வேத வனம் விருட்சம் 86

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

எஸ்ஸார்சி


ஆத்மாவை அளிப்பவன்
பலமளிப்பவன்
தேவர்கட்கு ஆக்ஞை தருவோன்
இருகால் நான்கு கால்
பிராணிகட்கு த்தலைவன்
அவனுக்கிவண் அவியொடு வணக்கம்
சுவாசிப்புக்கும் இமைகொட்டுதலுக்கும்
யார் அதிபதியோ
யாருடைய உருவம் அமிர்தமோ
நிழல் மரணமளிப்பதோ
எவரை மோதும் இரு போர்ப்படைகளும்
விருப்புடன் நோக்குகின்றதோ
எவனால் கதிரவன் விசாலமானோனோ
மகிமையால் மலைகளும்
ரசத்தால் கடலும்
கைகளால் திசையும் யாருக்கு ச்சொந்தமோ
அவியுடன் வணக்கம் அவனுக்கு
அமுத கலசங்களே கருப்பம் தாங்கி
விசுவம் காக்கும்
இரணிய கர்ப்பனே ஆதியில் தோன்றினான்
தண்ணீரே கரு தாங்கியது
உயிர்க்கு பொன் உறை தந்தது
ஒநாய் உடன் தூரம் செல்க
திருடன் அவ்விதம் தூரமே செல்க
தீயோனும் தூரமே செல்க
புலியின் வாய் கண்கள் இருபது நகங்கள் நாசமாகுக
தாய் சுகமாய் உறங்கட்டும்
தந்தை உறங்கட்டும்
நாய் உறங்கட்டும்
வீட்டுத்தலைவன் உறங்கட்டும்
உறவினர் சிசுக்கள் உறங்கட்டும்
முதலில் பிராமணன் தோன்றினான்
அவனுக்குப் பத்து முகம்
பத்து வாய் கொன்டு சோமன் பருகினான் அவன்
ரசமும் நஞ்சும் அவனே ஆக்கினான்
கருடனே விடம் புசித்தான் ஆதியில்
மயக்கமில்லை அவனுக்கு அவன் உருவில் மாற்றமில்லை
கண் இடு மை நீயே மலையின் அவுடதம்
சீவனுக்குக் காவல்
புருடர் பசு குதிரையெனக் காப்போன்
தீய மந்திரக்காரனை அழிப்போன்
அமுதம் அறிவோன்
உயிர்க்கு உணவு
மஞ்சட்காமாலைக்கு சிகிச்சை நீ
யாரிடும் சபதமும் நெருங்காது நின்னை
தவறான மந்திரம் கெடு சொப்பனம்
பாவச்செயல் கோரக்கண்
இவையினின்று காத்திடுக மையே நீ
வாயுவோடு மின்னல் சேரப்பிறந்ததுவே பொன் போற் சங்கு
காக்கட்டும் எம்மை
நோய் அறிவின்மை ஒயாக் குரலெழுப்பும் கிருமிகள் அழிக
சங்கு கடலிலிருந்து
கதிரோன் இருள் மேக வசமிருந்து தோற்றம் பெற்றனர்
தேவர்களின் எலும்பு முத்து
ஆன்மா ஆவதும் அதுவே
நூறாண்டு வாழ்ந்திடுக நீ
முத்து அணிவிக்கிறேன் உனக்கு
ரோகணச்செடியே உடைந்த எலும்பை ஒட்டச்செய்
அங்கம் இணையட்டும்
மஜ்ஜைகள் சேர்ந்திடுக
தேர் போல் விரைந்து சென்றிடுக நீ
தேவர்களே தாழ்ந்துபோனவனை உயத்துக
குரல் கொடுக்கும் நாக்கு
இரு கைகள்
பத்து விரல் கொண்டு நின்னைத் தொடுகிறேன்
நீ மங்கலம் பெறுக
பலி ஆட்டின் தலை கிழக்கே
முதுகெலும்பு உச்சியில்
வாய் பூமி பார்த்து
நடுப்பாகம் வானில்
நான்கு திசை நான்கு கால்கள்
தேவர் உலகு செல்கிறது ஆடு
பெண் தவளையே வருணனோடு பேசுக
கால்கள் விரித்து நீந்துக
பொழிவு மின்னல் காற்று தொடரட்டும்
செடிகொடிகள் இன்பம் பெறுக
ரகசியம் அறிந்தோர் தேவர்
வருணன் அறிவான் ரகசியம்
அபமார்க்கன் என்னும் செடியே
பசி மரணம் தாகமரணம் நீக்கு
க்ஷத்ரியன் இவண் தலைவனாகட்டும்
கிராமம் குதிரை பசுக்கள் பெறுக அவன்
ஜனபதியன்றோ அவன்
சிம்மன் அவன் புலிபோல் பகைவரை முடித்து வைக்கட்டும்
யான் பெறும் துன்பம் தெய்வ விதியாலன்று
மானிடனால் செய்யப்பட்டது
மண்ணும் விண்ணும் என்னைக்காத்திடுக
மருத்துக்கள் பசுவின் பால் செடிகொடியொடு
குதிரையின் துரிதம் அருள்வோர்
எம்மை விடுதலை செய்க
படைப்போனே எல்லாமானோனே
இருகால் நான்குகால் விலங்குகளை அதிகாரம் செய்வோனே
போரில் துணை புரிக
முனிவர்க்கு த்துணைவரும் மித்திரா வருணர்களே
நேர்மையில்லானை நேர்மையால் மெய்வழியால்
வென்றெடுப்போனே காத்திடுக என்னை
சொல்லின் தேவதையே
பிராமணனை முனியை அறிஞனை ஆக்குபவள்
நெடு நாள் சுவாசிப்போன்
சொல்வது கேட்போன்
வாக் தேவதையால் அன்னம் பெறுகிறார்கள்
என்னை அறியா அவர்கள் என்னுள்ளே
வசிக்கிறார்கள்
பிரமம் பழிப்போரை அழிப்பவள்
வாக் தேவி யான்
மன்யுவே வெற்றி வழி காட்டுவோன்
சக்திமான் சேரும் வழி காட்டிச் செல்வம் கூட்டுவோன்
தசுயுக்களை அழிக்கும் எமக்கு நண்பன் மன்யு
முப்பது பற்கள் கொண்ட மாதமும்
பன்னிரு பற்கள் கொண்ட வருடமும்
சுழலும் நாளும் இரவும் தொடாப்
பால் சோறு கொண்டு யான் மரணத்தை வெல்வேனாகுக
வானம் பசு
வாயு அதன் கன்று
விண்ணகம் பசு
கதிரோன் அதன் கன்று
திசைகள் பசு
அவைகளின் கன்று திங்கள்
அக்கினி அனலுள் வாழ்பவன்
ஏழு வாயுள்ளவனவன்
வந்தனம் எல்லோருக்கும்
அக்கினியை ஆக்கிரமிப்போர்
யமனை ஆக்கிரமிப்போர்
வருணனை ஆக்கிரமிப்போர்
சோமனை ஆக்கிரமிப்போர்
புவியை ஆக்கிரமிப்போர்
வாயுவை ஆக்கிரமிப்போர்
சூரியனை ஆக்கிரமிப்போர்
பிரமத்தை ஆக்கிரமிப்போர்
துன்பமே பெறுக
எதிர்ப்போம் அழிப்போம் எதிரிகள் எல்லோரையுமே ( அதர்வ வேதம், காண்டம் 4)
————————————————————–

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி