி
தம்மை அறியாமல் ஒப்பிலா மகிழ்ச்சி மிகுவதான
உவகை தோன்றக் கூறியதாவது:-
(கழுமலம்- சீகாழி )
1924.
சிவபெருமான் அருள்போல் பெருகும் மனம் மகிழ்கின்ற தன்மை
இங்கு இவ்வாறு எமக்கு எய்தக் காரணம் யாது என வினவி
கவுணியர் குலத்தில் ஒரு காதலன் தோன்றினான்
அவன் அவதரித்ததன் நிமித்தமே இது! என அதிசயித்தார்.
1925.
பூக்களின் மொட்டு அவிழ்ந்து மணம் பொழிகிறது
எங்கும் தேன் பொருந்திய பூத்தாது திசைகளில் பரவுகிறது
தூய்மையுடைய ஒளி
அத்துகள்களை அடக்கிக் கொண்டு விரிகிறது
பெருமையுடைய பொதிகை மலைக்காற்றும் வந்தசைகிறது அப்போதே.
1926.
விண்ணுலகத்தில் உள்ள தேவர்களும்
ஓயாமல் பூஞ்சோலைகள் பூக்களைச் சொரிவதைப் போல
விருப்பத்துடன் நிலவுலகில் மலர்மழை பொழிந்து வந்து
வளரும் சீகாழி நகர் மேவும் அந்தணருடன் கூடி
ஓமவினைகள் செய்தனர்.
(ஓமம்- வேள்வி)
1927.
பூதகணங்களின் தலைவரான சிவபெருமான் திருவருள் கண்டு
சிவகணங்கள் ஞானசம்பந்தரை நலம் உய்யச் செய்தன
வேதம் ஓதும் மறையோர் பிற உரைத்திடினும்
இடைவிடாத வேத மொழியால்
அதுவும் வேத ஒலியாகவே எங்கும் கேட்கும்.
(திருவருளால் தொடரும் )
- நான் கண்ட சிஷெல்ஸ் – 3.வரலாறு
- தனுஷ்கோடி ராமசாமி நினைவரங்கு
- ஜோஜ் ஓர்வெலின் விலங்குப் பண்ணை
- வியாக்கியான இலக்கியம்
- நெய்தலின் மெய்யியல்:ஜோ டி குரூசின் ‘ ‘ஆழிசூழ் உலகைச் ‘ ‘ சிறப்பித்து!
- ‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-2
- பாரதிதாசன் காட்டும் குடும்ப மகளிர்துயரம்
- சிருங்காரம்: தமிழ்த்திரைப்படம் – மலையாளிகளின் சிம்மாசனங்களுக்கு மத்தியில்….
- நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காணவந்த பிரெஞ்ச் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 11
- படிக்க என்ன இருக்கு ?
- கடிதம்
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. க நினைவரங்கு
- துவக்கு இலக்கிய அமைப்பு -கவிதைப் போட்டி- இறுதி நாள்: 15. ஜனவரி .2006
- ‘ஈ வே ரா – ஒரு முழுமையான பார்வை முயற்சியில் ‘ – எதிர்வினை
- சுந்தர ராமசாமியின் படைப்புகளின் நாடகமாக்கம் – 25-12-2005 மாலை 6:30
- கடிதம் ( ஆங்கிலம் )
- இலவச வெளிச்சம்
- ஆறாம் விரலும் அர்த்தமான இரவும்
- முருகனும் சிம்ரனும்..
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 1
- சம்மதம்
- சிதறும் நினைவுகள்
- நியு யார்க் நிறுத்தம்
- இதையும் அவசியம் அறிந்து கொள்வோம்
- எடின்பரோ குறிப்புகள் – 4
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-2) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- 70.பெரியபுராணம்
- கீதாஞ்சலி (54) – கடற்கரையில் கூடும் பாலகர்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- இறைவா நீ இறந்துவிட்டால் ?
- உணர்வும் மனசும்
- இப்போது ?
- பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு [GPS]: வாசகர் எதிரொலி
- பூகோள இடநிலை உணர்த்தும் GPS அமைப்பின் மற்றுமொரு பயன்பாடு