“ஒரு தீரரின் பயணம்“

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

1947-ஆம் ஆண்டுக்கு முன்னர் பாரதத்தாய் அந்நியரின் கொடுங்கரத்தில் சிக்கி அவதியுற்றாள். ஏகாதிபத்தியக் கொடுமையினால் நாடே கொந்தளித்த்து. எங்கும் இருண்ட சூழ்நிலை நிலவியது. திசை தெரியாத காட்டினில் அலைவது போல் மக்கள் அந்நியரின் சுரண்டல் ஆட்சியில் அவதியுற்றனர்.
“வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை
மிஞ்சி விடுதலைத் தவறிக்கெட்டுப் பாழ்பட்டு
நின்றதாமோர் பாரத தேசத்தின்“
அடிமை விலங்கை உடைத்தெறிய வீர்ர்கள் தீரச் செயல்கள் பல புரிந்து நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அத்தீர்ர்களின் பயணம் நீண்ட நெடிய இலட்சியப் பயணமாகும். அவ்வாறு இலட்சியப் பயணம் மேற்கொண்ட தீர்ர்களுள் ஒருவர்தான் மாவீரன் பகத்சிங். அவரது பெயரே ஆங்கில ஏகாதிபத்தியத்திற்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியது.
தேசப்பற்று மிக்க வீரப் பரம்பரையில் பஞ்சாப் மாநிலத்தில் லாயல்பூரில் 1907-ஆம் ஆண்டு அக்டோபர் எட்டாம் நாள் சர்தார்கிசன் சிங்கின் இரண்டாவது மகனாகப் பகத்சிங் பிறந்தார்.
இளம் வயது முதலே அவர் நாட்டுப்பணியில் நாட்டம் மிகுந்தவராக விளங்கினார். பாரத நாடு அடிமைப்பட்டுக் கிடப்பதற்கு எதிராக வீறுகொண்டு எழுந்தார்.
பகத்சிங் தேசியக் கல்லூரியில் பயிலும்போது, காந்தியடிகள் அஹிம்சை முறையில் நாட்டு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தார். ஜாலியன் வாலபாக் படுகொலை இளைஞரான பகத்சிங் போன்ற இளைஞர்கள் மனதில் தீப்பொறியை ஏற்படுத்தியது. காந்தியடிகளின் அஹிம்சா முறை பகத்சிங் போன்ற செயல்திறன் மிக்க இளைஞர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அஹிம்சை முறையில் போராடினால் விடுதலை பெற முடியாது என நம்பினர்.
முள்ளை முள்ளால் எடுப்பது போல வன்முறையை வன்முறையினால்தான் வெல்ல முடியும் என்று கருதினர். அந்நியரின் ஆட்சியைக் கவிழ்க்கப் பல ரகசியச் சங்கங்கள் நாடெங்கிலும் நிறுவப்பட்டன. பஞ்சாபில் நிறுவப்பட்ட ‘ப்ப்பர் அகாலிச்‘ சங்கத்தில் பகத்சிங் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.
சங்கத்தின் நடவடிக்கைகளை அறிந்த போலீசார் அனைத்து உறுப்பினர்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ஆனால் பகத்சிங் பஞ்சாபிலிருந்து, கான்பூருக்குத் தப்பிச் சென்றார். அங்கு கான்பூர் காந்தி என்றழைக்கப்பட்ட கணேச சங்கர வித்தியார்த்தி என்ற காங்கிரஸ் தலைவர் அவருக்கு நண்பரானார். அவரது குடும்பத்தினர் பிணை கொடுத்து பகத்சிங்கை விடுதலையாக்கினர். ‘எதையும் தாங்கும் இதயம்‘ படைத்த பகத்சிங் சிறையிலிருந்து விடுதலையானதும் ‘நௌ ஜவான் பாரத சபை‘ என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி இளைஞர்களிடையே தேசிய உணர்ச்சியைஆங்கிலேயருக்கு எதிராகத் தூண்டினார்.
தீரரான பகத்சிங்கின் நோக்கம் பரந்து பட்டதாக விளங்கியது. பாரத நாட்டுக்கு அரசியல் விடுதலை மட்டும் போதாது, பொருளாதார விடுதலையும் தேவை என்று அவர் கருதினார்.
“எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்
இல்லாமை இந்நாட்டில் மறையவேண்டும்“
என்பதே அத்தீரருடைய இலட்சியப் பயணத்தின் உயரிய குறிக்கோளாக விளங்கியது.
உழைக்கும் மக்களின் பசிப்பிணியைப் போக்க வேண்டும், புரட்சியால் இந்திய அன்னையின் அடிமைத்தளையை அகற்றிப் புதியதோர் உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு பகத்சிங் செயல்பட்டார்.
1928-ஆம் ஆண்டு புரட்சி சங்கங்களின் மத்திய சபை ஒன்று நிறுவப்பட்டு, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிப்ப்ளிகன் அசோசியேஷன்‘ எனப் பெயரிடப்பட்டது.
1924-ஆம் ஆண்டில் அலகாபாத்தில், சிதஙிக்கிடந்த புரட்சி சங்கங்களைஇணைத்து, ‘ஹிந்துஸ்தான் ரிப்ப்ளிகன் அசோசியேஷன்‘ என்ற பெயரால் புதிய அமைப்பானது புரட்சிதலைவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. அதில் பகத்சிங் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
சங்கத்தின் பொருளாதாரத் தேவைக்காக 1926-ஆம் ஆண்டில் காகோரி என்ற ரயில்வே ஸ்டேஷனில் ரயிலைநிறுத்தி அரசாங்க கஜானாவைக் கைப்பற்றினார். ஆங்கிலேய அரசு அதில் ஈடுபட்ட பலரைக் கைது செய்த்து. ஆனால் பகத்சிங் மட்டும் போலிசிடம் இருந்து தப்பி லாகூருக்குச் சென்றார். சிறைப்பட்டோர் மீது ஆங்கிலேய அரசாங்கம் வழக்குத் தொடர்ந்த்து. இவ்வழக்கின் இறுதியில் பகத்சிங்கின் நண்பர்கள் தூக்கிலிடப்படனர். அதனால் பகத் சிங் மனம் குமுறினார்.
அவர் துன்பங்களைக் கண்டு துவழாமல் தம் இலட்சியப் பயணத்தை உறுதியுடன் மேற்கொண்டார். சங்கத்தின் பல தலைவர்கள் சிறைசென்றதால் சங்கம் தளர்வுற்றது. இதனைக் கண்ட பகத்சிங் புரட்சி சங்கத்தின் கொள்கைகளையும் நோக்கங்களையும் விளக்கிப் பல இளைஞர்களைச் சங்கத்தில் சேர்த்து சங்கத்திற்குப் புத்துயிர் அளித்தார்.
பகத்சிங்கின் ஆற்றலையும், செயல் திறமையையும் கண்டு வியந்த ஆங்கில அரசு 1926-ஆம் ஆண்டு பகத்சிங்கின் மீது பொய்க்குற்றம் சாட்டி அவரைச் சிறையிலடைத்தது. சிலகாலம் சிறையிலிருந்த பகத்சிங் விடுதலையானவுடன் புரட்சி சபையின் முக்கிய பணியான பிரச்சாரப் பணியை ஏற்றார். கனல் தெறிக்கப் பேசி பிரச்சாரம் செய்து பல இளைஞர்களைச் சங்கத்தின் உறுப்பினராக்கினார்.
1928-ஆம் ஆண்டு சைமன்கமிஷனை எதிர்த்து ஊர்வலம் நடத்திய லாலாலஜபதிராயைத் தாக்கிக் கொண்ட சாண்டர்ஸ் என்னும் ஆங்கிலப் போலிஸ் அதிகாரியைப் பகத்சிங் தம் தோழர்களுடன் சுட்டுக்கொன்றுவிட்டு லாகூரைவிட்டு வெளியேறினார். தீர்ரான பகத்சிங்கின் பயணம் ஒரு புரட்சிப் பயணமாகத் தொடர்ந்த்து. வங்காளப் புரட்சி வீர்ர்களைச் சந்தித்து வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்குப் பழகிக்கொண்ட பகத்சிங்கும் அவரது நண்பர்களும், 1929-ஆம் ஆண்டு ஆங்கிலேய நாடளுமன்றத்தில் வெடிகுண்டுகளை வீசி ஆங்கில அரசைக் கதிகலங்க வைத்தனர்.
வெடிகுண்டுகளை எறிந்தவுடன் அவர்கள் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயலவில்லை. இவர்களுடைய இத்தீரச் செயல் நாடெங்கும் பரவி அன்னையின் அடிமை விலங்கை உடைத்தெரிய மக்களைத் தூண்டியது. எங்கும் புரட்சியலை மக்களிடையே பெருக்கெடுத்தோடியது.
பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் ஆங்கில அரசு கைது செய்து சிறையில அடைத்தது. வீரம் என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த பகத்சிங்கும் படுக்சேவர்த்த்தாவும் தில்லி வழக்கு மன்றத்தில்தாங்கள் புரட்சிக்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை அஞ்சா நெஞ்சத்துடன் ஒப்புக்கொண்டனர். அத்துடன் மக்களையும், பட்டாளிகளையும், உழவர்களையும் அந்நிய அரசுக்கு எதிராகப் புரட்சிசெய்து புதிய சமுதாயத்தைஅமைக்க எழுமாறு அவர்கள் தங்கள் வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.
சிறையில் அரசியல் கைதிகளைக் கண்ணியமாகவும், நாகரிகமாகவும் நடத்தவேண்டும் என்பதற்காக எண்ணா நோன்பை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டார் பகத்சிங். பகத்சிங்கும் அவரது தோழர்களும் வழக்கு மன்றத்தைப் புரட்சியியக்கப் பிரச்சார்திற்காகப் பயன்படுத்தினர். இதனால் நாடெங்கும் மக்கள் ஆங்கிலேய அரசுக்கெதிராக வெகுண்டெழுந்தனர்.
1930-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் நாள் பிரிட்டிஷ் அரசின் வரலாற்றில் கறைபடிந்த நாளாகும். ஆம்! அன்றுதான் நாட்டின் மானங்காக்க உரிமைக்குரல் எழுப்பிய வீரர்களான பகத்சிங்கிற்கும் அவரது தோழர்களுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அச்செயதியைக் கேட்ட மக்கள் அனைவரும் கொதித்தொழுந்தனர். ஆனால், மலை கலங்கினாலும், நிலைகலங்கா தீர்ரான பகத்சிங்கும் அவரது தோழர்களும் கலக்கம் அடையவில்லை. நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்வற்கு உறுதிபூண்டனர்.

நீதி மன்றத்திற்குக் கருணை மனு அனுப்பிய தம் தந்தையைக் கண்டித்துப் பகத்சிங் கடிதம் எழுதினார். தம்மைத் தூக்கிலிடப் போகின்றனர் என்பதை அறிந்து பகத்சிங் கலங்கவில்லை. சிறையில் அவர் படித்துக் கொண்டே இருந்தார். பகத்சிங்கைத் தூக்கிலிட அழைத்துச் செல்வதற்காக சிறையலுவலர் வந்தார். அவரைப் பார்த்த பகத்சிங் இப்புத்தகத்தில் இரு பக்கங்கள் மட்டும் இருக்கின்றன. நாளை என்னால் படிக்க முடியாது. அதனை இப்பொழுதே படித்து முடித்து விடுகின்றேன் என்று கூறிவிட்டு அப்புத்தகத்தை முழுவதும் படித்து முடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சரி வாருங்கள் போகலாம் என்று சிறையலுவலரைப் பார்த்து கூறி அவருடன் நடந்தார். பகத்சிங்கின் செயலைக் கண்டு சிறையலுவலர் வியந்தார்.
அந்தக் கொடுமையான, பயங்கராமான நாளும் வந்தது. 1931-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் நாள் பகத்சிங்கும் அவரது நண்பர்களும் தூக்கிலிடப்பட்டனர். விண்ணில் ஒளிவீசிக் கொண்டிருந்த நட்சத்திரம் கீழே விழுந்தது. பாரதத் தாய் கண்ணீர் வடித்தாள்.
மக்களாட்சி மலர இலட்சியப் பயணத்தைத் தொடங்கிய தீரர் பகத்சிங்கின் இலட்சியம் இன்று நிறைவேறிவிட்டது. பாரதத்தாயின் இளைய மகன், வீரமகன், வெற்றித் திருமகன், ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய மாவீரன், ‘தன்துயர் காணாத்தகைசால்‘ தீரன் பகத்சிங் இறக்கவில்லை. இந்திய மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் விதைக்கப்பட்டு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.