29. புகலிடம்

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

புகாரி


கிழக்கே அட்லாண்டிக் கடல் மேற்கே பசுபிக் கடல், இவற்றுக்கு
இடையே மூன்று மணி நேர வித்தியாசம் கொண்ட கனடா உலகின்
இரண்டாவது மிகப் பெரிய நாடு.

வட அமெரிக்காவில் ஐந்தில் இரண்டு பாகம் இதற்குத்தான் சொந்தம்.
ஆனால் சுமார் 31 மில்லியன் ஜனத்தொகையே கொண்ட இந்த நாட்டில்,
ஐரோப்பா, ஆசியா, தென்னமெரிக்கா, கரிபியன் தீவுகள் என்று பல்வேறு
திசைகளிலிருந்தும் வந்து குடியேறியவர்களே 97க்கும் மேற்பட்ட
சதவிகித மக்கள்.

தொழில், திறமை, தகுதி போன்ற அடிப்படையில் தேர்வு செய்து, உலகின்
பல்வேறு பாகங்களிலிருந்தும் இந்நாட்டின் மீது ஆர்வம் கொண்ட மக்களை,
தன் குடிமக்களாய் ஏற்றுக்கொள்ளும் இந்நாடு அபயக் குரலோடு ஓடிவரும்
பெரும்பாலான அகதிகளையும் தகுதிபாராமல் அன்போடு அள்ளியணைத்துக்
கொள்ளும் கருணைத்தாயாய் விளங்குகிறது.

இதன் புண்ணியத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள்
இங்கே அடைக்கலம் புகுந்து தங்களின் வாழ்வை மேம்படுத்தி சிறப்பாக
வாழ்கின்றனர்.

அவர்களில் ஒருவர் தன் நன்றி பொங்கப் பாடுவதாய் அமைந்ததுதான்
இக்கவிதை

கண்ணில் விளக்கெரிப்பாள் – என்றும்
கருத்தில் எனைக்கொள்வாள்
எண்ணும் பொழுதிலெல்லாம் – என்றன்
இதயம் குளிர்விப்பாள்

பொன்னும் மணியுமிங்கே – பெற்ற
தாய்தமக் கிணையாமோ
நன்றியும் சொல்வதுண்டோ – நித்தம்
நேர்வரும் தெய்வமன்றோ

முன்னம் தாய்தந்தை – அவர்முன்
மூதாதையர் பலரும்
அன்னைத் திருமண்ணே – உன்னில்
ஆடிக் களித்திருந்தார்

உன்னை உண்டுதானே – உயரில்
உரங்கள் சேர்த்திருந்தார்
வென்றுன் மடிசாய்வேன் – விடுத்து
நன்றியா நானுரைப்பேன்

இன்னல் பிளந்தெடுக்க – சுற்றும்
இருளே வாழ்வாக
கண்ணில் மனந்துடிக்க – முற்றும்
கிழிந்தே கிடந்தவென்னை

உன்னில் அணைத்தவளே – உயிரின்
ஓலம் தணித்தவளே
அன்னம் அளித்தவளே – கருணை
அன்பில் புதைத்தவளே

எண்ணம் மதித்தவளே – என்னை
எடுத்தும் வளர்த்தவளே
இன்னும் பலவாறாய் – எனக்குள்
எல்லாம் ஈந்தவளே

மண்ணே புகலிடமே – என்றன்
மற்றோர் தாய்மடியே
உன்னை நினைக்கயிலே – நன்றி
ஊற்றே உயிர்தனிலே

*

அன்புடன் புகாரி
buhari2000@hotmail.com
buhari@sympatico.ca

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>

புகாரி

புகாரி