முனைவர் சி.சேதுராமன்
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
பல்வேறு வியத்தகு செய்திகள் இடம்பெற்று கற்போர்க்கு களிப்பூட்டும் களஞ்சியமாகப் புறநானூறு திகழ்கிறது. யாரை வாழ்த்துவர்? கடவுள், வள்ளல்கள், அரசன், தன்னினும் மேம்பட்ட மனிதர்கள், தனக்கு உதவியவர்கள், தன்னுடன் நட்புக் கொண்டோர், இளையோர் போன்றோரை மனமுவந்து ஒவ்வொருவரும் வாழ்த்துவர். ஆனால் இறந்த பின்னர் அனைவரையும் சென்று புதைக்கவோ, எரிக்கவோ செய்யும் இடுகாட்டினை, வாழ்த்தும் அரிய நிகழ்வும் புறநானூற்றில் இடம்பெற்றிருப்பது வியப்பிற்குரியதாக உள்ளது. அதிலும் யாவருக்கும் அச்சம் தரக்கூடிய சுடுகாட்டை வாழ்த்துவது வியப்பிலும் வியப்பாக அமைந்துள்ளது.
தொல்காப்பியத்தில் காடு வாழ்த்து
இவ்விடுகாட்டினை, சுடுகாடு, புறங்காடு, புங்காமணி தோப்பு மயானம், மயானக்கரை என்பன போன்ற பெயர்களில் மக்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனை இலக்கணத்தில் மங்கலமல்லாதவற்றை மங்கலமாகக் கூற வேண்டும் என்பதற்காக நன்காடு என்றும் கூறுவர். இவ்விடுகாட்டினை வாழ்த்துவதை,
‘‘மலர்தலை உலகத்து மரபுநன்கு அறியப்
பலர்செலச் செல்லாக் காடுவாழ்த் தொடு’’
(தொல் – புறம் – நச்சர்24)
என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ‘அகன்ற இடத்தினையுடைய உலகங்களிடத்து வரலாற்று முறைமையினைப் பலரும் பெரிதுவரும் படியாகப் பிறந்தோரெல்லாரும் இறந்து போகவும் எஞ்ஞான்றும் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டினை வாழ்த்துதலாலும்’ என்பது நச்சினார்க்கினியர் தரும் விளக்கமாகும். பலர் இவ்வுலகத்தை விட்டுச் சென்றாலும் தான் மட்டும் செல்லாது அப்படியே இருக்கும் காடே இவ்விடுகாடு என்று நச்சர் உரைப்பது குறிப்பிடத்தக்கது.
‘இடம் அகன்ற உலகத்தின் மரபு நன்கு விளங்கப் பலரும் மாயத் தான் மாயாத புறங்காடு வாழ்த்துதலும்’ என்று இளம்பூரணர் இதற்கு விளக்தருகிறார். (தொல் – புறம் – இளம் – பக்கம் – 134)
புறப்பொருள் வெண்பா மாலையார் காஞ்சித் திணையுள் காடு வாழ்த்துத்துறையினைப் பற்றிக் கூறாது
‘‘பல்லவர;க் கிரங்கும் பாடிமிழ் நெய்தல்
கொல்லென ஒழிக்கும் காடுவாழ்த் தின்று’’
(புறப் – பொதுவியற் படலம் – கொளு 35)
என்று பொதுமையான பொதுவியலுள் அத்துறையைக் கூறியுள்ளார். இதற்கு எஞ்சியோர் பலரும் உணரும் பொருட்டு முழங்கும் பெரிய முழக்கத்தையுடைய சாப்பறை கல்லென்று முழங்கா நின்ற சுடுகாட்டை வாழ்த்தியது என உரையாசிரியர்கள் விளக்கவுரை தருகின்றனர்.
புறநானூற்றில் காடு வாழ்த்து
உலகினது நிலையாமை கூறச் சுடுகாட்டின் நிலைமைத் தன்மையை உணர;த்துவது காடுவாழ்த்து என்னும் துறையெனலாம். இக்காடுவாழ்த்துத் துறையில் புறநானூற்றில் பாடல் ஒன்று இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.
‘‘களரி பரந்து கள்ளி போகிப்
பகலும் கூஉம் கூகையொடு பிறழ்பல்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்றுஇம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன்புறம் காண்போர;க் காண்புஅறி யாதே’’
என்பது (புறம் : 356) அப்பாடல். களர்நிலம் பரந்து, கள்ளிகள் மிகுந்து, பகலிலும் கூகைகள் கூவுமாறு இருள் அடர்ந்து, பிளந்த வாயையுடைய பேய்மகளும் ஈமத்தீயும் நிறைந்து, புகை படர்ந்த இம் முதுகாடு மனங்கலந்த காதலர்கள் அழுது அழுது பெருக்கிய கண்ணீரால் சுடலையிலே வெந்து நீரான சாம்பலை அவிக்கவுமாக விளங்குகிறது. தன்னை எதிர்த்த எல்லாரையும் வெற்றி கண்டு, உலக உயிர்களுக்கு எல்லாம் தானே முடிவிடமாய் விளங்குவது; தன்னைப் புறங்கண்டு மீள்வோரை என்றும் கண்டறியாதது அது என்பது இப்பாடல் கருத்தாகும்.
இப்பாடலை எழுதியவர் கதையங் கண்ணனார். குண்ணனார் என்பது இவரது இயற்பெயர். இவர் கதையனார் என்பவரின் மகனார் ஆவார். ‘கதையன்’ என்ற பெயரால் ‘கதையன்குடி’ என்ற ஊர் பாண்டிய நாட்டில் இருந்தது. அது பிற்காலத்தில் ‘கதவங்குடி’ என மருவியது. கண்ணனார்; என்ற பெயரில் பலர் உள்ளதால் அவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, ‘கதையங்கண்ணனார்’ என அழைக்கப்படுகிறார். சுடுகாட்டின் முதுமையை இவர் தமது பாடலில் (புறம்.,356) பாடியிருப்பது நோக்கத்தக்கது என புலவர் மாணிக்கனார் தமது உரையில் இப்பாடலுக்கு விளக்கம் தருவது நோக்கத்தக்து. இவரைத் தாயங் கண்ணனார் எனப் புலியூர்கேசிகன் தனது உரையில் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
காடு வாழ்த்தா? மகட்பாற்காஞ்சித் துறையா? பெருங்காஞ்சித்துறையா?
புறநானூற்றில் அமைந்த இப்பாடலை சுடுகாட்டை வாழ்த்தி நிலையாமையை உணர்த்தியதால் பெருங்காஞ்சித்துறை என்றும், மகள் மறுத்தலால் நேரும் பேரழிவினைக் காட்ட சுடுகாட்டைப் பற்றிக் கூறுவதால் மகட்பாற் காஞ்சித் துறையெனவும், கூறுவர். ஆனால் இஃது பொருத்தமாக அமையவில்லை என்பது நோக்கத்தக்கது. ஏனெனில் இதில் மகள் மறுத்ததற்கான செய்தியோ, பிறவோ இடம்பெற வில்லை. முழுமையும் சுடுகாட்டை மட்டுமே வாழ்த்தி இருப்பதால் இதனை காடு வாழ்த்துத் துறையில் அடக்கிக் கூறுவதே மிகவும் பொருத்தமானதாகும்.
தொல்காப்பிய உரைகாரர்களாகிய இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் அத்துறைக்கு இப்பாடலை எடுத்துக் காட்டியுள்ளதன் மூலமாக இப்பாடல் காடுவாழ்த்துத் துறையென்பது சரியெனப் படுகின்றது. இப்பாடலில் உள்ள,
‘‘நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப’’
என்ற வரிகளின் கருத்தும் புறப்பொருள் வெண்பாமாலையில் காடு வாழ்த்துத் துறைக்குரிய வெண்பாவில் உள்ள,
‘‘அன்பில்
அமுதகண் ணீர்விடுத்த ஆறாடிக் கூகை
கழுதார்ந் திரவழங்கும் காடு’’
என்ற கருத்தும் ஒப்பு நோக்கத் தக்கது. மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெறும் சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதையில் இடம்பெறும் பகுதிகளோடு இப்பாடற் கருத்துக்களும் ஒப்புமை உடையதாக விளங்குவது நோக்கத்தக்கது.
பாடலின் நோக்கம்
பாடலைப் பாடிய புலவர் சுடுகாட்டின் இயல்பினை இயல்பாகக் கூறி உலக நிலையாமையை வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை புலவர் மனம் அழிந்த நிலையிலேயோ அல்லது ஏதேனும் அழிவைப் பார்த்திருந்த நிலையிலேயோ அல்லது பிறருக்கு அறத்தைப் போதிப்பதற்காகவோதான் பாடியிருக்கவேண்டும். உலக நிலையாமையை உணர்த்தி, இவ்வுலகில் வாழ்வது சிறிது காலமேதான்; அதற்குள் ஏன் மற்றோரை இழித்தும், அழித்தும், துன்புறுத்தியும், பிறருடைமையை கவர்ந்தும் வாழ வேண்டும்? தனது வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாது, தன்னலத்தை மட்டும் பாராது மனிதன் மனித மதிப்புகளை உணர்ந்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே புலவர் சுடுகாட்டை வாழ்த்திப் பாடுகின்றார். இதுவே பாடல் பாடப்பட்டதன் நோக்கமாகவும் அமைந்திலங்குகிறது எனலாம்.
யார் யாரை வென்றாலும் சுடுகாட்டை யாரும் வென்றதில்லை என்பதைச் சுட்டிக் கூறி நில்லா உலகின் நிலைமையைக் கூறி அனைவருக்கும் பயன்படும் நல்வாழ்க்கையை வாழ்க என்ற வாழ்வியல் தத்துவத்தை எடுத்துரைப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. எனவே இப்பாடல் காடுவாழ்த்து என்னும் துறையிலமைந்த பாடலாகவே அமைந்திருப்பது நோக்கத்தக்கது. இப்பாடல் மகட்பாற் காஞ்சித்துறை எனில் பொருந்தாது எனலாம். இக்காடு வாழ்த்து மனிதனை நெறிப்படுத்த எழுந்த பாடலாகப் புறநானூற்றில் இடம்பெற்று வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தும் பாடலாகவும் அமைந்துள்ளது.
- அந்தவொரு மழை நாள்..
- “புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2
- சாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்
- இவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்
- ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு
- எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு விருது
- சென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை
- எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்
- சாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்
- முரண்பாடு
- விடுமுறை நாள் கல்லூரி
- மரணம் பயணிக்கும் சாலை!
- ‘‘காடு வாழ்த்து’’
- அக்கறை பச்சை
- தேவைகள்
- இரண்டு கவிதைகள்
- இருக்கை…
- கொடிய பின்னிரவு
- கைகளிருந்தால்…
- ப மதியழகன் கவிதைகள்
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- இருக்கை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- சட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தொன்று
- விதை
- நாலுபேருக்குநன்றி
- மழை ஏன் பெய்கிறது
- குருவிக் கூடு
- குமார் அண்ணா
- சாமியின் தந்தை..
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3
- விதியை மேலும் அறிதல்
- நினைவுகளின் சுவட்டில் – 64
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)
- ஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகதை
- ஒற்றை மீன்
- நீ….. நான்…. மழை….
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- கனவுகள் இனிதாகட்டும்!!
- இடைவெளி
- எங்ஙனம்?
- இரவின் தியானம்
- உயிர்ப்பு
- தன்னிலை விளக்கம்
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30