வேத வனம் விருட்சம்- 87

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

எஸ்ஸார்சி


மலை தோன்றும் குட்டச்செடியே வா
சுரம் போக்கும் மூலிகை நீ
செவியுற்றவர்கள் நின்னிடம் விரைகிறார்கள்
மூன்றாவது விண்ணகத்தில்தான்
அரச மரம் இருக்கிறது
தேவர்கள் அங்கே குட்டமூலிகை பெற்றார்கள்
விண்ணிலே தங்கக்கப்பலில்
அமுத மலர்தரு குட்டம் கொண்டு வந்தார்கள்
தலை நோய் கண்நோய் உடல் உபாதை
எதுவும் குட்டம் நீக்கட்டும்
அருந்ததி க்கொடியே உனக்கு
மேகம் பிதா இரவு அன்னை
காமமிகு கன்னிகைபோல்
மரம் படர் கொடி நீ
யமன் பயணிக்கும் கரு நிறக்குதிரையின்
வாயினின்று கீழ் வீழ்ந்த நீ
மரம் பற்றினாய்
சிறகுடை நதியாகி வந்திடுக இவண்
தேவர்களே புனிதமில்லாதவன்
அவியை அக்கினி சுமந்து செல்லவேண்டாம்
தேவர்களும் அங்கே போகாதீர்கள்
ஒநாய் ஆடொன்றொடு மோதி முடிப்பதுபோலே
எதிரியை அழியுங்கள்
எங்கள் வெற்றிக்குப் பங்கம் செய்யும்
பிராமணனை மிதியுங்கள்
அவன் மரணம் எய்தட்டும்
விருத்திரனை முடிக்கும் இந்திரனே
பகைவனின் பிறப்புறப்பை மாய்த்துவிடு
கதிரோன் எனது கண்
காற்று எனது உயிர்
வானம் எனது ஆன்மா
புவி எனது உடல்
யான் வெல்லப்படாதவன்
ஆயுள் பலம் செயல் செய்கை
அறிவு இந்திரியம்
உச்சமாகட்டும் எனக்கு
யான் அதர்வன்
மகிமையுடை ஆரியனோ
வலிமையுடை தாசனோ
என்னைப்பங்கம் செய்ய இயலாது
யான் வருணன் பேசுகிறேன்
செயல்கள் தொடர்கின்றன
தாசர்கள் பூமிக்குக்கீழே போகிறார்கள்
வளி மண்டலத்துக்கு அப்பால்
வேறொரு பொருளுண்டு
அடைவது சாத்தியமில்லை அவ்விடம்
வருணனும் அதர்வனும் ஏழு திக்குத்துணைவரும்
மித்திரர்கள் உறவினர்
பாரதி இஷை சரசுவதி மூவரும்
எம் வேள்விச்சாலை வருக
தருப்பைப்புல்லில் அமர்க
அக்கினியே தேவ முதல்வன்
அவன் கொண்டு செல்லும் அவியுண்ணட்டும் தேவர்கள்
துன்பங்கள் துன்பம் செய்பனுக்கு ஆகுக
சாபங்கள் சபிப்போனையே சேர்க
வேல்கள் துன்பஞ்செய்பவனுக்குத்தான் தயாராகிறது
ஒரு பிராமணப்பெண் பத்து பிராமணரல்லாத கணவர்களை
முன்னம் கொண்டிருந்தாலும்
ஒரு பிராமணன் அவள் கரம்பிடிக்க
அவனே அவள் புருடனாவான்
அரசனுக்கும் வைசியனுக்கும் அப்படி ஆவதில்லை
ஐந்துவித மனிதர்க்குச்சூரியனே
அறிவித்தச் செய்தி இது
பிராமண மனைவியை
தேவர் மனிதர் அரசர் திருப்பி அளிப்பார்கள்
அளிக்க அறிவில்லா அரசனுக்கு ஆயிரம் அள்ளித்தரும்
அந்தப்புறச்சுந்தரிகள் ஏது
மாடுகள் கன்று ஈவது ஏது
உணவு படைக்க பொன்மாலை அணிந்த பணியாளேது
தேர் இழுக்கும் கருஞ்செவியுடை வெண்குதிரை
நோய் தீர்வதேது
ராசாங்கத்தில் தாமரைத்தடாகமொடு அல்லிக்குளமேது
அழகுப்பசுவின் பால் கறக்க ஆளேது
மனைவியில்லா பிராமணன்
உறங்கும் வீட்டில்
பசு சினைப்பிடிப்பதில்லை
காளையும் நுகத்தடி சுமப்பதில்லை
மானுடத்தலைவனே
பிராமணப்பசுவைப்புசிக்க விரும்பாதே
நஞ்சு நிறைந்தது துனபம் தருவது அது
பிராமணனை ச்சாது என நினைத்து
அவன் செல்வம் கொள்வோன்
மண்ணாலும் விண்ணாலும் வெறுக்கப்படுவான்
பிராமனன் நாக்கு வில்லாகும்
சொல் அம்பின் கழுத்தாகும்
அவன் கோபத்தால் தூரமிருந்தே
எதிரியை அழிப்பவன்
தேவனுக்கு உறவான பிராமணனை இம்சிப்போன்
பிதுர் உலகம் செல்வதில்லை
பிராமணனின் மீது கோழை உமிழ்வோர்
மயிர்ப் புசித்து ரத்த ஆறு அமர்வர்
பிராமணனை இம்சிக்கும்
தேசம் பாழாகும்
படகொன்றை சிறு ஒட்டை மூழ்கடிப்பதுபோலே
ராச்சியம் மொத்தமாய் அழிந்துபோம்
நாரத முனியே பிராமணனின் பொருளை
அபகரிப்போனுக்கு விருட்சங்கள் நிழல் தராது
முரசு கர்ச்சிக்கட்டும்
எதிரிகள் கலங்கட்டும்
அவர்தம் கருத்துக்கள் குழம்பட்டும்
சுரம் எனும் நோய் தூரஞ்செல்க
நின் சகோதரன் கபம் சகோதரி இருமல்
நீ அயல் மக்களைச்சேர்
காந்தாரம் முஜவந்தி அங்க மகத தேசம்
துரத்துகிறோம் சுர நோயை யாம்
கிருமிகள் அருகிலுள்ளவை அதி அருகிலுள்ளவை
வெகு சிறியவை யாவும் கொல்லப்படுகின்றன
இரவின் தேவதை சீனிவாலியே
கருவை உருவாக்கு
சினையை நிலையாக்கு
தாமரை மலர்மாலை சூடும்
அசுவினிகளே கரு நிலையாக்குக
மித்திரன் வருணன் குரு இந்திரன் அக்கினி தாத்ரு
கருவை நிலைக்கச்செய்யட்டும்
விஷ்ணு யோனியை பக்குவமாக்குவோன்
துவஷ்டா உருவு செழிப்பிக்க
பிரஜாபதி வளமாகட்டும்
அக்கினியே எழுக
வீரனை உருவாக்கு
வீரன் வீர்யன் நீ
பிரஜைக்காக அழைக்கிறோம் உன்னை
பெண் உடல் பத்து மாதம் தாங்கிய
ஆண் மகவுக்கு தாத்ரு நிலைப்படுத்தட்டும்
மார்பணியும் பூநூலின் மும்முடி
ஒன்பது பிராணன்களைக்கொண்டது
பொன் வெள்ளி இரும்பு என வரிசையாய்
புவி செடிகொடி அக்கினி இவை
காப்பு நலம் பலம் தருக
உணவு ஆண்மகவு பசுக்கள்
விருத்தியாகட்டும்
மும்முடித்தங்கம் நிறையாயுள் தருக
இப்புவி இன்பந்தருவது
தேவர்களுக்கும் வாழ்விடமிது
வெல்ல முடியாதது
யாரால் மரிப்பு
எமக்கு வருமோ அவனும் யாமும்
அனுசரித்துக்கேட்கிறோம் அக்கினியே
மூப்பின் முன் மரிப்பு வேண்டாம் எமக்கு ( அதர்வ வேதம் காண்டம் 5)
————————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி