‘கூத்துக் கலை அன்றும் இன்றும்’…

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

ப.இரமேஷ்



தமிழர்களின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் கலைகளில் கூத்தும் ஒன்றாக விளங்குகிறது. நெஞ்சை அள்ளும் நிகழ்த்து கலைகளுள் தெருக்கூத்தும் ஒன்று, கூத்துக்கலை இசைக்கலையைப் போலவே பழமை வாய்ந்தது என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழ் முத்தமிழ் என வழங்கப்படுகின்றது இயல், இசை, கூத்து என்பன முத்தமிழின் கூறுகள், வரி வடிவத்தில் இதயத்துக்கு இன்பம் பயப்பது ‘இயல்’ என்றும் ஒலி நயத்துடன் பாடப்பெறும் பொழுது இசையுடன் இயைந்தது ‘இசை’ என்றும் மெய்பாடுகளினால் வெளிப்படுத்தப்படுவது ‘கூத்து’ என்றும் வழங்கப்படுகிறது. ஆடற்கலையும் நடிப்புக்கலையும் ஒருங்கே வளர்ந்தவை ‘பாவ, ராக, தாள’ வகை கொண்டு பதத்தால் பாட்டுக்கு இயைய நடிப்பது கூத்து என்று அபிதான சிந்தாமணி விளக்குகிறது. கூத்து என்பதை முதன்முதலில் ‘நாடகம்’ என குறிப்பிட்டவர் இளங்கோவடிகள், இத்தகைய சிறப்பும் பழமையும் வாய்ந்த கூத்துக் கலையின் அக்கால நிலையையும் இக்கால நிலையையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கூத்து – விளக்கம்
“கூத்து” என்னும் சொல் “நாட்டியம்”, “நாடகம்” ஆகிய இரு கலைகளுக்கும் பொதுவானதாக வழங்கப் பெற்றுள்ளது. தொல்காப்பியத்தில் “கூத்து”, “கூத்தர்” என்னும் சொற்கள் உள்ளன. சங்க இலக்கியங்களிலும் “கூத்து” என்னும் சொல் மிகுதியாக உள்ளது. “கூத்தர் ஆடுகளம் கடுக்கும்” (புறம் 28) “இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து” (சிலம்பு 3:12) “நாட்டியம் நன்னூல் நன்கு கடைப்பிடித்து” (சிலம்பு 3:46) “நாடகமேத்தும் நாடகக் கணிகை” (சிலம்பு, பதிகம் 15) “கூத்தாட்டு அவைக்கறம்” (திருக்.332) என்று சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. வேடம் புனைந்து இரவு தொடங்கி விடியும் வரை கதை தழுவி ஆடப்படும் நாடகமே கூத்து ஆகும். கூத்து எனும் சொல் முதலில் நடனத்தையும் பின்னர் கதை தழுவி வரும் நாடகத்தையும் குறித்தது. கூத்து நடத்தப்பட்ட களத்தை ஒட்டியே அவை தெருக்கூத்து எனப் பெயர்பெற்றது.

கூத்து வகைகள்
கூத்து என்பது பல்வேறு ஆடல்களைக் குறிக்கும் சொல்லாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கூத்துகள் ஏழுவகை என்பர். இவற்றிற்கு முரணான கூத்துகளும் உள்ளன.
1. வசைக்கூத்து ஜ் புகழ்க்கூத்து
2. வேத்தியல் ஜ் பொதுவியல்
3. வரிக்கூத்து ஜ் வரிச்சாந்திக்கூத்து
4. சாந்திக்கூத்து ஜ் விநோதக்கூத்து
5. தமிழ் ஜ் ஆரியம்
6. இயல்புக்கூத்து ஜ் தேசிக்கூத்து
7. வெறியாட்டு
இவைகளில் முதல் ஆறும் இரண்டு வகைகளாக இணைந்து விளங்கும். வசைக்கூத்து என்பது ஒருவரை வசைப்படுத்திக் கூறுதலாகும். இதற்கு முரண்பட்டதாக ஒருவரை ஏற்றிப் பாடுதல் புகழ்க் கூத்தாக அமையும். வேந்தன் முன்னால் ஆடிக் காட்டும் கூத்து வேத்தியல் என்றும் பொதுமக்கள் முன்னர் ஆடிக்காட்டும் கூத்து பொதுவியல் என்றும் அழைக்கப்பட்டன. தலைவனுடைய சாந்த குணங்களைப் பாடுவது வரிக்கூத்து எனவும், தலைவனுடைய சாந்த குணங்களை மாற்றிப் பாடுவது வரிச்சாந்திக் கூத்து எனவும் அழைக்கப்படுகின்றன. தலைவன் இன்பமாக நின்றாடியது சாந்திக்கூத்து என்றும், இதற்கு முரண்பட்டநிலையில் நின்றாடுவது விநோதக் கூத்து என்றும் அழைக்கப்பட்டன. ஆரிய நாட்டினர் வந்து ஆடிக் காட்டும் கூத்து ஆரியக் கூத்து என்றும், தமிழ்நாட்டவரின் கூத்து தமிழ்க்கூத்து எனவும் கூறப்பட்டன. இயல்பாக ஆடும் ஆடலை இயல்புக் கூத்து என்றும் தன் தேசத்திற்கு உரியவைகளை ஆடிக் காட்டுவதனைத் தேசிக் கூத்து என்றும் குறிப்பிட்டனர். தெய்வமேறி ஆடும் ஆடலை வெறியாட்டு என்றனர்.
பண்டைத் தமிழகத்தில் பதினொரு வகையான ஆடல்கள் சிறப்புற்று விளங்கின. சிலப்பதிகாரம் பதினொரு வகை ஆடல்களைக் குறிப்பிடுகிறது. இவைகளை மாதவி இந்திரவிழாவில் பொது மக்களுக்காக (பொதுவியல்) ஆடிக்காட்டினாள். இப்பதினொரு ஆடல்களும் பின்வருமாறு அமைந்தன. அவை, கொடுகொட்டி, பாண்டரங்கம், அல்லியம், மல்லாடல், துடிக்கூத்து, குடையாடல், குடம், மரக்கால் ஆடல், பேடியாடல், பாவையாடல், கடையம் என்பனவாகும்.
1. கொடுகொட்டி : கொடுங்கொட்டி என்பதே “கொடுகொட்டி” எனத் திரிந்தது என்று நச்சினார்கினியர் கூறுவார். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர்,
“கொள்ளைக் காதில் குழைக் காதில் குண்டைப் பூதம்
கொடுகொட்டில் குனித்துப் பாட” (திருவெண்காடு, திருத்தாண்டகம், பாடல்5)
என்று தேவாரப் பாடலில் இக்கூத்தினைச் சுட்டுகின்றார். திரிபுரம் எரியும்போது கோபத்தினால் சிவனின் கண்கள் சிவப்பேறி இருப்பது போன்று வெகுளிச்சுவை மிஞ்ச அதன் மெய்ப்பாடுகள் தோன்றி இந்த ஆடலை ஆடுதல் வேண்டும். வெற்றியால் ஏற்பட்ட பெருமிதம் கலந்த வெகுளிச்சுவை கொடுங்கொட்டி ஆடலில் முனைப்பாக இருக்கும்.
2. பாண்டுரங்கம் : ஒரு போருக்கு ஆயத்தமாவதால் இந்த ஆடலில் வெளிப்படும் சுவை வீரமாகும். தேரின் முன் நிற்கும் நான்முகனின் முன்பாக முக்கண்னை அல்லது சிவம் ஆடிய ஆட்டத்திற்குப் “பாண்டரங்கம்” என்று பெயர். இதனைச் சிலப்பதிகாரம். “தேர்முன் நின்ற திசைமுகன் காணப் பாரதியாடிய வியன் பாண்டரங்கமும்” (சிலம்பு 6:44-45) என்று குறிப்பிடுகின்றது.

3. அல்லியம் : மாயவன் அல்லது கண்ணன் ஆடும் பத்துவகை நடனங்களில் அல்லியம் ஒன்றாகும். கம்சன் ஒரு யானையின் உருவம் எடுத்து வஞ்சகமான முறையில் கண்ணனைக் கொல்ல முயன்றதையும் அதன் கொம்புகளை முறித்துக் கண்ணன் அதனைக் கொன்ற முறையையும் இந்த ஆடல் மூலம் நடித்துக் காட்டப்பெறும். வெற்றிபெற்றதும், ஒரு மாயத்தோற்ற நிலையில் கண்ணன் நிற்கும் நிலை அல்லியத்தில் சிறப்பிடம் பெறும்.
4. மல்லாடல் : கண்ணன் ஒரு மல்லனைப் போன்று உருமாறி வாணணை முறியடிக்கச் செல்லும்போது அவனால் ஆடப்பெற்ற ஆடலை “மல்லாடல்” என்று கூறுவர். கண்ணன் தனது எதிரியைப் பேரொலி செய்து அழைத்து அவன் வந்ததும் ஓடிச்சென்று பிடித்துக் கொன்று விடுவதை நடித்துக் காட்டுவது இந்த ஆடலாகும். இதன் மூலம் வெளிப்படும் சுவைகள் கோபம், வீரம் ஆகியவையாகும்.
5. துடிக்கூத்து : மாற்றுருவில் சூரன் உடலுக்குள் தந்திரமாகச் சென்று மறைந்து கொண்ட போது முருகன் ஆடிய ஆட்டத்தைத் “துடிக்கூத்து” என்று கூறுவர். முருகன் அவனைக் கண்டுபிடித்ததும் உணர்ச்சி மிகுதியில் கடல் அலையையே அரங்கத் திரையாகக் கொண்டு துடிக்கூத்து ஆடுகிறான். சிறிது நேரத்தில் எதிரியைக் கொன்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து ஆடுகிறான். இன்பமும் வீரமும் ஆடலின் மூலம் வெளிப்படும் சுவையாகும்.
6. குடையாடல் : படைகளை இழந்து அரக்கர்கள் தோல்வி கண்ட நிலையில் ஆறுமுகன் வெற்றிக் குடை பிடித்து ஆடிய ஆட்டம் இது.
7. குடம் : வாணாசுரனால் கைது செய்யப்பட்ட காமனின் மகன் அநிருத்தனை விடுதலை செய்வதற்காகக் குன்றெடுத்தோனாகிய கண்ணன் குடத்தின் மீது ஆடியது.
8. பேடியாடல் : தன் மகனை விடுவிக்கக் காமன் பேடி உருக்கொண்டு கண்டோர் வியக்கும்படி ஆடியது.
9. மரக்காலாடல் : அரக்கர்கள் ஏவிய பாம்பு, தேள் போன்ற நச்சுப்பூச்சிகளை நசுக்கிக் கொல்வதற்காக மரக்கால் கொண்டு கொற்றவை ஆடியது. இம்மரக்காலாடல் ஆட்டமே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்டத்திற்கான முன்னோடி ஆட்ட வடிவமாகக் கருதப்படுகிறது.
10. பாவையாடல் : அவுணர்களின் போர்க்கோலம் ஒழிவதற்காகத் திருமகள் ஆடியது.
11. கடயம் : இந்திரனின் மனைவியான அயிராணி வயலில் உழவனின் மனைவி வடிவில் ஆடியது. இவ்வகை ஆடல்கள், ஆடற்கலை இலக்கணத்துடன் மிகவும் நேர்த்தியாக ஆடப்பெற்ற நிலையை அறிய முடிகிறது.

மேற்கண்ட பதினொரு வகையான ஆடல்கள் மட்டுமில்லாமல் வள்ளிக்கூத்து, துணங்கைக் கூத்து, குரவைக்கூத்து, வெறியாடல் போன்றக் கூத்துக்களும் அக்காலத்தில் சிறந்து விளங்கின.
வள்ளிக்கூத்து : வள்ளிக்கூத்து எனப்படுவது நடைமுறையில் உள்ள ‘வள்ளி’யின் கதையைப் பின்பற்றி அமைவதாகும். காலங்காலமாகத் தொடர்ந்து வரும் இக்கூத்து அதன் கதைத் தன்மையால் வாடாமல் (அழியாமல்) நின்று செழித்துள்ளது என்பதை “வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்” (பெரும் : 370) என்ற பெரும்பாணாற்றுப்படைப் பாடல் அடி விளக்குகிறது.
துணங்கைக் கூத்து : துணங்கைக் கூத்து எனும் கூத்தானது மகளிர் கை கோத்துக் கொண்டு நடத்திக்காட்டிய கலையாகச் சங்க காலத்தில் விளங்கியது. இளம் பெண்கள் இறைவழிபாட்டின்போது இவ்வகை நிகழ்வுகளை நடத்திக்காட்டியிருக்க வேண்டுமெனக் கருதலாம். “எல்வளை மகளிர் துணங்கை” (குறுந் : 364 : 5-6) எனும் குறுந்தொகைப் பாடல் அடியும் துணங்கைக் கூத்து குறித்துப் பொதுவாகப் பேசுகிறது.
குரவைக் கூத்து : மிகவும் பழமையான கூத்து வகைகளுள் குறிப்பிடத்தக்கது குரவைக்கூத்து ஆகும். மக்களிடையே செல்வாக்குப் பெற்ற கலையாக இது விளங்கியது. இக்கூத்தானது பின்னணி இசைக்கு ஒப்ப, பல கலைஞர்கள் சேர்ந்தாடும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்புக்குரியதாகும். ‘மன்று தொறு நின்ற குரவை’ (மதுரைக் காஞ்சி : 615) என்ற மதுரைக்காஞ்சிப் பாடல் அடியும், ‘வேங்கை முன்றில் குரவை’ (நற் : 276) என்ற நற்றிணைப் பாடல் அடியும் குரவைக் கூத்தின் செல்வாக்கினைக் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை ஆகியன குறித்த செய்திகளை விரிவாகத் தருகின்றது.
வெறியாடல் : வெறியாடல் என்பதே ஆடல் (ஆட்டம்), வடிவத்திற்கென அறியக்கிடைக்கும் முதல் வடிவமெனலாம். ‘வெறியாடல்’ என்னும் ஆடல்களை சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கியது. மலைப்பாங்கான இடங்களில் முருகனது அருள் பெற்றவனாக வேலன் வேகமாக ஆடத்தொடங்குவான். அவன் நோய்களை, குறிப்பாகப் பெண்களுக்கான நோய்களை நீக்கும் வல்லமை பெற்றவனாகக் கருதப்பட்டான்.
கூத்து அன்று
சங்க கால மக்கள் வாழ்வில், வழிபாடு என்பது முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. அவர்கள் ஆடியும் பாடியும் இறைவனை வழிபட்டனர் இறைவனைக் கூத்தாடும் நிலையில் கண்டு மகிழ்ந்தனர். முதற் கடவுளான சிவனை மக்கள் கூத்து நிகழ்த்தும் ஆடல் வல்லான் வடிவில் கண்டனர் அவன் கொடு கொட்டி, பாண்டரங்கம், கபாலக்கூத்து முதலிய கூத்தினை நிகழ்த்தியதாக புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.
சங்க காலத்தில் வழிபாட்டு நிலையில் மட்டுமின்றிப் பொழுதுபோக்கு நிலையிலும் தொழில் அடிப்படையிலும் கூத்துகள் நிகழ்த்தப்பட்டன. குரவைக் கூத்து,துணங்ககைக் கூத்து, வெறியாட்டு, ஆரியக் கூத்து, பாவைக் கூத்து, வள்ளிக் கூத்து போன்ற பல் வகைக் கூததுகள் நடத்தப்பட்டன என்பதை சங்க இலக்கியங்கள் வழி நாம் அறிய முடிகிறது.
கூத்தர், பொருநர் போன்ற சொற்கள் தொழில் அடிப்படையில் கூத்துகள் நடைபெற்றன என்பதைக் குறிக்கிறது. இடைக்காலத்தில் இறைவன் முன்பும் அரசர் முன்பும் சில இடங்களில் பொழுதுப் போக்குக்காகவும் கூத்து நிகழ்த்தப் பெற்றது. அக்காலத்தில் இயற்றமிழைப் புலவர்களும் இசைத் தமிழ்ப் பாணர்களும் வளர்த்தமை போன்றே நாடகத் தமிழாகிய கூத்தையும் நாடகத்தையும் கூத்தர் என்போர் வளர்த்தனர். இயல் இசை ஆகிய இரண்டும் கேட்போருக்கு இன்பம் தருவன. கூத்து கேள்வி இன்பத்தோடு காட்சி இன்பத்தையும் தரவல்லது கூத்து பெரிதும் விரும்பப்பட்டதால் அக்காலத்தில் கூத்தர்கள் பெருகினர். கூத்து வகைகளும் பெருகின.
பாரதம், இராமாயணம், புராணங்கள் மற்றும் காத்தவராயன், நல்லதங்காள், பத்மாசூரன், மதுரை வீரன் கதைகள் போன்றவை கூத்துக்கான கதைகளாக அமைகின்றன. தொடக்க காலத்தில் சமயவாதிகள் தங்களின் சமயத்தையும் மதக் கருத்துக்களையும் பரப்புவதற்காக மேற்கொண்ட இக்கலை பின்னர் மக்களின் பொழுது போக்கிற்காக பயன்பட்டது.
பெரும்பாலும் புராணக்கதைகளையும், வரலாற்றுக் கதைகளையுமே அடிப்டையாகக் கொண்டு கூத்து நடத்தப்பட்டன. சில நாடகங்கள் ஐதீகம் காரணமாகவும் நடத்தப்பட்டன. சிறு தொண்டர் நாடகம் நடத்தினால் குழந்தைப் பேறு கிடைக்கும், மழை பெய்யும், இதனால் செல்வம் செழிக்கும், பஞ்சமின்றி வாழலாம் என்றும் மக்கள் நம்பினர். சங்க காலத்தில் கூத்துக்கலை எழில் மிகுந்த கலையாகத் திகழ்ந்தது. மிகவும் உயர்ந்த நிலையில் போற்றப்பட்டது.
கூத்தின் இன்றைய நிலை
மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த தெருக்கூத்து என்னும் உன்னதமான கலை இன்றைக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து அழிந்துவிடும் சூழ்நிலையில் உள்ளது. அக்காலத்தில் உள்ள கூத்து வகைகள் தற்காலத்தில் பொம்மலாட்டம், ஒயிலாட்டம், பாவைக் கூத்து, கரகம், கழியாட்டம், தேவராட்டம், கணியான் கூத்து, அலிக்கூத்து, பொய்க்கால் குதிரை, காவடியாட்டம் என்று மாற்றம் அடைந்தாலும் மக்களிடம் அவை பெற்றிருக்கின்றசெல்வாக்கு என்பது மிகவும் சரிந்த நிலையிலேயே உள்ளது. அதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால், இன்றைக்கு மக்களால் பெரிதும் விரும்பப்படும் திரைப்படம், நாடகம் மற்றும் நவ நாகரீக வளர்ச்சியும் அடிப்படைக் காரணமாக அமைகின்றன. மேலும் இப்போதைய விரைவு வாழக்கையின் கூறுகளாலும் புதுமை விழையும் மக்களின் மனநிலையாலும் கூத்துக்கலை பாதிப்படைந்துள்ளது.
முன்பு தமிழகம் முழுவதும் இக்கலை பரவியிருந்தது. ஆனால் இன்றைக்கு வட மாவட்டங்களிலும் தென்மாவட்டங்களில் ஒருசில பகுதிகளிலும் கூத்துக்கலை ஆடி மாதத்தில் உயிர்ப்பு பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் நடைபெறும் அம்மன் கோயில் திருவிழாக்களில் தான் கூத்துகளை காண முடிகிறது. மற்ற காலங்களில் எங்கும் காணமுடிவதில்லை. இத்தகைய நிலைப்பாட்டினால் கூத்துக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் கூத்துக் கலைஞர்கள் தங்களுடைய தொழிலையே மாற்றவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். கூத்துக் கலைஞர்களை காப்பதற்கு அரசு முன்வர வேண்டும். மேலும் இன்றைய நாகரீக உலகிற்கேற்ப கூத்துக்கலையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஓரளவேனும் கூத்துக் கலை அழிவைத் தடுக்க முடியும். கூத்தின் கதைகளாக அமைந்துள்ள புராணக் கதைகளை மக்கள் கேட்டு அலுத்துப் போய் உள்ளதால், இன்றைய சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு கற்பனையோடு பயன்தரக்கூடிய கதைகளை அரங்கேற்றலாம். மேலும் கூத்து நிகழ்த்தும் நேரத்தை மூன்று அல்லது நான்கு மணி நேரமாக குறைத்து கொள்வதும் கூத்துக்கலையின் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும். இறை வழிபாட்டிற்காக மட்டும் நிகழ்த்தப்படும் இந்த கூத்துக்கள் மக்களின் பொழுது போக்கிற்காக எல்லாக் காலங்களிலும் நிகழ்த்தப்படும் அளவிற்கு கூத்தின் போக்கினை மாற்றி அமைத்துக் கொள்வதும் அவசியமாகிறது.
தொகுப்புரை :

அக்காலத்தில் மக்கள் இறைமீதும் வழிபாட்டின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையின் வெளிப்பாடே கூத்துக் கலை வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தன. இன்றைய காலங்களில் கூத்துக் கலை பல்வேறு வடிவங்களில் மாற்றம் பெற்றாலும் மக்களிடம் தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் அழிவின் விளிம்பில் உள்ளன. இன்றைக்கு ஒரு சில மாவட்டங்களில் மட்டும் எச்சங்களாய் மிஞ்சி இருக்கின்றன. ஆடிமாதம் என்றால் கோயில் திருவிழாவும் கூத்தும் தான் நினைவுக்கு வருகிறது. அந்தளவுக்கேனும் மனதில் பதிந்துள்ளது சற்று ஆறுதலாக உள்ளது. பழமையும், பெருமையும் வாய்ந்த உன்னதமான இந்தக் கலையைப் போற்றி பாதுகாக்க வேண்டிய பொறுப்பை அரசு ஏற்க வேண்டும். கூத்துக்கலை மறுமலர்ச்சிக்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் கூத்துக்கலை உயிர்ப்பு பெறும்.

Series Navigation

ப.இரமேஷ்

ப.இரமேஷ்

1 Comment

Comments are closed.